விஸ்வா

விஸ்வா

”தர்சிகாவின் மரணம் குறித்த உண்மை நிலை தெரிவது அத்தியாவசியமானது.” ஈ.பி.டி.பி அறிக்கை!

மருத்துவமாது தர்சிகாவின் மரணம் தொடர்பான நீதிமன்ற விசாரணைகள் துரிதப்படுத்தப்பட்டு உண்மைகள் வெளிவரவேண்டும் என ஈ.பி.டி.பி. கட்சி தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அக்கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில்,

 ‘வேலணை மத்திய மருந்தகத்தில் குடும்பநல உத்தியோகத்தராகப் பணியாற்றி கடந்த 10ஆம் திகதி மரணமடைந்த கைதடி தெற்கைச் செர்ந்த தர்சிகா என்ற பெண்ணின் மரணம் தொடர்பர்க மக்கள் மத்தியில் பல்வேறு சந்தேகங்கள் நிலவுகின்றன. இது தொடர்பாக ஈ.பி.டி.பியின் செயலாளர் நாயகமும், அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தாவோடு பல்வேறு தரப்பினர் முறைப்பாடுகளை முன்வைத்துள்ளனர்.

இந்நிலையில் இம்மரணம் தொடர்பான விசாரணைகள் தற்போது ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் நடைபெற்று வருகின்றன. இவ்விசாரணைகள் துரிதப்படுத்தப்பட்டு மக்கள் மத்தயில் நிலவுகின்ற சந்தேகங்கள் தீர்க்கப்பட வேண்டும் என்பது எமது நிலைப்பாடாகும். குறித்த மரணம் தெர்டர்பாக மக்கள் மத்தியில் சந்தேகம் நிலவுவதால் தீவப்பகுதி உட்பட யாழ்.குடாநாட்டில் ஒருவித பதற்ற நிலை உருவாகி வருகின்றது. எனவே, விசாரணைகள் துரிதப்படுத்தப்பட்டு உண்மை நிலை பொதுமக்களுக்கு தெரிய வேண்டியது அத்தியாவசியமானது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதே வேளை, தர்சிகாவின் இறுதிக் கிரிகைகள் நேற்று கைதடி தெற்கிலுள்ள அவரது இல்லத்தில் நடைபெற்றது. யாழ் மாவட்ட குடும்ப நல சுகாதார சேவைகள் ஊழியர்கள் அனைவரும் கறுப்புப்பட்டி அணிந்து தர்சிகாவின் பூதவுடலுக்கு அஞ்சலி செலுத்தினர். பிரேத ஊர்வலம் கைதடிச் சந்தியை அடைந்தபோது, சந்தியில் நின்று அரை மணிநேரம் வரையில் மக்கள் வீதி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்துக்கள் சில நிமிடங்கள் தடைப்பட்டன.

நடிகை அசின் இலங்கை ஜனாதிபதியின் பாரியாருடன் யாழ் விஜயம்!

Asin_South_Indian_Actressசிறிலங்கா ஜனாதிபதியின் பாரியார் உள்ளிட்ட அரசஅதிகாரகள் குழுவினர் தென்னிந்திய திரைப்பட நடிகை அசினுடன் நேற்று யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு விஜயம் செய்தனர். அங்கு கடந்த மூன்று தினங்களாக நடைபெற்ற கண் சத்திரசிகிச்சை முகாமின் இறுதி நாள் நிகழ்வில் கலந்து கொள்வதற்காகவே அவர்கள் அங்கு வருகை புரிந்தனர்.

தென்னிந்திய நடிகை அசின் மற்றும் இந்தி நடிகர் சல்மான்கான் ஆகியோரின் நிதியுதவியில் புனரமைக்கப்பட்டு நவீனமயப்படுத்தப்பட்டுள்ள யாழ்.போதனா வைத்தியசாலையின் கண்சிகிச்சை நிலையத்தில் இந்திய கண்சிகிச்சை நிபுணர்களால் விழி வெண்படல சத்திரசிகிச்சை முகாம் நடாத்தப்பட்டமை  குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, இக்குழுவினர் நேற்றுக் காலை வவுனியா வைத்தியசாலைக்கும் விஜயம் செய்தனர். நடிகை அசின் வருகை தந்த செய்தி கசிந்ததும் வைத்தியசாலையை நோக்கி பல இரசிகர்கள் படையெடுக்கத் தொடங்கினர் இருந்தபோதும், இவர்களின் வருகையை முன்னிட்டு வவுனியா, யாழ்.வைத்தியசாலைகளில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

தமிழ்நாடு திரைப்பட அமைப்பினரின் பணிப்பை மீறி இலங்கையில் நடைபெற்ற திரைப்பட விழாவிற்கு சென்ற காரணத்தினால் தமிழ் படங்களில் நடிப்பதற்கு நடிகை அசினுக்கு தடைவிக்கப்பட்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

சுருக்கிட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்ட மருத்துவ மாதுவின் மரணம் குறித்து விசாரணைகள் நடைபெறுகின்றன!

நேற்று முன்தினம் (10-07-20100) அன்று வேலணை வைத்தியசாலையில் மர்மமான முறையில் தூக்கிட்டு சடலமாக மீட்கப்பட்ட மருத்துவமாதுவான சரவணை தர்சிகாவின் மரணம் குறித்து தொடர்ந்து விசாரணகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இம்மரணம் தொடர்பாக அவ்வைத்திய சாலையின் பொறுப்பதிகாரி டொக்ரர் பிரியந்த செனவிரட்னவும் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு உள்ளார். விசாரணகள் முடியும் வரை குறிப்பிட்ட வைத்தியர் யாழ்ப்பாணத்தை விட்டு வெளியேறுவதற்கு தடைவிதிக்கபட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை. தர்சிகாவின் மரணம் தற்கொலையாக இருக்க முடியாது என அவரது பெற்றோரும், உறவினர்களும் சந்தேகம் தெரிவித்துள்ளனர். இது  தொடர்பாக பூரண விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு தமக்கு நீதி வழங்கப்பட வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

‘மாவீரர் துயிலுமில்லத்திற்கு’ அருகில் குடியிருக்கும் மக்களை வெளியேறுமாறு படையினர் உத்தரவு.

Maaveerar_Thuyilum_Illam_Kopaiகோப்பாயில் அமைந்துள்ள விடுதலைப் புலிகளின் ‘மாவீரர் துயிலுமில்லத்தை’ இடித்தழிக்கும் நடவடிக்கைகளில் படையினர் ஈடுபட்டிருப்பதால் அப்பகுதியில் தற்காலிகமாக தங்கியுள்ள குடும்பங்களை உடனடியாக வெளியேறுமாறு படையினர் கோரியுள்ளனர். உயர்பாதுகாப்பு வலயமான வலிகாமம் குரும்பசிட்டி தெற்கிலிருந்து இடம்பெயர்ந்த இவர்கள், 1994ம் மாதம் இடம்பெற்ற இடப்பெயர்வின் போது வன்னிக்குச் சென்று கிளிநொச்சி அக்கராயன் குளத்தில் வசித்து வந்தனர்.

Maaveerar_Thuyilum_Illam_Kopaiகடந்த வருடம் வன்னியில் இடம்பெற்ற இறுதிக்கட்டப் போரில் குடும்பத் தலைவர்களை இழந்த நிலையில் வவுனியா  அகதி முகாமிலிருந்து விட்டு தற்போது யாழ்ப்பாணம் கோப்பாய் பகுதியில் கூடாரங்கள் அமைத்து இவர்கள் வசித்து வருகின்றனர்.

இவர்களின் நிலை குறித்து அறிவதற்காக இன்று பிற்பகல் தமிழர் விடுதலைக் கூட்டணியின் யாழ்.மாநகரசபை உறுப்பினர் இரா.சங்கையா, அதன் ஊடகச் செயலாளர் த.கஜன் ஆகியோர் உள்ளிட்ட குழுவினர் அப்பகுதிக்குச் சென்று அம்மக்களைப் பார்வையிட்டு, அவர்களின் பிரச்சினைகள் குறித்து கேட்டறிந்தனர்.

தாங்கள் மிகவும் வறியநிலையில் வாழ்வதாகவும் தங்களுக்கான நிவாரண உதவிகள் கூட மூன்று மாதங்களாக நிறுத்தப்பட்டு விட்டதாகவும் அவர்கள் தெரிவித்தனர். தங்களின் சொந்தக் காணிகள் உயர்பாதுகாப்பு வலயத்துள் இருப்பதால் அங்கு செல்ல முடியாமலிருப்பதாகவும், தங்களுக்கு தங்கியிருப்பதற்கான மாற்று இடங்களும் காட்டப்படாத நிலையில்  எங்கு செல்வதென தெரியாத நிலையிருப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர். இம்மக்களின் பிரச்சினைகள் குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டு நடவடிக்கை எடுப்பதாக கூட்டணியினர் அம்மக்களிடம் தெரிவித்தனர்.

