![]()
இலங்கையில் சமாதானத்தை ஏற்படுத்துவதற்கான உதவிகளை வழங்கும் நடவடிக்கைகள் குறித்து மதிப்பீடொன்றை செய்யும் பொருட்டே ஜப்பானின் இலங்கைக்கான விசேட தூதுவரான யசூசி அகாசி இலங்கைக்கு வருகை தந்திருப்பதாக வியாழக்கிழமை சபையில் தெரிவித்த வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் ரோஹித போகொல்லாகம, அகாசியின் இந்த விஜயத்தால் பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கைகளுக்கு எந்தவொரு தடங்கலும் ஏற்படாதெனவும் கூறினார்.
பாராளுமன்றத்தில் ஜே.வி.பி.யின் பாராளுமன்ற குழுத் தலைவரான அநுரகுமார திஸநாயக்க, இந்திய வெளியுறவுத் துறைச் செயலாளர் சிவ்சங்கர் மேனன் மற்றும் ஜப்பானின் இலங்கைக்கான சிறப்புத் தூதுவர் யசூசி அகாசி ஆகியோரின் இலங்கை விஜயங்களுக்கான நோக்கம் மற்றும் அவர்கள் நடத்திய சந்திப்புகள், இவற்றின் போது எடுக்கப்பட்ட தீர்மானங்கள், எட்டப்பட்ட இணக்கப்பாடுகள் தொடர்பாக எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்து பேசும்போதே அமைச்சர் போகொல்லாகம இவ்வாறு கூறினார். அத்துடன், இரு தரப்பு உறவுகள், இலங்கை மற்றும் சார்க் வலய அரசியல் மற்றும் பாதுகாப்பு நிலைவரங்கள் பற்றி பேச்சுக்களை நடத்தவே இந்திய வெளியுறவுத் துறை செயலாளர் சிவ்சங்கர் மேனன் இலங்கை வந்திருந்தார் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
அமைச்சர் இதன்போது மேலும் விளக்கமளிக்கையில்; “இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான நட்புறவானது முன்னொருபோதும் இல்லாத வகையில் சுமுகமான ஒத்துழைப்புடன் இருப்பதாக இரு தரப்புகளும் ஏற்றுக்கொண்டுள்ளன. இதற்கமைய இரு நாடுகளுக்குமிடையில் உயர்மட்ட அதிகாரிகளுக்கும் அரசியல் தலைமைகளுக்கும் இருதரப்பு பேச்சுக்களுக்கான அழைப்பு எப்போதும் திறந்தே உள்ளது. இதற்கமைய இருநாடுகளுக்குமிடையிலான இரு தரப்பு உறவுகளை மேலும் உறுதிப்படுத்திக்கொள்வது மற்றும் குறிப்பாக வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தற்போதைய அரசியல், மனிதாபிமான மற்றும் பாதுகாப்பு நிலைவரங்கள் பற்றி நன்கு மதிப்பீடு செய்து அது தொடர்பாக இருதரப்பு கருத்துக்களை பரிமாறிக் கொள்ளல் ஆகியவையே சிவ்சங்கர் மேனனது இலங்கை விஜயத்தின் அடிப்படை நோக்கமாக இருந்தது.
இதேநேரம், இலங்கையில் சமாதானத்தை ஏற்படுத்த ஜப்பானினால் மேற்கொள்ள வேண்டிய உதவி செயற்பாடுகள் குறித்து எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் பற்றி மதிப்பீடொன்றை செய்யவும், அது தொடர்பாக உயர்மட்ட அதிகாரிகளுடன் கலந்து பேசவுமே யசூசி அகாசி இலங்கை வந்திருக்கிறார். இந்த பேச்சுகளினால் இலங்கையின் இறைமைக்கும் ஆட்புல ஒருமைப்பாட்டுக்கும் எந்த வகையிலும் பாதிப்போ அல்லது பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கைகளுக்கு எந்த தடங்கலோ ஏற்படாது. அகாசி இந்த விஜயத்தில் பலதரப்பட்ட அதிகாரிகளையும் அரசியல் தலைவர்களையும் சந்தித்து பேசவிருக்கிறார்’ என்றார்.