ஷியாம் லால் ராஜபக்ஷவின் மரணம் தொடர்பாக சர்ச்சை

அரூஷாவை தளமாகக்கொண்ட ருவாண்டாவுக்கான சர்வதேச குற்றவியல் நீதிமன்ற வழக்கு விசாரணையில் சட்டத்தரணியாக பணிபுரிந்த ஷியாம் லால் ராஜபக்ஷவின் மரணத்திற்கு அதிகளவு போதைவஸ்து காரணமாக இருக்கலாம் என்று பொலிஸார் சந்தேகிக்கின்றனர். ஷியாம் லால் ராஜபக்ஷ தனது வீட்டில் கடந்த புதன்கிழமை இறந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டிருந்தார்.

ஆரம்பகட்ட பிரேதப் பரிசோதனையின் பிரகாரம் ஷியாம் லால் ராஜபக்ஷ மருந்தைப் பயன்படுத்தியிருந்தமை கண்டுபிடிக்கப்பட்டிருப்பதாக அரூஷாப் பகுதிக்கான பிராந்திய பொலிஸ் தளபதி மாதேய் பசிலியோ “திஸ்டே’க்கு கூறியுள்ளார்.  இரசாயன பகுப்பாய்வுக்காக இறந்தவரின் உடலிலிருந்து எடுக்கப்பட்ட அடையாளங்கள் தார் எஸ் சலாமுக்கு அனுப்பப்பட்டிருப்பதாக அவர் தெரிவித்திருக்கிறார்.

மரணத்திற்கான உண்மையான காரணம் தொடர்பாக சில சர்ச்சைகள் உள்ளன.போதைவஸ்து பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்று டாக்டர்கள் கூறியுள்ளனர். உடலிலிருந்த மாதிரிகள் தார் எஸ் சலாமிலுள்ள அரச பிரதம இரசாயனவியலாளருக்கு பகுப்பாய்வு பரிசோதனைகளுக்காக அனுப்பப்பட்டிருப்பதாக பசிலியோ கூறியுள்ளார். பரிசோதனைகளின் இறுதி அறிக்கையானது அவரின் மரணத்திற்கான உண்மையான காரணத்தை வெளியிடும் என்றும் பசிலியோ கூறியுள்ளார்.

பிரேத பரிசோதனையானது ஷியாம் லால் ராஜபக்ஷவின் உறவினர்கள் மற்றும் கென்யாவிலுள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலய அதிகாரிகள் முன்னிலையில் இடம்பெற்றதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.  மரணம் சம்பவித்த இரவில் ஷியாம் லால் ராஜபக்ஷவுடன் மது அருந்தியதாக கூறப்படும் ஆட்களை கண்டுபிடிக்க பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.அவர்களை கண்டுபிடித்தால் அன்றைய தினம் இரவு என்ன நடந்தது என்பது தொடர்பான சில தகவல்களை பெற்றுக்கொள்ள அவர்கள் எமக்கு உதவுவார்கள்.இறந்தவரின் உடலில் காயத்திற்கான அடையாளம் எதுவும் காணப்படவில்லை என்றும் பசிலியோ கூறியுள்ளார்.

1994 ருவாண்டா இனப்படுகொலை குற்றவாளிகள் என்று சந்தேகிக்கப்படுவோரை கண்டு பிடிக்க விசாரணை நடத்தி வரும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பணியாற்றும் வழக்கறிஞர்களில் ஒருவர் ஷியாம் லால் ராஜபக்ஷவாகும்.  கொழும்பு றோயல் கல்லூரியில் கற்ற ஷியாம் லால் 1999 – 2004 வரை தென்மாகாணசபை உறுப்பினராக இருந்தவராகும்.

பக்கிங்ஹாம் பல்கலைக்கழகத்தில் எல்.எல்.பி.பட்டம் பெற்ற ஷியாம் லால் லண்டன் பல்கலைக்கழகத்தில் எல்.எல்.எம். பட்டத்தைப் பெற்றவராகும்.பிரிட்டிஷ் சட்டத்துறையில் பாரிஸ்டராக இருந்தவர். 1993 – 1999 வரை சட்ட மா அதிபர் திணைக்களத்தில் அரச சட்டத்தரணியாக பணியாற்றியிருந்தார்.

அவரின் மனைவி பிரசாந்தி ஹேக்கிலுள்ள யூகோசிலவாக்கியாவுக்கான ஐ.நா. சர்வதேச குற்றவியல் நீதிமன்ற வழக்கறிஞராக பணியாற்றி வருகிறார். ஷியாம் லால் ராஜபக்ஷ மரணமடைந்த தருணத்தில் போர்க்குற்றங்கள் தொடர்பான அறிக்கையை அவர் பூர்த்தி செய்திருந்ததாக அவரின் தாயார் லலிதா ராஜபக்ஷ கூறியுள்ளார். வீட்டுக்கு திருட வந்த கோஷ்டியால் ஷியாம் லால் கொலை செய்யப்பட்டதாக நம்பப்படுவதாக முதலில் செய்திகள் வெளியாகியிருந்தன.

இவரின் மரணத்திற்கான காரணம் இன்னமும் தீர்மானிக்கப்படவில்லை என்று கென்யாவிலுள்ள இலங்கைத் தூதுவர் ஜே.திஸாநாயக்கா கூறியுள்ளார். மூக்கிலிருந்து இரத்தம் வழிந்ததைத் தவிர இறந்தவரின் உடலில் காயத்திற்கான அடையாளங்கள் இல்லை என்றும் திஸாநாயக்கா கூறியுள்ளார்.

மூன்று வருடங்களுக்கு முன்னர் ஷியாம் லால் இதய சத்திரசிகிச்சை மேற்கொண்டிருந்ததாக தகவல் கிடைத்திருப்பதாகவும் தூதுவர் கூறியுள்ளார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *