எழுத்தாளர்கள்

எழுத்தாளர்கள்

குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்குவதை விடவும் குற்றங்களுக்கான காரணிகள் களையப்பட வேண்டும் என யாழ்.அரச அதிபர் தெரிவிப்பு.

“தற்போது யாழ்.குடாநாட்டில் பல குற்றச்செயல்கள் இடம்பெற்று வருகின்றன. இதில் சம்பந்தப்பட்டவர்களுக்கு கடும் தண்டனைகள் வழங்கப்படுவதை விடவும் அவர்கள் ஏன் இவ்வாறான குற்றச் செயல்களில் ஈடுபடுகின்றனர் என ஆராய வேண்டும். இதற்கான காரணிகள் களையப்பட வேண்டும்” இவ்வாறு யாழ்.அரசாங்க அதிபர் திருமதி இமெல்டா சுகுமார் தெரிவித்துள்ளார்.

நேற்று வியாழக்கிழமை யாழ்.திருமறைக் கலாமன்றத்தில் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் யாழ்.அலுவலகம் நடத்திய விருது வழங்கும் வைபவத்தில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு உரை நிகழ்த்திய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

முன்னர் ஆயுதப் போராட்டத்திற்குள் வாழ்ந்தவர்கள் இப்போது ஜனநாயக நீரோட்டத்தில் கலந்து கொள்ள முடியாமலுள்ளனர். ஒவ்வொரு இளைஞனுக்கும் பொறுப்புகள் அதிகமுள்ளன. அவர்கள் தொழிலில்லாமல் இருக்கின்றனர். அவர்களின் வறுமை நீக்கப்பட வேண்டும். தற்போது யாழ்ப்பாணத்தில் 60 அரசசார்பற்ற நிறுவனங்கள் இயங்குகின்றன. வருடமொன்றிற்கு அரசசார்பற்ற நிறுவனங்கள் 100 இளைஞர்களுக்கு தொழில்வாய்ப்பு வழங்க முன்வரவேண்டும். பட்டதாரிகளாக பல்கலைக் கழகத்திலிருந்து வெளியேறும் இளைஞர்கள் பலர் மாவட்டச் செயலகத்தில் சிற்றூழியர் நியமனமாவது கிடைக்க வேண்டும் எனக்கோரி கடிதங்களை அனுப்புகின்றனர். யாழ்.குடாநாட்டின் இளைஞர்களின் தொழில்வாய்ப்பின்மை இவ்வாறு தான் உள்ளது எனவும் அரசாங்க அதிபர் தெரிவித்தார்.

க.பொ.த பரீட்சையில் தோற்றியுள்ள 175 முன்னாள் புலி உறுப்பினர்கள் ஜனவரியில் விடுவிக்கப்படவுள்ளனர்.

தடுப்பு முகாம்களிலிருந்து தற்போது க.பொ.த.சாதாரணதர பரீட்சைக்குத் தோற்றியுள்ள முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர்கள் 175 பேர் எதிர்வரும் ஜனவரி மாதம் விடுவிக்கப்படவுள்ளதாக புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் பிரிகேடியர் சுதந்த ரணசிங்க தெரிவித்துள்ளார்.

கடந்த 13ஆம் திகதி ஆரம்பமான க.பொ.த சாதாரணதர பரீட்சையில் தடுப்பு முகாம்களில் வைக்கப்பட்டுள்ள 175 முன்னாள் புலி உறுப்பினர்கள் தோற்றியுள்ளனர். இவர்களில் 45பேர் பெண்களாவர். இவர்களை எதிர்வரும் ஜனவரி மாதம் முற்பகுதியில் விடுதலை செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்ட்டு வருவதாக பிரிகேடியர் சுதந்த ரணசிங்க தெரிவித்துள்ளார்.

யாழ். பல்கலைக்கழக நூலகத்திற்கு மீள்குடியேற்ற அமைச்சினால் நூல்கள் கையளிப்பு.

மீள்குடியேற்ற அமைச்சின் ஏற்பாட்டில் யாழ்.பல்கலைக்கழக நூலகத்திற்கு 12 இலட்ச ரூபா பெறுமதியான நூல்கள் வழங்கப்பட்டுள்ளன. நேற்று வியாழக்கிழமை யாழ்.பல்கலைக்கழகத்திற்கு விஜயம் செய்த மீள்குடியேற்ற அமைச்சர் குணரட்ன வீரக்கோன், பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் ஆகியோர் நேரடியாக இந்த நூல்கள் கையளித்தனர்.

யாழ்.பல்கலைக்கழக பதில் துணைவேந்தர் பேராசிரியர் என்.சண்முகலிங்கன், பல்கலைக்கழக நூலகர் ஆகியோரிடம் இந்த நூல்கள் கைளிக்கப்பட்டன.

