விஸ்வா

விஸ்வா

வன்னியில் இடம்பெயர்ந்த மாணவர்களின் கற்றல் நடவடிக்கை வீழ்ச்சியடைந்துள்ளது.

Vavuniya_SriAhilandeswariArulahamவன்னியில் இடம்பெயர்ந்த மாணவர்களின் கற்றல் நடவடிக்கைகள் சில வருடங்கள் பின்தங்கியுள்ளதாக மாகாண கல்வித்திணைக்கள தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த இரு வருடங்களில் மட்டும் யுத்தம் காரணமாக 36 ஆயிரம் மாணவர்கள் அகதிகளாக்கப்பட்டிருப்பதாக வடமாகாண கல்வித்திணைக்களம் தெரிவித்துள்ளது. சுமார் 32 ஆயிரம் மாணவர்கள் கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களிலிருந்து இடம்பெயர்ந்துள்ளதாகவும் அத்தகவலில் தெரிவிக்கபட்டுள்ளது. யுத்த காலங்களில கல்விச்செயற்பாடுகள் தடைப்பட்டிருந்ததாலும், மாணவர்கள் இடம்பெயர்ந்து முகாம்களில் வசித்து வந்த காரணத்தினாலும் கற்றல் நடவடிக்கைகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்ட்டுள்ளது.

Vavuniya_SriAhilandeswariArulahamபாதிக்கப்பட்ட மாணவர்களின் கல்வியை மறுசீரமைப்பதற்கான வேலைத்திட்டமொன்றை முன்னெடுக்க வேண்டியது அவசியமானது என வடமாகாண கல்விப்பணிப்பாளர் அலுவலகம் சுட்டிக்காட்டியுள்ளது.

 தற்போது மீள்குடியமர்வு நடவடிக்கைகள் நடைபெற்று வருகின்ற நிலையிலும், சுமார் நான்காயிரம் மாணவர்கள் இன்னமும் முகாம்களிலேயே வசிக்கின்றனர் என்பதும், மக்கள் மீள்குடியேற்றபட்ட வன்னிப் பகுதிகளின் பாடசாலைகள் மீண்டும் இயங்க ஆரம்பித்துள்ள போதும் அப்பாடசாலைகளில் ஆசிரியர் பற்றாக்குறைகள் நிலவுகின்றமையும் இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.

யாழ்ப்பாணத்துக்கான ரயில் போக்குவரத்துப் பாதைகள் புனரமைக்கப்படுகின்றன.

jaffna_rail_stationயாழ் ரயில் போக்கவரத்தை மீண்டும் ஆரம்பிக்கும் வகையில் தண்டவாளங்கள் அமைக்கும் வேலைகள் விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. வவுனியாவிற்கு அப்பால் சில மைல்கள் தூரம் தண்டவாளம் அமைக்கும் பணி நடைபெற்று நிறைவடைந்துள்ளது. நீண்ட காலம் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசங்களாக இருந்த பகுதிகளிலுள்ள தண்டவாளங்கள் அகற்றப்பட்டு ரயில் பாதை அமைந்திருந்த பகுதிகள் காடாகிப் போயுள்ளதால் அவற்றைப் புனரமைக்கும் பணிகளும் நடைபெற்று வருகின்றன.

jaffna_rail_stationஇந்த ரயில்பாதைகளுக்கு அருகில் வசிப்பவர்களை வெளியேற்றும் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்ட வருகின்றன. குறிப்பாக யாழ்ப்பாணத்தில் ரயில் தண்டவாளப் பகுதிகளில் குடியிருப்பவர்கள் அங்கிருந்த வெளியேறி ரயில் பாதை அமைக்கும் பணிகளுக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு யாழ்.அரச அதிபர் திருமதி இமெல்டா சுகுமார் கேட்டுக்கொண்டுள்ளார்.

தேசிய பாதுகாப்பு தினம் இம்முறை யாழ்பாணத்தில் நடைபெறவுள்ளது.

தேசிய பாதுகாப்பு தினம் இவ்வருடம் யாழ்ப்பாணத்தில் கொண்டாடப்படவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான கலந்துரையாடல் ஒன்று நேற்று யாழ். அரச செயலகத்தில் இடம்பெற்றது. இதில் அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பயிற்சி மற்றும், பொதுமக்கள் விழிப்பணர்வு நிலைய பணிப்பாளர் நந்தரட்ண தலைமையிலான குழுவினர் கலந்து கொண்டனர்;.

எதிர்வரும் 26ம் தகதி யாழ்.பல்கலைக்கழகத்தில் இக்கொண்டாட்ட நிகழ்வுகள் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்வுகளை நடத்துவதற்காக நேற்றைய கூட்டத்தில் 14 குழுக்கள் அமைக்கப்பட்டு அவற்றிற்கான பொறுப்புக்கள் வழங்கப்பட்டன. பாதகாப்பு தொடர்பான விடயங்கள் பொலிஸ், இராணுவம், கடற்படை, விமானப்படை ஆகியவற்றிடம் ஒப்படைக்கப்பட்டன. மேலும் தேசிய பாதுகாப்பு தினத்தையொட்டி பாடசாலை மாணவர்களுக்கான கட்டுரை, ஓவியப்போட்டிகளும் நடத்தப்படவுள்ளதாகவும் அறிவிக்கபட்டுள்ளது. 

இந்த நிகழ்வுக்கான பூரண ஒத்துழைப்பை அரச, அரசசார்பற்ற நிறுவனங்கள், வங்கிகள், ஆகியவற்றிடம் எதிர்பார்ப்பதாக யாழ். அரச அதிபர் திருமதி இமெல்டா சுகுமார் தெரிவித்துள்ளார். இந்தக் கூட்டத்தில் அரச அதிபர், மேலதிக அரசஅதிபர், பிரதேசச் செயலர்கள், வலயக் கல்விப்பணிப்பாளர்கள், திணைக்களத் தலைவர்கள், படை அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

13வது அரசியல் திருத்தச்சட்டத்தை நிறைவேற்றுமாறு தமிழ் கட்சிகளின் அரங்கம் அரசிடம் கோரிக்கை!

தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைக்கு தீர்வொன்றைக் காண்பதற்காக அரசியல் அமைப்பின் 13வது திருத்தச்சட்ட மூலத்தை முழுமையாக நிறைவற்ற வேண்டும் என்ற கோரிக்கையை தமிழ் கட்சிகளின் அரங்கத்தில் அங்கம் வகிக்கும் தமிழ் கட்சிகள் இணைந்து அரசாங்கத்திற்கு முன்வைக்கவுள்ளன. ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிற்கு நேரடியாக இக்கோரிக்கையை முன்வைக்கவுள்ளதாக இக்கட்சிகள் தீர்மானித்துள்ளன.

தமிழ் கட்சிகளின் அரங்கம் கடந்த 14ம் திகதி மட்டக்களப்பில் கூடியபோதே இவ்வாறு ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஐந்தாவது தடவையாக கிழக்கு மாகாண முதலமைச்சரும் தமிழ்மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் தலைமையில் மட்டக்களப்பில் நடைபெற்ற தமிழ் கட்சிகளின் அரங்கத்தின் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் தொடர்பாக அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

தமிழ் கட்சிகளின் அரங்கத்தில் பங்கு வகிக்கும் தமிழர் விடுதலைக்கூட்டணியின் தலைவர் வீ.ஆனந்தசங்கரி,  ஈ.பி.டி.பி நாடாளுமன்ற உறுப்பினர் மு.சந்திரகுமார், தமிழ்தேசிய விடுதலைக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் எம்.கே.சிவாஜிலிங்கம், ஈ.பி.ஆர்.எல்.எவ் கட்சியைச் சேர்ந்த இரா.தரைரத்தினம்,  சிறிரெலோ கட்சியின் பி.உதயராசா மற்றும் எஸ்.சந்திரகாசன் ஆகியோர் கையெழுத்திட்டு இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளனர்.

நாட்டில் பல பாகங்களிலும் உள்ள சிறைச்சாலைகள். தடுப்பு முகாம்களில் தடுத்து வைக்கபட்டிருக்கும் தமிழ் அரசியல் கைதிகள் உடனடியாக விசாரணைகளுக்குட்படுத்தப்பட வேண்டும் அல்லது விடுவிக்கப்பட வேண்டும்.

தமிழ் பிரதேசங்களில் இராணுவக் குடியேற்றங்கள் தடுத்து நிறத்தப்பட்டு. அhத்தமுள்ள மீள்குடியேற்றம் மேற்கொள்ளப்படுதல். சிவில் நிர்வாகத்ததை முழுமையாக நடைமுறைப்படுத்தல், போரின் போது ஏற்பட்ட அழிவுகளுக்கு நட்டஈடு வழங்குதல்,  வடக்கு கிழக்கின் இனப்பரம்பலில் மாற்றத்தை எற்படுத்தும் செயற்பாடுகளை தடுத்து நிறுத்தல் உள்ளிட்ட பல விடயங்கள் ஆராயப்பட்டதாகவும், இவை தொடர்பான கோரிக்கையை ஜனாதிபதியிடம் முன்வைப்பதெனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இக்கோரிக்கைள் தொடர்பான திட்டவரைவு ஒன்று உருவாக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கபட்டுள்ளது.

