எழுத்தாளர்கள்

எழுத்தாளர்கள்

யாழ்.குடாநாட்டில் அரச ஆஸ்பத்திரிகளில் மருந்துகளுக்கு தட்டுப்பாடு; நோயாளர் பாதிப்பு

medicine.jpgயாழ். போதனா வைத்தியசாலை உட்பட குடாநாட்டின் அரசினர் வைத்திய சாலைகள் மற்றும் அரச மருந்தகங்களில் மருந்து வகைகளுக்கு பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் நோயாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெறும் நோயாளர்களுக்கு டாக்டர்கள் எழுதிக்கொடுக்கும் மருந்துச் சிட்டைகளை ஆஸ்பத்திரி மருந்தகத்தில் கொடுத்தால், அந்த மருந்துகள் முடிவடைந்துவிட்டதாகவும், தனியார் மருந்துக்கடைகளில் வாங்குமாறும் தெரிவிக்கப்படுகிறது.

தனியார் மருந்து வியாபாரிகள் இச்சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி இரட்டிப்பு விலைகளில் மருந்துகளை விற்பனை செய்கின்றனர். விமான மூலம் மருந்துகளை எடுத்துவருவதால் அதிக விலைக்கு விற்கவேண்டியுள்ளது என பொதுமக்களிடம் அவர்கள் தெரிவிக்கின்றனர்.

குடாநாட்டில் உள்ள மருந்து வியாபாரிகள் கப்பல் மூலமே மருந்துகளை எடுத்து வருகின்றனர். விமான மூலம் டாக்டர்கள் மட்டும் ஒரு குறிப்பிட்ட தொகை மருந்துகளை கொண்டுவரலாம். இதனால் முக்கியமான நோய்களுக்குரிய மருந்துகளை நோயாளிகள் அதிக விலைக்கே வாங்கிப் பாவிக்கின்றனர்.

குடாநாட்டில் தற்போது கடும் பனியும் கடும் வெயிலும் காணப்படுவதால் சளி, இருமல் போன்ற சுவாச நோய்களால் சிறுவர்கள் முதல் முதியோர் வரை அதிகளவு பாதிக்கப்பட்டு வருவதாக டாக்டர்கள் கூறுகின்றனர்.

சர்வதேச செஞ்சிலுவைச்சங்கம் அவசர நோயாளர்களுக்குரிய மருந்து வகைகளை எதுவித கட்டணமும் இன்றி விமான மூலம் எடுத்து வந்து யாழ்.மாவட்ட வைத்தியசாலைகளுக்கு வழங்கிவருவதும் குறிப்பிடத்தக்கது. குடாநாட்டின் மருந்துத் தேவைகள் குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

மும்பை தாக்குதலில் பிடிபட்ட தீவிரவாதி அஜ்மலை ஒப்படைக்க முடியாது – பாகிஸ்தானுக்கு இந்தியா பதிலடி

ajmal.jpgமும்பை யில் தாக்குதல் நடத்திய தீவிரவாதி அஜ்மலை விசாரணைக்கு ஒப்படைக்கும்படி கேட்கப் போவதாக பாகிஸ்தான் கூறியிருப்பதை  ஆரம்ப நிலையிலேயே இந்தியா நிராகரித்துள்ளது.  மும்பையில் கடந்த நவம்பர் 26ம் தேதி பாகிஸ்தான் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 195 பேர் பலியானார்கள். தாக்குதல் நடத்திய 10 தீவிரவாதிகளில் 9 பேரை கமாண்டோ படை சுட்டுக் கொன்றது. அஜ்மல் கசாப் என்ற ஒரே தீவிரவாதி மட்டும் உயிருடன் பிடிபட்டான்.

அவன் இப்போது மும்பையில் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளான். மும்பை தாக்குதலுக்கு பாகிஸ்தானில் சதித் திட்டம் தீட்டப்பட்டது என்பதற்கும், பாகிஸ்தானில் இருந்து வந்த தீவிரவாதிகள்தான் தாக்குதலை நடத்தினர் என்பதற்கும் அடுக்கடுக்கான ஆதாரங்களை கடந்த மாதம் 5ம் தேதி பாகிஸ்தானிடம் இந்தியா கொடுத்தது. அதன் அடிப்படையில் விசாரணை நடத்திய பாகிஸ்தான், மும்பை தாக்குதலுக்கான

சதித் திட்டத்தில் ஒரு பகுதி தனது நாட்டில்தான் தீட்டப்பட்டுள்ளது என்பதை முதல்முறையாக ஒப்புக் கொண்டது. இது குறித்து இஸ்லாமாபாத்தில் பேட்டி அளித்த பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் ரக்மான் மாலிக், மும்பை தாக்குதல் தொடர்பாக பாகிஸ்தான் கூட்டு விசாரணை ஏஜென்சி விசாரணை நடத்தி 8 பேர் மீது எப்.ஐ.ஆர். பதிவு செய்துள்ளது. அவர்களில் 6 பேரை கைது செய்திருக்கிறோம். இன்னும் 2 பேர் பிடிபடவில்லை. அவர்களில் இந்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள அஜ்மல் கசாப்பும் ஒருவன். இது தொடர்பாக இந்தியாவிடம் இன்னும் நிறைய தகவல்களை கேட்போம்.

அப்போதுதான் எங்களால் நடவடிக்கை எடுக்க முடியும். அஜ்மலை எங்களிடம் ஒப்படைக்கும்படி இந்தியாவிடம் இதுவரை கேட்கவில்லை. ஆனால், எங்களுடைய விசாரணைக்கு தேவைப்பட்டால் அவனை ஒப்படைக்கும்படி கேட்போம் என்றார்.

இதற்கு இந்திய வெளியுறவு அமைச்சகம் நேற்று உடனடி பதில் அளித்துள்ளது. வெளியுறவு அமைச்சக வட்டாரம் கூறுகையில், இந்தியாவில்தான் தாக்குதல் நடந்துள்ளது. எனவே, அஜ்மல் கசாப்பை பாகிஸ்தானிடம் ஒப்படைக்கும் பேச்சுக்கே இடம் இல்லை. இந்தியாவில் குற்றம் செய்தவரை எந்த அடிப்படையில் இன்னொரு நாட்டிடம் ஒப்படைக்க முடியும்? அஜ்மலிடம் இந்தியாவில்தான் விசாரணை நடத்தப்பட்டு தண்டனை அளிக்கப்படும் என்றனர்.

மும்பை உயர் போலீஸ் அதிகாரி ஒருவரும் இதே கருத்தை கூறினார். என்ன விலை கொடுத்தாலும் அஜ்மலை பாகிஸ்தானிடம் ஒப்படைக்க மாட்டோம். அவன் செய்துள்ள குற்றத்துக்கு தூக்கு தண்டனை கிடைப்பது உறுதி. அதற்கு முன்பாக அவனை எங்கும் செல்ல விடமாட்டோம் என்று அவர் கூறினார். மகாராஷ்டிரா உள்துறை அமைச்சர் ஜெயந்த் பட்டீல் கூறுகையில், மும்பை தாக்குதலுக்கு சதித் திட்டம் தீட்டிய லஸ்கர் -இ- தொய்பா தீவிரவாதி ஷாகிர் ரக்மான் லக்வி, இன்னொரு தீவிரவாதி ஷரார் ஷா ஆகியோர் பாகிஸ்தானில்தான் உள்ளனர். இவர்களை ஒப்படைக்கும்படி இந்தியா விடுத்த கோரிக்கையை பாகிஸ்தான் நிராகரித்து விட்டது. அப்படி இருக்கும்போது அஜ்மலை ஒப்படைக்கும்படி எந்த வகையில் அந்த நாடு கேட்க முடியும்? என்றார்.

நாளை தமிழகம் கொந்தளிக்க வேண்டும் – வைகோ

1102-vaiko.jpgநாளை செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ள (பெப்ரவரி 17) மனிதச் சங்கிலியில் அனைத்துத் தரப்பினரும் பங்கேற்க வேண்டும். இலங்கையில் போர்நிறுத்தம் ஏற்படுத்த இந்திய அரசு ஓங்கி குரல் கொடுக்கும் நிலையை உருவாக்க தமிழகம் கொந்தளிக்க வேண்டும் என்று ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை:

விடுதலைப் புலிகள் ஆயுதங்களை கீழே போட வேண்டும் என்றும், இலங்கை இராணுவம் தாக்குதலை நிறுத்த வேண்டும் என்றும் அதனால் அங்கு போர் நிறுத்தம் ஏற்பட வேண்டும் என்றும் குடியரசுத் தலைவர் உரை மூலமாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. ஒரு தரப்பு மட்டும் ஆயுதங்களைக் கீழே போட வேண்டும் என்று உலகில் யாரும் இதுவரை சொன்னதில்லை.

