“2/3 பெரும்பான்மை பலத்துடன் அரசியல் யாப்பில் பல மாற்றங்கள்”

srisena.jpgநிறை வேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையின் கீழ் நடைபெறும் இறுதித் தேர்தலாகவே எதிர்வரும் பொதுத் தேர்தல் அமையும். மக்களின் 2/3 பெரும்பான்மை பலத்தைப்பெற்று அரசியல் யாப்பில் உள்ள பல விடயங்களை அரசாங்கம் மாற்ற உள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி செயலாளரும் அமைச்சருமான மைத்திரிபால சிரிசேன தெரிவித்தார்.

ஜனாதிபதித் தேர்தலைப் போலவே இந்த தேர்தலிலும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கே வாக்களிக்குமாறு மக்களைக் கோருகிறோம். வடக்கு, கிழக்கு உட்பட நாடு முழுவதும் உள்ள 70 வீதத்திற்கும் அதிகமான மக்கள் ஐ.ம.சு. முன்னணியின் வெற்றிக்குப் பங்களிக்க உள்ளனர். எதிர்க்கட்சிகள் தரப்பில் இருந்து இந்த தேர்தலில் எதுவித போட்டியும் இல்லாததால் தேர்தல் பிரசாரங்கள் மந்தமாகவே உள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் மாநாடு நேற்று (10) மகாவலி நிலையத்தில் நடைபெற்றது. இங்கு கருத்துத் தெரிவித்த அமைச்சர், மேலும் கூறியதாவது, நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலில் ஐ.ம.சு. முன்னணிக்கு 60 வீத வாக்குகளை மக்கள் வழங்கினர். பயங்கரவாத்தை ஒழித்து நாட்டில் அமைதியை ஏற்படுத்தியதற்கு மக்கள் தமது நன்றிக் கடனை செலுத்தினர். எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலிலும் மஹிந்த ராஜபக்ஷவுக்கு மக்கள் இரண்டாவது தடவையாக வாக்களிக்க வேண்டுகிறோம்.

மஹிந்த சிந்தனை தொலைநோக்கு திட்டத்தில் உள்ள விடயங்களை செயற்படுத்த இலங்கையை சுபீட்சமான நாடாக கட்டியெழுப்புவதற்கும் சர்வதேச அழுத்தங்களுக்கு முகம்கொடுப்பதற்கும் பலமான அரசாங்கமொன்று தேவை. எனவே ஜனாதிபதித் தேர்தலில் வழங்கியதை விட அதிக வாக்குகள் வித்தியாசத்தில் ஐ.ம.சு. முன்னணியை வெற்றிபெறச் செய்யுமாறு மக்களை கோருகிறோம்.

கடந்த ஜனாதிபதித் தேர்தல் போலன்றி இம்முறை வடக்கு கிழக்கிலுள்ள மக்கள் மஹிந்த ராஜபக்ஷவுடனே உள்ளனர். விகிதாசார தேர்தல் முறையின் கீழ் முதற்தடவையாக 2/3 பெரும்பான்மை பலத்தை மக்கள் எமக்கு வழங்க உள்ளனர். இதனூடாக 1978ஆம் ஆண்டின் அரசியல் யாப்பை திருத்த உள்ளோம். முதலில் தேர்தல் முறையை மாற்றவும் அடுத்த 17ஆவது திருத்தத்தின் கீழ் உள்ள சுயாதீன ஆணைக்குழுக்களுக்கான அதிகாரங்களை அதிகரிக்கவும் முறையாக அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும். அரசியலமைப்பு சபைக்கு உறுப்பினர்களை நியமிப்பதில் உள்ள சிக்கலும் தீர்க்கப்படும். யாப்பில் உள்ள அதிகமான விடயங்களை 2/3 பெரும்பான்மை பலத்துடன் மாற்ற முடியும். சில விடயங்களை திருத்தவே சர்வஜன வாக்கெடுப்பு நடத்தவேண்டியுள்ளது.

தேர்தலில் வெற்றியீட்ட முடியாது என்பதால் ஐ.தே.க. செயலாளர் இம்முறை தேர்தலில் போட்டியிடாமல் தேசியப் பட்டியலினூடாக பாராளுமன்றம் வரத்திட்டமிட்டுள்ளார். ஆனால் ஐ.ம.சு. முன்னணி செயலாளர் சுசில் பிரேம் ஜெயந்த்தும் சு.க. செயலாளரான நானும் இம்முறை தேர்தலில் போட்யிடுகிறோம்.

நாம் பிரதமர் வேட்பாளராக எவரையும் அறிவிக்கமாட்டோம். 1978ஆம் ஆண்டின் பின் ஒருபோதும் பிரதமர் வேட்பாளர் ஒருவர் அறிவிக்கப்படவில்லை. வெற்றிபெரும் கட்சி எம்.பி.களிடையே கூடுதல் விருப்புள்ள நபர் ஜனாதிபதியினால் பிரதமராக நியமிக்கப்படுவார். பிரதமர் நியமனம் தொடர்பில் ஐ.ம.சு. முன்னணி கூட்டுக் கட்சிகளிடையே எதுவித பிரச்சினையும் கிடையாது என்றார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 Comments

  • John
    John

    இந்த மாற்றங்கள் இல-இந்திய ஒப்பந்தங்கில் உள்ள பலவிடயங்களை வட கிழக்கில் அமுல்படுத்தும் வகையிலான மாற்றங்களாக இருக்க வேண்டும் 13 சரத்தில் நிச்சயம் மாற்றம் கொண்டுவர வேண்டும்.

    Reply
  • தமிழ்வாதம்
    தமிழ்வாதம்

    மக்களின் 2/3 பெரும்பான்மை பலத்தைப்பெற்று இல்லாவிடில் கடவுளிட்டையும் ஒருக்கா கேட்டிட்டு அரசியல் யாப்பில் உள்ள பல விடயங்களை மாற்றம் செய்யுங்கோ

    Reply