எழுத்தாளர்கள்

எழுத்தாளர்கள்

புலிகள் இயக்கம் தொடர்பான இந்தியாவின் நிலைப்பாட்டுக்கு இலங்கை வரவேற்பு

anura-piriyadarshana-yappa.jpgபுலிகள் இயக்கம் தொடர்பாக இந்திய மத்திய அரசாங்கம் கொண்டுள்ள நிலைப்பாட்டை அரசாங்கம் வரவேற்றுள்ளது. இந்திய அரசாங்கத்தின் நிலைப்பாட்டை வெளிவிவகார அமைச்சர் பிரணாப் முகர்ஜி லோக்சபாவில் தெளிவு படுத்தியுள்ளமையை அரசாங்கம் வரவேற்பதாக அமைச்சரவைப் பேச்சாளரான தகவல் ஊடக்கத்துறை அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாப்பா தெரிவித்தார்.

“இந்தியாவின் நிலைப்பாட்டை பாராளுமன்றத்தில் தெளிவுபடுத்தியபோது அமளி துமளி ஏற்பட்டதாக அறிகிறோம். என்றாலும் புலிகள் இயக்கம் தொடர்பில் இந்தியா எடுத்துள்ள நிலைப்பாடு பாராட்டுக்குரியது” என்று அமைச்சர் தெரிவித்தார். அமைச்சரவையின் தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்த செய்தியாளர் மாநாட்டில் அமைச்சர் யாப்பா இதனைத் தெரிவித்தார்.

பொருளாதார முன்னெடுப்பு செயற்திட்டமொன்றை அரசாங்கம் நடைமுறைப்படுத்தவுள்ளது.

glperisss.jpgஇது தொடர்பான யோசனைகள் அடங்கிய பிரேரணையொன்றை, நிதியமைச்சர் என்ற ரீதியில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அமைச்சரவைக்குச் சமர்ப்பித்துள்ளதாக ஏற்றுமதி அபிவிருத்தி, சர்வதேச வர்த்தக அமைச்சர் பேராசிரியர் ஜீ. எல். பீரிஸ் தெரிவித்தார்.

ஜனாதிபதியின் பொருளாதார முன்னெடுப்பு யோசனைகள் தொடர்பில் அமைச்சரவை இன்னும் ஆராய்ந்து வருவதாகவும், விரைவில் தீர்மானமொன்று மேற்கொள்ளப் படுமென்றும் அமைச்சர் தெரிவித்தார். அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்த செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்டு அமைச்சர் இந்தத் தகவல்களைத் தெரிவித்தார். நிதி நிறுவனங்களில் (பினான்ஸ், லீசிங்) தவணைக் கட்டண முறையில் வாகனங்களைக் கொள்வனவு செய்து, செலுத்த முடியாத நிலையில் உள்ள சாதாரண மக்களுக்கு நிவாரணமளிக்கும் திட்டமொன்றையும் ஜனாதிபதி முன்மொழிந்துள்ளதாக பேராசிரியர் பீரிஸ் தெரிவித்தார்.

இதேவேளை மேல் மாகாணத்தில் பொருளாதாரம் 14% வளர்ச்சிப் பாதையை எட்டியுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார். முழு நாட்டினதும் பொருளாதாரம் 6.4% வளர்ச்சிப் பாதையில் முன்னேறி வருகின்றவேளையில் மேல் மாகாணத்தில் சகல துறைகளிலும் பொருளாதாரம் அபரிமித வளர்ச்சியைக் கண்டு வருவதாக அமைச்சர் தெரிவித்தார்.

இந்த வளர்ச்சியானது இந்தியா, சீனா போன்ற நாடுகளின் பொருளாதார வளர்ச்சி வேகத்துக்கு நெருக்கமானது என்று தெரிவித்த அமைச்சர் பீரிஸ், நாட்டில் நிரந்தர சமாதானம் நிலைநாட்டப்பட்டதன் பின்னர், பாரிய அபிவிருத்தியை மேற்கொள்ள வேண்டும்.

ஏ-9 பாதை திறக்கப்படுவதாலும், கிழக்கு மாகாணத்தில் இது வரை செய்கை பண்ணப்படாதிருந்த ஆயிரக்கணக்கான காணிகளில் விவசாயம் மேற்கொள்ளப்படுவதாலும், இலங்கையில் வெளிநாட்டு முதலீடுகள் அதிகரிக்கத் தொடங்கியுள்ளன. உதாரணமாக “எயார்ரெல்” நிறுவனத்தைக் குறிப்பிடலாம்.” என்று தெரிவித்த பேராசிரியர் பீரிஸ், “உலக பொருளாதார நெருக்கடிக்கு மத்தியிலும் இலங்கையின் பொருளாதாரத்தை ஸ்திரமான நிலையில் பேணுவதற்கு முடிந்துள்ளது.

வங்கிக் கூட்டமைப்பை வலுவாக்குவதற்குத் தக்கதருணத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதன் மூலம், வங்கி முறைமையில் மக்கள் நம்பிக்கைகொள்ளும் நிலை மேம்பட்டுள்ளது. உள்ளூர் உற்பத்தியாளர்களை ஊக்குவிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஏற்றுமதித் துறையினருக்குப் பாரிய ஊக்குவிப்புக் கொடுப்பனவு வழங்கப்படுகிறது” என்றும் தெரிவித்தார்.

சர்வதேச பிரதிநிதிகள் பாராளுமன்றம் வருகை

sri-lanka-parliment.jpgசர்வதேச அபிவிருத்தி மதிப்பீடு பயிற்சி கருத்திட்ட அங்கத்தவர்கள் வியாழக்கிழமை பாராளுமன்றம் வந்திருந்தனர்.

சபாநாயகர் கலரியில் அமர்ந்து சபை நடவடிக்கைகளை பார்த்துக்கொண்டிருந்த இவர்களை சபாநாயகர் டபிள்யூ.ஜே.எம்.லொக்கு பண்டார சபைக்கு அறிமுகப்படுத்தி நல்வரவு கூறி வரவேற்றதுடன், சபையிலிருந்த பாராளுமன்ற உறுப்பினர்களும் மேசையைத் தட்டி அவர்களை வரவேற்கும் முகமாக ஆதரவு வெளியிட்டனர்.

பல்கலைக்கழகம் செல்லமுடியாதவர்களுக்கு தொழில்நுட்ப பயிற்சிக்கல்லூரிகள் அமைக்கப்படும் -உயர்கல்வி அமைச்சர்

உயர் கல்விக்கு பிரவேசிக்க முடியாத மாணவர்களுக்கு தொழில் நுட்ப பயிற்சிக்கல்லூரிகளை அமைத்து தொழில் நுட்பப் பயிற்சிகளை அளிப்பதற்கு அரசு நடவடிக்கை எடுத்துவருவதாக உயர்கல்வி அமைச்சர் பேராசிரியர் விஸ்வவர்ணபால தெரிவித்துள்ளார்.  கேகாலையில் 35 இலட்சம் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட தொழில்நுட்ப பயிற்சிக் கல்லூரியை திறந்து வைத்துப் பேசுகையில் அமைச்சர் இவ்வாறு கூறினார்.

தொடர்ந்து பேசிய அமைச்சர், இன்று உலக நாடுகளில் தொழில்நுட்பத்துறை நவீன முறையில் வளர்ச்சி பெற்று வருகின்றது. கணினி மற்றும் ஆங்கில மொழி அறிவு இன்று மாணவர்களுக்கு அவசியம் தேவை. எந்தத் துறையிலும் கணினி முறை பயன்படுத்தப்பட்டு வருகிறது. எனவேதான் பாடசாலைகளில் உயர் கல்வி கற்றுவிட்டு வெளியேறும் மாணவர்களுக்கு தொழில் நுட்ப பயிற்சி அளிப்பது காலத்தின் தேவையாகும்.

வருடாந்தம் க.பொ.த.உயர்தர கல்வி கற்று பரீட்சையில் திறமையாக சித்தி பெற்ற ஆயிரக்கணக்கான மாணவர்களில் சிறு தொகையினரே பல்கலைக்கழகத்திற்கு அனுமதிக்கப்படுகின்றனர். இதனால் பல மாணவர்கள் பல்கலைக்கழகம் செல்ல முடியாத நிலையில் உள்ளனர். இந்த நிலைமையால்தான் அரசு பல்கலைக்கழகத்துக்கு செல்ல முடியாத மாணவர்களுக்கு இவ்வாறான தொழில் நுட்பப் பயிற்சிக்கல்லூரிகளை நாடு முழுவதும் நிறுவ நடவடிக்கை எடுத்துள்ளது.

எதிர்காலத்தில் பல்கலைக்கழகத்திற்கு பிரவேசிக்கும் பிள்ளைகள் நாட்டின் அபிவிருத்திக்கு பங்கு பற்றுவதற்கேற்ற கல்வி முறையே நாட்டுக்குத் தேவையாகும்.

