ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பெற்றுள்ள மக்கள் ஆணையும் மோதல்கள் முடிவடைந்த நிலையும் உள்நாட்டு பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காண்பதற்கு சிறந்த வாய்ப்பாகும் என பிரித்தானிய வெளிவிவகார அமைச்சின் செயலாளர் பீற்றர் றிக்கெட்ஸ் தெரிவித்துள்ளார். இலங்கைக்கு விஜயம் செய்துள்ள பிரித்தானிய வெளிவிவகார அமைச்சின் செயலாளர் பீற்றர் றிக்கெட்ஸ் நேற்று இலங்கை வெளிவிவகார அமைச்சர் ரோஹித போகொல்லாகமவை அமைச்சில் சந்தித்து கலந்துரையாடினார்.
இச்சந்திப்பின் போது வடக்கு, கிழக்கில் மோதல்கள் காரணமாக இடம்பெயர்ந்தோர் குறித்தும் கலந்துரையாடப்பட்டுள்ளது. இடைத்தங்கல் முகாம்களில் தங்க வைக்கப்பட்டிருந்த இம்மக்கள் அங்கிருந்து விடுவிக்கப்பட்டு மீள்குடியேற்றப்பட்டதை பீற்றர் றிக்கெட்ஸ் வரவேற்றுள்ளார்.
அத்துடன் இடம்பெயர்ந்த மக்கள் சுதந்திரமாக நடமாடுவதற்கும் மீள்குடியேற்றம் நிறைவடைவதற்கும் மற்றும் இடம்பெயர்ந்த மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கும் ஏப்ரல் மாத தேர்தலை நீதியாகவும், நியாயமாகவும் நடத்தவும் இலங்கைக்கு பிரித்தானியா உதவும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்