எழுத்தாளர்கள்

எழுத்தாளர்கள்

பிரிட்டிஷ் உயர்ஸ்தானிகர் மட்டக்களப்பு விஜயம்

flag_uk.jpg
இலங்கைக்கான பிரிட்டிஷ் உயர்ஸ்தானிகர் பீற்றர் ஹெய்ன்ஸ் நேற்று வெள்ளிக்கிழமை மட்டக்களப்புக்கு விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார்.

மட்டக்களப்புக்கு நேற்று விஜயமொன்றை மேற்கொண்ட பிரிட்டிஷ் உயர்ஸ்தானிகர் பீற்றர் ஹெய்ன்ஸ் மாவட்ட மறைமாவட்ட ஆயர், மாவட்ட அரச அதிபர் உட்பட உயரதிகாரிகளையும் சந்தித்து அங்குள்ள தற்போதைய நிலைவரங்கள் தொடர்பாக கலந்துரையாடியுள்ளார்.

அத்துடன் மட்டக்களப்பு மாவட்டத்தில் பிரிட்டிஷ் அரசாங்கத்தின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்படவுள்ள அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பாகவும் அவர் அரச அதிகாரிகளுடன் கலந்துரையாடியுள்ளார்.

லங்கா ஈ நியூஸ் பிரதம ஆசிரியர் 4ஆம் மாடியில் நேற்று தீவிர விசாரணை

லங்கா ஈ நியூஸின் பிரதம ஆசிரியர் சந்துருவன் சேனாதீர நேற்று குற்றப்புலனாய்வுப் பிரிவு பொலிஸாரால் (சி.ஐ.டி.) தீவிர விசாரணைக்குட் படுத்தப்பட்டுள்ளார். பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோதாபய ராஜபக்ஷவின் முறைப்பாடொன்றையடுத்தே இவர் சி.ஐ.டி.யினரால் விசாரணைக்குட் படுத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

கொழும்பு கோட்டையிலுள்ள சி.ஐ.டி.யினரின் தலைமையகமான நான்காவது மாடிக்கு வரவழைக்கப்பட்டே ஆறு மணிநேரத்துக்கும் மேலாக நேற்று தீவிர விசாரணைக்குட் படுத்தப்பட்டார்.கடந்த வருடம் பெப்ரவரி மாதம் 21ஆம் திகதி லங்கா ஈ நியூஸ் இணையத்தளத்தில் வெளியான செய்தி ஒன்று தொடர்பாகவே இவரிடம் இரகசியப் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.  இந்தச் செய்தி தொடர்பாக முன்னரும் லங்கா ஈ நியூஸ் அலுவலகத்துக்கு வந்து சி.ஐ.டி.யினர் விசாரணைகளை மேற்கொண்டதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்
 

விடுதலைப் புலிகளின் கண்ணிவெடி தயாரிக்கும் தொழிற்சாலை மற்றும் பாரிய முகாம்கள் கண்டுபிடிப்பு

_army.jpgமுல்லைத் தீவு புதுகுடியிருப்புக்கு மேற்கில் அமைக்கப்ப ட்டிருந்த புலிகளின் கண்ணிவெடிகள் தயாரிக்கும் தொழிற்சாலை உட்பட பாரிய முகாம் தொகுதி ஒன்றை பாதுகாப்புப் படையினர் நேற்று முன்தினம் கைப்பற்றியுள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார நேற்றுத் தெரிவித்தார்.

முல்லைத்தீவை நோக்கி முன்னேறிவரும் இராணுவத்தின் இரண்டாவது செயலணியினர் உடையார் கட்டுக்குள காட்டுப்பகுதியில் புதுகுடியிருப்புக்கு மேற்கே அமைந்துள்ள இந்த முகாமை தமது பூரண கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். இந்தப் பிரதேசத்தில் படைநடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள இராணுவத்தின் இரண்டாவது செயலணியின் கட்டளைத் தளபதி பிரிகேடியர் ரோஹன பண்டார தலைமையிலான படையினர் அங்கு பாரிய தேடுதலுக்கு மத்தியில் தமது நிலைகளை பலப்படுத்தி வருவதாக அவர் மேலும் தெரிவித்தார்.

