எழுத்தாளர்கள்

எழுத்தாளர்கள்

யூனிஸ்கானின் இராஜினாமா நிராகரிப்பு – பாகிஸ்தான் கிரிக்கெட் சபை

141009younuskhan226.jpg2011 ஆம் ஆண்டு உலக கோப்பை கிரிக்கெட் போட்டி வரை யூனிஸ்கான் கப்டனாக நீடிப்பார். அவரது இராஜினாமா நிராகரிக்கப்பட்டுள்ளது என்று பாகிஸ்தான் கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.

யூனிஸ்கான் இராஜினாமா விவகாரம்

சமீபத்தில் தென்னாபிரிக்காவில் நடந்த சம்பியன்ஸ் கோப்பை ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் அரையிறுதியில் பாகிஸ்தான் அணி, நியூசிலாந்திடம் தோல்வி கண்டது. இந்த ஆட்டத்தில் சூதாட்டம் நடந்து இருப்பதாக பாகிஸ்தான் அணி மீது பரபரப்பான குற்றச்சாட்டு எழுந்தது.

சூதாட்ட குற்றச்சாட்டு தொடர்பாக பாகிஸ்தான் சட்டசபை கமிட்டி யூனிஸ்கானிடம் விசாரணை நடத்தியது. இதனால் ஆத்திரம் அடைந்த யூனிஸ்கான் கப்டன் பதவியை இராஜினாமா செய்வதாக கடிதம் அளித்தார். அவரை பாகிஸ்தான் கிரிக்கெட் சபை தலைவர் இஜாஸ் பட் இராஜினாமா முடிவை கைவிடும்படி வற்புறுத்தினார்.

இதற்கிடையில் பாகிஸ்தான் கிரிக்கெட் சபை யூனிஸ்கானிடம் நடத்திய பேச்சுவார்த்தையில், அவர் அணித் தேர்வு மற்றும் கப்டன் பதவிக் காலம் குறித்து சில நிபந்தனைகளை விதித்ததாக செய்திகள் வெளியாயின.

இந்த நிலையில் பாகிஸ்தான் கிரிக்கெட் சபை செயற்குழு கூட்டம் நேற்று முன்தினம் நடந்தது. கூட்டம் முடிந்த பின்னர் பாகிஸ்தான் கிரிக்கெட் சபை தலைவர் இஜாஸ் பட் அளித்த பேட்டியில் கூறியதாவது:- யூனிஸ்கான் இராஜினாமா ஏற்றுக் கெள்ளப்படவில்லை. அவரை கப்டன் பதவியில் இருந்து நீக்குவதில் எந்த நியாயமும் இல்லை.

அவரது எதிர்ப்பு நடவடிக்கையை நான் உணர்கிறேன். நான் அவரது நிலையில் இருந்து இருந்தால் அதனைத் தான் செய்து இருப்பேன். இந்த ஆண்டு ஜனவரி மாத்தில் யூனிஸ்கான் கப்டனாக நியமனம் செய்யப்பட்டார். அவரது பதவிக் காலம் குறித்து எதுவும் குறிப்பிடவில்லை. ஆனால் சில சமயங்களில் கப்டன் பதவிக்கு உத்தரவாதம் தேவைப்படுகிறது.

யூனிஸ்கான் தொடர்ந்து உடல் தகுதியுடன் இருந்தால் 2011 ஆம் ஆண்டு உலக கோப்பை போட்டி வரை பாகிஸ்தான் அணி கப்டனாக நீடிப்பார். அவரது செயல்பாடுகள் சிறப்பாக இருக்கின்றன. அவர் உடல் தகுதியுடன் இருக்கிறார்.

20 ஓவர் உலக கோப்பையை வென்றுள்ளார். யூனிஸ்கான் தேர்வாளர்க ளால் தேர்வு செய்யப்படும் பட்சத்தில் அவர் தான் கப்டன் என்பது எங்களது முடிவாகும்.

அவர் கப்டன் பதவியை மீண்டும் ஏற்றுக்கொள்ள சம்மதித்துள்ளார்.