பல்கலைக்கழகத்திலிருந்து பட்டம் பெற்று வெளியேறும் மாணவர்கள் தொழில் கிடைப்பதில்லை என்று கூறுகின்றனர். அவர்கள் தமக்கு வேலைதருமாறு வீதிகளில் ஊர்வலம் செய்கின்றனர். ஆனால் வெளிநாடுகளில் பட்டதாரிகள் எவருமே இவ்வாறு ஊர்வலங்களையோ, ஆர்ப்பாட்டங்களையோ நடத்துவதில்லை என்றார்.

கொழும்பைத் தாக்கவந்த புலிகளின் இரு விமானங்களும் வீழ்த்தப்பட்டன- படைத்தரப்பு தகவல்: இருவர் பலி, 52 பேர் காயம்.

colombo1.jpgகொழும்பில் தாக்குதல்களை மேற்கொள்ளவென வந்த புலிகளின் இரு விமானங்கள் படையினரால் நேற்று (20.02.2009) இரவு  சுட்டு வீழ்த்தப்பட்டதாக விமானப் படை ஊடகப் பேச்சாளர் விங் கமாண்டர் ஜனக நாணயக்கார தெரிவித்தார்.

ஒரு விமானம் கட்டுநாயக்க பிரதேசத்தில் வைத்து விமானப் படையினரால் சுட்டு வீழ்த்தப்பட்டதாகவும் மற்றைய விமானம் கொழும்பில் உள்நாட்டு இறைவரி திணைக்கள கட்டடத் தொகுதியில் மோதி வீழ்ந்ததாகவும்  அவர் மேலும் தெரிவித்தார். கட்டுநாயக்க படைத்தளத்துக்கு அருகே சுட்டுவீழ்த்தப்பட்ட விமானத்தில் விமானமோட்டி ஒருவர் சடலத்தை படையினர் கைப்பற்றியுள்ளதாக விமானப் படைப் பேச்சாளர் ஜனக நாணயக்கார தெரிவித்துள்ளார். இந்த விமானம் அங்கே வீழ்ந்தபோது பொதுமக்கள் ஆறு பேர் காயமடைந்ததாகவும் ராணுவம் தெரிவித்துள்ளது. இந்த சம்பவத்தின் பின்னணியில் பாதுகாப்புக் கருதி கட்டுநாயக்க விமானநிலையத்தில் சில விமான சேவைகள் நிறுத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

நேற்று (20.02.2009) இரவு 9.30 மணியளவில் விடுதலை புலிகளின் இருவிமானங்கள் கொழும்பு நகருக்குள் உள்நுழைந்ததையடுத்து கொழும்பு நகரில் பொருத்தப்பட்ட வான்காப்பு பொறிமுறைகள் தானாகவே இயங்கத் தொடங்கியுள்ளன. இதனைத் தொடர்ந்து கொழும்பு நகரில் மின்சாரம் தடைப்பட்டுள்ளது.

புலிகளின் ஒரு விமானம் இலங்கை இறைவரித்திணைக்கள கட்டிடத்தின்  மோதுண்டு உடைந்து விழுந்துள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்துள்ளார். கட்டடத்தின் 12-13 வது மாடிப்பகுதியின் பின் புறமாக விமானம் மோதுண்டதாலும் குண்டு வெடித்ததாலும் இருவர் பலியானதுடன், 52 பேர் காயமடைந்துள்ளனர்.

காயமடைந்தவர்கள் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தேசிய வைத்தியசாலையின் பணிப்பாளர் ஹெக்டர் வீரசிங்க தெரிவித்துள்ளார். விமானத்தின் உடைவுகளைப் பார்வையிடுவதற்காக வேண்டி தேசிய பாதுகாப்புச் செயலாளர் கோதாபய ராஜபக்~ நல்லிரவு அவ்விடத்துக்குச் சென்றதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இறைவரித் திணைக்கள அலுவலகம் கொழும்பிலே விமானப் படை தலைமையகத்திற்கு அருகில் அமைந்துள்ளதென்பது குறிப்பிடத்தக்கது.
விமானப் படை தலைமை அலுவலகத்தை இலக்கு வைத்தே விடுதலைப் புலிகளின் வானூர்தி தாக்குதலை நடத்தியிருக்கலாம் எனவும் இலக்குத் தவறி அதற்கு முன்பாகவுள்ள உள்நாட்டு இறைவித் திணைக்கள கட்டடத்தின் மீதுவிழுந்திருக்கலாம் எனவும் பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதனையடுத்துள்ள இலங்கை வங்கிக் கட்டடம் உட்பட பல கட்டடங்களும் சேதமடைந்திருக்கின்றன. சம்பவத்தையடுத்து பாதையை மூடித் தடை விதித்துள்ள படையினர் இடிபாடுகளுக்குள் யாராவது சிக்கியிருக்கலாம் என்பதால் தேடுதலை தொடர்ந்து மேற்கொண்டுள்ளனர்.

இது தொடர்பாக தமிழீழ விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளதாவது:
neelp-pulikal.jpgசிறிலங்காவின் தலைநகர் கொழும்பில் அமைந்துள்ள சிறிலங்கா வான் படை தலைமையகம் மீதும் கட்டுநாயக்கவில் அமைந்துள்ள வான்படை தளம் மீதும் நேற்று வெள்ளிக்கிழமை இரவு 10:00 மணிக்கு தமிழீழ விடுதலைப் புலிகளின் வான் புலிகளின் கரும்புலிகள் வெற்றிகரமான தாக்குதல்களை நடத்தியுள்ளனர். வான்படையின் தலைமையகமும் கட்டுநாயக்க வான்படை தளமும் தமிழ் மக்கள் மீதான வான் தாக்குதல்களுக்கு முக்கிய பங்கை வகிக்கும் வானூர்தி தளங்களாகும்.

தமிழ் மக்கள் தொடர்ச்சியான வான் குண்டுத் தாக்குதல்களுக்கு இலக்காகி பல நூற்றுக்கணக்கில் கொல்லப்படுவதற்கு இத்தளங்கள் முக்கிய பங்கை வகித்து வருகின்றமை என்பது இங்கு குறிப்பிடத்தக்க விடயமாகும். இத்தளங்கள் மீது வெற்றிகரமான தாக்குதல்களை நடத்திய வான் புலிகளின் கரும்புலிகளா கேணல் ரூபன் லெப்.கேணல் சிரித்திரன ஆகியோர்களின் திறமையான வீரச்செயல்களுக்கு அண்மையில் தமிழீழ தேசியத் தலைவர் அவர்களால் ‘நீலப்புலிகள்’ என்ற தேசிய விருதும் இந்த இரண்டு மாவீரர்களுக்கும் வழங்கி கௌரவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும். இந்த வெற்றிகரமான வான் தாக்குதல்களில் வீரச்சாவை தழுவிக்கொண்ட இரண்டு மாவீரர்களுக்கும் தமிழீழ விடுதலைப் புலிகள் தமது வீரவணக்கத்தைத் தெரிவித்துக்கொள்கின்றனர் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

colombo-01.jpg

colombo-04.jpg

041.jpg

colombo-06.jpg

ltte_aircraft-2009-02-21.png

புகைப்படங்கள் www.lankadeepa.lk,   www.army.lk   இணையத்தளஙகளிலிருந்து பெறப்பட்டவை.

வக்கீல்கள் ஆவேசம்:போலீஸ் ஓய்வறையை எரித்தனர்

court-tamilnadu.jpgசென்னை ஐகோர்ட்டில் நேற்று போலீசாருக்கும் வக்கீல்களுக்கு பயங்கர மோதல் ஏற்பட்டது. இதனால் தமிழகம் முழுவதும் வக்கீல்கள் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.தாம்பரம் கோர்ட்டில் வக்கீல்கள் சங்க தலைவர் ஸ்ரீராம் தலைமையில் வக்கீல்கள் இன்று காலை ஆர்ப்பாட்டம் செய்தனர்.

கோர்ட் வளாகத்தில் உள்ள போலீஸ் ஓய்வறையை அடித்து நொறுக்கினர். அங்கிருந்து மேஜை, நாற்காலிகளை வெளியில் கொண்டுவந்துபோட்டு தீ வைத்து கொளுத்தினர். கோர்ட் முன்பு ஜிஎஸ்டி சாலையில் மறியல் செய்து வாகனங்களை தடுத்தனர். போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

நெல்லையில் இயக்குநர் சீமான் கைது

seeman-1302.jpg
திருநெல்வேலி  காவல் ஆணையர் முன் சரண்ணடைய வந்த இயக்குநர் சீமானை  போலீசார்  கைது செய்தனர். கடந்த 12ம் தேதி புதுச்சேரி சட்டக்கல்லூரி மாணவர்கள் இலங்கை தமிழர் பிரச்சினைக்காக உண்ணாவிரதம் இருந்தனர். டைரக்டர் சீமான், அவர்களை வாழ்த்தி பேசினார்.