கண்ணிவெடிகள் தயாரிக்கும் தொழிற்சாலை, கட்டளை பணியகம் பாதுகாப்பான பதுங்கு குழிகள், மண் அரண்கள் மற்றும் சில களஞ்சியசாலைகள் ஆகியவற்றை உள்ளடக்கிய பாரிய முகாம் தொகுதியாகவே இது அமையப் பெற்றுள்ளது.

அதிசக்தி வாய்ந்த ஜெனரேட்டர்கள் மூலம் 3 வழி மின்சாரம் வழங்கப்பட்டுள்ள இந்த முகாமிலிருந்து ரி – 55 ரக சேதமடைந்த யுத்த தாங்கி – 01, பெருந் தொகையான கண்ணிவெடிகள், வெடிமருந்துகள், 81 மி. மீ. ரக மோட்டார் குண்டுகள், 61 மி. மீ. ரக மோட்டார் குண்டுகள், பெருந்தொகையான பிளாஸ்டிக் கலன்கள், இரும்பு போலைகள், பற்றரிகள், பெருந்தொகையான சிலிண்டர்கள், மற்றும் வயர்களையும் மீட்டெடுத்துள்ளனர். இது தவிர பெருந்தொகையான பி. வி. சி. குழாய்கள் மற்றும் இரும்பு குழாய்களையும், களஞ்சிய பகுதியிலிருந்து படையினர் மீட்டெடுத்துள்ளனர்.

இதேவேளை இராணுவத்தின் 57 வது படைப்பிரிவினர் தமது பாதுகாப்பு முன்னரங்குகளை மேலும் விஸ்தரித்துள்ளனர். அத்துடன் 574 வது படையினரின் கட்டளைத்தளபதி லெப்டினன்ற் கேர்ணல் சேனக விஜேசூரிய தலைமையிலான குழுவினர் நெத்தலியாறு பிரதேசத்தை ஊடுறுத்து விசுவமடுவின் மேற்கு எல்லை புரத்திற்குள் பிரவேசித்துள்ளனர். புதுகுடியிருப்பு, விசுவமடு பகுதிகளில் இரு தரப்பினருக்கும் இடையில் இடம்பெற்ற மோதல்களின் பின்னர் படையினர் நடத்திய தேடுதலின் போது கொல்லப்பட்ட புலிகளின் ஆறு சடலங்களையும் பெருந்தொகையான ரி – 56 துப்பாக்கிகளையும் மீட்டெடுத்துள்ளதாக இராணுவப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.

சவூதி அரேபியாவிற்கான இலங்கை தூதரகம் வேறு இடத்திற்கு மாற்றம்

saudi-0301.jpg
கொழும்பிலுள்ள சவூதி அரேபியாவுக்கான இலங்கைத் தூதரகம் நாளை மறுதினம் திங்கட்கிழமை முதல் 43 ஹோட்டன் பிளேஸ் கொழும்பு – 07 எனும் முகவரியில் செயற்படும் என்று தூதரகத்தின் மக்கள் தொடர்பு அதிகாரி ஐ. எல். எம். மாஹிர் தெரிவித்தார்.

சவூதி அரேபியாவின் கொழும்பு தூதரகம் புதிய இடத்திற்கு மாற்றப்பட்டுள்ள போதிலும், தூதரகத்தின் அனைத்து அலுவல்களும் வழமைபோல் இடம்பெறுவதுடன் பழைய தொலைபேசி இலக்கங்கள் தொடர்ந்தும் பாவனையில் இருக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

முல்லைத்தீவிலுள்ள புலிகளின் 3 இலக்குகள் மீது தாக்குதல்

jet-1301.jpgமுல்லைத் தீவிலுள்ள புலிகளின் அடையாளங் காணப்பட்ட மூன்று இலக்குகள் மீது விமானப் படையினர் நேற்று கடுமையான தாக்குதல்களை நடத்தியுள்ளனர். விமானப் படைக்குச் சொந்தமான ஜெட் ரக போர் விமானங்கள் மற்றும் எம் – ஐ 24 தாக்குதல் விமானங்களை பயன்படுத்தி நடத்தப்பட்ட மூன்று தாக்குதல்களும் வெற்றியளித்துள்ளதாக விமானப் படைப் பேச்சாளர் விங் கமாண்டர் ஜனக நாணயக்கார தெரிவித்தார். முல்லைத்தீவு நகருக்கு தென் பகுதி விசுவமடுவுக்கு கிழக்கு ஆகிய பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள புலிகளின் பாதுகாப்பு முன்னரங்கு நிலைகள் மற்றும் மண் அரண்கள் மீதே விமானப் படையினர் தாக்குதல்களை நடத்தியுள்ளனர்.

முல்லைத்தீவை நோக்கி முன்னேறிவரும் இராணுவத்தின் 57வது, 59வது படைப் பிரிவினர்கள் மற்றும் இரண்டாவது செயலணியினர் ஆகியவற்றுக்கு உதவியாகவே இந்த விமானத் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக ஜனக நாணயக்கார மேலும் தெரிவித்தார்.

வன்னிச் சிறுவர்களின் நிலை ராதிகா குமாரசாமி கவலை

rathika-kumarasamy.jpgவன்னியில் விடுதலைப்புலிகளுக்கு எதிராக அரச படைகள் மேற்கொண்டுள்ள தாக்குதல்களில் இடைநடுவில் சிக்கியிருக்கும் ஆயிரக்கணக்கான சிறுவர்களின் நிலைமை குறித்து ஐ.நா.செயலாளர் நாயகத்தின் சிறுவர்கள் மற்றும் ஆயுதமோதல்கள் விவகாரத்திற்குப் பொறுப்பான விசேட பிரதிநிதி ராதிகா குமாரசாமி விசனமும் கவலையும் தெரிவித்துள்ளார். இடம் பெயர்ந்திருக்கும் சிறுவர்கள் மற்றும் புலிகளால் போருக்குப் பயன்படுத்தப்படும் சிறுவர்களின் நிலைமை தொடர்பாக கவலை அடைந்திருப்பதாக ராதிகா குமாரசாமி விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.

2008 இன் பின் அரையாண்டுப் பகுதியில் வட இலங்கையில் மோதல்கள் அதிகரித்திருப்பதால் 2 இலட்சத்து 30 ஆயிரம் பேர் இடம்பெயர்ந்திருப்பதாக ஐ.நா.வின் மனிதாபிமான விடயங்களுக்கான ஒருங்கிணைப்பு அலுவலகம் குறிப்பிட்டுள்ளது. மோதல் இடம்பெறும் பகுதிகளிலிருந்து சிறுவர்களும் அவர்களின் குடும்பங்களும் இடம்பெயர புலிகள் அனுமதியளிக்க வேண்டும். அதேசமயம் அந்த மக்களின் அடிப்படை உரிமைகளுக்கு மதிப்பளிப்பதற்கான உதவிகளை அரசாங்கம் மேற்கொள்ளவேண்டும் என்று ராதிகா வலியுறுத்தியுள்ளார்.

இடம் பெயர்ந்தவர்களுக்காக அமைக்கப்படும் எந்தவொரு முகாமும் சர்வதேச தரத்திற்கு அமைவானதாகவிருக்க வேண்டும். இடம்பெயர்ந்தவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக சர்வதேச உள்ளூர் மனிதாபிமான பணியாளர்களுடன் இலங்கை இணைந்து பணியாற்றவேண்டும் என்றும் ராதிகா கூறியுள்ளார். அத்துடன் யுத்தத்தில் ஈடுபடுத்தப்படும் சிறுவர்களை விடுதலைப்புலிகள் உடனடியாக விடுவிக்கவேண்டும் என்றும் ராதிகா வேண்டுகோள்விடுத்திருக்கிறார். அவர்களின் வாழ்வைய் பாதுகாப்பது எப்படி என்பது தொடர்பான பேச்சுக்களில் அரசாங்கம் பங்கேற்கும் என்ற எதிர்பார்ப்பை வெளியிட்டுள்ள ராதிகா அதிகாரிகளும் மனிதாபிமான நடவடிக்கையிலீடுபடுவோரும் இந்த சிறுவர்களை தத்தமது குடும்பங்களுடன் சேர்ப்பதற்கு ஆயத்தமாக இருக்க வேண்டும் என்று வலியுறுத்தியிருக்கிறார். சிறுவர்களை நாம் மறந்துவிடக்கூடாது. அவர்களே அடுத்த தலைமுறையினராகும் சாத்தியமான அளவுக்கு அவர்கள் பாதுகாக்கப்படவேண்டியது அவசியம் என்றும் ராதிகா கூறியுள்ளார்.

நாளை மறுதினம் சூரியகிரகணம் – வெற்றுக் கண்களால் பார்க்காதீர்கள்!

lanka-map-02.jpgசூரிய கிரகணம் நாளை மறு தினம் திங்கட்கிழமை (26 ஆம் திகதி) இலங்கையில் தென்படும் என்று கொழும்பு பல்கலைக்கழகப் பெளதீகவியல் துறை சிரேஷ்ட விரிவுரையாளரும், வானியல் குறித்த நவீன தொழில் நுட்பத்திற்கான ஆதர் சி கிளார்க் நிலையத்தின் ஆலோசகருமான கலாநிதி சந்தன ஜயரட்ன நேற்றுத் தெரிவித்தார்.

சூரிய கிரகணத்தை வெறும் கண்களால் நேரடியாகவோ, சாதாரண கண்ணாடிகள் ஊடாகவோ, புகையூட்டப்பட்ட கண்ணாடிகள் மூலமோ, வர்ண புகைப்பட நெகடிவ்கள், எக்ஸ்ரே படமெடுக்கப்பட்ட நெகடிவ்கள் என்பவற்றைக் கொண்டோ பார்க்கக் கூடாது எனவும் அவர் குறிப்பிட்டார். இவ்வாறான வழிகளின் ஊடாக சூரிய கிரகணத்தைப் பார்ப்பதால் கண்பார்வை முழுமையாகவோ, பகுதியாகவோ பாதிக்கப்படலாம் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இது தொடர்பாக அவர் மேலும் குறிப்பிடுகையில், திங்களன்று சூரிய கிரணம் இலங்கையில் தென்படும். பிற்பகல் 1.59 மணி முதல் காலி பிரதேசங்களிலும், பிற்பகல் 2.03 மணி முதல் மாலை 4.12 மணி வரை கொழும்பிலும், பிற்பகல் 2.14 முதல் மாலை 4.10 வரை யாழ்ப்பாணத்திலும் சூரிய கிரகணம் தென்படும். இதனை கொழும்பில் பிற்பகல் 3.12 மணிக்கும், யாழ்ப்பாணத்தில் பிற்பகல் 3.15 மணிக்கும் முழுமையாகப் பார்க்கலாம். இச் சமயம் சூரிய கிரகணத்தில் 23 சதவீத முதல் 30 சத வீதம் வரை இலங்கையரால் அவதானிக்கக் கூடியதாக இருக்கும்.

சூரிய கிரகணத்தை மொரட்டுவ கட்டுபெத்த ஆதர் சி கிளார்க் நிலையத்தில் அமைக்கப்பட்டிருக்கும் விசேட முகாமிலிருந்த படியும், குருணாகல் இப்பாகமுவ மத்திய கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள இலங்கை விண்வெளி காட்சியத்திலிருந்த படியும் பொது மக்கள் பார்க்கலாம். அத்தோடு www.actimt.ac.lk  என்ற இணையதள முகவரியில் நேரடியாகவும் சூரிய கிரகணத்தைப் பார்க்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பொறுத்துனர்கள் (welders)  பயன்படுத்தும் பாதுகாப்பு கண்ணாடியைப் பாவித்து சூரிய கிரகணத்தைப் பார்க்கலாம். சூரியனுக்கும், பூமிக்குமிடையில் நீல் வட்டப் பாதையில் வலம் வரும் சந்திரன், சூரியனுக்கும், பூமிக்கும் நேரெதிரே வருவதால் தான் சூரிய கிரகணம் ஏற்படுகிறது. இவ்வருடம் இரண்டு சூரிய கிரகணங்களும், நான்கு சந்திர கிரகணங்களும், இலங்கையில் தென்படும். இவ்வருடம் தென்படுகின்ற முதலாவது சூரிய கிரகணமே 26 ஆம் திகதி தென்படவிருக்கிறது. இரண்டாவது சூரிய கிரகணம் ஜுலை மாதம் 26 ஆம் திகதி இங்கு தென்படும் என்றார். 

கற்பிட்டி சுற்றுலா வலய ஆரம்பப் பணிகளை ஆறு மாதத்திற்குள் ஆரம்பிக்க ஜனாதிபதி பணிப்பு

president.jpgபுத்தளம் மாவட்டத்திலுள்ள கற்பிட்டி பிரதேசத்தை சுற்றுலா வலயமாக அபிவிருத்தி செய்வதற்கான பணிகள் எதிர்வரும் 06 மாத காலத்தினுள் ஆரம்பிக்கப்படவிருப்பதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். கற்பிட்டியினை சுற்றுலா வலயமாக பிரகடனப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் தொடர்பான கலந்துரையாடல் (22) அலரி மாளிகையில் நடைபெற்றது. இதன் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு கூறினார்.

நான்காயிரம் ஏக்கர் பரப்புக் கொண்ட பிரதேசம் சுற்றுலா வலயமாக பிரகடனம் செய்யப்படவுள்ளது. உள்நாட்டவர்களையும், வெளிநாட்டவர்களையும் கவரும் வகையில் இதற்கான சூழல் அமைக்கப்படும். நவீன வசதிகளைக் கொண்ட நான்காயிரம் அறைகளுடன் கூடிய உல்லாச ஹோட்டல் ஒன்று இங்கே அமைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இச்சுற்றுலா வலயத்தில் உள்ளூர் முதலீட்டாளர்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டுமெனவும் ஜனாதிபதி தெரிவித்திருந்தார். இத்திட்டத்தை மேற்கொள்ளும் போது இப்பகுதியைச் சேர்ந்த அநேக இளைஞர், யுவதிகளுக்கு வேலை வாய்ப்புகள் கிடைக்கும். இதன் மூலம் இப்பிரதேச மக்களின் வாழ்க்கைத் தரம் உயரும் எனவும் ஜனாதிபதி சுட்டிக் காட்டினார்.

இக்கூட்டத்தில் சுற்றுலாத்துறை அமைச்சர் மிலிந்த மொரகொட, வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் ரோஹித்த போகெல்லாகம, ஜனாதிபதி செயலாளர் லலித் வீரதுங்க, சுற்றுலாத்துறை அமைச்சின் செயலாளர் கே. ஏ. பீ. ஜோர்ஜ் மைக்கல் இலங்கை முதலீட்டுச் சபையின் தலைவர் தம்மிக்க பெரேரா உள்ளிட்ட அதிகாரிகள் சிலர் கலந்து கொண்டனர்.

மேனன், அகாசி வருகை பயங்கரவாத ஒழிப்புக்கு எந்த பாதிப்பையும் தராது – போகொல்லாகம

rohitha-bougo.jpg
இலங்கையில் சமாதானத்தை ஏற்படுத்துவதற்கான உதவிகளை வழங்கும் நடவடிக்கைகள் குறித்து மதிப்பீடொன்றை செய்யும் பொருட்டே ஜப்பானின் இலங்கைக்கான விசேட தூதுவரான யசூசி அகாசி இலங்கைக்கு வருகை தந்திருப்பதாக வியாழக்கிழமை சபையில் தெரிவித்த வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் ரோஹித போகொல்லாகம, அகாசியின் இந்த விஜயத்தால் பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கைகளுக்கு எந்தவொரு தடங்கலும் ஏற்படாதெனவும் கூறினார்.

பாராளுமன்றத்தில் ஜே.வி.பி.யின் பாராளுமன்ற குழுத் தலைவரான அநுரகுமார திஸநாயக்க, இந்திய வெளியுறவுத் துறைச் செயலாளர் சிவ்சங்கர் மேனன் மற்றும் ஜப்பானின் இலங்கைக்கான சிறப்புத் தூதுவர் யசூசி அகாசி ஆகியோரின் இலங்கை விஜயங்களுக்கான நோக்கம் மற்றும் அவர்கள் நடத்திய சந்திப்புகள், இவற்றின் போது எடுக்கப்பட்ட தீர்மானங்கள், எட்டப்பட்ட இணக்கப்பாடுகள் தொடர்பாக எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்து பேசும்போதே அமைச்சர் போகொல்லாகம இவ்வாறு கூறினார். அத்துடன், இரு தரப்பு உறவுகள், இலங்கை மற்றும் சார்க் வலய அரசியல் மற்றும் பாதுகாப்பு நிலைவரங்கள் பற்றி பேச்சுக்களை நடத்தவே இந்திய வெளியுறவுத் துறை செயலாளர் சிவ்சங்கர் மேனன் இலங்கை வந்திருந்தார் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

