எழுத்தாளர்கள்

எழுத்தாளர்கள்

இந்தோனேஷியாவில் சுனாமிக்கு 108 பேர் பலி

tsunami.jpgஇந்தோ னேஷியாவின் மேற்கு பகுதியில் நேற்று ஏற்பட்ட சக்தி வாய்ந்த நில நடுக்கத்தால், கடலில் 10 அடி உயரத்துக்கு சுனாமி உருவானது. இதில் 108 பேர் பலியாகினர். பெண்கள், குழந்தைகள் என 502 க்கும் மேற்பட்டோர் காணாமல் போய்விட்டனர்.

இந்தோனேசியாவின், மேற்குப் பகுதியில், சுமத்ரா தீவின் அருகிலுள்ள மென்டாவாய் தீவுக்கருகில் கடுமையான நில நடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவு கோளில் 7.7 ஆக பதிவான இந்த நில நடுக்கம், மேற்கு சுமத்ரா தீவிலுள்ள பல்வேறு மாகாணங்களில் உணரப்பட்டது.

நில நடுக்கத்தால், கடலில் 10 அடி உயரத்துக்கு சிறிய அளவில் சுனாமி ஏற்பட்டது. மென்டாவாய் தீவுகளில் 20 கி. மீ. தூரத்துக்கு சுனாமியால் ஏற்பட்ட அலைகள் புகுந்தன.

இந்தச் சுனாமியில் சிக்கி மென்டாவாய் தீவுகளில் 150 வீடுகள் சேதம் அடைந்தன. மென்டாவாய் தீவுகளில் தெற்கு பகாய் என்ற இடத்தில் உள்ள பெலு மொங்கா உள்ளிட்ட பல கிராமங்களைச் சேர்ந்த பெண்கள், குழந்தைகள் உட்பட 380 பேர், வெள்ளத்தில் சிக்கிக் காணாமல் போய்விட்டனர். மல்கோபா என்ற கிராமத்தில் 80 சதவீத வீடுகள் அழிந்து விட்டன. உணவுத் தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளது. தீவுகளின் அருகில், படகில் சுற்றுலா மேற்கொண்டிருந்த 10 அவுஸ்திரேலியர்கள் பற்றிய தகவல் எதுவும் கிடைக்கவில்லை. கடந்த வருடம் செப்டம்பர் மாதம் ஏற்பட்ட நில நடுக்கத்தில் 1,100 பேர் பலியானது குறிப்பிடத்தக்கது.

கிளிநொச்சியில் தே. வீ. அ. சபை அலுவலகம் நவம். 1 இல் திறப்பு

கிளிநொச்சி மாவட்ட தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் அலுவலகக் கட்டடம் புனரமைக்கப்பட்டு எதிர்வரும் நவம்பர் மாதம் முதலாம் திகதி காலை வைபவ ரீதியாக திறந்து வைக்கப்படவுள்ளது. புனரமைப்பு செய்யப்பட்ட கட்டடத்தை நிர்மாணத்துறை பொறியியல் சேவைகள் வீடமைப்பு மற்றும் பொதுவசதிகள் அமைச்சர் விமல் வீரவன்ச திறந்து வைப்பார்.

அன்றைய தினம் கிளிநொச்சி மாவட்ட வீடமைப்பு நிர்மாணப் பணிகள் பற்றிய அபிவிருத்திக் கூட்டமும் புதிய அலுவலகத்தில் இடம்பெறவுள்ளது. கிளிநொச்சி மாவட்ட தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபை கிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலக பொன் நகரில் ஐம்பது பயனாளிகளுக்கு வீடமைப்புக் கடன்களை வழங்கியுள்ளது.

பிரபா – பொட்டு ஆகியோரின் மரணத்தை இந்திய நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது.

Pirabakaran 2007தமிழீழ விடுதலைப் புலிகளின் முக்கிய தலைவர்கள் கொல்லப்பட்டதை இந்திய நீதிமன்றம் ஏற்றுக் கொண்டு உள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே பிரபாகரன் அவ்வமைப்பின் புலனாய்வுத்துறைத் தலைவர் பொட்டம்மான் என்கின்ற சண்முகநாதன் சிவசங்கரன் ஆகிய இருவர் மீதான குற்றச்சாட்டுகளும் கைவிடப்பட்டு உள்ளது.

இந்திய புலனாய்வு அமைப்பான சிபிஐ வழங்கிய தகவலின் அடிப்படையில் ராஜீவ்காந்தி கொலைவழக்கை விசாரித்த சிறப்பு நீதிமன்றம் இந்த முடிவுக்கு வந்தள்ளது.

ரஜீவ்காந்தி கொலைவழக்கின் 01ஆவது குற்றவாளியான வேலுப்பிள்ளை பிரபாகரன் மற்றும் 02ஆவது குற்றவாளியான சண்முகநாதன் சிவசங்கரன் ஆகியோர்மீதான குற்றச்சாட்டுக்கள் கைவிடப்படுவதாக ரஜீவ்காந்தி கொலைவழக்கை விசாரணை செய்துவரும் சென்னை தடா நீதிமன்ற நீதிபதி தட்சணாமூர்த்தி தீர்ப்பளித்துள்ளார். குற்றவாளிகளின் இறப்புகளுக்குப் பின்னர் அவர்கள்மீதான குற்றச்சாட்டுகள் இல்லாது போகின்றமை குறிப்பிடத்தக்கது.
 
Pirabaharan_Still_Alive‘இந்தியா இன்னமும் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர்கள் கொல்லப்பட்டதை ஏற்றுக்கொள்ளவில்லை’ ஆகவே அவர்கள் இன்னமும் இருக்கிறார்கள் என்ற கதைகளை புலம்பெயர் புலி ஆதரவு சக்திகள் இன்னமும் பரப்பி வருகின்ற நிலையில் இத்தீர்ப்பு வெளிவந்துள்ளது. தமிழக வர்த்தகப் பத்திரிகைகளும் இத்தலைவர்கள் உயிருடன் உள்ளதாக பரபரப்புச் செய்திகைள வெளியிட்டு வருகின்றமை தெரிந்ததே.

13வது திருத்தச் சட்டத்தினை ஆரம்பப் புள்ளியாக வைத்து ஒரு நிரந்தரத் தீர்வுக்கு அரசாங்கம் முன்வர வேண்டும் நல்லிணக்க ஆணைக்குழுவில் புளொட் தலைவர் சாட்சியம்

sitharthan.jpg13வது திருத்தச் சட்டத்தினை ஆரம்பப் புள்ளியாக வைத்து இலங்கை இனப் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண அரசாங்கம் முன்வர வேண்டும் என புளொட் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார். கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு முன்னிலையில் புளொட் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் நேற்று (ஒக்ரோபர் 25 2010) சாட்சியம் அளிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

த சித்தார்த்தன் தனது சாட்சியத்தில் கூறியதாவது, ”யுத்தம் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டு ஒன்றரை வருடங்கள் கடந்துள்ள போதிலும் தமிழ் மக்களின் அடிப்படைப் பிரச்சினைத் தீர்வுக்கான எந்தவொரு அறிகுறியும் தென்படாதிருப்பதால் தமிழ் சமூகம் தாங்கள் செய்த தியாகங்கள், அர்ப்பணிப்புகள் எல்லாமே வீணாகி விட்டதோ என்ற ஏக்கத்தில் உள்ளனர். இந்நடவடிக்கையானது அரசாங்கம் இவ்விடயத்தில் அக்கறை எடுக்காமல் இருக்கும் தன்மையையே வெளிக்காட்டி நிற்கின்றது.

அத்துடன் வடக்கில் பௌத்த விகாரைகள் அமைக்கப்பட்டு வருகின்றமையானது சிங்களக் குடியேற்றத்திற்கான முன்னேற்பாடுகள்தான் என மக்கள் மத்தியில் சந்தேகமும் நிலவி வருகின்றது. இந்நடவடிக்கையினை வன்னியில் ஏற்கனவே இருந்த இன விகிதாசாரத்தை மாற்றியமைக்கும் ஒரு கபட நோக்கம் கொண்ட செயலெனவும் மக்கள் கருதுகின்றனர்.

இதேவேளை 13வது திருத்தச் சட்டத்தினை ஆரம்பப் புள்ளியாக வைத்து அதிலிருந்து தமிழ் மக்களின் அடிப்படைப் பிரச்சினைக்கு ஒரு நிரந்தரத் தீர்வை காண்பதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் உடனடியாக முன்னெடுக்க வேண்டும். இதுவே நாட்டின் எதிர்காலம் செழிப்பாவதற்கும், நாட்டு மக்கள் ஒற்றுமையாகவும், அமைதியாகவும் வாழ்வதற்கும் வழிவகுக்கும்.

கடந்த இரு தலைமுறையினர் அனுபவித்து வந்த துன்பங்களும், துயரங்களும், இழப்புகளும், வேதனைகளும், நெருக்கடிகளும் வருங்கால சந்ததியினருக்கு வரக்கூடாதென்பதே எமது ஆத்மார்த்தமான விருப்பமாகும்” என்று தெரிவித்துள்ளார்.