யாழ். குடாவைச் சேர்ந்த 500 பேர் பொலிஸ் சேவையில் – பயிற்சிகளை முடித்துக் கொண்ட பொலிஸ் அதிகாரிகளுக்கு சான்றிதழ்கள்

யாழ். குடாநாட்டைச் சேர்ந்த 500 பேர் பொலிஸ் சேவையில் கடமையாற்றுதற்கென தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் மா அதிபர் ஜயந்த விக்ரமரத்ன தெரிவித்தார். வழக்குகளை நெறிப்படுத்துதல் தொடர்பாக பயிற்சிகளை முடித்துக் கொண்ட 41 பொலிஸ் அதிகாரிகளுக்கு சான்றிதழ்கள் வழங்கும் வைபவம் நேற்று கொழும்பிலுள்ள பொலிஸ் தலைமையகத்தில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றும் போதே பொலிஸ் மா அதிபர் ஜயந்த விக்ரமரத்ன மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்து கூறுகையில். ஏ-9 வீதியின் ஊடாக சென்று யாழ். குடா நாட்டைச் சேர்ந்தவர்களை பொலிஸில் இணைத்துக் கொள்வதற்கான தேர்வு நடத்தப்பட்டமை இதுவே முதற் தடவையாகும்.

கிழக்கை போன்று வடக்கிலுள்ள மக்களும் தமது சொந்த மொழியைப் பயன்படுத்தி பொலிஸாரிடமிருந்து சேவைகளை உரிய முறையில் பெற்றுக் கொள்ள இது வழிவகுக்கும்.  வடக்கிற்கென 12 பொலிஸ் நிலையங்கள் நிறுவப்படவுள்ளதுடன் அவற்றில் 8 பொலிஸ் நிலையங்கள் திறந்து வைக்கப்பட்டுள்ளன.

கல்லடியில் தமிழ் மொழி பயிற்சிக்கென பொலிஸ் பயிற்சி கல்லூரி உருவாக்கப்பட்டுள்ளது போன்று வடக்கிலும் பயிற்சி கல்லூரி ஒன்று அமைக்கப்படும்;.

இந்த நிகழ்வில் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் இளங்ககோன், பிரதிப் பொலிஸ் மா அதிபர்களான அசோக விஜேதிலக்க, லக்கி பீரிஸ், அநுர சேனநாயக்க, பிரசன்ன நாணயக்கார உட்பட உயர் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

யாழ். பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு அமைச்சர்கள் நியமனம் – மீள்குடியேற்றத்தை துரிதப்படுத்த நடவடிக்கை

யாழ்ப்பாணத்தில் மீள்குடியேற்ற நடவடிக்கைகளைக் கவனிக்கவென ஒவ்வொரு பிரதேச செயலாளர் பிரிவுக்கும் ஒவ்வொரு அமைச்சர் வீதம் நியமிக்கப்பட்டுள்ளனர். அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இதற்குத் தலைமை தாங்குவார். யாழ். குடாநாட்டில் மீள்குடியேற்ற நடவடிக்கைகளைத் துரிதப்படுத்துவதற்கென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பணிப்புரைக்கமைய இந்த நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன.

இது தொடர்பாக நேற்றுக்காலை கச்சேரியில் மாநாடொன்று நடந்தது. அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் நடந்த இந்தக் கூட்டத்தில்,  கொழும்பிலிருந்து வருகைதந்த எட்டு அமைச்சர்கள் கலந்து கொண்டனர். அமைச்சர்கள் மஹிந்தானந்த அலுத்கமகே, ரோஹித அபேகுணவர்த்தன,  பிரதியமைச்சர்கள் வடிவேல் சுரேஷ், ஹஸைன் பைலா,  மஹிந்த அமரவீர,  பிரேமலால் ஜயசேகர உட்பட ஏராளமான அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

ஆளுநர் ஜீ. ஏ. சந்திரசிறியும் இதில் பங்குபற்றினார். மீள்குடியேற்ற நடவடிக்கைகளை கவனிக்க வாரா வாரம் கூடி நடவடிக்கைகளை எடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதேநேரம் நேற்று யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்த மேற்படி அமைச்சர்கள் அல்லைப்பிட்டி மீள்குடியேற்ற நடவடிக்கைகளைப் பார்வையிட்டனர். அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இவர்களை அழைத்துச் சென்றிருந்தார்.

