இலங்கை மத்திய வங்கியின் மாகாண அலுவலகம் எதிர்வரும் ஞாயிற்றுக் கிழமை யாழ்ப்பாணத்தில் திறந்து வைக்கப்படவுள்ளது. இது மத்திய வங்கியின் நான்காவது மாகாண அலுவலகம் என்பது குறிப்பித்தக்கது. யுத்தம் முடிவடைந்ததையடுத்து பல்வேறு வங்கிகள், நிதி நிறுவனங்கள், குத்தைகை நிறுவனங்கள் என்பன மிக வேகமாக யாழ்ப்பாணத்தில் தங்கள் கிளைகளைத் திறந்து வருகின்றமை குறிப்பிடத்க்கது. இந்நிலையில் இலங்கை மத்தியவங்கி அதன் வடமாகாண கிளை நிறுவனத்தைத் திறந்து வடமாகாண மக்களின் நிதியியல் தேவைகளை நிறைவு செய்யவுள்ளதென தெரிவிக்கப்பட்டுள்ளது.
விஸ்வா
விஸ்வா
இலங்கையில் காணப்படும் எண்ணெய் வளம் தொடர்பான ஆய்வில் ஈடுபட உக்ரேன் அரசாங்கம் இணக்கம் தெரிவத்துள்ளது. நான்கு நாள் விஜயமாக கடந்த செவ்வாய்க் கிழமை உக்ரேனுக்குப் பயணமாகியுள்ள ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிற்கும் அந்நாட்டு ஜனாதிபதி விக்ரர் யனுகோவிஸ்குமிடையில் நேற்று முன்தினம் சந்திப்பு ஒன்று நிகழ்ந்தது அவ்வேளையிலேயே இது தொடர்பான இணக்கப்பாடு ஏற்பட்டுள்ளது. இலங்கையில் எண்ணெய் வள ஆராய்ச்சி மேற்கொள்வதற்கான ஒப்பந்தமொன்றும் இரு நாட்டு ஜனாதிபதிகளினால் கைச்சாத்திடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றில் கருத்து தெரிவித்த உக்ரேன் ஜனாதிபதி, இலங்கையில் எண்ணெய் வள ஆய்வில் ஈடுபடுவது குறித்தும், அது தொடர்பான பங்களிப்புகளை இலங்கைக்கு வழங்குவது குறித்தும் தாம் மகிழ்வடைவதாக தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாண அரசாங்க அதிபர் கே.கணேஸ் பதவியிலிருந்த ஓய்வு பெறுவதையடுத்து யாழ்ப்பாணத்தின் புதிய அரசாங்க அதிபராக முல்லை மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி இமெல்டா சுகுமார் நாளை வியாழக்கிழமை பதவியேற்கிறார். முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபராக முன்னாள் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபராகவிருந்த நா.வேதநாயகன் பதவியேற்கிறார்.
யாழ். அரசாங்க அதிபர் திரு கே.கணேஸ் 50 வருடகால அரச சேiயிலிருந்து இன்று ஓய்வு பெறும் நிலையிலேயே நாளை அப்பதவியை முல்லை மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி இமெல்டா சுகுமார் எற்கிறார். போர் நடைபெற்ற காலப்பகுதியில் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபராக இருந்த நா.வேதநாயகன் முல்லை அரச அதிபராக பதவியேற்கிறார்.
போர் முடிவடைந்ததன் பின்னர் கடந்த யுலை மாதம் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு ஆறு மாதங்களாக தடுத்து வைக்கப்பட்டிருந்த பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்ட ந.வேதநாயகன் அவர்களை நீதிமன்றம் இம்மாதம் 17ம் திகதி குற்றமற்றவர் என விடுதலை செய்தமை குறிப்பித்தக்கது.
இலங்கையின் 2010ஆம் ஆண்டிற்கான வரவு செலவு திட்டப் பிரேரணை நேற்று (June 29 2010) பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. 2010ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத்திட்ட வருமானம் 817.8 பில்லியன் ரூபா எனவும், செலவினம் 1279.8 பில்லியன் ரூபா எனவும், துண்டு விழும் தொகை 462 பில்லியன் ரூபா எனவும் பதில் நிதியமைச்சர் சரத் அமுனுகமவினால் அறிவிக்கப்பட்டது.
