விஸ்வா

விஸ்வா

வடமராட்சிக் கிழக்கில் மீள்குடியேற்றப்பட்ட குடும்பங்களிலுள்ள பெண்கள் மீது படையினர் தவறாக நடக்க முயற்சி.

யாழ்.வடமராட்சிப் பகுதியில் அண்மையில் மீள்குடியமர்த்தப்பட்ட குடும்பங்களிலுள்ள பெண்கள் மீது அங்கு நிலைகொண்டுள்ள படைச்சிப்பாய்கள் தவறாக நடந்து கொள்ள முயல்வதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த வியாழக்கிழமை நடைபெற்ற சம்பவமொன்றில் இவ்வாறு தவறாக நடக்க முற்பட்ட சிப்பாய் ஒருவரை பொதுமக்கள் பிடித்து விடியும் வரை கட்டி வைத்தனர்.

வடமராட்சிக்கிழக்கு ஆழியவளை கொடுக்கிளாய் என்னுமிடத்தில் இரவு நேரத்தில் வீட்டில் உறங்கிக்கொண்டிருந்த குடும்பப் பெண்ணொருவரிடம் தவறாக நடக்க முற்பட்ட படைச்சிப்பாயே இவ்வாறு பிடிபட்டார். இரவில் மக்கள் உறங்கிக்கொண்டிருந்த வேளை. அவர் வீடொன்றிற்குள் நுழைய முற்பட்டுள்ளார். அவ்வீட்டிலுள்ளவர்கள் கூச்சலிட்டபோது வெளியேறி இன்னொரு வீட்டுக்குள் நுழைந்துள்ளார். அவ்வீடாரும் கூச்சலிட்ட போது அங்கிருந்தும் ஓடியுள்ளார். சிறிது நேரத்தின் பின்னர் சற்றுத் தொலைவிலுள்ள வீடொன்றிற்குள் நுழைந்து உறங்கிக் கொண்டிருந்த கணவனை சத்தமிடாமல் கடந்து, வீட்டின் விளக்கை அணைத்துவிட்டு உறங்கிக் கொண்டிருந்த பெண்ணை நெருங்கியுள்ளார். அச்சமயம் விழித்துக் கொண்ட அப்பெண் கூச்சலிட்ட போது அயல் வீடுகளிலிருந்தவர்கள் கூடி தப்பியோட முற்பட்ட சிப்பாயை பிடித்து ஒரு கதிரையுடன் கட்டிப்போட்டுள்ளனர். விடிந்ததும் அப்பகுதி இராணுவ முகாம் பொறுப்பதிகாரியிடம் சம்பந்தப்பட்ட சிப்பாய் ஒப்படைக்கப்பட்டார்.

அண்மையில் மீள்குடியேற்றம் செய்யப்பட்ட வடமராட்சிக்கிழக்குப் பகுதிகளில் எவ்வித மின்சார வசதிகளுமின்றி கூடாரங்கள், தற்காலிக வீடுகளில் தங்கியுள்ள மக்கள் இவ்வாறான சம்பவங்களால் இரவு வேளைகளில் அச்சத்துடன் பொழுதைக் கழிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

அமைச்சர் ரிசாத் பதியுதீன் கிளிநொச்சி, யாழ்ப்பாணம் பகுதிகளுக்குச் சென்று முஸ்லிம்களின் நிலமைகளை ஆராய்ந்தார்.

Risath_Bathiyutheen_Ministerவர்த்தக மற்றும், கைத்தொழில் அமைச்சர் ரிசாத் பதியுதீன் நேற்று வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணம் கிளிநொச்சி பகுதிகளுக்கு விஜயம் செய்து அங்குள்ள முஸ்லிம் மக்களின் நலன் குறித்து ஆராய்ந்தார். யாழ்ப்பாணத்தில் 20 வருடங்களுக்குப்பின் நேற்று மானிப்பாய்   வீதியிலுள்ள பெரிய முகைதீன் பள்ளிவாசலில் இடம்பெற்ற ஜும்ஆ வழிபாட்டு நிகழ்வில் கலந்து கொண்டதுடன், கோப்பாய் ஆசிரியப் பயிற்சிக் கல்லூரியில் நடைபெற்ற இஸ்லாமிய கலை நிகழ்வில் பங்கு பற்றியதோடு, யாழ். ஒஸ்மானியாக் கல்லூரிக்குச் சென்று அங்கு முஸ்லிம் மக்களுடன் கலந்துரையாடி அவர்களின் பிரிச்சினைகள் குறித்தும் கேட்டறிந்தார். அங்கு முஸ்லிம் பள்ளிவாசல் காணியில் வசிக்கும் எட்டு குடும்பங்களுக்கு நிரந்தரமாக வசிப்பதற்கு உரிய நடவடிக்கைகள் எடுப்பதாகவும் உறுதியளித்தார்.

பின்னர் யாழ்.சோனகத்தெருவிற்கு சென்று அங்குள்ள வீதிகளை அபிவிருத்தி செய்தல், வடிகால் புனரமைப்பு, மின்சார வசதிகளை சீர்செய்தல் முதலான பணிகள் குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்ககு பணிப்புரை விடுத்தார்.

யாழ்.வருவதற்கு முன்னதாக கிளிநொச்சிக்குச் சென்ற அமைச்சர் முஸ்லிம் மக்கள் வாழும் பகுதிகளான நாச்சிக்குடாவிற்குச் சென்று அங்குள்ள முஸ்லிம் மக்களின் பிரச்சினைகள் குறித்து கேட்டறிந்தார்.

யாழ்ப்பாணத்தில் ஊடகவியலாளர்களுக்கு அவர் கருத்துத் தெரிவிக்கையில் அடுத்த மாதம் 10ஆம் திகதி யாழ். மாநகரசபையின் பிரதி மேயராக முஸ்லிம் ஒருவர் பதவியேற்கவுள்ளதாகவும், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுடன் செய்துகொண்ட உடன்படிக்கையின் படி ஒரு வருடத்தின் பின் பிரதி மேயர் பதவியை முஸ்லிம் ஒருவருக்கு வழங்குவது என முடிவெடுக்கப் பட்டமையையும் குறிப்பிட்டார். இந்த ஒப்பந்தத்தை  அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிற்கு நினைவு படுத்துவதற்காக தாம் யாழ்ப்பாணம் வந்ததாகவும் அவர் தெரிவித்தார்.

எழுதுமட்டுவாழ் பகுதிகளில் பொதுமக்களின் பல வீடுகள் அழிக்கப்பட்டுள்ளன.

தென்மராட்சி எழுதுமட்டுவாழ் பகுதியில் 15 நாட்களுக்கு முன்னர் காணப்பட்ட வீடுகள் தற்போது அழிக்கப்பட்டுள்ளதாக எழுதுமட்டுவாழ் மக்கள் தெரிவிக்கின்றனர்.

எழுதுமட்டுவாழ் பகுதியிலிருந்து இடம்பெயர்ந்து வாழும் மக்கள் தங்களது வீடுகளை பார்வையிடுவதற்காக சென்ற போது நாகர்கோவில் வீதியிலிருந்த 267 வீடுகளில் இரு வீடுகள் தவிர்ந்த ஏனைய வீடுகள் முற்றாக அழிவடைந்துள்ளதாக தெரிவித்தனர். தங்கள் காணிகளிலிருந்த பயன்தரு மரங்களும் தறிக்கப்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். தங்கள் குடியிருப்புக்கள் மழைய நிலைக்குத் திரும்ப நீண்டகாலம் எடுக்கும் எனவும் இம்மக்கள் கவலையுடன் தெரிவித்தனர்.

யாழ்ப்பாணத்தில் மாற்று வலுவுள்ளோர் சாரதி அனுமதிப் பத்திரங்களுக்கு விண்ணப்பம்.

Jaipur_Artificial_Limbயாழ்ப்பாணத்தில் மாற்று வலுவுள்ளோர் (ஊனமுற்றோர்) சாரதி அனுமதிப்பத்திரம் பெற்றுக்கொள்ள விண்ணப்பித்துள்ளதாக யாழ்ப்பாணத்தில் செயற்கை உறுப்புக்களை வழங்கும் ஜெய்ப்பூர் நிறுவன அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

250 மாற்று வலுவுள்ளோர்  சாரதி அனுமதிப் பத்திரத்திற்கு விண்ணப்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விசேட பொறிமுறையின் கீழ் மாற்று வலுவுள்ளோருக்கு சாரதி அனுமதிப் பத்திரங்களை வழங்கும் அதிகாரி, இவ்வாறானோருக்கு  மருத்துவ சான்றிதழ்களை வழங்கும் மருத்துவ அதிகாரி ஆகியோர் கொழும்பிலேயே இருப்பதால் யாழ்ப்பாணத்தில் பரீட்சைகளை நடத்துவதில் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே இவ்வதிகாரிகள் யாழப்பாணத்திற்கு வருகை தந்து மாற்று வலுவுள்ளோருக்கான சாரதி பரீட்சைகளை நடத்த வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

உடும்பு கொண்டு சென்றவருக்கு 10 ஆயிரம் ரூபா அபராதம்.

உடும்பு கொண்டு சென்ற நபர் ஒருவருக்கு சாவகச்சேரி நீதிமன்றம் 10 ஆயிரம் ரூபா அபராதம் விதித்துள்ளது. தமது காணியைத் துப்புரவாக்கிய போது அங்கு காணப்பட்ட உடும்பு ஒன்றைப் பிடித்து வீட்டிற்கு கொண்டு செல்லும் வழியில் பொலிஸாரிடம் அவர் சிக்கிக்கொண்டார். கொடிகாமம் பொலிசார் மிருகவதைச் சட்டத்தின் கீழ் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்தனர்.

இவ்வழக்கை விசாரித்த நீதவான் எம்.எம். அப்துல்லா குறித்த நபர் குற்றத்தை ஒப்புக்கொண்டதன் பின்பு 10 ஆயிரம் ரூபா அபராதம் விதித்ததோடு உடும்பை விடுவிக்குமாறும் உத்தரவிட்டார்.
வடக்கின் கிராமங்களில் காணப்படும் உடும்புகளைப் பிடித்து இறைச்சியாக்கி உண்பது கிராம மக்களின் சாதாரண பழக்க வழக்கமாகவுள்ள நிலையில்,  உடும்பைப் பிடித்தால் மிருகவதைச் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவதோடு அபராதமும் விதிக்கப்படும் என்பது சாதாரண கிராம மக்களுக்கு தெரியாது என்பது குறிப்பிடத்தக்கது.

சர்வதேச செஞ்சிலுவைச் சங்கக் குழுவினர் வடமராட்சிப் பகுதிக்கு வரவுள்ளனர்.

ICRC_Logoசர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் பிரதிநிதிகள் குழுவினர் எதிர்வரும் 18ஆம் திகதி யாழப்பாணத்திற்கு வந்து வடமராட்சிப் பகுதியில் மக்கள் மீள்குடியேற்றப்பட்ட பகுதிகளை பார்வையிடவுள்ளனர். 21ஆம் திகதி வரை இப்பகுதிகளைப் பார்வையிடும் செஞ்சிலுவைச் சங்கத்தின் சர்வதேசக்குழுவினர் வடமராட்சியில் 1.6 மில்லியன் நிதிச்செலவில் குடிநீர்விநியோகத்திட்டம் ஒன்றை தேசிய வடிகாலமைப்புச்சபையுடன் இணைந்து செயற்படுத்தவுள்ளமை குறித்தும்  ஆராயவுள்ளனர்.

