எழுத்தாளர்கள்

எழுத்தாளர்கள்

பொன்சேகாவுக்கு எதிரான குற்றங்களை விசாரிக்க இரு இராணுவ நீதிமன்றங்கள்

sarath_fonseka-02.jpgமுன்னாள் இராணுவ தளபதியும், பாதுகாப்பு படைகளின் முன்னாள் பிரதம அதிகாரியுமான ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு எதிரான விசாரணைகளை முன்னெடுக்கவென மூவர் கொண்ட இரண்டு இராணுவ நீதிமன்றங்கள் நியமிக்கப்பட்டுள்ளன.

இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஜகத் ஜயசூரியவின் பரிந்துரைக்கு அமைய முப்படைகளின் தளபதியான ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இந்த இரு இராணுவ நீதிமன்றங்களை நியமித்துள்ளதாக இராணுவப் பேச்சாளர் மேஜர் ஜெனரல் பிரசாத் சமரசிங்க தெரிவித்தார். எதிர்வரும் 16ம், 17ம் திகதிகளில் கடற்படைத் தலைமையகத்தில் இந்த நீதிமன்றங்களின் ஆரம்ப அமர்வுகள் இடம்பெறவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

சரத் பொன்சேகாவுக்கு எதிராக ஏழு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர் இந்த ஏழு குற்றச்சாட்டுகளும் இரண்டு வகைகளில் இரு நீதிமன்றங்களில் விசாரணைக்கு எடுக்கப்படவுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

இராணுவ சட்டதிட்டங்களுக்கு அமைய நியமிக்கப்பட்டுள்ள நீதிமன்றங்கள் இரண்டிற்கும் மேஜர் ஜெனரல் தரங்களைச் சேர்ந்த மூவர் நியமிக்கப்பட்டுள்ளதுடன், கடற்படையின் ரியர் அட்மிரல் தரத்தை சேர்ந்த ஒருவர் நீதிபதி, அட்வகேட் ஜெனரலாகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.

சரத் பொன்சேகா மீதான குற்றச்சாட்டுகள் தொடர்பில் விசாரணைக்காக நியமிக்கப்பட்ட இராணுவ நீதிமன்றங்கள் தொடர்பாக ஊடகங்களுக்கு விளக்கமளிக்கும் விசேட செய்தியாளர் மாநாடு நேற்றுப் பிற்பகல் நடைபெற்றது. தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையத்தில் நடைபெற்ற இந்த செய்தியாளர் மாநாட்டில் இராணுவப் பேச்சாளர் மேலும் விபரிக்கையில்,

சரத் பொன்சேகாவுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் அடங்கிய சாட்சியங்களின் தொகுப்பு இராணுவத் தளபதிக்கு சமர்ப்பிக்கப்பட்டது. அதனை ஆராய்ந்த அவர் இராணுவ நீதிமன்றத்தை நியமிக்குமாறு முப்படைகளின் தளபதியான ஜனாதிபதியிடம் பரிந்துரைத்தார்.

இதற்கமைய, இரண்டு இராணுவ நீதிமன்றங்களை நியமித்த ஜனாதிபதி மூவர் அடங்கிய குழுமத்தை நியமித்துள்ளார். இதன்படி, இந்த குழுமத்தின் தலைவராக மேஜர் ஜெனரல் எச்.எல் வீரதுங்கவும், உறுப்பினர்களாக மேஜர் ஜெனரல் ஏ.எல்.ஆர். விஜேதுங்க, மேஜர் ஜெனரல் டி.ஆர்.ஏ.பி. ஜயதிலக்க ஆகியோரும், இந்த நீதிமன்றத்தின் நீதிபதி அட்வகேட்டாக கடற்படையைச் சேர்ந்த ரியர் அட்மிரல் டபிள்யூ. டபிள்யூ. ஜே.எஸ். பெர்னாண்டோவும் நியமிக்கப்பட்டுள்ளார் என்றார்.

