எழுத்தாளர்கள்

எழுத்தாளர்கள்

இராக் குண்டுத்தாக்குதல்களில் அமெரிக்கப் படையினர் நால்வர் பலி

இராக்கின் பல இடங்களில் இடம் பெற்றுள்ள பல சாலையோர தொடர் குண்டு வெடிப்புகளில், நான்கு அமெரிக்க இராணுவ வீரர்கள் மற்றும் எட்டு இராக்கிய போலீசார் ஆகியோர் பலியாகியுள்ளனர்.

அந்நாட்டின் வடபகுதியில் ரோந்து நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த தமது துருப்பினர் நாட்டு வெடிகுண்டுத் தாக்குதலுக்கு இலக்கான போது மூவரும், தெற்கு பாக்தாதில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் ஒருவரும் பலியாகியுள்ளதாக அமெரிக்க இராணுவம் கூறுகிறது

இதே போன்று வட இராக்கில் இடம் பெற்ற ஒரு குண்டுத் தாக்குதலில் அந்த நகரின் போலீஸ் தலைவரும் அவரது மூன்று சகாக்களும் பலியாகியயுள்ளனர்.

இந்த குண்டு வெடிப்பு கிர்குக் நகருக்கு அருகில் இடம் பெற்றுள்ளது. அந்தப் பகுதியில் இருக்கும் எண்ணெய் வளங்களை கட்டுப்படுத்தவும், அதிகாரத்தை கைப்பற்றவும் இராக்கிய குருதுகள், அரபுகள் மற்றும் துர்குமான்கள் ஆகியோர்கள் போட்டியிட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவில் விமானிகள் வேலைநிறுத்தத்தால் பயணிகள் தவிப்பு – விமான சேவைகள் ரத்து

abu-dhabi-flight.jpgஇந்தியாவின் தனியார் விமான நிறுவனமான ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் விமான ஓட்டிகளின் வேலை நிறுத்தம் காரணமாக ஆயிரக்காண பயணிகளின் பல விமான நிலையங்களில் தத்தளிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

தங்களது சகாக்கள் இருவர் தொழிற்சங்கம் ஒன்றை ஆரம்பித்த காரணத்துக்காக கடந்த மாதம் பணி நீக்கம் செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அந்நிறுவனத்தின் ஆயிரம் விமான ஓட்டிகளில் அறுநூறுக்கும் அதிகமானவர்கள் உடல் நலக் குறைவு என்று கூறி பணிக்கு வரவில்லை.

இந்தியாவின் மிகப்பெரும் விமான நிறுவனங்களில் ஒன்றான ஜெட் ஏர்வேஸின் மூன்றில் ஒரு பங்கு அளவிலான விமானங்கள் இன்று செவ்வாய்கிழமை ரத்து செய்யப்பட்டன.

பணி நீக்கம் செய்யப்பட்ட தங்களது இரு சகாக்களும் மீண்டும் பணியில் அமர்த்தப்படும் வரையில் தங்களது வேலை நிறுத்தம் தொடரும் என்று ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் விமான ஓட்டிகள் கூறுகிறார்கள்.

இந்தியாவின் முக்கிய இடங்களுக்கும், ஐரோப்பா மற்றும் அமெரிக்கா ஆகிய இடங்களுக்கு ஜெட் ஏர்வேஸ் தனது விமான சேவையை நடத்துகிறது.

ரூ.500 சம்பள உயர்வு கிடைக்கும் வரை ஒத்துழையாமை போராட்டம் தொடரும் – அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான்

080909teawomen.jpgதோட்டத் தொழிலாளர்களுக்கு 500 ரூபா சம்பள உயர்வு கிடைக்கும் வரை ஒத்துழையாமை போராட்டத்தை தொடரப்போவதாக இ.தொ.கா. தலைவரும் அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமான் தெரிவித்தார். சம்பள உயர்வு தொடர்பாக முதலாளிமார் சம்மேளனத்திற்கும் தொழிற்சங்கக் கூட்டுக் கமிட்டிக்குமிடையே நேற்று முன்தினம் மாலை இடம்பெற்ற பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவுற்றது.

இதையடுத்து ஊடகவியலாளர்களுக்கு விளக்கும் முகமாக நேற்று அமைச்சர் தொண்டமான் ஊடகவியலாளருடனான சந்திப்பொன்றை நடத்தினார். இதன்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். தொழிற்சங்கக் கூட்டுக் கமிட்டிக்கும் முதலாளிமார் சம்மேளனத்திற்குமிடையே நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போது தோட்டத் தொழிலாளர்களின் நாள் சம்பளம் முதலாம் ஆண்டில் 330 ரூபாவாகவும், இரண்டாம் ஆண்டில் 360 ரூபாவாகவும் அதிகரித்து தருவதாக முதலாளிமார் சம்மேளனம் தெரிவித்தது.

தோட்டத் தொழிலாளர்களின் ஒருநாள் சம்ப ளம் 500 ரூபாவாக அதிகரிக்குமாறு தொழிற்சங்கக் கூட்டுக்கமிட்டி விடுத்த கோரிக்கைக்கு முதலாளிமார் சம்மேளனம் இணங்காததையடுத்து ஒத்துழையாமை போராட்டத்தை தொடரப் போவதாகவும் சாதகமான முடிவு எட்டப்படும் வரை தொழிற்சங்க நடவடிக்கை தொடரும் எனவும் அவர் தெரிவித்தார்.

கடந்த ஐந்து நாட்களுக்கு மேலாக தோட்டத் தொழிலாளர்கள் ஒத்துழையாமை போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள், தோட்ட நிர்வாக ஊழியர்கள், கணக்கப்பிள்ளை, மேற்பார்வையாளர்கள் ஆகியோரின் பணிப்புரைகளை ஏற்காமல் தாமாகவே தேயிலை உற்பத்தியில் ஈடுபட்டு வருகின்றனர்.

உற்பத்தியாகும் தேயிலையை வெளியில் கொண்டு செல்ல அனுமதிக்காது தோட்டக் கம்பனிகளுக்கு அழுத்தம் கொடுப்பதற்கான நடவடிக்கைகளில் தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

சாதாரண அரச ஊழியர்கள் மாதமொன்றுக்கு 11,500 ரூபா முதல் 13,000 ரூபா வரை சம்பளமாக பெறுகின்றனர். நாட்டின் பொருளாதாரத்தின் வெளிநாட்டு வருமானத்தை தேடித்தரும் தோட்டத் தொழிலாளர்களுக்கு நியாயமான சம்பள உயர்வு வழங்கப்பட வேண்டும் என்பதே எமது கோரிக்கையாகும்.

நான்கு இலட்சத்திற்கு மேற்பட்ட தோட்டத் தொழிலாளர்களின் வாழ்வாதார பிரச்சினைக்கு தீர்வை காணும் முகமாக தொழிற்சங்கக் கூட்டுக்கமிட்டி தொடர்ந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறது.

தொழிலாளர்களுக்கு பாதிப்பேற்படாத வகையில் புதிய முறையிலான ஒத்துழையாமை போராட்டத்தின் மூலம் தொழிலாளர்களின் சம்பளத்தை பெற்றுக் கொடுப்பதற்கு இதர சிறிய தொழிற்சங்கங்களும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டுமெனவும் அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் கேட்டுக் கொண்டார். நற்று மாலை நடைபெற்ற இந்த பத்திரிகையாளர் சந்திப்பில் பிரதியமைச்சர்களான முத்துசிவலிங்கம், ஜெகதீஸ்வரன், இரா. யோகராஜன், கே.வேலாயுதம், எஸ்.இராமநாதன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

நாள்தோறும் 12 பேர் தற்கொலை செய்வதாக ஸ்ரீலங்கா சுமித்ரயோ தகவல்

rope-0000.jpgஇலங் கையில் நாள்தோறும் 12 பேர் தற்கொலை செய்து கொள்வதாக ஸ்ரீலங்கா சுமித்ரயோ என்ற அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.  மேலும் நாள் தோறும் சுமார் 120 பேர் தற்கொலை முயற்சிகளை மேற்கொள்வதாகவும் பல்வேறு மன உலைச்சல்களினால் பாதிக்கப்படுவதாகவும் அது தெரிவிக்கின்றது.

கடந்த காலங்களைவிட தற்போது, தற்கொலை செய்து கொள்வோரின் எண்ணிக்கையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ள போதிலும் பெண்கள் அதிகமாக தற்கொலை முயற்சிகளில் ஈடுபடுவதாகக் குறிப்பிடப்படுகிறது. எவ்வாறெனினும் தற்கொலை செய்து கொள்வதில் அதிகமாக ஆண்களே முன்னிற்பதாகவும் அந்த அமைப்பு மேலும் குறிப்பிடுகிறது.

ஆப்கன் அதிபர் தேர்தலில் ஹமீத் கார்சாய் முன்நிலை

ஆப்கானிஸ்தானின் அதிபர் தேர்தலுக்கான வாக்கெடுப்பில், தற்போதைய அதிபர் ஹமீத் கர்சாய் அவர்கள், தற்போது 54 வீதத்துக்கும் அதிகமான வாக்குகளை பெற்றுள்ளதாக அந்த நாட்டின் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

அவருக்கு அடுத்த படியாக அதிக வாக்குகளைப் பெற்றுள்ள, அப்துல்லா அப்துல்லா அவர்கள் 28 வீதத்துக்கும் சற்று அதிகமான வாக்குகளைப் பெற்றுள்ளதாகவும் ஆணையம் தெரிவித்துள்ளது.