அமைச்சர் இதன்போது மேலும் விளக்கமளிக்கையில்;  “இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான நட்புறவானது முன்னொருபோதும் இல்லாத வகையில் சுமுகமான ஒத்துழைப்புடன் இருப்பதாக இரு தரப்புகளும் ஏற்றுக்கொண்டுள்ளன. இதற்கமைய இரு நாடுகளுக்குமிடையில் உயர்மட்ட அதிகாரிகளுக்கும் அரசியல் தலைமைகளுக்கும் இருதரப்பு பேச்சுக்களுக்கான அழைப்பு எப்போதும் திறந்தே உள்ளது.  இதற்கமைய இருநாடுகளுக்குமிடையிலான இரு தரப்பு உறவுகளை மேலும் உறுதிப்படுத்திக்கொள்வது மற்றும் குறிப்பாக வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தற்போதைய அரசியல், மனிதாபிமான மற்றும் பாதுகாப்பு நிலைவரங்கள் பற்றி நன்கு மதிப்பீடு செய்து அது தொடர்பாக இருதரப்பு கருத்துக்களை பரிமாறிக் கொள்ளல் ஆகியவையே சிவ்சங்கர் மேனனது இலங்கை விஜயத்தின் அடிப்படை நோக்கமாக இருந்தது.

இதேநேரம், இலங்கையில் சமாதானத்தை ஏற்படுத்த ஜப்பானினால் மேற்கொள்ள வேண்டிய உதவி செயற்பாடுகள் குறித்து எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் பற்றி மதிப்பீடொன்றை செய்யவும், அது தொடர்பாக உயர்மட்ட அதிகாரிகளுடன் கலந்து பேசவுமே யசூசி அகாசி இலங்கை வந்திருக்கிறார்.  இந்த பேச்சுகளினால் இலங்கையின் இறைமைக்கும் ஆட்புல ஒருமைப்பாட்டுக்கும் எந்த வகையிலும் பாதிப்போ அல்லது பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கைகளுக்கு எந்த தடங்கலோ ஏற்படாது. அகாசி இந்த விஜயத்தில் பலதரப்பட்ட அதிகாரிகளையும் அரசியல் தலைவர்களையும் சந்தித்து பேசவிருக்கிறார்’ என்றார்.

ஊடகச் சுதந்திரத்துக்கு இழுக்கை ஏற்படுத்தும் எந்தச் செயற்பாட்டையும் அரசு அனுமதிக்காது

rivira-editor-02.jpgஊடகச் சுதந்திரத்திற்கு இழுக்கை ஏற்படுத்தும் எந்த விதமான செயற்பாட்டையும் அரசாங்கம் அனுமதிக்காது; செய்தியாளர்களுக்கு எதிரான நடவடிக்கைகள் குறித்து உரிய விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றது என்று பிரதமர் ரத்னசிறி விக்கிரமநாயக்க நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

ஊடகவியலாளர்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்துவது அரசாங்கத்தின் நோக்கமல்ல என்றும் குற்றவாளிகளைக் கண்டறிய புலனாய்வுத்துறை விசாரணைகள் முனைப்புடன் இடம்பெற்று வருவதாகவும் பிரதமர் தெரிவித்தார்.

ஊடகவியலாளர்கள் மீதான நெருக்கடிகள் அண்மைக் காலமாக அதிகரித்துள்ளதாகவும், இதனைத் தடுத்து நிறுத்த துரித நடவடிக்கைகளை மேற்கொள் ளுமாறும் ஐ. தே. க. எம்.பி. ரவி கருணாநாயக்கவும், ஜே. வி. பி. எம்.பி. சுனில் ஹந்துன்னெத்தியும் பிரதமரிடம் வேண்டுகோள் விடுத்தனர். ஊடகவியலாளர்களைப் பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் அவர்களுக்கும் பிரபுக்களின் பாதுகாப்பு வழங்கி பாராளுமன்றத்திற்கு அழைத்துவர வேண்டிய நிலை ஏற்படுமென்றும் அவர்கள் சுட்டிக்காட்டினர்.

இதற்குப் பதிலளித்த பிரதமர், ஊடகச் சுதந்திரம் பாதிப்படைய அரசாங்கம் ஒருபோதும் இடமளிக்காது என்று திட்டவட்டமாகத் தெரிவித்தார். அண்மைய சம்பவங்கள் குறித்து முறையான விசாரணைகள் இடம்பெறுவதாகவும் அவர் கூறினார்.