பொது மக்களின் போக்குவரத்து வசதிகளை மேம்படுத்தும் நோக்கில் இலங்கை போக்குவரத்து சபைக்கு மேலும் 500 பஸ்களை பெற்றுக் கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட் டுள்ளது.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் அமைச்சர் குமார வெல்கம உள்ளிட்ட அமைச்சு அதிகாரிகளுடனான கலந்துரையாடல் நேற்று (02) காலை அலரி மாளிகையில் நடைபெற்றது. இந்த கலந்துரையாடலின் போதே மேற்கூறிய தீர்மானம் எடுக்கப்பட்டது.
இதன் முதற் கட்டமாக 100 பஸ்களை உடனடியாக தருவிப்பதற்கு மேற்படி கலந்துரையாடலில் தீர்மானிக்கப்பட்டது.
போக்குவரத்து சபையின் மூலம் மக்களுக்கு சீரான சேவையை பெற்றுத்தருவதுடன் சபை ஊழியர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படவேண்டுமென்றும் ஜனாதிபதி அங்கு குறிப்பிட்டார். அத்துடன் சகல டிப்போக்களிலும் உள்ள குறைகளை இனங்கண்டு அவற்றுக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்குமாறும் ஜனாதிபதி அமைச்சு அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார்.