எழுத்தாளர்கள்

எழுத்தாளர்கள்

புலிகள் இயக்க முன்னாள் உறுப்பினர்கள் 713 பேர் இன்று வவுனியாவில் விடுதலை – ஏனையவர்களை கட்டம் கட்டமாக விடுவிக்க நடவடிக்கை

புலிகள் இயக்க முன்னாள் உறுப்பினர்கள் 713 பேர் இன்று (09) சனிக்கிழமை வவுனியா செட்டிக்குளத்தில் நடைபெறும் வைபவமொன்றில் வைத்து விடுவிக்கப்பட உள்ளதாக புனர்வாழ்வு ஆணையாளர் நாயகத்தின் பணியகம் தெரிவித்தது. பயங்கரவாதச் செயற்பாடுகளுடன் நேரடியாகத் தொடர்பு இல்லாதவர்களே இவ்வாறு விடுதலை செய்யப்பட உள்ளதாக புனர்வாழ்வு ஆணையாளர் மேஜர் ஜெனரல் தயாரத்னாயக்க தெரிவித்தார்.

வவுனியா, பம்பைமடு புனர்வாழ்வு முகாமில் தங்கவைக்கப்பட்டிருந்த இவர்களிடையே 18 வயதுக்குக் குறைவானவர்கள் சுமார் 100 பேரும் அடங்குவர்.  ஏனையவர்கள் தொடர்பான தகவல்களும் திரட்டப்பட்டு வருவதோடு பயங்கரவாதச் செயற்பாடுகளுடன் தொடர்பற்ற வர்கள் கட்டம் கட்டமாக விடுவிக்கப்பட உள்ளதாகவும் அவர் கூறினார். ஏனையவர்கள் புனர்வாழ்வு வழங்கப்பட்டு விடுவிக்கப்பட உள்ளனர்.

படையினரிடம் சரணடைந்துள்ள சுமார் 11,544 புலிகள் இயக்க முன்னாள் உறுப்பினர்கள் 18 தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இவர்களில் பயங்கரவாதச் செயற்பாடுகளுடன் நேரடியாகத் தொடர்பு அற்றவர்கள் ஒரு மாதத்திற்கும் குறைவான காலம் இயக்க நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்பட்டவர்கள், பங்கர் வெட்டுதல் போன்ற பணிகளில் பலாத்காரமாக ஈடுபடுத்தப்பட்டவர்கள் போன்றோர் விடுவிக்கப்படுபவர்களிடையே அடங்குவதாக புனர்வாழ்வு ஆணையாளர் பணியகம் தெரிவித்தது.

புனர்வாழ்வு அளிக்கப்படும் புலிகள் இயக்க முன்னாள் புலி உறுப்பினர்களுக்கு பயங்கரவாதச் செயற்பாடுகளில் எத்தகைய தொடர்பு இருந்தது என்பது குறித்து விசாரணைகள் நடத்தப்படுகின்றது.

இவர்களில் நேரடித் தொடர்பற்றவர்கள் கட்டம் கட்டமாக விடுவிக்கப்பட உள்ளதாகவும் தயாரத்னாயக்க கூறினார்.

புனர்வாழ்வு முகாம்களில் உள்ளவர்களிடையே பட்டதாரிகள் 22 பேரும் பட்டதாரி மாணவர்கள் 148 பேரும் அடங்குவர். இவர்களில் பட்டதாரி மாணவர்களுக்கு யாழ். பல்கலைக் கழகத்தில் அனுமதி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதோடு ஆசிரியர்கள், மருத்துவர்கள் போன்றோருக்கு தமது முன்னைய தொழிலைத் தொடர்ந்து செய்யவும் அனுமதி வழங்கப்பட உள்ளதாக அவர் தெரிவித்தார்.

பிரபாவின் தந்தையின் பூதவுடல் சிவாஜிலிங்கத்திடம் ஒப்படைப்பு – பிரிகேடியர் தகவல்

prabakaeans-father.jpgபிரபாகரனின் தந்தையான திரு வேங்கடம் வேலுப்பிள்ளையின் பூத வுடல் பாராளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கத்திடம் நேற்று கையளிக்கப்பட்டதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரி வித்தார். இராணுவ பாதுகாப்பில் இருந்த பிரபாவின் தாயாரையும் அவ ரிடம் ஒப்படைத்ததாக அவர் மேலும் தெரி வித்தார்.

பிரபாவின் தந்தையின் இறுதிக் கிரியை யாழ்ப்பாணத்தில் நடை பெறவுள்ளதாக தெரிவித்த அவர், இறுதிக் கிரியைகளுக்கான உதவிகளை அரசாங்கம் வழங்கவுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

தனது தந்தையின் பூதவுடலையும் தனது தாயாரையும் சிவாஜிலிங்கம் எம்.பியிடம் ஒப்படைக்குமாறு டென்மார்க்கிலுள்ள பிரபாவின் சகோதரியான வினோதினி ராஜேந்திரன் டென்மார்க்கிலிருந்து அட்டோர்ணி தத்துவத்தை அனுப்பிவைத்துள்ளதாக தெரிவித்த பிரிகேடியர் அதற்கமைய சகல நடவடிக்கைகளும் எடுக்கப்பட் டதாகவும் சுட்டிக்காட்டினார்.

திருவேங்கடம் வேலுப்பிள்ளையின் பூதவுடல் அவரது சொந்த இடமான யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறைக்கு தரைமார்க்கமாக கொண்டு செல்ல ஏற்பாடாகியுள்ளதாகவும் பிரிகேடியர் தெரிவித்தார்.

ஜனநாயகத்தை நிலைநாட்ட மட்டு மேயர் சிவகீதா சரத் பொன்சேகாவிற்கு ஆதரவு

sivageetha.jpgமட்டுநகர் மேயர் சிவகீதா எதிர்கட்சிகளின் பொது வேட்பாளர் சரத் பொன்சேகாவிற்கு ஆதரவு வழங்குவதாக தெரிவித்துள்ளார். இது விடயம் தொடர்பாக ஊடகவியலாளர்களிடம் பேசிய அவர், எமது பிரதேசத்தில் உள்ள மக்களின் வேண்டுதலுக்கு இணங்க அரசியலில் நுழைந்து கொண்ட நான், அரசியலில் நுழைந்ததில் இருந்து எனது பிரதேசத்தில் உள்ள புத்திஜீவிகளின் ஆலோசனையை பெற்றே அரசியல் செய்துவருகின்றேன். இன்றைய நிலையில் எனது பிரதேசத்தில் உள்ள மக்களும், புத்தி ஜீவிகளும் நாட்டில் ஜனநாயகத்தை நிலைநாட்டி, இலங்கையின் பொருளாதாரத்தை உயத்துவார் என நம்பப்படுகின்ற ஜெனரல் பொன்சேகாவை ஆதரிக்க வேண்டியதை அடுத்து இம்முடிவை எடுத்துள்ளேன் என தெரிவித்துள்ளார்.

