எழுத்தாளர்கள்

எழுத்தாளர்கள்

தமிழர்களுக்கு எதிராக செயற்பட்ட ஐ.தே.க. இன்று முதலைக் கண்ணீர் வடிக்கிறது – அமைச்சர் அதாவுட செனிவிரட்ன

தமிழ் மக்களுக்கு எதிராக இனவாதத்தை தூண்டிவிட்டு பயங்கரவாத தடைச்சட்டத்தையும் கொண்டுவந்து அவர்களுக்கு பயங்கரவாதிகள் என முத்திரை குத்திய ஐக்கிய தேசியக் கட்சியினர் இன்று தமிழ் மக்கள் துன்பப்படுவதாக முதலைக்கண்ணீர் வடிப்பதாக தொழில் மனிதவள அமைச்சர் அதாவுட செனிவிரட்ன தெரிவித்துள்ளார். மாவனல்ல நகர ஸ்ரீ கதிரேசன் ஆலயத்தில் அவருக்கு அளிக்கப்பட்ட வரவேற்பு வைபவத்தில் உரையாற்றும் போது அவர் இவ்வாறு கூறினார்.

அங்கு அவர் தொடர்ந்து பேசிய அமைச்சர் அதாவுட செனிவிரட்ன;

ஐக்கிய தேசியக் கட்சியினர் ஆட்சிக்கு வரும்போது தமிழ் மக்களின் ஆதரவைக் கேட்பார்கள். தமிழ் மக்களும் ஐக்கிய தேசியக் கட்சிக்கு நம்பி வாக்களிப்பார்கள். ஆனால், தமிழர்கள் மீது வன்முறைகளை கட்டவிழ்த்து விடுவதும் ஐ.தே.கட்சியே. இது கடந்த கால வரலாறு. இன்று தமிழ் மக்களுக்கு உரிமை வழங்கப்பட வேண்டும். தமிழ் மக்களும் இந்த நாட்டு மக்கள் என்று எல்லாம் கூறிவருகின்றனர்.

17 வருடங்கள் ஐக்கிய தேசியக் கட்சியினர் பெரும்பான்மைப் பலத்துடன் ஆட்சி செய்தபோது தமிழர்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணாமல் இன்று தீர்வு காணும்படி கேட்கின்றனர். இந்த நாட்டில் யுத்தம் ஏற்படக் காரணமானவர்களும் ஐக்கிய தேசியக் கட்சியினரே. இன்று யுத்தம் முடிவுற்று தமிழ் மக்களின் பிரச்சினைக்குத் தீர்வுகாண ஜனாதிபதி நடவடிக்கை எடுத்துள்ளார்.

இந்த நாட்டில் சகல இன மக்களும் இலங்கையர் என்று வாழ வேண்டும் என்பதே ஜனாதிபதியின் எதிர்பார்ப்பாகும். அந்த சூழ்நிலையை விரைவில் ஜனாதிபதி ஏற்படுத்துவார். கடந்த 35 வருடங்களாக இன மத பேதமின்றி நான் சேவையாற்றி வருகின்றேன். சகலரும் ஒற்றுமையாகவும் ஐக்கியமாகவும் வாழ்ந்தால் நாடு முன்னேறும் என்றார்.

ஊவா, யாழ்ப்பாணம், வவுனியாவில் இன்னும் 5 தினங்களில் வாக்களிப்பு – 909 வேட்பாளர்கள் களத்தில்; 66 பேர் தெரிவு செய்யப்படுவர்

election_cast_ballots.jpgஊவா மாகாணசபை, யாழ்ப்பாண மாநகரசபை, வவுனியா நகரசபைக்கான வாக்களிப்பு எதிர்வரும் 8 ஆம் திகதி இடம்பெறவுள்ளது. இந்தச் சபைகளுக்கு 66 உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படவுள்ள நிலையில் 909 பேர் போட்டியிடுகின்றனர்.