புளொட் சர்வதேசக் கிளைகளின் மாநாடு : புளொட்

தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் சர்வதேசக் கிளைகளின் மாநாடு இம்மாதம் 30ம் 31ம் திகதிகளில் ஜெர்மனியின் ஸ்ரூட்காட் நகரில் நடைபெறவுள்ளது. இதன்போது கழகத்தின் கடந்தகால, நிகழ்கால மற்றும் எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பில் விரிவாக ஆராயப்படவுள்ளது.

இம்மாநாட்டில் புளொட்டின் அனைத்து கிளைகளையும் சேர்ந்த அமைப்பாளர்கள், மற்றும் உறுப்பினர்கள் அனைவரையும் கலந்து கொள்ளுமாறு மாநாட்டு ஏற்பாட்டுக்குழு அழைப்பு விடுத்துள்ளது.

முதல்நாள் நிகழ்வுகளாக மௌன அஞ்சலி, வரவேற்புரை, கிளைப் பொறுப்பாளர்களின் உரை என்பவற்றைத் தொடர்ந்து கழகத்தின் செயற்பாடுகளில் வெளிநாட்டுக் கிளைகளின் பங்களிப்பு, அரசாங்கத்தின் நடவடிக்கைகள், எதிர்காலத்தில் கழகம் எடுக்க வேண்டிய நிலைப்பாடுகள் என்பன தொடர்பில் விரிவாக ஆராயப்படவுள்ளன.

இரண்டாம் நாள் நிகழ்வுகளாக தமிழ் மக்களின் அடிப்படைப் பிரச்சினைகள் மற்றும் அரசியல் தீர்வு, அரச சார்பற்ற நிறுவனங்களின் செயற்பாடுகள் மற்றும் உதவிகள், வெளிநாட்டுக் கிளைகளின் செயற்பாடுகள், நாட்டில் கழகத்தின் செயற்பாடுகள் என்பன தொடர்பில் ஆராயப்படவுள்ளன.

 நல்லிணக்க ஆணைக்குழுவின் அமர்வுகள் அடுத்த மாதம் யாழ்ப்பாணத்தில் ஆரம்பம்.

படிப்பனைகள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அமர்வுகள் அடுத்த மாதம் யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அடுத்தமாதம் 11ஆம் திகதியிலிருந்து 13ஆம் திகதி வரை மூன்று தினங்கள் ஒன்பது இடங்களில் அமர்வுகள் நடைபெறவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதலாம் நாள் அமர்வு ஊர்காவற்றுறை மற்றும் நெடுந்தீவு மக்களுக்காக புனித அந்தோனியார் தேவாலயத்திலும், வேலணை மக்களுக்காக மண்கும்பான் பிள்ளையார் ஆலய கல்யாண மண்டபத்திலும், யாழ்ப்பாணம் மற்றும் கரைநகர் மக்களுக்காக குருநகர் கலாசார மண்டபத்திலும், நல்லூர் மக்களுக்காக அரியாலை சரஸ்வதி சனசமூக நிலையத்திலும் நடைபெறும்.

இரண்டாம் நாள் அமர்வுகள் கோப்பாய் பிரதேச மக்களுக்காக நீர்வேலி கிராம முன்னேற்றச் சங்க மண்டபத்திலும், தெல்லிப்பழை, சண்டிலிப்பாய், சங்கானை, உடுவில் பிரதேச மக்களுக்காக அளவெட்டி மகாஜன சபை மண்டபத்திலும், கரவெட்டி, பருத்தித்துறை மக்களுக்காக நெல்லியடி முருகன் கோவிலிலும் நடைபெறும்.

மூன்றாம் நாள் அமர்வுகள் மருதங்கேணி மக்களுக்காக குடத்தனை தேவாலயத்திலும், சாவகச்சேரி மக்களுக்காக சாவகச்சேரி கலாசார மண்டபத்திலும் நடைபெறும். இந்த அமர்வுகளில் சாட்சியமளிக்க இதுவரை 366 பேர் பதிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை பதிவு செய்யாத, சாட்சியமளிக்க விரும்பும் எவரும் முன்வந்து ஆணைக்குழுவின் முன்னால் சாட்சியமளிக்க முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சியில் ஒன்பது வயது மாணவன் குளத்தில் சடலமாக மீட்பு!

