எழுத்தாளர்கள்

எழுத்தாளர்கள்

10 ஆயிரம் ஏக்கர் நிலத்தை கையகப்படுத்தி 1 இலட்சம் படையினரை குடியேற்ற ஏற்பாடு – தமிழ் கூட்டமைப்பு குற்றச்சாட்டு

வடக்கில் பத்தாயிரம் ஏக்கர் நிலப்பரப்பை கையகப்படுத்தி ஒரு இலட்சம் படையினரை குடியமர்த்தும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக சுட்டிக்காட்டியிருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழ் மக்களின் குடித்தொகைப் பரம்பலை தலைகீழாக மாற்றும் திட்டத்தை அரசு மேற்கொண்டு வருவதாகவும் கண்டனம் தெரிவித்துள்ளது.

இராணுவத்தளபதி அண்மையில் கண்டி மல்வத்தை, அஸ்கிரிய பீடாதிபதிகளைச் சந்தித்த போது கிளிநொச்சி, முல்லைத்தீவு உட்பட வடபகுதியில் ஒரு இலட்சம் படைவீரர்களைக் குடியமர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அதற்காக 10 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பை பொறுப்பேற்றிருப்பதாகவும் தெரிவித்திருந்தார். இந்த ஒரு இலட்சம் இராணுவ வீரர்கள் இங்கு குடியமர்த்தப்படும் போது அவர்களது குடும்பத்தினர்களின் எண்ணிக்கையுடன் பார்க்கும் போது சுமார் 4 இலட்சமாக காணப்படலாம்.

இத்திட்டம் வடக்கில் தமிழ் மக்களின் விகிதாசாரத்தைத் திட்டமிட்டு வீழ்த்தும் ஒரு சதியாகவே கொள்ள வேண்டியுள்ளது. ஜனாதிபதி ஒரு விதமாகவும் பசில் ராஜபக்ஷ இன்னொரு விதமாகவும் எம்மை தாஜா பண்ணிக் கொண்டிருக்க மறுபுறத்தில் ஊடக அமைச்சரும் இராணுவத் தளபதியும் திட்டமிட்ட வகையில் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அரசாங்கம் இந்த மறைமுக சதிமுயற்சியை உடன் கைவிட வேண்டும். இடம்பெயர்ந்த தமிழ் மக்கள் அனைவரும் தமது சொந்த இடங்களில் குடியேறுவதற்கான அனுமதியை வழங்க வேண்டும். அரசாங்கத்தின் இந்த கபட நாடகத்தை நாம் இந்தியா உட்பட சர்வதேசத்துக்கு எடுத்துச் சொல்லி இருக்கின்றோம்.

அரசின் இந்த நடவடிக்கையால் அங்குள்ள சனத்தொகை விகிதாசாரம் 30 வீதத்தால் மாற்றமடையலாம். இது திட்டமிட்ட துரோகச் செயலாகும். இடம்பெயர்ந்த மக்களின் அடிப்படை உரிமை மறுக்கப்படுவதை எந்த விதத்திலும் அனுமதிக்க முடியாது எனவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வலியுறுத்திக் கூறியுள்ளது.

சியத்த ஊடக நிறுவனத்தின் மீதான தாக்குதலினால் 500 லட்ச ரூபா நட்டம்

siyatha.jpgசியத்த ஊடக நிறுவனத்தின் மீதான தாக்குதல்களினால் 500 லட்ச ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளதாக முகாமைத்துவப் பணிப்பாளர் ரொசாந்த காரியப்பெரும தெரிவித்துள்ளார்.

வதிரியிலும், அல்லாரையிலும் – இரு தொழிலகங்கள் டக்ளஸினால் திறந்து வைப்பு

devanand-a.jpgவதிரி தோல்பொருட்கள் மத்திய சேவை நிலையம் சாவகச்சேரி அல்லாரை தும்புத் தொழில் மத்திய நிலையம் ஆகியவற்றை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா எதிர்வரும் 14, 15ம் திகதி களில் உத்தியோகபூர்வமாகத் திறந்து வைக்கவுள்ளார்.

இதன் மூலம் கரவெட்டி வதிரி கிராமப்புற தோல்பொருட்கள், உற்பத்தி யாளர்கள், சாவகச்சேரி அல்லாரை பிரதேச தும்புத் தொழில் உற்பத்தியாளர்கள் பெரிதும் பயன்பெறாவரெனவும் மேற்படி நிலையங்களுக்கான சகல உபகரணங்க ளையும் பாரம்பரிய கைத்தொழில் மற்றும் சிறு கைத்தொழில் அமைச்சு பெற்றுக் கொடுத்துள்ளதாகவும் அமைச்சின் செயலாளர் சிவஞான சோதி தெரிவித்தார்.

இந்த நிலையங்கள் இரண்டையும் உத்தியோகபூர்வமாகத் திறந்து வைக்கவுள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இவற்றை சம்பந்தப்பட்ட கூட்டுறவுச் சங்க சமாஜத்திற்குக் கையளிக்கவுள்ளதாகவும் இந் நிலையங்களில் செயற்பாடுகள் அதற்கூடாக மேற்கொள்ளப்படுமெனவும் அவர் தெரிவித்தார். கரவெட்டி வதிரி கிராமம் தோல்பொருட்கள் உற்பத்தியில் பிரசித்திபெற்ற கிராமமாகும். தற்போது வீழ்ச்சியடைந்துள்ள இத் தொழில்துறையை மேம்படுத்தவும் உற்பத்தியாளர்களுக்கு சேவைகளை வழங்கவும் மேற்படி தோல்பொருட்கள் மத்திய நிலையம் உறுதுணையாக அமையும். சாவகச்சேரி அல்லாரைத் தும்புத் தொழில் நிலையம் தும்புத் தொழிலை ஜீவனோபாயமாகக் கொண்டவர்களுக்குப் பெரும் வரப்பிரசாதமாக அமையுமென்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

விமான ஆசனத்தின் கீழ் 12 கோடி

கட்டுநாயக்க விமான நிலையத்தில் டுபாய்க்கு செல்ல ஆயுத்தமான நிலையிலிருந்த விமானத்தின் ஆசனம் ஒன்றின் கீழ் மிகவும் நுட்பமான முறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஒரு தொகுதி வெளிநாட்டு நாணயங்கள் சுங்க திணைக்கள அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளது. கைப்பற்றப்பட்ட இந்த வெளிநாட்டு நாணயங்கள் 12 கோடி ரூபா பெறுமதியென தெரிவிக்கப்படுகிறது.

போக்குவரத்து சேவை மேம்பாடு; மேலும் ஐந்நூறு பஸ் வண்டிகள்

ctb-bus.jpgபொது மக்களின் போக்குவரத்து வசதிகளை மேம்படுத்தும் நோக்கில் இலங்கை போக்குவரத்து சபைக்கு மேலும் 500 பஸ்களை பெற்றுக் கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட் டுள்ளது.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் அமைச்சர் குமார வெல்கம உள்ளிட்ட அமைச்சு அதிகாரிகளுடனான கலந்துரையாடல் நேற்று (02) காலை அலரி மாளிகையில் நடைபெற்றது. இந்த கலந்துரையாடலின் போதே மேற்கூறிய தீர்மானம் எடுக்கப்பட்டது.

இதன் முதற் கட்டமாக 100 பஸ்களை உடனடியாக தருவிப்பதற்கு மேற்படி கலந்துரையாடலில் தீர்மானிக்கப்பட்டது.

போக்குவரத்து சபையின் மூலம் மக்களுக்கு சீரான சேவையை பெற்றுத்தருவதுடன் சபை ஊழியர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படவேண்டுமென்றும் ஜனாதிபதி அங்கு குறிப்பிட்டார். அத்துடன் சகல டிப்போக்களிலும் உள்ள குறைகளை இனங்கண்டு அவற்றுக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்குமாறும் ஜனாதிபதி அமைச்சு அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார்.

சோமாலிய கொள்ளையரால் பனாமா கப்பல் கடத்தல்- இலங்கையரும் இருப்பதாகத் தகவல்

இலங்கை யர்களும் ஊழியர்களாக பணியாற்றும் கப்பலொன்றை சோமாலிய கடற்கொள்ளையர்கள் கடத்தியுள்ளதாக சோமாலியாவிலுள்ள ஐரோப்பிய யூனியனின் கடற்படை நேற்று பிற்பகல் விடுத்த அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளது.

பனாமா கொடியைதாங்கிய எம்.வி.சுயஸ் எனும் இக்கப்பல், சோமாலிய கடற் கொள்ளையர்களின் ஆயுதத் தாக்குதலுக்குள்ளானதாகவும் சில நிமிடங்களின் பின்னர் அக்கப்பலுக்குள் கடற் கொள்ளையர்கள் ஏறியதாகவும் அவ்வறிக் கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத் தாக்குதலின் பின்னர் அக்கப்பலுடன் தொடர்பு கொள்ள முயற்சித்த போதிலும் அது வெற்றியளிக்கவில்லை எனவும் ஐரோப்பிய யூனியன் கடற்படை தெரிவித்துள்ளது. 17300 தொன் எடையுள்ள அக்கப்பலில் இலங்கை, இந்திய, பாகிஸ்தான், எகிப்து ஆகிய நாடுகளைச் சேர்ந்த ஊழியர்கள் உள்ளனர். இக்கப்பல் சீமெந்து பைகளை ஏற்றிச் சென்று கொண்டிருந்தது.

அக்கப்பல் தாக்கப்பட்ட போது சர்வதேச ரீதியாக சிபாரிசு செய்யப்பட்ட பகுதிக் கூடாக பயணம் செய்து கொண்டிருந்தது. தாக்குதல் பற்றிய முதல் தகவல் கிடைத்தவுடன் ஹெலிகொப்டர் ஒன்றை அப்பகுதிக்கு அனுப்பிய போதிலும் கடற்கொள்ளையர்கள் ஏற்கெனவே கப்பலை தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்திருந்ததாகவும் தெரிவிக் கப்பட்டுள்ளது. நிலைமையை அவதானித்து வருவதாக சோமாலியாவிலுள்ள ஐரோப்பிய யூனியனின் கடற்படை தெரிவித்துள்ளது.

மடுமாதா உற்சவம்; விசேட போக்குவரத்து ஏற்பாடு

madu.jpgமடுத் திருத்தல வருடாந்த திருவிழாவை யொட்டி விசேட ரயில், பஸ் சேவைகளை நடத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. திருவிழாவுக்குச் செல்லும் யாத்திரிகர்களின் நன்மை கருதி வழ மையான ரயில் சேவைகளுக்கு மேலதிக மாக சேவைகளை நடத்தவும் இதனோடி ணைந்ததாக மதவாச்சியிலிருந்து விசேட பஸ் சேவைகளை நடத்தத் தீர்மானித் துள்ளதாகவும் ரயில்வே திணைக்களம் தெரிவித்தது.

நீர்கொழும்பு – மதவாச்சி, களுத்துறை – மதவாச்சி, மதவாச்சி – மொரட்டுவை, மதவாச்சி – களுத்துறை கொழும்பு கோட்டை – மதவாச்சி என இந்த ரயில் சேவைகள் 13 ஆம் திகதி முதல் 15 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளன.

இதற்கிணங்க 13, 14ம் திகதிகளில் நீர்கொழும்பிலிருந்து மதவாச்சிக்கும் 14ம் திகதி களுத்துறையிலிருந்து மதவாச்சிக்கும், 15ம் திகதி மதவாச்சியிலிருந்து மொரட்டுவைக்கும், மதவாச்சியிலிருந்து களுத்துறைக்கும் இந்த ரயில் சேவைகள் நடைபெறவுள்ளன. அத்துடன் வழமையான ரயில்களின் பயணிகள் பெட்டிகளை அதிகரிக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளன. இதற்கிணங்க நீர்கொழும்பிலிருந்து காலை 7.45ற்கும் மதவாச்சியிலிருந்து நீர்கொழும்பிற்கு பிற்பகல் 1.45 ற்கும் ரயில்கள் புறப்படவுள்ளன.

வன்னியில் முந்நூறுக்கு மேற்பட்ட இளைஞர்கள் பயிற்சி பெறும் வகையில் தொழில்நுட்ப நிறுவனங்கள்

வன்னிப் பிரதேசத்தில் இம்மாத முடிவுக்குள் பத்து தொழிற் பயிற்சி நிலையங்களை அமைப்பதற்கு அரசாங்கம் துரித நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

இத் தொழிற் பயிற்சி நிலையங்களை அமைப்பதற்கான கட்டடங்களைப் புனரமைக்கும் நடவடிக்கைகள் இன்று 2ம் திகதி ஆரம்பிக்கப்படும் என்று தேசிய தொழிற் பயிற்சி அதிகார சபையின் வன்னி பிராந்திய பணிப்பாளர் ரி. விணோதராஜா நேற்று தினகரனுக்குத் தெரிவித்தார்.

இத் தொழிற் பயிற்சி நிலையங்கள் கனடா நாட்டின் உலக பல்கலைக்கழக சேவைகள் நிறுவனத்தின் உதவியுடன் அமைக்கப் படவிருப்பதாகவும் அவர் கூறினார். இதேவேளை, இந்திய அரசாங்கம் சகல வசதிகளையும் கொண்ட தொழிற் பயிற்சி நிலையமொன்றை இரண்டு ஏக்கர் நிலத்தில் வவுனியா ஓமந்தையில் அமைப்பதற்கு முன்வந்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அவர் மேலும் கூறுகையில், வன்னிப் பிரதேசத்தில் மீளக்குடியமர்ந்துள்ள இளைஞர், யுவதிகளுக்குத் தொழிற் பயிற்சி அளிக்கும் நோக்கில் இம்மாத முடிவுக்குள் பத்து தொழிற் பயிற்சி நிலையங்கள் அமைக்கப்படவிருக்கின்றன.

இந்த தொழிற் பயிற்சி நிலையங்கள் மாந்தை கிழக்கு, பூநகரி மற்றும் முல்லைத்தீவு மாவட்டத்தில் மூன்று, கிளிநொச்சி மாவட்டத்தில் மூன்று, மன்னார் மாவட்டத்தில் இரண்டு என பத்து நிலையங்கள் அமைக்கப்படும். தற்போது வன்னி பிரதேசத்தில் ஒரே ஒரு தொழிற் பயிற்சி நிலையம் கிளிநொச்சி நகரில் அமைக்கப்பட்டு இயங்குகின்றது.

இத் தொழிற் பயிற்சி நிலையங்களின் அமைப்பு பணிகள் பூர்த்தியானதும் உடனடியாக ஆறு மாத கற்கை நெறிகள் ஆரம்பிக்கப்படும். மேசன், தச்சுத் தொழில், அலுமினியம் பொருத்துதல், வெல்டிங்க், மோட்டார் சைக்கிள் திருத்துதல், படகுகளில் இணைக்கப்படும் மோட்டார்களைத் திருத்துதல் ஆகிய கற்கைகள் தொடங்கப் படவுள்ளன.

வன்னியில் மீள்குடியமர அழைத்துச் செல்லப்படும் மக்கள் படையினரால் திருப்பியனுப்பப்படுகின்றனர்.

வன்னியில் மக்களை மீள்குடியமர்த்தும் அரச அதிகாரிகளுக்கும் படையினருக்குமிடையில் இணைந்த செயற்பாடுகள் இல்லாத காரணத்தினால் மீள்குடியேற்றத்திற்காக அழைத்து வரப்படுகின்ற மக்கள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர் என அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இவ்வகையில் கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள மயில்வாகனபுரம். குமாரசாமிபுரம் பகுதிகளில் மீள்குடிமர்த்தப்படுவதற்காக அழைத்துச செல்லப்பட்ட 301 குடும்பங்கள் படையினர் அனுமதி மறுத்தமையினால் குடியமர முடியாத நிலை எற்பட்டுள்ளது. குறித்த பகுதிகளில் வெடிபொருட்கள் இன்னமும் அகற்றப்படாமலுள்ளதால் அப்பகுதிகளில் மக்கள் மீள்குடியமர அனுமதியில்லை என படையினர் தெரிவித்துள்ளனர். இதன் காரணமாக அம்மக்கள் பாடசாலைக் கட்டங்களில் அடிப்படை வசதிகளின்றி தங்கயிருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

மீள்குடியேற்ற நடவடிக்கைகளை மேற்கொள்ளும் அதிகாரிகள் சம்பந்தப்பட்ட பகுதிகளிலுள்ள படையினருடன் சரியான அனுமதியினைப் முதலிலேயே பெற்று மக்களை மீள்குடியமர்த்தும் பணிகளை மேற்கொண்டால் மக்கள் இவ்வாறு அலைக்கழிக்கப்படுவதும், துன்பங்களுக்குள்ளாவதும் தவிர்க்கப்படலாம் என பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவிக்கின்றனர்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு கிளிநொச்சி பொன்னகரில் மீள்குடியமர அழைத்துச் செல்லப்பட்ட பொதுமக்கள் படையினரால் திருப்பியனுப்பப்பட்டமையும் இங்கு குறிப்பிடத்தக்கது. கிளிநொச்சி பொன்னகரில் மக்கள் மீள்குடியமர படையினர் தடைவிதித்துள்ளதாக சுரேஸ் பிரேமச்சந்திரன் குற்றச்சாட்டு!

கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள மக்களில் பலருக்கு காணி உரிமம் இல்லாததால் வீடமைப்பு உதவிகள் பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள பெரும்பாலான காணிகளுக்கு காணி உறுதிப்பத்திரம் இல்லாத காரணத்தினால் அக்காணி உரிமையாளர்கள் வீடமைப்பு உதவிகளைப் பெறமுடியாத நிலை எற்பட்டுள்ளது. கிளிநொச்சி மாவட்டத்தில் 3290 பேருக்கு வீடமைப்பு உதவிகள் வழங்க அனுமதி வழங்கப்பட்டுள்ள போதும், காணி உரிமம் இல்லாத காரணத்தினால், 2466 பேருக்கு உதவி வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சி மாவட்டத்தில் மீள்குடியேறிய மக்களில் பலருக்கு காணி உரிமம் இல்லாததால் வடக்கு, கிழக்கு வீடமைப்பு மீள்நிர்மான திட்டமான ‘நேர்ப்’ திட்டத்தின் கீழ் வீடமைப்பு பயனாளிகளைத் தேர்ந்தெடுப்பதில் பெரும் சிரமங்களை எதிர்நோக்குவதாக ‘நேர்ப்’ திட்டத்தின் பிரதித் திட்டப் பணிப்பாளர் கந்தையா தெய்வேந்திரன் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி மாவட்டத்தில் பெருமளவான காணிகளுக்கு காணி உறுதி வழங்கப்படாமையினால் வங்கிகளில் கூட வீடமைப்பு கடன்களைப் பெறமுடியாத நிலை மக்களுக்கு எற்பட்டுள்ளது. பலருக்கு தற்காலிக அனுமதிப் பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன. அநேகமான காணிகளில் எவ்வித ஆவணங்களும் இல்லாமல் மக்கள் பல வருடங்களாக குடியிருந்து வருகின்றமையும் இங்கு குறிப்படத்தக்கது.