எழுத்தாளர்கள்

எழுத்தாளர்கள்

யாழ். சிங்கள மகாவித்தியாலயத்தை புதிய ஆண்டில் மீண்டும் ஆரம்பிக்குமாறு யாழ்.வந்துள்ள சிங்கள மக்கள் கோரிக்கை.

யாழ்.சிங்கள மகாவித்தியாலயத்தை மீண்டும் ஆரம்பிக்குமாறு யாழ்.நாவற்குழியில் குடியேறியுள்ள சிங்கள மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தெற்கிலுள்ள பாடசாலைகளில் கல்வி பயிலும் தங்கள் பிள்ளைகளை அடுத்து வரும் புதிய ஆண்டில் யாழ்ப்பாணத்திற்கு அழைத்துவர வேண்டியுள்ளதாகவும், அதற்கு வசதி செய்யும் வகையில் யாழ்.சிங்கள மகாவித்தியாலயத்தை புதிய ஆண்டில் ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்குமாறும் அரசாங்கத்தைக் கோரியுள்ளதாக அம்மக்கள் தெரிவித்துள்ளனர்.

நாவற்குழியில் தேசிய வீடமைப்பு அதிகார சபைக்கு சொந்தமான காணியில் இதுவரை 186 சிங்களக் குடும்பங்கள் கடியேறியுள்ளன. தற்போது பெய்து வரும் மழை காரணமாக தாங்கள் குடியேறியுள்ள பகுதிகளில் வெள்ளம் தேங்கியுள்ளதாகவும், இது குறித்து தங்களுக்கு உதவிகள் வழங்குமாறு உள்ளூர் அதிகாரிகளிடம் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனவும், தங்களுக்கு மேலிட உத்தரவு கிடைக்கவில்லை என அதிகாரிகள் கூறுவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, நாவற்குழியில் குடியமர்ந்துள்ள சிங்கள மக்கள் தங்கள் குடியிருப்புக்களுக்கு முன்பாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தாபய ராஜபக்ச, அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அகியோரை வாழ்த்தும் பதாதைகளையும் தொங்கவிட்டுள்ளனர்.

நாவற்குழியில் சிங்கள மக்கள் அத்துமீறி குடியமர்ந்ததும் இப்பகுதிகளில் அதேபோல் குடியமர்ந்துள்ள தமிழ் குடும்பங்களில் சுமார் 330 குடும்பங்கள் வெள்ளப்பெருக்கு காரணமாக வெளியேறியுள்ளன. வெள்ளம் தணிந்த பின்னர் மீண்டும் அங்கு குடியமரவுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

குச்சவெளியில் நல்லிணக்க ஆணைக்குழு. 146 சாட்சியங்கள் பதிவு.

திருகோணமலை குச்சவெளியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நல்லிணக்க ஆணைக்குழுவின் அமர்வு இடம்பெற்றுள்ளது. குச்சவெளி பிரதேசச் செயலகத்தில் இடம்பெற்ற இவ்வமர்வில் 146 பேர் சாட்சியமளித்துள்ளனர். இதில் 53 பேர் நேரடியாகவும், ஏனையோர் எழுத்து மூலமாகவும் தங்கள் சாட்சியங்களை அளித்துள்ளனர். முற்பகல் 9.30 மணி தொடக்கம், பிற்பகல் 2மணிவரை சாட்சியங்கள் இடம்பெற்றன.

இச்சாட்சியங்களில் காணாமல் போனவர்கள் குறித்தும், மீள்குடியேற்றத்தில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் குறித்தும் அதிகளவில் முறைப்பாடுகள் தெரிவிக்கபட்டுள்ளதாக ஆணைக்குழுவின் தலைவர் சி.ஆர்.டி.சில்வா தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி மாவட்டத்தில் மீள்குடியமர்ந்து வரும் முஸ்லிம்களின் பிரச்சினைகள் குறித்து கிளிநொச்சி அரசாங்க அதிபருடன் கலந்துரையாடல்.

கிளிநொச்சி மாவட்டத்தில் தற்போது மீளக்குடியமர்ந்துள்ள முஸ்லிம் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து இன்று கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபருடன் கலந்துரையாடல் ஒன்று நடைபெறுகின்றது.

யாழ். மாநகரசபை உறுப்பினரும், கிளிநொச்சி. யாழ்.மவாட்டங்களைச் சேர்ந்த முஸ்லிம் மக்கள் அலுவலகங்களின் தலைவருமான மௌலவி சுபியான் இக்கலந்துரையாடலில் கலந்து கொள்ளவுள்ளார்.