யாழ்.மாநகர சபை தேர்தலில் 23 உறுப்பினர்களை தேர்ந்தெடுக்க 4 அரசியல் கட்சிகள் மற்றும் 2 சுயேச்சைக்குழுக்களைச் சேர்ந்த 174 பேர் போட்டியிடுகின்றனர். மாநகரசபையின் மொத்த வாக்காளர் தொகை 1,00,417 ஆகும். 67 வாக்களிப்பு நிலையங்களில் வாக்குப் பதிவு இடம்பெறவுள்ளது.

வவுனியா நகரசபை தேர்தலில் 11 உறுப்பினர்களை தேர்ந்தெடுக்க 6 அரசியல் கட்சிகள், 3 சுயேச்சைக் குழுக்களைச் சேர்ந்த 135 பேர் போட்டியிடுகின்றனர். நகர சபையின் 24,626 பேர் 18 வாக்களிப்பு நிலையங்களில் வாக்களிக்கவுள்ளனர்.

ஊவா மாகாண சபை தேர்தலில் மொத்தமாக 8,75,456 வாக்காளர்கள் 814 நிலையங்களில் வாக்களிக்கவுள்ள நிலையில் 32 உறுப்பினர்களை தேர்ந்தெடுக்க 600 பேர் போட்டியிடுகின்றனர். இவர்கள் 23 அரசியல் கட்சிகளையும் 7 சுயேச்சைக் குழுக்களையும் சேர்ந்தவர்களாவர்.

ஊவா மாகாணத்தின் பதுளை மாவட்டத்தில் 21 உறுப்பினர்களை தேர்ந்தெடுக்க 14 அரசியல் கட்சிகள் மற்றும் 4 சுயேச்சைக் குழுக்களைச் சேர்ந்த 432 பேர் போட்டியிடுகின்றனர். 9 தொகுதிகளிலுள்ள 574,814 பேர் 507 வாக்களிப்பு நிலையங்களில் வாக்களிக்கவுள்ளனர்.

மொனராகலை மாவட்டத்தில் 11 உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கு 9 அரசியல் கட்சிகள் மற்றும் 3 சுயேச்சைக் குழுக்களைச் சேர்ந்த 168 பேர் போட்டியிடுகின்றனர். இதில் 3 தொகுதிகளைச் சேர்ந்த 3,00,642 பேர் 307 தொகுதிகளில் வாக்களிக்கவுள்ளனர்.

இதேவேளை, ஊவா மாகாண சபை மற்றும் யாழ்.மாநகரசபை, வவுனியா நகரசபை ஆகியவற்றில் மொத்தமாக 25,360 பேர் தபால் மூல வாக்களிப்புக்கு தகுதி பெற்றிருந்த நிலையில் ஊவாவில் 75 சதவீதமும் வவுனியா நகரசபை மற்றும் யாழ். மாநகரசபையில் 75 வீதமும் தபால் மூல வாக்களிப்பு இடம்பெற்றுள்ளதை தாம் மதிப்பிட்டுள்ளதாக தேர்தலை கண்காணிப்பதற்கான பவ்ரல் அமைப்பு தெரிவித்துள்ளது.

அத்துடன் தபால் மூல வாக்களிப்பு நீதியாகவும் நேர்மையாகவும் இடம்பெற்ற நிலையில் தேர்தல் தினத்தில் இதே சூழ்நிலையை பாதுகாப்பதற்கு அரசியல் கட்சிகளும் சுயேச்சைக்குழுக்களும் தொடர்ந்து முன்வரவேண்டுமென கேட்டுள்ளது.

யாழ். மாவட்டத்தில் இருந்து இடம்பெயர்ந்து புத்தளம் மாவட்டத்தில் வாழ்ந்த மக்களில் 4,388 பேர் யாழ்.மாநகர சபை தேர்தலில் வாக்களிக்க தகுதிபெற்றுள்ளதாக புத்தளம் மாவட்ட உதவித் தேர்தல் ஆணையாளர் ஏ.ஏ.எம்.நபீல் தெரிவித்துள்ளதுடன் இவர்கள் வாக்களிப்பதற்கு அங்கு 6 வாக்குச் சாவடிகள் ஏற்படுத்தப்படவுள்ளதாகவும் தெரிவித்தார்.

