விஸ்வா

விஸ்வா

வடமாகாண அபிவிருத்தி தொடர்பான கூட்டத்தில் ஜனாதிபதி கலந்து கொள்ளவுள்ளார்.

வடமாகாண அபிவிருத்தி தொடர்பான கூட்டம் வவுனியாவில் நடைபெறவுள்ளதாகவும் அதில் ஜனாதிபதி கலந்து கொள்வார் எனவும் யாழ்.அரச அதிபர் திருமதி இமெல்டா சுகுமார் தெரிவித்துள்ளார். நேற்று திங்கள் கிழமை மாலை யாழ். செயலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது அரச அதிபர் இத்தகவலைத் தெரிவித்தார்

எதிர்வரும் 19ஆம் திகதி நடைபெறவுள்ள வடமாகாண அபிவிருத்தி தொடர்பான கூட்டத்தில் ஜனாதிபதி கலந்து கொள்ளவுள்ளதால் அதற்கான முன்னேற்பாடுகள் தொடர்பான கூட்டம் நேற்று யாழ். செயலகத்தில் நடைபெற்றது. நேற்று நடைபெற்ற இக்கூட்டத்திற்கு அமைச்சர் டகளஸ் தேவானந்தா தலைமை வகித்தார். வடமாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறி, நாடாளுமன்ற உறுப்பினர் மு.சந்திரகுமார், யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, மன்னார் ஆகிய மாவட்டங்களின் அரச அதிபர்கள் ஆகியோர் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

தங்கள் மாவட்டங்களின் பிரச்சினைகளை விளக்கிக் கூறுவதற்கு ஒவ்வொரு அரச அதிபருக்கும் பத்து நிமிடங்கள் ஒதுக்கப்படும் எனவும், நாளை புதன்கிழமை வவுனியாவிற்கு ஜனாதிபதி செயலக அதிகாரிகள் வரவுள்ளதாகவும், அபிருத்தி தொடர்பான கூட்டத்தில் கலந்துரையாடவுள்ள விடயங்கள் குறித்து அவர்களுக்கு முன்கூட்டியே தெரிவிக்கப்படும் எனவும் யாழ்.அரச அதிபர் தெரிவித்துள்ளார்.

யாழ்.வந்துள்ள சிங்கள மக்களில் ஒரு குழுவினர் தங்களுக்கு யாழ்.வைத்தியசாலையில் தொழில் வாய்ப்பு தருமாறு கோரிக்கை!

யாழ்ப்பாணத்தில் மீள்குடியேறுவதற்கு என வந்து யாழ்.புகையிதை நிலையத்தில் தங்கியுள்ள சிங்கள மக்களில் ஒரு குழுவினர் நேற்று திங்கள்கிழமை யாழ். போதனா வைத்திசாலைக்குச் சென்று தங்களுக்கு யாழ்.வைத்தியசாலையில் வேலை வாய்ப்பு பெற்றுத்தர வேண்டும் என கோரியுள்ளனர்.

யாழ்.புகையிரத நிலையத்தில் தங்கியுள்ளவர்களில் ஒரு குழுவினர் மல்காந்தி என்பவர் தலைமையில் யாழ். வைத்தியசாலைக்குச் சென்று வைத்தியசாலைப் பணிப்பாளர் திருமதி பவானி அவர்களைச் சந்தித்து தங்கள் பெயர் விபரங்கள், கல்விச்சான்றிதழ்கள் என்பவற்றைக் காட்டி தங்களுக்கு வேலைவாய்ப்பு வேண்டும் எனக் கோரியதாக தெரிவிக்கப்படுகிறது.

வேலைவாய்ப்புகளை வழங்கும் பணியினை சுகாதார அமைச்சுத்தான் மேற்கொள்ளும் என வைத்தியசாலை நிர்வாகம் அவர்களுக்கு விளக்கமளித்து அனுப்பிவைத்ததாகவும் தெரியவருகின்றது.

கிழக்கு மாகாண காணிப் பிரச்சினைகள் குறித்து நல்லிணக்க ஆணைக்குழுவின் முன் முஸ்லிம்கள் சாட்சியம்.

கிழக்கு மாகாணத்தின் காணிப் பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டும் என முஸ்லிம்கள் நல்லிணக்க ஆணைக்குழுவின் முன் கருத்துக்களை முன்வைத்துள்ளனர். நேற்று மட்டக்களப்பு ஓட்டமாவடியில் நடைபெற்ற நல்லிணக்க ஆணைக்குழுவின் அமர்வின் போது சாட்சியமளிக்க முன்வந்த முஸ்லிம்கள் தமிழ், முஸ்லிம் மக்களிடையே கிழக்கில் நிலவும் காணிப் பிரச்சினைகள் குறித்தே அதிகம் சாட்சியமளித்தனர். யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்த முஸ்லிம் மக்களின் மீள்குடியேற்றம் தொடர்பாக எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து தனிப்பட்ட ரீதியாகவும், அமைப்பு ரீதியாகவும் கணிசமான முஸ்லிம்கள் சாட்சிமளித்தனர்.

 மட்டக்களப்பு மாவட்டத்தில் 26 சதவீத முஸ்லிம்கள் வாழ்கின்றனர் ஆனால், அவர்கள் 22சதுர கிலோ மீற்றர் நிலப்பரப்பிற்குள்தான் முடங்கிக் கிடக்கின்றனர் எனவும், இம்மாவட்டத்தில் காணிப் பிரச்சினைகள் குறித்து விரைவாக தீர்வு காணப்படாவிட்டால் எதிர்காலத்தில் தமிழ், முஸ்லிம் மக்களிடையே பாரிய இன வன்முறைகள் ஏற்படுவது தவிர்க்க முடியாததாகிவிடும் எனவும் ஓட்டமாவடி ரகுமத் பள்ளிவாசல் நிர்வாகசபை செயலாளர் ஐ.எல்.டி.சாகிபு சாட்சியமளிக்கையில் தெரிவித்தார்.

 வாகரைப் பிரதேசத்திலுள்ள முஸ்லிம்கள் 1985, 1990 ஆண்டுக் காலப்பகுதியில் ஏற்பட்ட இன வன்முறைகளின் போது வெளியேறியதையடுத்து அவர்களுக்கு சொந்தமான காணிகளில் தமிழர்கள் குடியிருப்புக்களை அமைத்து வசித்து வருகின்றனர் எனவும், தமிழர்கள் அக்காணிகளை அபகரித்துள்ளனர் எனவும், இப்பகுதி முஸ்லிம் மக்களின் மீள்குடியேற்றம் மிக அவசியமானது என்றும் விவசாயியான எம்.பி. முஸ்தபா என்பவர் சாட்சியமளிக்கையில் குறிப்பிட்டார்.

இந்த அமர்வில் சாட்சியமளித்த தமிழர்கள் பலர் காணாமல் போன தமது உறவினர்கள் குறித்தே சாட்சியமளித்தனர். மட்டக்களப்பில் நல்லிணக்க ஆணைக்குழுவின் அமர்வுகள். சிரேஸ்ட புலி உறுப்பினர்களின் மனைவிமார் உட்பட பலர் சாட்சியமளித்தனர்.

காணிப் பிரச்சினைகள் தொடர்பாக தமிழர்கள் எவரும் கருத்துக்களை தெரிவிக்கவில்லை. இதே வேளை, காணாமல் போனவர்கள் தொடர்பாக நான்கு பேர் இரகசிய சாட்சியங்களை ஆணைக்குழுவின் முன் அளித்தனர்.

 மட்டக்களப்பு மாவட்டத்தில் நேற்று இரண்டாவது நாளாக படிப்பினைகள் மற்றும், நல்லிணக்க ஆணைக்குழுவின் அமர்வுகள் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

கட்சி மாறிய MP பியசேன மீது நடவடிக்கை எடுக்குமாறு அம்பாறை மக்கள் கோரியுள்ளதாக TNA தெரிவிப்பு.

jj.jpgதமிழ் தேசியக்கூட்டமைப்பிலிருந்து அரசதரப்பிற்கு மாறிய நாடாளுமன்ற உறுப்பினர் பொடியப்பு பியசேன மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்குமாறு அம்பாறை மாவட்ட  மக்கள் தங்களிடம் கோரியதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர். ( நயவஞ்சக அரசியலின் நாயகர்கள்! : யூட் ரட்ணசிங்கம். )

அம்பாறை மாவட்டத்திற்கு விஜயம் செய்த கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, எம்.ஏ. சுமந்திரன், பா.அரியநேத்திரன், எஸ்.சிறீதரன், பொன். செல்வராசா ஆகியோர் கல்முனை பிரதேச மக்களை நேற்று ஞாயிற்றுக்கிழமை சந்தித்த போது அவர்கள் இவ்வாறு தங்களிடம் வேண்டுகோள் விடுத்ததாக இந்நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர். அம்பாறை மாவட்டத்திலுள்ள தமிழ் மக்களின் வாக்குகளைப் பெற்று நாடாளுமன்றத்திற்கு தெரிவான பியசேன தனது சுயநலத்திற்காக அரசுடன் இணைந்து கொண்டமைக்கு எதிராக கூட்டமைப்பு ஒழுக்காற்று நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும் என்று அம்மக்கள் தங்களிடம் தெரிவித்தாக கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.

யாழ். மாவட்டத்தில் 11 ஆயிரத்து 788 ஹெக்ரேயர் நிலப்பரப்பில் நெற்செய்கை! 1900 ஏக்கரில் இம்முறை காலபோக நெற்செய்கை மேற்கொள்ள முடியாத நிலை.

Paddy_Fields_Jaffnaயாழ். குடாநாட்டில் வெடிபொருட்கள் அகற்றப்படாத மற்றும், படையினரிடமிருந்து விடுவிக்கப்படாத சுமார் 1900 ஏக்கர் நிலப்பரப்பில் இம்முறை காலபோக நெற்செய்கை மேற்கொள்ள முடியாத நிலை எற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வடமராட்சிக் கிழக்கில் இடம்பெயர்ந்த மக்கள் மீள்குடியேற்றப்பட்டுள்ள நிலையிலும் மருதங்கேணி உதவி அரசாங்க அதிபர் பிரிவில் 700 ஏக்கர் நெற்செய்கை மேற்கொள்ளக்கூடிய நிலப்பரப்பு விடுவிக்கப்படாமலுள்ளது. நாகர்கோவில் தெற்கில் 150 ஏக்கரும், நித்தியவெட்டையில் 150 ஏக்கரும், போக்கருப்பு பகுதியில் 400 ஏக்கருமாக இந்நிலப்பரப்பு அடங்குகின்றது.

இதே வேளை, தென்மராட்சியில் தனங்கிளப்பு பகுதியில் 800 ஏக்கர் நிலப்பரப்பும், எழுதமட்டுவாழ் தெற்கில் 400 ஏக்கர் நிலப்பரப்பும் படையிரால் விடுவிக்கப்பட்டுள்ள போதும், இந்நிலப்பரப்பில் இன்னமும் மிதிவெடிகள் அகற்றப்படவில்லை. இதனால் அங்கும் விவசாயிகள் இம்முறை கால போக நெற்செய்கையை மேற்கொள்ளமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

எனினும் இம்முறை யாழ்.மாவட்டத்தில் 11 ஆயிரத்து 788 ஹெக்ரேயர் நிலப்பரப்பில் நெற்செய்கை மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒட்டுசுட்டானில் பொதுமக்களின் வீடுகளில் இன்னமும் இராணுவம் உள்ளதால் சிலரின் மீள்குடியேற்றம் தாமதம்.

முல்லைத்தீவு மாவட்டம் ஒட்டுசுட்டான் பிரதேசத்தில் இடம்பெயர்ந்த மக்கள் மீள்குடியேற்றப்பட்டுள்ள போதும் சிலரின் காணிகளில் படையினர் இருப்பதால் அவர்கள் தங்களின் சொந்தக் காணிகளுக்குள் செல்ல முடியாத நிலையிலுள்ளனர்.

