எழுத்தாளர்கள்

எழுத்தாளர்கள்

புனர்வாழ்வு நிலையங்களின் பராமரிப்புக்கு ரூ. 100 மில். செலவு

புனர்வாழ்வு நிலையங்களில் பராமரிக்கப்படும் முன்னாள் புலி உறுப்பினர்களுக்கு உணவுக்காக மட்டும் நாளொன்றுக்கு நூறு மில்லியன் ரூபாய் செலவிடப்படுகிறதென புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் டியூ குணசேகர தெரிவித்தார்.

நேற்று முன்தினம் மாலை 306 முன்னாள் போராளிகளை விடுதலை செய்யும் நிகழ்வில் கலந்து கொண்ட அவர் மேற்கண்டவாறு கூறினார்.

மார்ச் மாதம் உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைக்குரிய தேர்தல் நடைபெற்று மக்கள் பிரதிநிதிகள் தெரிவு செய்யப்படவுள்ளனர். இந்தத் தேர்தலில் நீங்களும் போட்டியிட்டு மக்கள் பிரதிநிதிகளாக வரமுடியும். அதன் வழியாக அரசியல் பலமும் அரச பலமும் கிடைக்கும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டார். இதுவரையில், புனர்வாழ்வு அளிக்கப்பட்ட ஐயாயிரம் முன்னாள் புலி உறுப்பினர்கள் விடுவிக்கப்பட்டு சமூகத்துடன் இணைந்து கொண்டுள் ளனர்.

வளர்முகநாடுகளின் நிலைக்கு சமனான முறையில் புனர்வாழ்வு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன. போரின்போது வெற்றிகொண்ட இராணுவத்தினர் சரண் அடைந்த போராளிகளையும் மனித நேய அடிப்படையில் முக்கியத்துவம் கொடுத்து பராமரித்து வருகின்றது. புனர்வாழ்வு நிலையங்களில் சுதந்திரமாக நடமாட அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்றார்.

வவுனியா புனர்வாழ்வு நிலையங்களில் தங்கியிருந்தவர்களில் புனர்வாழ்வு அளிக்கப்பட்ட 306 பேர் விடுதலை செய்யப்பட்டார்கள். 200 பெண்களும், 106 ஆண்களும் அடங்கியிருந்தனர். வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலய புனர்வாழ்வு நிலையத்தில் வைத்து பெற்றோர்கள் மற்றும் பாதுகாவலர்கள் இவர்களை பொறுப்பேற்றனர்.

புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சின் ஆலோசகர் எஸ். சதீஸ்குமார், செயலாளர் எம். திசாநாயக்க, புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் பிரிகேடியர் சுகந்த ரணசிங்க மற்றும் இராணுவ உயர் அதிகாரிகள் இந்த வைபவத்தில் கலந்து கொண்டிருந்தனர்.

இலங்கைக் கிடைத்த ஒரே ஒரு தங்கமும் பறிபோகுமோ?

manju.gifஇந்தியாவில் நடைபெற்ற 19ஆவது பொதுநலவாய விளையாட்டுப் போட்டியில் 56 கிரோ கிராம் எடைப் பிரிவு குத்துச் சண்டைப் பிரிவில் வெற்றிபெற்று இலங்கைக்கு தங்கப் பதக்கத்தை பெற்றுக் கொடுத்த மஞ்சு வன்னியாராச்சி தடை செய்யப்பட்ட ஊக்க மருந்தை பயன்படுத்தியுள்ளதாக வெளியான தகவல்கள் குறித்து தற்போது கருத்துக் கூற முடியாதென இலங்கை விளையாட்டுப் பிரிவின் வைத்திய பொது முகாமையாளர் வைத்தியர் கீதாஞ்சன மெண்டிஸ் தெரிவித்துள்ளார்.

