எழுத்தாளர்கள்

எழுத்தாளர்கள்

ஷியாம் லால் ராஜபக்ஷவின் மரணம் தொடர்பாக சர்ச்சை

அரூஷாவை தளமாகக்கொண்ட ருவாண்டாவுக்கான சர்வதேச குற்றவியல் நீதிமன்ற வழக்கு விசாரணையில் சட்டத்தரணியாக பணிபுரிந்த ஷியாம் லால் ராஜபக்ஷவின் மரணத்திற்கு அதிகளவு போதைவஸ்து காரணமாக இருக்கலாம் என்று பொலிஸார் சந்தேகிக்கின்றனர். ஷியாம் லால் ராஜபக்ஷ தனது வீட்டில் கடந்த புதன்கிழமை இறந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டிருந்தார்.

ஆரம்பகட்ட பிரேதப் பரிசோதனையின் பிரகாரம் ஷியாம் லால் ராஜபக்ஷ மருந்தைப் பயன்படுத்தியிருந்தமை கண்டுபிடிக்கப்பட்டிருப்பதாக அரூஷாப் பகுதிக்கான பிராந்திய பொலிஸ் தளபதி மாதேய் பசிலியோ “திஸ்டே’க்கு கூறியுள்ளார்.  இரசாயன பகுப்பாய்வுக்காக இறந்தவரின் உடலிலிருந்து எடுக்கப்பட்ட அடையாளங்கள் தார் எஸ் சலாமுக்கு அனுப்பப்பட்டிருப்பதாக அவர் தெரிவித்திருக்கிறார்.

மரணத்திற்கான உண்மையான காரணம் தொடர்பாக சில சர்ச்சைகள் உள்ளன.போதைவஸ்து பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்று டாக்டர்கள் கூறியுள்ளனர். உடலிலிருந்த மாதிரிகள் தார் எஸ் சலாமிலுள்ள அரச பிரதம இரசாயனவியலாளருக்கு பகுப்பாய்வு பரிசோதனைகளுக்காக அனுப்பப்பட்டிருப்பதாக பசிலியோ கூறியுள்ளார். பரிசோதனைகளின் இறுதி அறிக்கையானது அவரின் மரணத்திற்கான உண்மையான காரணத்தை வெளியிடும் என்றும் பசிலியோ கூறியுள்ளார்.

பிரேத பரிசோதனையானது ஷியாம் லால் ராஜபக்ஷவின் உறவினர்கள் மற்றும் கென்யாவிலுள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலய அதிகாரிகள் முன்னிலையில் இடம்பெற்றதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.  மரணம் சம்பவித்த இரவில் ஷியாம் லால் ராஜபக்ஷவுடன் மது அருந்தியதாக கூறப்படும் ஆட்களை கண்டுபிடிக்க பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.அவர்களை கண்டுபிடித்தால் அன்றைய தினம் இரவு என்ன நடந்தது என்பது தொடர்பான சில தகவல்களை பெற்றுக்கொள்ள அவர்கள் எமக்கு உதவுவார்கள்.இறந்தவரின் உடலில் காயத்திற்கான அடையாளம் எதுவும் காணப்படவில்லை என்றும் பசிலியோ கூறியுள்ளார்.

1994 ருவாண்டா இனப்படுகொலை குற்றவாளிகள் என்று சந்தேகிக்கப்படுவோரை கண்டு பிடிக்க விசாரணை நடத்தி வரும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பணியாற்றும் வழக்கறிஞர்களில் ஒருவர் ஷியாம் லால் ராஜபக்ஷவாகும்.  கொழும்பு றோயல் கல்லூரியில் கற்ற ஷியாம் லால் 1999 – 2004 வரை தென்மாகாணசபை உறுப்பினராக இருந்தவராகும்.

பக்கிங்ஹாம் பல்கலைக்கழகத்தில் எல்.எல்.பி.பட்டம் பெற்ற ஷியாம் லால் லண்டன் பல்கலைக்கழகத்தில் எல்.எல்.எம். பட்டத்தைப் பெற்றவராகும்.பிரிட்டிஷ் சட்டத்துறையில் பாரிஸ்டராக இருந்தவர். 1993 – 1999 வரை சட்ட மா அதிபர் திணைக்களத்தில் அரச சட்டத்தரணியாக பணியாற்றியிருந்தார்.

அவரின் மனைவி பிரசாந்தி ஹேக்கிலுள்ள யூகோசிலவாக்கியாவுக்கான ஐ.நா. சர்வதேச குற்றவியல் நீதிமன்ற வழக்கறிஞராக பணியாற்றி வருகிறார். ஷியாம் லால் ராஜபக்ஷ மரணமடைந்த தருணத்தில் போர்க்குற்றங்கள் தொடர்பான அறிக்கையை அவர் பூர்த்தி செய்திருந்ததாக அவரின் தாயார் லலிதா ராஜபக்ஷ கூறியுள்ளார். வீட்டுக்கு திருட வந்த கோஷ்டியால் ஷியாம் லால் கொலை செய்யப்பட்டதாக நம்பப்படுவதாக முதலில் செய்திகள் வெளியாகியிருந்தன.

இவரின் மரணத்திற்கான காரணம் இன்னமும் தீர்மானிக்கப்படவில்லை என்று கென்யாவிலுள்ள இலங்கைத் தூதுவர் ஜே.திஸாநாயக்கா கூறியுள்ளார். மூக்கிலிருந்து இரத்தம் வழிந்ததைத் தவிர இறந்தவரின் உடலில் காயத்திற்கான அடையாளங்கள் இல்லை என்றும் திஸாநாயக்கா கூறியுள்ளார்.

மூன்று வருடங்களுக்கு முன்னர் ஷியாம் லால் இதய சத்திரசிகிச்சை மேற்கொண்டிருந்ததாக தகவல் கிடைத்திருப்பதாகவும் தூதுவர் கூறியுள்ளார்.

ஜோர்தானில் இரு இலங்கையர் தீயிட்டு மரணம்

fire222.jpgஇரண்டு இலங்கையர்கள் ஜோர்தானில் உயிரிழந்துள்ளதாக இணையத்தள தகவல்கள் தெரிவிக்கின்றன. இலங்கைப் பெண் ஒருவரைத் தீயிட்டுக் கொளுத்தித் தானும் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக அத்தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எரிபொருளை ஊற்றப்பட்டு மேற்படி பெண் உயிருடன் எரிக்கப்பட்டதாகவும் பின்னர், அவரை எரித்த இலங்கையரும் தமக்குத் தாமே தீயிட்டுக் கொண்டதாகவும் விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது. ஜோர்தான் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் இவர்கள் இருவரும் உயிரிழந்துள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகம் அறிவித்துள்ளதாகவும் அந்த இணையத்தளம் தெரிவிக்கின்றது.

தீவிர தீக்காயங்களினால் இவர்கள் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பாதுக்க மற்றும் களுத்துறை பகுதிகளைச் சேர்ந்தவர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்களின் சடலங்களை இலங்கைக்குக் கொண்டு வர, தேவையான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகம் அறிவித்துள்ளத் தெரிகிறது.

ஸ்ரீ ரெலோ இயக்கம் கட்சியின் பெயரை “புதிய தாயகம்” என மாற்றவுள்ளது

puthiya_thaayagam_telo.jpgஸ்ரீ ரெலோ எனப்படும் ஸ்ரீ தமிழீழ விடுதலை இயக்கம் கட்சியின் பெயரை விரைவில் கூடவுள்ள தமது தேசிய மாநாட்டில் “புதிய தாயகம்”  என்று மாற்றவுள்ளதாக கட்சியின் செயலாளர் ப உதயராசா தெரிவித்துள்ளார்.

நாட்டின் அரசியல் நிலை உட்பட்ட விடயங்களை ஆராய்ந்த பின்னரே இந்த முடிவுக்கு வந்ததாக தெரிவித்துள்ள அவர் புதிய தேர்தல் சட்டமூலத்திற்கு ஏற்க தனி இனத்தையோ மதத்தையோ பிரிவினை சொற்களையோ தாங்கிய கட்சிகள் தடை செய்யப்படும் என்ற அரசாங்கத்தின் யோசனையை ஏற்றுக்கொள்வதாக குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையுடன் வர்த்தகத்தில் ஈடுபட வேண்டாம் என அமெரிக்காவில் தமிழர்கள் ஆர்ப்பாட்டம்

boycott000.jpgஇலங் கையுடன் வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம் என வலியுறுத்தி, அமெரிக்காவின் தமிழ் அமைப்புகள் ஆர்ப்பாட்டம் ஒன்றில் ஈடுபட்டுள்ளனர். விக்டோரியா செக்ரெட் என்ற நிறுவனத்தை மையப்படுத்தியே இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றுள்ளது.