வடக்கில் 12095 குடும்பங்களைச் சேர்ந்த 41,685 பேர் நாளை மறுதினம் (22) முதல் மீள்குடியேற்றம்

260909srilanka.jpgவன்னி யிலிருந்து இடம் பெயர்ந்து வவுனியாவிலுள்ள நிவாரணக் கிராமங்களிலும், நலன்புரி நிலையங்களிலும் தங்கி இருக்கும் 12 ஆயிரத்து 95 குடும்பங்களைச் சேர்ந்த 41 ஆயிரத்து 685 பேர் அவர்களது சொந்த வாழிடங்களில் நாளை மறுதினம் மீளக் குடியமர்த்தப் படவுள்ளனர்.  வடக்கின் வசந்தம் 180 நாள் வேலைத் திட்டத்தின் கீழ் இவர்கள் சொந்த இடங்களில் மீளக் குடியமர்த்தப்படுகின்றனர்.

கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார் மற்றும் வவுனியா ஆகிய நான்கு மாவட்டங்களிலுமுள்ள பத்து பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட 118 கிராம சேவகர் பிரிவுகளில் இம் மக்கள் மீளக் குடியமர்த்தப்படுவதாக மீள் குடியேற்றம் மற்றும் அனர்த்த, நிவாரண சேவைகள் அமைச்சு நேற்றுத் தெரிவித்தது.

இத் திட்டத்தின் கீழ் கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள கரச்சி மற்றும் பூநகரி பிரதேச செயலகப் பிரிவுகளில் இருக்கும் ஐந்து கிராம சேவகர் பிரிவுகளில் 2453 குடும்பங்களைச் சேர்ந்த 10017 பேர் மீளக் குடியமர்த்தப்படுவர் என்று முல்லைத்தீவு மாவட்ட செயலாளரும், கிளிநொச்சி மாவட்ட பதில் செயலாளருமான இமெல்டா சுகுமார் தெரிவித்தார்.

முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள ஒட்டி சுட்டான், மாந்தை கிழக்கு, துணுக்காய் ஆகிய மூன்று பிரதேச செயலகப் பிரிவுகளிலும் 30 கிராம சேவகர் பிரிவுகளில் 4415 குடும்பங்களைச் சேர்ந்த 16394 பேர் மீளக்குடியமர்த்தப்படவுள்ளதாகவும் அவர் கூறினார்.

இதேவேளை வவுனியா மாவட்டத்தி லுள்ள வவுனியா, வெங்கலசெட்டிகுளம், வவுனியா தெற்கு ஆகிய மூன்று பிரதேச செயலகப் பிரிவுகளிலும் 2583 குடும்பங்களைச் சேர்ந்த 8643 பேரும், மன்னார் மாவட்டத்திலுள்ள மன்னார் மேற்கு, மன்னார் நகர் ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளில் 2644 குடும்பங்களைச் சேர்ந்த 6631 பேரும் மீளக்குடியமர்த்தப்படவிருக்கின்றனர்.

இம் மக்கள் மீளக் குடியமர்த்தப்பட விருக்கும் 118 கிராம சேவகர் பிரிவுகளிலும் கண்ணி வெடிகள் முழுமையாக அப்புறப்படுத்தப்பட்டு பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளன. இக் கிராமங்களின் உட்கட்டமைப்பு வசதிகள் துரிதமாகப் புனரமைக்கப்பட்டுள்ளன என்று அமைச்சின் அதிகாரியொருவர் கூறினார்.

வடக்கின் வசந்தம் 180 நாள் வேலைத் திட்டத்தின் கீழ் இடம் பெயர்ந்துள்ள மக்களை அவர்களது சொந்த இடங்களில் மீளக் குடியமர்த்துவதற்கு அரசாங்கம் துரித நடவடிக்கை எடுத்துள்ளது என்றும் அவ்வதிகாரி கூறினார்.

சொந்த வாழிடங்களில் மீளக் குடியமர்த்தப்படும் இம் மக்களுக்கு ஒரு வாரத்திற்கு சமைத்த உணவு நிவாரணமும், அதனைத் தொடர்ந்துவரும் ஆறு மாத காலத்திற்கு உலர் உணவு நிவாரணமும், வாழ்வாதார உதவிகளும் வழங்கப்படும் என்று அரசாங்க அதிபர்கள் கூறினர்.

‘புதினம்’ இணையத்தளம் மூடல்.

191009puthinam_com.jpgவிடுதலைப் புலிகள் ஆதரவு முக்கிய இணையத்தளமான ‘புதினம்’ திடீரென மூடப்பட்டுள்ளது. தனிப்பட்ட காரணங்களுக்காக இனிமேல் இவ்விணையத்தளம் இயங்காது என்ற செய்தியை (This is to advise due to personal reasons this website will not be functioning anymore)  புதினம் வெளியிட்டுள்ளது.

புதினம் இணையத்தளத்தின் திடீர் மூடல் உலகெங்கும் உள்ள தமிழர்கள் மத்தியில், குறிப்பாக இலங்கைத் தமிழர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதாக அறிய முடிகிறது. விடுதலை புலிகள் சார்பான புதினம் இணையத்தளம் முல்லைத்தீவில் இறுதிக்கட்ட மோதல்களில் போது போர்க்கள நிலவரத்தை உடனுக்குடன் தரவேற்றம் செய்தது.

வெளிநாட்டு புலிகளுக்குள் தொடரும் சொத்து பிரச்சினைகளின் எதிரொலியாகவே இந்த இணையத்தளம் மூடப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது

புலிகளுடனான தொடர்பைக் கண்டறிய கைதான அமெரிக்க செல்வந்தரிடம் விசாரணை!

3333raj-rajaratnam.jpgஅமெரிக் காவில் மோசடி வர்த்தகத்தில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டி கைது செய்யப்பட்ட பாரிய நிதி நிறுவன உரிமையாளர் ராஜ்ராஜரத்னம் என்பவருக்கு புலிகளுடன் தொடர்பு உண்டா என்பதைக் கண்டறிய அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள். கெலியோன் கு×ப் எனப்படும் நிதி நிறுவன ஸ்தாபகரான ராஜ் ராஜரத்னம்  மேரிலாந்திலிருந்து இயங்கும் தரும நிறுவனம் ஒன்றுக்கு அமெரிக்காவிலுள்ள செல்வந்தர்களான இலங்கையர்கள் பலர் அன்பளிப்பு செய்யும் பணம்; புலிகளுக்கு போய் சேர்வதற்கு ஆதாரமான பல ஆவணங்கள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாக விசாரணையாளர்களை மேற்கோள்காட்டி ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

முன்னொரு போதும் இல்லாத அளவிலான இந்த பாரிய நிதி மோசடி தொடர்பாக 52 வயதான ராஜரத்னம் உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக அமெரிக்க மத்திய புலன் விசாரணை பணியகம் தெரிவித்ததாகவும் குறிப்பிட்டுள்ளது.. ராஜரத்னமும் அவரது சகாக்களும் தகாத வழியில் 20 மில்லியன் டொலரை சம்பாதித்தனர் என்று வழக்குத் தொடுநர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். ராஜரத்தினத்தின் நியூயோர்க் கேலியொன் நிதி நிறுவனம் 37 பில்லியன் டொலர் முதலீட்டை கொண்டுள்ளது. ராஜரத்னத்தின் சட்டத்தரணி ஜிம் வோல்டன் தமது கட்சிக்காரர் நிரபராதி என்றும் அவருக்கெதிரான குற்றச்சாட்டுக்களை அவர் எதிர்த்து வாதாடுவார் என்றும் தெரிவித்துள்ளார்.

இந்தோனேஷியாவில் கைதான இலங்கையர்களை நாட்டுக்குத் திருப்பி அழைத்துவர அரசு நடவடிக்கை

14indonesia.jpgஇந்தோனே ஷியாவில் கைதான 260 இலங்கையர்களையும் விடுதலை செய்து இலங்கைக்கு திருப்பி அழைத்து வருவதற்கான முயற்சிகளை வெளிவிவகார அமைச்சு மேற் கொண்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சு நேற்று கூறியது. இவர்கள் குறித்து சர்வதேச புலம் பெயர் அமைப்புடன் பேச்சு நடத்தி வருவதாகவும் குறித்த இலங்கை யர்கள் தொடர்ந்து உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருவ தாகவும் வெளிவிவகார அமைச்சு கூறியது.