2010 ஆம் ஆண்டிற்கான வரவு செலவு திட்ட வருமானத்தின் நேரடி வரி வருமானமாக 729 பில்லியன் ரூபாவும், மறைமுக வரி வருமானமாக 878 மில்லியன் ரூபாவும் எதிர்பார்க்கப்படுவதாக சரத் அமுனுகம தெரிவித்துள்ளார். இதே வேளை, 2010ஆம் ஆண்டில் வரவு செலவு திட்டத்தின்படி மொத்த செலவினமாக 1279.8பில்லியன் ரூபாய்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது. இதில் நடைமுறைச் செலவினமா 928.3 பில்லியன் ரூபாய்களும், மூலதனச் செலவினமாக 352.5 பில்லியன் ரூபாய்களும் மதிப்பிடப்பட்டுள்ளதாக சரத் அமுனுகம குறிப்பிட்டுள்ளார்.
இதே வேளை, 2010 ஆண்டிற்கான துண்டு விழும் தொகை 462 பில்லியன் ரூபாய்கள் என குறிப்பிட்ட அமைச்சர் இந்த வரவு செலவு திட்டத்தில் துண்டு விழும் தொகையை 8 வீதமாகக் குறைக்க முடிந்துள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார். இவ்வாண்டிற்கான செலவினம் 5.5வீதமாக அதிகரித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 2011 ஆம்; ஆண்டிற்கான வரவு செலவுத்திட்டம் எதிர்வரும் நவம்பர் மாதம் சமாப்பிக்கப்படும் போது அரச ஊழியர்களுக்கான வேதன அதிகரிப்பு குறித்த அறிவிப்பு வெளியிடப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். சர்வதேச நாணய நிதியத்தின் மூன்றாம் தவணைக்கடன் கொடுப்பனவு எவ்வித நிபந்தனைகளுமின்றி இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஒதுக்கீடுகள் தொடர்பாக அவர் விளக்கிய போது, இலங்கையில் 30 இலட்சத்தைக் கொண்ட மாணவ சமூகத்திற்கு இலவச பாடநூல்களை வழங்கவும் ஏனைய நலத்திட்டங்களுக்கும் 7300 மில்லியன் ரூபாவும், 74 ஆயிரம் பேரைக்கொண்ட காப்பிணித் தாய்மார் மற்றும், சிறுவர் நலத்திட்டங்களுக்கும் 2500 மில்லியன் டொலர் ரூபாவும், நலன்புரி கிராமங்களில் தங்கியுள்ள இடம்பெயர்ந்த மக்களின் நலன்களுக்காக 7500 மில்லியன் ரூபாவும், சமுர்த்தி திட்டத்திற்காக 9300 மில்லியனும், ஊழியர் இளைப்பாற்றுத்திட்டத்திற்காக 4500 மில்லியனும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இவ்வொதுக்கீடுகள் தொடர்பாக அமைச்சர் தகவல்களை வெளியிட்ட போது, எதிர்கட்சியினர் கோசங்களை எழுப்பி ஆட்சேபனை எழுப்பினர். இவ்வரவு செலவுத்திட்டத்தில் மக்கள் நலன் கருதிய எவ்வித அம்சங்களும் உள்ளடக்கப்படவில்லை என அவர்கள் தெரிவித்தனர்.
யாழ்ப்பாணத்தில் புதிதாக ஆரம்பிக்கப்பட்ட நிதி நிறுவனம் ஒன்று பொது மக்களிடமும் அதன் பணியாளர்களிடமும் சுமார் 75 இலட்சம் ரூபா வரை மோசடி செய்துள்ளதான தகவல்கள் வெளியாகியுள்ளன. இப்போது அதன் உரிமையாளர் தலைமறைவாகி விட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. யாழ். கஸ்தூரியார் வீதியில் மாடிக்கட்டடம் ஒன்றில் இவ்வருட ஆரம்பத்தில் ஆரம்பிக்கப்பட்ட இந்நிதி நிறுவனம் கடந்த 25 நாட்களுக்கு முன்னர் மூடப்பட்டுள்ளதோடு அதன் உரிமையாளரும் தலைமறைவாகியுள்ளார்.