இலங்கையில் பத்திரிகைச் சுதந்திரம் – லசந்தா நினைவாக இன்று லண்டனில் மாநாடு

Lasantha_Wickramathungaகடந்த ஆண்டு ஜனவரி 8ல் படுகொலை செய்யப்பட்ட சண்டே லீடர் பத்திரிகையின் ஆசிரியர் லசந்தா விக்கிரம சிங்கவின் (சண்டே லீடர் ஆசிரியரின் படுகொலையை தேசம்நெற் வன்மையாகக் கண்டிக்கிறது. : த ஜெயபாலன்) நினைவாக இலங்கையில் பத்திரிகைச் சுதந்திரம் என்ற தலைப்பில் லண்டனில் மாநாடு ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. Tamil Legal Advocacy Project (TLAP) என்ற அமைப்பே இம்மாநாட்டை ஏற்பாடு செய்துள்ளனர். தங்களை சுயாதீன அமைப்பு என http://www.tlap.org.uk/ வெளிப்படுத்தி வருகின்ற அமைப்பு நடந்து முடிந்த யுத்தத்தில் யுத்தக் குற்றங்கள் இடம்பெற்றுள்ளதாகவும் இனப்படுகொலை இடம்பெற்றுள்ளதாகவும் அதற்கான தண்டனை சம்பந்தப்பட்டவர்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்றும் குரல் எழுப்பி வருகின்றனர். இது தொடர்பான கருத்தரங்கு ஒன்றினை இவ்வமைப்பினர் சில மாதங்களுக்கு முன்னர் கொன்வே ஹோலில் ஏற்பாடு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

லசந்தா படுகொலை செய்யப்பட்ட ஜனவரி 8ம் நாளில் இந்தியன் வைஎம்சிஏ யில் இம்மாநாட்டுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இம்மாநாட்டில் முன்னணி மனித உரிமைச் சட்டத்தரணியான கியூசி ஹெலனா கென்னடி மற்றும் இலங்கையில் இருந்து புலம்பெயர்ந்த பத்திரிகையாளர்கள் உரையாற்றுகின்றனர்.

இம்மாநாட்டிலும் இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் போர்க் குற்றங்கள் பற்றிய விசாரணைக்கான குரல்களுக்கு அழுத்தம் வழங்கப்படும் என ஏற்பாட்டாளர்களில் ஒருவரான சட்டத்தரணி அருண் கனநாதன் தேசம்நெற் க்குத் தெரிவித்தார். இந்நிகழ்வு முற்றிலும் மனித உரிமைகள் சம்பந்தப்பட்டது என்றும் சர்வதேச விசாரணைக்கான அழுத்தங்களை வழங்குவதற்காக ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

நிகழ்வு விபரம்:

First Anniversary Remembrance of Lasantha Wickrematunga &
Press Freedom in Sri Lanka

Speakers:
Baroness Helena Kennedy QC, Human Rights Lawyer
Gareth Thomas MP, International Development Minister
Frances Harrison (Former BBC correspondent for Sri lanka).
Ed Davey MP, Shadow Foreign Secretary, Liberal Democrats.
Uvindu Kurukulasuriya, Journalist and former Convenor Free Media Movement (FMM), Sri lanka.
Alex Wilks, Programme Lawyer, Human Rights Institute-International Bar Association HR Institute
Speaker from Reporters without Borders (RSF).
Message  from Journalists for Democracy in Sri lanka (JDS).

  Sonali Samarasinghe, Former Editor Morning Leader and Lasantha’s wife, Lal Wickrematunge (Managing Editor Sunday Leader and Lasantha’s brother) will be sending a specially taped video message.

TLAP appreciates a voluntary contribution to our “conference series fund”
This event is being organized by Friends of Lasantha and Tamil Legal Advocacy Project (TLAP).

You are invited to the following event:
First Anniversary Remembrance of Lasantha Wickrematunga and Press Freedom in Sri Lanka

Date:
Friday, January 08, 2010
from 6:30 PM – 9:00 PM (GMT)

Location:
YMCA
41 Fitzroy Square
W1T 6AQ London
United Kingdom

Related News:

இலங்கைத் தூதரகத்தின் வாயிலில் ஒடுக்குமுறைக்கு எதிரான குரல்கள் ஓங்கி ஒலித்தது! : த ஜெயபாலன்

லண்டன் இல. தூதரகம் முன்பாக சண்டே லீடர் ஆசிரியரின் படுகொலைக்கு எதிரான போராட்டம் இன்று மாலை 4:30ற்கு : த ஜெயபாலன்

சண்டே லீடர் ஆசிரியர் லசந்தாவின் படுகொலையைக் கண்டித்து லண்டனில் போராட்டம் : த ஜெயபாலன்

சம்பந்தன் – மாவை – சுரேஸ் கூட்டும்! – தமிழ் மக்களின் வோட்டும் ! : த ஜெயபாலன்

Sampanthan_RMavai_SenathirajahSuresh_Piremachandranதமிழ் தேசியக் கூட்டமைப்பு முன்னால் ஜெனரல் சரத் பொன்சேகாவை ஆதரிக்கும் என்பது ஜனாதிபதித் தேர்தல் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து தமிழ் தேசியக் கூட்டமைப்பின் அரசியலை அவதானிக்கும் எவருக்கும் தெரிந்த விடயம். தமிழ் தேசியக் கூட்டமைப்பு இம்முடிவுக்கே வரும் என்பது நவம்பர் 19 – 22ல் சூரிசில் இடம்பெற்ற தமிழ் கட்சிகளின் மாநாட்டிற்கு வரும் பொழுதே ஓரளவு தீர்மானிக்கப்பட்டு இருந்தது. டிசம்பர் 20ல் ஒஸ்ரியாவின் தலைநகர் வியன்னாவில் இடம்பெற்ற சந்திப்பில் கலந்துகொண்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பு இதே நிலைப்பாட்டையே அங்கு விலியுறுத்தி இருந்தது. ஆயினும் அவர்கள் அதனை வெளிப்படையாக வெளிப்படுத்தவில்லை. முன்னாள் ஜெனரல் சரத் பொன்சேகாவை ஆதரிப்பது என்ற முடிவை தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஜனவரி 6ல் உதிதியோகபூர்வமாக அறிவிப்பதற்கு சில நாட்களுக்கு முன்னரேயே ஜேவிபியும் யுஎன்பியும் தமது மேடைகளில் தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் தோன்றி பொன்சேகாவுக்கு ஆதரவு தெரிவிப்பார்கள் எனத் தெரிவித்து வந்தனர்.

ஜனவரி 4ல் எதிர்க்கட்சிக் கூட்டமைப்புடன் இடம்பெற்ற சந்திப்பில் சரத்பொன்சேகாவை ஆதரிப்பது என்ற உறுதிமொழியையும் இரா சம்பந்தன் எதிர்தரப்பு கூட்டமைப்பிற்கு வழங்கி இருந்தார். TNA promises support to Gen. Fonseka http://www.unp.lk/portal/index.php?option=com_content&task=view&id=3682&Itemid=1 அதற்கு முன்னரேயே தங்கள் முடிவுக்கு மக்கள் ஆதரவைத் திரட்டும் ஒரு நடவடிக்கையாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு எதிர்க்கட்சிகளின் கூட்டமைப்பின் வேட்பாளர் சரத் பொன்சேகாவை யாழ்ப்பாணத்திற்கு அழைத்திருந்தனர். Gen. Fonseka visits Jaffna at invitation of TNA  http://www.unp.lk/portal/index.php?option=com_content&task=view&id=3672&Itemid=1

ஆகவே தமிழ் தேசியக் கூட்டமைப்பு பொன்சேகாவை ஆதரிப்பது என்ற முடிவை தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களுடன் கலந்துரையாடி விவாதித்து முடிவெடுத்தது என்பது அப்பட்டமான நாடகம். ஜனவரி 4ம் 5ம் திகதிகளில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் கூடி இம்முடிவை எடுக்கவில்லை. அவ்விரு நாட்களும் இடம்பெற்றது தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஜனநாயகக் கேலிக் கூத்து மட்டுமே.