ஒரே குழுமமே இரண்டு நீதிமன்றங்களிலும் விசாரணைகளை முன்னெடுக்கவுள்ளது. இதன்படி பின்வரும் இரு பிரதான வகைகளில் விசாரிக்கப்படும்

(1) சேவையில் இருந்து கொண்டு அரசியல் நடவடிக்கையில் ஈடுபட்டமை;

(2) இராணுவத்திற்கான கொள்வனவு மற்றும் இராணுவ நடைமுறையை மீறியமை;

மேற்படி இரண்டு வகையில் இந்த விசாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ளது என்றும் சுட்டிக்காட்டினார்.

சரத் பொன்சேகாவுக்கு எதிராக ஏழு குற்றச் சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. இவற்றில் முதலாவது வகையின் கீழ் மூன்று குற்றச்சாட்டுகளும் இரண்டாவது வகையின் கீழ் நான்கு குற்றச்சாட்டுகள் என்ற அடிப்படையில் பிரிக்கப்பட்டுள்ளன.

எதிர்வரும் 16ம் திகதி கடற்படைத் தலைமையகத்தில் நடைபெறவுள்ள முதலாவது நீதிமன்றின் முதலாவது அமர்வின் போது சேவையில் இருந்து கொண்டு அரசியல் நடவடிக்கையில் ஈடுபட்டார். என்ற வகையில் விசாரணைகள் ஆரம்பமாகவுள்ளது.

இராணுவ சட்டத்தின் 124 வது பிரிவின் கீழ் ஒரு குற்றச்சாட்டு, 102/1வது பிரிவின் கீழ் இரண்டு குற்றச்சாட்டுகளுமாக மொத்தம் மூன்று குற்றச்சாட்டுகள் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

எதிர்வரும் 17ம் திகதி நடைபெறவுள்ள இரண்டாவது நீதிமன்றின் முதலாவது அமர்வின் இராணுவ சட்டத்திட்டங்களை மீறியும், ஆலோசனைகளை கருத்திற் கொள்ளாமலும் கொள்வனவு செய்த நடவடிக்கையில் ஈடுபடல் என்ற வகையில் விசாரணைகள் ஆரம்பமாகவுள்ளன.

இராணுவ சட்டத்தின் 109 (ரி) பிரிவின் கீழ் நான்கு குற்றச்சாட்டுகள் தொடர்பில் இங்கு விசாரணை முன்னெடுக்கப்படவுள்ளது என்றும் குறிப்பிட்டார்.

தற்போது நியமிக்கப்பட்ட மூவர் அடங்கிய குழுமத்திற்கே ஆட்சேபனை தெரிவிக்கும் பட்சத்தில் நியமிக்கவென மேலதிகமாக மேலும் நால்வர் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். சகல நீதிமன்ற அமர்வுகளும் ஒலி, ஒளி பதிவுகள் செய்யப்படும் என்றும் இராணுவப் பேச்சாளர் சுட்டிக்காட்டினார்.

ஐ.ம.சு.மு அரசின் அமைச்சரவையில் பாரிய மாற்றம்: எண்ணிக்கையும் குறையும் – சுசில் பிரேம் ஜயந்த

spj.jpgதேர்தலின் பின்னர் பெரும்பான்மை பலத்துடன் உருவாக்கப்படும் ஐ.ம.சு. முன்னணி அரசின் கீழ் அமைச்சரவையில் பாரிய மாற்றங்கள் செய்யப்படுவதுடன் அமைச்சுக்களின் எண்ணிக்கையும் வெகுவாக குறைக்கப்படும் என அமைச்சர் சுசில் பிரேம் ஜயந்த தெரிவித்துள்ளார். தற்போது 80 அமைச்சுக்களாக இருக்கும் அனைத்து அமைச்சுக்களும் ஒருங்கிணை க்கப்பட்டு சுமார் 35 அமைச்சுக்களாகக் குறைக்கப்படும்.

உதாரணமாக கல்வித் துறையில் மூன்று அமைச்சுக்கள் வெவ்வேறு துறை களுக்கு உண்டு. இனிவரும் அரசின் கீழ் பலம்வாய்ந்த அமைச்சரவை அந்தஸ்துள்ள ஒரே அமைச்சின் கீழ் கல்வித் துறை சார்ந்த அனைத்து பிரிவுகளும் உள்ளடங்கும் விதத்தில் நியமிக்கப்படுவதுடன் மூன்று பிரதி அமைச்சுப் பொறுப்புக்களும் வழங்கப்படலாம் என்றும் அமைச்சர் சுசில் தெரிவித்தார்.

