எழுத்தாளர்கள்

எழுத்தாளர்கள்

யாழ். மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம் 5 ஆம் திகதி

மூன்றாண்டுகளாக பிற்போடப்பட்டு வரும் யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம் ஐந்தாம் திகதி வெள்ளிக்கிழமை காலை யாழ்ப்பாண செயலகத்தில் நடைபெறவுள்ளதாக யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் கே.கணேஷ் அறிவித்துள்ளார். யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம் கடைசியாக 2006 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 16 ஆம் திகதி நடைபெற்றது. இதன் பின்னர் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்தைக் கூட்ட அரசாங்க அதிபர் மூன்று முறை அறிவித்திருந்தும் பின்னர் ஒத்திவைக்கப்பட்டது.

மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்துக்கு சமூக சேவை மற்றும் சமூக நலத்துறை அமைச்சரும் வடமாகாண விசேட செயலணிக் குழுத் தலைவருமான டக்ளஸ் தேவானாந்தா தலைமை தாங்குவார். கூட்டத்தில் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள், வட மாகாண ஆளுநர், வடமாகாண சபையின் செயலாளர் ஆகியோர் பங்கு கொள்வரென அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழறிஞர் முனைவர் இரா.திருமுருகனார் இயற்கை எய்தினார்

ira1thiru.JPGபுதுவைத் தமிழறிஞர் முனைவர் இரா.திருமுருகனார் 03.06.2009 விடியற்காலை 1 மணிக்குப் புதுச்சேரியில் உள்ள தம் இல்லத்தில் இயற்கை எய்தினார் இன்று(03.06.2009.) மாலை 4 மணிக்கு உடல் நல்லடக்கம் செய்யப்படும். புதுவைத் தமிழறிஞர் முனைவர் இரா.திருமுருகனார் பற்றிய சில குறிப்புகள்

இருபதாம் நூற்றாண்டில் தோன்றிய இலக்கணப் புலவர்களில் முனைவர் இரா.திருமுருகனார் அவர்கள் குறிப்பிடத் தகுந்தவர் ஆவார். இயற்றமிழும் இசைத்தமிழும் வல்ல அறிஞர் இவர். இவர் குழல் இசைப்பதில் தனித்திறம் பெற்றவர்.அதுபோல் வாய்ப்பாட்டிலும் தேர்ந்தவர். புதுச்சேரி அரசுப் பள்ளியில் பல காலம் ஆசிரியராக இருந்து தமிழ்ப்பணியாற்றியவர்.

புதுச்சேரி மாநிலத்தில் கூனிச்சம்பட்டு என்னும் ஊரில் 16.03.1929 இல் பிறந்தார்.இவர்தம் பெற்றோர் பெயர் அ.அரசு,இரா.அரங்கநாயகி. திருமுருகனாரின் இயற்பெயர் இரா.சுப்பிரமணியன் என்பதாகும்.தனித்தமிழ் ஆர்வம் ஏற்பட்ட பிறகு தம் பெயரைத் திருமுருகன் என மாற்றிக்கொண்டவர்.

இவர் பண்டிதம்(1951),கருநாடக இசை-குழல் மேனிலை(1958), பிரஞ்சு மொழிப்பட்டயம் (1973),கலைமுதுவர்,கல்வியியல் முதுவர்,மொழியியல் சான்றிதழ்(1983),முனைவர்(1990) உள்ளிட்ட பல பட்டங்கள் சான்றுகளைப் பெற்றவர்.44 ஆண்டுகள் அரசுப்பணியாற்றிய பின்னர் ஓய்வுக்குப் பின் தமிழ் வளர்ச்சி சிறகத்தின் தனி அலுவலர் பணிபுரிந்து புதுச்சேரியில் தமிழ் வளர்ச்சிக்கு வேண்டிய ஆக்கப்பணிகளில் ஈடுப்பட்டவர்.

தமிழ் வளர்ச்சி நடவடிக்கைக்குழு என்னும் அமைப்பின் சிறப்புத் தலைவராகவும், புதுவைத் தமிழன்பர்கள் தமிழ்ப்பணி அறக்கட்டளையின் நிறுவுநராகவும், தெளிதமிழ் என்னும் திங்கள் ஏட்டின் சிறப்பு ஆசிரியராகவும், தமிழ்க்காவல் என்னும் இணைய இதழின் ஆசிரியராகவும் பணிபுரிபவர்.

சென்னைப் பல்கலைக்கழக இசைத்துறைப் பாடத்திட்டக் குழுவில் உறுப்பினராகவும்,புதுவை அரசின் ஆட்சிமொழிச் சட்ட நடைமுறை ஆய்வுக்குழு உறுப்பினராகவும் விளங்குபவர். பல்வேறு பல்கலைக் கழகங்களில் அறக்கட்டளைப் பொழிவுகள் செய்த பெருமைக்கு உரியவர்.தமிழ் செம்மொழி ஆய்வு நிறுவனத்திற்குப் பழந்தமிழ்ப் பனுவல்களை ஒலி வட்டாக்கிய குழுவில் முதன்மையிடம் பெற்றவர்.

இன்றைய தமிழுக்குப் புதிய இலக்கணம் உருவாக்குவதிலும்,இசைத்தமிழ் யாப்பிலக்கணம் உருவாக்குவதிலும்,தமிழ்நலம் கெடும் இடங்களிலில் தலையிட்டுக் கிளர்ச்சி செய்வதிலும் ஈடுபட்டு வருபவர்.

தமிழ்ப்பணிகளின் பொருட்டு இவர் பிரான்சு, செருமனி, உரோமை, மலேசியா, சிங்கப்பூர்,இலங்கை உள்ளிட்ட நாடுகளுக்குச் சென்று வந்த பெருமைக்கு உரியவர்.என் தமிழியக்கம் என்னும் பெயரில் ஐயா உருவாக்கியுள்ள நூல்களில் இவர்தம் நாற்பதாண்டுக் கால பணிகள் பதிவாகியிள்ளன. சிந்துப்பாடல்களின் யாப்பிலக்கணம் தொடர்பிலான இவர்தம் முனைவர் பட்ட ஆய்வேடு முதன்மையானது. சிந்துப்பாவியில் என்னும் இவர்தம் நூலும் சிந்து இசை பற்றிய இலக்கணத்தை அரிதின் எடுத்துரைக்கும் நூலாகும்.இவர்தம் தமிழ்ப்பணிகள் கண்டு பல நிறுவனங்கள் இவரைப் பாராட்டியுள்ளன.

இலக்கணச்சுடர்,இயலிசைச்செம்மல்,முத்தமிழ்ச்சான்றோர்,நல்லாசிரியர்(நடுவணரசு),மொழிப்போர் மறவர், சிந்திசைச்செம்மல், பாவலர் அரிமா, தமிழ்க்காவலர், கலைச்செல்வம்,பாவேந்தர் பைந்தமிழ்க்காவலர் உள்ளிட்ட பட்டங்ஙகளும் விருதுகளும் குறிப்பிடத்தகுந்தன.

முனைவர் இரா.திருமுருகனாரின் தமிழ்க்கொடைகளுள் குறிப்பிடத்தகுந்தன:

01.நூறு சொல்வதெழுதல்கள்,1957
02.இனிக்கும் இலக்கணம்,1981
03.கம்பன் பாடிய வண்ணங்கள்,1987
04.இலக்கண எண்ணங்கள்,1990
05.பாவேந்தர் வழி பாரதி வழியா?,1990
06.சிந்து இலக்கியம்,1991
07.சிந்துப்பாடல்களின் யாப்பிலக்கணம்,1993
08.சிந்துப்பாவியல்,1994
09.மொழிப்பார்வைகள்,1995
10.பாவலர் பண்ணை,1997
11.மொழிப்புலங்கள்,1999
12.இனிய தமிழைப் பிழையின்றி எழுத எளிய வழிகள்,2001

மொழி வளர்ச்சி

13.என் தமிழ் இயக்கம்-1, 1990
14.என் தமிழ் இயக்கம்-2, 1992
15.தாய்க்கொலை,1992
16.என் தமிழ் இயக்கம்-3, 1994
17.என் தமிழ் இயக்கம்-4, 1996
18.என் தமிழ் இயக்கம்-5, 1998
19.எருமைத் தமிழர்கள்,1998
20.இன்றைய தமிழர்கள் மொழிப்பற்று உள்ளவர்களா?,1999
21.கழிசடைகள்,2002
22.என் தமிழ் இயக்கம்-6, 2005
23.என் தமிழ் இயக்கம்–7,2006
24.இலக்கிய எண்ணங்கள்,1998
25.புகார் முத்தம்,1991
26.கற்பு வழிபாடு,1994

பாடல்

27.ஓட்டைப் புல்லாங்குழல்,1990
28.கம்பனுக்குப் பாட்டோலை,1990
29.பன்னீர்மழை,1991
30.அருளையா? பொருளையா?,1999

இசை

31.பாவேந்தரின் இசைத்தமிழ்,1990
32.இசுலாம் வளர்த்த இசைத்தமிழ்,1996
33.ஏழிசை எண்ணங்கள்,1998
34.சிலப்பதிகாரம்-தமிழன் படைத்த கலைக்கருவூலம்,2000

வரலாறு

35.புதுச்சேரி பாண்டிச்சேரியுடன் போராடுகிறது,1994
36.பாவாணர் கண்ட இன்றைய தமிழின் இலக்கணங்கள்,2003

தகவல் ; முனைவர் மு.இளங்கோவன்

விமானம் விபத்துக்குள்ளான இடம் தெரிந்தது

01-air-france.jpgவிபத்துக் குள்ளான ஏர் பிரான்ஸ் விமானத்தின் பாகங்கள் பிரேசிலுக்கு 650 கி.மீ. வட கிழக்கே அட்லாண்டிக் கடலில் கிடப்பது தெரியவந்துள்ளது. அந்தப் பகுதியில் பிரான்ஸ், பிரேசில் விமானப் படையினரும் கடற்படையினரும் நடத்திய தேடுதல் வேட்டையில் பயணிகள் யாரும் உயிர் தப்பவில்லை என்று தெரியவந்துள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை 228 பயணிகளுடன் AF 447 என்ற அந்த விமானம் இரவு 11.30 மணிக்கு பிரேசிலில் இருந்து புறப்பட்டது. ஆனால், நள்ளிரவு 2.33 மணிக்கு அந்த விமானத்துடனான தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டது. இந்த நேரத்தில் விமானம் விபத்துக்குள்ளானதாகக் கருதப்படுகிறது.

நேற்று மாலை பிரேசிலின் பெர்னான்டோ டி நொரோன்ஹா என்ற தீவுக்கு 650 வட கிழக்கே விமானத்தின் சிதறிய பாகங்கள் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. ஒரு விமான சீட், ஒரு மிதவை, ஒரு இறக்கைத் துண்டு உள்ளிட்ட பாகங்கள் அங்கு மிதக்கின்றன. அப் பகுதியில் விமான எரிபொருளும் கசிந்து கிடக்கிறது. விமானத்தின் கருப்புப் பெட்டியை மீட்கும் முயற்சிகளும் நடந்து வருகின்றன. அதை ஆய்வு செய்தால் தான் விமானம் விபத்துக்குள்ளானதற்கான சரியான காரணம் தெரியவரும்.

இப்போதைக்கு கடும் காற்றோட்டம் காரணமாக ஏற்பட்ட திடீர் அதிர்வினால் அல்லது மின்னல் தாக்கியதால் விமானத்தின் கருவிகள் செயலிழந்து விபத்துக்குளாகியிருக்கக் கூடும் என்று சந்தேகிக்கப்படுகிறது. விமானத்தில் 3 பைலட்டுகள் இருந்தும் கூட கடைசி நிமிட பிரச்சனை குறித்து தரைக்கட்டுப்பாட்டு நிலையத்துக்கு தகவல் தரக் கூட கால அவகாசம் இல்லாத அளவுக்கு படுவேகத்தில் விபத்து நடந்து முடிந்துள்ளது.

விபத்தின்போது விமானத்தின் உள் காற்றழுத்தம் (pressure) குறைந்துவிட்டதாகவும், பல மின்சார எந்திரங்கள் செயல்படவில்லை என்றும் அதன் கம்ப்யூட்டர்கள் தரைக்கட்டுப்பாட்டு நிலையத்துக்கு தகவல் தந்தது குறிப்பிடத்தக்கது. தயாரிக்கப்பட்டு 4 வருடமே ஆன இந்த விமானத்தில் கடந்த ஏப்ரலில் வழக்கமான பராமரிப்புப் பணியும் நடந்துள்ளது.

இன்று கருணாநிதியின் 86வது பிறந்த நாள்

karunanithi.jpgமுதல்வர் கருணாநிதியின் 86வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி அண்ணா அறிவாலயத்தில் அவர் தொண்டர்களை சந்தித்து வாழ்த்து பெறுகிறார்.

இன்று காலை பேரறிஞர் அண்ணா, தந்தை பெரியார் ஆகியோரின் நினைவிடங்களுக்குச் சென்று அஞ்சலி செலுத்திய முதல்வர் பின்னர் அண்ணா அறிவாலயம் வந்தார். அங்கு அவரை ஆயிரக்கணக்கான தொண்டர்கள் வரிசையில் நின்று சந்தித்து வாழ்த்து தெரிவிக்கின்றனர்.