அவுஸ்திரேலிய செஞ்சிலுவைச்சங்கம் வடமராட்சிக்கிழக்கில் மீள்குடியமர்ந்தவர்களுக்கு வழங்குவதற்கென கட்டப்பட்டு பின் இடைநிறுத்தப்பட்ட வீடைப்புத் திட்டத்தை மீளவும் தொடர்வதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை செஞ்சிலுவைச்சங்கத்தின் யாழ்.பிரிவின் செயலாளர் எஸ்.பாலகிருஸ்ணன் இத்தகவல்களை தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சியில் நாளொன்றுக்கு நால்வர் தற்கொலை செய்கின்றனர். அல்லது தற்கொலை முயற்சியில் இறங்குகின்றனர்.

Stop_Sucideகிளி நொச்சியில் யுத்தத்தின் விளைவாக தற்கொலை முயற்சிகள் அதிகரித்துள்ளன. கிளிநொச்சியில் தற்கொலை முயற்சியிலீடுபடுபவர்களின் தொகை அதிகரித்துள்ளதாக கிளிநொச்சி மாவட்ட மனநல மருத்துவர் மா.ஜெயராஜா தெரிவித்துள்ளார். நாளொன்றிற்கு நான்கு பேர் தற்கொலை அல்லது தற்கொலை முயற்சிகளில் ஈடுபடுவதாகவும், யுத்தத்தின் பின்னான விரக்தி இல்லது மனநோய் இதற்கு காரணமாக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். யுத்தத்தின் போது கணவரை இழந்த விதவைகள், காணாமல் போனோரின் மனைவிமார் அதிகமாக தற்கொலை முயற்சியில் ஈடுபடுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி மாவட்டத்தில் யுத்தத்திற்கு முன் மனநோயாளிகளாக இருந்த 300 பேரில் நூறு பேர் காணாமல் போயுள்ளனர். யுத்தத்தினால் மனநோயாளிகளாகியுள்ள மற்றும், பாடசாலைகளுக்குச் செல்லாத மாணவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்துள்ளது. தற்போது ஐந்நூறு மனநோயாளிகள் கிளிநொச்சி மாவட்டத்திலுள்ளனர். இவர்களின் இந்நிலைக்கு இவர்களது நெருங்கிய உறவினர்கள் காணாமல் போயுள்ளமையும், இடப்பெயர்வுகளினால் ஏற்பட்ட துன்பங்களுமே காரணம் என இவர்களுடன் உரையாடுகின்ற பொது தெரியவருகின்றது.  மனநோயாளிகள் தங்கவைக்கபட்டுள்ள கிளிநொச்சி பொது வைத்தியசாலையின் மாடியிலுள்ள 2ஆம் விடுதியிலிருந்து பாய்ந்து தற்கொலை செய்து கொள்ள பலர் முயன்றுள்ளனர். – இவ்வாறு அவர் மேலும் தெரிவித்தார்.

வடமாகாணசபை அலுவலகத்தை நாவற்குழியில் இயங்க வைப்பதற்கு ஆலோசனை.

வடமாகாண சபை அலுவலகத்தை யாழ். நாவற்குழியில் இயக்கலாம் என ஆலோசனை முன்வைக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி அறிவியல்நகரில் வடமாகாணசபை அலுவலகத்தை அமைப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டிருந்த போதும் அங்கு மாகாண சபை தற்போது இயங்கவதிலுள்ள சிக்கல்கள் குறித்து மாகாணசபையின் பிரதம செயலாளர்கள், அமைச்சுச் செயலாளர்கள் மற்றும் அதிகாரிகளின் கலந்துரையாடல்களின் போது இவ்வாலோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.

மாகாண சபையின் அலுவலங்களை கிளிநொச்சியில் இயங்க வைப்பதிலுள்ள சிக்கல்களை எடுத்துக்கூறி யாழ்ப்பாணம் அல்லது வவனியாவில் அதை அமைக்கலாம் எனவும் ஆலோசனையின் போது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. எனினும் இறுதி முடிவு எதுவும் இது வரை எட்டப்பட்டவில்லை.

கிழக்கில் ஆழ்கடல் மீன்பிடிக்க அனுமதிப்பத்திரம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

Fishing_in_Jaffnaகிழக்கு மாகாணத்தில் ஆழ்கடலில் மீன்பிடிக்கச் செல்பவர்கள்  அனுமதிப்பத்திரம் வைத்திருப்பது கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது.  மட்டக்களப்பு மாவட்ட கடற்றொழில் திணைக்கள காரியாலயத்தில்  இதற்கான அனுமதிப் பத்திரம் பெற்றுக்கொள்ளப்பட வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

படகுகளுக்கான அனுமதிப்பத்திர பரிசோதனைகள் வாழைச்சேனை துறைமுக முகாமிலும், பேத்தாழை கடற்படை முகாமிலும் மேற்கொள்ளப்படுகின்றது. மட்டக்களப்பு மாவட்டத்தில் மட்டும் ஆழ்கடல் மீன்பிடிப்புக்காக 800 ஆழ்கடல் மீனவர்கள் மீனவ அடையாள அட்டைகளுக்காக விண்ணப்பித்துள்ளதாகவும் 500 இயந்திரப்படகுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. மீனவ அடையாள அட்டைக்கு விண்ணப்பித்தவர்களில் 300பேருக்கு மட்டுமே அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளதாக கடற்றொழில் திணைக்களத்தின் மட்டக்களப்பு மாவட்ட பிரதிப் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

போர் நடைபெற்றுக் கொண்டிருந்த காலங்களில் வடக்கு கிழக்குப் பகுதிகளிலுள்ள மீனவர்களுக்கு ஆழ்கடல் மீன்பிடிப்புக்குத் தடை விதிக்கப்பட்டிருந்தமையும், மீன் பிடித்தொழில்களை மேற்கொள்வதில் பல்வேறு நெருக்கடிகள் அவர்களுக்கு ஏறபடுத்தப்பட்டிருந்தமையும் இங்கு குறிப்படத்தக்கது.

வலி. வடக்கிலிருந்து இடம்பெயர்ந்து வாழும் மக்களுக்கு மூன்று மாதங்களாக நிவாரணம் இல்லை.

வலிகாமம் வடக்கிலிருந்து இடம்பெயர்ந்து அகதி முகாம்களில் வாழ்ந்து வரும் மக்களுக்கு கடந்த மூன்று மாதங்களாக நிவாரண உணவப்பொருட்கள் வழங்கப்படவில்லை. நிவாரண உதவிகளிலேயே தங்கி வாழும் இம்மக்கள் இதனால் பெரும் துன்பங்களுக்குள்ளாகியுள்ளனர். தங்களது பங்கீட்டு அட்டைகள் மீளாய்வு செய்யப்பட்டு இருமாதங்களுக்கு மேலாகியும் நிவாரணம் வழங்கப்படவில்லை என அம்மக்கள் தெரிவிக்கின்றனர்.

வுலி.வடக்கிலிருந்து இடம்பெயர்ந்த மக்கள் இருபது வருடங்களாக அகதி முகாம்களிலும், உறவினர் மற்றும், வாடகை வீடுகளிலும் தங்கி வாழ்ந்து வருகின்றனர். பல குடும்பங்கள் தொழிலின்றி வருமானமின்றி நிவாரணத்தை மட்டுமே நம்பி வாழ்கின்றன. இந்நிவாரணம் வழங்குவதில் எற்பட்டுள்ள தாமதம் காரணமாக இம்மக்கள் மிகவும் பாதிப்படைந்துள்ளனர்.