கொழும்பு புதிய நகர மண்டபத்தில் பல்கலைக்கழக சமூகத்தினரை சந்தித்து உரையாடியபோதே அமைச்சர் இத்தகவலைத் தெரிவித்தார்.

“நடைபெறவுள்ள தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசு நிச்சயமாக வெற்றிபெறும். இது பற்றி எமக்கு எவ் வித சந்தேகமும் இல்லை. எமது நோக்கம் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெறுவதே. எதிர்க்கட்சியினர் இப்போதே தோல்வியை ஒப்புக்கொண்டுவிட்டனர். எதிர்க்கட்சித் தலைவர் மூன்றிலிரண்டு பெரும்பான்மையை கொடுக்க வேண்டாம் எனக் கூறுகிறார். அதாவது 150 ஆசனங்களைக் கொடுக் வேண்டாம் என்கிறார். அதாவது 149 ஆசனங்களை வழங்குமாறு தானே கூறுகிறார். இதனூடாக எதிர்க்கட்சித் தலைவர் தோல்வியை இப்போதே ஒப்புக்கொண்டிருக்கிறார்.

மூண்றிலிரண்டு பெரும்பான்மை ஏன் தேவைப்படுகிறது? என்பது பற்றியும் அமைச்சர் விளக்கமளித்தார்.

அடுத்த மாதம் முதல் ஓமந்தை வரை ரயில் சேவை

sri-lanka-railway.jpgயாழ் தேவி ரயில் சேவை அடுத்த மாதம் முதல் ஓமந்தை வரை நீடிக்கப்படுமென ரயில்வே திணைக்களம் தெரிவித்தது. தாண்டிக்குளத்தில் இருந்து ஓமந்தை வரையான 10 கிலோ மீட்டர் தூர ரயில் பாதையை மீளமைக்கும் பணிகள் பெருமளவு முடிவடைந்துள்ளதாக பதில் ரயில்வே பொது முகாமையாளர் சந்ரதிலக கூறினார். 200 மீட்டர் நீளமான ஓமந்தை ரயில் நிலையத்தின் முதலாம் கட்டப் பணிகள் இம்மாத இறுதிக்குள் பூர்த்தி செய்யப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

யுத்த சூழ்நிலை காரணமாக வடபகுதிக்கான ரயில் சேவைகள் பல வருடங்களாக தடைப்பட்டன.

ஜனாதிபதியின் பணிப்புரையையடுத்து வவுனியாவில் இருந்து தாண்டிக்குளம் வரையான ரயில்பாதை துரிதமாக மீளமைக்கப்பட்டதோடு அடுத்த மாதம் முதல் தாண்டிக்குளத்தில் இருந்து ஓமந்தை வரையில் ரயில் சேவைகள் ஆரம்பிக்கப்படவுள்ளன.

400 மில்லியன் ரூபா செலவில் ரயில் பாதைகள் மீளமைக்கப்பட்டு வருவதோடு ஓமந்தை ரயில் பாதையை மீளமைக்க 3.6 மில்லியன் ரூபா செலவிடப்படவுள்ளது. பிரதியமைச்சர் லயனல் பிரேமசிறி மன்றம் ரயில் நிலையத்தை நிர்மாணிக்கும் பணியை பொறுப்பேற்றுள்ளது.

சரத் பொன்சேகாவுக்கு எதிரான வழக்கு 16 ஆம் 17 ஆம் திகதிகளில் விசாரணை.

sarath_fonseka-02.jpgஇராணுவச் சட்டங்களை மீறினார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள ஜெனரல் பொன்சேகா மீதான வழக்கு விசாரணை எதிர்வரும் 16 மற்றும் 17 ஆம் திகதிகளில் கடற்படைத் தலைமையகத்தில் அமைந்துள்ள இராணுவ நீதி மன்றில் நடைபெறவிருப்பதாக இராணுவப் பேச்சாளர் மேஜர் ஜெனரல் பிரசாத் சமரசிங்க தெரிவித்தார்.

