எழுத்தாளர்கள்

எழுத்தாளர்கள்

ஆசிய பேஸ்போல் சம்பியன் போட்டியின் இறுதிச் சுற்றில் இலங்கை

basketball.jpgதாய் லாந்தில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் 8ஆவது ஆசிய பேஸ்போல் சம்பியன்சிப் போட்டியின் இறுதிச் சுற்றில் கலந்துகொள்ளும் வாய்ப்பை இலங்கை அணி பெற்றுள்ளது. மலேசிய அணியை 9-1 எனும் புள்ளி வித்தியாசத்தில் தோற்கடித்தன் மூலம் இறுதிச் சுற்றில் கலந்துகொள்ளும் வாய்ப்பு இலங்கைக்குக் கிடைத்துள்ளது.

இலங்கையின் பேஸ்போல் வரலாற்றில் இறுதிச் சுற்றுக்கு இலங்கை அணி தெரிவுசெய்யப்பட்டது இதுவே முதல் தடவையாகும்.

முதல் போட்டியில் 3-1 என்ற புள்ளி வித்தியாசத்தில் வெற்றிபெற்ற இலங்கை அணி பாகிஸ்தான் அணியுடன் 10-0 என்ற புள்ளி வித்தியாசத்தில் தோல்வியைச் சந்தித்தது. அரைஇறுதிப் போட்டியில் இந்தியாவும் இலங்கையும் இன்னுமொரு போட்டியில் பாகிஸ்தானும் ஹொங்கொங் அணியும் பங்குபற்றவுள்ளன.

இச்சுற்றுப் போட்டியில் இலங்கை, இந்தியா, பாகிஸ்தான், தாய்லாந்து, மலேசியா, ஹொங்கொங், மியன்மார் மற்றும் கம்போடியா ஆகிய நாடுகள் பங்கேற்றமை குறிப்பிடத்தக்கது. 

காணாமல்போன பிரான்ஸ் விமானம் அத்லாண்டிக் கடலில் வீழ்ந்து விபத்து – விமானத்தில் பயணித்த 228 பேரும் பலி

01-air-france.jpg228 பயணிகளுடன் நேற்றுப் பயணம் செய்துகொண்டிருக்கையில் காணாமல்போன பிரான்ஸ் நாட்டின் விமானம் அத்லாண்டிக் கடலில் விழுந்து நொருங்கியுள்ளதாகவும் அதில் பயணித்த அனைவரும் கொல்லப்பட்டிருப்பதாகவும் அந்நாட்டுத் தகவல்கள் தெரிவிக்கின்றன. எயார் பிரான்ஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான இந்த விமானம் பிரேஸிலின் ரியோடி ஜெனிரோ விமான நிலையத்திலிருந்து பாரிஸ் நோக்கிச் சென்றுகொண்டிருந்தபோதே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

இந்த விபத்தில் கொல்லப்பட்டவர்களில் 82 பெண்களும், 9 குழந்தைகளும் அடங்குவதாக எயார் பிரான்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.

மட்டக்களப்பு மாநகர சபை மேயர் திருமதி சிவகீர்த்தா பிரபாகரன் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இணையவுள்ளார்.

02seva-geetha.jpgஇது தொடர்பாக அவரிடம் கேட்டபோது இன்னும் ஓரிரு வாரங்களுக்குள் நான் சிறிலங்கா சுதந்திரக் கட்சியில் இணைந்து கொள்ளவுள்ளேன். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அண்மைக்காலமாக வெளியிட்டு வரும் இது ஒரே நாடு ஒரே இனம் என்ற கருத்தை ஏற்றுக்கொண்டு ஜனாதிபதியின் கரங்களைப் பலப்படுத்தவே நான் சிறிலங்கா சுதந்திரக் கட்சியில் இணைந்துகொள்வதற்கு விரும்புகின்றேன்.

கடந்தகால யுத்தத்தினாலும், இயற்கை அனர்த்தங்களினாலும் சிதைவடைந்து போயுள்ள வடக்கு, கிழக்கு மாகாணங்களை அபிவிருத்தி செய்து நமது மக்களின் வாழ்வாதார நிலையை மேம்படுத்த வேண்டியுள்ளது.

இதற்கு இன்று பொருத்தமாகவுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையிலான சிறிலங்கா சுதந்திரக் கட்சியில் இணைந்து கொள்வதுதான் சிறந்ததாகும். தமிழ் மக்களுக்கு தேசிய, சர்வதேச அங்கீகாரத்தைப் பெற்றுக்கொடுக்க விரும்பும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியுடன் இணைந்து தமிழ் மக்களுக்கு சேவையாற்றவே விரும்புகின்றேன்.

கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனுடன் இது தொடர்பாக பேசி அவரையும் இணைத்துக்கொண்டு சேரவிரும்புகின்றேன். இது தொடர்பாக நான் விரைவில் அறிவிப்பேன் என மட்டக்களப்பு மாநகர சபை மேயர் சிவகீர்த்தா பிரபாகரன் தெரிவித்தார்.

சுதந்திர ஊடக இயக்கத்தின் செயலாளர் போத்தல கடத்தப்பட்டுத் தாக்குதல்

33222.jpgஊடகவிய லாளரும், சுதந்திர ஊடக இயக்கத்தின் செயலாளருமான போத்தல ஜெயந்த இனந்தெரியாதவர்களினால் நேற்று கடத்தப்பட்டு கடுமையாகத் தாக்கப்பட்டதன் பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளார்.

வெள்ளை வானில் வந்த சிலரே இவரைக் கடத்திச்சென்று அவரது தலைமுடி, தாடியை வெட்டி கடுமையாகத் தாக்கியதாகத் தெரிவிக்கப்படுகின்றது. தாக்குதலில் கடும் காயங்களுக்கு இலக்கான இவர், கொழும்பு தேசிய வைத்தியசாலையின் அவரச சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கடமையை முடித்துக்கொண்டு நுகேகொடைக்குச் சென்றுகொண்டிருந்த போதே, வெள்ளை வானில் வந்த அறுவர் அவரைக் கடத்தி கண்களை கறுப்புத் துணியினால் கட்டியதுடன் அவரது தலை முடி, தாடியை வெட்டி கடுமையாகத் தாக்கியுள்ளனர். வெட்டப்பட்ட முடிகளை அவரது காற்சட்டைப் பைக்குள் திணித்து நீண்ட தூரத்திற்கு அப்பால் அவரை இறக்கிவிட்டுச் சென்றுவிட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

மார்பு, தலை, கால்களில் காயங்களுக்கு இலக்கான இவர் சுயநினைவுடன் இருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஆறு பேர் கொண்ட குழுவினரே தன்னைக் கடத்திச் சென்று தாக்கியதாகவும், பின்னர் கோத்தட்டுவைப் பகுதியில் இறக்கிவிட்டுச் சென்றுவிட்டதாகவும் அவர் வைத்தியசாலையின் பொலிஸாருக்கு வாக்குமூலம் அளித்துள்ளார்.

அவரை அவசர சத்திரசிகிச்சைப் பிரிவில் அனுமதித்த வைத்தியர்கள், மேலதிக சிகிச்சைகளை அளித்து வருவதாகவும், அவருக்கு உயிராபத்தை ஏற்படுத்தக் கூடிய அல்லது நினைவை இழக்கும் வகையிலான எவ்விதமான தாக்குதல்களுக்கும் அவர் இலக்காகவில்லை என்றும், கால்களில் பலத்த காயங்கள் இருப்பதாகவும் வைத்தியசாலை அதிகாரிகள் தெரிவித்தனர். 

காணாமல் போன விமானத்தை தேடும் நடவடிக்கைகள் தொடருகின்றன

01-air-france.jpgகாணாமல் போன  ஏர் பிரான்ஸ் விமானத்தை தேடும் பணியில் பிரேசில் நாட்டு விமானப் படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.  நாட்டின் தலைநகருக்கு வடகிழக்கே சுமார் 400 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள ஃபெர்ணாண்டோ டெ நொரானோ எனும் தீவிலிருந்து பிரேசிலின் வான்படை விமானங்கள் இந்த தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளன.

இந்த விமானம் அட்லாண்டிக் பெருங்கடலை பெருமளவில் கடந்த நிலையில் காணாமல் போயுள்ளதால், இந்தத் தேடுதல் பெரும் பகுதியை உள்ளடக்கியதாக இருக்கும் என்று பிரேசிலிலுள்ள பிபிசியின் செய்தியாளர் கூறுகிறார். காணாமல் போன விமானத்ததை தேடும் நடவடிக்கையில் செனிகல் நாட்டிலிருந்து பிரெஞ்சு இராணுவத்தின் வேவு பார்க்கும் விமானம் ஒன்று ஈடுபட்டுள்ளது.