அவுஸ்திரேலியாவுக்கு சட்ட விரோதமாக செல்ல முற்பட்ட இவர்கள் கடந்த 11 ஆம் திகதி இந்தோனேஷிய கடலில் வைத்து கைது செய்யப்பட்டனர். இவர்கள் தமிழில் உரையாற்றிய போதும் கைதான 260 பேரும் இலங்கையர்கள் என இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை என வெளிவிவகார அமைச்சு உயரதிகாரி ஒருவர் கூறினார்.

இந்தோனேஷியாவிலுள்ள இலங்கை தூதரகத்தினூடாக இவர்கள் பற்றிய விபரங்களை திரட்டவும் இவர்களை விடுவிக்கவும் தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை கனடாவுக்கு சட்ட விரோதமாக செல்ல முற்பட்ட சுமார் 76 வெளிநாட்டவர்கள் பசுபிக் கடலில் வைத்து நேற்று முன்தினம் (17) கைதாகியுள்ளனர்.  இவர்கள் இலங்கையர்களாக இருக்கலாம் என நம்பப்படுவதாக அறிவிக்கப்படுகிறது. இவர்கள் குறித்த தகவல்களை திரட்டவும் வெளிவிவகார அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.

பயங்கரவாதம் தோற்கடிக்கப்பட்ட போதும் பிரிவினைவாதம் இன்னுமுள்ளது. அரசு அதனையும் எதிர்கொள்ள தயார் – ஜனாதிபதி

290909mahinda.jpgபயங் கரவாதம் தோற்கடிக்கப்பட்ட போதும் பிரிவினை வாதம் இன்னும் தோற்கடிக்கப்படவில்லை. அதனையும் எதிர்கொள்ள அரசாங்கம் தயாராகவே உள்ளதென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். நாட்டு மக்களின் மனதை அறிந்து செயற்படுபவரே மக்கள் தலைவராக இருக்க முடியும். நாடு பற்றிய எமது தெளிவும் முக்கியத்துவமுமே தென் மாகாண தேர்தலில் அமோக வெற்றிபெற காரணமாயமைந்தது எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

பயங்கரவாதத்திடமிருந்து நாட்டை மீட்டெடுத்த படை வீரர்களைக் கெளரவிக்கும் மத்திய மாகாண நிகழ்வு நேற்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் மாத்தளை அலுவிஹாரை புனித பிரதேசத்தில் நடைபெற்றது.    இந்நிகழ்வில் ஜனாதிபதி மேலும் தெரிவித்ததாவது,

இம்மாத்தளை மாவட்டம் பல வரலாற்றுச் சிறப்புக்களைக் கொண்ட மாவட்டமாகும். இராவணன் சீதையை மறைத்து வைத்தது மாத்தளை மாவட்டத்தின் லக்கலையில்தான். அதே போன்று குவேனியின் பெற்றோர் வாழ்ந்ததும் இம்மாவட்டத்தில்தான் என்பதை வரலாறுகள் தெரிவிக்கின்றன. 1818 ஆம் ஆண்டு கால கட்டத்தில் கெப்பிட்டிப்பொல போராட்டம் போலவே பயங்கரவாத ஒழிப்பிலும் மாத்தளை மாவட்டம் சிறந்த பங்களிப்புக்களை வழங்கியுள்ளது. இந்த வகையில் பயங்கரவாத யுத்தத்தில் உயிரிழந்த ஆயிரத்துக்கு மேற்பட்ட படை வீரர்கள் இங்குள்ளவர்களே.

இந்த மாவட்டத்தில் நடைபெறும் படைவீரர் கெளரவிப்பு விழாவிற்கு நான் தென் மாகாண மக்களின் தேர்தல் வெற்றியைப் பரிசாக எடுத்து வந்துள்ளேன். ஜனாதிபதித் தேர்தலில் நாம் மூன்று இலட்சம் மேலதிக வாக்குகளையே அம்மாகாணத்தில் பெற்றோம். எனினும் இத்தேர்தலில் அம்மக்கள் ஐந்து இலட்சம் வாக்குகளை வழங்கி மூன்றில் இரண்டு பலத்தை எமக்குத் தந்துள்ளனர். இதில் குறிப்பிடத்தக்க மற்றுமொரு விடயம் என்னவென்றால், அரசாங்கத்தின் சார்பில் போட்டியிட்ட அத்தனை படை வீரர்களும் வெற்றிபெற்றுள்ளதுடன் எதிர்க்கட்சியின் சார்பில் போட்டியிட்ட படை வீரர்கள் தோல்வியுற்றதுதான்.

 நாடு பற்றிய தெளிவான நோக்கும் முக்கியத்துவமுமே இந்த வெற்றிக்குக் காரணமாகியுள்ளது. நாடு முழுவதிலும் தேர்தல்களில் 25 இலட்சம் வாக்குகளை நாம் மேலதிகமாகப் பெற்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. படை வீரர்களின் அர்ப்பணிப்பினாலேயே நாம் யுத்தத்தில் வெற்றிபெற முடிந்துள்ளது. அவர்களின் சேவை அளப்பரியவை.

இதற்கு சர்வதேச உதவி, ஊடகங்கள், அரச நிறுவனங்கள், தொழிற்சங்கங்கள் உட்பட நாட்டு மக்களின் பூரண பங்களிப்பும் கிட்டியதை நாம் குறிப்பிட வேண்டும். இது ஒருவருக்கு கிடைத்த வெற்றியல்ல; முழு நாட்டிற்கும் கிடைத்த வெற்றியாகும். பயங்கரவாதி என புலிகளை அழைக்க அஞ்சிய காலமொன்று இந்த நாட்டில் இருந்தது. புலிகளை கேர்ணல், கெப்டன் என நமது தலைவர்களும் வர்ணித்த காலம் இருந்தது. அவர்களின் மாவீரர் தினத்தை நம்மவரும் மாவீரர் தினமென்றே குறிப்பிட்டனர். அதேவேளை எமது படை வீரர்களை வீரர்கள் என குறிப்பிடாது பாதுகாப்புப் படையினர் என்றே குறிப்பிட்டனர். தேர்தல்கள் கூட புலிகளுக்குச் சார்பாகவே நடத்தப்பட்டன.

நான் பதவியேற்றதும் பாதுகாப்புச் செயலாளரை நியமித்தேன். அத்துடன் பொறுப்புகளை துணிவுடன் ஏற்கும் தலைவர்களை நியமித்தேன். ஐக்கிய இலங்கையை நோக்காகக் கொண்டே எமது செயற்பாடுகள் ஆரம்பித்தன. எனினும் எவரும் அதனை நம்பத் தயாராக இருக்கவில்லை. ஆயுத பலம், குழு பலம் இல்லாமை, நாட்டைப் பயங்கரவாதத்திற்கு எழுதிக் கொடுத்தமை போன்ற செயல்களே இளைஞர்கள் படையில் சேர முன்வராமைக்கு முக்கிய காரணம். பயங்கரவாதம் ஒழிக்க முடியாதது என்ற சர்வதேச கூற்றினைப் போன்றே எமது கிராமத்து இளைஞர்களும் சிந்திக்க முற்பட்டனர்.

அவர்களில் பலர் படையிலிருந்து விலகிச் சென்றனர். இந்நிலையை மாற்றவேண்டிய அவசியம் எமக்கிருந்தது. இளைஞர்களைப் படைக்கு அழைக்கும் போது நாம் அதற்கு முன்மாதிரியாக நடந்து கொண்டோம். எனது மகனையும் நான் படைக்கு அனுப்பினேன். அத்துடன் ‘நமக்காக நாம்’ போன்ற சிறந்த வேலைத் திட்டங்களையும் ஆரம்பித்தோம்.

அரசாங்கத்தின் நோக்கம் என்ன என்பதை நாட்டு மக்கள் தெளிவாக விளங்கிக் கொண்டதாலேயே பயங்கரவாதத்துக்கு எதிரான நடவடிக்கையில் நாம் வெற்றிபெற முடிந்தது. 2005 ஆம் ஆண்டு நாம் இந்தியா சென்று பயங்கரவாதத்தின் கொடூரம் பற்றி இந்தியப் பிரதமருக்கு விளக்கினோம். உதவி கோரினோம்.