இராணுவச் சட்டத்தின் 124 ஆம் சரத்தின் கீழ் ஒரு குற்றச்சாட்டும் 102 ஆம் சரத்தின்; கீழ் இரு குற்றச்சாட்டுக்களும் ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை இராணுவத்துக்கு உபகரணங்கள் கொள்வனவு செய்ததில் நடைபெற்றுள்ளதாகக் கூறப்படும் ஊழல்கள் தொடர்பில் மேலும் நான்கு குற்றச்சாட்டுக்கள் இராணுவச் சட்டத்தின் 109 ஆவது சரத்தின் கீழ் சுமத்தப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். 

ஜான்சிலா மஜீதுக்கு விருது வழங்கினார் ஹிலரி கிளின்டன்

hillary_with-majeed.jpgதுணிச்சல் மிக்க பெண்களுக்கு வழங்கப்படும் சர்வதேச உயர் விருது இலங்கையைச் சேர்ந்த முஸ்லிம் பெண்மணியான ஜான்சிலா மஜீதுக்கு நேற்று வழங்கப்பட்டது.

வொஷிங்டனிலுள்ள அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தில் நடைபெற்ற வைபவத்தில் அமெரிக்க இராஜங்கச் செயலாளர் ஹிலரி  கிளின்டன்  இந்த விருதை வழங்கினார். இந்த விருது வழங்கும் நிகழ்வில் அமெரிக்க முதற் பெண்மணி மிச்சேல் ஒபமா கலந்துகொண்டு உரையாற்றினார்.

வடக்கு, மற்றும் கிழக்குப் பகுதிகளில் 20 வருடகாலமாக இடம்பெயர்ந்த மக்கள் மத்தியில் பணியாற்றியமைக்காகவே ஜான்சிலா மஜீதுக்கு சர்வதேச பெண்களுக்கான உயர் விருது கிடைத்துள்ளது.
 
சர்வதேச பெண்களுக்கான உயர் விருது சர்வதேச நாடுகளிலிருந்து தெரிவுசெய்யப்பட்ட 10 பேருக்கு நேற்று வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

ஜீ.15 நாடுகளின் அடுத்த தலைவர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ?

he_the_president.jpgஜீ.15  நாடுகளின் அடுத்த தலைவராக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நியமிக்கப்படவுள்ளாரென அறிவிக்கப்படுகின்றது. ஜீ. 15 அமைப்பில் 17 நாடுகள் அங்கம் வகிக்கின்றன. இந்த நாடுகளின் உச்சி மாநாடு எதிர்வரும் மே மாதம் நடைபெறும்போது அதன் புதிய தலைவராக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவு செய்யப்படவுள்ளதாக நம்பகமான தகவல்கள் தெரிவிக்கின்றன.

அல்ஜீரியா, ஆர்ஜன்டீனா, பிரேஸில், சிலி, எகிப்து, இந்தியா, இந்தோனேஷியா, ஈரான், ஜமெய்கா, கென்யா, மலேசியா, மெக்ஸிகோ, நைஜீரியா, செனகல், ஸ்ரீலங்கா, வெனிசுலா, மற்றும் ஸிம்பாப்வே ஆகிய 17 நாடுகள் இந்த ஜீ 15 அமைப்பில் அங்கத்துவம் வகிக்கின்றன.