முல்லைத் தீவில் இலங்கை அரசின் அழைப்பை ஏற்று தமிழர்கள் யாரும் செல்லவில்லை. ஆனால் 35 ஆயிரம் பேர் வந்துவிட்டதாக அந்த அரசு பொய் சொல்கிறது. இலங்கையில் தமிழர்கள் கொல்லப்படுவதைத் தாங்காமல் லண்டனில் இருந்து ஜெனீவா சென்று, ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை ஆணையம் எதிரே முருகதாசன் என்ற தமிழ் இளைஞர் தீக்குளித்து இறந்துள்ளார்.

தமிழகத்திலும் பலர் தீக்குளித்து இறந்துள்ளனர். இந்திய அரசு இலங்கையிலே போர் நிறுத்தத்தை ஏற்படுத்த ஓங்கிக் குரல் கொடுத்தாக வேண்டும். அந்த நிலையை உருவாக்க தமிழகம் கொந்தளிக்க வேண்டும். நம் வேதனையை வெளிப்படுத்த இலங்கைத் தமிழர்களைக் காக்க தமிழக வீதிகளில் கரம் கோர்த்து நிற்குமாறு இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம் வேண்டுகிறது. தண்ணீரில் தத்தளிக்கும் குழந்தை, தாயின் கரங்களைப் பற்றி துடிப்பதைப் போல இலங்கைத் தமிழர்கள் மரணத்தின் பிடியில் இருந்து நம்முடைய கரங்களை எதிர்பார்க்கிறார்கள்.

எனவே, செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ள (பிப்ரவரி 17) மனிதச் சங்கிலியில் அனைத்துத் தரப்பினரும் பங்கேற்க வேண்டும் என வைகோ அழைப்பு விடுத்துள்ளார்.

போர் நிறுத்தம் பற்றிய பேச்சு: ப.சிதம்பரத்துக்கு வைகோ கண்டனம்

1102-vaiko.jpgதிருச்சியில் இன்று ஈழத்தில் போர் நிறுத்தம் செய்ய கோரி தமிழ்நாடு தேவேந்திரர் குல வேளாளர் கூட்டமைப்பு சார்பில் ஜங்ஷன் காதிகிராப்ட் முன்பு உண்ணாவிரத போராட்டம் நடந்து வருகிறது.  ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ கலந்துகொண்டு சிறப்புரையாற்றினர்.

சிறப்புரையாற்றிய பின்னர் வைகோ செய்தியாளர்களை சந்தித்தபோது, ‘’ மத்திய மந்திரி ப.சிதம்பரம் தமிழக மக்களை ஏமாற்றும் விதமாக போர் நிறுத்தம் செய்ய வேண்டுமானால் விடுதலை புலிகள் ஆயுதங்களை கீழே போட வேண்டும் என்று கூறி இருக்கிறார். எந்த போர் நிறுத்தத்தில் இதுவரை ஒரு தரப்பை மட்டும் ஆயுதத்தை கீழே போட சொல்லி இருக்கிறார்கள் போர் நிறுத்தம் என்றால் இரண்டு புறமும் ஆயுதங்களை கீழே போட வேண்டும்.

விடுதலைபுலிகளை பொறுத்த வரை கடந்த 2004-ம் ஆண்டு டிசம்பரிலேயே நார்வே தூதுக்குழு கேட்டு கொண்டதற்கு இணங்க போர் நிறுத்தம் செய்தனர். ஆனால் போர் நிறுத்தத்தை இலங்கை அரசுதான் முறித்தது. இலங்கை போர் என்பது ராஜபக்சே அரசும், இந்திய அரசும் சேர்ந்து நடத்துவது ஆகும். ஆனால் மத்திய அரசும் தமிழக முதலமைச்சரும் மக்களை ஏமாற்றி வருகிறார்கள். ஒட்டு மொத்த தமிழகமும் கொந்தளித்து போய் இருக்கிறது. அதன் எதிரொலியாகத்தான் தமிழகத்தில் அனைத்து தரப்பினரும் போரை நிறுத்த போராட்டங்களை நடத்தி வருகிறார்கள்.
 