 ஒட்டுசுட்டான் பகுதிகளில் அரசசார்பற்ற நிறுவனங்களால் தற்காலிக வீடுகள், கழிப்பறைகள் என்பன அமைத்துக் கொடுக்கப்பட்டு வரும் நிலையில், அவ்வுதவிகளைப் பெறமுடியாத நிலை மீள்குடியேற முடியாத மக்களுக்கு ஏற்பட்டுள்ளது. அத்துடன் தங்களின் நிலங்களில் பயிர்செய்கைகளை மேற்கொள்ள முடியாமலுள்ளதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.

ஓட்டுசுட்டான் பகுதியில் மீள்குடியேற முடியாத நிலையிலுள்ள மக்கள் தற்போது வவுனியாவிலும், வேறு இடங்களிலும் உறவினர் நண்பர்கள் வீடுகளில் தங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இரணைமடுவில் சர்வதேச விமான நிலையம் அமைக்க தீர்மானம்.

Iranaimadu_LTTE_Runwayகிளிநொச்சி இரணைமடுவில் விடுதலைப் புலிகள் பயன்படுத்திய விமான ஓடுதளம் அமைந்துள்ள பகுதியில் 70 மில்லியன் ரூபா செலவில் சர்வதேச விமான நிலையம் ஒன்றை அமைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Iranaimadu_LTTE_Runwayகுறித்த பிரதேசத்தில் புதைத்து வைக்கப்பட்டிருந்த சுமார் பத்தாயிரம் நிலக்கண்ணி வெடிகள் அகற்றப்பட்டு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இரணைமடுப் பகுதியில் தற்போதுள்ள விமான ஓடுபாதை 1.6 கிலோ மிற்றர் நீளமுடையது எனவும், இதனை 3கிலோ மீற்றராக அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமைக்கப்படவுள்ள இப்புதிய விமான நிலையத்திற்கு அருகில் சுற்றுலாப் பயணிகளுக்கான விடுதிகளும் அமைக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மலையக தமிழ் சிறுமிகள் அதிகளவு பாலியல் வல்லுறவிற்கு உள்ளாகின்றதாக தகவல்.

இலங்கையின் மலையகத் தோட்டப் பகுதிகளிலுள்ள அதிகளவு சிறுமிகள் பாலியல் வல்லுறவிற்கு உட்படுத்தப்பட்டு வருவதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. மிகவும் பின்தங்கிய நிலையில் வாழும் தோட்டப்புற மக்களின் பிள்ளைகளே இவ்வாறு பாலியல் வல்லுறவிற்கு உள்ளாவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

நாட்டில் நாளாந்தம் மூன்று சிறுமிகள் பாலியல் வல்லுறவிற்கு உட்படுத்தப்படுகின்றனர் என தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவி அனோமா திசாநாயக்க தெரிவித்துள்ளார். இவ்வருடம் யூன் மாதம் வரையிலான காலப்பகுதியில் 480 சிறுமிகள் பாலியல் வல்லுறவிற்கு உள்ளாகியுள்ளதாக பொலிஸ் தலைமையகத்தின் புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.  கடந்த வருடம் 925 முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. 

யுத்தத்தால் அவயவங்களை இழந்தோருக்கு செயற்கைக் கால்கள், சக்கரக் கதிரைகள் வழங்கப்பட்டன.

யுத்த அனர்த்தங்களால் அவயவங்களை இழந்தவர்களுக்கு யாழ்ப்பாணத்தில் சக்கர கதிரைகள், செயற்கைக் கால்கள் என்பன வழங்கப்பட்டன. நேற்று சனிக்கழமை கோப்பாய் ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையில் இந்நிகழ்வு நடைபெற்றது. 148 பேருக்கு செயற்கைக் கால்களும், 60 பேருக்கு சக்கர கதிரைகளும் வழங்கப்பட்டன.

கண்டியிலுள்ள மாற்றுவலுவுள்ளோர் சங்கத்தின் அனுசரணையுடன் 51வது படையணி மற்றும், 511வது படைப்பிரிவு தலைமையகத்தின் ஏற்பாட்டில் இந்நிகழ்வு இடம்பெற்றது. 511வது படைப்பிரிவின் பிரிகேடியர் கீர்த்தி கொஸ்தா தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வுக்கு யாழ்.மாட்ட இராணுவத்தளபதி மேஜர் ஜெனரல் மகிந்த ஹத்துருசிங்க பிரதம விருந்தினராக கலந்து கொண்டார்.

யாழ்.அரச அதிபர் திருமதி. இமெல்டா சுகுமார். கண்டி மாற்று வுலுவுள்ளோர் சங்கத்தின் தலைவர் சாமிலி பீரிஸ், 51வது படையணியின் பிரிகேடியர் ஜனக பல்கம உள்ளிட்ட பலர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர். கண்டி மாற்று வலுவுள்ளோர் சங்கம் யாழ் மாவட்டத்திலுள்ள வலுவிழந்த மக்களுக்கு வீட்டுத்திட்டமொன்றை அமைத்துக் கொடுக்கவுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

மட்டக்களப்பில் நல்லிணக்க ஆணைக்குழுவின் அமர்வுகள். சிரேஸ்ட புலி உறுப்பினர்களின் மனைவிமார் உட்பட பலர் சாட்சியமளித்தனர்.

படிப்பினைகள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அமர்வுகள் தற்போது மட்டக்களப்பில் நடைபெற்று வருகின்றன. நேற்று சனிக்கிழமை இடம்பெற்ற அமர்வின் போது விடுதலைப்புலிகள் அமைப்பின் சிரேஸ்ட உறுப்பினர்களின் மனைவிமார் மற்றும், முன்னாள் விடுதலைப்புலிப் போராளிகளின் உறவினர் என பலர் சாட்சியமளித்தனர். பலர் தங்கள் உறவினர்கள் எங்கிருக்கின்றார்கள் எனத்தெரியாத நிலையில் அவர்களை மீட்டுத்தருமாறு கோரினர். கிழக்கு மாகாணசபை உறுப்பினர் ஆர்.துரைரட்ணம், அமெரிக்கப் போதகரான எவ். மில்லர் உட்பட பல பொதுமக்களும் அங்கு சாட்சியமளிக்க அனுமதிக்கப்பட்டனர்.

விடுதலைப்புலிகளின் முன்னாள் இராணுவப் பேச்சாளர் இராசையா இளந்திரையனின் மனைவி வனிதா சிவரூபன் சாட்சியமளிக்கையில் தனது கணவனை மீட்டுத் தருமாறு கோரினார்.

தானும் கணவரும் பிள்ளைகளும் இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதியை நோக்கி வந்து கொண்டிருந்த போது, கையில் காயப்பட்ட நிலையிலிருந்த கணவருக்கு சிகிச்சையளிப்பதாகக் கூறி படையினர் அவரை அழைத்துச் சென்றதாகவும், அவர் விடுதலைப்புலிகளின் சிரேஸ்ட உறுப்பினர் என்பதால் அவருக்கு எவ்வித பாதிப்புகளும் ஏற்படாது என படையினர் அப்போது தம்மிடம் கூறியதாகவும், அவர் தற்போது எங்கு வைக்கப்பட்டுள்ளார் என்பதை அறிய முடியாமலுள்ளதாகவும், அவரை மீட்டுத்தருமாறும் வனிதா சிவரூபன் நல்லிணக்க ஆணைக்குழுவின் முன் தெரிவித்தார்.

முகாமில் வைத்து புலனாய்வுப்பிரிவினர் என தம்மை அறிமுகப்படுத்திய இருவர் தனது கணவர் வைத்தியசாலையில் இருப்பதாகவும், தன்னை அங்கு வருமாறும் அழைத்தனர் எனவும், அவர்களில் தமக்கு சந்தேகம் எற்பட்டதால் அவர்களுடன் வைத்தியசாலைக்குச் செல்லவில்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.

மேலும் பலர் தங்களின் உறவுகளை மீட்டுத்தருமாறு கோரி நல்லிணக்க ஆணைக்குழுவினரிடம் மனுக்களையும் கையளித்தனர். இன்று ஞாயிற்றுக்கிழமை மட்டக்களப்பு ஓட்டமாவடியில் நல்லிணக்க ஆணைக்குழுவின் அமர்வுகள் இடம்பெறுகின்றன.