எழுத்தாளர்கள்

எழுத்தாளர்கள்

கள் அருந்தியவர்களில் ஒருவர் மரணம். அறுவர் மயக்கமுற்ற நிலையில் வைத்தியசாலையில் சாவகச்சேரியில் சம்பவம்!

Thavaranaiயாழ். தென்மராட்சிப் பகுதியிலுள்ள தவறணை ஒன்றில் கள் அருந்திய குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளதோடு, மேலும் ஆறு பேர் மயக்கமுற்ற நிலையில் யாழ். போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தென்மராட்சியிலுள்ள சாவகச்சேரிப் பகுதியில் உள்ள கள்ளுத் தவறணை ஒன்றில் July 21 2010 கள்ளருந்திய ஒருவர் மயக்கமுற்று வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். இவர் சாவகச்சேரியைச் சேர்ந்த சின்னையா செல்வராசா (வயது 50) என்பவராவார். ஏனைய ஆறு பேர் மயக்கமுற்ற நிலையில் கொண்டுவரப்பட்டு யாழ். வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கள் நஞ்சாகியிருக்கலாம் அல்லது கள் வைத்திருக்கும் கொள்கலனுக்குள் ஏதும் கலந்திருக்கலாம்  என சந்தேகம் தெரிவிக்கப்படுகின்றது.

 யாழ். குடாநாட்டிற்கு வரும் பெரும்பான்மை இனத்தவர்களும் யாழப்பாணத்து கள் மீது அலாதிப் பிரியம் உள்ளவர்களாக காணப்படுகின்ற நிலையில், இவ்வாறான அசம்பாவிதங்களைத் தவிர்க்க கள்ளுத் தவறணைகளில் தினசரி பரிசோதனைகளை நடத்தவது முக்கியமானது என சுட்டிக்கட்டப்பட்டுள்ளது.

ரொபட் ஓ பிளேக் இன்று இலங்கை வருகை

ஐக்கிய அமெரிக்காவின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்குப் பொறுப்பான உதவி ராஜாங்க செயலாளர் ரொபட் ஓ பிளேக் இன்று இலங்கைக்கு வருகை தரவிருக்கின்றார்.

ரொபட் ஓ பிளேக் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி. எல். பீரிஸை இன்று சந்தித்துப் பேச்சு வார்த்தை நடத்துவார் என அமைச்சின் அதிகாரியொருவர் தெரிவித்தார்.

அத்தோடு அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளையும், வர்த்தக தலைவர்களையும் அவர் சந்திக்கவிருப்பதாக கொழும்பிலுள்ள அமெரிக்க தூதரக வட்டாரங்கள் கூறின. இவர் நாளை 22ம் திகதி மாலைதீவுக்கு விஜயம் செய்யவிருப்பதாகவும் அவ்வட்டாரங்கள் குறிப்பிட்டன.

அமைச்சர் ஜீ.எல். – நீல்பூனே நேற்று சந்தித்துப் பேச்சு

neel.jpgஐக்கிய நாடுகள் சபையின் இலங் கைக்கான வதிவிடப் பிரதிநிதி நீல் பூனேக்கும் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல். பீரிஸ¤க்கும் இடையிலான சந்திப்பு நேற்று மாலை வெளிவிவகார அமைச்சில் நடைபெற்றது.

இச்சந்திப்பின் போது பூனே தனது கடமைகளைத் தொடர்ந்தும் முன்னெடுக்க விருப்பதாகவும் ஐ.நா. இலங்கையில் தமது வேலைகளை தொடர்வதற்கு எதிர்பார்த்திருப்பதாகவும் அமைச்சர் பீரிஸிடம் கூறியுள்ளார். இதன்போது இலங்கைக்கும் ஐ.நா.வுக்குமிடையிலான உறவு என்றும் ஒரே மாதிரியானதாக இருக்க வேண்டுமென்பதே அரசாங்கத்தின் விருப்பமெனவும் அமைச்சர் பீரிஸ், பூனேவிடம் தெரிவித்துள்ளார்.

ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூனுடன் கலந்துரையாடுவதற்காக நியூயோர்க் சென்றிருந்த நீல் பூனே நேற்று காலை நாடு திரும்பி பான் கீ மூனின் ஆலோசனைக்கமைய இந்த சந்திப்பில் ஈடுபட்டதாகவும் வெளிவிவகார அமைச்சு தெரிவித்தது.

வடக்கு, கிழக்கின் அபிவிருத்திக்கு அனைத்து நாடுகளும் ஒத்துழைக்க வேண்டும்

d-m-jayaratne.jpgவடக்கு, கிழக்கு அபிவிருத்தித் திட்டங்களை வெற்றிகரமாக முன்னெடுப்பதற்கு அனைத்து நாடுகளும் பூரண ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென பிரதமர் டி. எம். ஜயரத்ன ஆகிய வலய வறுமை ஒழிப்பு மாநாட்டில் தெரிவித் துள்ளார்.

சீனாவுக்கான உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொண்டுள்ள பிரதமர் டி. எம். ஜயரத்ன சீன குமீமின் நகரில் நடைபெறும் ஆசிய வலய வறுமை ஒழிப்புக்கான மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றியுள்ளார்.

இதன்போது மேலும் தெரிவித்த பிரதமர், இலங்கையில் வறுமை ஒழிப்புக்கான வலுவான வேலைத் திட்டங்களை அரசாங்கம் நடைமுறைப்படுத்தி வருகிறது. அத்துடன் யுத்தம் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டதையடுத்து அரசாங்கம் வடக்கிலும் கிழக்கிலும் துரித அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுத்து வருகிறது. இதற்கு அனைத்து நாடுகளும் ஒத்துழைப்பு வழங்க வேண்டுமெனவும் தெரிவித்துள்ளார்.

ஆசியவலய வறுமை ஒழிப்பு மாநாட்டிற்கு ஆசிய வலய நாடுகளின் அனைத்து தலைவர்கள் மற்றும் உயர் மட்டப் பிரதிநிதிகளும் வருகை தந்திருந்தனர். சீனாவுக்கான உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொண்டிருந்த பிரதமர் டி. எம். ஜயரத்னவை ரூமிமின் விமான நிலையத்தில் சீனாவின் துணைப் பிரதமர் ஹைலியான்கியூ வரவேற்றுள்ளார்.

சுசந்திகாவுக்கு ஒலிம்பிக் வௌ்ளிப்பதக்கம்

su.jpgஇலங்கையின் குறுந்தூர ஓட்ட வீராங்கனை சுசந்திகா ஜயசிங்கவுக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ 2000ம் ஆண்டு நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் 200 மீட்டருக்கான ஓட்டப்போட்டியில் அவர் பெற்ற வௌ்ளிப்பதக்கத்தை அணிவித்தார்.

சிட்னியில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் 200 மீட்டருக்கான ஓட்டப்போட்டியில் மேரியன் ஜோன்ஸ் முதலாமிடம் பெற்றிருந்த நிலையில் அவர் தடைசெய்யப்பட்ட மருந்துவகைகளை உட்கொண்டமை தெரியவந்ததால் முடிவுகளில் மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

ஊடகவியலாளர் மேம்பாட்டுக்காக அதிகாரசபை அமைக்கத் திட்டம்

min-meedia.jpgஊடக அபிவிருத்தி அதிகார சபை ஒன்றை அமைக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக வெகுசன ஊடக அமைச்சர் கெஹலிய ரம்புக்வல்ல தெரிவித்தார். கண்டி மாவட்ட ஊடகவியலாளர்களுக் கான கருத்தரங்கொன்றை கண்டி சுவிஸ் ஹோட்டலில் ஆரம்பித்து வைத்து உரையாற்றிய போதே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அமைச்சர் தொடர்ந்து கூறுகையில் :ஊடகவியலாளர்களின் தொழில்சார் தன்மை மற்றும் அது சார்ந்த துறையில் மேம்பாட்டையும் ஏனைய தொழில் துறையினருக்குக் கிடைக்கின்ற தொழில் அங்கீகாரத்தை ஊடகவியலாளர்களுக்கும் ஏற்படுத்துவதே இதன் நோக்கமாகும் எனக் குறிப்பிட்டார்.

இந்த அதிகார சபை ஊடாக ஊடகங்களை கட்டுப்படுத்தாது அதற்குப் பதிலாக ஊடகவியலாளர்களின் மேம்பாட்டுக்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப் படும் என மேலும் தெரிவித்தார்.

கிளிநொச்சியில் முகமூடி அணிந்தோர் இளம் பெண்கள் மீது தாக்குதல்

கிளிநொச்சியில் விஸ்வமடு மற்றும் தர்மபுரம் பகுதிகளில் இனந்தெரியாத குழுவால் இளம் பெண்கள் தாக்கப்படுகின்ற சம்பவங்கள் இடம்பெற்று வருவதாக முறையிடப்பட்டுள்ளது. கடந்த ஒருவாரத்தில் இப்பகுதிகளில் இரு சம்பவங்களில் குடும்பப் பெண்ணொருவர் உட்பட இருவர் தாக்கப்பட்டுள்ளனர்.

தர்மபுரம் கிழக்கு கிராம சேவையாளரின் உதவியாளராகவுள்ள விஸ்வமடுவைச் சேர்ந்த 24 வயதான இளம் பெண்ணொருவர் கடந்த செவ்வாய்க்கிழமை மாலை 6.30 மணியளவில் தாக்கப்பட்டுள்ளார். முகமூடிகள் அணிந்து முச்சக்கரவண்டியொன்றில் விஸ்வமடுவிலுள்ள இவரது வீட்டுக்கு வந்த இனந்தெரியாத இளைஞர் குழுவொன்றே இந்தப் பெண்ணைக் கண்மூடித்தனமாகத் தாக்கியுள்ளது.

உறவினர்கள் சத்தமிட்டதைத் தொடர்ந்து இக்குழு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளது. இவர்களின் தாக்குதலில் இந்தப் பெண் தலையில் படுகாயமடைந்துள்ளார்.நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற மற்றைய சம்பவத்தில் கட்டைக்காடு அ.த.க. பாடசாலையில் தொண்டராசிரியராகப் பணியாற்றும் 26 வயதுடைய குடும்பப் பெண்ணொருவர் தாக்கப்பட்டிருக்கின்றார்.

முன்னைய பெண் தாக்கப்பட்ட அதே பாணியிலேயே இந்தப் பெண்ணும் தாக்கப்பட்டிருக்கின்றார். முகமூடி அணிந்த நிலையில் முச்சக்கரவண்டியில் வந்த நான்கு இளைஞர்கள் முச்சக்கரவண்டியை விட்டு இறங்கியதுடன், இந்தப் பெண்ணைத் தாக்கியதாகவும் அவ்வேளை இவரது வீட்டில் நின்ற கணவனும் தாக்கப்பட்டதாகவும் கூறப்படுகின்றது. இந்தப் பெண்கள் தாக்கப்பட்ட போதிலும் இவர்கள் அணிந்திருந்த தங்க ஆபரணங்களோ, உடமைகளோ அபகரிக்கப்படவில்லையென்றும் தெரிவிக்கப்படுகின்றது.

அமெரிக்க அதிகாரி வருகை

neel.jpgஇலங் கைக்கு ஐ.நா ஒருங்கிணைப்பாளர் நீல் புனே இன்று அதிகாலை விஜயம் செய்துள்ளதாக விமானநிலைய வட்டாரம் தகவல் தெரியப்படுத்தியுள்ளது.

மோசடிகளுக்கு உதவும் சமாதான நீதவான்கள் கைதாவர்

போலி ஆவணங்கள் தயாரிக்கும் சட்ட விரோத செயற்பாடுகளில் தொடர்புபட்டுள்ள சமாதான நீதவான்களை கைது செய்வதற்கு நடவடிக்கை எடுக்க உள்ளதாக நீதி அமைச்சு கூறியது. இதற்காக விசேட குழுவொன்றை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளதாக அமைச்சு உயரதிகாரி ஒருவர் கூறினார். போலியான ஆவணங்களை தயாரிக்க சில சமாதான நீதவான்கள் உதவி வருவதாகவும் இத்தகையோரை கைது செய்யவும் அவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கவும் உள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

சமாதான நீதவான் முத்திரையை பயன்படுத்தி மோசடிகளுக்கு உதவுவதாகவும் அதனைப் பயன்படுத்தி பணம் சம்பாதிப் பதாகவும் பொது மக்கள் முறையிட்டுள்ளனர். இத்தகைய சமாதான நீதவான்களின் பதவி இரத்து செய்யப்படும் எனவும் அறிவிக்கப்படுகிறது.

ஹுருளு வனாந்தரத்தில் பாரிய தீ; 2500 ஏக்கர் நாசம்

fi.jpgஹபரண ஹுருளு வனாந்தரப் பகுதியில் நேற்று ஏற்பட்ட திடீர் தீயினால் சுமார் 2,500 ஏக்கர் காடு சாம்பலாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இது திட்டமிட்ட காடு எரிப்பாக இருக்கலாமென சந்தேகிக்கப்படுகிறது.

இந்தப் பிரதேசத்தில் ஏற்பட்ட தீயை அணைப்பதற்காக சீகிரியாவிலுள்ள விமானப்படையினரின் உதவி பெறப்பட்டது. இதனையடுத்து விமானப்படையின் இரண்டு ஹெலிகொப்டர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டன.

என்றாலும், நேற்று இரவு வரை தீ முழுமையான கட்டுப்பாட்டிற்குள் வரவில்லையென வன பாதுகாப்புத் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்தனர். விமானப்படையினருக்கு உதவியாக பொலிஸாரும் பணியில் ஈடுபட்டனர்.