தில்லையடி முஸ்லிம் மகாவித்தியாலயத்தில் இரு வாக்குச் சாவடிகளும் புத்தளம் சாஹிரா தேசிய கல்லூரி, பாலாவி சிங்கள மஹா வித்தியாலயம், கற்பிட்டி அல்அக்ஷா தேசிய கல்லூரி, புளிச்சாக்குளம் உமர் பாஷருக் முஸ்லிம் வித்தியாலயம் ஆகியவற்றில் தலா ஒரு வாக்குச்சாவடியும் அமைக்கப்படவுள்ளது.

வாக்குகள் யாவும் புத்தளம் மாவட்ட செயலகத்தில் எண்ணப்பட்டு அதன் பெறுபேறுகள் யாழ்.மாவட்ட செயலகத்திற்கு அனுப்பி வைக்கப்படுமென்றும் அம்மாவட்ட பிரதித் தேர்தல் ஆணையாளர் மேலும் குறிப்பிட்டார்.

இதேவேளை, தேர்தல் தொடர்பில் 29 முறைப்பாடுகளை பெற்றுள்ளதாக தேர்தலை கண்காணிப்பதற்கான மற்றுமொரு அமைப்பான கபே தெரிவித்ததுடன், இதில் தாக்குதல் சம்பவங்கள் 15 இடம்பெற்றிருப்பதாக தெரிவித்துள்ளது.

15 சம்பவங்கள் பதுளையில் இடம்பெற்றுள்ளது. இதற்கு அடுத்தபடியாக மொனராகலையில் 7, வவுனியாவில் 4, யாழ்ப்பாணத்தில் 3 சம்பவங்களும் இடம்பெற்றுள்ளன.

தேர்தல் சட்டவிதிகளை மீறிய சம்பவங்கள் 7 இடம் பெற்றுள்ள நிலையில் அச்சுறுத்தல் தொடர்பில் 3 சம்பவங்களை பதிவு செய்துள்ளோமெனவும் அவ்வமைப்பு தெரிவித்துள்ளது.

யாழ்.மாநகர சபை மற்றும் வவுனியா நகர சபைக்கான தேர்தல் 1998 இல் இடம்பெற்றது. 1998 க்கு பின்னர் இவ்விரு உள்ளூராட்சி மன்றங்களும் 2003 வரை விசேட ஆணையாளரின் கீழ் இருந்தன.

ஊவா மாகாண சபை மே 28 ஆம் திகதி கலைக்கப்பட்டது.

உபவேந்தராக சரத் நியமனம்

university-of-sri.jpgபேராதனை பல்கலைக்கழக புதிய உப வேந்தராக கலாநிதி சரத் அபேகோன் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நியமனம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் வழங்கப்பட்டுள்ளது.

புதிதாக நியமிக்கப்பட்டுள்ள உபவேந்தர் கலாநிதி சரத் அபேகோன் பேராதனை பல்கலைக்கழக பொறியியலாளர் துறை பீடாதிபதியாக நான்கரை வருடம் சேவை புரிந்த இவர் பல்கலைக்கழக ஆணைக்குழு அங்கத்தவருமாவார்.

36,000 சிறுவர்களுக்கு சின்னமுத்து தடுப்பு மருந்தேற்றும் திட்டம்

vaccine.jpgசிறப்பு சிறுவர் சுகாதார பிரசார திட்டத்தின் மூலம் இடம்பெயர்ந்தோர் நலன்புரி நிலையங்களில் உள்ள 36,000 சிறுவர்களுக்கு சின்னமுத்து நோய்க்கு எதிரான நிர்ப்பீடனம் செய்யப்படும். சுகாதார அமைச்சு, ஐக்கிய நாடுகள் சிறுவர் நிதியம், உலக சுகாதார நிறுவனம் ஆகியன இணைந்து இதனை முன்னெடுக்கும். இம்முயற்சியானது, கடந்த காலத்தில் வெகுவாக பரவிய சின்னமுத்து நோயானது, மேலும் பரந்தளவில் பரவாமல் தடுப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

ஐந்து வயதுக்குட்பட்ட சிறுவர்கள் இந்த சிறப்பு திட்டத்தில் உள்ளடக்கப்படுவார்கள். வவுனியாவில் உள்ள 30 நிலையங்களில், ஏறக்குறைய 100 பொது சுகாதார மருத்துவதாதிகளும் 1200 தொண்டர்களும் இம் முயற்சியில் பங்கெடுக்கவுள்ளனர். இதற்காக பல வாரகாலமாக, நிர்ப்பீடன மருந்து வழங்கல்களை எற்பாடு செய்தல், சுகாதார பணியாளர்களுக்கு பயிற்சியளித்தல், தொண்டர்களை அணிதிரட்டுதல் என முன்னேற்ற நடவடிக்கைகள் பல மேற் கொள்ளப்பட்டிருந்தன.

இலங்கை அரசாங்கமானது சிறுவர் சுகாதாரத்துக்கு முன்னுரிமை அளிக்கின்றது- இடம்பெயர்ந்தோர் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதில் நாம் உறுதியுடன் உள்ளோம்’ என சுகாதார அமைச்சின் செயலாளர் டாக்டர் அதுல காந்தலியனகே தெரிவித்தார்.

சின்னமுத்துக்கு எதிராக நிர்ப்பீடனம் வழங்குவதுடன், சிறுவர்களை தாக்கும் பல நோய்களுக்கான எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தவும், போஷாக்கின்மையை தடு க்கவுமென அவர்களுக்கு விற்றமின் ஏ மற்றும் பூச்சி மருந்து என்பனவும் வழங்கப்படவுள்ளன. அவர்களுக்கு போலியோ தடுப்பு மருந்தும் வழங்கப்படும்.

‘ஒரு அவசரநிலையின் போது, ஐந்து வயதுக்கு உட்பட்ட சிறுவர்களே அதிகம் பாதிப்படைவர். இம்முயற்சியினாது, பல உயிர்களைக் காக்கும்’, என ஐக்கிய நாடு கள் சிறுவர் நிதியத்தின் பதில் வதிவிடப் பிரதிநிதி டெசிரா ஜோன்ஸ்மா தெரிவித்தார். சுகாதார அமைச்சு, போஷாக்கு மற் றும் நோய் தொற்று பிரிவு உட்பட இம் முயற்சியில் ஈடுபட்ட ஏனைய பங்காளர்களுக்கும் அவர் பாராட்டு தெரிவித்தார்.

சரணடைந்த சிறுவர்களுக்கென வவுனியாவில் இரு புதிய பாடசாலைகள் செப். 7 முதல் செயற்படும்

school-children000.jpgபுலிகள் இயக்கத்திலிரு ந்து படையினரிடம் சரண டைந்துள்ள சிறுவர்களுக்கென வவுனியா பூந்தோட்டத்தில் இரண்டு புதிய பாடசாலைகள் இயங்கவுள்ளன. வவுனியா பூந்தோட்டம் கூட்டுறவு சங்க கட்டடத்தில் தங்க வைக்கப் பட்டுள்ளவர்களுள் 18 வயதுக்குட்பட்ட 250 சிறுவர் சிறுமியர்களுக்கென இரண்டு தற்காலிக கொட்டில்கள் அமைக்கப்பட்டு கல்வி நடவடிக்கைகள் ஆரம்பிக்க ப்படவுள்ளன.

8ஆம், 9ஆம், 10ஆம், 11ஆம், 12ஆம் வகுப்புகள் இயங்கும் விதத்தில் ஒரு அதிபரின் கீழ் 15 ஆசிரியர்கள் கற்றல் நடவடிக்கைகளுக்கென ஈடுபடுத்தப்படவுள்ளதாக வவுனியா வலய கல்விப் பணிப்பாளர் திருமதி ரஞ்ஜனி ஒஸ்வர்ல்ட் தெரிவித்தார். செப்டம்பர் மாதம் 7ஆம் திகதி முதல் பாடசாலைகள் இயங்கும் விதத்தில் இரண்டு தற்காலிக கொட்டில்களும் அமைக்கப்படவுள்ளன.

வவுனியா வலய கல்விப் பணிப்பாளர் திருமதி ரஞ்ஜனி ஒஸ்வர்ல்ட், யுனிசெப் பிரதிநிதிகள், படைத்தரப்பின் பொறுப்பதிகாரிகள் அடங்கிய குழுவினர் பூந்தோட்ட முகாமுக்குச் சென்று பார்வையிட்டனர்.

மேற்படி 250 மாணவர்களுக்கும் தேவையான பாடநூல்களை வவுனியா வலய கல்விப் பணிப்பாளர் அலுவலகம் நாளை திங்கட்கிழமை வழங்குகிறது. மாணவர்களுக்குத் தேவையான அப்பியாசக் கொப்பிகள், பாடசாலை உபகரணங்களை யுனிசெப் நிறுவனம் வழங்க முன்வந்துள்ளது என பணிப்பாளர் திருமதி ரஞ்ஜனி ஒஸ்வர்ல்ட் தெரிவித்தார்.

பன்றிக் காய்ச்சலால் பீடிக்கப்பட்டவர் சம்மாந்துறையில் கண்டுபிடிப்பு

ah1n1.jpgபன்றிக் காய்ச்சல் (AH1N1  வைரஸ்) நோயினால் பீடிக்கப்பட்ட ஒருவர் சம்மாந்துறையில் கண்டுபிடிக்கப்பட்டார். சம்மாந்துறை, பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட மல்கம்பிட்டியைச் சேர்ந்த 31 வயதுடைய ஒருவரே இவ்வாறு அடையாளம் காணப்பட்டுள்ளார்.

சம்மாந்துறை பொலிஸாருக்கு கிடைத்த தகவலையடுத்து கைதுசெய்யப்பட்டு இவர் கல்முனை அஷ்ரஃப் ஆதார வைத்தியசாலையில் ஒப்படைக்கப் பட்டிருப்பதாக சம்மாந்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எம். ஆர். நூர்தீன் தெரிவித்துள்ளார். சவூதி அரேபியாவிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு வந்திறங்கிய பிரயாணிகள், குறித்த பரிசோதனைக்குட்படுத்தப்பட்ட போது ஐந்து பேர் பன்றிக் காய்ச்சல் தொற்றுடையவர்களென கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர். ஏனைய நான்கு பேரும் கைது செய்யப்பட்ட அதே சமயம் குறித்த நபர் அங்கிருந்து தப்பியுள்ளார். இவருடைய தகவல்களை கொண்டு விமான நிலைய பாதுகாப்புப் பிரிவினரால் சம்மாந்துறை பொலிஸாருக்கு வழங்கப்பட்ட தகவலை அடுத்தே இந்நபர் நேற்றிரவு கைது செய்யப்பட்டுள்ளாரென பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி கூறினார்.

இடம்பெயர் முகாம்களுக்கு மேலும் 15 மருத்துவர்கள் : சுகாதார அமைச்சர் தெரிவிப்பு

sri-lankan-doctors.jpgஇடம் பெயர்ந்த மக்கள் தங்க வைக்கப்பட்டுள்ள முகாம்களில் பணியாற்றவென மேலும் 15 மருத்துவர்கள் அனுப்பி வைக்கப்பட உள்ளதாக சுகாதார அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார். இடம்பெயர்ந்தோர் தங்க வைக்கப்பட்டுள்ள முகாம்களில் ஏற்கனவே 102 மருத்துவர்கள் பணியாற்றி வருவதாகவும் அதற்கு மேலதிகமாக இந்த 15 மருத்துவர்களை அங்கு அனுப்பி வைக்க உள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

முகாம்களில் 100க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் இருப்பதாக அரசாங்கம் கூறிய போதிலும் அங்குள்ள மக்களுக்கு போதிய மருத்துவ சிகிச்சைகள் வழங்கப்படுவதில்லை என முன்னர் தகவல்கள் வெளியாகி இருந்தன.

ஒரு நாள் சிகிச்சையளிக்கும் மருத்துவர்கள் மறுநாள் அங்கிருப்பதில்லை எனவும் இதனால் தொடர்ந்தும் சிகிச்சைப் பெற வேண்டிய நீரிழிவு உள்ளிட்ட நோயாளர்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. அத்துடன் மருத்துவ சிகிச்சைக்காக நீண்ட வரிசையில் நிற்க வேண்டியுள்ளதாகவும் கூறப்படுகிறது. இது குறித்து அமைச்சரின் கவனத்துக்குக் கொண்டு வந்ததையடுத்தே மேலதிக மருத்துவர்களை அனுப்பி வைப்பதாக அவர் தெரிவித்துள்ளார். 

குடாநாட்டில் எரிபொருட்களுக்கு புதிய விலை நிர்ணயம்

jaffna1.jpgயாழ். மாவட்டத்தில் எரிபொருட்களுக்கான புதிய விலைகளை இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது. பெற்றோல் 90 ஒக்டேன் ஒரு லீற்றர் 134 ரூபா ஆகவும் லங்கா ஓட்டோ டீசல் ஒரு லீற்றர் 78 ரூபா 50 சதமாகவும் மண்ணெண்ணெய் ஒரு லீற்றர் 54 ரூபாவாகவும் விற்பனை செய்யப்பட வேண்டும்.

வடக்கின் வசந்தம் நிகழ்ச்சித்திட்ட செயலணித் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான பசில் ராஜபக்ஷ எரிபொருட்கள் ஏ9 பாதையால் எடுத்து வரப்படுவதால் அவற்றின் விலையைக் குறைப்பதற்கு ஆவன செய்ததையடுத்து புதிய விலைகளை இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.

வினாத்தாள் குளறுபடி: விசாரணை செய்து அறிக்கை சமர்ப்பிக்க ஜனாதிபதி பணிப்பு

sri-lanka-school.jpgஇரண்டாம் தவணைப் பரீட்சைக்குரிய வினாத்தாள்களில் ஏற்பட்ட குளறுபடிகள் தொடர்பாக மாகாண, வலய மட்டத்தில் விசாரணைகளை மேற்கொண்டு உடனடியாக அறிக்கை சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கல்வி அமைச்சருக்கு பணிப்புரை வழங்கியுள்ளார்.

வினாத்தாள்களில் குளறுபடிகள் ஏற்பட்டுள்ளதாக கூறப்படும், மாகாணங்கள், வலயங்களிலிருந்து விசாரணைகள் மேற்கொண்டு தகவல்களை சேகரிக்கும் வேலைகளை கல்வி அமைச்சு தொடங்கியுள்ளது.

தவணைப் பரீட்சைகள் நடத்தும் போது எதிர்காலத்தில் இவ்வாறான தவறுகள் ஏற்படாதவாறு பரீட்சைகளை நடத்துவது தொடர்பாக தேசிய கல்வி நிறுவகத்தின் பணிப்பாளர் நாயகம் பேராசிரியர்லால் பெரேராவின் தலைமையிலான குழுவொன்று மேற்படி விசாரணைகளை நடத்துகிறது. விசாரணைகளின் இறுதியில் சமர்ப்பிக்கப்படும் அறிக்கையின் அடிப்படையில் இரண்டு வாரத்துள் தீர்மானம் எடுக்கப்படும் என கல்வி அமைச்சு தெரிவிக்கிறது.

தனியார் பஸ் கட்டணங்களை 5.3 வீதத்தால் அதிகரிக்கலாம்

bus.jpgதனியார் பஸ் கட்டணங்களை 5.3 வீதத்தால் மட்டுமே அதிகரிக்க முடியுமென தேசிய போக்குவரத்து ஆணைக்குழு அறிவித்துள்ளது. தனியார் பஸ் உரிமையாளர்கள் 7 வீத பஸ் கட்டண உயர்வைக் கோருகின்ற போதும் தாம் அதற்கு அனுமதிக்கப் போவதில்லையென தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் அமல் குமாரகே தெரிவித்துள்ளார்.

எரிபொருள் விலையுயர்வு மற்றும் பஸ் சம்பந்தப்பட்ட செலவு தொடர்பிலேயே 7 வீத பஸ் கட்டண உயர்வை தனியார் பஸ் உரிமையாளர் சங்கம் கோரியுள்ளது.