தமிழ் கட்சிகளின் அரங்கத்தில் தமிழ்தேசியக் கூட்டமைப்பை இணைத்துக்கொள்வது தொடர்பாகவும் ஆராயப்பட்டுள்ளதுடன், அடுத்து நடைபெறும் சந்திப்புகளில் முஸ்லிம், மலையக கட்சிகளை இணைப்பது குறித்தும் ஆராயப்பட்டுள்ளன.

இது இவ்வாறிருக்க. தமிழ் கட்சகிளின் கூட்டங்களில் கலந்து கொள்வதற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கு உத்தியோக பூர்வமாக அழைப்பு எதவும் விடுக்கப்படவில்லை என கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். அவ்வாறு அழைப்பு விடுக்கப்பட்டாலும் இதில் கலந்து கொள்வது குறித்து கட்சி இன்னும் தீர்மானிக்கவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

கூட்டத்தில் பங்கு கொள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கு அழைப்பு விடுக்கப்பட்டதாக தமிழ் கட்சிகளின் அரங்கத்தில் பங்கு வகிக்கும் தமிழ்த்தேசிய விடுதலை முன்னணியின் செயலாளர் எம்.கே சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.  இரா.சம்பந்தனின் கொழும்பு இல்ல முகவரிக்கு தபால் மூலம் அழைப்பிதழ் அனுப்பி வைக்கப்பட்டதாகவும். அவர் இந்தியா சென்றிருப்பதால் அவ்வழைப்பிதழ் கிடைக்காமல் போயிருக்கலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

எனினும், சம்பந்தர் நாடு திரும்பியதும் தமிழ் கட்சிகளின் அரங்கத்தின் தூதுக்குழு கூட்டமைப்பை நேரில் சந்தித்து அடுத்த கூட்டத்தில் கலந்து கொள்வதற்கான அழைப்பினை விடுக்கும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் மீள்குடியேற்றப்பட்ட மக்களுக்கு அடுத்த வருடத்திற்குள் வீடமைப்பு நிறைவு பெறும் என அரச அதிபர்

imalda.jpgயாழ்ப் பாணத்தில் மீள்குடியேற்றப்பட்ட மக்களின் வீடுகள் அடுத்த வருடத்திற்குள் முழுமையாக மீள்நிர்மானம் செய்யப்படும் என யாழ். அரசாங்க அதிபர் திருமதி இமெல்டா சுகுமார் தெரிவித்துள்ளார்.

வடக்கு கிழக்கு வீடமைப்புத் திட்டத்தின் கீழ் யாழ். மாவட்டத்தில் 2010 தொடக்கம் 2011ஆம் ஆண்டுக் காலப்பகுதிக்குள் 2171 வீடுகள் மீள்நிர்மானம் செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. யாழ் மாவட்டத்தில் 14 பிரதேசச் செயலாளர் பிரிவுகள் இதற்காகத் தெரிவு செய்யப்பட்டுள்ளதாகவும். முன்னுரிமை அடிப்படையில், மீளக்குடியேறிய சகல குடியிருப்பாளர்களுக்கும் வீடு, சேத மதிப்பீடுகள் மேற்கொள்ளப்பட்டு பயனாளிகளாக தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு 3இலட்சத்து 25 ஆயிரம் ரூபா ஐந்து கட்டங்களாக வழங்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மீள்குடியேற்றத்திற்கென அழைத்து வரப்பட்டும் மீள்குடியமர்த்தப்படாமலுள்ள வன்னி மக்களின் அவலம்!

Namal_Rajaparksa வவுனியா மனிக்பாம் அகதி முகாம்களிலிருந்து மீள்குடியேற்றத்திற்காக அழைத்து வரப்பட்டு இடைக்கால முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களில் ஒரு தொகுதியினர் தங்களின் சொந்தக் காணிகளில் குடிறேமுடியாத நிலை எற்பட்டுள்ளது.

கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களின் கிழக்கு எல்லைகளிலுள்ள மயில்வாகனபுரம், குமாரசாமிபரம், ஆகிய கிராமங்களைச் சேர்ந்த மக்கள் நீண்டகாலமாக மீள்குடியேற்றப்படாமல் இடைக்கால முகாம்களிலேயே தொடர்ந்தும் தங்கவைக்கபட்டுள்ளனர். மேற்படிக் கிராமங்களுக்கு அம்மக்கள் அதிகாரிகளால் மீள்குடியேற்றத்திற்காக அழைத்துச்செல்லப்பட்ட போதும், அங்குள்ள படையினரால் அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவிக்கின்றனர்.

இவ்விடயம் தொடர்பாக  தமிழ் தேசியக்கூட்டமைப்பினருக்கும் அடிக்கடி வன்னிக்கு விஜயம் செய்யும் ஜனாதிபதியின் புதல்வரான நாமல் ராஜபக்சவிற்கும் அறிவித்துள்ளதாகவும் பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவிக்கின்றனர்.

இதேவேளை, கிளிநொச்சி மாவட்டத்தைச் சேர்ந்த சாந்தபுரம், இந்துபுரம், பொன்னகர் பகுதிகளிலும் மக்கள் இன்னமும் மீள்குடியேற்றப்படாமல் இடைக்கால முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

”அம்பாறை தமிழ் பிரதேசத்தில் அமைந்துள்ள மதுபான சாலைகள் உடனடியாக மூடப்பட வேண்டும்!” TNA MP பியசேன

jj.jpgஅம்பாறை தமிழ் பிரதேசத்தில் அமைந்துள்ள மதுபான சாலைகள் உடனடியாக மூடப்பட வேண்டும் எனக்கோரி தமிழ் தேசியக் கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பியசேன ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிற்கு அவசர கடிதம் ஒன்றை அனுப்பிவைத்துள்ளார்.

”அம்பாறை கரையோரத் தமிழ் பிரதேசங்களில் மட்டும் 15 இற்கும் மேற்பட்ட மதுபான சாலைகள் இருப்பதாகவும், சுனாமியினாலும் வன்முறைகளாலும் பெரிதும் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களை மேலும் நலிவடையச் செய்ய இம் மதுபான சாலைகள் துணை போகின்றன எனவும், இவை மூடப்படவேண்டுமெனவும் அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அம்பாறை மாவட்டங்களில் தமிழ் சிங்களப் பிரதேசங்களில் மட்டுமே மதுபான சாலைகள் அதிகமுள்ளன. தமிழ், சிங்கள தனவந்தர்கள் மட்டுமே இம் மதுபான சாலைகளை நடத்திவருகின்றனர். முஸலிம்கள் இவ்வாறான தொழிலில் ஈடுபடவில்லை. தமிழ் பிரதேசங்களை கருவறுப்பதற்காக அரசியல்வாதிகள் இதற்கான அனுமதியை வழங்கி வருகின்றனர்.

கல்முனையில் நகர மத்தியில் உயர்நீதிமன்றம். மாவட்ட நீதிமன்றம். ஆதார வைத்தியசாலை, உயர் கல்விநிலையம், ஆகியவற்றின் மத்தியில் மதுபான சாலைகள் அமைக்க அனுமதி வழங்கப்பட்துள்ளது. காரைதீவிலும் நாவிதன்வெளி, திருக்கோவில், ஆலையடிவேம்பு, ஆகிய பகுதிகளிலும் மதுபான சாலைகள் உள்ளன.

ஆனால், ஒரு முஸ்லிம் கிராமத்திலும் மதுபான சாலைகள் இல்லை எனபது மகிழ்ச்சிக்குரிய விடயமாகும்.

அம்பாறை கரையோரப் பகுதிகளில் ஒரு தொழிற்சாலை உள்ளதா? அதற்கு அனுமதி வழங்கப்பட்டதா? என்றால் இல்லை. காரைதீவு கிராமத்திற்கு எரிபொருள் நிரப்பு நிலையம் அமைக்க அனுமதி கேட்டு வருடக் கணக்காகின்ற நிலையில் இன்னும் அனுமதி இல்லை. ஆனால் மதுபான சாலைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இம்மதுபான சாலைகளால் தினமும் சண்டை சச்சரவுகள் இடம்பெறுகின்றன. பாடசாலை மாணவர்கள் கூட மதுப் பழக்கத்திற்கு ஆளாகி வருகின்றனர். அடிக்கடி வீதி விபத்துக்களும் எற்படுகின்றன. மதுவினால் பல குடும்பங்களில் பிரச்சினைகளும் ஏற்பட்டு வருகின்றன.”

இவ்வாறு ஜனாதிபதிக்கு அனுப்பிய கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

போரின் பின் கிளிநொச்சி மாவட்டத்தில் நெற்செய்கை செய்யப்படும் நிலப்பரப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.!