ஈராக்கில் ரெஜீம்சேன்ஞ்சை கொண்டு வருவதற்காக ஜோர்ஜ் புஸ் – ரொனி பிளேயர் கூட்டு சர்வதேசக் கூட்டமைப்பை துணைக்கு அழைத்துக் கொண்டு ஈராக் மீது படையெடுத்து ரெஜீம்சேன்ஞ்சை ஏற்படுத்தியது. தனது நோக்கத்திற்கு ஏற்ப ஈராக்கிடம் பேரழிவு ஆயுதங்கள் உண்டு, 45 நிமிடங்களில் அவ்வாயுதங்கள் லண்டனைத் தாக்கலாம் என்ற கதைகள் சோடிக்கப்பட்டு ஜோர்ஜ் புஸ் – ரொனி பிளேயர் கூட்டால் இவை பரப்பப்பட்டது. பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தம் என்று இதற்கு ஒரு ஜனாநாயக முலாமும் பூசப்பட்டது.

தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்பது இரா சம்பந்தன், மாவை சேனாதிராஜா, சுரேஸ் பிரேமச்சந்திரன் ஆகிய மும்மூர்த்திகளின் தீர்மானமே. சம்பந்தன் – மாவை – சுரேஸ் கூட்டு ஜோர்ஜ் புஸ் – ரொனி பிளேயர் அளவுக்கு இல்லாமல் விரலுக்கு ஏற்ற வீக்கமாக உருவாக்கிய திட்டமே இலங்கையில் ரெஜீம்சேன்ஞ் கொண்டுவரப்பட வேண்டும் என்பது. அதற்காக சோடிக்கப்பட்ட விடயங்களில் ஒன்று வடக்கு – கிழக்கு இணைப்பு. ஒரே மாதத்தில் சந்தேக நபர்களை விடுதலை செய்வது மற்றும் இன்னொரன்ன விடயங்கள். (அவற்றைத் தனிக் கட்டுரையில் ஆராய்வதே பொருத்தமானது.)

தமிழீழ விடுதலைப் புலிகள் பலமான நிலையில் இருந்த போது தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆயுத அழுத்தத்தால் உருவாக்கப்பட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பு தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டிலேயே இயங்கியது. தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே பிரபாகரன் மே 18ல் கொல்லப்படும் வரை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் செயற்திறன் மிக்க உறுப்பினர்களாக எம் கெ சிவாஜிலிங்கம் ஜெயானந்தமூர்த்தி, கஜேந்திரன், பத்மினி சிதம்பரநாதன் ஆகியோர் செயற்பட்டனர். இவர்கள் தமிழீழ விடுதலைப் புலிகளின் சர்வதேச ஆதரவு அலைக்கு முதுகெலும்பாக நின்றனர்.

அப்போது இரா சம்பந்தன், மாவை சேனாதிராஜா, சுரேஸ் பிரேமச்சந்திரன் ஆகியோர் தமிழீழ விடுதலைப் புலிகளின் கருத்துக்களுடன் எவ்விதத்திலும் முரண்படாமல் தங்கள் கருத்துக்களை வெளியிட்டு வந்தனர். அல்லது முரண்படக் கூடிய கருத்துக்களை வெளியிடாமலே மௌனம் காத்தனர்.

தமிழீழ விடுதலைப் புலிகள் பலவீனமடையத் தொடங்க இரா சம்பந்தன், மாவை சேனாதிராஜா, சுரேஸ் பிரேமச்சந்திரன் ஆகியோரின் ஆளுமை தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்குள் தலை தூக்கியது. தற்போது தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமை முற்றாக அழிக்கப்பட்ட நிலையில் சம்பந்தன் – மாவை – சுரேஸ் கூட்டே தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்பதாகக் குறுகிக்கொண்டது.

இதனை எம் கெ சிவாஜிலிங்கம் கடந்த பெப்ரவரியிலேயே தேசம்நெற்க்கு வெளிப்படுத்தி இருந்தார். தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முடிவுகள் பற்றி தங்களுடன் ஆலோசிக்கப்படுவதில்லை என்றும் அவர் குற்றம்சாட்டி இருந்தார். இதனை அண்மையில் லண்டனில் நடைபெற்ற சந்திப்பிலும் எம் கெ சிவாஜிலிங்கம் தெரிவித்து இருந்தார். தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முடிவுகள் தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களுடன் கலந்தரையாடி எடுக்கப்படுவதில்லை என்பது ஓரளவு ஏற்றுக்கொள்ளப்பட்ட வழமையாகவே இருந்து வந்தது. அதற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் பாதுகாப்பிற்காக பல்வேறு நாடுகளிலும் தங்கி இருந்ததும் அம்மும்மூர்த்திகளுக்கு வசதியாக அமைந்தது.

ஆனால் தேர்தலுக்கு முன்னதாகவே பெரும்பாலான தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் இலங்கை திரும்பிவிட்டனர். அதனால் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முடிவுகளை எடுக்கின்ற போது ஒப்புக்காகவாவுதல் சம்பந்தன் – மாவை – சுரேஸ் கூட்டு ஏனைய பாராளுமன்ற உறுப்பினர்களின் சம்மதத்தைப் பெற வேண்டி இருந்தது. அதனாலேயே ஜனவரி 4 மற்றும் 5ம் திகதிகளில் சம்பந்தன் – மாவை – சுரேஸ் கூட்டு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஜனநாயக நாடகத்தை அரங்கேற்றியது.

ஜெனரல் சரத் பொன்சேகாவை ஆதரிப்பதை அடிப்படையாகக் கொண்டிருந்தாலும் அதனை நேரடியாக வாக்கெடுப்பிற்கு விட்டால் மும்மூர்திகளின் நோக்கம் அடிபட்டுப் போய்விடும் என்ற அச்சம் அவர்களிடம் இருந்தது. அதனால் வாக்கெடுப்பிற்கு விடப்படும் கேள்வி தொடர்பாகவும் கடுமையான முரண்பாடுகள் விவாதங்கள் இடம்பெற்றது. இக்கூட்டத்தில் 22 தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களில் 18 பேர் நேரடியாகக் கலந்துகொண்டனர். ஒருவர் தொலைபேசியூடாகக் கலந்துகொண்டார். இரண்டு பிரதான வேட்பாளர்களில் யாரையாவது ஆதரிப்பதா? இல்லையா? என்ற அடிப்படையிலேயே வாக்கெடுப்பு நடாத்த வேண்டும் என்ற குரல்கள் பலமானதாக இருந்தது. சம்பந்தன் – மாவை – சுரேஸ் கூட்டு ரெஜீம்சேன்ஞ் வேண்டுமா இல்லையா என்ற அடிப்படையில் வாக்கெடுப்பு நடாத்தப்பட வேண்டும் என்று வாதிட்டது. இறுதியில் சம்பந்தன் – மாவை – சுரேஸ் கூட்டின் முடிவின் அடிப்படையில் வாக்கெடுப்பு நடாத்தப்பட்டது. இதன்போது சரத்பொன்சேகாவிற்கு ஆதரவாக 10 வாக்குகளும் எதிராக 9 வாக்குகளும் கிடைத்தது. ஆனால் தொலைபெசியில் கலந்துகொண்டவரின் வாக்கை கணக்கெடுக்க முடியாது என்பதில் இரா சம்பந்தன் உறுதியாக நின்றார். அதனால் சரத் பொன்சேகாவுக்கு ஆதரவாக 10 வாக்குகளும் எதிராக 8 வாக்குகளும் பதிவாகியது. பின்னர் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை ஆதரிப்பதில்லை என்றதன் அடிப்படையில் வாக்கெடுப்பு நடாத்தப்பட்ட போது அங்கு கூடியிருந்த அத்தனை பேரும் அத்தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்தனர்.

