எழுத்தாளர்கள்

எழுத்தாளர்கள்

வவுனியா மாவட்டத்தில் 2900 வீடுகளை நிர்மாணிக்க ஐரோப்பிய ஒன்றியம் முடிவு

sri-lanka.jpgவவுனியா மாவட்டத்தில் புதிதாக 2 ஆயிரத்து 900 வீடுகளை நிர்மாணிக்க ஐரோப்பிய ஒன்றியம் தீர்மானித்துள்ளது. இதற்கான வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக வவுனியா மாவட்ட அரச அதிபர் திருமதி. சார்ள்ஸ் தெரிவித்தார்.

இந்திய அரசாங்கத்தின் வடக்கில் 50 ஆயிரம் வீடுகள் நிர்மாணிக்கும் திட்டத்தின் கீழ் வவுனியா மாவட்டத்தில் புதிதாக 7 ஆயிரம் வீடுகள் அமைக்கப்படவுள்ளன. இதற்கு மேலதிகமாகவே ஐரோப்பிய ஒன்றியம் 2 ஆயிரத்து 900 வீடுகளை வழங்கவிருப்பதாகவும் அரச அதிபர் திருமதி. சார்ள்ஸ் கூறினார்.

ஐரோப்பிய ஒன்றியமானது குறிப்பாக மோதல்களுக்குப் பின்னர் 2009 ஆம் ஆண்டு ஓகஸ்ட்டிலிருந்து வவுனியா மாவட்டத்தில் குடியேறியுள்ள தெரிவு செய்யப்பட்ட 2,900 குடும்பங்களுக்காகவே புதிதாக வீடுகளை வழங்க முன்வந்துள்ளன. மீள்குடியேறியவர்கள் தொடர்ந்தும் அதே பகுதியில் வசித்து வருவது உறுதிப் படுத்தப்படும் பட்சத்திலேயே அவர்களுக்கு வீடு நிர்மாணிப்பதற்கான நிதியுதவி பெற்றுக்கொடுக்கப்படுமெனவும் அவர் குறிப்பிட்டார்.

முகமாலை, கிளாலி பிரதேசங்களில் கண்ணிவெடிகள் மிகவும் செறிவு

யுத்த காலத்தில் முன்னரங்க பாதுகாப்பு நிலைகளாக விளங்கிய முகமாலை மற்றும் கிளாலி உள்ளிட்ட சில பகுதிகள் கண்ணிவெடிகள் மிகவும் செறிவாக உள்ள பகுதியாக அடையாளம் காணப்பட்டுள்ளன. கிளிநொச்சி மாவட்டத்தின் பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட முகமாலை, கிளாலி இத்தாவில், வேம்படிக்கேணி உள்ளிட்ட ஏழு கிராம சேவையாளர் பிரிவுகளில் கண்ணிவெடிகள் மிகவும் கூடுதலாகப் புதைக்கப்பட்டுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளதாக பச்சிளைப்பள்ளி (பளை) பிரதேச செயலாளர் முகுந்தன் தெரிவித்தார்.

இந்தப் பகுதிகளில் கண்ணி வெடிகளை அகற்றுவதற்கு குறைந்தது மூன்று வருட காலம் நீடிக்கலாம் என்று பிரதேச செயலாளர் குறிப்பிட்டார். பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட பதினெட்டுக் கிராம சேவையாளர் பிரிவுகளில் இதுவரை பதினொரு பிரிவுகளில் மக்கள் மீளக்குடியமர் த்தப்பட்டுள்ளதாகவும் கண்ணி வெடிகள் அகற்றப்பட்டு நிறைவு செய்யப்படாததால், முகமாலை, கிளாலி உள்ளிட்ட ஏழு கிராம சேவையாளர் பிரிவுகளில் மீள்குடியேற்றம் தாமதமாகி வருவதாகவும் பிரதேச செயலாளர் முகுந்தன் தெரிவித்தார்.

பச்சிளைப்பள்ளி பிரதேச செயலாளர் பிரிவில் மீள்குடியமர்ந்துள்ள மக்கள் நல்லிணக்க ஆணைக்குழுவின் முன்னிலையில் சாட்சியமளிப்பதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டிருந்த பிரதேச செயலாளர் முகுந்தன், மக்களின் வாழ் வாதார நிலவரம் மற்றும் அடிப்படை உட்கட்டமைப்பு வசதிகள் தொடர்பாக ஆணைக்குழுவின் தலைவர் சீ.ஆர்.டி. சில்வாவுக்கு எடுத்துரைத்ததுடன், சில பிரதேசங்களுக்கு நேரில் அழைத்துச் சென்று நிலைமைகளைக் காண்பித்தார்.

பச்சிலைப்பள்ளியில் வைத்தியசாலை மருந்து வசதிகள் இல்லாததால் 20 கிலோ மீற்றர் தூரத்தில் உள்ள சாவகச் சேரிக்குச் செல்ல வேண்டியிருப்பதாகப் பொது மக்கள் சுட்டிக்காட்டினர். அதே நேரம், மாணவர்கள் கல்வி கற்பதற்கான வசதிகள் குறைவாகக் காணப்படுவதாகவும் தெரிவித்தனர்.

இதனையடுத்து, பாடசாலையையும் வைத்தியசாலையையும் பார்வையிட வேண்டும் என்று ஆணைக்குழுவின் தலைவர் குறிப்பிட்டதால், பிரதேச செயலாளர் முகுந்தன், அந்தப் பகுதிகளுக்கு ஆணைக்குழுவின் தலைவர் மற்றும் உறுப்பினர்களை அழைத்துச் சென்றார். இந்தப் பாடசாலையில் போதிய வசதிகள் இல்லாததால், மரத்துக்குக் கீழ் இருந்து மாணவர்கள் கல்விகற்கும் நிலையைக் காணமுடிந்தது.

அதேநேரம், இந்தப் பிரதேசங்களில் தமிழ் தெரிந்த பொலிஸாரை கடமைகளில் ஈடுபடுத்தினால் சிரமங்களைத் தவிர்க்கக் கூடியதாக இருக்குமென மக்கள், ஆணைக் குழுவிடம் தெரிவித்தனர்.

பாவனைக்கு உதவாத பழங்கள் கொழும்பில்

fruit.jpgகொழும்பு மனிங் சந்தையில் பழங்களை மொத்தமாகவும் சில்லறையாகவும் விற்பனை செய்பவர்கள், அவற்றை பழுக்க வைக்கவும் பாதுகாத்து வைக்கவும் இரசாயன பதார்த்தங்களை சேர்த்து வருவதாக தெரிய வந்துள்ளதையடுத்து கொழும்பு மாநகர சபையின் சுகாதார அதிகாரிகள் அவதானமாக உள்ளனர். கடந்த வார இறுதியில் மனித பாவனைக்கு ஒவ்வாத 300 கிலோவுக்கு மேற்பட்ட பழ வகைகள் அழிக்கப்பட்டதாக பிரதான மருத்துவ அதிகாரி டொக்டர் பிரதீப் காரியவசம் தெரிவித்துள்ளார்.

1980ம் ஆண்டின் உணவு சட்டத்தின் கீழ் இந்த சட்டத்தை மீறுபவர்களுக்கு அபராதம் விதிக்கப்படலாம். அத்துடன் அதனை மீறும் உணவுச் சாலைகளின் சொந்தக்காரர்களையும் நீதிமன்றத்தின் முன்நிறுத்த இந்த சட்டம் வழி வகுகிறது.

இவ்வாறு காலாவதியான உணவுப் பொருட்களை விற்றமை, அயடின் சேர்க்கப்படாத உப்பை விற்றமை, பழுதான பழங்கள், தேயிலை ஆகியவற்றை விற்றமை மற்றும் பழங்களை உரியநேரத்துக்கு முன்னர் பழுக்க வைக்கும் வகையில் சில வகை இரசாயன பொருட்களை பயன்படுத்தியமை ஆகிய குற்றங்களில் ஈடுபட்ட 18 வர்த்தகர்கள் நீதிமன்றத்தில் நிறுத்தப்படவுள்ளனர்.  இவர்கள் அனைவரும் புறக்கோட்டையை சேர்ந்தவர்கள் என்று டொக்டர் காரியவசம் மேலும் கூறினார்.

இந்திய பாதுகாப்பு குழு இலங்கை வருகை

இந்திய தேசிய பாதுகாப்புக் கல்லூரியைச் சேர்ந்த அதிகாரிகள் குழுவொன்று நேற்று இலங்கை வந்துள்ளது. நான்கு நாள் விஜயமொன்றை மேற் கொண்டு இலங்கை வந்துள்ள இக்குழு வினர் பாதுகாப்பு அமைச்சு, வெளி நாட்டமைச்சு மற்றும் மத்திய வங்கி ஆகியவற்றில் இடம்பெறும் நிகழ்வுகளில் கலந்துகொள்ளவுள்ளனர். அதனையடுத்து முப்படைத் தளபதிகள் மற்றும் பிரதம பாதுகாப்பு அதிகாரியையும் இக்குழுவினர் சந்தித்துக் கலந்துரையாடவுள்ளனர்.

இவர்கள் கல்விச் சுற்றுலாவொன்றிற்காகவே இலங்கை வந்துள்ளதாக இராணுவப் பேச்சாளர் உபய மெதவெல நேற்றுத் தெரிவித்தார்.

இரண்டொரு தினங்களுக்கு இடி மின்னலுடன் மழை – அவதானத்துடன் இருக்க எச்சரிக்கை

lightning-000.jpgஅடுத்துவரும் இரண்டொரு தினங்களுக்கு நாட்டின் வெவ்வேறு பிரதேசங்களில் இடி, மின்னலுடன் மழை பெய்யும் என்று வானிலை அவதான நிலையத்தின் வானிலையாளர் கயனா ஹெந்தவித்தாரண நேற்றுத் தெரிவித்தார்.

தென்மேல் பருவ பெயர்ச்சி மழை வீழ்ச்சி காலநிலை பலவீனமடைந்திருப்பதாலேயே இந்நிலமை ஏற்பட்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். ஆகவே இடி, மின்னல் பாதிப்புக்களிலிருந்து தவிர்ந்து கொள்வதில் ஒவ்வொரு வரும் கூடிய கவனம் செலுத்த வேண்டும் எனவும் அவர் கூறினார்.

இது தொடர்பாக அவர் மேலும் கூறு கையில் இடி, மின்னலுடன் மழை பெய்யும் போது உயரமான மரங்களுக்குக் கீழே இருப்பதையும், திறந்த வெளிகளில் நடமாடுவதையும், விளையாடுவதையும், வீடுகளில் மின்சார பொருட்களைப் பாவிப்பதையும், குளம் மற்றும் ஆறுகளில் நீராடுவதையும் தவிர்த்துக்கொள்ள வேண்டும். இடைப் பருவப் பெயர்ச்சி மழைக் காலம் ஆரம்பமாவதற்கு இன்னும் இரண்டு, மூன்று வாரங்கள் எடுக்கும். அதற்குள் இடி, மின்னலுடன் மழை பெய்யக் கூடிய காலநிலை தற்போது திடீரென ஏற்பட்டிருக்கின்றது. இதற்கு தென் மேல் பருவப் பெயர்ச்சி மழை வீழ்ச்சி பலவீனமடைந்திருப்பதே பிரதான காரணம்.

இதேவேளை நேற்றுக் காலை 8.30 மணியுடன் முடிவுற்ற 24 மணி நேர மழை வீழ்ச்சி பதிவின்படி கெணியன் மற்றும் நோட்டன் பிரிட்ஜ் நீர்த்தேக்கப் பிரதேசங்களில் 66 மி. மீ. அதிக மழை பெய்துள்ளது என்றார்.

கிண்ணியாவில் மின்னல் தாக்கி மாணவன் பலி

கிண்ணியா பிரதேசத்தில் ஏற்பட்ட இடி மின்னல் தாக்கத்தினால் பாட சாலை மாணவன் ஒருவன் பரிதாப மாக உயிரிழந்த சம்பவம் ஒன்று நேற்று ஞாயிறு மாலை இடம் பெற்றுள்ளது.

கிண்ணியா மத்திய கல்லூரியில் தரம் 9ல் கல்வி பயிலும் காக்கா முனையை பிறப்பிடமாகக் கொண்ட என். முகம்மது நிக்லாஸ் (வயது 14) என்பவரே மின்னல் தாக்கி உயிரிழ ந்தவராவார்.

கிண்ணியா மத்திய கல்லூரி விளையாட்டு மைதானத்தில் உதை பந்தாட்ட பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த வேளையில கடும் இடி மின்னல் தாக்கம் ஏற்பட்டு ள்ளது.

இந்நிலையில் இப்பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த மாணவர் கள் மைதானத்தை விட்டு வெளி யேறிக் கொண்டிருந்த வேளை இவ் அனர்த்தம் ஏற்பட்டதாக தெரிவிக்கப் படுகின்றது.

ஐ.நா. சபையில் ஜனாதிபதி 23 இல் உரை; அரச தலைவர்கள் பட்டியலில் முதலிடம்

mahinda-rajapaksa.jpgஐக்கிய நாடுகள் சபையின் 65ஆவது உச்சி மாநாட்டில் கலந்துகொள்வதற்காக நியூயோர்க் சென்றுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ எதிர்வரும் 23ம் திகதி வியாழக்கிழமை இலங்கை நேரப்படி காலை 11 மணிக்கு ஐக்கிய நாடுகள் சபையில் உரையாற்றுகிறார்.

ஐக்கிய நாடுகள் அமைப்பில் அங்கம் வகிக்கும் 192 நாடுகளின் தலைவர்கள் மற்றும் விசேட பிரதிநிதிகள் பங்குபற்றும் இந்த உச்சி மாநாட்டு நிகழ்ச்சி நிரலின்படி, இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் உரையானது அரச தலைவர்களின் உரைகளின் பட்டியலில் முதலாவது உரையாக இடம்பெறவுள்ளது.

இந்த உச்சி மாநாடு இடம்பெறுவதற்கு முதல்நாளன்று அதாவது எதிர்வரும் 22 ஆம் திகதி இடம்பெறும் புத்தாக்க அபிவிருத்தி இலக்கை நிறைவேற்றுவது தொடர்பான உயர் மட்ட பிரதிநிதிகளின் உச்சி மாநாட்டிலும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உரையாற்றவுள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதி பரக் ஒபாமா வழங்கும் அரச தலைவர்களுக்கான விருந்து, முன்னாள் ஜனாதிபதி பில் கிளின்டன் நிதியத்தின் விசேட கலந்துரையாடல், அமெரிக்காவில் உள்ள இலங்கை தூதரக அலுவலகம் நியூயோர்க்கில் ஏற்பாடு செய்யும் வர்த்தக பிரமுகர்களுக்கான கலந்துரையாடல், நியூயோர்க் பெளத்த விஹாரையின் வைபவ நிகழ்வு ஆகியவற்றிலும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கலந்துகொள்வார்

ஆயித்தியமலையில் பொலிஸ் நிலையம்

batti222.jpgகரடியனாறு பொலிஸ் நிலையக் கட்டிடம் சிதைவடைந்திருப்பதால், கரடியனாறு பொலிஸ் பிரிவு நடவடிக்கைகளை தற்காலிகமாக ஆயித்தியமலை பொலிஸ் நிலையத்திலிருந்து மேற்கொள்ளுவதற்கு சம்பவ இடத்திற்கு நேரில் சென்ற பொலிஸ் மா அதிபர் தேவையான அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார். அதேநேரம் கரடியனாறு பொலிஸ் நிலையத்தைத் துரித கதியில் பொருத்தமான இடத்தில் நிர்மாணிப்பதற்கு தேவையான ஆலோசனைகளையும் அவர் வழங்கியுள்ளார்

சி.ஐ.டி யினரை அழைத்துப் பேச ஆணைக்குழு தலைவர் முடிவு

கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பகிரங்க அமர்வு நேற்று கிளிநொச்சியில் நடைபெற்றது. கிளிநொச்சி, கரச்சி பிரதேச செயலக அலுவலகத்தில் நேற்றுக்காலை அதன் தலைவர் சீ.ஆர்.டி. சில்வா தலைமையில் ஆரம்பமான அமர்வில் பெருமளவிலான பொதுமக்கள் நேரடியாகச் சாட்சியமளித்தனர்.

மேற்படி பிரதேச மக்கள் சுதந்திரமாக சாட்சியமளிக்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. இதற்கென விசேட மொழிபெயர்ப்பு வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டன. இங்கு சாட்சியமளித்த பெரும்பாலானவர்கள் காணாமல் போனோர் தொடர்பாகவும், சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டோர் தொடர்பாகவும் மிகவும் உணர்வுபூர்வமாக கருத்துக்களைத் தெரிவித்தனர்.

ஆணைக்குழு உறுப்பினர்கள் இதனை மிகவும் அவதானத்துடன் செவிமடுத்ததோடு சாட்சியமளித்தவர்களிடம் அவ்வப்போது குறுக்கு விசாரணைகளையும் நடத்தினர். அதேநேரம் சாட்சியமளித்த அனைவருமே காணாமல் போனோர், தடுத்து வைக்கப் பட்டுள்ளோர் தொடர்பாக கருத்துத் தெரிவிப்பதைச் செவிமடுத்த ஆணைக்குழுத் தலைவர், அவைகளை எழுத்து மூலமாகத் தரும்படி கேட்டுக்கொண்டதோடு, அவர்களுக்கு வெள்ளைத் தாள்களை வழங்குமாறு அதிகாரிகளுக்குப் பணித்தார்.

இது தொடர்பாகக் கருத்துத் தெரிவித்த ஆணைக்குழுத் தலைவர் சீ.ஆர்.டி.சில்வா, “காணாமல் போனோர், தடுத்து வைக்கப்பட்டுள்ளோர் தொடர்பாக சி.ஐ.டி.யினரை அழைத்துப் பேசவுள்ளேன்” என்றார். இதற்காக ஆணைக்குழுவின் ஒருநாள் அமர்வுக்கு சி.ஐ.டி.யினர் அழைக்கப்படுவர் என்று கூறினார். இது தொடர்பாக சி.ஐ.டி.யினரிடம் ஆராய்ந்து உண்மை நிலையை அறிவிப்பேன் என்றும் ஆணைக்குழுவின் தலைவர் கூறினார்.

காணி, தண்ணீர்ப் பிரச்சினைகள் தொடர்பாகவும் பெரும்பாலானோர் எடுத்துக் கூறினர். அந்த இடத்தில் அரசாங்க அதிபர், மற்றும் அதிகாரிகளை அழைத்த ஆணைக்குழு வின் தலைவர், பிரச்சினைக்கு விரைவில் தீர்வைப் பெற்றுக்கொடுக்குமாறு தெரிவித்தார்.

ஆணைக்குழு உறுப்பினர்கள், இரணமடுக் குளம், புலிகளின் விமானப்படைத்தளம் அமைந்திருந்த இடங்களை நேற்று நேரில் சென்று பார்வையிட்டனர். இன்று ஞாயிற்றுக்கிழமை கண்டாவளை, பூநகரி ஆகிய இடங்களில் அமர்வு நடைபெறும். நாளை திங்கட்கிழமை முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள மாங்குளம், நந்திக்கடல் பிரதேசத்தில் அமர்வு இடம்பெறவுள்ளது.

புதுவித காய்ச்சலினால் கொடிகாமத்தில் பெண் மரணம்!

கொடிகாமத்தில் இனம் காணப்படாத புதுவித காய்ச்சலினால் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார். நேற்று 17ம் திகதி யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இவர் மரணமாகியுள்ளார்.

கொடிகாமம் கச்சாய் வீதியில் வசித்து வந்த இரு பிள்ளைகளின் தாயான இப்பெண் காய்ச்சலினால் பீடிக்கப்பட்டு கொடிகாமம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். பின்னர் மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டிருந்தார். அங்கு அவசர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த இவர் நேற்று அதிகாலை உயிரிழந்தார்.

இவருக்கு ஏற்பட்ட காய்ச்சல் ஒருவிதமான மூளைக்காய்ச்சலாக இருக்கலாம் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். இவரின் கொடிகாமம் வீட்டிற்கு விரைந்த சுகாதார மருத்துவக் குழுவினர் தடுப்பு மருந்துகளை அப்பகுதிகளில் விசிறினர்.

இதேவேளை இவரது வீட்டில் தங்கியிருந்த ஆறு பேருக்கும் காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. இவர்கள் உடனடியாக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டு சிகிச்சைக்குள்ளாக்கப்பட்டு வருகன்றனர்.