வதிரி தோல்பொருட்கள் மத்திய சேவை நிலையம் சாவகச்சேரி அல்லாரை தும்புத் தொழில் மத்திய நிலையம் ஆகியவற்றை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா எதிர்வரும் 14, 15ம் திகதி களில் உத்தியோகபூர்வமாகத் திறந்து வைக்கவுள்ளார்.
இதன் மூலம் கரவெட்டி வதிரி கிராமப்புற தோல்பொருட்கள், உற்பத்தி யாளர்கள், சாவகச்சேரி அல்லாரை பிரதேச தும்புத் தொழில் உற்பத்தியாளர்கள் பெரிதும் பயன்பெறாவரெனவும் மேற்படி நிலையங்களுக்கான சகல உபகரணங்க ளையும் பாரம்பரிய கைத்தொழில் மற்றும் சிறு கைத்தொழில் அமைச்சு பெற்றுக் கொடுத்துள்ளதாகவும் அமைச்சின் செயலாளர் சிவஞான சோதி தெரிவித்தார்.
இந்த நிலையங்கள் இரண்டையும் உத்தியோகபூர்வமாகத் திறந்து வைக்கவுள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இவற்றை சம்பந்தப்பட்ட கூட்டுறவுச் சங்க சமாஜத்திற்குக் கையளிக்கவுள்ளதாகவும் இந் நிலையங்களில் செயற்பாடுகள் அதற்கூடாக மேற்கொள்ளப்படுமெனவும் அவர் தெரிவித்தார். கரவெட்டி வதிரி கிராமம் தோல்பொருட்கள் உற்பத்தியில் பிரசித்திபெற்ற கிராமமாகும். தற்போது வீழ்ச்சியடைந்துள்ள இத் தொழில்துறையை மேம்படுத்தவும் உற்பத்தியாளர்களுக்கு சேவைகளை வழங்கவும் மேற்படி தோல்பொருட்கள் மத்திய நிலையம் உறுதுணையாக அமையும். சாவகச்சேரி அல்லாரைத் தும்புத் தொழில் நிலையம் தும்புத் தொழிலை ஜீவனோபாயமாகக் கொண்டவர்களுக்குப் பெரும் வரப்பிரசாதமாக அமையுமென்றும் அவர் மேலும் தெரிவித்தார்.