கிளிநொச்சி மாவட்டத்தில் மீள்குடியமர்ந்துள்ள முஸ்லிம் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்தும், அவற்றிற்கு தீர்வு காண்பது குறித்தும் இக்கலந்துரையாடலில் ஆராயப்படவுள்ளததாக மௌலவி சுபியான் தெரிவித்துள்ளார். அரசாங்க அதிபருடனான சந்திப்பிற்கு முன்னதாக கிளிநொச்சி பள்ளிவாசலில் வைத்து கிளிநொச்சி மாவட்ட முஸ்லிம் மக்களின் பிரதிநிதிகளை சந்தித்து அவர்களின் பிரச்சினைகள் குறித்து கேட்டறியவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி மாவட்டத்தில் திருநகர். கிளிநொச்சி நகர்ப்பகுதி, 55ஆம் கட்டை, நாச்சிக்குடா, பள்ளிக்குடா முதலான பகுதிகளில் முந்நூறுக்கும் மேற்பட்ட முஸ்லிம் குடும்பங்கள் தற்போது மீள்குடியமர்த்தப்பட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மழைவெள்ளதால் பாதிக்கப்படுபவர்களின் தொகை அதிகரிப்பு.

தொடர்ந்து பெய்து கொண்டிருக்கும் கடும் மழை காரணமாக யாழ். குடாநாட்டில் 3640 இற்கும் மேற்பட்ட குடும்பங்கள் பாதிப்படைந்துள்ளன. 750 இற்கும் மேற்பட்ட வீடுகள் வெள்ளத்தினால் சேதடைந்துள்ளன. யாழ்.அரசாங்க அதிபர் திருமதி இமெல்டா சுகுமார் இத்தகவலை தெரிவித்துள்ளார். கடந்த நான்கு தினங்களாக இடைவிடாது தொடர்ந்து மழை பெய்து வருவதால் குடாநாட்டில் பல பிரதேசங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன.

சங்கானை, ஊர்காவற்றுறை, நெடுந்தீவு, வேலணை, கோப்பாய், சண்டிலிப்பாய், தெல்லிப்பழை, பருத்தித்துறை, நல்லூர், கரவெட்டி, காரைநகர், சாவகச்சேரி ஆகிய பிரதேசச்செயலர் பிரிவுகளிலுள்ள மக்களே இவ்வாறு அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று பிற்பகல் வரை கிடைக்கப்பெற்றத் தகவல்களின் அடிப்படையிலேயே இப்புள்ளிவிபரம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று ஞாயிற்றுக்கிழமை வரை மேலும் பல குடும்பங்கள் வெள்ளத்தினால் பாதிக்கபட்டுள்ளன எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வெள்ளம் காரணமாக நேற்றுவரை 750 வீடுகளும் சேதமுற்றுள்ளன. இடம்பெயர்ந்து பொது இடங்களில் தங்கியுள்ள மக்களுக்கு மூன்று நாட்களுக்கு சமைத்த உணவு வழங்கப்படுவதாக யாழ்.அரச அதிபர் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்டங்களில் மழையினால் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கினால் 2ஆயிரத்து 520 குடும்பங்கள் பாதிப்படைந்துள்ளன. கிளிநொச்சி மாவட்டத்தில் கண்டாவளை. கரைச்சி, ஆகிய பிரதேசச் செயலர் பிரிவுகளிலேயே கூடுதலான மக்கள் பாதிக்கபட்டுள்ளனர். முல்லை மாட்டத்தில் ஆயிரத்து 120 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இம்மாவட்டங்களில் பாதிக்கப்பட்டு பொது இடங்களில் தங்கியுள்ள மக்களுக்கும் சமைத்த உணவுகள் வழங்கப்பட்டு வருகின்றன. கிளிநொச்சி இரணைமடுக்குளத்தின் நீர்மட்டம் வேகமாக அதிகரித்து வருவதால் அக்குளத்தின் ஆறு வான் கதவுகளும் திறந்து விடப்பட்டுள்ளன.

வங்கள விரிகுடாவில் ஏற்பட்டுள்ள தாழமுக்கம் காரணமாக வடக்கிலும், கிழக்கிலும் தொடர்ந்து மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

முல்லைத்தீவு மாவட்டத்தில் இம்மாத இறுதிக்குள் மீதமுள்ள 6000 குடும்பங்களும் மீள்குடியமர்த்தப்படவுள்ளன.

முல்லைத்தீவு மாவட்டத்தில் இடம்பெயர்ந்த மக்களை மீள்குடியேற்றுவதற்காக அப்பகுதிகளிலுள்ள வெடிபொருட்கள் துரிதமாக அகற்றப்பட்டு வருவதாகவும், இம்மாத இறுதிக்குள் 6ஆயிரம் குடும்பங்கள் முல்லைத்தீவு மாவட்டத்தில் மீளக்குடியமர்த்தப் படவுள்ளதாகவும், முல்லை மாவட்ட அரசாங்க அதிபர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவு மாவட்டத்திலிருந்து இடம்பெயர்ந்த மக்களில் 22 ஆயிரம் குடும்பங்களைச் சேர்ந்த 62ஆயிரம் பேர் இதுவரை மீள்குடியமர்த்தப் பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இம்மாத இறுதிக்குள் முல்லை மாவட்டத்திலுள்ள துணுக்காய், மாந்தை கிழக்கு, ஒட்டுசுட்டான், கரைதுறைப்பற்று, புதுக்குடியிருப்பு ஆகிய பிரதேசச்செயலர் பிரிவுகளைச் சேர்ந்த 6ஆயிரம் குடும்பங்களைச் சேர்ந்த 19 ஆயிரம் பேர் மாத்திரமே இன்னமும் மீள்குடியமர்த்தப் படவுள்ளனர் எனவும் அரசாங்க அதிபர் தெரிவித்துள்ளார்.

புலம்பெயர் தமிழர்களின் நடவடிக்கைகளுக்கு எதிராக வன்னியில் பொதுமக்கள் ஆர்ப்பாட்டம் நடத்த படையினரால் நிர்ப்பந்திக்கப்பட்டனர்.

ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் பிரிட்டன் பயணத்தின் போது புலம்பெயர்ந்த தமிழர்களினால் மேற்கொள்ளப்பட்ட ஆர்ப்பாட்டங்கள் காரணமாக லண்டனில் ஜனாதிபதி உரையாற்றவிருந்த நிகழ்வு இரத்தானதைக் கண்டித்து கிளிநொச்சி, முல்லைத்தீவு பகுதிகளிலுள்ள மக்கள் படையினரின் நெறிப்படுத்தலில் ஆர்பாட்ட நடவடிக்கை ஒன்றை நேற்று சனிக்கிழமை மேற்கொண்டனர்.

மக்கள் படையினரால் அழைத்து வரப்பட்டு அவர்களின் கைகளில் ஜனாதிபதிக்கு ஆதரவான சுலோக அட்டைகள் வழங்கப்பட்டு இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. குறிப்பட்ட அளவு மக்கள் மட்டுமே கிளிநொச்சியிலும், முல்லைத்தீவிலும் இந்த ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுத்தப்பட்டனர்.

யாழ்.மாவட்டத்தில் இவ்வருடம் சிறுவர் துஸ்பிரயோகம் அதிகரிப்பு.

யாழ்.மாவட்டத்தில் இவ்வருடத்தில் மட்டும் சிறுவர் துஸ்பிரயோகம் தொடர்பாக 100 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக மாவட்ட சிறுவர் நன்னடத்தை உத்தியோகத்தர் சி.சிவகரன் தெரிவித்துள்ளார். கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இவ்வருடம் சிறுவர் துஸ்பிரயோகங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இணையத்தளங்களின் பாவனையும், கைத்தொலைபேசிப் பாவனையும் சிறுவர்களிடத்தில் அதிகரித்துள்ளமையே இதற்கு முக்கிய காரணம் என தெரிவிக்கப்படுகின்றது. இடம் பெயர்ந்து ஒரே வீட்டில் அதிகம் பேர் வசித்து வருகின்ற நிலமையும் இதற்கு இன்னுமொரு காரணம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாடசாலைகள் மட்டத்திலும் சிறுவர் துஸ்பிரயோகம் அதகிரித்துள்ளமையும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. குடாநாட்டில் அதிகரித்து வரும் சிறுவர் துஸ்பிரயோத்தை கட்டுப்படுத்துவதற்கு நீண்டகாலத்திட்டம் அவசியம் எனவும், பெரிய அளவிலான விழிப்புணர்வு நடவடிக்கைகள் அவசியம் எனவும் மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

யாழ்ப்பாணத்தில் பெண்களுக்கெதிரான வன்முறை தொடர்பாக விழிப்புணர்வு வீதிநாடகங்கள்.

யாழ்ப்பாணத்தில் பெண்களுக்கெதிரான வன்முறை தொடர்பாக விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக வீதி நாடகங்கள் நடத்தப்படவுள்ளன. யாழ். சமூக மேம்பாட்டு மையம் இதனை மேற்கொண்டுள்ளது.

பெண்களுக்கெதிரான வன்முறை எதிர்ப்பு வாரத்தை முன்னிட்டு 15 நாட்களுக்கு இச்செயற்பாடுகளை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. கிராமங்கள் தோறும் நடைபெறவுள்ள இவ்வீதி நாடகங்களூடாக பெண்களுக்ககெதிரான வன்முறை, பாதுகாப்பு, மற்றும் மேம்பாடு குறித்த பல கருத்துக்கள் முன்வைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று சனிக்கிழமை தென்மராட்சியில் பல இடங்களில் இது தொடர்பான நிகழ்வுகள் நடைபெறுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளன.

நல்லிணக்க ஆணைக்குழுவின் முன்பாக பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் சாட்சியமளிக்கவுள்ளார்.

படிப்பினைகள் மற்றும், நல்லிணக்க ஆணைக்குழுவின் முன்பாக மீள்குடியேற்ற பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் சாட்யமளிக்கவுள்ளதாக தெரிவிக்கபட்டுள்ளது. இவர் எதிர்வரும் 13ஆம் திகதி கொழும்பில் வைத்து சாட்சியமளிக்கவுள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்தவாரம் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனும் சாட்சியமளிக்கவுள்ளதாக ஆணக்குழுவின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

தற்போது கொழும்பில் நடைபெற்றுவரும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அமர்வுகளில் அரசியல்வாதிகள், அரசாங்க அதிகாரிகள், முன்னாள் அரச அதிகாரிகள், சமயப்பிரதிநிதிகள், சமூகப்பிரதிநிதிகள் எனப்பலர் சாட்சியமளித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, அம்பாறை மாவட்டத்தில் இம்மாதம் நடைபெறவிருந்த ஆணைக்குழுவின் விசாரணைகள் எதிர்வரும் ஜனவரி மாதத்திற்கு பிற்போடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கபட்டுள்ளது.

கிளிநொச்சி பொலிஸ் நிலையம் திறந்து வைக்கப்பட்டது.

கிளிநொச்சி பொலிஸ் நிலையம் நேற்று வெள்ளிக்கிழமை திறந்து வைக்கப்பட்டுள்ளது. பிரதமர் டி.எம்.ஜயரட்ணவினால் திறந்து வைக்கப்பட்ட இந்நகிழ்வில் பொலிஸ் மாஅதிபர் மகிந்த பாலசூரிய தேயிலைக் கூட்டுத்தபனத்தின் தலைவர் பண்டார. வடமாகாண செயலாளர் ஆ.சிவசுவாமி தமிழர் விடுதலைக்கூட்டணியின் தலைவர் வீ.ஆனந்தசங்கரி, கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் றூபவதி கேதீஸ்வரன் ஆகியோர் உட்பட கிளிநொச்சி மாவட்ட அரசாங்க ஊழியர்கள், பொதுமக்கள் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

20 வருங்களின் பின்னர் இப்பொலிஸ் நிலையம் மீண்டும் கிளிநொச்சியில் அதே இடத்தில் இயங்கத் தொடங்கியுள்ளது. எண்பதுகளில் பல இயக்கங்களினால் இந்த பொலிஸ் நிலையம் பல தடைவைகள் தாக்குதல்களுக்குள்ளாயிருந்து. பின்னர் பொலிஸ் இராணுவ கூட்டு முகாமாக மாற்றப்பட்டது. அதன் பின்னர் எண்பதுகளின் நடுப்பகுதியில் இப்பொலிஸ் நிலையத்துடன் அதற்கு முன்பாகவுள்ள மைதானம், பிரதேச செயலகம், நூலகம் உட்பட்ட பகுதிகள் இராணுவ முகாமாக விஸ்தரிக்கப்பட்டது.

இரண்டாயிரமாம் ஆண்டிற்குப் பின்னர் விடுதலைப்புலிகளின் காவல்துறை தலைமையகமாக இயங்கியது. தற்போது புலிகளால் கட்டப்பட்ட பொலிஸ் நிலையக் கட்டடம் முற்றாக தகர்க்கப்பட்டு புதிய வடிவில் இப்பொலிஸ் நிலையம் அமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.