எழுத்தாளர்கள்

எழுத்தாளர்கள்

ஜீ.எஸ்.பீ.பிளஸ் வரிச்சலுகையை மேலும் 6 மாதங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது

இலங்கைக்கு வழங்கும் ஜீ.எஸ்.பீ.பிளஸ் வரிச்சலுகையை மேலும் 6 மாதங்களுக்கு நீடிப்பதாக ஐரோப்பிய ஒன்றியம் இலங்கை அரசாங்கத்திற்கு அறிவித்துள்ளது. யுத்தத்திற்கு பின்னர் அரசாங்கம் முன்னெடுக்கும் வடக்கு கிழக்கு மக்களின் மேன்பாட்டுத் திட்டம் உள்ளிட்ட விடயங்களை கருத்தில் கொண்டு இந்த வரி நிவாரணத்தை நீடிக்க ஐரோப்பிய ஒன்றியம் தீர்மானித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஐரோப்பிய ஒன்றியம் வழங்கி வந்த ஜீ.எஸ்.பீ.பிளஸ் வரிச்சலுகையை எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 15 ஆம் திகதி இடைநிறுத்த ஒன்றியம் இதற்கு முன்னர் தீர்மானித்திருந்தது. இந்த நிலையில் ஐரோப்பிய ஒன்றியத்தின் புதிய முடிவுக்கு அமைய எதிர்வரும் 2011 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் வரை ஆடை உற்பத்திகள் உள்ளிட்ட 3 ஆயிரத்து 200 பொருட்களை வரி விலக்குடன் ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் வாய்ப்பு இலங்கைக்கு கிடைத்துள்ளது.

எதிர்வரும் ஆகஸ்ட் மாதத்துடன் ஜீ.எஸ்.பீ.பிளஸ் வரிச்சலுகையை இடைநிறுத்த ஐரோப்பிய ஒன்றியம் தீர்மானித்தை அடுத்து ஜனாதிபதியின் ஆலோசனையின் பேரில் நிதியமைச்சின் செயலாளர், சட்டமா அதிபர் உள்ளிட்ட குழுவினர் பிரசல்ஸ் சென்று இலங்கை சார்பில் நியாயங்களை முன்வைத்திருந்தனர்.

பால்மா விலைகள் நள்ளிரவு முதல் அதிகரிப்பு

பால்மாவின் விலைகள் நேற்று நள்ளிரவு முதல் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்தார்.

இதன்படி, 400 கிராம் பால்மா பக்கற் 19 ரூபாவினாலும், ஒரு கிலோ பால்மா பக்கற் 48 ரூபாவினாலும் அதிகரிக்கப்பட்டுள்ளன.உலக சந்தையில் பால்மாவின் விலை அதிகரிக்கப்பட்டுள் ளதாலேயே இந்த விலை மீளமைப்பு செய்யப்பட்டுள்ளதாக நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர் ரூமி மர்சூக் தெரிவித்தார்.

புதிய விலைப்பட்டியலின்படி 400 கிராம் பால்மா பக்கற் 225 ரூபாவிலிருந்து 244 ரூபாவாக வும், ஒரு கிலோ பால்மா பக்கற் 550 ரூபாவிலிருந்து 598 ரூபா வாகவும் விற்பனை செய்யப் படும். இதேவேளை, விலைப்பட்டியல் பொதுமக்களின் பார்வைக்கு வைக்காமை, அதிக விலைக்கு பொருட்களை விற்பனை செய்தமை, பற்றுச்சீட்டு வழங்காமை, மோசடி போன்றவற்றுக்காக 360 பேர் மீது வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் ரூமி மர்சூக் தெரிவித்தார். நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபையின் சுற்றிவளைப்பு பிரிவு தொடர்ந்தும் சோதனை நடவடிக்கைகளில் ஈடுபடும் என்றும் அவர் தெரிவித்தார்.

யுத்த வெற்றியினால் வடக்கு மக்களுக்கே கூடுதல் மகிழ்ச்சி இந்த நிலையை உருவாக்குவதே அரசின் இலக்கு – ஜனாதிபதி

g1.jpgயுத்த வெற்றியின் மூலம் கூடுதலாக மகிழ்ச்சியடையும் மக்கள் பிரிவினராக வடபகுதி மக்கள் இருக்கும் நிலையை உருவாக்குவதே தமது நோக்கமாகுமென்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். பயங்கரவாதத்தினால் பாதிக்கப்பட்ட வடக்கு மக்களின் பிரச்சினைகள் இவ்வருட இறுதிக்குள் முடிவுக்குக் கொண்டுவரப்படுமென்றும் ஜனாதிபதி கூறினார்.

g1.jpgதமிழ் மக்களுடைய பிரச்சினையாக இருந்தாலும் முஸ்லிம் மக்களுடையதாக இருந்தாலும் இந்த நாட்டில் பிறந்து வாழும் எவருடைய பிரச்சினையும் வெளியில் உள்ளவருக்கு சுமையாக இருக்க முடியாது என்று குறிப்பிட்ட ஜனாதிபதி நமது நாட்டு மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்கவேண்டியது நமது பொறுப்பாகுமென்றும் சொன்னார். யுத்த வெற்றியின் ஓராண்டு பூர்த்தியை முன்னிட்டு காலி முகத்திடலில் நேற்றுக் காலை (18) நடைபெற்ற தேசிய வெற்றி அணிவகுப்பு விழாவில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு ஜனாதிபதி உரையாற்றினார். ஜனாதிபதி தொடர்ந்து உரையாற்றுகையில், நிபந்தனைகளுக்கு அடிபணிந்து நாட்டின் சுதந்திரத்தைக் காட்டிக் கொடுத்து உதவிபெறுகின்ற நிலைக்குச் செல்லத் தயாரில்லையென்றும் உதவிகளாலும் நிவாரணங்களாலும் இந்த நாட்டை அச்சுறுத்திய யுகத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டுமென்றும் வலியுறுத்தினார்.

பயங்கரவாதத்திற்கும் பிரிவினைவாதத்திற்கும் அனுதாபம் செலுத்தும் நாடுகள் பயங்கரவாதத்திற்கே பலியாகும் எனச் சுட்டிக்காட்டிய ஜனாதிபதி ராஜபக்ஷ, வடக்கில் பிரிவினைவாதத்தை மீண்டும் உயிர்ப்பிக்க வெளிநாடுகளில் இருந்து உதவியளிப்பவர்களின் செயற்பாடுகள் வடக்கு மக்களை மீண்டும் முகாமுக்குள் அனுப்புவதாகவே அமையும், எனக் குறிப்பிட்டார்.

‘நமக்காக நாம்’ என்ற சுலோகத்தின் கீழ் யுத்தம் செய்ததைப் போன்று, நாட்டைக் கட்டியெழுப்பும் போது ‘நாட்டுக்காக நாம்’ என்ற சுலோகத்தின் கீழ் ஒன்றுபடுமாறு அழைப்பு விடுத்த ஜனாதிபதி, முப்படையினரைப் போன்று அரச துறையில் உள்ள ஆறு மடங்கு ஊழியர்கள் அர்ப்பணிப்புடன் செயற்பட்டால் இலங்கையை ஆசியாவிலேயே அற்புதநாடாக மாற்றியமைக்க முடியுமெனத் தெரிவித்தார்.

“சுமார் இரண்டு இலட்சத்திற்கும் அதிகமான படையினர் இரவு பகல் பாராது, மழை வெயில் பாராது நான்கு வருடங்கள் அர்ப்பணிப்புடன் செயல்பட்டு இந்த வெற்றியைப் பெற்றுத் தந்திருக்கிறார்கள். இந்த வெற்றியைப் பாதுகாக்கும் பெரும் சவாலை இந்த நாட்டு மக்கள் ஏற்றிருக்கிறார்கள் என்பதை, யுத்தத்தில் வெற்றிபெற்ற அதே மகிழ்ச்சியுடனும் திருப்தியுடன் குறிப்பிட விரும்புகிறேன்” என்று தெரிவித்த ஜனாதிபதி அந்த வெற்றியை மலினப்படுத்த பிரயத்தனங்கள் மேற்கொள்ளப்பட்டதென்றும் மிகப் பெரும் மனிதாபிமான நடவடிக்கைக் காக உயிர்த்தியாகம் செய்த படையினர், வெள்ளைக் கொடிகளை ஏந்தி வந்த மக்களை சுட்டுக் கொன்றதாகக் கூறப்பட்டமை அவர்களுக்குச் செய்யப்பட்ட மாபெரும் அவமானமாகுமென்றும் கூறினார். “பயங்கரவாதத்தினால் பாதிக்கப்பட்டுள்ள உலக நாடுகள் இலங்கை பெற்றுக் கொண்ட இந்த வெற்றியிலிருந்து சக்தியையும், தைரியத்தையும் பெற்றுக் கொள்ள வேண்டும். தவறு எங்கே விடப்பட்டது என்பதையும் அவை எண்ணிபார்க்க வேண்டும்.

வடக்கில் தமிழ் மக்களின் நலன்களுக்காக பயங்கரவாதிகளிடம் கொடுக்கப்பட்ட உதவிகளுக்கு என்ன நடந்தது என்பதை தேடிப்பார்க்க வேண்டும். எல்லா நிதியும் பிரிவினை வாதிகள் நலன்களுக்காகவும் வடக்கு மக்களின் சுதந்திரத்தைப் பறிப்பதற்காகவுமே பயன்படுத்தப்பட்டது என்பதைப் புரிந்துகொள்ளவேண்டும். எனவே, மீண்டும் பிரிவினைவாதத்தை உயிர்ப்பிக்க உதவியளித்தால், மக்களை மீண்டும் முகாம்களுக்குள் தள்ளுவதாகவே அமையும்” என்று குறிப்பிட்ட ஜனாதிபதி, இந்த நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு இந்த நாட்டு மக்களிடம் சக்தியும் தைரியமும் உள்ளதாகவும் அதற்கான விருப்பமும் மனோதிடமுமே தேவையாக உள்ளதாகவும் கூறினார்.

மேலும், தேசத்தைக் கட்டியெழுப்புவதன் மூலம் இந்த நாட்டை விடுவிப்பதற்காகப் படையினர் சிந்திய ஒவ்வொரு இரத்தத் துளிக்காகவும் ஒவ்வொரு வியர்வைத் துளிக்காகவும் தேசத்தின் நன்றிகளைத் தெரிவிப்பதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்

ஏழரை இலட்சம் ரூபா கப்பம் கோரி மூன்று வயதுச் சிறுவன் கடத்தல்

இந்தச் சம்பவம் புத்தள நகர பகுதியில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.  புத்தளையைச் சேர்ந்த முகமட் ரஸ்மி என்ற மூன்று வயதுச் சிறுவனே கடத்தப்பட்டவராவார்.

சிறுவனைக் கடத்திய நபர் குறிப்பிட்ட வீட்டில் தங்கியிருந்து சிறுவனுக்கு இனிப்பு பண்டங்களைக் கொடுத்து சிறுவன் மீது அளவற்ற பாசம் கொண்டவர் போல் நடித்து சிறுவனை அயலிலுள்ள கடையொன்றிற்கு தூக்கிச் சென்றுள்ளார். சிறுவனைக் காணாத தாய், சிறுவனைக் கூட்டிச் சென்றவரின் கையடக்கத் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு சிறுவனை உடன் கூட்டி வருமாறு கேட்டுள்ளார்.

விரைவில் கூட்டிவருவதாகக் கூறிய அந்நபர் சிறிது நேரம் சென்றதும் சிறுவனின் தாய்க்கு தொலைபேசி மூலம் தொடர்பினை ஏற்படுத்தி ஏழரை இலட்சம் ரூபாவின் கப்பமாக தரும் பட்சத்தில் சிறுவனை விடுவிக்கலாம் என்று கூறியுள்ளார்.

இதையடுத்து தாய் அயலிலுள்ள கடைப்பக்கம் சென்ற போது சிறுவன் மோட்டார் சைக்கிளொன்றில் கூட்டிச் செல்லப்பட்டதாகவும் தகவல் கிடைத்தது. கடத்தல்காரர்களினால் கடத்தப்பட்ட சிறுவனையும் தாயுடன் கதைக்குமாறு தொலைபேசி தொடர்பு ஏற்படுத்திக் கொடுத்தாகவும் தாய், புத்தளைப் பொலிஸ் நிலையத்தில் செய்யப்பட்ட புகாரில் தெரிவித்துள்ளார்.

சிறுவனைக் கடத்திய நபர் வர்த்தகம் தொடர்பான விடயல்களை கதைக்கும் பொருட்டு வீடு வந்து தங்கியிருந்த போதே சிறுவன் கடத்தப்பட்டதாகவும் பொலிஸ் விசாரணையின் போது தெரியவந்துள்ளது.

மிஹிந்தலை பொசன் உற்சவம்; 27 பாடசாலைகள் 6 தினங்கள் பூட்டு

teachers.jpgஅநுராதபுரம், மிஹிந்தலையில் நடைபெறும் பொசன் நிகழ்வுகளை முன்னிட்டு மாவட்டத்திலுள்ள 27 பாடசாலைகளை 21-26 ஆம் திகதி வரை மூடுவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக மாகாண கல்விப் பணிப்பாளர் கே.எம்.ஜினபால தெரிவித்தார்.பொசன் நிகழ்வுகளில் பாதுகாப்பு கடமையில் ஈடுபடும் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் தங்குவதற்காக இப்பாடசாலைகள் மூடப்படவிருக்கின்றன.

கிளிநொச்சி விவசாயிகளுக்கு உழவு இயந்திரம் கையளிப்பு – அகாஷி, பசில் பங்கேற்பு

இலங்கை வந்துள்ள ஜப்பானின் விசேட தூதுவர் யசுஷி அகாஷி மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ ஆகியோர் நேற்று கிளிநொச்சி விவசாயிகளுக்கு 33 உழவு இயந்திரங்களை வழங்கினர்.

கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற வைபவத்தின் போதே ஜப்பான் அரசின் உதவியுடன் பெறப்பட்ட 29 சிறிய ரக உழவு இயந்திரங்களும் (லேண்ட் மாஸ்டர்) மூன்று பெரிய உழவு இயந்திரங்களும் (டிரக்டர்கள்) கையளிக்கப்பட்டன.

அடுத்த பெரும் போகத்தின் போது வடமாகாணத்தில் அனைத்து விளைநிலங்களிலும் செய்கை பண்ணும் நோக்கத்துடன் முன்னெடுக்கப்பட்டு வரும் திட்டத்தின் கீழ் முதற்கட்டமாக கிளிநொச்சி விவசாயிகளுக்கு இவை வழங்கப்பட்டன. ஜப்பானின் விசேட தூதுவர் யசுஷி அகாஷி, அமைச்சர்களான பசில் ராஜபக்ஷ, மஹிந்த யாப்பா அபேவர்தன, வட மாகாண ஆளுநர் ஜீ.ஏ. சந்திரசிறி, யாழ். மாவட்ட எம்.பி. எம். சந்திர குமார், தமிழ்க் கூட்டமைப்பு எம். பி. சிவஞானம் சிறிதரன், கிளிநொ ச்சி அரச அதிபர் திருமதி ரூபவதி கேதீஸ்வரன், கிளிநொச்சி கட்டளை த்தளபதி மேஜர் ஜெனரல் சந்தன ராஜ குரு ஆகியோரும் கலந்து கொண்டனர்

இலங்கையில் சீனர்கள்; இந்தியாவுக்கு ஆபத்து: ஜெயலலிதா

1jaya.jpgஇலங்கையில் சீனர்கள் குவிக்கப்படுகின்றனர்.  இதனால் இந்தியாவுக்கு ஆபத்து எதிர்நோக்கியிருக்கிறது என்பதில் எவ்வித ஐயமும் இல்லை என்று எச்சரித்துள்ளார் அதிமுக பொதுச்செயலர் ஜெயலலிதா. இதுதொடர்பாக அவர் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:

 நெடுஞ்சாலைப் பணிகளையும், ரயில்வே பணிகளையும் மேற்கொள்வதற்காக, சிறைக்கைதிகளாக இருந்த 25,000 தொழிலாளர்கள் சீனத்தில் இருந்து வந்துள்ளது குறித்து இந்திய அரசு விழிப்போடு இருக்க வேண்டும்.

 இலங்கையில் போரினால் பாதிக்கப்பட்ட பகுதிகளை மறுசீரமைக்க இந்தியா ரூ.1,000 கோடி அனுமதித்துள்ளது.  ஆனால் இந்த மறு சீரமைப்பிற்கான ஒப்பந்தத்தை சீனாவிடம் இலங்கை அரசு அளித்திருக்கிறது.  இதிலிருந்து,  இலங்கையில் உள்ள தமிழர்களின் நலனுக்காக அனுப்பப்பட்ட இந்திய மக்களின் வரிப் பணம் சீனாவை சென்றடைகிறது என்பது தெளிவாகிறது.  

 இந்தியாவின் பணம் சீனாவிற்கு செல்கிறதே என்பது தற்போது எனது முக்கிய கவலை இல்லை.  இதுவரை பாதுகாப்பாக உள்ள இந்தியாவின் தெற்குப் பகுதியில், இந்தியாவிற்கு எதிரான வேவு பார்க்கும் பணிகளை தொடங்கும் குறிப்பிட்ட நோக்கத்துடன் சீன ஒற்றர்களும், உளவுத் துறையினரும் சீனத் தொழிலாளர்களுடன் இலங்கைக்குள் ஊடுருவி இருப்பதாக எனக்குத் தகவல் கிடைத்துள்ளது.  தமிழ்நாட்டின் தெற்கு கடலோரத்திலிருந்து சுமார் 20 கிலோ மீட்டர் தொலைவில் தான் இலங்கை உள்ளது.

 1962 ஆம் ஆண்டைய சீன ஆக்கிரமிப்பு இந்திய தேசத்தையே உலுக்கியது. அப்போதிருந்த இந்திய அரசு சகோதரத்துவ மனப்பான்மையுடன் சீனாவோடு அபரிமிதமாக உறவாடிக் கொண்டிருந்த போதுகூட, சீனா இந்தியாவின் மீது தாக்குதல் தொடுத்தது.  குறுகிய நோக்குப் பார்வையும், தவறான முடிவுமே அந்த சமயத்தில் இந்தியா தோல்வியுற்றதற்கு காரணம்.

அதே வரலாறு மீண்டும் நிகழ்வதற்கு வாய்ப்பிருக்கிறது. வட இலங்கையில் சீனர்கள் பெருமளவில் குவிந்திருக்கிறார்கள் என்ற ஊடகங்களின் தகவல் உண்மையாக இருக்குமேயானால், இந்தியாவிற்கு ஆபத்து எதிர் நோக்கியிருக்கிறது என்பதில் எவ்விதமான ஐயமும் இல்லை. அண்மையில் ராஜபட்ச இந்தியாவிற்கு வந்த போது, இந்த பிரச்சினையை இந்தியா உறுதியுடன் முன் வைத்திருக்க வேண்டும்.     

இலங்கைத் தமிழர்களுக்கு ஆபத்து

வட இலங்கையில் சீனர்கள் குவிக்கப்பட்டுள்ளதன் மூலம் மற்றுமொரு கடுமையான ஆபத்து ஏற்கெனவே மிக மோசமாக உருக்குலைந்துள்ள இலங்கைத் தமிழர்களுக்கு காத்திருக்கிறது.  27 ஆண்டு கால இனப் போர் பல உயிர்களை பலி வாங்கியுள்ளது.   பெரும்பாலான ஆண்கள் இந்த இனப் போரில் உயிரிழந்துள்ளனர்.  விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் இன்னமும் பாதுகாப்பு முகாம்களில் அடைக்கப்பட்டு தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்தச் சூழ்நிலையில், தற்காத்துக்கொள்ளும் சக்தியற்று பலவீனமாக உள்ள முதியவர்கள், ஊனமுற்றோர் மற்றும் பெண்கள் அடங்கிய மீதமுள்ள தமிழர்களை சீனாவிலிருந்து வந்துள்ள 25,000 சிறைக் கைதிகள் தங்களுடைய அத்துமீறல்களுக்கு உட்படுத்த ஆரம்பித்தால், அங்குள்ள தமிழர்களின் அவல நிலைமை மேலும் விபரீதமாகும். 

இந்தப் பிரச்சினையில் காலதாமதமின்றி இந்திய அரசு தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்.  இலங்கை அரசுடன் கடுமையாகப் பேச வேண்டும்;  கடினமாக நடந்து கொள்ள வேண்டும் என்று ஜெயலலிதா கூறியுள்ளார்.

48,000 பேர் மட்டுமே மனிக்பாமில் – வவுனியா அரச அதிபர்

Rehabilitation_Wanni500 பேர் மீள்குடியேற்றத்துக்காக இன்று அழைத்துச் செல்லப்படவுள்ளதாக வவுனியா அரச அதிபர் திருமதி வீ. எம். எஸ். சார்ள்ஸ் தெரிவித்தார். வவுனியா மனிக்பாம் நிவாரணக் கிராமத்தில் இன்றைய தினத்தில் சுமார் 48,000 பேர் அளவில் மட்டுமே தங்கியுள்ளனர்.

இவர்களில் தினமும் தலா 500 பேர் வரை மீள்குடியேற்றத்திற்காக அனுப்பப்பட்டு வருகின்றனர். அத்துடன் வவுனியா மாவட்டத்தில் மீளக்குடியமர்த்துவதற்கு ஏதுவாக பொதுமக்களின் காணிகளில் நிலை கொண்டுள்ள படையினர் விலகிச் செல்லவும் சம்மதம் தெரிவித்துள்ளதுடன் ஓமந்தை 561 படையணி முகாம் வேறு இடத்திற்கு கொண்டு செல்லப்படவுள்ளது.  மாற்றுக் காணிகள் வழங்கப்படுவதை தொடர்ந்து படையினர் பொது மக்களிடம் அவர்களது காணியை ஒப்படைத்துச் செல்லவும் சம்மதம் தெரிவித்துள்ளதாக வவுனியா அரச அதிபர் திருமதி வீ. எம். எஸ். சார்ள்ஸ் தெரிவித்தார்.

இதேபோன்று நாளையும், நாளை மறுதினமும் தொடர்ந்து மீளக்குடியேற்றத்துக்காக மக்கள் அனுப்பிவைக்கப் படவுள்ளனர்.

இலங்கைக்கு 840 கோடி ரூபா ஐரோப்பிய ஒன்றியம் ஒதுக்கீடு

இலங்கையில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட வட,கிழக்குப் பகுதிக்கென உதவியாக 840 கோடி ரூபாவை ஐரோப்பிய ஒன்றியம் ஒதுக்கீடு செய்துள்ளது.

நாட்டின் வட,கிழக்குப் பகுதிக்கு இடைக்கால உதவித் திட்டங்களை முன்னெடுப்பதற்காக இந்த உதவி வழங்கப்படுவதாக இலங்கை மற்றும் மாலைதீவுக்கான ஐரோப்பிய ஒன்றிய தூதுக்குழு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது. 2011-2013 ஆண்டு காலப்பகுதிக்கான இலங்கைக்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் நாட்டு தந்திரோபாய உதவியின் இரண்டாவது பகுதியாக இந்த நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

சமூகத்தில் நலிவடைந்த நிலையிலுள்ளோரின் தேவைகளை கவனத்தில் கொண்டு குறிப்பாக 2009 இல் முடிவுக்கு வந்த மோதலில் பாதிக்கப்பட்டோரின் தேவைகளை மையப்படுத்தி அவர்களுக்கு ஆதரவாக அதாவது சமாதானம், ஸ்திரத்தன்மை, நல்லிணக்கம் என்பனவற்றை நோக்கி முன்நகர்வை மேற்கொள்வதற்காக இந்த ஆதரவு வழங்கப்படுவதாக ஐரோப்பிய ஒன்றியம் விடுத்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.

மட்டக்களப்பு படமாளிகை தீக்கிரை

111.jpgமட்டக் களப்பில் அமைந்துள்ள பிரபல சினிமா படமாளிகை ஒன்றிற்கு இனந்தெரியாத நபர்கள் தீ வைத்துள்ளனர். மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதியிலுள்ள படமாளிகையே தீக்கிரையாகியுள்ளது.  இன்று அதிகாலை ஒரு மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பில் நடைபெற்ற iifa திரைப்பட விழாவை தமிழ் திரையுலக நடிகர்கள் புறக்கணித்தமையைக் கண்டித்து இன்று முதல் எதிர்வரும் 30ஆம் திகதி வரை வடகிழக்கு சினிமா திரையரங்குகளில் இந்தியத் தமிழ் திரைப்படங்களை வெளியிட வேண்டாம் என சுதந்திர இலங்கையின் தமிழர்கள் அமைப்பு துண்டுப்பிரசுரம் மூலம் வேண்டுகோள் விடுத்தது.

இந்நிலையில் இன்று ராவணா திரையிடப்பட்டிருந்த நிலையிலேயே குறிப்பிட்ட படமாளிகை தீக்கிரையாக்கப்பட்டுள்ளது.

சம்பவ இடத்திற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் ப.அரியநேத்திரன் விஜயம் செய்தார். இச் சம்பவம் குறித்து காத்தான்குடி பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

111.jpg

11112.jpg