இந்திய அரசு ஒப்புக்காக போரை நிறுத்த கூறினாலாவது மற்ற நாடுகள் போரை நிறுத்த கோரி குரல் கொடுக்கும். ஆனால் மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவில்லை’’ என்று தெரிவித்தார்.

எல்ரிரிஈயினரின் பெருந்தொகை படைப் பொருட்கள் கண்டுபிடிப்பு

truck.jpgவிஸ்வமடுப் பகுதியில் எல்ரிரிஈயினருக்கு எதிரான தாக்குதலில் ஈடுபட்டுவரும் 57வது படைப்பிரிவின் 571 வது, 572 வது பிரிகேட் படையினர் அண்மையில் விடுவிக்கப்பட்ட பகுதிகளின் பாதுகாப்பைப் பலப்படுத்தும் நோக்கில் நேற்று (பெப்:15) அப்பகுதிகளில் தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டனர். இத்தேடுதலின் போது எல்ரிரிஈ பயங்கரவாதிகளால் விட்டுச் சென்ற பல படைப்பொருட்களை படையினர் கண்டுபிடித்துள்ளதாக களநிலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

571வது பிரிகேட்டின் 17வது கஜபா படையணியினர் விஸ்வமடுப் பகுதியில் நடத்திய தேடுதலில் 20 கைக்குண்டுகள், இரண்டு விருத்தி செய்யப்பட்ட வெடிக்கவைக்கும் உபகரணம்(IED) மற்றும் 81 மிமீ மோட்டார் குண்டுகள் என்பனவற்றைக் கைபற்றியுள்ளனர். அதேவேளை இப்பகுதியில் தேடுதல் நடத்திய  572வது படைப்பிரிவின் 7வது காலால் படையினர் பெருமளவான இராணுவ உபகரனங்களைக் கண்டுபிடித்துள்ளதுடன் பயங்கரவாதிகளால் கைவிடப்பட்ட  டீசல் மற்றும் மண்ணெண்ணெய் பீப்பாக்களையும் கைபற்றியுள்ளனர்.

இப்படையணி எல்ரிரிஈ பயங்கரவாதிகளால் கைவிடப்பட்ட முகாமையும் கண்டுபிடித்துள்ளனர்.  7 வது காலால் படையினர் இத்தேடுதல் நடவடிக்கையில் கண்டுபிடித்துள்ள மற்றய  உபகரணங்களின் விபரங்கள் பின்வருமாறு

09 x எல்ரிரிரிஈ பவுச் , 2530 x ரி-56 ரவைகள் ,250 x எப் என்சி ரவைகள் , 07 x கைக்குண்டுகள் , 41 x எல்ரிரிஈ தொப்பிகள், 52 x எல்ரிரிஈ  சீருடைகள் , 03 x ஜெகட்டுகள் , 05 x எல்ரிரிஈ பெக், 02 x 81 மிமீ மோட்டார் குண்டுகள்

விஸ்வமடுப் பகுதியில் 572பிரிகேட்டின்  9வது விஜயபாகு படைப்பிரிவினர் இருவேறு தேடுதல் நடவடிக்கையின் போது பெருந்தொகையான ஆட்டிலறி செல்களைக் கைபற்றியுள்ளனர். மேலும் 14 கிறீஸ் பெரல்கள்(210லீ), பசளைக் (யூரியா) களஞ்சியசாலைக் கட்டிடங்கள் மற்றும் டோசர் இயந்திரங்கள் உட்பட பல உபகரணங்களையும் கைபற்றியுள்ளனர். அத்துடன் கைப்பற்றப்பட்ட மற்றய பொருட்களின் விபரங்கள் பின்வருமாறு.  115 x 122மிமீ.ஆட்டி செல்கள், 40 x 130மிமீஆட்டிசெல்கள், 75 x 81மிமீ மோட்டார் பியூஸ்கள், 05 x 82 மிமீமோட்டார் குண்டுகள், 180 x 60 மிமீ.​மோட்டார் பியூஸ், 10 x 130மிமீஆட்டிலறி பியூஸ், 20 x 130மிமீ வெற்றுச் செல்கள், 01 x கண்ணிவெடி, 01 xடோசர் 02 x ரி- 56 துப்பாக்கிகள்.