வடபகுதி மாணவர்களுக்கு பாடப்புத்தகங்கள் கையளிப்பு

students1.jpg‘வடக்கு வசந்தம்’ திட்டத்தின் கீழ் இடம்பெயர்ந்த வடபகுதி மாணவர்களுக்கு 46 மில்லியன் ரூபா பெறுமதியான பாடப்புத்தகங்கள் மற்றும் சீருடைகள் வழங்கும் உத்தியோகபூர்வ வைபவம் கல்வி அமைச்சர் சுசில் பிரேம் ஜயந்த தலைமையில் இன்று (2) கல்வி அமைச்சில் நடைபெறவிருக்கிறது. இதன் போது வவுனியாவில் தங்கவைக்கப்பட்டுள்ள மக்களுக்காக சேகரிக்கப்பட்ட பாடப்புத்தகங்கள்,

மேலதிக புத்தகங்கள், சீருடைகள், கல்வி உபகரணங்கள், மேசை, கதிரை மற்றும் உணவு வகைகள் என்பவற்றை கல்வி அதிகாரிகள் அமைச்சரிடம் கையளிக்க உள்ளனர். மேற்படி பொருட்கள் 25 லொறிகளில் வவுனியா நலன்புரி கிராமங்களுக்கு அனுப்பப்பட உள்ளதோடு அவை எதிர்வரும் வெள்ளிக்கிழமை நலன்புரிக் கிராமங்களில் உள்ள பாடசாலை மாணவர்களுக்கு கையளிக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சு கூறியது.

இதனையொட்டி அமைச்சர் சுசில் பிரேம் ஜயந்த அடங்கலான குழுவினர் வவுனியாவுக்கு விஜயம் செய்ய உள்ளனர். இடம்பெயர்ந்த மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் தேவைகள் குறித்து ஆராய கல்வி அமைச்சின் செயலாளர் நிமல் பண்டார இருவாரங்களுக்கு முன் வவுனியா சென்றிருந்தார். இதன் போது மாணவர்கள் தமது கல்வி நடவடிக்கைகளை முன்னெடுக்க உடனடியாக தேவைப்படும் உபகரணங்கள் குறித்து ஆராயப்பட்டது. இதன்படி 25 ஆயிரம் சீருடைகள், 500 மேசைகள், 1500 கதிரைகள், 5 இலட்சம் பாடநூல்கள் உள்ளிட்ட உபகரணங்கள் 5 ஆம் திகதி பகிர்ந்தளிக்கப்பட உள்ளன.

இதேவேளை 5ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை, க.பொ.த சாதாரண தரப்பரீட்சை என்பவற்றுக்கு தோற்றும் மாணவர்களுக்கு பரீட்சைக்கு தயாராவதற்கான விசேட வகுப்புகளும் 5ஆம் திகதி ஆரம்பிக்கப்பட உள்ளன. பயிற்றப்பட்ட ஆசிரியர்கள் இதற்காக நியமிக்கப்பட உள்ளனர்.

வவுனியா – யாழ் ரயில் பாதை நிர்மாண பணியை 2010 இல் பூர்த்தி செய்ய திட்டம்

sri-lankan-railway.jpgவவுனி யாவில் இருந்து யாழ்ப்பாணம் வரையான 159 கிலோ மீட்டர் ரயில் பாதையை நிர்மாணிக்கும் பணிகள் 2010 ஆம் ஆண்டில் பூர்த்தி செய்ய திட்டமிட்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சு தெரிவித்தது. இதற்கு 14 பில்லியன் ரூபா செலவாகும் என கணிக்கப்பட்டுள்ளது.

வடக்கிற்கான ரயில் பாதையையும் ரயில் நிலையங்களையும் அமைக்க நிதியமொன்று அமைக்கப்பட்டுள்ளதோடு இதற்கு சகல மக்களும் தமது பங்களிப்பை வழங்குமாறு அமைச்சர் டளஸ் அலஹப்பெரும கோரியுள்ளார். வடக்கு வசந்தம் திட்டத்தின் ஆரம்பிக்கப்பட்டுள்ள உதுருமிதுரு திட்டத்தினூடாக வடபகுதிக்கான ரயில் சேவை மீள ஆரம்பிக்கப்பட உள்ளது. இதன் முதற்கட்டமாக எதிர்வரும் 6 ஆம் திகதி வவுனியாவில் இருந்து தாண்டிக்குளம் வரை ரயில் சேவை இடம்பெற உள்ளது.

வடக்கிலுள்ள உறவினர் வீடுகளுக்கு ரயிலில் பயணம் செய்ய கனவுகானும் மக்களின் கனவு அடுத்த வருடம் நனவாகும் என்று தெரிவித்துள்ள அமைச்சர் டளஸ் அலஹப்பெரும 2010ல் ரயில் பாதை நிர்மாணப் பணிகளை பூர்த்தி செய்ய உத்தேசித்துள்ளதாகக் கூறினார்.

