தமிழ் திரையுலகில் கடந்த 30 ஆண்டுகளா நாயகனாக நடித்துவந்த முரளி(46) இன்று சென்னையில் நெஞ்சுலியால் மரணமடைந்தார். முரளியின் உடல் சென்னை வளசரவாக்கத்தில் உள்ள அவரது வீட்டில் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
1984ம் ஆண்டு பூவிலங்கு வெளியானபோது அதில் நாயகனாக அனல் பறக்க வசனம் பேசி நடித்த முரளி, தமிழ் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தார். 1984ல் தொடங்கிய முரளியின் நடிப்பு பயணம் 2002ம் ஆண்டு வரை நிற்காமல் படு பிசியாக போய்க் கொண்டிருந்தது.
பூவிலங்கைத் தொடர்ந்து பகல் நிலவு படத்தில் மணிரத்தினத்தின் கையால் குட்டுப்பட்டு பண்பட்ட நடிப்பைக் காட்டினார் முரளி. ஆக்ரோஷமாகவும் நடிக்க முடியும், பக்குவப்பட்ட நடிப்பையும் கொடுக்க முடியும் என்பதை நிரூபித்தார் இப்படத்தின் மூலம். தொடர்ந்து பல படங்களில் நடித்த முரளிக்கு பெரும் ஏற்றத்தையும், அவரை ஒரு ஸ்டார் நடிகராகவும் உயர்த்திய படம் விக்ரமனின் புது வசந்தம். அவரது திரையுலக வாழ்க்கையில் அது ஒரு முக்கிய மைல் கல். அதைத் தொடர்ந்து மிகவும் பிசியான நடிகராக உயர்ந்தார் முரளி.
சேரன் இயக்கத்தில் முரளி நடித்த பொற்காலம், வெற்றிக் கொடி கட்டு ஆகிய இரு படங்களும் முரளியின் நடிப்புத்திறமையை மேலும் பளிச்சிட வைத்த அருமையான படங்கள். சுந்தரா டிராவல்ஸில் இவரும், வடிவேலுவும் செய்த காமெடிக் காட்சிகள் ரசிகர்களை வயிறு குலங்க வைத்ததை மறக்க முடியாது.
ஆனந்தம் படமும் முரளியின் அருமையான நடிப்பை வெளிக் கொண்டு வந்த படங்களில் ஒன்று.. தமிழ் சினிமாவின் ஆர்ப்பாட்டமில்லாத, அதேசமயம் ஏராளமான வெள்ளி விழா படங்களைக் கொடுத்த மிகச் சிறிய நடிகர்களில் முரளியும் குறிப்பிடத்தக்கவர். எந்த நிலையிலும் அவர் தலைக்கணம் பிடித்து நடந்ததில்லை. பந்தா செய்ததில்லை. தயாரிப்பாளர்களையும், இயக்குநர்களையும் மதித்து நடந்தவர்.
2001ம் ஆண்டு பாரதிராஜாவின் கடல் பூக்கள் படத்திற்காக சிறந்த நடிகருக்கான மாநில அரசின் விருதைப் பெற்றார் முரளி. கடந்த 2006ம் ஆண்டு நடந்த சட்டசபைத் தேர்தலில் அதிமுகவுக்காக தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார்.
கடைசியாக முரளி நடித்த படம் அவரது மகனின் முதல் படமான பாணா காத்தாடிதான். அதற்கு முன்பு அவர் நடித்த படமான கவசம் இந்த வாரம் திரைக்கு வரவுள்ள நிலையில் அகால மரணத்தை சந்தித்துள்ளார் முரளி. முரளியின் மனைவி ஷோபா. இந்தத் தம்பதிக்கு மகன் அதர்வா தவிர காவ்யா என்ற மகள் உள்ளார்.
மகனை ஹீரோவாக அறிமுகப்படுத்தி செய்தியாளர்களிடம் முரளி பேசிய வார்த்தை இது… நான் 30 வருடங்களா நடித்த காலத்தில் எத்தனையோ தவறுகளை செய்துள்ளேன். ஆனால் அதை தயாரிப்பாளர்களும், இயக்குநர்களும் பொறுத்துக் கொண்டு என்னை வாழ வைத்தனர்.எனவே தயாரிப்பாளர்களுக்கு மதிப்பு கொடு, நல்ல பெயரெடு, நல்ல நடிகராக உருவாகு, பணத்தை விட நல்ல படம் முக்கியம் என்பதையே எனது மகனுக்கு அறிவுரையாக கூறியுள்ளேன் என்றார் முரளி.