வடக்கில் பத்தாயிரம் ஏக்கர் நிலப்பரப்பை கையகப்படுத்தி ஒரு இலட்சம் படையினரை குடியமர்த்தும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக சுட்டிக்காட்டியிருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழ் மக்களின் குடித்தொகைப் பரம்பலை தலைகீழாக மாற்றும் திட்டத்தை அரசு மேற்கொண்டு வருவதாகவும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இராணுவத்தளபதி அண்மையில் கண்டி மல்வத்தை, அஸ்கிரிய பீடாதிபதிகளைச் சந்தித்த போது கிளிநொச்சி, முல்லைத்தீவு உட்பட வடபகுதியில் ஒரு இலட்சம் படைவீரர்களைக் குடியமர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அதற்காக 10 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பை பொறுப்பேற்றிருப்பதாகவும் தெரிவித்திருந்தார். இந்த ஒரு இலட்சம் இராணுவ வீரர்கள் இங்கு குடியமர்த்தப்படும் போது அவர்களது குடும்பத்தினர்களின் எண்ணிக்கையுடன் பார்க்கும் போது சுமார் 4 இலட்சமாக காணப்படலாம்.
இத்திட்டம் வடக்கில் தமிழ் மக்களின் விகிதாசாரத்தைத் திட்டமிட்டு வீழ்த்தும் ஒரு சதியாகவே கொள்ள வேண்டியுள்ளது. ஜனாதிபதி ஒரு விதமாகவும் பசில் ராஜபக்ஷ இன்னொரு விதமாகவும் எம்மை தாஜா பண்ணிக் கொண்டிருக்க மறுபுறத்தில் ஊடக அமைச்சரும் இராணுவத் தளபதியும் திட்டமிட்ட வகையில் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அரசாங்கம் இந்த மறைமுக சதிமுயற்சியை உடன் கைவிட வேண்டும். இடம்பெயர்ந்த தமிழ் மக்கள் அனைவரும் தமது சொந்த இடங்களில் குடியேறுவதற்கான அனுமதியை வழங்க வேண்டும். அரசாங்கத்தின் இந்த கபட நாடகத்தை நாம் இந்தியா உட்பட சர்வதேசத்துக்கு எடுத்துச் சொல்லி இருக்கின்றோம்.
அரசின் இந்த நடவடிக்கையால் அங்குள்ள சனத்தொகை விகிதாசாரம் 30 வீதத்தால் மாற்றமடையலாம். இது திட்டமிட்ட துரோகச் செயலாகும். இடம்பெயர்ந்த மக்களின் அடிப்படை உரிமை மறுக்கப்படுவதை எந்த விதத்திலும் அனுமதிக்க முடியாது எனவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வலியுறுத்திக் கூறியுள்ளது.
nantha
தமிழ் அரசியல்வாதிகளின் நெறி கெட்ட அரசியலால் “சிங்கள” குடியேற்றம் இப்போது சட்டபூர்வமாக நடைபெறுகிறது. உலகத்தில் எந்த நாடும் அதனை “அநியாயம்” என்று சொல்லப்போவதில்லை. தமிழர்களைக் குடியேற்ற இந்த அரசியல்வாதிகள் என்ன செய்தார்கள் என்று இதுவரை எதுவும் தெரியவில்லை.
கிளிநொச்சி, முத்தையன் கட்டு போன்ற குடியேற்றங்கள் அந்த நாளில் சாவகச்சேரி பா.உ குமாரசாமி அவர்கள் உதவி அமைச்சராக இருந்த பொது கொண்டு வரப்பட்டவை. ஆனால் இதுவரையில் அந்த குமாரசாமிக்கு எதுவித நன்றியையும் செலுத்தாத “தமிழ்” வீரர்கள் இப்போது எதற்கு ஆவேசம் கொள்ளுகிறார்கள்?
தங்களது பாராளுமன்றக் கதிரைகளுக்கு “ஆபத்து” என்பதை மட்டும் உணர்ந்து கூக்குரலிடுகிறார்கள்!