யாழ்ப்பாணத்தில் இருந்து யாழ்தேவி ரயிலில் கொழும்பு வர எதிர்பார்க்கும் தமிழ் மக்களின் கனவும் விரைவில் நிறைவடையும் எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார். வவுனியாவில் இருந்து வடக்கு வரையான ரயில் பாதை மற்றும் ரயில் நிலையங்களில் சிலவற்றை நிர்மாணிக்கும் பொறுப்பை, ஹம்பாந்தோட்டை மற்றும் மாத்தறை மக்கள் ஏற்றுள்ளதோடு வேறு சில அரச நிறுவனங்கள் கட்சிகள் என்பனவும் இந்தப் பணிக்கு தமது பங்களிப்பை வழங்க முன்வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தப்பிச்செல்ல முற்பட்ட கைதிகள் மீது சூடு

Gun 01நீதிமன்றத் திலிருந்து தப்பிச் செல்ல முயன்ற மூன்று கைதிகள் மீது சிறைச்சாலை காவலர்கள் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளதுடன் மற்றுமொருவர் காயமடைந்துள்ளார்.

கொழும்பு புதுக்கடை நீதிமன்ற வளாகத்தில் நேற்று பிற்பகல் 12.30 மணியளவில் இடம்பெற்ற இந்தச் சம்பவத்தின் போது மூன்றாவது நபர் மடக்கிப் பிடிக்கப்பட்டார். என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ரஞ்சித் குணசேகர நேற்றுத் தெரிவித்தார்.

கொழும்பில் இடம்பெற்ற பல்வேறு கொள்ளை, மோசடி சம்பவங்களுடன் தொடர்புடைய பாதாள உலகைச் சேர்ந்த மூவரே இவ்வாறு தப்பிச் செல்ல முயன்றவர்கள் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

விசாரணைகள் முடிந்து மீண்டும் சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்வதற்காக சிறைச்சாலை பஸ் வண்டியை அண்மித்த போது காவலர்களை தள்ளிவிட்டுத் தப்பிச் செல்ல முயன்றுள்ளனர். உடனடியாக அவர்களை தடுத்த சிறைக்காவலர்கள் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.

இந்த துப்பாக்கிப் பிரயோகத்தில் மோதரை பிரதேசத்தைச் சேர்ந்த 33 வயதுடைய கே. டபிள்யூ. சிசிரகுமார என்பவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றுமொருவர் காயமடைந்துள்ளார். காலில் காயமடைந்த அவர் சிகிச்சைக்காக கொழும்பு பெரியாஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக எஸ். எஸ். பி. மேலும் தெரிவித்தார்.

பொட்டம்மான் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக பரவிவரும் `செய்தி` உண்மையில்லை : இராணுவத் தளபதி ஜெனரல் சரத் பொன்சேக்கா

fonseka-000.jpgபுலிகளின் புலனாய்வு பிரிவு பொறுப்பாளர் பொட்டம்மான், அதன் இரண்டாம் நிலை பொறுப்பாளர் கபில் அம்மான் ஆகியோர் இராணுவப் புலனாய்வு பிரிவினரால் கைதுசெய்யப்பட்டு, தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக பரவிவரும் `செய்திகளில்` எந்த உண்மையில்லை என இராணுவத் தளபதி ஜெனரல் சரத் பொன்சேக்கா தெரிவித்துள்ளார்.

இலங்கையில் பணியாற்றிய போருட் தொண்டு நிறுவன தலைவர் நாடு கடத்தப்பட்டுள்ளார்

01forut.jpgஇலங் கையில் பணியாற்றிய நோர்வேயைச் சேர்ந்த தன்னார்வ தொண்டு நிறுவனமான ‘போரூட்’ என்ற நிறுவனத்தின் தலைவர் ரான்வி டிவிட்டின்ஸ் நாடு கடத்தப்பட்டுள்ளார். தமிழீழ விடுதலைப்புலிகளுடன் தொடர்புகளை கொண்டிருந்ததன் மூலம் இலங்கையில் இறைமைக்கு குந்தகம் விளைவித்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் ரான்வி வெட்டேனஸ் என்ற இந்த நோர்வே பிரஜை நாடு கடத்தப்பட்டுள்ளார்.

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக கிடைக்கப் பெற்ற யுத்த வெற்றியை கொண்டாடும் வகையில் குறித்த தன்னார்வ தொண்டு நிறுவனத்தில் பறக்க விடப்பட்டிருந்த தேசிய கொடியை அகற்றுமாறு ரான்வி கோரியதாகத் தெரிவிக்கப்படுகிறது. அத்துடன். இலங்கை ஜனாதிபதியால் பிரகடனப்படுத்தப்பட்ட இராணுவ வெற்றியை குறிக்கும் விடுமுறை தினத்தில் போருட் நிறுவன பணியாளர்களுக்கு விடுமுறை வழங்க ரான்வி வெட்டேனஸ் மறுப்பு தெரிவித்தார் என்றும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது