வீடற்றவர்களுக்கு வீடுகளை வழங்குவதே எமது நோக்கம் – ஜனாதிபதி

mahinda-rajapaksa.jpgநாட்டை சுதந்திரமாக்கிய எமக்கு நாட்டு மக்கள் திருப்திப்படும் வாழ்க்கையைப் பெற்றுக்கொடுப்பது முக்கியமாகவுள்ளது என ஜனாதிபதி தெரிவித்தார். வடக்கு, கிழக்கு உட்பட நாடளாவிய ரீதியில் வீட்டு உறுதிப் பத்திர மில்லாத 1300 பேருக்கு வீட்டு உறுதிகளை வழங்கும் வைபவம் நேற்று அலரி மாளிகையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் வீட்டுரிமையாளர்களுக்கு உறுதிப் பத்திரத்தைக் கையளித்து உரையாற்றும்போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார்.இந்நிகழ்வில் ஜனாதிபதி மேலும் தெரிவித்ததாவது:

சிலர் இந்த நாட்டில் ஜனநாயகமில்லை எனவும் சர்வாதிகாரமே ஓங்கியுள்ளதெனவும் கூறி வருகின்றனர். இது பொறாமை மற்றும் வைராக்கியத்தின் வெளிப்பாடாகும். என்னைப் பற்றி மிக மோசமான கட்டுரைகள் வெளியாகி வருகின்றன. எனது குடும்பத்தை சீர்குலைக்கும் விதத்திலும் கூற்றுக்களை வெளியிட்டுள்ளனர். நான் கொழும்பு 7ல் பிறந்தவனென்றால் இதன் பிரதிபலிப்பு வேறு விதமாக இருந்திருக்கும். நான் மெதமுலன கிராமத்தில் பிறந்தவன். எனது செயற்பாட்டை சீரழிக்க முயற்சிக்கின்றனர்.

நாம் மக்களுக்காக நாட்டின் எதிர்கால சந்ததிக்காக சுபீட்சமான நாட்டைக் கட்டியெழுப்பும் பயணத்தை முன்னெடுத்துள்ளோம். அதனை நிறைவேற்றுவோம். அதற்கு சகலரதும் பூரண ஒத்துழைப்பு அவசியம். வீட்டு உறுதிப்பத்திரிமில்லாதவர்களுக்கு வீட்டுரிமைப்பத்திரம் இன்று வழங்கப்படுவதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். வீடற்றவர்களுக்கு வீடுகளை வழங்குவதே எமது நோக்கம். எனினும் அதனை ஒரே தடவையில் நிறைவேற்ற முடியாது. படிப்படியாக நடைமுறைப்படுத்தி வருகின்றோம். வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சானது மக்களுடன் நெருங்கியதாக இத்திட்டத்தை மேற்கொண்டு வருகிறது.

வீட்டுப் பிரச்சினைகளைத் தீர்ப்பது சுலப மான காரியமல்ல. எனினும் முடிந்தளவு அதற்குத் தீர்வுகாண செயற் திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகின்றோம். எமக்கான காணிகள் அதிகரிக்காது எனினும் வீட்டுத் தேவையும் மக்கள் தொகையும் அதிகரித்து வருகிறது. அதனால் நாம் திட்டமிட்ட செயற்பாட்டை முன்னெடுக்கின்றோம்.

நாம் இன்றைய தினத்தை மட்டும் கருத்திற்கொள்ளாது எதிர்காலத்தையும் கருத்திற்கொண்டே செயற்படுகிறோம். தற்போது நாடு ஒன்றிணைக்கப்பட்டு அபிவிருத்திப் பயணம் முன்னெ டுக்கப்படுகிறது. எதிர்கால பொருளாதாரம், சூழல், சமூக வளர்ச்சி பற்றி சிந்தித்து செயற்பட வேண்டியுள்ளது. இன்றேல் மோசமான பின்விளைவுகளையே எதிர்கொள்ள நேரும் எனவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *