எழுத்தாளர்கள்

எழுத்தாளர்கள்

குருநாகலில் இடம்பெற்ற விபத்தில் யாழ். சுற்றுலாப் பயணிகள் 6 பேர் பலியாகினர்.

குருநாகலில் இடம்பெற்ற வாகன விபத்தில் யாழ். வந்து திரும்பிக்கொண்டிருந்த சுற்றுலாப் பயணிகள் 6 பேர் பலியாகினர். யாழ்ப்பாணத்திலிருந்து குருநாகல் நோக்கி சென்று கொண்டிருந்த வான் ஒன்று குருநாகல் கிரியேல்ல பகுதியில் வைத்து லொறி ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளானதில் 6 பேர் பலியாகினர். 10 பேர் படுகாயமடைந்துள்ளனர். இதில் பலியானவர்கள் காயப்பட்டவர்கள் அனைவரும் குருநாகல் பகுதியைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று (June 27 2010) அதிகாலை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. குருநாகலில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு சுற்றுலா வந்துவிட்டு திரும்பியவர்களுக்கே வழியில் இக்கதி ஏற்பட்டுள்ளது. தென்னிலங்கைப் பகுதிகளிலிருந்து வடபகுதிகளுக்கு சுற்றுலா வரும் பயணிகளின் வாகனங்களை ஏ-9 வீதியில் தற்போது அதிகளவில் காணக்கூடியதாகவுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

யாழ். நாடகக் கலைஞர்கள் கௌரவிப்பு!

நெருக்கடியான காலகட்டத்தில் பணியாற்றிய யாழ்ப்பாண நாடகக் கலைஞர்கள் ‘மக்கள் களரி’ நாடகக் குழுவினரால் நேற்று ஞாயிற்றுக்கிழமை கௌரவிக்கப்பட்டுள்ளனர். யுத்த நெருக்கடி காலகட்டங்களில் யாழ்ப்பாணத்தில் தங்கியிருந்து நாடகப் பாரம்பரியத்தை வளர்த்தமைக்காக இவர்கள் கௌரவிக்கப்பட்டுள்ளார்கள். இந்நிகழ்வு செம்மணி வீதியுள்ள பாடசாலை ஒன்றில் நடைபெற்றது.

எஸ்.திருநாவுக்கரசு, பிரான்சிஸ் யூல்ஸ் கொலின், மரியாம்பிள்ளை, பொனிபஸ், தைரியநாதன், கேசுறி பிலிப் பேர்மினஸ், கந்தையா நாகப்பு, நவாலியூர் என். செல்லத்துரை, சரவணமுத்து சந்திரா, முருகேசு சிவப்பிரகாசம் அகியோரும், திருமறைக்கலாமன்றம், செயற்திறன் அரங்க இயக்கம், யாழ்.பல்கலைக்கழக நுண்கலைத்துறையின் வெறுவெளி அரங்கக் குழு ஆகிய அமைப்புக்களும் கௌரவிக்கப்பட்டன.

கிளிநொச்சி சீனித் தொழிற்சாலையை மீண்டும் இயக்க முயற்சி!

SugarCaneகிளிநொச்சி மாவட்டத்தின் ஸ்கந்தபுரம் கரும்புத் தோட்டம் கிராமத்தில் இருபத்திரண்டு  வருடங்களுக்கு முன் இயங்கி வந்த சீனி உற்பத்தித் தொழிற்சாலையை மீண்டும் இயங்கச் செய்வதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. யுத்தம் காரணமாக இத்தொழிற்சாலை செயலிழந்த நிலையில் காணப்படுகின்றது.

இத்தொழிற்சாலையில் இருந்த இயந்திரங்கள் களவாடப்பட்டுள்ளன. முன்னர் இத்தொழிற்சாலை அமைந்துள்ள பகுதியை அண்டிய 100 ஏக்கர் நிலப்பரப்பில் கரும்புச் செய்கை மேற்கொள்ளப்பட்டது. இவையும் தற்போது அழிக்கப்பட்டு விட்டன. இத்தொழிற்சாலையை மீண்டும் இயக்கினால் அப்பகுதி மக்களுக்கு வேலைவாய்ப்புகள் கிட்டக்கூடிய நிலையும் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இத்தொழிற்சாலை கந்தளாய் சீனித் தொழிற்சாலை நிர்வாகத்தின் கீழ் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவினர் தொடர்ந்தும் செயற்படுவதாக சந்தேகம்!

LTTE LOGOபோரில் விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்ட பின்னரும் அவர்களின் புலனாய்வுப் பிரிவினர் தொடர்ந்து செயற்படுவதாக சிறிலங்காப் புலனாய்வுப் பிரிவினர் கருதுகின்றனர். இது தொடர்பாக அவர்கள் விழிப்புடன் இருப்பதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவினருக்கு நிதியுதவி வழங்கி வருகின்றவர்கள் தொடர்பாக சிறிலங்கா புலனாய்வுப் பிரிவின்ர் விசாரணைகளை நடத்தியும் வருகின்றனர்.

அண்மையில் மாத்தறைப் பகுதியில் பிச்சைக்காரர் தோற்றத்தில் நடமாடிய  விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் உறுப்பினர் ஒருவர் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது. குறிப்பிட்ட நபரான ஈஸ்வரன் சந்திரகுமாரன் என்பவர் வவுனியா மாவட்டத்தைச் சேர்ந்தவர் எனவும், முல்லைத்தீவில்  கடும் பயிற்சி பெற்றவர் எனவும், விடுதலைப் புலிகளின் தலைவர் சார்ள்ஸ் அன்ரனிப் படைப்பிரிவின் போராளி எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

ஆனால், சார்ள்ஸ் அன்ரனி படைப்பிரிவு பிரபாகரனின் மகனான சாள்ஸ் அன்ரனியின் தலைமையிலானதல்ல. சாள்ஸ் அன்ரனி விடுதலைப் புலிகளின் கணனி தொழில் நுட்பப்பிரிவிற்கு பொறுப்பாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

கே பி யின் சிபார்சில் சு.ப. தமிழ்ச் செல்வனின் சகோதரர் உட்பட முன்னாள் போராளிகள் 26 பேர் விடுதலை!

kp.jpgவிடுதலைப் புலிகளின் முன்னாள் போராளிகள் 26 பேர் நேற்று கே.பி எனப்படும் குமரன் பத்மநாதனின் சிபார்சின் பேரில் விடுவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வவுனியா பம்பைமடு தடுப்பு முகாமில் வைக்கப்பட்டிருந்த விடுதலைப் புலிகள் சந்தேக நபர்களே இவ்வாறு விடுவிக்கப்பட்டுள்ளனர். குமரன் பத்மநாதன் வடமாகாண தேர்தலில் ஆளும் கட்சியின் முதலமைச்சர் வேட்பாளராக போட்டியிடவுள்ளார் என வெளியான தகவல்களையடுத்து அவரைக்கொண்டு சில நடவடிக்கைகளை மேற்கொள்ள அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த 10ஆம் திகதி வவுனியா தடுப்பு முகாம்களுக்குச் சென்று அங்கு தடுத்து வைக்கபட்டுள்ள விடுதலைப் புலிகளின் உறுப்பினர்களைப் பார்வையிட்டு தனது அரசியல் நடவடிக்கைகளுக்கு அவர்களின் ஆதரவைக் கோரியதாகத் தெரிவிக்கப்படுகிறது. அந்த வகையில் விடுவிக்கப்பட்டவர்களில் 50 வயதிற்கு மேற்பட்ட விடுதலைப் புலிப் போராளிகள் அடங்குகின்றனர் என தெரிவிக்கப்படுகின்றது.

விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளராகவிருந்த சு.ப. தமிழ்ச் செல்வனின் சகோதரரான மூர்த்தி எனபவரும் விடுவிக்கப்பட்டுள்ளதாக  தகவல்கள் வெளியாகியுள்ளன. மூர்த்தி தனது சகோதரனான தமிழ்செல்வனின் அரசியல் நடவடிக்கைகளில் முரண்பாடுடையவராக இருந்தவர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

”வடக்கு கிழக்குப் பகுதிகளில் புதிய இராணுவ முகாம்கள் குடியேற்றங்கள் அமைக்கப்படும்” ஜகத் ஜயசூரிய இராணுவத்தளபதி!

விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்து விடுவிக்கப்பட்ட வடக்கு கிழக்குப் பிரதேசங்களில் புதிய இராணுவ முகாம்கள் அமைக்கப்படும் எனவும், இராணுவ குடியிருப்புக்கள் அமைக்கப்படும் எனவும் இலங்கையின் இராணுவத்தளபதி ஜகத் ஜயசூரிய தெரிவித்துள்ளார்.

பொஸன் தினமான நேற்று கண்டி மல்வத்த அஸ்கிரிய பிடாதிபதிகளை சந்தித்து ஆசிபெற்ற இராணுவத்தளபதி இத்தகவலை அவர்களிடம் தெரிவித்துள்ளார். படையினருக்கு வீடுகள் அமைத்துக் கொடுக்கப்படும் எனவும்,  அவர்கள் விவசாய நடவடிக்கைகளில் ஈடுபட வசதிகள் செய்து கொடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒரு தொகுதி மக்கள் நாளை மீள்குடியேற்றப்படவுள்ளனர்.

போரினால் இடம் பெயர்ந்து வவனியா மாவட்டத்தில் உறவினர் நண்பர்கள் வீடுகளில் தங்கியிருக்கம் முல்லை மாவட்டதைச் சேர்ந்த ஒரு தொகுதி மக்கள் நாளை (28-06-2010) அவர்களது சொந்த இடங்களில் மீள் குடியேற்றப்படவுள்ளனர். 195 குடும்பங்களைச் சேர்ந்த 556 பேர் நாளை மீள்குடியேற்றப்படவுள்ளனர்.

முல்லைத்தீவு கரைதுறைப்பற்று பிரதேசச் செயலர் பிரிவுக்குட்பட்ட 19 கிராம சேவகர் பிரிவுகளில் இவர்கள் மீள் குடியேற்றப்படவுள்ளனர் என முல்லைத்தீவு மாவட்ட உதவித் திட்டமிடல் பணிப்பாளர் சிறீரங்கன் தெரிவித்துள்ளார்.

மக்கள் மீள்குடியேற்றப்படும் பகுதிகளில் காட்டு யானைகளின் தொல்லை!

வன்னியில் மக்கள் மீள்குடியேற்றப்பட்டு வரும் சில பகுதிகளில் காட்டு யானைகளினால் மக்கள் தொல்லைகளை அனுபவித்து வருகின்றனர். வட்டக்கச்சி. இராமநாதபுரம், கண்டாவளை. கலமடுநகர் விசுவமடு. பிரபந்தனாறு முதலான பகுதிகளில் காட்டு யானைகளின் தொல்லை அதிகரித்துள்ளது. அங்கு மக்களின் பயன்தரு மரங்களை இக்காட்டு யானைகள் நாசப்படுத்தி வருகின்றன.

சுமார் 10 வருடங்களுக்கு முன்னர் இப்பகுதி பொதுமக்கள் காட்டு யானைகளின் தொல்லைகளுக்கு முகம் கொடுத்த வந்ததாகவும் தற்போது மீண்டும் யானைகளின் தொல்லை அதிகரித்துள்ளதாகவும் இப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

கைத்தொலைபேசியில் புலிகளின் பாடல்களை வைத்திருந்த மூவர் கைது!

மட்டக்களப்பில் விடுதலைப் புலிகளின் பாடல்களை கைத்தொலைபேசியில் பதிவு செய்து வைத்திருந்த மூன்று இளைஞர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸாhரின் திடீர் பரிசோதனைகளின் போதே இவ்விளைஞர்கள் தங்கள் கைத்தோலைபேசியில் இப்பாடல்களை வைத்திருந்தமை கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

வாகரை, நாவற்குடா, ஆரையம்பதி ஆகிய பிரதேசங்களைச்சேர்ந்த இளைஞர்களே கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னரும் மட்டக்களப்பில் சில இளைஞர்கள் கைத்தொலைபேசியில் புலிகளின் படங்கள், பாடல்களை போன்றவற்றை வைத்திருந்த காரணத்தினால் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

வன்னியில் இறுதிப் போரில் கைவிடப்பட்ட வாகனங்கள் சில பொது மக்களிடம் கையளிக்கப்பட்டுள்ளன.

வன்னியில் இறுதிப் போரின் போது பொது மக்களால் கைவிடப்பட்ட சைக்கிள்களைத் திருத்தியமைக்க 10 மில்லியன் ரூபாவிற்கு மேல் செலவாகியுள்ளதாக வடமாகாண சபை ஆளுநர் மேஜர் ஜெனரல் சந்திரசிறி தெரிவித்துள்ளார். நேற்று கைவிடப்பட்ட வாகனங்கள் சில உரிமையாளர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்வு கிளிநொச்சியில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

கையிடப்பட்ட இவ்வாகனங்களை ஓரிடத்தில் கொண்டு வந்து சேர்ப்பதற்கு நான்கு மாதங்கள் எடுத்ததென்றும் அவர் தெரிவித்தார். நேற்று (June 24 2010) வாகனங்களை சட்டபூர்வமாக உரிமையாளர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்வு கிளிநொச்சியில் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் திருமத.p ரூபவதி கேதீஸ்வரன் தலைமையில் இடம் பெற்றது.

இதன்போது கையளிப்பட்ட மோட்டார் வாகனங்கள் திருத்தப்பாடாமலேயே கையளிக்கப்பட்டன. சைக்கிள்கள் சில திருத்தப்பட்டு கையளிக்கப்பட்டன.

14 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சைக்கிள்களும். 7ஆயிரத்திற்கும்  மேற்பட்ட மோட்டார் சைக்கிள்களும் கிளிநொச்சியில் கொண்டு வந்து வைக்கப்பட்டுள்ளன. மோட்டார் சைக்கிள்கள் பல உதிரிப்பாகங்கள்  அகற்றப்பட்ட நிலையில் உள்ளதை அங்கு நேரில் சென்று பார்க்கும் போது தெரிந்து கொள்ள முடிகிறது.