இதன் தற்போதைய தலைமைத்துவத்தை ஈரான் வகிக்கின்றது. அடுத்த தலைமைத்துவத்துக்கு மிகப்பொருத்தமானவா ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவே என அந்நாடுகள் தீர்மானித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

உள்நாட்டு பிரச்சினைக்கு அரசியல் தீர்வூ காண்பதற்கு சிறந்த வாய்ப்பு! வெளிவிவகார அமைச்சருடனான சந்திப்பில் பீற்றர் றிக்கெட்ஸ்

rohitha_and.jpgஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பெற்றுள்ள மக்கள் ஆணையும் மோதல்கள் முடிவடைந்த நிலையும் உள்நாட்டு பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காண்பதற்கு சிறந்த வாய்ப்பாகும் என பிரித்தானிய வெளிவிவகார அமைச்சின் செயலாளர் பீற்றர் றிக்கெட்ஸ் தெரிவித்துள்ளார். இலங்கைக்கு விஜயம் செய்துள்ள பிரித்தானிய வெளிவிவகார அமைச்சின் செயலாளர் பீற்றர் றிக்கெட்ஸ் நேற்று இலங்கை வெளிவிவகார அமைச்சர் ரோஹித போகொல்லாகமவை அமைச்சில் சந்தித்து கலந்துரையாடினார்.

இச்சந்திப்பின் போது வடக்கு, கிழக்கில் மோதல்கள் காரணமாக இடம்பெயர்ந்தோர் குறித்தும் கலந்துரையாடப்பட்டுள்ளது. இடைத்தங்கல் முகாம்களில் தங்க வைக்கப்பட்டிருந்த இம்மக்கள் அங்கிருந்து விடுவிக்கப்பட்டு மீள்குடியேற்றப்பட்டதை பீற்றர் றிக்கெட்ஸ் வரவேற்றுள்ளார்.

அத்துடன் இடம்பெயர்ந்த மக்கள் சுதந்திரமாக நடமாடுவதற்கும் மீள்குடியேற்றம் நிறைவடைவதற்கும் மற்றும் இடம்பெயர்ந்த மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கும் ஏப்ரல் மாத தேர்தலை நீதியாகவும், நியாயமாகவும் நடத்தவும் இலங்கைக்கு பிரித்தானியா உதவும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்

ஐரோப். ஆணைக்குழுவிடம் பேச்சு நடத்த அரச உயர்மட்ட குழு பிரஸல்ஸ் பயணம்

gl-p.jpgசர்வதேச அரங்கிற்கு இலங்கையின் உண்மை நிலையை எடுத்துச் செல்லும் வகையில் அரசாங்கம் ஐரோப்பிய ஆணைக் குழுவிடம் உயர்மட்ட பேச்சுவார்த்தை யொன்றை நடத்தவுள்ளது. இதற்கென அரசாங்கத்தின் உயர்மட்ட தூதுக் குழுவொன்று எதிர்வரும் 15 ஆந் திகதி திங்கட்கிழமை பிரஸல்ஸ் செல்கின்றது.

இந்தக் குழுவில் நிதியமைச்சின் செயலாளர் பீ. பி. ஜயசுந்தர, வெளிவிவகார அமைச்சின் செயலாளர் ரொமேஷ் ஜயசிங்க, நீதி, சட்ட மறுசீரமைப்பு அமைச்சின் செயலாளர் சுகத கம்லத், சட்ட மா அதிபர் மொஹான் பீரிஸ் ஆகியோர் இடம்பெறுவதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் பேராசிரியர் ஜீ. எல். பீரிஸ் தெரிவித்தார்.

ஜீ. எஸ். பீ. பிளஸ் சலுகை உட்பட இலங்கை நலன் தொடர்பான முக்கிய விடயங்கள் குறித்து ஐரோப்பிய ஆணைக் குழுவுடன் உயர்மட்ட பேச்சுவார்த்தை நடத்தப்படுமென அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (10) முற்பகல் நடைபெற்ற செய்தியா ளர் மாநாட்டில் பேராசிரியர் பீரிஸ் தெரிவித்தார்.

வெளிநாடுகளின் அரசியல் நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்வ தற்காக இலங்கையின் நலன் பாதிக்கப்படுவதற்கு இடமளிக்க முடியாததென்று கூறிய அமைச்சர் பீரிஸ் இதற்கான நிலையானதும், பலமானதுமான ஓர் அரசாங்கம் இருக்க வேண்டுமென்பதை நாட்டு மக்கள் நன்கு புரிந்துகொண்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

இலண்டனில் நடந்த சர்வதேச தமிழர் அமைப்பின் மாநாட்டில் பிரிட்டிஷ் வெளிவிவகார அமைச்சர் டேவிட் மிலிபாண்ட் கலந்துகொண்டுள்ளார். இந்த மாநாட்டில் எமது நாட்டுக்குப் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய மூன்று தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. இதில் முதலாவது : எமது இராணுவ அதிகாரிகளை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்துவது, இரண்டாவது : இலங்கை உற்பத்திப் பொருள்களைப் பகிஷ்கரிப்பது, மூன்றாவது : சுயநிர்ணய உரிமையை அங்கீகரிப்பது. போன்ற தீர்மானங்களை நிறைவேற்றியுள்ளனர். நாடு கடந்த எல். ரி. ரி. ஈ. அரசாங்கத்தை அமைப்பதற்கு கூறியுள்ளார்கள். இந்த நிலையில் ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் பான் கீ மூன் யுத்தக் குற்றங்கள் தொடர்பில் ஆராயவென மூவர்கொண்ட நிபுணர்களை நியமிக்கப் போவதாகக் கூறுகிறார்.

இது எந்த வகையிலும் நியாயமானதல்ல’ என்று குறிப்பிட்ட பேராசிரியர் ஜீ. எல். பீரிஸ், பான் கீ மூன் மேற்கொள்ள உத்தேசித்துள்ள நடவடிக்கையானது முற்றிலும் ஐ. நா. சபையின் கொள்கைகளை மீறும் செயலாகுமென்று சுட்டிக்காட்டினார்.’ சில மாதங்களுக்கு முன்னர் ஜெனீவாவில் நடைபெற்ற மனித உரிமைகள் மாநாடு, ஐ. நா. பாதுகாப்புச் சபை ஆகியவற்றில் இலங்கைக்குச் சார்பாக பல நாடுகள் குரல் எழுப்பியிருந்தன.

அவ்வாறு இலங்கையின் உண்மை நிலவரத்தை அறிந்த நாடுகள் கூட தலையிட முடியாதவாறு செயலாளர் நாயகம் பான் கீ மூனின் அலுவலகத்துடன் மாத்திரம் கட்டுப்படுத்தப்பட்டதான ஒரு நடவடிக்கையை மேற்கொள்ள அவர் முயற்சிப்பது ஐ. நா. சாசனத்திற்கு விரோதமானதாகும். சர்வதேசத்துடன் நல்லுறவைப் பேணுவதற்குத் தயார்.

ஒரு சவாலை வென்றுள்ள நாட்டுக்கு, பொருளாதார சவாலையும் வெல்ல வேண்டியுள்ளது. இதற்கு சர்வதேச நாடுகள் இடமளிக்க வேண்டும். அதேநேரம், அந்த நாடுகளின் அரசியல் இலாபத்திற்காக எமது நாட்டின் நலன் பாதிக்க இடமளிக்க முடியாது. வாக்குகளைப் பெறவும் தேர்தலுக்கு நிதியைப் பெற் றுக்கொள்ள நமது நாட்டைப் பலிகொடுக்க முடியாது. இதனைக் கருதிற்கொண்டுதான் ஐரோப்பிய ஆணைக் குழுவுடன் பேச்சு நடித்த அரசாங்கம் தீர்மானித்ததென்று அமைச்சர் குறிப்பிட்டார்.

தகவல் திணைக்களப் பணிப்பாளர் அனுஷ பல்பிட்டவும் கலந்துகொண்ட இந்த செய்தியாளர் மாநாட்டில் மேலும் தகவல் வழங்கிய அமைச்சர், ‘எதிர்க் கட்சி தொடர்பாக ஜனாதிபதி தேர்தலின் போது நாம் தெரிவித்த கருத்துகள் இன்று நிரூபணமாகியுள்ளன. எதிர்க் கட்சிக் கூட்டு இன்று மூன்று பிரிவுகளாகியுள்ளது.