ஆனால் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முடிவை ஊடகங்களுக்கு வெளியிட்ட இரா சம்பந்தன் ‘ஜனாதிபதி மேலும் ஒரு தடவை பதவியில் இருக்க அனுமதிப்பதைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஏகோபித்து எதிர்ப்பதனால் பொது எதிர்க்கட்சி வேட்பாளர் ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு வாக்களிக்க வேண்டும் என்று தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் கேட்டுக்கொள்கின்றனர்.” எனத் தெரிவித்திருந்தார். தங்களுக்கு இசைவான பேரினவாதத் தலைமைகளுடன் இணைந்து தமிழ் மக்களை படுமோசமான நிலைக்குத் தள்ளிய தமிழ் தலைமைகள் குறிப்பாக தமிழரசுக் கட்சி தமிழர் விடுதலைக் கூட்டணி தற்போது மீண்டும் ஒருமுறை தமிழ் தேசியக் கூட்டமைப்பு தமிழ் மக்களை வார்த்தை ஜாலங்களால் மயக்குகின்றது. ‘ஜனாதிபதி மேலும் ஒரு தடவை பதவியில் இருக்க அனுமதிப்பதைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஏகோபித்து எதிர்க்கின்றது” என்பது முற்றிலும் உண்மை. அதற்காக ”பொது எதிர்க்கட்சி வேட்பாளர் ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு வாக்களிக்க வேண்டும் என்று தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் கேட்டுக்கொள்கின்றனர்.” எனத் தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவிக்கவில்லை. ஏகோபித்துத் தெரிவிக்கவேயில்லை. இவ்வளவு அழிவுக்குப் பின்னும் தமிழனைத் தமிழனே தமிழிலேயே ஏமாற்றக் கற்றுக்கொண்ட சாணக்கியத்தைத்தான் சம்பந்தர் இவ்வளவுகால அரசியலில் தெரிந்து வைத்துள்ளார்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பில் உள்ள கட்சிகளும் அதன் பாராளுமன்ற உறுப்பினர்களும்:

தமிழர் விடுதலைக் கூட்டணி: இரா சம்பந்தன், (திருகோணமலை) மாவை சேனாதிராஜா (யாழ்ப்பாணம்)
ஈபிஆர்எல்எப்(சுரேஸ் அணி): சுரேஸ் பிரேமச்சந்திரன் (யாழ்ப்பாணம்), ஆனந்தன் நடேசு சிவசக்தி  (வன்னி)
ரெலோ: செல்வம் அடைக்கலநாதன் (மன்னார்), நோகராதரலிங்கம் சுப்பிரமணியம் (வன்னி), எம் கெ சிவாஜிலிங்கம் (யாழ்ப்பாணம்) , நல்லதம்பி சிறிகாந்தா (யாழ்ப்பாணம்) 
தமிழ் கொங்கிரஸ்: கஜேந்திரகுமார் பொன்னம்பலம் (யாழ்ப்பாணம்)

இவர்கள் ஒன்பது பேரையும் தவிர ஏனைய 13 பாராளுமன்ற உறுப்பினர்களும் தமிழீழ விடுதலைப் புலிகளால் தெரிவு செய்யப்பட்டு பாராளுமன்றம் சென்றவர்கள். அவர்கள் வருமாறு : சந்திரகாந்தன் சந்திரநேரு (தேசியப்பட்டியல்), ரி கனகசபை (மட்டக்களப்பு), சேனாதிராஜா ஜெயானந்தமூர்த்தி (மட்டக்களப்பு), தங்கேஸ்வரி கதிர்காமன் (மட்டக்களப்பு), பாக்கியசெல்வம் அரியேந்திரன் (மட்டக்களப்பு), சதாசிவம் கனகரட்ணம் (வன்னி), சிவநாதன் கிசோர் (வன்னி), சதாசிவம் கனகரத்தினம் (வன்னி), கெ துரைரத்தினசிங்கம் (திருகோணமலை), வில்லியம் தோமஸ் (திகாமடுல்ல), கஜேந்திரன் செல்வராஜ் (யாழ்ப்பாணம்), பத்மினி சிதம்பரநாதன் (யாழ்ப்பாணம்), சொலமன் சிறில் (யாழ்ப்பாணம்), ரசீன் மொகமட் இமாம் (தேசியப் பட்டியல்)

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முடிவில்

பொன்சேகாவுக்கு ஆதரவாக வாக்களித்தவர்கள்: இரா சம்பந்தன் (திருகோணமலை), மாவை சேனாதிராஜா (யாழ்ப்பாணம்), சுரேஸ் பிரேமச்சந்திரன் (யாழ்ப்பாணம்), ஆனந்தன் நடேசு சிவசக்தி  (வன்னி), பாக்கியசெல்வம் அரியேந்திரன் (மட்டக்களப்பு), ரசீன் மொகமட் இமாம் (தேசியப் பட்டியல்), கெ துரைரத்தினசிங்கம் (திருகோணமலை), வில்லியம் தோமஸ் (திகாமடுல்ல), தங்கேஸ்வரி கதிர்காமன் (மட்டக்களப்பு), சொலமன் சிறில் (யாழ்ப்பாணம்).

எதிராக வாக்களித்தவர்கள்: செல்வம் அடைக்கலநாதன் (மன்னார்), நோகராதரலிங்கம் சுப்பிரமணியம் (வன்னி), எம் கெ சிவாஜிலிங்கம் (யாழ்ப்பாணம்), நல்லதம்பி சிறிகாந்தா (யாழ்ப்பாணம்) கஜேந்திரகுமார் பொன்னம்பலம் (யாழ்ப்பாணம்) பத்மினி சிதம்பரநாதன் (யாழ்ப்பாணம்), சிவநாதன் கிசோர் (வன்னி), கஜேந்திரன் செல்வராஜ் (யாழ்ப்பாணம்)

வாக்களிப்பில் கலந்துகொள்ளாதவர்கள்: சந்திரகாந்தன் சந்திரநேரு (தேசியப்பட்டியல்) மற்றும் சேனாதிராஜா ஜெயானந்தமூர்த்தி (மட்டக்களப்பு). இருவரும் லண்டனில் தங்கியுள்ளனர். சந்திரகாந்தன் சந்திரநேரு இரண்டு பிரதான வேட்பாளர்களுக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆதரவளிக்கக் கூடாது என்ற முடிவைக் கொண்டிருப்பதாக எம் கெ சிவாஜிலிங்கம் தெரிவித்தார். அதே முடிவை ஜெயானந்தமூரத்தி தொலைபேசியூடாகக் கலந்துகொண்டு தனது கருத்தை வெளியிட்டார். ரி கனகசபை (மட்டக்களப்பு) இவர் ஜெனரல் சரத்பொன்சேகாவுக்கு ஆதரவு வழங்குவதாகத் தெரிவித்ததாக இரா சம்பந்தன் கூட்டத்தில் தெரிவித்துள்ளார். ரி கனகசபை இந்தியாவில் சுகவீனம் காரணமாகத் தங்கியுள்ளார். சதாசிவம் கனகரத்தினம் (வன்னி) இலங்கை அரச படைகளால் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

இதுவரை ஈபிடிபி, புளொட், ஈபிஆர்எல்எப், கூட்டணி என்பவற்றை ஒட்டுக்குழு அரசியல் என்று விமர்சித்து வந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பு முன்னையவர்கள் மகிந்த ராஜபக்சவுடன் ஒட்டியதற்குப் பதிலாக இவர்கள் ஜெனரல் சரத் பொன்சேகாவுடன் ஒட்டியுள்ளனர். இடம் மட்டும் தான் மாறியுள்ளதே அல்லாமல் இதுவும் ஒட்டுக்குழு அரசியல் தான். தமிழ் தேசியக் கூட்டமைப்பு வே பிரபாகரனுக்குப் பதிலாக சரத் பொன்சேகாவை தேர்ந்தெடுத்த ஒட்டுக்குழு.

தற்போது தமிழ் தேசியக் கூட்டமைப்பு சரத் பொன்சேகாவை ஆதரிப்பது என்ற முடிவை அறிவித்து இருந்தாலும் அதன் கீழ் மூன்று அணிகளுக்கான அரசியல் ஓட்டங்களை அவதானிக்கக் கூடியதாக உள்ளது. சரத் பொன்சேகா, மகிந்த ராஜபக்ச சிவாஜிலிங்கம் ஆகியோரை தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆதரிக்கின்ற நிலைகளே காணப்படுகின்றது. சிவாஜிலிங்கம் எனும் போது விக்கிரமபாகு கருணாரத்னவை ஆதரிப்பவர்களும் சிவாஜிலிங்கத்தின் அணியிலேயே அடங்குகின்றனர்.

சம்பந்தன் – மாவை – சுரேஸ் கூட்டுக்கு எதிரான உணர்வலைகள் ஏற்கனவே மேலெழ ஆரம்பித்துள்ளது. இது புலம்பெயர் புலி ஆதரவாளர்கள் மத்தியிலும் வெளிப்படையாக வெளிப்படுத்தப்பட்டு வருகின்றது. புலி ஆதரவாளர்களிடையே இவ்வாண்டு நடுப்பகுதியில் தமக்கு ஏற்படுத்தப்பட்ட தோல்விக்குப் பழிவாங்க வேண்டும் என்ற உணர்வில் ஜெனரல் சரத் பொன்சேகாவை ஆதரிக்கின்ற போக்கு காணப்பட்ட போதும் இரு பிரதான வேட்பாளர்களும் நிராகரிக்கப்பட வேண்டியவர்கள் என்பதன் நியாயத்தன்மை தற்போது பலம்பெற்றுள்ளது.

டிசம்பர் 20ல் வியன்னாவில் இடம்பெற்ற தமிழ் தேசிய சக்திகளின் சந்திப்பிலும் இந்த முரண்பட்ட நிலை வெளிப்பட்டு உள்ளது. வியன்னாவில் இடம்பெற்ற சந்திப்பில் இலங்கை அரசுக்கு எதிரான தமிழ் தேசிய சக்திகள் சம்பந்தன் – மாவை – சுரேஸ் கூட்டு, வி ஆனந்தசங்கரி மற்றும் நாடுகடந்த தமிழீழ அரசு சார்ந்தவர்கள் அழைக்கப்பட்டு இருந்தனர். மேலும் அபிவிருத்தி என்பதன் அடிப்படையில் இம்மாநாடு கூட்டப்பட்டதால் அதனுடன் தொடர்புடைய இன்னும் சிலரும் அழைக்கப்பட்டு இருந்தனர். நான்கு தினங்கள் இடம்பெற்ற இச்சந்திப்பில் நாடு கடந்த தமிழீழ அரசுடன் தொடர்புடைய தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்கள் ஆதரவாளர்கள் முக்கிய பங்கெடுத்துக் கொண்டனர். கனடா: சேரன், இளங்கோ (தமிழீழ மக்கள் கட்சி), ரஞ்சன் (கனடிய தமிழ் கொங்கிரஸ்) நோர்வே: செல்வின், லண்டன்: ரூட் ரவி (பிரித்தானிய தமிழர் பேரவை), எதிர்வீரசிங்கம், சிற்றம்பலம் இவர்களுடன் இலங்கையில் இருந்து தேவநேசன் நேசையா, நோர்வேயில் இருந்து என் சண்முகரட்னம் ஆகியோரும் இன்னும் சிலரும் கலந்துகொண்டிருந்தனர்.

இச்சந்திபில் தேர்தல் பற்றி குறிப்பாகக் கதைக்கப்படாத போதும் நாடு கடந்த தமிழீழ அரசுக்கான இலங்கையில் ஒரு கட்சியின் அவசியம் பற்றிப் பேசப்பட்டு உள்ளது. வருகின்ற தேர்தலில் ரெஜீம்சேஞ் ஒன்றைக் கொண்டு வருவதன் அவசியம் பற்றியும் சிலர் கருத்துக்களை வெளிப்படுத்தி இருந்தனர். அதே சமயம் பிரதான வேட்பாளர்கள் இருவருமே யுத்தக் குற்றவாளிகள் அவர்கள் சர்வதேச நீதிமன்றத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் என்ற கருத்தும் வெளிப்படுத்தப்பட்டு இருந்தது. இம்மாநாட்டில் கலந்துகொண்ட நாடுகடந்த தமிழீழ அரசு சார்பானவர்களிடையேயே ஒருமித்த கருத்து நிலவவில்லை எனவும் தேசம்நெற்க்கு கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இம்மாநாடு மற்றும் இன்றைய தேர்தலில் நாடுகடந்த தமிழீழ அரசின் நிலை தொடர்பாக அறிந்துகொள்வதற்கு அதன் முக்கியஸ்தர்களில் ஒருவராக அறியப்படுபவரும் வியன்னா மாநாட்டில் கலந்துகொண்டவருமான சேரன் அவர்களுடன் தொடர்பு கொண்டபோது வியன்னா மாநாட்டில் கலந்து கொண்டதை உறுதிப்படுத்திய அவர் தனக்கும் நாடுகடந்த தமிழீழ அரசுக்கும் எவ்வித சம்பந்தமும் கிடையாது எனத் தெரிவித்தார். (அவர் தேசம்நெற் இணையம் தன்னைப் பற்றிய அவதூறை ஊடக வரைமுறைகளுக்கு அப்பால் மேற்கொண்டதாகவும் அதற்கு மன்னிப்புக் கேட்காதவரை தான் தேசம்நெற்றுடன் எதனையும் பகிர்ந்துகொள்ள முடியாது எனவும் மறுத்துவிட்டார்.)

ஆனால் நாடுகடந்த தமிழீழ அரசை ஆதரிக்கின்ற உலகத் தமிழர் பேரவை (Global Tamil Forum) தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முடிவைக் கண்டித்து உள்ளது. அவர்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்பு இம்முடிவை எடுப்பதற்கு முன்னதாகவே தாங்கள் இரு பிரதான வேட்பாளர்களையும் ஆதரிக்க முடியாது என்ற நிலைப்பாட்டை தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு தெரியப்படுத்தி இருந்ததாக தமிழ்நெற் செய்தி வெளியிட்டு உள்ளது. http://www.tamilnet.com/art.html?catid=13&artid=30947

நாடுகடந்த தமிழீழ அரசு வட்டுக்கோட்டைத் தீர்மானத்தினை ஏற்றுக்கொண்டு இயங்குவதால் சர்வதேச அளவில் பிளவுபட்டிருந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆதரவு அமைப்புகள் வெளி அழுத்தங்கள் காரணமாக மீண்டும் ஒரு குழுவாகச் செயற்பட முன்வந்துள்ளனர். இந்த இணைவில் ரூட் ரவியின் ஆளுமைக்கு உட்பட்டுள்ள பிரித்தானிய தமிழர் பேரவையும் (British Tamil Forum) விரைவில் இணைந்து கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

டிசம்பர் பிற்பகுதியில் தனக்கு ஆதரவு தேடி லண்டன் வந்திருந்த எம் கெ சிவாஜிலிங்கத்திற்கு ஆதரவு வழங்க மறுத்த பிரித்தானிய தமிழர் பேரவை தனது முடிவை விரைவில் மாற்றிக் கொள்ளலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. முன்னால் பிரித்தானிய தமிழர் பேரவையின் தலைவர் சுரேன் சுரேந்திரன் பிரித்தானிய தேசிய நாளிதலான இன்டிபென்டனில் வெளியிட்டுள்ள கட்டுரையில் இரு பிரதான வேட்பாளர்களையும் சர்வதேச நீதிமன்றத்தின் முன் நிறுத்த வேண்டும் என்று கோரி உள்ளார். இவர்களில் ஒருவருக்கு ஆதரவு வழங்குவது உணர்வின் அடிப்படையிலும் நியாயத்தின் அடிப்படையிலும் முடியாத விடயம் எனவும் சுரேன் சுரேந்திரன் குறிப்பிட்டுள்ளார். They (General Sarath Fonseka and President Mahinda Rajapaksa) should be brought to court to answer for their crimes and, given that, I believe it is morally and ethically impossible to throw one’s support behind either of these candidates – http://www.independent.co.uk/opinion/commentators/suren-surendiran-these-candidates-are-largely-to-blame-for-destroying-our-people-1859873.html

கனடாவில் நடராஜா முரளீதரன் போன்ற தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான உதிரிகள் மற்றும் தமிழ் படைப்பாளிகள் போன்ற மேலோட்டமான புலி ஆதரவு அமைப்புகள் சம்பந்தன் – மாவை – சுரேஸ் கூட்டுக்கு ஆதரவாகச் செயற்பட்டாலும் புலத்தில் இவர்களால் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்த முடியாது.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மும்மூர்த்திகளின் முடிவை புலம்பெயர்ந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆதரவு அமைப்புகள் நிராகரித்த போதும் அவர்கள் தமிழ் மக்கள் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதை இதுவரை வெளியிடவில்லை. ஆனால் புலம்பெயர்ந்து வெளிநாடுகளில் உள்ள தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான எந்த அமைப்பும் தமிழ் மக்கள் இத்தேர்தலைப் பகிஸ்கரிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ள மாட்டார்கள் என்பது நிச்சயமாகத் தெரியவருகின்றது. தேர்தலைப் புறக்கணிப்பதன் மூலம் அவர்கள் ஜனநாயக நீரோட்டத்தில் இருந்து விலகி இருப்பதை மேற்கு நாடுகளும் அதன் அரசசார்பற்ற நிறுவனங்களும் அங்கீகரிக்காது என்பதனாலேயே அவர்கள் தேர்தலை பகிஸ்கரிக்க மாட்டார்கள் என்பது உறுதியாகின்றது. இவற்றின் அடிப்படையில் நாடுகடந்த தமிழீழ அரசுக்குழு, வட்டுக்கோட்டைத் தீர்மானக்குழு, பிரித்தானிய – உலக தமிழர் பேரவைகள் அனைத்தும் சம்பந்தன் – மாவை – சுரேஸ் கூட்டுக்கு எதிராகச் செயற்படுவதுடன் பெரும்பாலும் விக்கிரமபாகு கருணாரட்னா , எம் கெ சிவாஜிலிங்கம் அணிக்கு – தமிழ் தேசிய அணிக்கே- வாக்களிக்கக் கோருவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது.

”ஜனாதிபதித் தேர்தல் போட்டியில் இருந்து விலகிக் கொள்ளும்படி சிவாஜிலிங்கத்தை கேட்போம்” தமிழ் தேசியக் கூட்டமைப்பு

Selvam Adaikalanathan TNA_TELOதமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஒற்றுமையை நிலைநிறுத்த ஜனாதிபதித் தேர்தல் போட்டியில் இருந்து விலகிக் கொள்ளும்படி எம் கெ சிவாஜிலிங்கத்தை தமிழ் தேசியக் கூட்டமைப்பு கேட்க உள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் இன்று (ஜனவரி 7) தேசம்நெற்க்குத் தெரிவித்தார்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பு சரத் பொன்சேகாவை ஆதரிக்கின்ற முடிவை முழுமையாக ஏற்றுக்கொள்கின்றீர்களா எனக் கேட்ட போது பெரும்பான்மையின் முடிவுடன் ஒத்துப் போவது மட்டுமல்ல தமிழ் மக்கள் ஒரு முகப்பட்டு அரசியலில் இயங்குவதே இன்று அவசியமானது எனத் தெரிவித்தார். தமிழ் தேசியக் கூட்டமைப்பு களத்தில் இறங்கி பொன்சேகாவுக்காக வாக்கு வேட்டை நடத்துமா? எனக் கேட்ட போது அது பற்றிய இறுதி முடிவுகள் இதுவரை எடுக்கப்படவில்லை எனத் தெரிவித்தார்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முடிவு சுயாதீனமானது எனத் தெரிவித்து செல்வம் அடைக்கலநாதன் வெளிநாடுகளினதோ அல்லது புலம்பெயர் தமிழ் அமைப்புகளினதோ அழுத்தங்களினால் இம்முடிவு எடுக்கப்படவில்லை என்றும் தெரிவித்தார்.

இந்த ஜனாதிபதித் தேர்தல் முடிவானது ஜனாதிபதியைத் தெரிவு செய்வது மட்டுமல்ல தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கும் ஒரு பரிசோதணைக் களமாக அமைய உள்ளதாகத் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிடுகையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு தமிழ் மக்கள் அனைவரையும் வாக்களிப்பில் கலந்துகொள்ளுமாறும் சரத் பொன்சேகாவிற்கு வாக்களிக்குமாறும் கேட்டுக் கொண்டுள்ளது.

இந்நிலையில் தமிழ் மக்கள் வாக்களிப்பில் கலந்து கொள்ளாமல் இருப்பதோ அல்லது சரத்பொன்சேகாவிற்கு எதிராக வாக்களிப்பதோ தமிழ் தேசியக் கூட்டமைப்பை நிராகரிப்பதாகவே கொள்ள வேண்டும் என தமிழ் செல்வம் அடைக்கலநாதன் தேசம்நெற் க்குத் தெரிவித்தார். தமிழ் மக்கள் எடுக்கின்ற எந்த முடிவையும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு மனப்பூர்வமாக ஏற்றுக் கொள்ளும் என செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.

இத்தேர்தலில் தற்போதைய ஜனாதிபதியே மீண்டும் தெரிவு செய்யப்பட்டாலும் அவருடன் தொடர்ந்தும் தமிழ் மக்களின் அரசியல் தீர்வுக்கான பேச்சுவார்த்தைகளை நடாத்துவோம் எனக் குறிப்பிட்ட செல்வம் அடைக்கலநாதன் அதற்கு அரசு சம்மதிக்க மறுத்தால் தமிழ் மக்களை ஒன்றுபடுத்தி சாத்வீகப் போராட்டங்களை முன்னெடுப்போம் எனத் தெரிவித்தார்.

தன்னைப் போட்டியில் இருந்து விலகுமாறு யாரும் இதுவரை அணுகவில்லை எனத் தெரிவித்த எம் கெ சிவாஜிலிங்கம் தானும் மற்றைய ஜனாதிபதி வேட்பாளர் விக்கிரமபாகு கருணாரட்னாவும் தமிழ் பகுதிகளின் மூலைமுடுக்குகளுக்கெல்லாம் சென்று பிரச்சாரம் மேற்கொண்டு வருவதாகத் தெரிவித்தார். சென்ற இடங்களில் எலலாம் மக்கள் நூற்றுக் கணக்கில் கூடி கைதட்டி ஆதரவு தருவது தங்களுக்கு நம்பிக்கை அளித்தள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினையைத் தீர்த்து வைப்பதற்கான உறுதியான முடிவுகளைத் தந்தாலேயொழிய இந்த சில்லறைத்தனமான உறுதி மொழிகளை தான் ஏற்றுக் கொள்ளப் போவதில்லை எனவும் இந்தப் போட்டியில் இருந்து விலகிக் கொள்ளப் போவதில்லை எனவும் எம் கெ சிவாஜிலிங்கம் தேசம்நெற்றுக்கு இன்று (ஜனவரி 7) தெரிவித்தார்.

‘இதுவரை செய்த தவறையே கூட்டமைப்பு இப்போதும் செய்கிறது’ சம்பந்தனின் அறிவிப்பு தமிழ்ச்சமூகத்தின் குரல் அல்ல

anu.jpgதமிழ்த் தேசிய கூட்டமைப்பு இதுவரை காலமும் செய்து வந்த தவறையே தொடர்ந்தும் முன்னெடுத்து வருகிறதென அமைச்சரவை பேச்சாளரும், தகவல், ஊடகத்துறை அமைச்சருமான அநுர பிரியதர்ஷன யாப்பா தெரிவித்தார். தமிழ்த் தேசிய கூட்டமைப்பு தமிழ் சமூகத்தின் விடிவுக்காக இதுவரை என்ன செய்துள்ளது எனவும் அமைச்சர் கேள்வி எழுப்பினார். சம்பந்தனின் கொள்கை தமிழ் சமூகத்தின் கொள்கை அல்ல என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

அமைச்சரவை தீர்மானங்கள் தொடர்பான ஊடகங்களுக்கு விளக்கமளிக்கும் வாராந்த செய்தியாளர் மாநாடு நேற்றுக் காலை அரசாங்க தகவல் திணைக்கள கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. அரசாங்க தகவல் திணைக்கள பணிப்பாளர் நாயகம் அநுஷ பல்பிட உட்பட முக்கியஸ்தர்கள் கலந்து கொண்ட இந்த செய்தியாளர் மாநாட்டில் அமைச்சர் மேலும் குறிப்பிடுகையில்,

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவே நாட்டில் சட்டம், ஒழுங்கு, சமாதானம், ஸ்திரத்தன்மை, ஜனநாயகம் மற்றும் வடக்கு, கிழக்கு தமிழர்களுக்கான வாழ்வுரிமை என்பவற்றை நிலைநாட்டினார். தமிழ்த் தேசிய கூட்டமைப்பு பல பிரிவுகளாக தற்பொழுது பிளவுபட்டுள் ளது. அதில் சம்பந்தன் பிரிவினர் ஜனாதிபதியை பழிவாங்கும் செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ளனர். புலிகளின் பிடியில் சிக்கித்த வித்து வந்த தமிழ் மக்களின் உரிமைகளை மீளப் பெற்றுக் கொள்ள சம்பந்தன் என்ன பங்களிப்பை செய்துள்ளார் என்று அமைச்சர் வினா எழுப்பினார்.

யுத்தம் முடிவடைந்த கையோடு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இடம்பெயர் ந்த மக்களை மீளக்குடியேற்றுவதி லும், வட பகுதிக்கான முதலீடுகளிலும், அபி விருத்திகளிலும் மற்றும் தமிழ் சமூகத்தின் ஏனைய தேவைகளிலும் கூடிய கவனம் செலுத்தினார்.

காங்கேசன்துறை துறைமுகத்தை அபிவி ருத்தி செய்வதற்காக பல பில்லியன் ரூபாவை அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. இந்த தொகை யானது அம்பாந்தோட்டை துறைமுக அபி விருத்தித் திட்டத்துக்கு ஒதுக்கீடு செய்த தொகையை விட பெருமளவு அதிகமானதாகும் என்றும் அமைச்சர் சொன்னார். இயல்பில் பிடிவாத போக்குடைய தமிழ்த் தேசிய கூட்டமைப்பு எல்லா சந்தர்ப்பங்களிலும் புலிகளுக்கு சாதகமான நிலைப்பாட்டையே கடைப்பிடித்து வந்ததால், தமிழ் சமூகம் அதன் தற்போதைய நிலை குறித்து அவதானமாக இருக்க வேண்டும் என்றும் அமைச்சர் கேட்டுக்கொண்டார்.

சம்பந்தன் நிகழ்ச்சி நிரலின் கீழ் செயற்பட்டதால் தமிழ் சமூகத்திற்கு தேவையானவற்றை அவர்களால் செய்து கொடுக்க முடியாமல் போனது. இவர்க ளால் தமிழ் சமூகத்தினர் பல்வேறு இன் னல்களுக்கே முகம் கொடுத்து வந்தனர். ஆனால், தமிழ் சமூகத்தை அழிவிலிருந்து பாதுகாத்து பூரண கெளரவத்தை பெற்றுக் கொடுத்தவர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ.

எனவே மக்கள் ஜனாதிபதியுடன் உள்ளனர். பயங்கரவாதத்தை ஜனாதிபதி முற்றாக இல்லாதொழித்ததால் சம்பந்தன் குழுவினர் ஜனாதிபதியை வைராக்கியத்துட னும், பழிவாங்கும் நோக்குடனும் பார்க்கின்றனர். ஏற்கனவே பிரிவினை வாதத்தை ஏற்படுத்திய அவர்கள் தற்பொழுது வேறு வழிகளில் அதனை செயலுருப்பெற முயற்சிக்கின்றனர். தமிழ் சமூகத்திற்கு தேவையான சகலவற்றையும் பெற்றுக் கொடுத்தது அரசாங்கமே. நாங்கள் தனிப்பட்டவர்களுக்காக செய்வதை விட சமூகத்திற்காக செய்வதையே முக்கியமாக கருதுகின்றோம் என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

800 விக்கெட்டைக் கைப்பற்றுவதுடன் கிரிக்கெட் வாழ்வை முடிக்கவுள்ளேன் முரளி கூறுகிறார்

muttiah.jpgஇலங்கை கிரிக்கெட் அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளரான முரளிதரன், சமீபத்தில் நடந்த இந்தியாவுக்கு எதிரான போட்டித் தொடரில் காயமடைந்து ஓய்வெடுத்து வருகிறார். இந்த நிலையில், அவரது வருங்கால திட்டம் என்ன என்று கேட்டதற்கு பதிலளிக்கையில், மேற்கிந்தியாவுக்கு எதிராக இலங்கையில் நடைபெறவிருக்கும் 2 டெஸ்ட் போட்டியில் விளையாடி 800 விக்கெட்டுகளை கடந்து டெஸ்ட் கிரிக்கெட் வாழ்க்கையை முடிக்கத் திட்டமிட்டுள்ளேன்.

2011 ஆம் ஆண்டு உலகக் கிண்ணப் போட்டி வரை ஒருநாள் போட்டியில் விளையாட விரும்புகிறேன்.  ஆனால்,இவையெல்லாம் அப்படி நடக்குமா என்பதைப் பார்க்க வேண்டும். அணியில் நான் எந்த வகையில் தேவையாக இருக்கிறேன் என்பது முக்கியமாகும். சுயநலத்துடன் செயற்பட நான் விரும்பவில்லை. நல்லபடியாக பந்து வீச முடியுமென்ற நிலை இருந்தால் மட்டுமே நான் தொடர்ந்து விளையாடுவேன். இல்லையெனில் மகிழ்ச்சியுடன் விடைபெறுவேன்.

ஏனெனில் எனக்கு பல்வேறு கவுண்டி அணிகளிலிருந்தும் சென்னையில் இருந்தும் விளையாட அழைப்பு வந்த வண்ணமுள்ளன. எனது உடல் எந்தளவுக்கு ஒத்துழைக்கிறது என்பதை கவனிக்க வேண்டும். டெஸ்ட் போட்டியில் பந்து வீச எனது உடல் ஒத்துழைப்பது கடினம்.உடல் ஒத்துழைக்காவிட்டால் என்னை விளையாட நிர்ப்பந்திக்க மாட்டேன்.20 ஓவர் போட்டியில் எனது நாட்டுக்காக விளையாடவில்லை. ஒருநாள் போட்டியில் பந்து வீசுவதை சமாளிக்க முடியுமென்று நினைக்கிறேன் என்றார்.

இந்திய அணியை அதன் சொந்த மண்ணில் வீழ்த்துவது கடினமாக இருப்பது ஏன் என்று கேட்டதற்கு, இந்திய அணியை அதன் சொந்த மண்ணில் வீழ்த்துவது என்பது எந்த அணிக்கும் எளிதான காரியமல்ல. 1997 ஆம் ஆண்டில் எங்கள் அணி நல்ல நிலையிலிருந்த போது கூட இந்தியாவில் நடந்த 3 டெஸ்ட் போட்டிகள் அனைத்திலும் டிரா தான் செய்தோம். இந்தியாவில் ஆடுவது என்பது எப்போதும் கடினமான விடயமாகும். தனது சொந்த மண்ணில் எப்படி ஆட வேண்டுமென்பது இந்திய அணியினருக்கு நன்கு தெரியும். இந்தியாவைப் போல் நாங்களும் எங்கள் சொந்த மண்ணில் பலமான அணியாகும் என்றார்.

15 மாதக் கைக்குழந்தை கல்லில் அடித்துக் கொலை – வாழைச்சேனையில் பரபரப்பு

வாழைச் சேனை பொலிஸ் பிரிவில் மீராவோடைப் பிரதேசத்தில் நேற்று முன்தினம் கைக்குழந்தை ஒன்று அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளது.

மீராவோடை ஜும்ஆப்பள்ளி, வீதியைச் சேர்ந்த காசிம் பாவா முகம்மது ஜவ்பர் (34) என்பவரின் 15 மாதக் கைக்குழந்தையே பரிதாபகரமான முறையில் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளது. மேற்படி கைக்குழந்தையின் மூத்த சகோதரர் மீராவோடை அல் ஹிதாயா வித்தியாலய மாணவன்.

இவ்வருடத்திற்கான பாடசாலை கடந்த 04ம் திகதி ஆரம்பிக்கப் பட்டுள்ளது. இதன் பொருட்டு பாடசாலைக்குச் செல்வதற்காக கழுத்துப்பட்டி ஒன்றினை வாங்கித் தருமாறு தகப்பனிடம் கோரியிருந்தார். இவ்வேளையில், ஆத்திரம் கொண்ட தகப்பன் பாடசாலை செல்லும் தன் மகனையும், தன் மனைவியையும் தாக்கி, தன் மனைவியின் மடியிலிருந்த குறித்த கைக்குழந்தையை பறித்தெடுத்து அத்திவாரக் கல்லில் தலைகீழாக தூக்கி அடித்து கொலை செய்துள்ளதாக குடும்ப உறவினர்கள் தெரிவித்தனர்

ஜனாதிபதி விரைவில் யாழ் செல்ல முடிவு! – ‘தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படும்’ ஜனாதிபதி புலம்பெயர்ந்த தமிழ் குழுவிற்கு உறுதி

விடுதலைப் புலிகள் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு நீண்டகாலமாக தடுத்துவைக்கப்பட்டு இருக்கும் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக ஜனாதிபதி தெரிவித்திருக்கிறார். புலம்பெயர்ந்த தமிழ் குழு ஒன்று ஜனாதிபதியை அலரிமாளிகையில் சந்தித்து பேச்சுவார்த்தை நடாத்தியபோதே ஜனாதிபதி இதனை தெரிவித்திருக்கிறார்.

மேலும் வரும் தேர்தலையொட்டிய பிரச்சாரங்களுக்காக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச விரைவில் யாழ்ப்பாணம் செல்வார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. அண்மையில் எதிர்க் கட்சிக் கூட்டின் வேட்பாளர் யாழ் சரத்பொன்சேகாவின் யாழ் விஜயத்தைத் தொடர்ந்து மகிந்த ராஜபக்சவும் யாழ் செல்லத் தீர்மானித்து உள்ளதாக இக்குழுவில் இடம்பெற்ற உறுப்பினர் ஒருவர் தேசம்நெற்க்குத் தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிடுகையில் மகிந்த ராஜபக்சவின் யாழ் விஜயத்தின் போது இச்சந்திப்பில் கலந்தகொண்ட பலரும் அவருடன் சமூக அளிப்பார்கள் எனத் தெரிவித்தார். இப் புலம்பெயர் குழுவில் இடம்பெற்ற சிலர் ஏற்கனவே மகிந்த ராஜபக்சவுக்கு ஆதரவான பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகின்றனர். இவர்கள் மகிந்த ராஜபக்சவுக்கு வாக்களிக்கும்படி யாழ் மக்களைக் கேட்க உள்ளனர்.

அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த டாக்டர் நெயல் நடேசன், சவூதி அரேபியாவிலிருந்து டாக்டர் இராஜசிங்கம் நரேந்திரன், லண்டனிலிருந்து இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் ஆகியோரின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த சந்திப்பில், டாக்டர் இராமநாதன் நரேந்திரநாதன் (அவுஸ்திரேலியா) மயில்வாகனம் சூரியசேகரம் (லண்டன்), சபாபதி சுப்பையா குகநாதன் (பிரான்ஸ்), இக்னேசியஸ் செல்லையா யோகநாதன் மனோரஞ்சன் (கனடா), முருகபூபதி (அவுஸ்திரேலியா) ஆகியோர் கலந்துகொண்டனர்.

தமிழ் மக்களின் பல்வேறு பிரச்னைகள் தொடர்பாக இக்குழுவினர் மகஜர் ஒன்றைக் கையளித்ததுடன், அதுதொடர்பாக நீண்டநேரம் ஜனாதிபதியுடன் கலந்துரையாடினர்.

இடம்பெயர்ந்த மகக்ளின் மீள்குடியேற்றம், உயர் பாதுகாப்பு வலயங்களை அகற்றுதல், வடக்கு கிழக்கின் கல்வி, அபிவிருத்தி திட்டங்கள், புலம்பெயர்ந்து வாழும் இலங்கையர்கள் தாயகம் வந்து செல்வதில் உள்ள சிக்கல்கள் போன்ற விடயங்கள் குறித்து ஜனாதிபதிடன் கலந்துரையாடினர். தமிழர்களின் அதியுயர் பிரச்னையான இனப்பிரச்னைக்கு தீர்வு காண்பது தொடர்பாகவும் இக்குழு உரையாடி உள்ளது.

சந்தேகத்தின்பேரில் கைது செய்யப்பட்டு நீண்டகாலம் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை குறித்து ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டுவந்த போது, “எந்தத் தமிழர்களையும் தேவையில்லாமல் சிறையில் வைத்திருப்பது தமக்கு விருப்பமானதல்ல. சட்டப்படியான விசாரணைகளை துரிதப்படுத்தி அவர்களை விடுதலை செய்யுமாறு ஏற்கனவே தான் நீதி அமைச்சின் செயலாளருக்கு பணித்துள்ளேன்” என அவர் தெரிவித்தார்.

வடக்கு கிழக்கு இணைப்பை ஏற்படுத்தப் போவதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கு எதிர்த்தரப்பு ஜனாதிபதி பேட்பாளர் உறுதியளித்துள்ள நிலையில் வடக்கு கிழக்கு இணைக்கப்படுவதை தான் அனுமதிக்கப் போவதில்லை என மகிந்த ராஜபக்ச அறிவுறுத்தி உள்ளார். இந்தப் பின்னணியில் யாழ் செல்லவுள்ள மகிந்த ராஜபக்ச தமிழ் மக்களைத் திருப்திப்படுத்துவதற்கான சில விடயங்களை அறிவிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் யாழில் ஜனாதிபதியின் உரை தமிழில் முழுமையாக இடம்பெறும் என்றும் அதற்கான பயிற்சிகளை அவர் எடுத்துவருவதாகவும் தெரியவருகின்றது. எதிர்க் கட்சி வேட்பாளர் நல்லூர் கந்தசாமி கோலிலில் சேட்டைக் கழற்றி விட்டு வழிபட்டதைப் போல் மகிந்த ராஜபக்சவும் ஏதாவது தேர்தல் ஸ்ரண்ட் செய்யலாம்.