கல்முனை வலயத்தில் சர்ச்சைக்குள்ளான ஆசிரிய இடமாற்ற விவகாரத்திற்குத் தீர்வுகாணப்பட்டுள்ளது. ஆயினும் கல்முனை தமிழ்ப் பாடசாலைகள் நேற்று 2வது நாளாகவும் மூடப்பட்டிருந்தன.
தமிழ்ப் பாடசாலைகளில் நியமிக்கப்பட்டுள்ள முஸ்லிம் ஆசிரியர்களும், முஸ்லிம் பாடசாலைகளில் நியமிக்கப்பட்டுள்ள தமிழ் ஆசிரியர்களும் மீண்டும் அவரவர் இனப் பாடசாலைகளுக்கு இடமாற்றத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதாவது அவர்களது இடமாற்ற உத்தரவு ரத்துச் செய்யப்பட்டுள்ளது. இவர்களுக்கான முறையான இடமாற்றக் கடிதம் எதிர்வரும் 8ம் திகதி முதல் செயற்படும்படியாக அந்தந்த அதிபர்களிடம் 05.06.2009 அன்று வழங்கப்படும்.
இது தொடர்பான எழுத்து மூல உறுதி மொழியை கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர் எம். ரீ. அப்துல் நிசாம் ஒப்பமிட்டு சகல தமிழ்ப் பாடசாலை அதிபர்களுக்கும் நேற்று கையளித்துள்ளார். 08 வருடங்களுக்கு குறைவான சேவையுடைய ஆசிரியர்கள் தொடர்பில் பாடசாலைத் தேவைகள், கோரிக்கைகளைக் கவனத்திற்கொண்டு அப்பாடசாலைகளில் மீண்டும் பணிக்கு அமர்த்தப்படுவர். 08 வருடங்களுக்கு மேலதிக சேவையுடையவர்களுக்கும் இது பொருந்தும்.
ஆசிரியர்களது மேன்முறையீடுகள் யாவும் இடமாற்றத் திட்டத்தின் படி கடமையேற்று 04.06.2009க்கு முன்பு காரியாலயத்தில் ஒப்படைக்கப்பட வேண்டும். மேன்முறையீடுகள் அனைத்தும் எதிர்வரும் 08.06.2009 முதல் 12.06.2009 வரை பரிசீலனை செய்யப்பட்டு அவற்றுக்கான தீர்வுகள் எதிர்வரும் 15.06.2009 முதல் செயற்படும் படியாக மீள் இடமாற்றங்கள் குறிப்பிட்ட ஆசிரியர்களுக்கு வழங்கப்படும்.
தமிழ்ப் பாடசாலைகளின் இத்தகைய விடயங்களுக்குப் பொறுப்பாக பிரதிக் கல்விப் பணிப்பாளர் திருமதி எஸ். கே. ஆனந்தராஜா நியமிக்கப்பட்டுள்ளார். இடமாற்றங்கள் சார்பில் பாடசாலைகளில் தோன்றிய பிரச்சினைகளைத் தீர்ப்பதிலும், பாடசாலைகள் சுமுகமாக இயங்குவதற்கான எடுத்த முயற்சிகளுக்காக ஜனாதிபதியின் மாவட்ட இணைப்பாளர் இனியபாரதிக்கு நன்றி கூறுவதாக வும் பணிப்பாளரின் அதிபர்களுக்கான கையெழுத்து அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வலயக் கல்விப் பணிப்பாளரின் இவ் அறிக்கையை கல்முனை, சம்மாந்துறை வலய கல்விப் பொறுப்பாளர் வரதன் சகல தமிழ்ப் பாடசாலை அதிபர்களுக்கும் நேற்று விநியோகித்தார்.
கல்முனை வலய தமிழ்ப் பாடசலைகளின் கல்விச் சமூகத்தை அழைத்து திங்களன்று நண்பகல் ஜனாதிபதியின் அம்பாறை மாவட்ட இணைப்பாளர் இனியபாரதி கல்முனை கல்விப் பணிமனையில் கூட்டத்தை நடத்தினார். கூட்டத்தில் கல் முனை மேலதிக வலயக் கல்விப் பணிப்பாளர் திருமதி எஸ். கே. ஆனந்தராஜா, பிரதிக் கல்விப் பணிப்பாளர் எம். எஸ். ஜலீல், இலிகிதர் கையூம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
கல்முனை, சம்மாந்துறை கல்விப் பொறுப்பாளர் வரதன் தலைமையில் கூட்டம் நடைபெற்றது. வலயக் கல்விப் பணிப்பாளர் எம். ரீ. ஏ. நிசாம் கலந்துகொள்ளவில்லை. கூட்டத்திற்குச் சமுகமளித்த அதிபர்கள், பெற்றோர்கள், பாடசாலை சமூகத்தினர் கருத்துத் தெரிவித்தனர்.
கல்முனை வலய தமிழ்ப் பாடசாலைகள் சார்பாக கலந்து கொண்ட பெற்றார் ஆசிரியர் சங்க பிரதிநிதிகள் மிகவும் காரசாரமாக தமது நியாயங்களை முன்வைத்தனர்.தமிழ்ப் பாடசாலைகளின் கல்வி அபிவிருத்தியைத் திட்ட மிட்டு அழிக்கும் ஒரு செயற் பாடாகவே இவ்விடமாற்றத்தை நாம் கருதுவதாக சமுகமளித்தோர் குற்றம் சாட்டினர். பதிலளிக்க உரிய அதிகாரியின்மையால் கூட்டம் பல மணிநேரம் நீடி த்தது. தொலைபேசி உரை யாடல்கள் தொடர்ந்தன. ஈற்றில் மாலை 6.00 மணியளவில் தீர்வு சொல்வதாகக் கூறி கூட்டம் முடிவுக்கு வந்தது. முடிவு உரிய வேளையில் கிடைக்காமையினால் நேற்றுப் பாடசாலைகள் மூடப்பட்டன. ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.