சிகிச்சை பெறுவதற்காக வாகனத்தில் பயணித்தவர்கள் வழியில் விபத்துக்குள்ளாகினர். ஒருவர் உயிரிழந்தார்.

வைத்திய சிகிச்சைக்காக கொழும்பு சென்று கொண்டிருந்தவர்கள் விபத்தில் சிக்கியதில் ஒருவர் உயிரிழந்தார். ஏழு பேர் படுகாயமடைந்தனர். யாழ்ப்பாணத்திலிருந்து ‘ஹயஸ்’ வான் ஒன்றில் கொழும்பு நோக்கி சென்று கொண்டிருந்த இவர்களின் வாகனம் நேற்றுக்காலை 5.30 மணியளவில் சிலாபம் பகுதியில் லொறி ஒன்றுடன் மோதியதில் இவ்விபத்து ஏற்பட்டது.

இதில் யாழ்ப்பாணம் குருநகரைச் சேர்ந்த எஸ்.மரியாம்பிள்ளை (வயது 76) என்பவர் உயிரிழந்தார். அவரது மனைவி அந்தோனியம்மா (வயது 66) உட்பட ஏழு பேர் படுகாயமுற்றனர். படுகாயமடைந்த அனைவரும் சிலாபம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கிளிநொச்சியை அண்டிய பகுதிகளுக்கு மின்சார விநியோகம் வழங்கப்படுகின்றது.

கிளிநொச்சி நகரை அண்டிய பகுதிகளுக்கு தற்போது மின்சாரம் வழங்கப்பட்டு வருகின்றது. இரணைமடுச்சந்தி, பாரதிபுரம், தொண்டமான்நகர், கிளிநொச்சி நகர்ப்பகுதி, திருநகர், கணேசபுரம். பரந்தன் ஆகிய பகுதிகளுக்கே மின்சார விநியோகம் வழங்கப்பட்டு வருகின்றது. ஏனைய பகுதிகளுக்கு மின்சார இணைப்பு வேலைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

வடக்கின் வசந்தம் திட்டத்தின் கீழ் மீள்குடியேறிய மக்களுக்கு மின்சாரம் வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்ட போதிலும், ஏ-9 பாதையின் இருபுறமும் அமைந்துள்ள வணிக நிறுவனங்கள், அரசாங்க அலுவலகங்கள் மற்றும் நிறுவனங்கள் முதலானவற்றிற்கே தற்போது மின்சாரம் வழங்கப்பட்டு வருகின்றது.  அழிவடைந்த, சேதமுற்ற பொதுமக்களின் வீடுகள் மீளமைக்கப்படாத நிலையில் உள்ளபோது,  அம்மக்களுக்கான மின்சார விநியோகத்தை வழங்குவது என்பது இயலாத விடயம் என்பதும் இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.

வேலணை வைத்தியசாலையில் மருத்துவமாது தூக்கில் சடலமாக மீட்பு. வைத்தியசாலை பொறுப்பதிகாரி பாதுகாப்பான இடத்திற்கு மாற்றம்!

வேலணை அரசினர் வைத்தியசாலையில் குடும்பநல மாதவாகப் பணியாற்றிய பெண்ணொருவர் கயிற்றில் சுருக்கிடப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். நேற்றுக் (July 10 2010) காலை 7.30 மணியளவில் வைத்தியசாலையில், இவரது தங்கும் அறையில் இவரது சடலம் மீட்கப்பட்டுள்ளது. வேலணை வைத்தியசாலையில் கடமையாற்றி வந்த கைதடி தெற்கைச் சேர்ந்த சரவணை தர்சிகா (வயது 27) என்ற பெண்ணே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டார். இச்சம்பவம் வேலணைப் பகுதியில் பெரும் பரபரப்பை எற்படுத்தியுள்ளது.

இச்சம்பவம் பற்றி தெரிய வருவதாவது:  வேலணை அரசினர் வைத்தியசாலை பிரசவ விடுதியில்  பணியாற்றிய குடும்பநல உத்தியோகத்தர் விடுமுறையில் சென்றதையடுத்து பதில் கடமையாற்றும் பணிக்காக தர்சிகா வேலணைக்குச் சென்றார். நேற்று முன்தினம் இரவுக் கடமையில் இருந்த போது அவர் கையடக்கத் தொலைபேசியில் உரையாடியதைக் குற்றம் சாட்டி வைத்தியசாலையின் பொறுபதிகாரி டொக்ரர் பிரியந்த செனவிரட்ண என்பவர் கோபத்தில் பல தடைவைகள் சத்தமிட்டு அவரைத் திட்டியதோடு, அவரது கையக்கத் தொலைபேசியையும் பறித்துள்ளார்.

இதனால் பயந்துபோன தர்சிகா மயக்கமுற்றுள்ளார். அவருக்கு சக ஊழியர்கள் முதலுதவி சிகிச்சையளித்துள்ளனர். பின்னர் நேற்று அதிகாலை அப்பெண் தனது கடமையை ஆரம்பித்த போதும் குறிப்பட்ட வைத்திய அதிகாரி அவரை மேலும் திட்டியுள்ளார். தனது கையடக்கத் தொலைபேசியைத் தருமாறு தர்சிகா கேட்டபோது, அதனைக் கொடுப்பதற்கு அதிகாரி மறுத்துள்ளார்.

இதனையடுத்து நேற்றுக்காலை சில மணிநேரம் தர்சிகாவைக் காணவில்லை என வைத்தியசாலைப் பணியாளர்கள் தேடியுள்ளனர். பின்னர் அவரது விடுதி யன்னலைத் திறந்து பார்த்தபோது. மின்விசிறியில் தொடுக்கப்பட்ட கயிற்றில் சீருடையணிந்த நிலையில் சடலமாக  தர்சிகா தொங்குவதைப் பணியாளர்கள் கண்டுள்ளனர். இச்சம்பவத்தையடுத்து. ஊர்காவற்றுறை பதில் நீதவான் யாழ்.பிராந்திய சுகாதாரசேவைகள் பணிப்பாளர்  டொக்ரர் கேதீஸ்வரன், மற்றும் ஊர்காவற்றுறைப் பொலிஸார் நேரில் சம்பவ இடத்திற்குச் சென்று விசாணைகளை மேற்கொண்டனர். பிரேத பரிசோதனைகளுக்காக பின்னர் சடலம் யாழ்.வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது.

நான்கு மாதங்களுக்கு முன்னர் குறிப்பிட்ட வைத்திய பொறுப்பதிகாரி வைத்தியசாலைக் கட்டப்பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த ஒருவரைத் தாக்கியதாகவும், அதனால் அக்கட்டடப்பணி இடைநிறுத்தப்பட்டதாகவும், இதனையடுத்து யாழ்.பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் நேரில் சென்று சமரசம் செய்ததாகவும் கூறப்படுகின்றது.

புனர்வாழ்வு முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த ஏழு பல்கலைக்கழக மாணவர்கள் விடுவிப்பு.

University of Jaffnaபுனர்வாழ்வு முகாமில் ஒரு வருடமாகத் தடுத்து வைக்கப்பட்டிருந்த ஏழு பல்கலைக்கழக மாணவர்கள் நேற்று (10-07-2010) விடுவிக்கப்பட்டுள்ளனர். தெல்லிப்பழை புனர்வாழ்வு முகாமில் தடுத்து வைக்கபட்டிருந்தவர்களில் குறிப்பிட்ட ஏழு பேரே விடுவிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் நான்கு ஆண்களும், மூன்று பெண்களும் அடங்குகின்றனர்.

Gunasegara D E W_Ministerநேற்று தெல்லிப்பழை பிரதேசச் செயலகத்தில் புனர்வாழ்வு மற்றும், மறுசீரமைப்பு அமைச்சினால் மேற்கொள்ளப்பட்ட நடமாடும் சேவையின் போதே புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலைகள் அமைச்சர் டி.யூ. குணசேகரவால் இவர்கள் விடுவிக்கப்பட்டனர். இம்மாணவர்கள் ஏழு பேரும், யாழ். பல்கலைக்கழக துணைவேந்தரிடம் கையளிக்கப்பட்டனர். இந்நிகழ்வில் போரினால் பாதிக்கப்பட்டு சொத்துக்களை இழந்த பத்துப்பேருக்கு இழப்பீடுகள் வழங்கப்பட்டன.

தெல்லிப்பழை பிரதேசச் செயலகத்தில் நேற்று இடம்பெற்ற இந்நிகழ்வில் கலந்து கொண்டு அமைச்சர் டி.யூ, குணசேகர உரையாற்றுகையில் – மீள்குடியேற்றம், புனர்வாழ்வு நடவடிக்கைகளை மேற்கொள்வதென்பது சுலபமானது அல்ல அவைப் படிப்படியாகவே மேற்கொள்ளப்பட வேண்டும் எனக்கூறினார். 40ஆயிரம் பேரே இன்னமும் மீள்குடியேற்றப்பட உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

கிளிநொச்சிப் பகுதிகளில் கள்வர்களின் தொல்லை அதிகரித்து வருகின்றது.

மக்கள் மீள்குடியமர்த்தப்பட்டுள்ள கிளிநொச்சிப் பகுதிகளில் கள்வர்களின் தொல்லை அதிகரித்துள்ளதாக மீள்குடியேற்றப்பட்ட மக்கள் தெரிவிக்கின்றனர்.  சொத்துக்கள் எல்லாவற்றையும் இழந்துள்ள நிலையில் தங்கள் காணிகளில் கூடாரங்கள் அமைத்து தங்கியுள்ள இம்மக்களின் நகை. பணம் போன்றவற்றை இரவு வேளைகளில் சென்று அபகரித்துச் செல்லும் கள்வர்களால் மீள்குடியமர்த்தப்பட்ட மக்கள் மிகுந்த அச்சம் கொண்டுள்ளனர்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு கிளிநொச்சி உதயநகர் மேற்கில் வசிக்கும் ஒருவருடயை வீட்டினுள் புகுந்த கள்வர்கள் அவரிடமிருந்த பணம். நகை. மற்றும் சில பொருட்களை களவாடிச் சென்றுள்ளனர். இறுதிக்கட்டப் போரில் காயமுற்றதால் நடமாடமுடியாத நிலையில் உள்ள அவரது விட்டிலேயே இக்கொள்ளளைச் சம்பவம் நடைபெற்றுள்ளது. கதவுகள். யன்னல்களற்ற வீட்டில் அவரும் அவரது குடும்பத்தினரும் உறங்கிக்கொண்டிருந்த வேளையில் கள்வர்கள் வீட்டினுள் புகுந்து கொள்ளையில் ஈடுபட்டுள்ளனர்.

மீள்குயேற்றப்பட்டுள்ள மக்கள் தங்கள் இருப்பிடங்களில் பாதுகாப்பற்ற நிலையில் தங்கியுள்ளதால் கள்வர்களின் செயற்பாடுகளுக்கு அது இலகுவாகவுள்ளதாக அம்மக்கள் தெரிவிக்கின்றனர்.

முன்னாள் அமைச்சர் மகேஸ்வரனை படுகொலை செய்தவர்களை உடன் கண்டுபிடியுங்கள். – அமைச்சர் தேவானந்தா அரசிடம் கோரிக்கை!

douglas-devananda.jpg‘முன்னாள் அமைச்சர் மகேஸ்வரனை படுகொலை செய்தவர்களை உடன் கண்டுபிடியுங்கள். எம்மீதுள்ள களங்கத்தை போக்குங்கள்” என – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் அமைச்சருமான தி.மகேஸ்வரனை படுகொலை செய்தவர்களை கைது செய்யுமாறு ஈ.பி.டி.பியின் செயலாளர் நாயகமும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா அரசாங்கத்திடம் கோரியுள்ளார். கொலையாளிகளை உடனடியாக கைது செய்து தம்மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களை நீக்குமாறு அவர் கோரியுள்ளார்.

அத்துடன் அண்மையில் சாவகச்சேரியில் மாணவர் ஒருவர் கடத்திச் செல்லப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பிலும், விரிவான விசாரணகள் நடத்தப்பட வேண்டும் எனவும் அவர்  தெரிவித்துள்ளார். இக்கொலை தொடர்பாகவும் சிலர் தம்மீது குற்றம் சுமத்தி வருவுதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இச்சம்பவங்களை முன்னிறுத்தி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தம்மீதும் தமது கட்சி மீதும் பாராளுமன்றத்தில் கடுமையாக விமர்சித்து வருகின்றனர் எனவும், இவற்றிற்கும் தமக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார். குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு உரிய விசாணைகளை நடத்தி தம்மீது சுமத்தப்பட்டுள்ள களங்கத்தை போக்குமாறும் அவர் அரசாங்கத்திடம் கோரியுள்ளார்.

மகேஸ்வரனின் மனைவியும் தற்போது ஐக்கிய தேசியக்கட்சியின் பாராயுளுமன்ற உறுப்பினராக இருப்பவருமான விஜயகலா மகேஸ்வரன் பாராளுமன்றத்தில் ஆற்றிய உரைக்கு பதிலளிக்கும் வகையிலேயே அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இவற்றைத் தெரிவித்துள்ளார்.