Paddy_Fieldsபோரின் பின் மக்கள் மீள்குடியமர்ந்துள்ள நிலையில், கிளிநொச்சி மாவட்டத்தில் இம்முறை ஆறாயிரத்து 219 ஏக்கர் நிலத்தில் சிறு போக நெற்செய்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கிளிநொச்சி கமநல சேவைத்திணைக்கள உதவி ஆணையாளர் இ. இதயரூபன் தெரிவித்துள்ளார். எதிhவரும் பெரும்போகத்தில் 48 ஆயிரம் ஏக்கரில் நெற்செய்கை மேறகொள்ளப்படும் எனவும் கமநல சேவைத்திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, கிளிநொச்சி மாவட்டத்தில் நான்கு உரக்களஞ்சியங்கள் புதிதாக அமைக்கப்பட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. எற்கனவே புளியம்பொக்கணை, இராமநாதபரம் ஆகிய இடங்களில்  அமைக்கப்பட்டிருந்த உரக்களஞ்சியங்கள் போரினால் சேதடைந்துள்ள நிலையில், இவற்றைப் புனரமைப்பு செய்வதுடன் புதிதாக கிளிநொச்சி. பூனகரி, முழங்காவில், அக்கராயன்குளம், ஆகிய இடங்களில் உரக்களஞ்சியங்கள் அமைக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணத்தில் மூன்று சிங்கள வர்த்தகர்கள் தாக்கப்பட்டனர்!

தென்பகுதியிலிருந்து வந்த சிங்கள வர்த்தகர்களில் மூவர் இன்று யாழ்ப்பாணத்தில் இனந்தெரியாதவர்களினால் வெட்டுக் காயங்களுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர். இன்று திங்கட்கிழமை இரவு 7மணியளவில் தலைக்கவசம் அணிந்து, முகத்தைக் கறுப்புத்தணிகளால் மறைத்தபடி மோட்டார் சைக்கிளில் வந்த குழுவொன்று இத்தாக்குதலை மேற்கொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

 யாழ். கொக்குவில் ஆடியபாதம் வீதி, அம்பட்டப்பாலம் அருகில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறித்த வர்த்தகர்கள் வந்த லொறியொன்று எரிக்கப்பட்டதாகவும். அதனை அவ்விட்திற்கு வந்த படையினர் அணைத்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வெட்டுக்காயங்களுக்கு உள்ளான மூவரும் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். வர்த்தகர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள வியாபார போட்டிகள் காரணமாக இத்தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம் என நம்பப்படுகின்றது.

இச்சம்பவத்தின் பின்னர் அப்பகுதிகளில் இராணுவத்தினர் குவிக்கப்பட்டதோடு, அப்பகுதியால் பயணம் செய்வோர் சோதனையிடப்பட்டனர். இச்சம்பவத்தின் பின்னர் அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் அச்சத்துடன் காணப்பட்டனர்.

யாழ். நோக்கிய சிங்கள சுற்றுலாப் பயணிகளின் வருகை தற்போது அதிகரித்துள்ளது.

Jaffna_HandBag_Shopயாழ்ப் பாணத்தில் நல்லூர் உட்பட பல கோவில்களில் திருவிழாக்கள் ஆரம்பமாகியுள்ள சூழலில் தென்பகுதிகளிலிருந்து வரும் சிங்கள சுற்றுலாப் பயணிகளின் தொகை அதிகரித்துள்ளது. பாடசாலை விடுமுறைக் காலமாகையால் தென்பகுதி சிங்கள மாணவர்களும் தங்கள் பெற்றோர் உறவினர்களுடன் அதிளவில் யாழ்ப்பாணத்திற்கு வருகை தருகின்றமையை அவதானிக்க முடிகின்றது.

வடக்கில் கிளிநொச்சி இரணைமடுக்குளம், ஆனையிறவு முகாம் பகுதிகள் என்பன தென்பகுதி சிங்கள மக்களின் அவதானத்திற்குரிய முக்கிய இடங்களாகவுள்ளன. வடக்கில் ஏ-9 பாதையின் ஓரங்களில் பல இடங்களில் சுற்றுலாப் பயணிகள் தங்கி ஒய்வெடுப்பதற்கான இடங்கள், அவர்களுக்கான மலசலக்கூடங்கள் என்பன படைத்தரப்பால் அமைக்கப்பட்டுள்ளன.

யாழ்ப்பாணத்தில் நல்லூர். நாகவிகாரை, காரைநகர் கசோரினா கடற்கரை, கீரிமலை, கந்தரோடை, செல்லச்சந்நதி, நயினாதீவு ஆகிய இடங்களில் அதிகளவான சுற்றுலாப்பயணிகளை தற்போது காணமுடிகிறது.