இந்த நிறுவனத்தில் பணியாற்ற தெரிவு செய்யப்பட்டவர்களிடம் ஒரு லட்சம், ஐம்பதினாயிரம் என பணம் பெறப்பட்டுள்ளது. இந்நிறுவனத்தில் வாடிக்கையாளர்களாக இணைகின்றவர்களுக்கு பல கவர்ச்சிகரமான சலுகைகள் அறிவிக்கப்பட்டன. இதன் காரணமாக குறுகிய காலத்தில் 3500 வரையிலான வாடிக்கையாளர்கள் இணைக்கப்பட்டனர். தற்போது இதன் வாடிக்கையாளர்கள் தாங்கள் எமாற்றப்பட்டமை குறித்து பொலஸில் முறையிட்டு வருகின்றனர்.
யாழ் மாவட்டத்தில் நிதி நிறுவனங்களின் நிதி மோசடி இது முதற் தடவையல்ல. யாழ் உதயன் பத்திரிகையின் நிறுவனர் சரவணபவனின் நிதி நிறுவனமான சப்ரா பினான்ஸ் லிமிடடில் வைப்பிட்ட பலரும் தங்கள் சேமிப்பை இழந்தனர். சிலர் தற்கொலைக்கும் முயற்சித்து இருந்தனர். இன்று சரவணபவன் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் தேசியக் கூட்டமைப்பு அரசியல் கட்சியாக நேற்று (யூன் 29 2010) பதிவு செய்யப்படவுள்ளதாக செய்திகள் வெளியான போதும் இறுதித் தருணத்தில் அது முடியாமல் போனதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது தமிழரசுக் கட்சி, ஈ.பி.ஆர்.எல்.எவ், ரெலோ ஆகிய கட்சிகளின் கூட்டமைப்பாகவுள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஒரு தனியான கட்சியாக தேர்தல் திணைக்களத்தில் பதிவு செய்யப்பட வேண்டும் என கூட்டமைப்பில் அங்கம் வகிக்கம் சிலர் அதன் தலைமைக்கு வலியுத்தி வந்தனர். அதன்படி நேற்று அக்கட்சி பதிவு செய்யப்படவிருந்தது.
இறுதி நேரத்தில் கூட்டமைப்பிருக்கிடையில் எற்பட்ட கருத்து முரண்பாடுகள் காரணமாக இது கைவிடப்பட்டதாக தெரியவந்துள்ளது. கட்சியின் பதவி நிலைகள் தொடர்பாகவே அம்முரண்பாடுகள் எற்பட்டதாகவும் தெரியவருகின்றது.
தமிழரசுக் கட்சிக்கு முக்கியத்துவமளிக்கும் விதமான முயற்சிகளில் அக்கட்சியின் உறுப்பினர்களான இரா.சம்பந்தரும். மாவை சேனாதிராஜாவும் ஈடுபட்டு வருவதாக கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் ஏனைய கட்சி உறுப்பினர்கள் மத்தியில் சில கருத்து முரண்பாடுகள் எற்கனவே தோன்றியிருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.
இரா சம்பந்தன், மாவை சேனாதிராஜா, சுரேஸ் பிரேமச்சந்திரன் ஆகியோரின் முடிவிலேயே கட்சி இயங்குவதாகவும் ஏனைய பாராளுமன்ற உறுப்பினர்களுக்குமே தகவல்கள் பரிமாறப்படுவதில்லை முடிவுகள் எடுக்கப்படும் போது கலந்துரையாடப்படவில்லை என ரெலோ பாராளுமன்ற உறுப்பினர்கள் உட்பட ஏனைய பாராளுமன்ற உறுப்பினர்கள் குற்றம்சாட்டி இருந்தனர். ஜனாதிபதித் தேர்தலில் சரத்பொன்சேகாவை ஆதரிப்பது என்ற முடிவும் இந்த மூக்கூட்டினால் எடுக்கப்பட்டு ஜனாநாயக நடைமுறைக்கு மாறாகவே பொன்சேகாவை ஆதரிப்பது என்ற முடிவை தமிழ் தேசியக் கூட்டமைப்பு பெற்றது.
இவ்வாறு தங்களிலும் மாறுப்பட்ட கருத்துக் கொண்டவர்களை அவர்கள் புலிகள் என்று முத்திரையைப் பயன்படுத்தி இரா சம்பந்தன் அவர்களை தமிழ் தேசியக் கூட்டமைப்பில் தேர்தலில் போட்டியிடுவதற்கான இடத்தை வழங்க மறுத்தார். அதனால் அவர்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்பில் இருந்து வெளியேறினர்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பினுள் தற்போது ஏற்பட்டுள்ள முரண்பாடு புதிய சிக்கல்களைத் தோற்றுவிக்கும். தமிழரசுக் கட்சியில் இருந்து வந்தவர்களான இரா சம்பந்தன் மாவை சேனாதிராஜா ஆகியோர் தமிழரசுக் கட்சியை புத்துயிர் கொடுக்கும் நடவடிக்கைகளில் ஆர்வம்காட்டி வந்தனர். அவர்களுக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பை புதிய கட்சியாகப் பதிவு செய்யும் ஆர்வம் பெருமளவில் இல்லை. ஆனால் ஏனைய விடுதலை இயக்கங்கள் கட்சிகளில் இருந்து வந்தவர்களுக்கு தங்கள் அடையாளங்களை தமிழரசுக்கட்சியின் அடையாளத்தினுள் புதைப்பது சற்று கடினமானதே.
இந்த முரண்பாடு எவ்வாறு தீர்க்கப்படுகிறது என்பது வெகுவிரைவில் தெரியவரும்.
”ஐக்கிய இலங்கைக்குள் வடக்கு கிழக்கு மாகாணங்கள் இணைந்த நிலையில் தமிழ்மக்களுக்கு சுயாட்சி அடிப்படையில் தீர்வு வழங்கப்பட பிரிட்டன் இலங்கைக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்” என தமிழ்தேசிய கூட்டமைப்பினர் பிரிட்டன் பிரதித் தூதுவரிடம் வலியுறுத்தியுள்ளனர்; நேற்று (June 28 2010) யாழ்ப்பாணம் வந்திருந்த பிரித்தானிய பிரதித்தூதுவர் மார்டின் புட்டினிஸை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் சந்தித்து கலந்துரையாடியபோதே இவ்வேண்டுகோளை விடுத்தனர்.
”யாழ்ப்பாணத்தில் அதியுயர் பாதுகாப்பு வலயத்திலிருந்து வெளியேற்றபட்ட ஒரு லட்சம் வரையிலான மக்கள் இன்னமும் சொந்த இடங்களில் மீள்குடியேற்றப்படவில்லை. வடமராட்சிக் கிழக்கில் மீள்குடியேற்றப்படவுள்ள கொடிகாமம் இராமாவில் முகாமிலுள்ள மக்கள் இன்னமும் மீள்குடியேற்றப்படவில்லை. வன்னியில் இன்னும் மக்கள் முழுவதுமாக மீள்குடியேற்றப்படவில்லை.
வன்னியில் பரந்தளவு நிலப்பரப்புக்கள் இராணுவத்தின் ஆக்கிரமிப்பில் உள்ளன. அப்பகுதிகளில் இராணுவத்தினருக்கு நிரந்தர வீடுகளை அமைத்துக் கொடுக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதன்மூலம் தமிழர்களின் பெரும்பான்மையை குறைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
யுத்தத்தின் பின்னர் இராணுவத்தின் இவ்வாறான செயற்பாடுகளுக்கும் நலன்களுக்கும் பெருந்தொகையான நிதி செலவிடப்படுகின்றது, ஆனால் மக்களின் மீள்குடியேற்றத்திற்கு இவ்வாறு செலவிடப்படவில்லை. யுத்தத்தின் பின்னர் சரணடைந்த, கைது செய்யப்பட்ட விடுதலைப் புலிகளை விடுவிக்க வேண்டும். அதற்கு முன்னதாக அவர்களின் பெயர் விபரங்களை வெளியிட வேண்டும்.”
இவ்வாறான விடயங்கள் கூட்டமைப்பினரால் விளக்கப்பட்டுள்ளன. இச்சந்திப்பில் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, சுரேஸ் பிரேமச்சந்திரன், சரவணபவன், அ.விநாயகமூர்த்தி, சி.சிறிதரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
தமிழ் மக்களின் பிரச்சினைகள் குறித்த பொது இணக்கப்பாடு ஒன்றை காண்பதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ள தமிழ் கட்சிகள் நேற்று (June 28 2010) மாலை தமிழ் தேசிய கூட்டமைப்பை சந்தித்து பேச்சு நடத்தியுள்ளன. கொழும்பில் ஏற்கனவே தமிழ் கட்சிகள் பேச்சு வார்ததைகளில் ஈடுபட்டுள்ள நிலையில் கூட்டமைப்பும் அதில் கலந்து கொள்ள வேண்டும் என வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
தமிழ்தேசிய விடுதலைக் கூட்டமைப்பின் செயலாளர் எம்.கே.சிவாஜிலிங்கம், புளொட் அமைப்பின் தலைவர் த.சித்தார்த்தன் ஆகியோர் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனை நேரடியாக சந்தித்து இவ்வேண்டுகோளை விடுத்துள்ளனர். கொழும்பிலுள்ள இரா.சம்பந்தனின் வீட்டில் நேற்று மாலை 6 மணிக்கு இச்ந்திப்பு நடைபெற்றுள்ளது.
இன்று தமிழ் மக்கள் பலவேறு பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ளனர். அவர்களின் உடனடிப் பிரச்சினை, அரசியல் தீர்வு, மற்றும் திட்டமிட்ட சிங்களக் குடியற்றங்கள் போன்ற விடயங்கள் தொடர்பாக அனைத்துக் கட்சிகளும் இணைந்து ஒருமித்த குரலில் பேச வேண்டியுள்ளமை குறித்து கூட்டமைப்பு தலைவரிடம் எடுத்து விளக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் முதலாம் திகதி நடைபெறவுள்ள அடுத்த தமிழ் கட்சிகளின் கூட்டத்தில் கூட்டமைப்பும் கலந்து கொள்ள வேண்டும் கேட்கப்பட்டுள்ளது.
கிளிநொச்சி விசுவமடுவில் இரு குடும்பப் பெண்களை பாலியல் வல்லுறவிற்குட்படுத்திய சந்தேக நபர்களான நான்கு இராணுவத்தினருக்கு நீதவானால் பிணை மறுக்கப்பட்டுள்ளது. அவர்களைப் பிணையில் செல்ல அனுமதிக்குமாறு அவர்கள் சார்பாக வாதிட்ட வழக்கறிஞர்கள் நீதிமன்றில் கோரிக்கை விடுத்தனர். அதற்கு அனுமதி மறுத்த கிளிநொச்சி மாவட்ட நீதவான் குறித்த நான்கு இராணுவத்தினரையும் எதிர்வரும் 13ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.
இரு வாரங்களுக்கு முன்னர் கிளிநொச்சி விசுவமடுவில் இரு குடும்பப் பெண்களை பாலியல் வல்லுறவிற்குட்படுத்திய இராணுவத்தினர் நால்வரை பாதிக்கப்பட்ட பெண்கள் அடையாளம் காட்டியதையடுத்து அவர்கள் கைது செய்யப்பட்டு அவர்களுக்கெதிராக வழக்குத் தொடரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
வன்னியில் இடம்பெயர்ந்த மக்களின் மீள்குடியேற்றம், அபிவிருத்தி தொடர்பாக ஆராய இன்றும் நாளையும் ஜனாதிபதி செயலகத்தில் விசேட மாநாடு நடைபெறுகின்றது.
வவுனியா அரசாங்க அதிபர் திருமதி பீ.எம். சார்ள்ஸ், முல்லைத்தீவு அரசாங்க அதிபர் திருமதி. இமெல்டா சுகுமார், கிளிநொச்சி அரசாங்க அதிபர் திருமதி. ரூபவதி கேதீஸ்வரன், வடமாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜீ.ஏ.சந்திரசிறி. ஆகியோர் இதில் கலந்து கொண்டுள்ளனர்.
மீள்குடியேற்றப்ட்ட பகுதிகளின் அபிவிருத்தி மற்றம், வெளிநாட்டு வளங்களை எவ்வாறு மீள்குடியேற்றப்பட்ட மக்களுக்கு வழங்குவது என்பது குறித்தும் இம்மாநாட்டில் ஆராயப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.