ஐக்கிய நாடுகளின் ஆலோசனைக் குழுவில் தமக்கு நம்பிக்கை இல்லை என விக்கிரமபாகு கருணாரட்ன தெரிவித்துள்ளார்.

ஐக்கியநாடுகள் சபையின் ஆலோசனைக்குழுவின் நடவடிக்கைகளில் தாம் நம்பிக்கை கொள்ளவில்லை என என புதிய இடதுசாரி முன்னணியின் தலைவர் கலாநிதி விக்கிரமபாகு கருணாரட்ன தெரிவித்துள்ளார். இக்குழு உலகின் முக்கியமான நாடுகளின் முகவராகவே செய்படுவதாகவும் அவர் கூறினார். தற்போது மகிந்த ராஜபக்சவை பாதுகாக்கும் நோக்கிலேயே இக்குழு நியமிக்கப்பட்டுள்ளதாகவும், இந்த விடயங்கள் குறித்து தெரியாமல் விமல் வீரவன்ச போன்றவர்கள் இதற்கு எதிராக குரலெழுப்பி வருகின்றனர் எனவும் அவர் கூறியுள்ளார்.

அமெரிக்கா, இந்தியா, பிரிட்டன் போன்ற நாடுகள் ஐ.நா.செயலர் பான் கீ மூனுடன் இணைந்து இலங்கையில் இடம்பெற்ற போருக்கு ஆயுதங்களையும், நிதியுதிவிகளையும் வழங்கின எனவும் அவர் குறிப்பிட்டார்.

யாழ்.வைத்தியசாலைக்கு சீன அரசின் நிதியுதவியில் ஐந்து மாடிக் கட்டடம்.

யாழ்.போதனா வைத்தியசாலையில் சீனாவின் நிதியுதிவியுடன் ஐந்து மாடிக்கட்டடம் ஒன்று அமைக்கப்படவுள்ளது. அவசர சிகிச்சை, விபத்துச்சிகிச்சை ஆகிய பிரிவுகளுக்கு சீன அரசின் 775 மில்லியன் ரூபா செலவில் இக்கட்டடம் அமைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் மார்ச் மாதமளவில் இக்கட்டடம் அமைக்கும் பணிகள் ஆரம்ப்பிக்கப்பட உள்ளதாக யாழ்.போதனா வைத்தியசாலை பதில் பணிப்பாளர் எஸ்.சிறிபவானந்தரஜா தெரிவித்துள்ளார்.

யாழ்.வைத்தியசாலையில் நவீன வசதிகளுடனான கட்டடம் ஒன்று அவசர சிக்கசசைப் பிரிவு விபத்துப் பிரிவுகளுக்கு இல்லாத நிலையால் நோயாளிகள் பல சிரமங்களை எதிர் நோக்கி வருவதாகவும், இது குறித்து சீன அரசாங்கத்துடன் நடைபெற்ற பேச்சுவார்த்தைகளை அடுத்து இச்சிகிச்சைப் பிரிவுகளுக்கு நவீன கட்டம் அமைப்பதற்கு இணக்கப்பாடு காணப்பட்டுள்ளது எனவும் அவர் கூறினார்.

டென்மார்க் குளோபல் மெடிகல் எய்ட் உடனான சந்திப்பை முடித்துக் கொண்டு முதலமைச்சர் சந்திரகாந்தன் புறப்பட்டார்.

CM_East_Mathi_K_and_GMA_Hansடென்மார்க்கை தளமாகக் கொண்டு இயங்கும் குளோபல் மெடிக்கல் எய்ட் உடனான சந்திப்புக்கு கிழக்கு மாகாண முதலமைச்சர் சந்த்திரகாந்தன் மற்றும் அவருடைய செயலாளர் அசாட் மெளலானா ஆகியோர் வந்திருந்தனர். எதியோப்பியாவில் இடம்பெற்ற மாநாட்டுக்குச் சென்றிருந்த முதலமைச்சர் சந்திரகாந்தன் ஐரோப்பிய பயணத்தையும் மேற்கொண்டு இருந்தமை குறிப்பிடத்தக்கது. முதலமைச்சர் சந்திரகாந்தன் டென்மார்க் பயணத்தை முடித்துக் கொண்டு இன்று (Dec 23, 2010) ஹோபன்ஹேகனில் இருந்து  புறப்பட்டார்.