கிளிநொச்சியில் ஒன்பது வயது மாணவன் ஒருவன் குளம் ஒன்றில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவமொன்று நேற்று திங்கள் கிழமை இடம் பெற்றுள்ளது. நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை கிளிநொச்சி பாரதிபுரத்தில் தனியார் கல்வி நிலையமொன்றிற்கு சென்று திரும்பும் வழியில் 45 வயது மதிக்கத்தக்க நபரொருவர் இம்மாணவனை சைக்கிளில் பலாத்காரமாக பிடித்து ஏற்றிச் சென்றதாகவும், இரவாகியும் வீடு திரும்பாத அம்மாணவனின் பெற்றோர் பல இடங்களில் தேடி அலைந்து விட்டு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததாகவும் பின்னர் நேற்று திங்கள் கிழமை அம்மாணவன் கானகாம்பிகைக் குளத்தில் சடலமாக மிதந்த நிலையில் மீடகப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கழுத்தில் காயத்துடன், வாயிலும் மூக்கிலும் இரத்தம் சிந்திய நிலையில் சடலம் காணப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சி மடாவட்ட நீதவான் சிவகுமாரின் உத்தரவின் பேரில் இம்மாணவனின் சடலம் வவனியா வைத்தியசாலைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

குறித்த மாணவன் நபரொருவரால் கடத்தப்பட்ட நிலையில் குளத்தில் சடலமாக மீடக்கப்பட்டதான செய்தி கிளிநொச்சி பெற்றொர் மத்தியில் பெரும் பரபரப்பையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இதனால் இன்று பாரதிபுரம், கனகாம்பிகைக்குளம் பாடசாலைகளில் மாணவர் வரவு குறைந்திருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இச்சம்பவம் குறித்த ‘தேசம் நெற்’ அப்பகுதி பாடசாலை அதிபர் ஒருவரிடம் கேட்ட போது இச்சமபவம் குறித்து வெளியாகியுள்ள விடயங்கள் பெற்றோர்கள் மத்தியில் வீணான பதற்றத்தையும் சந்தேகங்களையும் எற்படுத்தியுள்ளதாகவும், குறித்த மாணவன் பாடசாலை அல்லது தனியார் கல்விநிலையத்திற்கு சென்று வரும் வழியில் கனகாம்பிகைக் குளத்தில் மீன்பிடிப்பதை பொழுது போக்காக கொண்டவன் எனவும், இதன் போது அம்மாணவன் நீரில் மூழ்கியிருக்கலாம் எனவும் தெரிவித்தார்.

எனினும் பொலிஸார் இச்சம்பவம் குறித்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கிளிநொச்சியில் பெண்களிடம் தங்கச் சங்கிலிகளை அறுத்துச்செல்லும் கள்வர்கள்!

Gold_Chainகிளிநொச்சியில் பட்டப்பகலில் பெண்களில் கழுத்து நகைகளை அறுத்துச்செல்லும் கள்வர்களின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. இன்று செவ்வாய்கிழமை பிற்பகல் வேளையில் இவ்வாறான சம்பவம் ஒன்று கிளிநொச்சி உதயநகர் மேற்குப் பகுதியில் நடைபெற்றுள்ளது.

பிறபகல் ஒரு மணியளவில் உதயநகர் மேற்கிலுள்ள மக்கள் குடியிருப்பு ஒன்றின் ஒழுங்கையில் நின்றிருந்த இரு இளைஞர்கள் அவ்வழியால் வந்த பெண்ணொருவரின் கழுத்திலிருந்த தங்கச்சங்கிலியை பிடித்து அறுக்க முயன்றுள்ளனர் அப்பெண் அக்கள்வர்களோடு போராடி சங்கிலியை அறுத்துக்கொண்டு செல்வதை தடுத்துள்ளார். இதனால் பெண்ணின் கழுத்தில் காயமேற்பட்டுள்ளது.

பெண்ணின் கூக்குரலைக்கேட்டு அயலவர்கள் ஓடி வருவதைக்கண்ட கள்வர்கள் சைக்கிளில் தப்பியோடி விட்டனர். கடந்த சில தினங்களுக்கு முன்னரும் இதே கிராமத்தில் இவ்வாறான சம்பவமொன்று இடம்பெற்றது.

ஒழுங்கையொன்றில் தனியாக நடந்து வந்த வயோதிபப் பெண்ணின் கழுத்திலிருந்த தங்கச் சங்கிலியை அவ்வீதியால் சைக்கிளில் வந்த நபரொருவர் அறுத்துக்கொண்டு தப்பியோடியுள்ளார். கிளிநொச்சியில் மக்கள் மீள் குடியமர்த்தப்பட்ட கிராமங்களில் முன்பின் அறிமுகமற்ற பலர் நடமாடி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

ஏ-9 பாதை திறப்பிற்குப் பின்னர் யாழ்ப்பாணத்தில் அதிகரித்துவரும் சிறுவர் பாலியல் துஸ்பிரயோகம்.

Child_Protectionகுடாநாட்டில் ஏ-9 பாதை திறக்கப்பட்டதன் பின்பு அதிகளவிலான சிறுவர் துஸ்பிரயோக நடவடிக்கைகள் இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. கடந்த 2009ஆம் ஆண்டு 35 சிறுவர்கள் பாலியல் துஸ்பிரயோகத்தால் பாதிக்கபட்டு உள்ளதாகவும், இவ்வருடம் ஜனவரி மாதம் தொடக்கம் நேற்று திங்கள் கிழமை வரை 36 சிறுவர்கள் பாதிக்கப்பட்டு உள்ளதாகவும் யாழ்.போதனா வைத்தியசாலை சட்டவைத்திய அதிகாரி அலுவலகத்தின் புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. 12 தொடக்கம் 15 வயது வரையான சிறுவர்களே இவ்வாறு பாதிக்கப்பட்டு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இவ்வாறு பாதிக்கப்பட்டவர்களில் பாடசாலை மாணவர்கள் உள்ளடங்கவதாகவும், அதிலும் குறிப்பாக பெற்றோரை இழந்த சிறுவர்கள் அடங்குவதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.  இவ்வாறான பெற்றோரை இழந்த சிறுவர்கள் தனிமையில் வாழ்வதாலும், பொருளாதார பிரச்சினைகளுக்கு அவர்கள் முகம் கொடுப்பதாலும்  பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உள்ளாவதாகவும் பாதிக்கப்பட்ட, அடையாளம் காணப்பட்ட சிறுவர்களுக்கு பல்வேறு தரப்பினராலும் உளநல ஆலோசனைகள் வழங்கப்பட்டு வருவதாகவும் யாழ்.போதனா வைத்தியசாலை வைத்திய அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

‘இலங்கைத் தொழில் இல்லம்’ யாழ்ப்பாணத்தில் திறந்து வைக்கப்பட்டது.

‘இலங்கைத் தொழில் இல்லம்’ நேற்று திங்கள் கிழமை யாழ்ப்பாணத்தில் திறந்து வைக்கப்பட்டது. யாழ்ப்பாணம் நாவலர் வீதியிலுள்ள தொழில் திணைக்கள உதவி ஆணையாளர் அலுவலகத்தில் தொழில் உறவுகள் உற்பத்தித்திறன் மேம்பாட்டு அமைச்சர் காமினி லொக்குகேயினால் இது திறந்து வைக்கபட்டது.

இந்த நிறுவனம் தனியார் துறை உட்பட்ட நிறுவனங்களில் வேலைவாய்ப்புகளை பெற்றுக்கொள்ள உதவுதல், தொழில் வாயப்பைப் பெற்றுக்கொள்ளும் வகையில் நோமுகப் பரீடசைகளுக்கு தயார் படுத்தல், சுயவிபரக்கோவையைத் தயாரித்தல், தொழில் பயிற்சிகளை வழங்குதல், தொழில் வாய்ப்பைப் பெற்றுக் கொள்வதற்கான கல்வித்துறைகளைத் தெரிவு செய்தல் முதலான வழிகாட்டல்களை வழங்கும். இலங்கையிலுள்ள பதினெட்டு மாவட்டங்களில் இந்நிறுவனம் எற்கனவே செயற்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை வவுனியாவிலும் இந்நிறுவனம் திறந்து வைக்கப்பட்டது. வடமாகாணத்தின் இரண்டாவது கிளையாக நேற்று யாழ்ப்பாணத்தில் இது திறக்கப்பட்டது.

யாழ்ப்பாணத்தில் நேற்றுத் திறந்து வைக்கப்பட்ட இலங்கை தொழில் இல்லக் கிளையில் 250 இற்கும் மேற்பட்ட இளைஞர் யுவதிகள் வேலை வாய்ப்புகளுக்காக பதிவுகளை மேற்கொண்டனர்.

‘மனுசி ஒரு பொம்பிளை’ ஆக இருப்பது ரொறன்ரோ மேயருக்கான தகுதி! – சிரிபிசி வானொலியின் சர்ச்சைக்குள்ளான விளம்பரம் : த ஜெயபாலன்

George_Smitherman_Mayoral_Candidate_TorontoRob_Ford_Mayoral_Candidate_Torontoதற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் கனடாவின் ஒன்ராரியோ மாநிலத்திற்கான உள்ளுராட்சி சபைக்கான தேர்தலில் தமிழ் மக்கள் செறிந்துவாழும் ரொறன்ரோ மேயர் பதவிக்கான தேர்தலும் நடைபெறுகிறது. ரொறன்ரோ சனத்தொகையும் நிதிவருவாயும் அதிகமுள்ள கனடாவின் ஆறாவது பெரும் அரசாங்கமாகும். இதனைக் கைப்பற்ற Rocco Rossi, George Smitherman, Joe Pantalone, Rob Ford ஆகிய நால்வர் போட்டியிடுகின்றனர். முன்னாள் கவுன்சிலர் றொப் போர்ட், ஒன்ராரியோவின் முன்னாள் துணை முதல்வர் ஜோர்ஜ் ஸ்மிதர்மன் ஆகியோருக்கும் இடையே கடும் போட்டி உள்ளது. புலம்பெயர்ந்த தமிழ் மக்கள் அரசியல் ரீதியாகச் செல்வாக்குச் செலுத்துகின்ற உலகத் தலைநகர்களில் ரொறன்ரோ முக்கியமானது.

இந்தத் தேர்தலில் வலதுசாரியான றொப் போர்ட் க்கு சார்பான நிலைப்பாட்டைக் கொண்ட சிரிபிசி வானொலி லிபரல் கருத்தியல் உடையவரும் ஒத்தபாலுறவைக் கொண்டவருமான ஜோர்ஜ் ஸ்மிதர்மன் க்கு எதிராக அவருடைய பாலுறவை கொச்சைப்படுத்துகின்ற விளம்பரம் ஒன்றை வெளியிட்டு உள்ளது. தேர்தலில் றொப் போர்ட்க்கும் ஜோர்ஜ் ஸ்மிதர்மன் க்கும் இடையே கடுமையான போட்டி நிலவுககையில் அவர்களுக்கு இடையே ஒரு வீத வாக்கு வித்தியாசமே காணப்படுவதாக வாக்களிப்பைத் தொடர்ந்து எடுக்கப்படும் கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன. ரொறன்ரோவில் 40 வீதமானவர்கள் தென்னாசியாவையும் ஆபிரிக்காவையும் சேர்ந்தவர்கள். இவர்களது சமய கலாச்சாரக் கூறுகள் ஒத்தபாலுறவுக்கு எதிரானது ஆகையால் இத்துருப்புச்சீட்டு லாவகமாகப் பயன்படுத்தப்பட்டு உள்ளது. 

வலதுசாரியான றொப் போர்ட் சிறுபான்மை இனங்களிடையே காணப்படுகின்ற ஒத்தபாலுறவுக்கு எதிரான சமய கலாச்சாரக் கூறுகளைக் குறி வைத்து இவ்வாறான விளம்பரங்களுக்கு துணையாக நின்றிருக்கலாம் என கனடியப் பத்திரிகைகள் சந்தேகம் வெளியிட்டுள்ளன. ஆனால் ‘மற்றையவருடைய வாழக்கைத் தெரிவு பற்றி எனக்கு ஒரு பிரச்சினையும் இல்லை. நான் பன்மைத்துவத்தை ஆதரிப்பவன். அந்த விளம்பரத்திற்கும் எனக்கும் எவ்வித தொடர்பும் இல்லை’ என்கிறார் றொப் போர்ட்.

தேர்தல் முடிவுகள் ஜோர்ஜ் ஸ்மிதர்மன் க்கு எதிரானதாக அமைந்தால் ஒத்தபாலுறவுக்கு எதிரான இவ்விளம்பரம் பாரிய சட்டச் சிக்கலுக்கு உள்ளானதாகலாம். ஜோர்ஜ் ஸ்மிதர்மன் இத்தேர்தலில் வெற்றி பெற்றாலும் ஒரு குறிப்பிட்ட பாலியல் சமூகத்திற்கு எதிரான இவ்விளம்பரம் ஒரு அலையை ஏற்படுத்தும் என்பதில் வியப்பில்லை. ஒத்த பாலுறவுச் சமூகத்தை பிரிதிநிதித்துவப்படுத்துகின்ற ‘எக்ஸ்ரா’ என்ற அமைப்பு ஏற்கனவே இவ்விளம்பரத்தை கடுமையாகக் கண்டித்து உள்ளது.

கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம் என்று சிரிபிசி வானொலியில் ஒலிபரப்பப்பட்ட விளம்பரம்:
‘முதலாமவர்: மணியன்னை மேயர் எலக்சனில யாருக்கு உங்கள் வோட்டுக்கள்?
இரண்டாமவர்: (நளினச் சிரிப்புடன்) இதென்ன கேள்வி. நான் தமிழனடா. எங்களுக்கு சமயம், கலாச்சாரம் என்று இருக்கு. ரொப் போட்டை எடுங்கோ அவற்றை மனுசி ஒரு பொம்பிளை.
அதுமட்டுமல்ல வீடு வேண்டேக்க மாற்று வரி மற்ற வரிகளையும் குறைப்பாராம்.

முதலாமவர்: அப்ப இமிகிரேசன்?
இரண்டாமவர்: (மீண்டும் நளினச் சிரிப்புடன்) அது பெடரல் கவுமன்ற் விசயம். வெள்ளையன்ர வோர்ட்டை எடுக்க வாக்கும்.
முதலாமவர் அப்ப நானும் ரொப் போரட் க்குத் தான் போடப்போறன்.’

இந்த விளம்பரத்தில் ரொறன்ரோ மேயர் ஆவதற்கு வேட்பாளரின் ‘அவற்றை (றொப் போர்ட் இன்) மனுசி பொம்பிளை’ யாக இருப்பது முக்கிய தகுதியாகக் காட்டப்படுகின்றது. ஏனெனில் எதிராக நிற்கின்ற வேட்பாளர் ஜோர்ஜ் ஸ்மிதர்மன் ஒத்தபாலுறவுடையவரை மணந்து ஒரு குழந்தையையும் தத்தெடுத்து வளர்க்கின்றார்.

வலதுசாரியான றொப் போர்ட்டை ஆதரிக்கின்ற அதே வலதுசாரிக் கருத்துக்களைப் பரப்புகின்ற சிரிபிசி வானொலி ஜோர்ஜ் ஸ்மிதர்மன் யை ‘அலி’ எனவும் விமர்சித்துள்ளார். ஒருவருடைய பாலியல் தன்மை தொடர்பாக மெலினத் தன்மையைக் கடைப்பிடித்த இவ்வானொலி, மேற்படி விளம்பரம் தொடர்பாக எதனையும் குறிப்பிடவில்லை. அதேசமயம் இவ்வாறான ஒரு விளம்பரம் ஒரு கிறிஸ்தவ அமைப்பினரூடாக தங்களுக்கு வந்ததாகவும் அதனை விளம்பரப்படுத்த தாங்கள் மறுத்துவிட்டதாகவும் சிரிஆர் வானொலியின் சார்பில் ராகவன் பரஞ்சோதி தெரிவித்துள்ளார்.

இவ்விவகாரம் தொடர்பாக தேசம்நெற் சிரிபிசி வானொலியுடன் தொடர்பு கொண்ட போதும் எமது அழைப்பிற்குப் பதில் இல்லை.

‘வெள்ளையன்ரை வோர்ட்டை எடுக்கவாக்கும்’ போன்ற இனவாதமான கருத்துக்களும் வெளியிடப்பட்டு உள்ளது. வெள்ளையர்கள் குடிவரவாளர்களுக்கு எதிரானவர்கள் என்பதை கட்டமைத்துக் கொண்டே அவ்வாறு குடிவரவாளர்களுக்கு எதிரானவருக்கே வாக்களிக்குமாறு அத்தமிழ் விளம்பரம் கோருகின்றது. அண்மையில் கனடாவிற்கு கப்பலில் வந்த நூற்றுக் கணக்காண தமிழர்களுக்கு எதிராக றொப் போர்ட் கருத்து வெளியிட்டு இருந்தமை குறிப்பிடத்தக்கது. மேலும் புதிய குடிவரவாளர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கவும் றொப் போர்ட் கோரி உள்ளார். அவ்வாறு இருந்தும் அண்மையில் குடியேறிய தமிழ் சமூகத்தின் வானொலி குடிவரவுக்கு எதிரானவரை ஆதரிக்குமாறு விளம்பரப்படுத்தியது முரண்நகையாக உள்ளது.

அதற்கு முக்கியமாக எதிர்த்தரப்பு வேட்பாளரின் பாலியல்தன்மை காரணமாகி உள்ளது. வட அமெரிகாவிலேயே ஒத்தபால் திருமணங்களை ஏற்றுக்கொண்ட நாடு கனடா. பாலியல் தொடர்பாக லிபிரல் கருத்துக்களை உடையநாடு. அங்கு ஒருவருடைய பாலியல் தன்மை அடிப்படையில் பாரபட்சம் காட்டுவது சட்டத்திற்கு முரணாணது. உள்ளுணர்விற்கு ஒவ்வாதது.

இந்த விவகாரம் தொடர்பாக வானொலி, தொலைக்காட்சியை கண்காணிக்கின்ற சிஆர்ரிசி அமைப்புக்கு குற்றச்சாட்டுக்கள் சென்றுள்ளது. சிஆர்ரிசி அமைப்பும் விசாரணைகளை ஆரம்பிக்கலாம் எனத் தெரிய வருகின்றது.

இவ்விளம்பரத்துக்கு எதிராக கனடிய தமிழர்கள் மத்தியில் பரவலான எதிர்க் கருத்துக்களும் கிளம்பி உள்ளது. இவ்விளம்பரத்தை வெளியிட்டமை இனவாதமானது, ஒத்த பாலுறவுக்கு எதிரானது, எவ்வாறான அரசியல் முரண்பாடுகள் இருந்தாலும் இவ்வாறான மோசமான விளம்பரங்களை வெளியிட முடியாது என பலர் கருத்து வெளியிட்டு வருகின்றனர்.

புலிகளை ஒழித்ததில் படையினரின் தந்திரோபாயம்; உலக நாடுகளுக்குத் தெளிவுபடுத்த அடுத்த வருடம் கொழும்பில் மாநாடு

jagath.jpgபுலிப் பயங்கரவாதத்தை முழுமையாக ஒழித்துக் கட் டுவதற்காக இராணுவத்தினர் மேற்கொண்ட தந்திரோபாயங்கள் மற்றும் செயற்பாடுகள் தொடர்பாக உலக நாடுகளுக்குத் தெளிவு படுத்துவதற்கான சர்வதேச மாநாடொன்று அடுத்த வருட முற் பகுதியில் இலங்கையில் நடாத்தப் படவிருக்கின்றது. இவ்வாறு இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஜகத் ஜயசூரிய நேற்று முன்தினம் தியத்தலாவயில் தெரிவித்தார்.

இராணுவ உயரதிகாரிகள் 46 பேருக்கு இராணுவ பீட டிப்ளோமா சான்றிதழ் வழங்கும் நிகழ்வு தியத்தலாவ பாதுகாப்பு அகடமியில் நேற்று முன்தினம் நடைபெற்றது. இந் நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில், கொழும்பில் நடாத்தப்படும் இந்த சர்வதேச மாநாட்டின் மூலம் உலக நாடுகளின் பாராட்டுகளை இலங்கை மேலும் பெற்றுக் கொள்ளும்.

உலகில் சுமார் நூறு நாடுகள் பயங்கர வாதப் பிரச்சினைக்கு முகம் கொடுத்துள்ளன. அந்நாடுகளில் பயங்கரவாதப் பிரச்சினை பெரும் சவாலாக உள்ளன. பயங்கரவாதப் பிரச்சினை காரணமாக இந்த நாடுகள் அழிவுகளையும் சேதங்களையும் தொடர்ந்து எதிர்கொண்டு வருகின்றன. இவ்வாறான நாடுகளுக்கு இந்த சர்வதேச மாநாடு பெரிதும் நன்மை பயக்கும்.

புலிப் பயங்கரவாதிகள் கடந்த 30 வருடங்களாக முழு இலங்கையருக்கும் பெரும் தலையிடியினராக இருந்து வந்தனர். பெறுமதி மிக்க உயிர்களையும், சொத்துக்களையும் அழித்து வந்தனர். குரூரமான செயல்களில் அவர்கள் ஈடுபட்டனர். உலகிலேயே கொடூர பயங்கரவாத அமைப்பாகவே புலிகள் இருந்து வந்தனர். அப் பயங்கரவாதத்தினையே, எமது நாட்டு இராணுவத்தினரால் முற்றாக அழிக்க முடிந்திருக்கின்றது.

எமது இராணுவத்தினர் பொது மக்களின் உயிர்ச்சேதத்தை தவிர்த்து பயங்கர வாதிகளையே இலக்கு வைத்து தாக்கி அழித்துள்ளனர். இராணுவ வெற்றிக்கு இலக்கு பொது மக்கள் அல்ல. பயங் கரவாதிகளே என்ற நிலையில், எமது இராணுவத்தினர் வெற்றிகரமாக செயல்பட்டனர்.

பங்கரவாதிகள் பொது மக்களை கேடயங்களாகப் பாவித்து இராணுவத் தினருடன் மோதிய போதிலும், எமது இராணுவத்தினர் தந்திரோபாயங்களை மேற்கொண்டு, பொது மக்களை மீட்டு, பயங்கரவாதிகளை அழித்துள்ளனர்.

யுத்தத்தில் வெற்றி கண்ட எமது இராணுவத்தினர், சரணடைந்தவர்கள் மற்றும் கைது செய்யப்பட்ட புலி உறுப் பினர்களுக்கு புனர்வாழ்வு அழித்து வருகின்றனர். பொது மக்களை மீள் குடியேற்றுதல் நிலக் கண்ணிவெடிகளை அகற்றுதல் போன்ற மனித நேயக் கடமைகளையும் முன்னெடுத்துள்ளனர். இராணுவ ரீதியாகவும் வெற்றி பெற முடியும். அதே வேளை மனித நேயத் துடனும் செயற்பட முடியுமென்று, முழு உலக நாடுகளுக்குமே, எமது இராணுவத்தினர் உணர்த்தியுள்ளனர். புலி பயங்கரவாதத்தை முழுமையாக ஒழிக்க நாம் பயன்படுத்திய தந்திரோ பாயங்களை உலக இராணுவத்தினர் அறிய விரும்புகின்றனர். அவர்களின் வேண்டுகோளுக்கிணங்கவே, அடுத்த வருட முற்பகுதியில் இது தொடர்பான சர்வதேச மாநாட்டினை கொழும்பில் நடாத்தி, தெளிவுபடுத்தவுள்ளோம்” என்றார்.