அவர்கள் அதிகாரத்திற்கு வந்திருந்தால் எப்படி இருந்திருக்கும்! இந்தத் தேர்தலில் அரசாங்கம் வெல்லும் என்பதை அவர்கள் ஏற்றுக்கொண்டுள்ளார்கள். எதிர்க்கட்சி வெல்லும் நோக்கத்திலோ, அரசாங்கத்தினை அமைக்கும் நோக்கத்திலோ தேர்தலில் போட்டியிடவில்லை. அர சாங்கத்திற்கு மூன்றில் இரண்டு கிடைப் பதைத் தடுக்கவே முயற்சிக்கின்றது.

ஆனால், அரசாங்கத்திற்குப் பூரண ஆத ரவை வழங்கி மூன்றிலிரண்டு பெரும் பான்மையைப் பெற்றுக் கொடுப்பதென மக்கள் தீர்மானித்து விட்டார்கள். புலிகள் இயக்கம் இராணுவ ரீதியில் தோற்கடிக் கப்பட்டாலும் வெளிநாடுகளில் அச்சுறுத்தல் இன்னமும் உள்ளதை மக்கள் புரிந்து கொண்டார்கள்’ என்றும் அமைச்சர் மேலும் கூறினார்.

“2/3 பெரும்பான்மை பலத்துடன் அரசியல் யாப்பில் பல மாற்றங்கள்”

srisena.jpgநிறை வேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையின் கீழ் நடைபெறும் இறுதித் தேர்தலாகவே எதிர்வரும் பொதுத் தேர்தல் அமையும். மக்களின் 2/3 பெரும்பான்மை பலத்தைப்பெற்று அரசியல் யாப்பில் உள்ள பல விடயங்களை அரசாங்கம் மாற்ற உள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி செயலாளரும் அமைச்சருமான மைத்திரிபால சிரிசேன தெரிவித்தார்.

ஜனாதிபதித் தேர்தலைப் போலவே இந்த தேர்தலிலும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கே வாக்களிக்குமாறு மக்களைக் கோருகிறோம். வடக்கு, கிழக்கு உட்பட நாடு முழுவதும் உள்ள 70 வீதத்திற்கும் அதிகமான மக்கள் ஐ.ம.சு. முன்னணியின் வெற்றிக்குப் பங்களிக்க உள்ளனர். எதிர்க்கட்சிகள் தரப்பில் இருந்து இந்த தேர்தலில் எதுவித போட்டியும் இல்லாததால் தேர்தல் பிரசாரங்கள் மந்தமாகவே உள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் மாநாடு நேற்று (10) மகாவலி நிலையத்தில் நடைபெற்றது. இங்கு கருத்துத் தெரிவித்த அமைச்சர், மேலும் கூறியதாவது, நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலில் ஐ.ம.சு. முன்னணிக்கு 60 வீத வாக்குகளை மக்கள் வழங்கினர். பயங்கரவாத்தை ஒழித்து நாட்டில் அமைதியை ஏற்படுத்தியதற்கு மக்கள் தமது நன்றிக் கடனை செலுத்தினர். எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலிலும் மஹிந்த ராஜபக்ஷவுக்கு மக்கள் இரண்டாவது தடவையாக வாக்களிக்க வேண்டுகிறோம்.

மஹிந்த சிந்தனை தொலைநோக்கு திட்டத்தில் உள்ள விடயங்களை செயற்படுத்த இலங்கையை சுபீட்சமான நாடாக கட்டியெழுப்புவதற்கும் சர்வதேச அழுத்தங்களுக்கு முகம்கொடுப்பதற்கும் பலமான அரசாங்கமொன்று தேவை. எனவே ஜனாதிபதித் தேர்தலில் வழங்கியதை விட அதிக வாக்குகள் வித்தியாசத்தில் ஐ.ம.சு. முன்னணியை வெற்றிபெறச் செய்யுமாறு மக்களை கோருகிறோம்.