அப்போது தடை செய்யப்பட்ட இயக்கத்திற்கு ஆதரவாக பேசியதாகவும், மத்திய மற்றும் மாநில அரசுகளை தாக்கி பேசியதாகவும் புதுச்சேரி போலீசார் சீமான் மீது வழக்குப்பதிவு செய்தனர். தலைமறைவாக இருக்கும் சீமானை கைது செய்யும் நடவடிக்கையில் புதுச்சேரி போலீசார் செயல்பட்டு வந்தார்கள்.

இந்த நிலையில், இந்த வழக்கில் புதுச்சேரி போலீசார் கைது செய்தால், தனக்கு முன்ஜாமீன் வழங்க வேண்டுமென்று சீமான் சென்னை ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி டி.சுதந்திரம் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. மனு மீதான விசாரணையை வரும் 26ஆம் தேதிக்கு நீதிபதி தள்ளி வைத்தார்.  இந்நிலையில் 19ஆம் தேதி காங்கிரஸ் மற்றும் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் சீமானை ஏன் இன்னும் கைது செய்யவில்லை என்று கேள்வி எழுப்பியதற்கு, அமைச்சர் ஆற்காடு வீராசாமி இன்று (19.02.09) அல்லது நாளைக்குள் (20.02.09) கைது செய்துவிடுவோம் என்றார். மேலும் சீமானை கைது செய்வதற்காக 5 தனிப்படை போலீசார் அமைக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார். இதையடுத்து இன்று நெல்லையில் இயக்குநர் சீமான் கைது  செய்யப்பட்டுள்ளார்.

அத்வானியை சந்தித்தார் ரணில் முகர்ஜியுடன் சந்திரிகா பேச்சு

chandrika-bandaranaike-kumaratunga-01.jpgஎதிர்க் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க நேற்று வியாழக்கிழமை புதுடில்லியில் இந்திய எதிர்க்கட்சித் தலைவர் எல்.கே.அத்வானியை சந்தித்து பேசிய அதேநேரம், இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க, இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜியை சந்தித்துப் பேசியுள்ளார்.
அவசர பயணமாக புதுடில்லி சென்றிருக்கும் ரணில் விக்கிரமசிங்க அத்வானியை சந்தித்து இலங்கையின் தற்போதைய நிலைமைகள் குறித்து எடுத்துக் கூறியுள்ளதுடன், இலங்கை விவகாரம் குறித்து கலந்துரையாடியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இதேநேரம், இந்திய மத்திய அமைச்சர் மணிசங்கர் ஐயர் எழுதிய ராஜீவ்காந்தி; மாற்றத்திற்கான காலம் என்ற நூல் ஆய்வு நிகழ்வில் கலந்து கொள்வதற்காக புதுடில்லி சென்றிருந்த முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க நேற்று இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் முகர்ஜியை சந்தித்து இலங்கையின் தற்போதைய நிலைமைகள் குறித்தும் இது தொடர்பாக இந்தியாவின் நிலைப்பாடு பற்றியும் பேசியுள்ளார்.

இந்தச் சந்திப்பின் பின்னர் சந்திரிகா குமாரதுங்க ஊடகவியலாளர்களைச் சந்தித்தபோது, தற்போதைய நிலைமையில் நீங்கள் இலங்கையின் ஜனாதிபதியாக இருந்திருந்தால் என்ன செய்திருப்பீர்கள் என்ற கேள்விக்கு பதிலளிக்கையில்; புலிகளின் தலைவர் பிரபாகரனை கைது செய்திருப்பேன் என்று தெரிவித்திருக்கிறார்.

அத்துடன், “குண்டு வீசி ஆயிரக்கணக்கான மக்களை கொல்வதிலும் பல்லாயிரக்கணக்கான மக்களை அகதிகளாக்குவதிலும் எனக்கு நம்பிக்கையில்லை. எனது ஆட்சிக்காலத்தில் அரசியல் தீர்வு காண்பதற்கான பேச்சுக்கு பிரபாகரனை இணங்க வைத்தேன். எனது ஆட்சிக்காலத்தில் புலிகள் வசமிருந்த 70 தொடக்கம் 75 சதவீதமான நிலப் பிரதேசங்கள் மீட்கப்பட்டு விட்டன. தற்போதைய அரசாங்கம் நாங்கள் வாங்கிய ஆயுதங்களைக்கொண்டு மீதமுள்ள நிலப் பகுதிகளையும் மீட்டிருக்கிறது’ என்றும் தெரிவித்திருக்கிறார்.

படையினர் அம்பலவான்பொக்கனைப் பகுதியை முழுக்கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்

ambalawan-pokkana.jpg
இராணுவத்தின் 58வது படையணியினர் இன்று (பெப்:20) பிற்பகல் அம்பலவான் பொக்கனைப் பகுதியை முழுக்கட்டுப்பாட்டுக்குள் கொன்டுவந்துள்ளனர் என பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.

இன்று காலை எல்ரிரிஈயின் பலமான தளங்களை தகர்த்துக்கொண்டு முன்னேறிய 10வது காலால் படைப்பிரிவினரும் 6வது கெமுனு படைப்பிரிவினரும் இப்பகுதியை முற்றாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளதுடன் பயங்கரவாதிகளின் 7 சடலங்களையும் அவர்களின் ரி-56 ரக துப்பாக்கிகளையும் கைபற்றியுள்ளதாக களநிலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

படையினர் புதுக்குடியிருப்பு நகருக்கு வடக்காகவும் தெற்காகவும் தாக்குதல் தொடுத்துக் கொண்டு நகரை நோக்கி முன்னேறி வருகின்றனர் எனவும், அம்பலவானன்பொக்கனைக் கிராமம் சாலைக்களப்பு மேற்கில் களப்பு ஓரத்தில் தனிப்பட்ட கிராமமாகும். இது புதுக்குடியிருப்புச் சந்திக்கு வடக்காக 8 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ளது எனவும் பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.

இராணுவத் தளபதி யாழ். விஜயம்

sarath_f_jaffna.pngஇராணுவத் தளபதி லெப்டினன்ற் ஜெனரல் சரத் பொன்சேகா தலைமையிலான உயர் அதிகாரிகள் அடங்கிய குழுவினர் நேற்று யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்துள்ளனர்.
பலாலி விமான நிலையத்தை நேற்றுக் காலை சென்றடைந்த இராணுவத் தளபதியை யாழ். பாதுகாப்பு படைப்பிரிவின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மெந்தக சமரசிங்க தலைமையிலான உயர் அதிகாரிகள் வரவேற்றுள்ளனர்.

யாழ். குடாநாட்டின் பாதுகாப்பு நிலைமைகளை ஆராய்ந்து தேவையான ஆலோசனைகளை வழங்கும் வகையில் அங்கு விஜயம் செய்த இராணுவத் தளபதி, யாழ். கட்டளைத் தளபதி தலைமையிலான உயர் அதிகாரிகள், இராணுவத்தின் 51, 52 மற்றும் 55வது படைப்பிரிவின் கட்டளைத் தளபதிகளையும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

யாழ். பாதுகாப்பு படைப்பிரிவின் கட்டளைத் தலைமையகத்தில் நடைபெற்ற சந்திப்பின் போது அங்குள்ள தற்போதைய நிலைமைகளை அதிகாரிகள் விளக்கியுள்ளனர்.  யாழ். குடாநாட்டை நோக்கி நாளுக்கு நாள் வருகை தந்துகொண்டிருக்கும் பொதுமக்களுக்குத் தேவையான போதிய வசதிகள் செய்து கொடுக்க படையினர் முன்னெடுத்துள்ள நடவடிக்கைகள் தொடர்பாகவும் இராணுவ உயர் அதிகாரிகள் தளபதியிடம் தெளிவுபடுத்தியுள்ளனர்.

 யாழ்ப்பாணத்திற்கு இதுவரை 2000 சிவிலியன்கள் தப்பி வந்து பாதுகாப்பு படையினரிடம் தஞ்சமடைந்துள்ளதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.  படையினரால் விரட்டியடிக்கப்பட்ட புலிகள் யாழ். குடாநாட்டுக்குள் எக்காரணம் கொண்டும் ஊடுருவி அங்குள்ள மக்களின் இயல்பு வாழ்க்கையை சீர்குலைக்காத வண்ணம் தேவையான பாதுகாப்பையும் முன்னெடுக்குமாறும் இராணுவத் தளபதி இதன்போது அதிகாரிகளை பணித்துள்ளார்.