முஸ்லிம் தலைமைகளிடமுள்ள ஒற்றுமை தமிழ் தலைவர்களிடம் இல்லை – அமைச்சர் முரளி

karuna0000.jpgஅமைச்சர் விநாயக மூர்த்தி முரளிதரன் (கருணா அம்மான்) காத்தான்குடிக்கு நேற்று முன்தினம் மாலை விஜயம் செய்தார். புலிகள் இயக்கத்திலிருந்து அவர் பிரிந்ததன் பின்னரும், அமைச்சரானதன் பின்னரும் காத்தான்குடிக்கு அவர் மேற்கொள்ளும் முதலாவது விஜயம் இதுவாகும்.

கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் எம். எல். ஏ. எம். ஹிஸ்புல்லாஹ்வின் அழைப்பின் பேரில், அவரது மாகாண அமைச்சில் காத்தான்குடி காரியாலயத்தில் பிரதேச முக்கியஸ்தர்கள், கல்விமான்கள், பள்ளிவாயல் தலைவர்களைச் சந்தித்துப் பேச்சு நடத்தினார்.

இங்கு உரை நிகழ்த்திய அமைச்சர் முரளிதரன், பிரபாகரனின் முட்டாள்தனமான நடவடிக்கைகளினாலேயே தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டம் இந்த நிலைக்குச் சென்றுள்ளது. பல தடவைகள் ஆயுதப் போராட்டத்தைக் கைவிட்டுவிட்டு பேச்சின் மூலம் தீர்வைக் காண்போம் என நான் கூறிய போதெல்லாம் அவற்றை எல்லாம் அவர் உதாசீனம் செய்துவிட்டார். எனது கருத்துக்களை அவர் உள்வாங்கியிருந்தால் அவருக்கு இந்த நிலைமை ஏற்பட்டிருக்காது உயிருடனும் இருந்திருப்பார். ஆயுதப் போராட்டத்தின் மூலம் எதனையுமே சாதிக்க முடியாது.

ஜனநாயக வழியில் தேசிய ரீதியில் ஆழுகின்ற அரசுகளுக்கு ஆதரவு வழங்கியதனாலேயே முஸ்லிம் பிரதேசங்கள் அபிவிருத்தியடைந்துள்ளன. 30 வருடங்களாக முஸ்லிம் சமூக பிரதிநிதிகள் தமது பிரதேசங்களை அபிவிருத்திச் செய்துள்ளனர். ஆனால் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களால் எதையுமே செய்ய முடியவில்லை. முஸ்லிம் தலைமைகளிடம் ஒற்றுமை உண்டு தனது சமூகத்திற்கு ஏதுமென்றால் ஒன்றாகி விடுவார்கள்.

ஆனால் தமிழ் தலைமைகள் அவ்வாறில்லை. 14 தமிழ் அரசியல் கட்சிகள் உள்ள தலைமைக்காக மோதுவதைத் தவிர எதையுமே ஆரோக்கியமாகச் செய்தவரலாறில்லை. ஜனாதிபதி கூட்டிய சர்வகட்சி மாநாட்டின் போதும் தமிழ் அரசியல் தலைமைகள் மோதுகின்ற அளவிற்கு வேற்றுமை மாத்திரமே மிஞ்சியிருக்கிறது.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் 22 நாடாளுமன்ற உறுப்பினர்களும் என்ன செய்கிறார்கள். வெறும் பசப்பு வார்த்தை பேசிக் கொண்டு தமிழ் மக்களை ஏமாற்றிக் கொண்டு திரிகின்றனர். தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையினை ஆளும் கட்சியான சு.க. ஊடாக அதிகரிப்பதே எனது இலக்கு. கிழக்கில் மாத்திரமல்ல வடக்கிலும் ஆளும் கட்சியூடான தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களை ஆதரிக்கவேண்டும்.

தமிழ், முஸ்லிம் சமூக வேற்றுமைகளை மறந்து, ஐக்கியத்துடன் செயற்பட வேண்டும். அதற்காகவே தேசிய நல்லிணக்க அமைச்சைப் பொறுப்பேற்றேன். யுத்தம் முடிந்துவிட்டது. இனி இனங்களிடையே ஒற்றுமையைக் கட்டி எழுப்ப வேண்டும். அமைச்சர்களான ஹிஸ்புல்லா, அதாஉல்லா, அமீர்அலி, ரிஷாட் பதியுதீன் ஆகிய முஸ்லிம் அமைச்சர்களின் சேவைகளைப் பாராட்டுகின்றேன். வன்னியில் இடம்பெயர்ந்து வவுனியா நலன்புரி நிலையங்களில் தங்கியிருக்கும் தமிழ் மக்களுக்கு அங்கேயே நின்று ரிஷாட் அமைச்சர் அம்மக்களின் நலன் விடயங்களில் அக்கறைகாட்டி வருகின்றார். ஒரு முஸ்லிம் அமைச்சராக இருந்து கொண்டு அவர் அங்கு ஆற்றிவரும் சேவையானது வரவேற்கத்தக்கதாகும்.

அமைச்சர் ஹிஸ்புல்லாவும் தமிழ், முஸ்லிம் வேறுபாடில்லாமல் சேவையாற்றி வருகின்றார். இந்த நேரத்தில் அவர் பாராளுமன்றத்தில் இருந்திருந்தால் சிறப்பாக இருந்திருக்கும். அன்று நான் பிரபாகரனிடத்தில் அடிக்கடி கூறுவேன் முஸ்லிம்களை புறக்கணிக்காதீர்கள், முஸ்லிம் தலைவர்களுடன் பேசுங்கள் என்று. அதுதான் அவர் இறுதியில் முஸ்லிம் தலைவர்களுடன் செய்து கொண்ட ஒப்பந்தமாகும்.

இலங்கையில் ஏற்கமுடியாத அளவுக்கு மக்கள் உயிரிழப்பு- ஐ நா பொதுச் செயலர்

uno.jpgஇலங் கையில் விடுதலைப்புலிகள் அமைப்பினருக்கும், இலங்கை படையினருக்கும் இடையில் இடம்பெற்ற மோதல்களில் ஏற்க முடியாத அளவுக்கு மிகவும் அதிகமான மக்கள் கொல்லப்பட்டிருப்பதாக ஐக்கிய நாடுகள் சபையின் தலைமைச் செயலர் பான் கீ மூன் அவர்கள் தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கான தனது விஜயம் குறித்து ஐக்கியநாடுகள் மன்றத்தின் பொதுச்சபைக்கு விளக்கிப் பேசிய அவர், இறந்தவர்களில் தொகையாக ஐ. நாவினால் எந்தவொரு எண்ணிக்கையும் வெளியிடப்படவில்லை என்றும், அப்படியாக ஐ.நாவினால் இறந்தவர்களின் எண்ணிக்கை வெளியிடப்பட்டதாகக் கூறப்படுவது தவறு என்றும் கூறினார்.

அதேவேளை, இலங்கையில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கையை ஐக்கிய நாடுகள் சபை குறைத்து வெளியிட்டது என்று கூறப்படுவதையும் தான் குறிப்பாக நிராகரிப்பதாகவும் அவர் கூறினார்.

அது பற்றி செய்தியாளர்கள் மத்தியில் உரையாற்றிய ஐ.நா தலைமைச் செயலரின் சார்பில் பேசிய மிஷேல் மொண்டாஸ் அவர்கள், இலங்கையில் பொதுமக்கள் கொல்லப்பட்டமை குறித்து ஐ நா பொதுச் செயலர் தனது கடுமையான கவலையை மீண்டும் மீண்டும் வலியுறுத்துவதாக அவர் கூறினார்.

சில ஊடகங்களில் வெளியான தகவல்கள் குறித்து கருத்துக் கூறிய அவர், இறந்தவர்கள் எண்ணிக்கை இன்னமும் வெளியாகவில்லை என்றும், வெளியான பல தகவல்கள் ஐ.நாவில் இருந்து வெளியானவில்லை என்றும், பெரும்பாலானவை எமது வெளியீடுகளில் இருந்த தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை அல்ல என்றும் கூறினார்.

அதே நேரம் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை என்னவாக இருந்த போதிலும், அது ஏற்கப்பட முடியாத அளவுக்கு அதிகமானது என்றும் பான் கீ மூன் சார்பில் பேசவல்ல அதிகாரியான மிஷேல் மொண்டாஸ் கூறினார்.

இலங்கை உள்நாட்டுப் போரின் போது இடம்பெற்றதாக கூறப்படும் மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று சர்வதேச நாடுகளால் விடுக்கப்படுகின்ற கோரிக்கையை இலங்கை அரசாங்கம் ஏற்க வேண்டும் என்று மே மாதம் 22 மற்றும் 23 ஆம் திகதி தான் இலங்கைக்கு மேற்கொண்ட விஜயத்தின் போது இலங்கை அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுத்ததாகவும் ஐ. நாவின் தலைமைச் செயலர் கூறியுள்ளார்.

இந்த விடயத்தில் முழுமையான பொறுப்பேற்றலும், வெளிப்படைத்தன்மையும் தேவை என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

கல்முனை தமிழ் பாடசாலைகள் நேற்றும்செயலிழப்பு – ஆசிரியர் இடமாற்ற விவகாரத்திற்கு தீர்வு

teacher.jpgகல்முனை வலயத்தில் சர்ச்சைக்குள்ளான ஆசிரிய இடமாற்ற விவகாரத்திற்குத் தீர்வுகாணப்பட்டுள்ளது. ஆயினும் கல்முனை தமிழ்ப் பாடசாலைகள் நேற்று 2வது நாளாகவும் மூடப்பட்டிருந்தன.

தமிழ்ப் பாடசாலைகளில் நியமிக்கப்பட்டுள்ள முஸ்லிம் ஆசிரியர்களும், முஸ்லிம் பாடசாலைகளில் நியமிக்கப்பட்டுள்ள தமிழ் ஆசிரியர்களும் மீண்டும் அவரவர் இனப் பாடசாலைகளுக்கு இடமாற்றத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதாவது அவர்களது இடமாற்ற உத்தரவு ரத்துச் செய்யப்பட்டுள்ளது. இவர்களுக்கான முறையான இடமாற்றக் கடிதம் எதிர்வரும் 8ம் திகதி முதல் செயற்படும்படியாக அந்தந்த அதிபர்களிடம் 05.06.2009 அன்று வழங்கப்படும்.

இது தொடர்பான எழுத்து மூல உறுதி மொழியை கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர் எம். ரீ. அப்துல் நிசாம் ஒப்பமிட்டு சகல தமிழ்ப் பாடசாலை அதிபர்களுக்கும் நேற்று கையளித்துள்ளார். 08 வருடங்களுக்கு குறைவான சேவையுடைய ஆசிரியர்கள் தொடர்பில் பாடசாலைத் தேவைகள், கோரிக்கைகளைக் கவனத்திற்கொண்டு அப்பாடசாலைகளில் மீண்டும் பணிக்கு அமர்த்தப்படுவர். 08 வருடங்களுக்கு மேலதிக சேவையுடையவர்களுக்கும் இது பொருந்தும்.

ஆசிரியர்களது மேன்முறையீடுகள் யாவும் இடமாற்றத் திட்டத்தின் படி கடமையேற்று 04.06.2009க்கு முன்பு காரியாலயத்தில் ஒப்படைக்கப்பட வேண்டும். மேன்முறையீடுகள் அனைத்தும் எதிர்வரும் 08.06.2009 முதல் 12.06.2009 வரை பரிசீலனை செய்யப்பட்டு அவற்றுக்கான தீர்வுகள் எதிர்வரும் 15.06.2009 முதல் செயற்படும் படியாக மீள் இடமாற்றங்கள் குறிப்பிட்ட ஆசிரியர்களுக்கு வழங்கப்படும்.

தமிழ்ப் பாடசாலைகளின் இத்தகைய விடயங்களுக்குப் பொறுப்பாக பிரதிக் கல்விப் பணிப்பாளர் திருமதி எஸ். கே. ஆனந்தராஜா நியமிக்கப்பட்டுள்ளார். இடமாற்றங்கள் சார்பில் பாடசாலைகளில் தோன்றிய பிரச்சினைகளைத் தீர்ப்பதிலும், பாடசாலைகள் சுமுகமாக இயங்குவதற்கான எடுத்த முயற்சிகளுக்காக ஜனாதிபதியின் மாவட்ட இணைப்பாளர் இனியபாரதிக்கு நன்றி கூறுவதாக வும் பணிப்பாளரின் அதிபர்களுக்கான கையெழுத்து அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வலயக் கல்விப் பணிப்பாளரின் இவ் அறிக்கையை கல்முனை, சம்மாந்துறை வலய கல்விப் பொறுப்பாளர் வரதன் சகல தமிழ்ப் பாடசாலை அதிபர்களுக்கும் நேற்று விநியோகித்தார்.

கல்முனை வலய தமிழ்ப் பாடசலைகளின் கல்விச் சமூகத்தை அழைத்து திங்களன்று நண்பகல் ஜனாதிபதியின் அம்பாறை மாவட்ட இணைப்பாளர் இனியபாரதி கல்முனை கல்விப் பணிமனையில் கூட்டத்தை நடத்தினார். கூட்டத்தில் கல் முனை மேலதிக வலயக் கல்விப் பணிப்பாளர் திருமதி எஸ். கே. ஆனந்தராஜா, பிரதிக் கல்விப் பணிப்பாளர் எம். எஸ். ஜலீல், இலிகிதர் கையூம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

கல்முனை, சம்மாந்துறை கல்விப் பொறுப்பாளர் வரதன் தலைமையில் கூட்டம் நடைபெற்றது. வலயக் கல்விப் பணிப்பாளர் எம். ரீ. ஏ. நிசாம் கலந்துகொள்ளவில்லை. கூட்டத்திற்குச் சமுகமளித்த அதிபர்கள், பெற்றோர்கள், பாடசாலை சமூகத்தினர் கருத்துத் தெரிவித்தனர்.

கல்முனை வலய தமிழ்ப் பாடசாலைகள் சார்பாக கலந்து கொண்ட பெற்றார் ஆசிரியர் சங்க பிரதிநிதிகள் மிகவும் காரசாரமாக தமது நியாயங்களை முன்வைத்தனர்.தமிழ்ப் பாடசாலைகளின் கல்வி அபிவிருத்தியைத் திட்ட மிட்டு அழிக்கும் ஒரு செயற் பாடாகவே இவ்விடமாற்றத்தை நாம் கருதுவதாக சமுகமளித்தோர் குற்றம் சாட்டினர். பதிலளிக்க உரிய அதிகாரியின்மையால் கூட்டம் பல மணிநேரம் நீடி த்தது. தொலைபேசி உரை யாடல்கள் தொடர்ந்தன. ஈற்றில் மாலை 6.00 மணியளவில் தீர்வு சொல்வதாகக் கூறி கூட்டம் முடிவுக்கு வந்தது. முடிவு உரிய வேளையில் கிடைக்காமையினால் நேற்றுப் பாடசாலைகள் மூடப்பட்டன. ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

களுத்துறை, மாத்தளை, கண்டி இன்று நீர்வெட்டு

மாத்தளை, கண்டி மற்றும் களுத்துறை மாவட்டங்களின் வெவ்வேறு பிரதேசங்களில் இன்று (3ம் திகதி) நீர்வெட்டு அமுல்படுத்தப்படுமென தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை நேற்று அறிவித்தது.

மாத்தளை மற்றும் கண்டி மாவட்டங்களின் வெவ்வேறு பிரதேசங்களில் இன்று காலை 5.00 மணி முதல் 24 மணி நேரம் நீர்வெட்டு அமுல்படுத்தப்படவிருப்பதாகவும் அச்சபை குறிப்பிட்டிருக்கிறது. தம்புள்ள நகரம், பொருளாதார மத்திய நிலையம், குருநாகல் வீதி, பொஹரன்வெவ, இப்பன்கட்டுவ நீர்த்தேக்க வீதி, அனுராதபுர வீதி, தெமதஓயா, பெல்வெஹர, கம்உதாவ, கல்வெட்டியாவ, மாத்தளை வீதி, கபுவத்தை, தம்புளுஓயா, நிசங்க வீதி, பஹல வெவ, கண்டலம வீதி, பட்டுயாய, ரத்மல்கஹஎல, மகாயாய, எருவலசந்தி ஆகிய பிரதேசங்களுக்கே 24 மணி நேர நீர்வெட்டு அமுல்படுத்தப்பட விருக்கிறது.

தம்புள்ள நீர்வழங்கல் திட்ட நிர்மாணம் மற்றும் பராமரிப்பு காரணமாக 24 மணிநேர நீர்வெட்டு அமுல்படுத்தப்படுவதால் நீரை வீண் விரயம் செய்ய வேண்டாமெனவும் நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை பாவனையாளர்களைக் கேட்டுள்ளது.

இதேவேளை களுத்துறை மாவட்டத்தின் வெவ்வேறு பிரதேசங்களில் இன்று காலை 9 மணி முதல் மாலை 6 மணிவரையிலான 9 மணி நேர நீர்வெட்டு அமுல்படுத்தப்பட விருக்கிறது. கெத்ஹேன முதல் பேருவளை வரையான நீர்வழங்கல் குழாயில் மேற்கொள்ளப்படவிருக்கும் திருத்த வேலைகள் காரணமாகவே பயாகல, மக்கொன, பேருவளை, மொரகல்ல, அலுத்கம, தர்காநகர், பெந்தர ஆகிய பிரதேசங்களுக்கு இன்று ஒன்பது மணிநேர நீர்வெட்டு அமுல்படுத் தப்படவிருப்பதாகவும் அச்சபை அறிவித்திருக்கிறது.

பாடசாலைகளின் டெங்கு ஒழிப்பு வாரம் 8-15 வரை அமைச்சர் சுசில் பிரகடனம்

mosquito_preventionss.jpg“பாடசா லைகளில் டெங்கு ஒழிப்பு வாரம்” ஒன்றை கல்வி அமைச்சர் சுசில் பிரேம் ஜயந்த பிரகடனப்படுத்தியுள்ளார்.

எதிர்வரும் 8 ஆம் திகதி முதல் 15 ஆம் திகதி வரை “பாடசாலைகள் டெங்கு ஒழிப்பு வாரம்” அனுஷ்டிக்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார். டெங்குக் காய்ச்சல் மீண்டும் வேகமாக பரவ ஆரம்பித்துள்ளதால் டெங்கு ஒழிப்பு தொடர்பான வேலைத் திட்டங்களையும், விழிப்புணர்வுகளையும் வேகமாக முன்னெடுக்க வேண்டும் என்ற காரணத்தினாலேயே அமைச்சர் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளார்.

டெங்கு ஒழிப்பு வாரத்தினுள் சகல பாடசாலைகளிலும் அதன் சுற்றுப் புறச் சூழல்களில் டெங்கு ஒழிப்புக்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும், பாடசாலை மாண வர்களைக் கொண்டே டெங்கு நுளம்பு ஒழிப்பு வேலைகளை செய்யுமாறும் அமைச்சர் சகல மாகாண, வலய கல்விப் பணிப்பாளர்களுக்கும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

டெங்கு ஒழிப்பு வாரத்திற்கு மேலதிகமாக ஒவ்வொரு வெள்ளிக்கிழமை தினங்களிலும் காலை 7.30 மணி முதல் 8.00 மணிவரை பாடசாலை சுற்றுப்புற சூழலில் டெங்கு ஒழிப்பு முன்னேற்பாடுகளை செய்யுமாறும் கல்வி அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த சகல பாடசாலை அதிபர்களிடமும் வேண்டுகோள் விடுத்துள்ளார்

500 வீடுகளை பகிர்ந்தளிக்க எடுக்கப்பட்ட நடவடிக்கை அடிப்படை உரிமை மீறலாகும் -உயர் நீதிமன்றம்

02supreme.jpgஅம்பாறை மாவட்டம் அக்கரைப்பற்று பிரதேசத்தில் தீகவாவியை அண்மித்த பகுதியில் நிர்மாணிக்கப்பட்டுள்ள சுனாமி வீடமைப்புத் திட்ட வீடுகளை புதிதாக விண்ணப்பங்கள் கோரி சட்டத்தின் கீழ் வழங்க நடவடிக்கை எடுக்குமாறு அம்பாறை அரசாங்க அதிபர் உட்பட பிரதிவாதிகளுக்கு உயர் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டுள்ளது. அம்பாறை மாவட்டத்தில் சுனாமியினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு என சவுதி அரசாங்கத்தின் உதவியுடன் தீகவாவியை அண்மித்த பகுதியில் 500 வீடுகள் அமைக்கப்பட்டுள்ளன. இவ் வீடுகள் முஸ்லிம்களுக்கு பகிர்ந்தளிக்கப்படவிருந்த வேளையில் பௌத்த அமைப்புகளினால் அந்நேரம் எதிர்ப்புகளும் தெரிவிக்கப்பட்டது.

ஜாதிக ஹெல உறுமயவின் தலைவரான எல்லாவெல மேத்தானந்த தேரோ இது தொடர்பாக அடிப்படை உரிமை மீறல் மனுவொன்றை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தார்.

அம்பாறை அரசாங்க அதிபர், அக்கரைப்பற்று பிரதேச செயலாளர் ,வீடமைப்பு அமைச்சர் பேரியல் அஷ்ரப் ஆகியோரை பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்ட இம்மனு மீதான தீர்ப்பை நேற்று பிரதம நீதியரசர் சரத் என் சில்வா தலைமையிலான நீதியரசர்கள் வழங்கினர்.

தீகவாவியை அண்மித்த பகுதியில் சமயத்தை அடிப்படையாகக் கொண்டு மக்களை குடியேற்றும் எண்ணத்துடன் 500 சுனாமி வீடுகளை பகிர்ந்தளிக்க எடுக்கப்பட்ட நடவடிக்கை மூலம் அடிப்படை உரிமை மீறப்பட்டுள்ளதாக அந்த தீர்ப்பில் நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.