கடந்த ஜனாதிபதித் தேர்தல் போலன்றி இம்முறை வடக்கு கிழக்கிலுள்ள மக்கள் மஹிந்த ராஜபக்ஷவுடனே உள்ளனர். விகிதாசார தேர்தல் முறையின் கீழ் முதற்தடவையாக 2/3 பெரும்பான்மை பலத்தை மக்கள் எமக்கு வழங்க உள்ளனர். இதனூடாக 1978ஆம் ஆண்டின் அரசியல் யாப்பை திருத்த உள்ளோம். முதலில் தேர்தல் முறையை மாற்றவும் அடுத்த 17ஆவது திருத்தத்தின் கீழ் உள்ள சுயாதீன ஆணைக்குழுக்களுக்கான அதிகாரங்களை அதிகரிக்கவும் முறையாக அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும். அரசியலமைப்பு சபைக்கு உறுப்பினர்களை நியமிப்பதில் உள்ள சிக்கலும் தீர்க்கப்படும். யாப்பில் உள்ள அதிகமான விடயங்களை 2/3 பெரும்பான்மை பலத்துடன் மாற்ற முடியும். சில விடயங்களை திருத்தவே சர்வஜன வாக்கெடுப்பு நடத்தவேண்டியுள்ளது.

தேர்தலில் வெற்றியீட்ட முடியாது என்பதால் ஐ.தே.க. செயலாளர் இம்முறை தேர்தலில் போட்டியிடாமல் தேசியப் பட்டியலினூடாக பாராளுமன்றம் வரத்திட்டமிட்டுள்ளார். ஆனால் ஐ.ம.சு. முன்னணி செயலாளர் சுசில் பிரேம் ஜெயந்த்தும் சு.க. செயலாளரான நானும் இம்முறை தேர்தலில் போட்யிடுகிறோம்.

நாம் பிரதமர் வேட்பாளராக எவரையும் அறிவிக்கமாட்டோம். 1978ஆம் ஆண்டின் பின் ஒருபோதும் பிரதமர் வேட்பாளர் ஒருவர் அறிவிக்கப்படவில்லை. வெற்றிபெரும் கட்சி எம்.பி.களிடையே கூடுதல் விருப்புள்ள நபர் ஜனாதிபதியினால் பிரதமராக நியமிக்கப்படுவார். பிரதமர் நியமனம் தொடர்பில் ஐ.ம.சு. முன்னணி கூட்டுக் கட்சிகளிடையே எதுவித பிரச்சினையும் கிடையாது என்றார்.

சகலரும் சம உரிமையுடன் வாழும் வாய்ப்பு கிடைத்துள்ளது – யாழ்ப்பாணத்தில் இராணுவ தளபதி

jj.jpgஒற்றை யாட்சியின் கீழ் ஜனாதிபதியின் தலைமைத்துவத்துடன் அனைவரும் சுதந்திரமாக சம உரிமையுடன் வாழும் வாய்ப்பு கிடைத்திருப்பதாக இராணுவத் தளபதி ஜகத் ஜயசூரிய கூறினார். மக்களுடனான நல்லுறவுகளை தொடர்ந்து பேணும் நோக்கில் இராணுவ அலுவலக மொன்றை நேற்று யாழ்ப்பாணத்தில் திறந்து வைத்துப் பேசிய போதே அவர் இவ்வாறு கூறினார்.

இனப் பிரச்சினையை அரசியல் தலைவர்கள் அதிகாரத்தை கைப்பற்றுவதற்கு பயன்படுத்தும் அதிகாரத்தை தொடர்ந்து பேணுவதற்கும், அதன் மூலம் அரசியல் லாபம் சம்பாதிக்கும் சுயநலமிக்க யுகத்தை ஜனாதிபதி முடிவுக்கு கொண்டு வந்துள்ளார்.

உயர் பாதுகாப்பு வலயத்துக்குள் வரும் தெல்லிப்பளை மற்றும் திரு நெல்வேலியில் உள்ள வீடுகள், கட்டடங்கள் மற்றும் வயல் நிலங்களை மீண்டும் அவற்றின் சொந்தக்காரர்களுக்கே கையளிக்கும் நடவடிக்கை விரைவில் மேற்கொள்ளப்படும்.

அதேவேளை தெல்லிப்பளை புற்றுநோய் ஆஸ்பத்திரி, தள வைத்தியசாலை ஆகியவை உயர் பாதுகாப்பு வலயத்தில் இருந்து அகற்றப்படும் என்று அவர் உறுதியளித்தார்.