அதேவேளை முறைகேடுகள் குறித்த ஆதாரங்கள் காரணமாக 600 வாக்குச் சாவடிகளின் முடிவுகள் வெளியிடப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

முன்னதாக, எந்தவொரு வேட்பாளருக்கும் 95 வீதத்துக்கும் அதிகமான வாக்குகள் கிடைத்த சாவடிகளில் மீண்டும் வாக்கு எண்ணிக்கை நடத்தப்படும் என்றும் வாக்களிப்பு குறித்த பரிசோதனை நடத்தப்படும் என்றும், தேர்தல் முறையீட்டு ஆணையம் அறிவித்திருந்தது.

695 ரயில் கடவைகளை திருத்த அரசு நடவடிக்கை இந்த வருட இறுதிக்குள் பூர்த்தி – அமைச்சர் லசந்த

26parliament.jpgஇந்த வருட இறுதிக்குள் நாடளாவிய ரீதியில் உள்ள 695 பாதுகாப்பற்ற ரயில் கடவைகளையும் திருத்தி இயங்க வைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமென பயணிகள் போக்குவரத்து அமைச்சர் லசந்த அழகியவன்ன பாராளுமன்றத்தில் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று ஜே. வி. பி. எம்.பியொருவர் எழுப்பிய கேள்வியொன்றுக்குப் பதிலளிக்கை யிலேயே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

தற்போது நாட்டில் உள்ள ஐம்பது வீத பாதுகாப்பற்ற ரயில் கடவைகளின் பணிகள் தடைப்பட்டுள்ளன. இவற்றில் பணிபுரிந்தோர் தமக்கான சம்பளம் போதாது என்ற நிலையில் சுயவிருப்பத்தின் பேரில் தொழிலிலிருந்து விலகிச் சென்றுள்ளனர். இப்பிரச்சினைக்குத் தீர்வுகண்டு மீண்டும் இதே ரயில் கடவைகளை இயங்க வைப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் அமைச்சர் தெரிவித்தார்.

பாராளுமன்றம் நேற்று சபாநாயகர் டபிள்யூ. ஜே. எம். லொக்கு பண்டாரவின் தலைமையில் கூடியது. வழமையான நடவடிக்கைகளுக்குப் பின் வாய்மூல விடைக்கான வினாக்கள் வேளையில் ஜே. வி. பி. எம்.பி. லக்ஷ்மன் நிபுணஆரச்சி கேள்வியொன்றை எழுப்பினார்.

அவர் தமது கேள்வியின் போது, ரயில் பாதைகளுக்குக் குறுக்காகச் செல்லும் பல பாதைகளில் புகையிரதத்தால் ஏற்படும் விபத்துக்களைத் தடுப்பதற்கு போக்குவரத்து அமைச்சு எத்தகைய நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது என வினவினார்.

இதற்குப் பதிலளித்த அமைச்சர் சமுர்த்தி அதிகார சபையுடன் இணைந்து இதற்குரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுமெனத் தெரிவித்தார். இது தொடர்பில் சமுர்த்தி அதிகார சபையுடன் நான்கு சுற்று பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றுள்ளதாகவும் ஓரிரு தினங்களில் இறுதிப் பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளதெனவும் தெரிவித்தார்.

போதைப்பொருட்களுடன் மற்றுமொரு பாக்.பிரஜை கைது

nimal_madiwaka.jpgபோதைப் பொருட்களுடன் கட்டுநாயக்க விமான நிலையத்தின் ஊடாக நாட்டுக்குள் பிரவேசிப்பதற்கு முயற்சித்த பாகிஸ்தானைச் சேர்ந்த மற்றுமொருவரை காவற்துறையினர் கைது செய்துள்ளனர்.

மூன்று கிலோ ஆறு கிராம் போதைப்பொருட்களுடன் இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அபுதாபியில் இருந்து வருகை தந்த ஒருவரே கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக காவற்துறை ஊடகப் பேச்சாளரும், சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபருமான நிமால் மெதிவக்க விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது

சு. க. முக்கியஸ்தர் ரவூப் ஹாஜியார் காலமானார்

ஸ்ரீல. சு. கட்சியின் நீண்ட கால அங்கத்தவரும் மத்திய மாகாண சபையின் முன் னாள் உறுப்பினருமான எம். ரி. எம். ரவூப் ஹாஜியார் (58) நேற்றுக் காலமானார். இவரது ஜனாஸா வெலம்பொடை முஸ்லிம் மையவாடி யில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

சில காலம் சுகவீனமடைந்து வீட்டில் இருந்த சமயமே ரவூப் ஹாஜியார் காலமானார்.

மறைந்த மத்திய மாகாண அமைச்சர் மர்ஹும் எம். ரி.எம். அமீனின் சகோதரராவார்.

ரவூப் ஹாஜியார் கண்டி மாவட்டத்தில் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் அமைப்பாளர்களுள் ஒருவராகும். இவரது பாரியாரான ஜனாபா ஆயிஷா முனவ்வரா மத்திய மாகாண சபை உறுப்பினராகவும் சில காலம் இருந்துள்ளார்.

வெலம்பொட ஜும்மா பள்ளிவாசலின் பிரதமகர்த்தாவாகத் தொடர்ந்து 20 வருடங்கள் அவர் இறக்கும் வரையும் பணியாற்றிவந்தார்.

கதிர்காமர் கொலை வழக்கு : பிரபாகரன்,பொட்டு அம்மான் பெயர்களை நீக்குமாறு உயர் நீதிமன்றம் உத்தரவு

00000court.jpgமுன்னாள் வெளிவிவகார அமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமரின் படுகொலை வழக்கில் அதனுடன் தொடர்புடையவர்கள் எனக் கூறப்பட்ட முன்னாள் விடுதலைப்புலிகள் இயக்கத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் மற்றும் பொட்டு அம்மான் ஆகியோரின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன.

விடுதலைப்புலிகள் இயக்கத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் மற்றும் பொட்டு அம்மான் எனப்படும் சண்முகநாதன் சிவசங்கர் ஆகிய இருவரும் இறந்துள்ளமை உறுதி செய்யப்பட்டமையினால் அவர்களின் பெயரை வழக்கிலிருந்து நீக்குமாறு இன்று உயர் நீதி மன்ற நீதவான் குமுதினி விக்கிரமசிங்க உத்தரவிட்டுள்ளார்.

தடுப்பு காவல் கைதிகள் காணாமல் போனவர்கள் தொடர்பில் கொழும்பில் அடுத்த வாரம் மாநாடு – மனோ கணேசன்

mono.jpgபோர் ஓய்வுக்கு வந்துவிட்ட நிலையில் நீண்டகாலமாக தடுப்பு காவலிலே வைக்கபபட்டுள்ள கைதிகள் மற்றும் கடந்த மூன்று வருடங்களிலே கடத்தப்பட்டு காணாமல் போனவர்கள் ஆகிய இரண்டு பிரிவினர் தொடர்பில் உரிய தீர்வுகளை காணவேண்டிய வேளை வந்துள்ளது.

இந்த இரண்டு தரப்பினரின் பிரச்சினைகள் சம்பந்தமாக எதிர்வரும் செப்டம்பர் 16ஆம் திகதி புதன்கிழமை காணாமல் போனவர்கள் மற்றும் தடுப்பு காவல் கைதிகள் ஆகியோரது குடும்பத்தவர்களை அழைத்து கொழும்பிலே ஒரு மாநாட்டை நடத்துவதற்கு மக்கள் கண்காணிப்புக்குழு தீர்மானித்துள்ளதாக குழுவின் தலைவர் சிறிதுங்க ஜயசூரியவும், ஏற்பாட்டாளர் மனோகணேசனும் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் மேலும் தெரிவித்துள்ளதாவது.

கடந்த 25 ஆண்டுகளாக நடைபெற்று வந்த போர் முடிவுக்கு வந்துவிட்டதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. இந்நிலையில் வன்முறை நடவடிக்கையில் ஈடுபட்ட பல்லாயிரக்கணக்கான போராளிகள் கைது செய்யப்பட்டு அவர்களுக்கு புனருத்தாபன பயிற்சி வழங்கப்படுகின்றது. அதேபோல் வடக்கில் சுமார் மூன்று இலட்சம் தமிழ் மக்கள் அகதி முகாம்களில் தடுத்து வைக்கப்பட்ட நிலையில் அவர்களது மீள் குடியேற்றம் இன்று முதன்மை பிரச்சினையாக கருதப்படுகின்றது.

இந்நிலையில் இதே காரணங்களுக்காக கைது செய்யப்பட்டு அல்லது கடத்தப்பட்ட நிலையில் தடுப்புகாவலில் வைக்கப்பட்டிருக்கும் கைதிகளினதும், காணாமல் போனவர்களினதும் பிரச்சினைகளை நமது சமூகம் மறந்து விட முடியாது. வெளியிலே வாழ்ந்து கொண்டிருக்கும் மக்களின் பிரச்சினைகளுக்கு வழங்கப்படும் அதே முக்கியத்துவம் கைதிகளுக்கும், காணாமல் போனவர்களுக்கும் வழங்கப்பட வேண்டும்.