இந்த நிறுவனம் இலங்கையுடன். கடந்த ஆண்டில் இலங்கையுடன் மேற்கொண்ட வர்த்தகத்தின் ஊடாக 5.6 பில்லியன் டொலர்கள் இலாபம் உழைத்துள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இதற்கு எதிரான பதாதைகளை சுமந்த படி, ஆயிரக்கணக்கான தமிழர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.தமிழர் இன அழிப்பை மேற்கொண்ட இலங்கையுடன், வர்த்தகத்தில் ஈடுபட வேண்டாம் என அவர்கள் வலியுறுத்தியிருந்தனர்.

குளவிகளின் தாக்குதல்களையடுத்து சீகிரியா குன்றுக்குச் செல்ல தற்காலிகத் தடை

000images.jpgமடுத் திருவிழாவிற்குச் சென்று விட்டு தமது இருப்பிடங்களுக்குத் திரும்பிச் செல்லும் வழியில் சீகிரியா குன்றில் ஏறுவதற்குச் சென்ற மக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதால் ஏமாற்றத்துடன் திரும்பினர்.
நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை சீகிரியாவிற்குச் சென்ற பெருமளவிலான மக்களே இவ்வாறு ஏமாற்றமடைய நேரிட்டது.

சனிக்கிழமை பிற்பகல் நேரத்தில் உள்ளூர் சுற்றுலாப் பயணிகள் சீகிரியா குன்றுக்குச் சென்று ஏறிய வேளையில் குளவிகள் கொட்டி 48 பேர் காயமடைந்த நிலையில், சீகிரியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன், அவர்களில் பத்துப்பேர் மேலதிக சிகிச்சைகளின் பொருட்டு தம்புள்ள ஆதார வைத்தியசாலைக்கு மாற்றியனுப்பப்பட்டிருந்தனர்.

சனிக்கிழமை நான்காவது தடவையாகவும் இவ்வாறு உல்லாசப் பயணிகளைக் குளவிகள் கொட்டி காயப்படுத்தியதைத் தொடர்ந்து சீகிரியா குன்றின் இடை நடுவில் அமைந்துள்ள சங்கபாதம் வரையிலான பிரதேசத்திற்கு மாத்திரமே அனுமதிக்கப்பட்டதுடன், குன்றின் மேற்தளத்திற்கு ஏறுவது சுற்றுலாப் பயணிகளுக்கு நேற்று முன்தினம் முதல்தடை செய்யப்பட்டுள்ளது.

சனிக்கிழமை குளவிகளால் கொட்டப்பட்டு காயத்திற்குள்ளானவர்களில் 9 சிறுவர்களும் ஒரு கர்ப்பிணிப் பெண்ணும் அடங்குவதாகவும் இவர்கள் களுத்துறை, கல்முனை, வத்தளை, கிரிபத்கொட மற்றும் நிட்டம்புவ பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் எனவும் சீகிரியா பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

குளவியிலிருந்து பாதுகாத்துக் கொள்வதற்கான பாதுகாப்பு அங்கிகள் வழங்கப்பட வேண்டியிருந்த போதிலும் குறித்த உத்தியோகத்தர்கள் சம்பவ தினம் விடுமுறையில் சென்றிருந்ததால் பாதுகாப்பு அங்கிகள் வழங்கப்படவில்லை எனவும் கலாசார முக்கோண மத்திய நிலையப்பிரமுகர் ஒருவர் தெரிவித்தார்.

கடந்த சனிக்கிழமை சிகிரியா குன்றின் உச்சியில் குளவிகளின் தாக்குதலுக்கு அஞ்சி அங்குள்ள சேறுநிறைந்த நீர்த்தடாகத்தினுள் 3 மணிநேரம் சுமார் 15 பேர் வரை குந்தியிருக்க நேர்ந்ததாக சுற்றுலாப் பயணிகள் தெரிவித்ததுடன், சிகிரிய கலாசார முக்கோண நிதிய ஊழியர்கள் மற்றும் உத்தியோகஸ்தர்களால் தமக்கு எவ்வித உதவிகளும் பாதுகாப்பும் இல்லை எனவும் பயணிகள் விசனம் தெரிவித்தனர்.

இச்சம்பவத்தைத் தொடர்ந்து சீகிரியா குன்றின் சிங்கபாதத்தைத் தாண்டி மேலே செல்வதை தற்காலிகமாக தடை செய்யத் தீர்மானித்ததாக சீகிரியா கலாசார முக்கோண மத்திய நிலைய முகாமையாளர் சுமேத கருணாரத்ன தெரிவித்தார். இதேவேளை, எதிர்வரும் காலங்களில் பாதுகாப்பு அங்கிகளை அணியாது எவரும் சீகிரியா குன்றிலேறுவதற்கு அனுமதிக்கப்பட மாட்டார்கள் எனவும் முகாமையாளர் மேலும் தெரிவித்தார்.

ஊவா மா.ச. முதலமைச்சர் 20ஆம் திகதி சத்தியப் பிரமாணம்

shasendrakumararajapaksa.jpgஊவா மாகாண சபை முதலமைச்சராக சசேந்திர ராஜபக்ஷ எதிர்வரும் 20ஆம் திகதி சத்தியப் பிரமாணம் செய்யவுள்ளதாக ஊவா மாகாண சபை வட்டாரங்கள் இணையத் தளம் ஒன்றுக்குத் தெரிவித்துள்ளன.

ஊவா மாகாணசபைத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு வேட்பாளராகப் போட்டியிட்ட கதிர்காம தேவாலயத்தின் தியவதன நிலமே சசேந்திர ராஜபக்ஷ 1 லட்சத்து 36 ஆயிரத்து 697 வாக்குகள் பெற்று முதலமைச்சர் பதவிக்குத் தகுதி பெற்றுள்ளார். இத்தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு சகல மாவட்டங்களையும் தனதாக்கி அமோக வெற்றி பெற்றமை குறிப்பிடத்தக்கது.

பாலாவியில் 1 கோடியே 38 லட்சம் ரூபா செலவில் புதிய தபாலகம் – அமைச்சர் பீரிஸ் திறந்து வைப்பு

புத்தளம் பாலாவியில் 1 கோடி 38 லட்சம் ஷரூபா செலவில்; நிர்மாணிக்கப்பட்ட புதிய தபாலகத்தை வெளிநாட்டு ஏற்றுமதி அபிவிருத்தி மற்றும் பதில் தபால், தொலைத் தொடர்புகள் அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் இன்று திறந்து வைத்தார்.

இவ்வைபவத்தில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு தபாலகத்தைத் திறந்து வைத்து உரை நிகழ்த்திய அமைச்சா பீரிஸ் நாட்டில் பயங்கரவாதம் நிலவிய போது,  எவ்வித அபிவிருத்திகளையும் செய்ய முடியாத நிலை காணப்பட்டது. இன்று அவற்றை அழித்து அபிவிருத்திகளை ஜனாதிபதி மேற்கொண்டு வருகின்றார் எனக்கூறினாh.;

புத்தளம் மிகவும் முக்கியமான பிரதேசமாகும். மன்னார், மற்றும் ஏனைய முக்கிய வடமாகாண பகுதிகளுக்குப் பயணம் செய்யக் கூடிய பாதைகள்; இங்கிருந்து செல்கின்றன. புலிகளின் சர்வதேச தலைவர் பத்மநாதனும் கைது செய்யப்பட்டுள்ளார். தலைமைத்துவமற்ற அமைப்பாக இன்று புலிகளின் அமைப்பு மாறிவிட்டது. இனி அவர்களுக்கு விமோசனம் இல்லை. புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் த.மு.தசநாயக்கவை கொன்றதும் புலிகளே. இம்மாவட்ட மக்களுக்குப் பெரும் பணியாற்றிய நல்லதொரு தலைவர் த.மு.தசநாயக்க” என்றும் அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் கூறினார்.

இருபது குடும்பங்களுக்கான காணி உறுதிகளையும் அமைச்சர் இந்நிகழ்வில் வழங்கினார். கால்நடை வளத்துறை பிரதி அமைச்சர் கே.ஏ.பாயிஸின் அழைப்பின் பேரில் அமைச்சர் இத்திறப்பு விழாவில் கலந்து கொண்டார். இதில் கடற்தொழில் பிரதி அமைச்சர் நியோமல் பெரேராவும் கலந்து கொண்டார்.

யாழ். குடாவில் நான்கு நாட்களுக்கு இரவு நேர ஊரடங்கு முற்றாக நீக்கம்

jaffna_8.jpgவரலாற் றுச் சிறப்பு மிக்க நல்லூர் கந்தசுவாமி கோவில் வருடாந்த திருவிழாவை முன்னிட்டு இன்று செவ்வாய்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரையிலான நான்கு நாட்களுக்கு யாழ் குடாநாடு முழுவதும் இரவு நேர ஊரடங்கு முற்றாக நீக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. யாழ் படைகளின் தளபதி மேஜர் ஜெனரல் ஜி.பி.டி சில்வாவிடம்  சமூக சேவைகள் மற்றும் சமூக நலத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா விடுத்த வேண்டுகோளையடுத்தே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்த வருடாந்த திருவிழாவில் பெருமளவு பக்தர்கள் பங்கேற்கவுள்ளதால் அதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. இரத்மலானைக்கும் பலாலிக்கும் இடையே நடைபெற்று வரும் உள்ளுர் விமான சேவைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை,  இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் மற்றும் ரூபவாஹினி தொலைக்காட்சி நிலையம் என்பன இரதோற்சவத்தையும் தீர்த்தத்திருவிழாவையும் நேரடி ஒலி ஒளிபரப்பு செய்யவுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

சாதனை படைத்த திலக்கரத்ன டில்ஷான் – 30 பந்துக்களில் 50 ஓட்டங்கள்

thilakarathna-dilshan.jpgஇலங்கை கிரிக்கெட் அணியின் புதிய ஆரம்பத் துடுப்பாட்ட விரரான திலக்கரத்ன டில்ஷான் காலி சர்வதேச விளையாட்டரங்கில் நடைபெறும் போட்டியில் இன்று காலை குறைந்த பந்துகளுக்கு அரைச்சதம் அடித்து சாதனை படைத்து கிரிக்கெட் வரலாற்றில் புதிய இடத்தைப் பிடித்துள்ளார். இலங்கைக்கும் நியுஸிலாந்துக்கும் இடையில் இன்று ஆரம்பமான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியிலேயே டில்ஷான் இந்த சாதனையை நிலைநாட்டியுள்ளார்.

இவர் 30 பந்துகளுக்கு 50 ஓட்டங்களைப் பெற்று இலங்கை அணியின் முன்னால் தலைவர் அர்ஜூன ரனதுங்கவின் சாதனையை முறியடித்துள்ளார்.

அர்ஜூன இந்திய அணியுடனான போட்டி ஒன்றின் போது 31 பந்துகளுக்கு 50 ஓட்டங்களை எடுத்து சாதனை படைத்திருந்தார். ஆட்ட முடிவின் போது இலங்கை கிரிக்கெட் அணி 3 விக்கட் இழப்புக்கு 293 ஓட்டங்கள் பெற்றிருந்தது.

தமிழக இடைத் தேர்தலில் 65% வாக்குகள் பதிவு

தமிழகத்தில் தொண்டாமுத்தூர், இளையாங்குடி, கம்பம், ஸ்ரீவைகுண்டம், பர்கூர் ஆகிய சட்டசபைத் தொகுதிகளுக்கான இடைத் தேர்தலுக்கான வாக்குப் பதிவு இன்று நடந்து முடிந்தது. சராசரியாக 65 சதவீத வாக்குகளுக்கும் மேலாக பதிவாகியிருக்கலாம் என்று தெரிகிறது. ஐந்து தொகுதிகளிலும் இன்று காலை 7 மணிக்கு வாக்குப் பதிவு தொடங்கியது. காலை முதலே அனைத்துத் தொகுதிகளிலும் விறுவிறுப்பாக வாக்குப்பதிவு நடந்தது.

அதிமுகவின் தேர்தல் புற்ககணிப்புக்கு இடையே வாக்காளர்கள் பெரும் ஆர்வத்துடன் வாக்களித்தனர்.

விறுவிறுப்பாக நடந்த வாக்குப் பதிவு மாலை 5 மணிக்கு முடிவடைந்தது. ஐந்து தொகுதிகளிலும் சராசரியாக 65 சதவீத வாக்குகள் பதிவாகியிருக்கும் எனத் தெரிகிறது.