குளோபல் மெடிகல் எய்ட் லிற்றில் எய்ட் உடன் இணைந்து மூன்று மில்லியன் டொலர்களுக்கு அதிகமான மருந்துப் பொருட்களை வடக்கு கிழக்குப் பகுதிகளில் இருந்த மருத்துவ மனைகளுக்கு அனுப்பி வைத்தது. மேலும் இவ்விநியோகமும் பின்பற்றப்பட்ட நடைமுறைகளும் சர்வதேச தரத்தில் இருந்ததால் தொடர்ந்தும் மருந்துப் பொருட்களை இலங்கைக்கு அனுப்ப குளோபல் மெடிகல் எய்ட் முன்வந்தது. மருந்துப் பொருட்களின் விநியோகத்தை கிழக்கு மாகாண சபையின் ஆதரவுடனும் அரசாங்கத்தின் உதவியுடனும் வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு வினியோகிப்பதற்கு குளோபல் மெடிகல் எய்ட் தீர்மானித்தது.

குளோபல் மெடிக்கல் ஊடாக பெறப்படும் மருந்துப் பொருட்கள் வடக்கு, கிழக்கில் 30 வருடங்களாக கடுமையான யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு மிகவும் பின்தங்கிய நிலையிலுள்ள மக்களின் சுகாதார மேம்பாட்டிற்காக பயன்படுத்தப்படும்.

CM_East_with_Sec_Azad_and_GMA_Hansஇந்த மருந்துப் பொருட்களை இலங்கையில் பொறுப்பேற்று கிழக்கு மாகாணத்தில் விநியோகத்தை மேற்கொள்வது தொடர்பான உடன்பாட்டை மேற்கொள்ளவே முதலமைச்சர் சந்திரகாந்தனும் அவரது செயலாளரும் டிசம்பர் 22ந் திகதி டென்மார்க் வந்திருந்தனர். மேற்படி விடயங்களை நிறைவுசெய்த பின்னர் அவரது டென்மார்க்கிலுள்ள ஆதரவாளர்களை சந்தித்த அமைச்சர் கிழக்கு மாகாணத்தின் சம கால அரசியல்நிலை தொடர்பாகவும், கிழக்கு மாகாணத்தின் அபிவிருத்தி தொடர்பிலும் அவர்களினது ஆலோசனைகளையும் பெற்றுக்கொண்டு  தங்கள் பயணத்தை முடித்துக் கொண்டு  சுவிஸ் புறப்பட்டு சென்றனர்.

முதலமைச்சர் சந்திரகாந்தன் டென்மார்க் வருவது வெளிவந்ததும் அவர்மீது மனித உரிமை மீறல் வழக்குகளைப் பதிவு செய்யப் போவதாக தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆதரவு அமைப்புகள் எச்சரித்தன. மேலும் முதலமைச்சர் சந்திரகாந்தனை தாக்குவதற்கும் திட்டமிடப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இனப்பிரச்சினைக்கான தீர்வுத்திட்டம் தொடர்பாக ஏனைய தமிழ். முஸ்லிம் கட்சிகளை இணைத்துக் கொள்வது குறித்து ஆராயப்படும் என சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.

Sivajilingam_M_Kஇனப் பிரச்சினைக்கான தீர்வு குறித்த பேச்சு வார்த்தைகளில் தமிழ் கட்சிகளின் அரங்கமும் தமிழ்தேசியக் கூட்டமைப்பும் இணைந்து கொண்டுள்ள நிலையில், இப் பேச்சுவார்த்தைகளில் முஸ்லிம் காங்கிரஸ் உட்பட்ட முஸ்லிம் கட்சிகளையும் மலையகத்தமிழ் கட்சிகளையும் இணைத்துக் கொள்வது குறித்து தமிழ் கட்சிகளின் அரங்கம் தமிழ்தேசியக் கூட்டமைப்புடன் கலந்தாலோசிக்கும் என தமிழ் கட்சிகளின் அரங்கத்தின் பேச்சாளரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.கே சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.

இனப்பிரச்சினை குறித்த பேச்சுக்களில் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியும் இணைந்து கொள்ள விரும்புவதாக தெரிவித்திருந்தது. ஏற்கனவே தமிழ் கட்சிகளின் அரங்கமும் தமிழ்தேசியக்கூட்டமைப்பும் இனப்பிரச்சினைத் தீர்வு குறித்து ஆராய்வதற்காக இரு கட்சிகளிலுமிருந்து தலா மூன்று பேரை நியமித்துள்ள நிலையில், தமிழ் கட்சிகளின் அரங்கம் தமிழ்தேசியக் கூட்டமைப்புடன் மேற்கொள்ளவுள்ள அடுத்த சந்திப்பின் போது குறிப்பிட்ட ஏனைய கட்சிகளை இதில் இணைத்துக் கொள்வது குறித்து தீர்மானிக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

தங்களின் கோரிக்கைக்கு அரசாங்கம் நல்லெண்ணம் தெரிவித்துள்ளது என வடக்கின் வெள்ள நிவாரணப் பணிகளில் கலந்து கொண்டுள்ள கூட்டமைப்பு தெரிவிப்பு