மஹேல ஜயவர்தனவின் இறுதி எதிர்பர்ப்பு

mahela1102.jpgஇலங்கை கிரிக்கெட் அணி டெஸ்ட் கிரிக்கெட் பேட்டித் தொடர் ஒன்றில் விளையாடுவதற்காக நேற்று பாக்கிஸ்தானுக்கு விஜயம் மேற்கொண்டது. டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறப் போவதாக அறிவித்துள்ள இலங்கை கிரிக்கெட் அணியின் தலைவர் மஹேல ஜயவர்தன பங்குபற்றும் இறுதி டெஸ்ட் போட்டியாக இது அமைகிறது. இந்த போட்டித் தொடரை வெற்றிகொள்வது தமது ஒரே குறிக்கோள் என மஹேல தெரிவிக்கின்றார்.

இரண்டு போட்டிகளைக் கொண்ட இத்தொடரின் முதலாவது போட்டி எதிர்வரும் 21 ஆம் திகதி கராச்சி தேசிய விளையாட்டரங்கில் நடைபெற உள்ளது.
பாக்கிஸ்தானுடனான போட்டித் தொடரை இந்தியா இரத்து செய்ததையடுத்து அந்தப் போட்டித்தொடரில் விளையாட பாக்கிஸ்தான் இலங்கைக்கு அழைப்பு விடுத்தது. பாக்கிஸ்தானின் அழைப்பை இலங்கை ஏற்றுக்கொணடதற்கு ஏற்ப இந்த போட்டித்தொடர் நடத்தப்படுகிறது.

இந்த போட்டித்தொடர் ஒரு நாள் போட்டிகளையும் டெஸ்ட் போட்டிகளையும் கொண்டதாக உள்ள போதிலும் இரண்டு கட்டங்களாக நடத்தப்படுகிறது. அதன்படி ஒரு நாள் போட்டித் தொடர் முன்னர் நடத்தப்பட்டதுடன் அதில் இலங்கை அணி வெற்றிபெற்றது. பாக்கிஸ்தான் சென்றுள்ள இலங்கை அணியில் புது ஆரம்ப துடுப்பாட்ட வீரரான பரன வித்தான மற்றும் வேகப் பந்து வீச்சாளரான சுரங்க லக்மால் ஆகிய இரு புதுமுகங்களும் இடம்பெறுகின்றனர்.

மஹேல தலைமயிலான அணியில் குமார் சங்கக்கார, திலக்கரத்ன டில்ஷான், திலான் சமரவீர, பிரசன்ன ஜயவர்தன, மாலிந்த வர்ணபுர,  தரங்க பரன வித்தான,  சமிந்த வாஸ், முத்தையா முரளீதரன், அஜந்த மெண்டிஸ், சாமர கப்புகெதர,பர்வீஸ் மஹரூப், தில்ஹார பெர்னான்டோ, திலான் துஷார, சுரங்க லக்மால் ஆகியோர் இடம்பெறுகின்றனர்.

ஆயுதம் தரித்த புலிகளுடன் பேசுங்கள் என இலங்கை அரசிடம் கூறும் தார்மிக உரிமை இந்தியாவுக்கு இல்லை! – ப. சிதம்பரம்

p-chidambaram.jpgஆயுதம் ஏந்திய புலிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துங்கள் என இலங்கை அரசிடம் கூறும் தார்மிக உரிமை இந்தியாவுக்கு இல்லை. ஆயுதங்களை கீழே போட்டுவிட்டு பேச்சுவார்த்தைக்கு தயார் என புலிகள் அறிவித்தால், உடனடியாக பேச்சுவார்த்தை நடைபெற இந்திய அரசு, இலங்கை அரசை வற்புறுத்தி உரிய ஏற்பாடு செய்யும். இதுதான் இந்திய அரசின் கொள்கை என இந்தியாவின் மத்திய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் தெரிவித்தார்.

இலங்கைப் பிரச்னையில் காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாடு குறித்து சென்னையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை கருத்து வெளியிட்டபோதே அவர் இவ்வாறு கூறினார். அமைச்சர் ப.சிதம்பரம் மேலும் கூறியதாவது: இந்திய -இலங்கை ஒப்பந்தத்தை மதிக்காமல்,  அதை புலிகள் காலில் போட்டு மிதித்ததே,  இன்றையப் பிரச்னைகளுக்கெல்லாம் காரணம்.

ஆயுதம் ஏந்திய போராளிகளுடன் எந்த நாட்டு அரசும் பேச்சுவார்த்தை நடத்தாது. எனவே புலிகள் ஆயுதத்தை கீழே போடாதவரை அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துமாறு நாம் இலங்கை அரசை வற்புறுத்த முடியாது

இந்திய அரசின் பெரும் முயற்சியின் காரணமாக இலங்கைத் தமிழர்களுக்கு எல்லா தளங்களிலும் சம உரிமை அளிக்கும் விதத்தில் 1987-ம் ஆண்டு இந்திய -இலங்கை ஒப்பந்தம் உருவானது. புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் இந்த ஒப்பந்தத்தை முதலில் ஏற்காவிட்டாலும்,  பிறகு ஏற்க சம்மதம் தெரிவித்தார். அவர் சம்மதம் அளித்ததால்தான், இந்தியப் பிரதமர் ராஜீவ்காந்தி இலங்கை சென்று அந்நாட்டு ஜனாதிபதி ஜே. ஆர். ஜெயவர்தனவுடன் அந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார்.

அந்த ஒப்பந்தம் மட்டும் அமுலாகியிருந்தால், இந்நேரம் இலங்கைத் தமிழர்களுக்கு அமைதியான வாழ்வும்,  ஜனநாயக அரசும் கிடைத்திருக்கும். அங்கே ஒரு தமிழ் மாநிலமும்,  தமிழர் ஒருவர் முதல்வராக ஆளும் வாய்ப்பும் அமைந்திருக்கும். அமிர்தலிங்கம் உள்ளிட்ட ஏராளமான இலங்கைத் தமிழினத் தலைவர்களையும், இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தியையும்; புலிகள் படுகொலை செய்தது மாபெரும் தவறு.

இலங்கைத் தமிழர்களின் சர்வாதிகாரமிக்க தலைவராகத் தான் திகழ வேண்டும் என பிரபாகரன் கருதுவதே பிரச்னைகளுக்கெல்லாம் காரணம். அவரை சர்வாதிகார தலைவராக்குவது நமது வேலையல்ல. இந்தியா மட்டுமல்ல, உலகில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட எந்த நாட்டு அரசும், ஆயுதம் ஏந்திய போராளிகள், தங்கள் ஆயுதங்களை கீழே போடாத வரை அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தாது.  இது இலங்கைக்கும் பொருந்தும். இலங்கை இந்தியாவின் அடிமை நாடல்ல. நம் காலனியாதிக்க நாடும் அல்ல. அது ஒரு இறையாண்மைமிக்க தனி சுதந்திர நாடு.

எனவேää ஆயுதம் ஏந்திய புலிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துங்கள் என இலங்கை அரசிடம் கூறும் தார்மிக உரிமை இந்தியாவுக்கு இல்லை என்றும் அமைச்சர் ப. சிதம்பரம் மேலும் தெரிவித்தார்.

புத்தளத்தில் மறுவாக்களிப்பு 21ஆம் திகதி! தேர்தல்கள் திணைக்களம் இன்று அறிவிப்பு

sri-lanka-election-01.jpgபுத்தளம் தேர்தல் தொகுதியில் ரத்துச் செய்யப்பட்ட நாயக்கர்சேனை தமிழ் மகா வித்தியாலய வாக்களிப்பு நிலையத்தில் எதிர்வரும் 21ஆம் திகதி மீண்டும் வாக்களிப்பை நடத்துவதற்கு தீர்மாணிக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் திணைக்களம் அறிவித்துள்ளது. நேற்று முன்தினம் நடைபெற்ற மத்திய மற்றும் வடமேல் மாகாண சபைத் தேர்தலுக்கான வாக்களிப்பின்போது இந்த வாக்களிப்பு நிலையத்தில் மோசடி இடம்பெற்றதாக புத்தளம் தெரிவத்தாட்சி அதிகாரியினால் அறிவிக்கப்பட்டதையடுத்து இதன் தேர்தல் முடிவுகளை தேர்தல் ஆணையாளர் தயானந்த திசாநாயக்க ரத்துச் செய்தார்.

இந்த வாக்களிப்பு நிலையத்தின் முடிவுகள் ரத்துச் செய்யப்பட்டதன் காரணமாக புத்தளம் தேர்தல் தொகுதியின் இறுதி முடிவுகளை அறிவிப்பது பிற்போடப்பட்டுள்ளதுடன்ää புத்தளம் மாவட்ட மற்றும் வடமேல் மாகாண இறுதி முடிவுகளும் பிற்போடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

விறகு வெட்டச் சென்ற போது கைது செய்யப்பட்ட 25 முஸ்லிம்களுக்கு ஒரு வருடகால சிறைத்தண்டனை

justice.jpgவிறகு வெட்டச் சென்ற போது கைதாகி தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருந்த 25 முஸ்லிம்களுக்கும் மொனறாகலை நீதிமன்றம் ஒரு வருடகால சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. கடந்த 6 மாதங்களுக்கு முன்னர் குறிப்பிட்ட 25 முஸ்லிம்களும் பொத்துவில் காட்டுப்பகுதிக்கு விறகு வெட்டச் சென்ற வேளையில் பொலிஸ்காரர்களால் கைது செய்யப்பட்டு தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருந்தனர்.

இந்த வழக்கு விசாரணை கடந்த செவ்வாய்க்கிழமை மொனறாகலை மேல் நீதிமன்ற நீதிபதி அமல் கருணாரட்ன முன்னிலையில் எடுத்துக் கொள்ளப்பட்ட போது நீதிபதி மேற்படி தீர்ப்பினை வழங்கினார்.

அரச சொத்துக்கள் சட்டத்தின் கீழ் ஐந்து குற்றச்சாட்டுக்கள் இவர்கள் மீது சுமத்தப்பட்டு சட்டமா அதிபர் திணைக்களம் இவ் வழக்கை தாக்கல் செய்திருந்தது. விசாரணையின் போது கைதிகள் குற்றச்சாட்டுக்களை ஏற்றுக்கொண்டதை அடுத்து நீதிபதி இத்தீர்ப்பினை வழங்கினார்.

இந்த வழக்கின் கைதிகளின் சார்பில் சட்டத்தரணி நிசாம் காரியப்பர் ஆஜராகி இருந்தார். கடந்த 6 மாதங்களுக்கு முன் விறகு வெட்டச் சென்ற 26 முஸ்லிம்கள் கைது செய்யப்பட்டு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்தனர்.

இவர்களில் இருவர் சிறைச்சாலையில் மரணமடைந்தனர். இவர்களை விடுவிக்குமாறுகோரி அவர்களது மனைவி, பிள்ளைகள், உறவினர்கள் கடந்த வாரம் பொத்துவில் பிரதேச செயலகத்தின் முன்னால் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டிருந்தனர்.

வவுனியா வைத்தியசாலையில் 500 கர்ப்பிணிகள் அனுமதி

pregnant-lady.jpgஅரசாங்க கட்டுப்பாட்டுப் பகுதிக்கு இடம்பெயர்ந்து வந்துள்ள 500 கர்ப்பிணித் தாய்மார்களை வவுனியா வைத்திய சாலையில் அனுமதித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இவர்களை அனுமதித்ததாக சுகாதார அமைச்சின் பொது சுகாதார சேவையின் பிரதிப் பணிப்பாளர் நாயகம் டாக்டர் பாலித மகிபால தெரிவித்துள்ளதுடன் அவர்களுக்கு ஆலோசனைகள் வழங்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

கட்டுப்பாடற்ற பகுதியில் பல துன்பங்களை அனுபவித்து வந்த இந்த கர்ப்பிணிப் பெண்கள் தொடர்பில் உரிய கவனம் செலுத்தப்படுவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.