புலிகள் தாக்கினால் நாம் தாக்குவதற்காக ஆயுதம் வேண்டும் எனக் கேட்டோம். அயல் நாடுகளுடன் நாம் சுமுகமாக அணுகியே உதவிகளைப் பெற்றோம். படையினரை உச்ச அளவில் பலப்படுத்துவதை நாம் செய்தோம்.

பல சர்வதேச அழுத்தங்களுக்கு முகங்கொடுக்க நேர்ந்தது. பல உள்நாட்டு எதிர்ப்புகளுக்கும் பதில் சொல்ல நேரிட்டது. சர்வதேசத்தை எமது பக்கம் திருப்ப நாம் கடுமையாக பாடுபட வேண்டியிருந்தது. நாம் ஒரே நோக்கத்தில் இருந்து யுத்தத்தை முன்னெடுத்துள்ளோம். அவ்வாறு நாம் செயற்பட்டிருக்காவிடில் நாட்டில் பாதியை அல்ல முழு நாட்டையும் புலிகள் கைப்பற்றியிருப்பர்.

சர்வதேச அழுத்தங்களுக்கு மத்தியிலும் நாம் உலகம் காணாத வெற்றியை ஈட்டினோம். இந்த யுத்தம் தோல்வியுற்றிருந்தால் இலட்சக்கணக்கான எமது மக்கள் பலியாகியிருப்பர், முதலில் எனக்கும் எனது சகோதரர்களுக்குமே கெட்ட பெயர் வந்திருக்கும்.

சிலர் அமைதிப் படையை நாட்டுக்கு அழைக்க கோரிய போதும் நாம் எமது நாட்டை ஒரு பொஸ்னியாவாகவோ கொஸோவாவாகவோ பார்க்க விரும்பவில்லை.  இலங்கையாக பார்க்க விரும்பினோம். நாம் தீர்க்கமாகச் சிந்தித்து அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வெற்றிபெற்றோம். எனினும் எமது படை வீரர்களை சர்வதேச யுத்த நீதிமன்றத்துக்குக் போகும் அறிக்கையை நாளை செனட் சபைக்குக் கையளிக்கவுள்ளதாக அறிய முடிகிறது.

வெற்றியின் போது படையினரைப் பாராட்டாவிட்டால், அவர்களைக் காட்டிக் கொடுத்தால் எதிர்காலத்தில் நாட்டைப் பாதுகாக்க எவரும் முன்வர மாட்டார்கள்.

அவர்களுக்கு நாம் சகலதையும் வழங்குவோம். இறுதி வீரர் களத்தில் இருக்கும் போது நாம் அவர்களுடனேயே இருப்போம். பயங்கரவாதம் முடிவுற்றாலும் பிரிவினைவாதம் இன்னும் உள்ளது. பயங்கரவாதிகளின் வளங்கள் சொத்துக்கள் பெருவாரியாக உள்ளது. அவை எப்போது பாவிக்கப்படப் போகிறதென நாம் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

எதற்கும் அடிபணியாத மனப்பாங்கு படையினருக்கு அவசியம். இறுதி மூச்சுவரை நாடு, நாட்டு மக்கள் என்ற மன நிலை அவசியம். அப்போதுதான் நாட்டு மக்களின் கெளரவம் கிட்டும்.

படையினரில் 80க்கும் மேற்பட்டோர் கிராமத்தவர்களே. அவர்களின் எதிர்காலத்தை சுபீட்சமாக்கும் சகல செயற்பாடுகளையும் நாம் மேற்கொள்வோம் எனவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

கடலுக்கு அடியில் அமைச்சரவைக் கூட்டம் – மாலைதீவில் புதுமை நிகழ்ச்சி

2222maldives.jpgமாலைத்தீவு அமைச்சரவை கூட்டம், கடலுக்கு அடியில் நேற்று முன்தினம் வெற்றிகரமாக நடந்தது. உலகிலேயே கடலுக்கு அடியில் நடந்த முதல் அமைச்சரவைக் கூட்டம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
 
உலகம் வெப்பமயமாகி வருவதால் துருவப் பகுதியில் பனிமலைகள் உருகி, கடல் மட்டம் உயர்ந்து வருகிறது. இந்த நிலை நீடித்தால் வரும் 2100ஆம் ஆண்டில் மாலத்தீவு கடலில் மூழ்கிவிடும் என,  ஐ.நா., சுற்றுச்சுழல் அமைப்பு எச்சரித்திருந்தது.
 
ஏனெனில் கடல் மட்டத்தில் இருந்து நூறடிக்கும் குறைவான உயரத்தில் உள்ளது இத்தீவு .எனவே, இந்த பயங்கரத்தை தடுக்க உலக நாடுகள் ஒத்துழைக்க வேண்டும், என்பதை வற்புறுத்துவதற்காக நேற்று முன்தினம் மாலத்தீவு அமைச்சரவைக் கூட்டம் கடலுக்கு அடியில் நடந்தது.
 
தலைநகர் மாலேவில் இருந்து 35 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள கிரிபுஷி தீவில்,  ஆறு மீட்டர் ஆழத்தில் அதிபர் முகமது நஷீத்(42) தலைமையில் கடலுக்குள் அமைச்சரவைக் கூட்டம் நடந்தது.
 
அமைச்சர்கள் அனைவரும் கடலில் முத்தெடுக்கும் வீரர்களை போன்ற உடையுடன் இந்த அமைச்சரவைக் கூட்டத்தில் கலந்து கொண்டனர். 45 நிமிடம் இவர்கள் கடலுக்கு அடியில் இருந்தனர்.
 
அமைச்சரவைக் கூட்டம் 25 நிமிடங்கள் நடந்தது.”உலகம் வெப்பமடைவதால் எங்கள் நாடு கடலில் மூழ்குவதிலிருந்து காப்பாற்ற உலகத் தலைவர்கள் முன்வரவேண்டும்’ என, இந்த அமைச்சரவைக் கூட்டத்தில் தீர்மானம் இயற்றப்பட்டது.
 அமைச்சர்கள் தங்கள் கையில் இருந்த வெள்ளைப் பலகையில் எழுதி தங்கள் கருத்தை தெரிவித்துக் கொண்டனர்.கடலுக்கு அடியில் தங்கியிருப்பதற்காக,  இந்த அமைச்சர்கள் கடந்த இரண்டு மாதங்களாக கடலில் மூழ்கும் பயிற்சி பெற்றனர்.
 
மாலைத்தீவு நூற்றுக்கும் அதிகமான தீவுகளை உள்ளடக்கியது. இதில் 90 சதவீத தீவுகள் கடல் மட்டத்திலிருந்து ஒரு மீட்டர் உயரத்தில் உள்ளது.

அக்மீமன தொகுதி அமைப்பாளர் பதவியிலிருந்து முத்துஹெட்டிகம நீக்கம்.

191009nisantha_muthuhetti.jpgதென் மாகாண சபை உறுப்பினர் நிசாந்த் முத்துஹெட்டிகம, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் அக்மீமன தொகுதி அமைப்பாளர் பதவியிலிருந்து இருந்து நீக்கப்பட்டுள்ளார். இத்தகவலை ஐ.ம.சு.மு. பொதுச் செயலாளர் மைத்திரிபாலா சிறிசேன தெரிவித்தார்.

இவர் மீது மீண்டும் ஒழுக்காற்று முறைப்பாடுகள் கிடைத்ததையடுத்து இதன்மூலம் ஜனாதிபதி மகிந்த ராஐபக்ஷவின் அரசாங்கத்துக்கு அபகீர்த்தி ஏற்படும் என்ற காரணத்தால் இவரை அமைப்பாளர் பதவியிலிருந்து நீக்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

அவரின் இடத்துக்குக் காலஞ்சென்ற அமைச்சர் ரிச்சர்ட் பத்திரனவின் மகன் டாக்டர் ரமேஸ் பத்திரன நியமிக்கப்பட்டுள்ளார் என்றும் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். தேர்தல் காலத்தில் நடிகை அனார்கலியுடன் மோதல்களை ஏற்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது