எழுத்தாளர்கள்

எழுத்தாளர்கள்

பிரதேச வீதிகளை அபிவிருத்தி செய்வதற்காக கடன்

pr-mahi.jpgபிரதேச வீதிகளை அபிவிருத்தி செய்வதற்காக உலக வங்கியின் சர்வதேச அபிவிருத்தி நிதியத்திடமிருந்து 70.6 மில்லியன் ரூபாவை கடனாகப் பெற்றுக்கொள்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

இதற்கான பிரேரனையை நிதி, திட்டமிடல் அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முன்வைத்திருந்தார். இத்திட்டத்தின்படி ஊவா பிரதேசத்தில் 200 கிலோ மீற்றர்,  கிழக்கில் அம்பாறை மாவட்டத்தில் 100 கிலோ மீற்றர் வீதியும் புனரமைக்கப்படவுள்ளது.

தெற்குப் பிரதேச பெருந்தெருக்கள் அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் பின்னதுவ எனுமிடத்திலிருந்து கொடகம வரைக்கும் நான்கு வழிப் பாதை அமைக்க அமைச்சரவை அனுமதி வழங்கியது.  இத்திட்டத்தின்படி கொட்டாவை முதல் தொடங்கொட வரை 34.3 கிலோ மீற்றரும் தொடங்கொட முதல் குறுந்துகஹ ஹெதக்ம எனுமிடம் வரை 31.7 கிலோ மீற்றரும் சர்வதேச உதவியுடன் வீதி அமைக்கப்படவுள்ளது. இத்திட்டம் 2011ஆம் ஆண்டு பூர்த்தி செய்யப்படும்.

புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் புலி உறுப்பினர்களுக்கு மலேஷியாவில் தொழில்வாய்ப்பு

எல். ரி. ரி. ஈ. இயக்கத்தில் சிறுவர் படைப் பிரிவில் இருந்து சரணடைந்தவர்களில் ஏழு பேர் புனர்வாழ்வளிக்கப்பட்டு மலேசியாவில் பணியாற்ற அனுப்பி வைக்கப்படவுள்ளனர்.

இவர்களுக்கு மலேசியா செல்வதற்கான விமான டிக்கெட்டுக்களும் விசாக்களும் நேற்று பம்பலப்பிட்டி சம்மாங்கோடு ஸ்ரீ மாணிக்க விநாயகர் ஆலயத்தில் வைத்து வழங்கப்பட்டன. எல். ரி. ரி. ஈ. அமைப்பில் சேர்ந்து செயலாற்றி அம்பேபுஸ்ஸ புனர்வாழ்வு நிலையத்தில் புனர்வாழ்வளிக்கப்பட்ட 147 இளைஞர்கள் இதற்கு முன்பு மத்திய கிழக்கு நாடுகளுக்கு தொழிலுக்காக அனுப்பி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

நீதி மற்றும் சட்ட மறுசீரமைப்பு அமைச்சு வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்துடன் இணைந்து மேற்கொள்ளும் இந்நடவடிக்கை தொடர்ந்து முன்னெடுக்கப்படுவதுடன் புனர்வாழ்வளிப்பதற்காக இன்னும் எல். ரி. ரி. ஈ. உறுப்பினர்கள் 10,000 பேர் வரையில் இருப்பதாக புனர்வாழ்வளிப்பு ஆணையாளர் நாயகம் மேஜர் ஜெனரல் தயா ரத்நாயக்க தெரிவித்தார்.

விஜய் படம்… கைவிட்டது ‘ஏஸ்கர்’?

rahul_vijay.jpgஅரசியல், காங்கிரஸ் கட்சியுடன் பேரம், ராஜ்ய சபா எம்பி என விஜய் நாளும் ஒரு ஷோ காட்டிக் கொண்டிருக்க, அவரை வைத்து அடுத்த படம் தயாரிக்கும் திட்டத்திலிருந்த ஏஸ்கர் பிலிம்ஸ் அந்தத் திட்டத்தைக் கைவிட்டு விட்டதாகக் கூறப்படுகிறது.

விஜய்க்கு பெரும் திருப்புமுனை தந்த காதலுக்கு மரியாதை படத்தை ஒரிஜினலாக தயாரித்தவர் சங்கிலி முருகன். ஒரு கட்டத்தில் படத்தின் மீது நம்பிக்கை இழந்த சங்கிலி, படத்தை ஏஸ்கர் பிலிம்ஸுக்கு கைமாற்றி விட்டாராம், சுமாரான லாபத்துக்கு. அதுதான் ஏஸ்கர் தயாரிப்பில் வந்த முதல் படமாக ஆனது.

இப்போது மீண்டும் விஜய் நடிக்கும் படத்தைத் தயாரிக்கும் திட்டத்திலிருந்தாராம் ஏஸ்கர் நிறுவன உரிமையாளர். ஆனால் இந்த நேரம் பார்த்து விஜய் நாளும் அரசியல் குட்டையைக் குழப்பிக் கொண்டிருப்பதைப் பார்த்து, என்ற எச்சரிக்கை உணர்வில் படத்தைக் கைவிட்டுவிட்டதாக கூறப்படுகிறது.

இடம்பெயர்ந்தோரை பலாத்காரமாக தடுத்து வைக்க முடியாது – மங்கள சமரவீர

mangala2222.jpgவவுனியா நலன்புரி முகாம்களில் தங்கியிருந்த இடம்பெயர்ந்தோரை பலாத்காரமாக தடுத்து வைக்க முடியாது என ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மக்கள் பிரிவு ஏற்பாட்டாளர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.
 
கொழும்பில், இடம்பெற்ற சுதந்திர மேடை செய்தியாளர் மாநாட்டில், உரையாற்றிய அவர் இடம்பெயர்ந்தோருக்கு தேவையான இடங்களுக்கு சென்று வர உரிமை இருக்கிறது. ஏனைய இடங்களில் உள்ள தமது உறவினர்களிடம் செல்வதற்கு அவர்களுக்கு உரிமை இருக்கிறது.
 
இந்த நிலையில் அவர்களை பலாத்காரமாக தடுத்து வைக்க முடியாது என மங்கள சமரவீர குறிப்பிட்டார். தெளிவான ரீதியில் அவர்கள் பதிவு செய்யப்பட்டு, பொது நிர்வாகத்தின் கீழ் கொண்டு வரப்பட வேண்டும். எனினும், இந்த நலன்புரி முகாம்களில் அனைத்துப் பணிகளையும் இராணுவமே மேற்கொண்டு வருகின்றது.
 
வவுனியாவில் அமைக்கப்பட்டுள்ள நலன்புரி முகாம்கள் சிறைக்கூடமோ அல்லது வதைக்கூடமோ இல்லை என கூறவேண்டுமானால் அங்கு இடம்பெறும் அனைத்து நிர்வாகப் பணிகளும் சதாரண சிவில் அதிகாரிகளிடம் ஒப்படைக்க வேண்டும் என அவர் தெரிவித்தார்.
 
இதேவேளை, இந்த முகாம்களை வந்து பார்வையிட சர்வதேச நிறுவனங்களுக்கும், ஐக்கிய நாடுகள் சபைக்கும் அரசாங்கம் அழைப்பு விடுக்க வேண்டும். இல்லையெனில், அரசாங்கம் கூறும் பொய்களுக்கு சர்வதேசம் ஏமாற்றப்படுமானால், சர்வதேசத்திற்கு பொறுப்புக் கூற வேண்டிய நிலை இந்த நாட்டிற்கு ஏற்படும் என்றும் மங்கள சமரவீர தெரிவித்தார்.

இந்தோனீசிய நில நடுக்கப் பகுதிகளுக்கு நிவாரணங்கள் செல்கின்றன

indonesia.jpgபலமான நிலநடுக்கத்தால் நேற்று புதன்கிழமையன்று மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ள இந்தோனீசிய கிராமங்களுக்கான நிவாரணங்கள் வந்து சேரத் தொடங்கியுள்ளன.

மேற்கு ஜாவாப் பகுதியில் இருக்கும் சில மாவட்டங்களுக்கு உணவும் குடிநீரும் சென்றடைந்துள்ள போதிலும், அதிகமாக பாதிக்கப்பட்டுள்ள தொலைதூர கிராமங்கள் இன்னமும் தொடர்புகள் இல்லாமல் துணடிக்கப்பட்டுள்ள நிலையிலேயே உள்ளன.

மழையும், பாதிக்கப்பட்டுள்ள சாலைகளும் அந்தப் பகுதிகளுக்கு நிவாரண உதவிகளை எடுத்துச் செல்லும் முயற்சிகளுக்கு தடைகளை ஏற்படுத்தி வருகின்றன. இந்த நிலநடுக்கம் மற்றும் நிலச்சரிவுகளால் இறந்தவர்களின் எண்ணிக்கை ஐம்பத்தியேழாக உயர்ந்துள்ளது.

நிலநடுக்கத்தின் காரணமாக புதையுண்ட மனிதர்களை தோண்டியெடுக்கும் பணிகளை வெறும் கைகளை கொண்டே போலீசாரும் இராணுவத்தினரும் மேற்கொண்டு வருவதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த நிலநடுக்கத்தின் அதிர்வலைகள் எழுநூறு கிலோமீட்டர்களுக்கு உணரப்பட்டன.

இந்தியாவில் 39 லட்சம் பேர் எய்ட்ஸால் பாதிப்பு – அமைச்சர் தமிழரசி

03-aids.jpgஇந்தியாவில் 39 லட்சம் பேர் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று தமிழக ஆதி திராவிடர் நலத்துறை அமைச்சர் தமிழரசி கூறியுள்ளார். எச்.ஐ.வி -யால் பாதிக்கப்பட்டோரின் நல வாழ்விழா மதுரை  பல்நோக்கு சமூக சேவா சங்கத்தில், தொண்டு நிறுவனங்களின் சார்பில் நடைபெற்றது.

இந்த விழாவை தமிழக ஆதி திராவிடர் நலத்துறை அமைச்சர்  தமிழரசி துவக்கி வைத்து பேசுகையில், ஒரு காலத்தில் எச்.ஐ.வி. மற்றும் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டோர் சமுதாயத்தில் புறக்கணிக்கப்பட்டனர். ஆனால், தற்போது நிலைமை மாறி, அவர்களின் மரணத்தை தள்ளிப் போடும் அளவிற்கு மருத்துவம் நவீன மயமாக வளர்ந்துள்ளது.

உலகில் எட்டு கோடி பேர் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். தினமும் புதிதாக 16 ஆயிரம் பேர் பாதிக்கப்படுகின்றனர். இந்தியாவில் சுமார் 39 லட்சம் பேரும், தமிழகத்தில் எட்டு லட்சம் முதல் 10 லட்சம் பேருக்கு இந்த நோய் தாக்கியுள்ளது. இதில், 18 முதல் 49 வயதுடையோர் தான் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றார்.

ஈ.பி.டி.பி. – அ.இ.மு.கா. ஒப்பந்தம் கைச்சாத்து

யாழ். மாவட்டத்தில் கணிசமான அளவில் முஸ்லிம் மக்கள் குடியேறியதும் யாழ். மாநகர சபை பிரதி மேயராக முஸ்லிம் ஒருவர் நியமிக்கப்படவுள்ளார். அது தொடர்பான இணக்கப்பாட்டில் ஒப்பந்தக் கைச்சாத்தொன்று நேற்று இடம்பெற்றது.

இந்நிகழ்வு கல்வியமைச்சில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் செயலாளரும் கல்வி அமைச்சருமான சுசில் பிரேம்ஜயந்த் முன்னிலையில் இடம்பெற்றது. மேற்படி ஒப்பந்தத்தில் ஈ.பி.டி.பி.யின் செயலாளர் நாயகம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவும் அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர் நாயகம் வை. எல். எஸ். ஹமீத் ஆகியோர் கைச்சாத்திட்டுள்ளனர்.

நேற்றுக் காலை சமூக சேவைகள் அமைச்சில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இது பற்றி குறிப்பிட்ட போது, இவ்விடயம் சம்பந்தமாக அமைச்சர்கள் அமீர் அலி, ரிசாட் பதியுதீன் ஆகியோர் பி. பி. சி. மூலம் கருத்து வெளியிடும் வரை இது பற்றி தமக்குத் தெரியாதெனவும் அதன் பின்னர் இதற்கான சிபாரிசை வழங்கியதாகவும் தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்தில் தற்போது 65 முஸ்லிம் குடும்பங்களே உள்ளன. மேலும் இரண்டு வருடத்தில் கணிசமானளவு முஸ்லிம்கள் அங்கு குடியேறும்போது அம்மக்கள் பெயரால் சேவை செய்ய பிரதி மேயராக முஸ்லிம் ஒருவரை நியமிக்கலாம் என்றார்.

கடந்த யாழ். மாநகர சபைத் தேர்தலில் ஒன்பது வேட்பாளர்களை ஈ.பி.டி.பி. கட்சியும் நான்கு வேட்பாளர்களை அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ¤ம் பெற்றன. இதன்படி ஈ.பி.டி.பி. கட்சியினர் முதல்வர், பிரதி முதல்வர் ஆகியோர்களின் பெயர்களை அறிவித்திருந்தனர்.

இதேவேளை, பிரதி மேயர் பதவியை அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ¤க்கு வழங்க வேண்டும் என்ற வேண்டுகோள் விடுக்கப்பட்டது. இந்த வேண்டுகோளை அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான றிஷாத் பதியுதீன் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளருக்கு விடுத்திருந்தார்.

அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த் இரு பிரிவினரையும் அழைத்து பேச்சு நடத்தியதன் பயனாக ஒரு இணக்கப்பாட்டுக்கு வந்துள்ளனர். இதன்படி முதல்வர், பிரதி முதல்வர் பதவிகளை ஈ.பி.டி.பி.யினர் வகிப்பதெனவும் ஒரு வருடத்தின் பின் பிரதி மேயர் பதவியை அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸில் வெற்றி பெற்ற பிரேரிக்கப்பட்ட பிரதிநிதிக்கு வழங்குவதற்கும் இணக்கம் காணப்பட்டது.

இதனடிப்படையில் 1990 ஆம் ஆண்டு வெளியேற்றப்பட்ட யாழ். முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்தை விரைவுபடுத்தி அவர்களுக்கு தேவையான உதவிகளை இரு தரப்பும் இணைந்து மேற்கொள்வதற்கும் இணக்கம் காணப்பட்டது. நேற்றைய ஒப்பந்த கைச்சாத்து நிகழ்வில் அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் ஈ. பி. டி. பி. கட்சியைச் சேர்ந்த யாழ். மாநகர சபைக்கு தெரிவான வேட்பாளர்கள் உட்பட முக்கியஸ்தர்களும் கிழக்கு மாகாண அமைச்சர் எம். எல். ஏ. எம். ஹிஸ்புல்லாவும் கலந்து கொண்டனர்.

ஆசிய அபிவிருத்தி வங்கியின் உதவி

bandula_gunawardena222.jpgகிழக்கிலும் வடமத்திய பிரதேசத்திலும் வீதி அபிவிருத்தி நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக ஆசிய அபிவிருத்தி வங்கியின் உதவியைப் பெற்றுக்கொள்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியது.

இதற்கான பிரேரனையை நிதி,  திட்டமிடல் பதில் அமைச்சர் அமைச்சர் பந்துல குணவர்தன முன்வைத்திருந்தார். இத்திட்டத்தின்படி 70 மில்லியன் அமெரிக்க டொலர் ஆசிய அபிவிருத்தியிடமிருந்து கடனாகப் பெற்றுக்கொள்ளப்படவுள்ளது.

இந்த நிதியின் மூலம் கிழக்கில் 150 கிலோ மீற்றர் தூரமான வீதியும் வடமத்திய பிரதேசத்தில் 220 கிலோ மீற்றர் தூரமான வீதியும் புனரமைக்கப்படவுள்ளது. இப்பிரதேசங்களை உள்ளடக்கிய பாலங்கள் மற்றும் மதகுகள் என்பவையும் மறுசீரமைக்கப்படவுள்ளன.

ரணிலின் கோரிக்கை வேடிக்கையானது – அமைச்சரவைப் பேச்சாளர் கருத்து

anurapriyadarsanayapa.jpgஐக்கிய தேசியக் கட்சி ஆட்சிக்காலத்தின்போது விசேட சுற்று நிருபம் மூலம் அரச நியமனங்கள் அனைத்தையும் மறு அறிவித்தல் வரும்வரை உடன் நிறுத்திய எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க, அரச ஊழியர்களின் சம்பளத்தைக் கூட்டுமாறு இன்று கூக்குரலிடுவது வேடிக்கையானது என தகவல் ஊடகத்துறை அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாபா கேள்வி எழுப்பினார்.

அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற  அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அமைச்சர் இவ்வாறு கூறினார். அரச ஊழியர்களின் சம்பளத்தைக் கூட்டாவிட்டால் கடும் நடவடிக்கை எடுப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க தேசிய ஊழியர் சங்கக் கூட்டத்தில் உரையாற்றியபோது கூறியதைச் சுட்டிகாட்டியே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்.

ஐ.தே.க. ஆட்சிக் காலத்தின்போது 7 இலட்சமாக இருந்த அரச ஊழியர்களின் எண்ணிக்கையை  வரவுசெலவுத் திட்டத்தின் மூலம் 3 இலட்சத்தால் குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. புதிய நியமனங்களுக்கான ஓய்வூதியங்கள் நிறுத்தப்பட்டன. தொழில் கேட்டுப் போராடிய பட்டதாரிகள் தாக்கப்பட்டனர். கூட்டுத்தாபனங்களில் இருந்தும் பலர் நீக்கப்பட்டார்கள்.

எனினும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையிலான அரசாங்கம் தொழிலாளர்களின் நலனுக்காக பல ஆக்கபூர்வமான திட்டங்களை அமுல்படுத்தியுள்ளது. தற்போது அரச ஊழியர்களின் எண்ணிக்கை 11 முதல் 11.5 இலட்சமாக அதிகரித்துள்ளது. 45 ஆயிரம் பட்டதாரிகளுக்கு தொழில்வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. வாழ்க்கைச் செலவுக் கொடுப்பனவாக ஆயிரம் ரூபா வழங்கப்பட்டு வருகிறது. இதேவேளை,  இதுவரை அரச ஊழியர்களுக்கு 40 வீத சம்பள அதிகரிப்பும் வழங்கியுள்ளது.

இவ்வாறான நிலையில் அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிக்க வேண்டுமென எதிர்க்கட்சித் தலைவரால் எவ்வாறு கோர முடியும்? பதவியில் இருக்கும்போது இவைகள் எவற்றையும் பற்றி கவனம் செலுத்தாதவர்கள் பதவிக்கு வருவதற்காக போலியாக குரல் கொடுப்பதை நாம் எவ்வாறு ஏற்றுக்கொள்ள முடியும்? என்றும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.

புலிகள் பொது மக்களை இலக்கு வைத்தனர்! ஜனநாயக – மனித உரிமை விதிகளை திருப்திப்படுத்தவில்லை!! அதுவே அவர்களது முடிவுக்குக் காரணம்!!! – ஆர் சம்பந்தன்

TNA Leader R Sampanthan”தமிழீழ விடுதலைப் புலிகளின் தியாகங்களை மதிக்கின்றேன் ஆனால் அவர்கள் பொது மக்களை இலக்கு வைத்ததும் இந்தியாவினதும் சர்வதேசத்தினதும் ஜனநாயக – மனித உரிமை விதிகளை திருப்திப்படுத்தாததுமே அவர்களது இந்த முடிவுக்குக் காரணம்” என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் ஆர் சம்பந்தன் லண்டனில் தெரிவித்தார். லண்டனுக்கு சற்று வெளியே கிங்ஸ்ரணில் அமைந்துள்ள தமிழர் தகவல் நடுவத்தில் இடம்பெற்ற சந்திப்பிலேயே அவர் இக்கருத்தை வெளியிட்டார். தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவானவர்களும் அவர்கள் மீது கடுமையான விமர்சனம் உடையவர்களும் கலந்து கொண்ட சந்திப்பு ஓகஸ்ட் 21ல் இடம்பெற்றது.

தமிழீழ விடுதலைப் புலிகளுடனான தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கூட்டுப் பற்றி சில கேள்விகள் எழுப்பப்பட்டது. அவற்றுக்குப் பதிலளித்த ஆர் சம்பந்தன் ”எங்களுக்கு தனித்தவம் எதுவும் இல்லை என்பதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது. ஒரு காலத்தில் வன்முறை வெடிக்க வேண்டிய தேவை இருந்தது. ஆனால் நாங்கள் வன்முறையை ஏற்றுக் கொள்ளவில்லை. எனக்கு பிரபாகரனை 30 வருடமாகத் தெரியும். நாங்கள் இந்தியாவில் இருக்கிற போது நான் அமிர்தலிங்கம் யோகேஸ்வரன் எல்லோரும் இயக்கத் தலைவர்களைச் சந்தித்தோம். அவர்களுடைய கருத்தை அறிவதற்கு. நாங்கள் புலிகளுடன் சேர்ந்து இருந்தது குறிப்பிட்ட சூழலில். புலிகள் தடை நீக்கப்பட்டபின் சமாதானத்தை ஏற்படுத்துவதற்காகத்தான் சேர்ந்தோம். இன்றைக்கு நான் இங்கு சொன்ன விசயங்களை நான் கிளிநொச்சியில் புலிகளிடமும் சொல்லி இருக்கிறன். கிழக்கு மாகாணம் பறி போன உடன் என்னுடைய கருத்தை புலிகளுக்கு அறிவித்தனான். அவர்களும் பிழைகள் விட்டிருக்கிறார்கள். அதற்கு அரசும் காரணம்.” என்றும் அவர் தெரிவித்தார்.

TNA Leader R Sampanthan1976ல் தமிழீழப் பிரகடனத்தை மேற்கொண்டு புலிகளின் தலைவர் வே பிரபாகரன் முள்ளிவாய்க்காலில் கொல்லப்படும் வரை அந்த அரசியலுடன் தமிழர் விடுதலைக் கூட்டணி பின் தமிழ் தேசியக் கூட்டமைப்பு இரண்டறக் கலந்து இருந்தது என்று தெரிவித்த லண்டன் குரல் ஆசிரியர், தமிழ் மக்களுக்கு ஏற்பட்ட மோசமான இழப்புகளுக்கு இலங்கை அரசு மட்டுமல்ல தமிழ் தேசியக் கூட்டமைப்பும் பொறுப்புடையது எனக் குற்றம்சாட்டினார்.

அதற்குப் பதிலளித்த ஆர் சம்பந்தன் ”நான் வாக்குவாதத்திற்கு இங்கு வரவில்லை. இந்த யுத்தத்தை நிறுத்த இலங்கை அரசு எள்ளளவுகூடத் தயாராக இருக்கவில்லை. தமிழீழ விடுதலைப் புலிகளை முடிக்கும் வரை யுத்தத்தை நிப்பாட்டுவதில்லை என்பதே அவர்களுடைய நிலைப்பாடு. நாங்கள் மௌனமாக ஊமைகளாக இருக்கவில்லை. எங்களால் முடிந்தவரை செய்திருக்கின்றோம். சாத்வீகப் போராட்டம் சரிவராமல் போகவே தமிழீழத்தைக் கோரினோம். இன்று புதிய நிலைமைகள் தோன்றி உள்ளது. சர்வதேச ஆதரவுடன் அரசியல் தீர்வுக்கு முயற்சிக்கிறோம்.” எனத் தெரிவித்தார்.

நாடுகடந்த தமிழீழ அரசு பற்றி கவுன்சிலர் போல் சத்தியநேசன் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த ஆர் சம்பந்தன் ”தத்துவார்த்த ரீதியாக கதைத்துக் கொண்டிருக்க முடியாது, நடைமுறைச் சாத்தியமானது பற்றி கதைப்பதாக இருந்தால் இலங்கையில் அரசியல் தீர்வுக்கு இந்தியாவின் பாத்திரம் மிக முக்கியமானது” எனத் தெரிவித்தார். ”இந்தியா மட்டுமே எமக்கு உதவிக்கு வரமுடியும் வேறு எந்த நாடும் எமக்கு உதவிக்கு வர முடியாது’ எனவும் தெரிவித்தார்.

பிரித்தானிய தமிழ் போறம், உலகத் தமிழ் போறம், தமிழர் தகவல் நடுவத்துடன் வந்து கருத்துக்களை பகிர்ந்துகொள்ளும்படி கருத்து வெளியிட்ட ஆர் சம்பந்தன் ஆனால் தங்களுடைய கடமைப்பாடு முதன்மையானது வடக்கு கிழக்கில் வாழும் தமிழர்களுக்கானது எனத் தெரிவித்தார். 

இரு மணிநேரம் நீடித்த கலந்தரையாடலில் ஆர் சம்பந்தனது அரசியல் தலைமைத்துவம்  பற்றிய விமர்சனங்கள் முன்வைக்கப்பட்ட  போதும் அதனை மீள்பரிசீலனைக்கு உட்படுத்தும் நிலையில் அவரது பேச்சுக்கள் இருக்கவில்லை. தமிழ் அரசியலுக்கு தலைமையேற்ற அவருடைய அரசியல் வாழ்வில் நூறாயிரத்திற்கும் மேற்பட்ட தமிழ் மக்கள் உயிரிழந்துள்ளனர். இன்னமும் மேடையில் அறைந்து தனது அதே 30 வருட அரசியலைத் தொடர்கிறார் ஆர் சம்பந்தன்.