பொது மக்களின் அவலநிலையைப் போக்கவும், அவர்களுக்கான மனிதாபிமானப் பணிகளை மேற்கொள்ளவும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு இலங்கை அரசாங்கத்துடனும், சர்வதேசத்துடனும் தொடர்பு கொண்டு நடவடிக்கைகளை மேற்கொண்டதாகவும் இதன் காரணமாக, நல்லலெண்ண அணுகுமுறையாக மீள்குடியேற்ற அமைச்சர் வடக்கில் பாதிக்கப்பட்டுள்ள பொதுமக்களுக்கு நிவாரணம் வழங்கும் பணிகளில் கூட்டமைப்பையும் கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுத்துள்ளார் என கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 534 குடும்பங்களுக்கு நிவாரணப் பொதிகள் வழங்கும் நிகழ்வு நேற்று புதன் கிழமை யாழ்.பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது. இதில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். மோசமான யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் மீண்டும் மழைவெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இதற்காக கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தில் குரல் கொடுத்துள்ளார்கள். மீள்குடியேற்ற அமைச்சருடன் நேரடியாகவும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதற்கு மீள்குடியேற்ற அமைச்சர் அரசாங்கம் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வடபகுதி மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கவுள்ளதாகவும் இந்நிகழ்வுகளில் தமிழ்தேசியக்கூட்டமைப்பினரையும் கலந்து கொள்ளுமாறும் எழுத்து மூலமான பதிலைத் தந்தார்.
-இவ்வாறு மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.

ஐ.நா.நிபுணர் குழுவிற்கு விசேட சலுகைகள் வழங்கப்படமாட்டாது என நல்லிணக்க ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

ஐ.நா. செயலாளர் நாயகத்திற்கு இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றம் தொடர்பாக ஆலோசனை வழங்க நியமிக்கப்பட்ட நிபுணர்கள்குழு இலங்கைக்கு வருகை தரவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், அக்குழு நல்லிணக்க ஆணைக்குழுவின் முன்பாக சாட்சியமளிக்க முன்வந்தால் நல்லிணக்க ஆணைக்குழுவிடம் கேள்விகள் கேட்க அக்குழுவினருக்கு அனுமதி வழங்கப்பட மாட்டாது எனவும், இக்குழுவினரிடம் நல்லிணக்க ஆணைக்குழுவே கேள்விகள் கேட்கும் எனவும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இந்த நிபுணர் குழுவினர் நல்லிணக்க ஆணைக்குழுவின் முன்பாக சாட்சியமளிக்க முன்வந்தால் விசேட சலுகைகள் எவையும் அவர்களுக்கு வழங்கப்பட மாட்டாது எனவும், இதுவரை சாட்சியமளித்தவர்களுக்கு வழங்கப்பட்ட வழிமுறைகளே அவர்களுக்கும் வழங்கப்படும் எனவும் அவ்வதிகாரி கூறியுள்ளார்.

ஐ.நா.வின் நிபுணர் குழு இலங்கை வருவதற்கு அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ள நிலையில் அரசமட்டத்தில் அதற்கு எதிர்ப்பும் கிளம்பியுள்ளது. இதனால் இந்த நிபுணர்குழு வருகை தருமா? அவ்வாறு தந்தால் நல்லிணக்க ஆணைக்குழுவின் முன்பு அதன் சாட்சியங்களை அளிக்குமா? போன்ற கேள்விகளும் தற்போது எழுந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கொழும்பு நகரில் பாதுகாப்பு கமராக்கள் பொருத்தும் திட்டம் பிற்போடப்பட்டுள்ளது.

camera.jpgகொழும்பு நகரின் பாதுகாப்புக் கருதி கொழும்பின் பல்வேறு பகுதிகளிலும் நேற்று புதன்கிழமை பாதுகாப்பு கமராக்கள் பொருத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்த போதும், தவிர்க்க முடியாத காரணங்களினால் அது பிற்போடப் பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்தப் பாதுகாப்பு கமராக்களை ஒரு வருடத்திற்கு கொழும்பு நகரில் பொருத்தி வைப்பதற்கான திட்டத்தை பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தாபய ராஜபக்ச முன்வைத்திருந்தார். இதற்கான செலவு அதிகம் என்பதால் இத்திட்டத்தை நடைமுறைப் படுத்துவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நேற்று ஆரம்பிக்கப்படவிருந்த இத்திட்டம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும், குற்றச் செயல்களைக் குறைக்கும் நோக்குடனும், கொழும்பு நகரின் கேந்திர நிலையங்களில் 108 பாதுகாப்பு கமராக்களைப் பொருத்த திட்டமிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.