மஞ்சு வன்னியாராச்சி தொடர்பில் பல தகவல்கள் கசிந்துள்ள போதும் உத்தியோகப் பூர்வமாக எதுவும் உறுதிப்படுத்தப்படவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். எனினும் முறையான விசாரணைகளின் பின்னர் நாளைய தினம் உறுதியான தகவல்களை தெரிவிக்க முடியுமென வைத்தியர் கீதாஞ்சன மெண்டிஸ் கூறியுள்ளார். எனினும் மஞ்சு வன்னியாராச்சி போட்டியில் பங்குபற்றுவதற்கு முன்னர் அவரிடம் சிறுநீர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாகவும், அதில் அவர் தடை செய்யப்பட்ட ஊக்கமருந்தை பிரயோகித்துள்ளமை உறுதியாவதாகவும், பொதுநலவாய விளையாட்டுக் குழு இந்திய டில்லியில் இருந்து இலங்கைக்கு அறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளதென சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இதன் பின்னர் இலங்கை அதிகாரிகள் மஞ்சு வன்னியாராச்சியிடம் வினவியபோது, தான் அப்படியொரு ஊக்கமருந்தை பயன்படுத்தவில்லை என அவர் கூறியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. எனினும் தான் நோய் ஒன்றுக்காய் சிகிச்சைகளைப் பெற்றுக் கொண்டதாக மஞ்சு வன்னியாராச்சி கூறியுள்ளார். இந்நிலையில் மஞ்சு வன்னியாராச்சியிடம் இலங்கை ஒலிம்பிக் குழு எதிர்வரும் 14 நாட்களுக்குள் உரிய விளக்கமளிக்குமாறி கோரியள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கடற்கரையில் கண்டெடுத்த டப்பா வெடித்து 8 வயது சிறுவன் பலி. மேலும் 4 சிறார்கள் காயம்: மூதூரில் சம்பவம்

மூதூர் கடற்கரையில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்கள் கண்டெடுத்த டப்பா ஒன்று வெடித்ததில் எட்டு வயதுச் சிறுவன் கொல்லப்பட்டதோடு மேலும் நான்கு சிறார்கள் காயமடைந்தனரென பொலிஸார் தெரிவித்தனர். இச்சம்பவம் நேற்று சனிக்கிழமை காலை 9.45 அளவில் மூதூர் தக்வா நகர் வட்டம் கடற்கரை பகுதியில் நடந் துள்ளதாக பொலிஸார் கூறினர்.

ஐந்து சிறுவர்களும் கடற்கரையில் விளையாடிக்கொண்டிருந்தபோது அங்கு கண்டெடுத்த டப்பா ஒன்றை திறக்க முற்பட்டுள்ளனர். அப்போது அது பாரிய சத்தத்துடன் வெடித்துச் சிதறியதாக நேரில் கண்டவர்கள் தெரிவித்தனர்.

இந்த வெடிப்புச் சம்பவத்தில் காயமடைந்த ஐந்து சிறார்களும் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். இவர்களில் முகாஜிதீன் சர்பான் என்ற எட்டு வயதுச் சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாரென ஆஸ்பத்திரி வட்டாரங்கள் கூறின.

காயமடைந்தவர்களில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவரும் அடங்குகின்றனர். காயமடைந்தோரின் விபரம் வருமாறு, ஸல்மான், (வயது – 10), சாஜித் (வயது 05), சையிப் (வயது- 03) என்பவர்களுடன் யாரியா கரீம்- இம்ராக் (வயது 08) ஆகியோரே காயமடைந்தவர்களாவர்.

முன்னாள் அமைச்சர் தர்மதாச பண்டா காலமானார்

முன்னாள் அமைச்சர் தர்மதாச பண்டா தனது 72 வது வயதில் காலமானார். சில காலமாக நோய்வாய்ப்பட்டிருந்த இவர் தனியார் வைத்தியசாலையொன்றில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்றுக் காலமானார்.

1965 ஆண்டு ஐக்கிய தேசியக் கட்சியின் மொனராகலைப் பாராளுமன்ற உறுப் பினராகத் தனது அரசியல் பயணத்தை இவர் ஆரம்பித்திருந்தார்.

பின்னர் ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து விலகிய இவர், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவு தெரிவித்ததுடன் முன்னைய அமைச்சரவையில் துணை வேளாண்மை மற்றும் பயிர்ச்செய்கை அமைச்சராகப் பதவி வகித்திருந்தார்.

புனர்வாழ்வு பெறுவோர் விபரங்கள் – www.bcgrsrilanka.com இணையத்தில்

தடுப்பு முகாம்களில் இருப்பவர்கள், கைது செய்யப்பட்டு சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டிருப்போர் புனர்வாழ்வு அளிக்கப்பட்டு வருவோர் பற்றிய விபரங் களை மக்கள் அறிந்து கொள்வதற்கான இணையத்தளம் யாழ்ப்பாண செயலகத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

இணையத்தளத்தின் முகவரி www.bcgrsrilanka.com என்பதாகும். இந்த இணையத்தளம் அதிகளவு ஊடகவிய லாளர்களுக்கு பயனுடையதாக விருக்குமென கருதப்படுகிறது.

தெல்லிப்பழை புனர்வாழ்வு முகாமிலுள்ள 23 பெண்கள் விடுதலை செய்யப்பட்டனர்.

யாழ். தெல்லிப்பழை புனர்வாழ்வு முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 23 பெண்கள் நேற்று விடுதலை செய்யப்பட்டனர். இப்பெண்களை அவர்களின் பெற்றோர் உறவினர்களிடம் கையளிக்கும் நிகழ்வு நேற்று வெள்ளிக்கிழமை தெல்லிப்பழையில் இடம்பெற்றது.

சிறைச்சாலைகள் மற்றும் புனர்வாழ்வு மறுசீரமைப்பு அமைச்சர் டியூ குணசேகரவினால் இவர்கள் ஒப்படைக்கப்பட்டதுடன் இவர்களின் விடுதலைக்கான சான்றிதழ்களை அமைச்சர் டியூ குணசேகர வழங்கினார். தடுத்து வைக்கப்பட்ட பெண்கள் விடுதலைப்புலிகள் என்ற சந்தேகத்தின் பேரில் புனர்வாழ்வு முகாமில் வைக்கப்பட்டவர்களாவர்.

இந்த நிகழ்வில் உரையாற்றிய அமைச்சர் டியூ குணசேகரா வவுனியா ஓமந்தை புனர்வாழ்வு நிலையத்தின் புனர்வாழ்வு முகாம் மூடப்படுவதாக தெரிவித்தார். அந்த முகாமில் இருப்பவர்களில் சுமார் 150 பேர் வியாழக்கிழமை விடுதலை செய்யப்படுவதாகவும், ஏனையவர்கள் வேறு முகாம்களுக்கு மாற்றப்படுவர் எனவும் அமைச்சர் தெரிவித்தார். இந்த நிகழ்வில் சிறைச்சாலைகள் மற்றும், புனர்வாழ்வு பிரதி அமைச்சர் விஜிதமுனி சொய்சா, அமைச்சின் செயலாளர் திசநாயக்க, அமைச்சின் சிரேஸ்ட ஆலோசகர் எஸ்.சதீஸ்குமார், புனர்வாழ்வு ஆணையாளர் மேஜர் ஜெனரல் சுகந்த ரணசிங்க, புனர்வாழ்வு அதிகார சபைத் தலைவர் சமரசிங்க, தமிழ்தேசியக்கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ஈ. சரவணபவன், அரசதரப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சில்வெஸ்ரின் அலென்ரின் மற்றும் புனர்வாழ்வு நிலைய அதிகாரிகள் எனப் பலர் கலந்து கொண்டனர்.

இதேவேளை, யாழ் மாவட்டத்தில் வன்செயல்களினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழப்பீடு வழங்குவதற்காக யாழ். அரச செயலகத்திற்கு நேற்று அமைச்சர் டியூ குணசேகர வருகை தந்த போது அங்கு காத்திருந்த தடுப்பு முகாம்களில் உள்ளவர்களின் பெற்றோர், உறவினர், காணாமல் போனோரின் பெற்றோர் உறவினர் என்போர் அமைச்சரை சந்தித்து கண்ணீர் விட்டு அழுதனர். தங்கள் உறவினர்களை விடுதலைசெய்யுமாறும், காணாமல் போனோர் குறித்து நடவடிக்கை எடுக்குமாறும் கோரியே இவர்கள் அமைச்சரிடம் அழுது மன்றாடினர். பொதுமக்கள் கொண்டு வந்திருந்த மனுக்களை அமைச்சர் பெற்றுக்கொண்டு அவர்களுக்கு ஆறுதல் கூறினார்.

இதேவேளை, தடுப்பு முகாமில் உள்ளவர்கள் மற்றும் அரசியல் கைதிகள் குறித்த விபரங்களைக் கொண்ட இணையத்தளம் ஒன்றை அமைச்சர் டியூ குணசேகர நேற்று யாழ். கேட்போர் கூடத்தில் வைத்து சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்து வைத்தார். இன்று சனிக்கிழமை முதல் இந்த இணையத்தளத்தில் இவ்விபரங்களைப் பார்வையிட முடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. www.bcgrsrilanka.com என்ற இணையத்தளத்தில் பார்வையிட முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் மொழியின் சுடுகாட்டில் தமிழ்க் கலாச்சார வீரநடைபோடும் ஆங்கிலத்தின் அடிமைகள். : யூட் ரட்ணசிங்கம்

Convocation_UoJ1956ம் ஆண்டு பண்டாரநாயக்கா தனிச் சிங்களச் சட்டத்தை கொண்டு வந்தபோது அது தமிழ் மொழியை இரண்டாம் தர மொழியாக தள்ளிவிடுகிறது என்று கோஷமிட்டு ஆக்ரோஷமான அரசியலை முன்னெடுத்தார்கள் அன்றைய தமிழ் அரசியல் வாதிகள்.

அவர்களின் அன்றைய அகிம்சைப் போராட்டமே இறுதியில் ஆயுதப் போராட்டத்துக்கு வழி அமைத்தது.

தமிழீழ ஆயுதப் போராட்டத்தின் பல தொடக்கப் புள்ளிகளில் மிக முக்கியமான புள்ளிகளில் ஒன்றுதான் யாழ்ப்பாணப்  பல்கலைக் கழகம்.

விடுதலைப்போர் நடைபெற்ற நாடுகளிலெல்லாம் அந்த போராட்டங்களின் பின்புலத்தில் அந்தந்த நாட்டு பல்கலைக் கழகங்கள் பங்கு பற்றிய வரலாற்றுத் தொடர்ச்சியில் யாழ்ப்பாண பல்கலைக் கழகமும் ஒன்று.

இது கல்விசார் வரலாற்றுத் தொடர்ச்சியை மட்டுமல்ல தமிழ் ஆயுதப் போராட்ட வரலாற்றையும் வடுக்களையும் கடந்த மே 18 வரை காவி நின்றது.

குறிப்பாக தமிழுக்காக உயிர் கொடுக்க வேண்டும் என்ற இளைஞர்களை உசுப்பேத்தும்  அரசியல் உருவாக்கத்தின் ஒரு புள்ளியும் கூட இந்த யாழ் பல்கலைக்கழகம்.

Convocation_UoJஇந்த யாழ் பல்கலைக்கழகத்தின் 26வது பட்டமளிப்பு விழா அண்மையில் நடந்ததான செய்தியும் புகைப்படங்களும்  அனைத்து ஊடகங்களிலும் வெளிவந்தன.

அந்த புகைப்படங்களைப் பார்த்த போது வீணடிக்கப்பட்ட அந்த உயிர்களான முத்துக்குமாரும் முருகதாசும் என் கண்முன்னேவந்து போனார்கள்.

இரண்டு இலட்சம் அப்பாவி உயிர்களை காவுகொண்ட அந்த கொடூரமான போரின் துவக்கப் புள்ளிகளில் ஒன்றான இந்த யாழ் பல்கலைக் கழகம் தனது 26வது பட்டமளிப்பு விழாவில் தமிழிலும் எழுதுவதற்கு தயங்குகிறது.

ஆங்கிலத்தை கற்றுக்கொள்வதோ அதில் புலமை பெறுவதோ தவறில்லை. ஆங்கிலம் சர்வதேச அங்கீகாரம் பெற்ற மொழி என்பதும் அனைவரும் அறிவர். பல்கலைக் கழகங்களில் அம்மொழியின் அவசியம் தவிர்க்க முடியாதது மட்டுமல்ல மிக அவசியமானதும் கூட.

ஆனால் தன் தாய் மொழியை பேசுவதும் பயன்படுத்துவதும் தரம் கெட்ட செயல் என்று கருதும் ஒரேயொரு இனம் அது ஈழத் தமிழினமாகத்தான் இருக்க முடியும்.

குறிப்பாக தமிழர்களின் துறைசார் அறிவுஜீவிகள் என்று கருதக்கூடியவர்களே தாய்மொழியைப் பயன்படுத்துவதைத் தவிர்த்துக்கொள்கிறார்கள். இவர்கள்தான்  தமிழினத்தின் மூளைகளாம்.

அண்மையில் இலண்டனில் தமிழர் தகவல் நடுவத்தால் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த தமிழர்களின் எதிர்காலம் பற்றிய ஓர் கருத்தரங்கிற்கு ஈழத்திலிருந்து ஓய்வுபெற்ற 4 துறைசார் அறிவுஜீவிகள் அழைக்கப்பட்டிருந்தார்கள்.

ஆங்கிலமே அங்கு ஆட்சி மொழியாக இருந்தது. வந்தவர்களோ ஈழத்தமிழர்கள். ஆங்கிலத்தில் விளாசித்தள்ளினார்கள்.

அம்பாறை மாவட்ட MP பியசேன அளித்த செவ்வியில் தமிழ்த்  தேசியக்  கூட்டமைப்பு கூடுகின்ற போது ஆங்கிலத்தில் பேசி ஓர் முடிவுக்கு வந்துவிடுவார்கள் என்று குற்றம் சாட்டியிருந்தார்.

சுயமாக நமக்கென்று எதுவுமே இல்லாத காரணத்தால் அயல்நாட்டிலிருந்து அபகரித்துக்கொண்ட அடையாளங்களும் கலாச்சாரமும் வரலாறுகளும்தான் இன்றுவரை நம்மை வாழவைத்துக் கொண்டிருக்கின்ற தெய்வங்கள்.

அரச ஆட்சி தொட்டு பின் வந்த அந்நிய ஆட்சி வரை அடிமை வாழ்வு. இந்த அடிமைத் தனத்திலே சுகம் கண்ட இனங்களில் ஈழத் தமிழ் இனமும் ஒன்று. அந்த அடிமை வாழ்விலிருந்து மீளமுடியாது மிச்ச சொச்சங்களையும் காவி வருகிறது யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்.

18வது திருத்தச் சட்டம் பாராளுமன்றத்தில் கொண்டு வரப்பட்டபோது அம்பாறை மாவட்ட TNA MP  பியசேன அரசிற்கு ஆதரவாக வாக்களித்தார்.

இலண்டனில் இருந்து இயங்கும் GTV தொலைக்காட்சியின் நிகழ்ச்சித் தொகுப்பாளர் பிறேம்  சிவகுரு பியசேன அரசிற்கு ஆதரவாக வாக்களித்த சம்பவத்தை ஒரு மரபணுப் பிரச்சனை என்று கண்டு பிடித்திருந்தார்.

தமிழ் மொழியை பயன்படுத்த தயங்குகின்ற ஈழத் தமிழர்களுக்கும் ஏதும் மரபணுப் பிரச்சனை இருக்குமோ?

ஜனாதிபதியின் 2வது பதவிக் காலம் – 11 நிமிடங்களில் 11 இலட்சம் மரக் கன்றுகள் நடும் திட்டம்

tree.jpgஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இரண்டாவது பதவிக் காலத்துக்கான பதவியேற்பு மற்றும் பிறந்த நாளை முன்னிட்டு ஒரே நேரத்தில் 11 நிமிடங்களில் 11 இலட்சம் மரக் கன்றுகளை நடும் திட்டமொன்று நவம்பர் 15ஆம் திகதி முன்னெடுக்கப்படவுள்ளது. இந்தத் திட்டத்துக்கான ஏற்பாடுகளை சுற்றாடல் வளத்துறை அமைச்சு மேற்கொண்டுள்ளது.

நாட்டின் அனைத்துப் பாகங்களிலுமுள்ள அரச நிறுவனங்கள், மாகாண சபைகள், மற்றும் பாடசாலைகளில் இத்திட்டம் முன்னெடுக்கப்படும் என சுற்றாடல் வளத்துறை அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாப்பா, ஊடகவியலாளர் மாநாட்டில் தெரிவித்தார். இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த அமைச்சர் யாப்பா, 30 ஆண்டு காலமாக இடம்பெற்று வந்த பயங்கரவாத செயற்பாடுகள் காரணமாக சூழல் உட்பட மரம். செடிகள் என்பவற்றிற்கு பாரிய இழப்புக்கள் ஏற்பட்டது.

பசுமையான சூழலொன்றினை உருவாக்க வேண்டியதன் முக்கியத்துவம் பற்றி மக்களுக்கு விழிப்பூட்டுவதற்காகவே நாடளாவிய மர நடுகை வேலைத் திட்டத்தை நடைமுறைப்படுத்தியுள்ளதாக குறிப்பிட்டார்.

மேலும் நாட்டில் உருவாகியுள்ள அமைதியான சூழ்நிலை காரணமாக நாடளாவிய ரீதியில் இந்த வேலைத் திட்டத்தை வெற்றிகரமாக செயற்படுத்த முடியுமென்று கூறிய அமைச்சர், இன்று உலகிலே சூழலை பாதுகாத்துவரும் நாடுகளில் இலங்கை முன்னிலை வகிப்பதாகவும் குறிப்பிட்டார்.

ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், இவ்வாறு ஒரே தடவையில் அதிகளவு கன்றுகளை நட்டிய நாடு பற்றிய தகவல்கள் ஏதும் இதுவரையில் இல்லை என்பதால் சிலவேளை இதுவொரு கின்னஸ் சாதனையாகக் கூட இருக்கலாம் என்றும் தெரிவித்தார்.

சட்டவிரோதமாக ஆட்களை கொண்டு வருவோருக்கு 10 வருட சிறை

கனடாவுக்குள் நுழையும் சட்ட விரோதக் குடியேற்றவாசிகள் மற்றும் ஆட்கடத்தல்களைத் தடுக்கும் நோக்கில் கனேடிய அரசாங்கம், குடிவரவுச் சட்டத்தை மாற்றியமைத்துள்ளது. சட்ட விரோதமாக கனடாவுக்குள் நுழைபவர்கள் மற்றும் ஆட்கடத்தலில் ஈடுபடுபவர்களுக்கு எதிராகக் கடும் நடவடிக்கை எடுக்கும் வகையில் இந்தச் சட்ட மூலம் மாற்றப்பட்டிருப்பதாகக் கனேடிய பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் விக்டோவ்ஸ் தெரிவித்தார். இந்த புதிய சட்டத்துக்கமைய சட்ட விரோதமாகக் கனடாவுக்குள் நுழைபவர்கள் குறைந்தது ஒரு வருடத்திற்காவது சிறையில் அடைக்கப்படுவதுடன், அவர்களுக்கான மருத்துவ உதவிகள் உட்பட அடிப்படை வசதிகள் குறைக்கப்படும்.

மேலும் அவர்களது நிரந்தர வதிவுரிமைக் கோரிக்கை நிராகரிக்கப்படலாமென்றும், அதுமட்டுமின்றி அவர்களின் புகலிடக் கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டாலும் அவர்கள் 5 வருடங்களுக்கு நிரந்தர வதிவிடவுரிமைக்கு விண்ணப்பிக்க முடியாதென்றும் புதிய சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் 50க்கும் மேற்பட்ட சட்டவிரோதமாக குடியேற்ற வாசிகளை கனடாவுக்குள் அழைத்துச் செல்பவர்களுக்கும் குறைந்தபட்சம் 10 வருட காலச் சிறைத்தண்டனையும் வழங்கப்படவுள்ளது.

இது தொடர்பாக மேலும் கருத்துத் தெரிவித்த கனேடிய அமைச்சர் விக்டோல்ஸ்; கடந்த வருடங்களில் சட்டவிரோதக் குடியேற்றவாசிகளின் கனடா வருகை அதிகரித்துள்ளது. புகலிடக் கோரிக்கையாளர்கள், மற்றும் அகதிகளுக்கு கனடா வழங்கிவரும் சலுகையைத் தமக்கு சாதகமாகப் பயன்படுத்தி ஆட்கடத்தல் காரர்களின் செயற்பாடுகள்அதிகரித்துள்ளன.இதனை நாம் ஏற்றுக்கொள்ளமாட்டோம் ஆட்கடத்தல் காரர்களுக்கும், சட்ட விரோதக் குடியேற்றவாசிகளுக்கும் எதிராகக் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

கடந்த ஓகஸ்ட் மாதம் 492 இலங்கையர்கள் எம். வி. சன்.  கப்பல் மூலம் சட்ட விரோதமாகக் கனடாவுக்குள் நுழைந்து, தமக்குப் புகலிடம் வழங்குமாறு கோரிக்கை விடுத்தனர். இதனைத் தொடர்ந்தே, கனடா சட்ட விரோதக் குடியேற்ற வாசிகளைத் தடுப்பதற்கான நடவடிக்கையைத் தீவிரப்படுத்தியது.

இதன் ஒரு அங்கமாக ஆட்கடத்தல்காரர்களுக்கும் சட்ட விரோதக் குடியேற்றவாசிகளுக்கும் சிறைத்தண்டனை வழங்கும் வகையில் குடிவரவுச் சட்டம் நேற்று முன்தினம் திருத்தியமைக்கப்பட்டுள்ளது. குடியேற்றவாசிகள், புகலிடக் கோரிக்கையாளர்கள் மற்றும் அகதிகளுக்கும் பாரியளவில் ஆதரவளிக்கும் நாடாகக் கனடா உள்ளது. ஆனால் இந்தச் சலுகையை யாரும் துஷ்பிரயோகம் செய்வதற்கு அனுமதிக்கப்படாது எனக் கனேடியக் குடிவரவு அமைச்சர் ஜேசன் கென்னி தெரிவித்துள்ளார்.

சுற்றுலா நாடுகளின் தெரிவில் இலங்கைக்கு முதலிடம்.

சுற்றுலாவுக்கு ஏற்ற நாடுகளாகத் தெரிவு செய்யப்பட்டுள்ள 31 நாடுகளில் இலங்கை முதலிடத்தைப் பிடித்துள்ளது. அமெரிக்காவின் நியூயோர்க் டைம்ஸ் சஞ்சிகை நடத்திய தெரிவு ஒன்றின் மூலம் இத்தகவல் வெளியிடப்பட்டுள்ளது. நாட்டில் யுத்த சூழ்நிலை நீங்கி அமைதியுடனான அரசியல் நிரந்தரத் தன்மை நிலவுவதே இதற்கான காரணம் என சஞ்சிகை தெரிவிக்கின்றது.

இதேவேளை நாட்டின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளதால் இலங்கைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. இவ்வருடம் இலங்கை வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை என எதிர்பார்க்கப்பட்ட தொகை கடந்த ஆகஸ்ட் மாதத்திலேயே எதிர்பார்த்ததை விட அதிகரித்துள்ளதாக ஆசிய பசுபிக் சுற்றுலா சங்கம் உறுதி செய்துள்ளது.