விஸ்வா

விஸ்வா

மெனிக்பாம் அகதிமுகாம் மக்கள் வேறு முகாமிற்கு மாற்றப்படுகின்றனர்.

வவுனியா செட்டிக்குளம் மெனிக்பாம் முகாமில் தங்கியுள்ள இடம்பெயர்ந்த மக்கள் நேற்று சனிக்கிழமை வேறு முகாமிற்கு மாற்றப்பட்டனர். ‘வலயம்-4’ முகாமில் தங்கியிருந்த மக்களில் ஒரு தொகுதியினரே இவ்வாறு இடமாற்றப்பட்டவுள்ளனர். இவ்வாறு தாங்கள் இடமாற்றப்படுவதை அங்கிருந்த மக்கள் விரும்பவில்லை எனவும், இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர் எனவும் அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

எனினும், நேற்று அம்முகாமிற்குச் சென்ற வவுனியா அரசாங்கஅதிபர், படைத்தளபதி, அதிகாரிகள் ஆகியோர் குறித்த முகாம் மக்களை சந்தித்து கூட்டங்களை நடத்தி உடனடியாக அவர்களை கதிர்காமர் முகாமிற்கு செல்லுமாறு கூறினர். அத்துடமன் பஸ்களில் அவர்களை ஏற்றி கதிர்காமர் முகாமிற்கு கொண்டு சென்றனர்.

வலயம்-4 முகாமிலுள்ள 35 நிலையங்களில் முவாயிரம் மக்கள் தங்கியுள்ளனர். இவர்களில் ஒரு தொகுதியினரே நேற்று இடமாற்றப்பட்டனர். மீதமுள்ள மக்களை இடமாற்றும் நடவடிக்கை இன்றும் நடைபெறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தாங்கள் இன்னொரு முகாமிற்கு மாற்றப்படுதை அம்மக்கள் விரும்பவில்லை எனவும் தாங்கள் தங்களின் சொந்த இடங்களில் மீளக்குடியமர்வதற்கு அழைத்துச் செல்லப்படுவதையே விரும்பாவதாகவும் அம்மக்கள் தெரிவித்துள்ளனர்.

மெனிக்பாம் முகாமிலுள்ள மக்கள் அவர்களைப் பராமரிப்பதற்கு ஏற்ற வகையில் கதிர்காமர் முகாமிற்கு மாற்றப்படவுள்ளதாக வவுனியா அரசாங்க அதிபர் ஏற்கனவே அறிவித்திருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

நீக்கப்படமுடியாத அதிஉயர் பாதுகாப்பு வலயங்களினால் பாதிக்கப்படும் மக்களுக்கு மாற்றுக் காணிகள் அல்லது நட்டஈடு வழங்கப்படும்.

சாத்தியப்படக்கூடிய பகுதிகளில் அதிஉயர் பாதுகாப்பு வலயங்கள் நீக்கப்பட்டு அப்பகுதிகள் மக்களிடம் ஒப்படைக்கப்பட்டு வருகின்றன. ஆனால், சில பகுதிகளில் உயர்பாதுகாப்பு வலயங்களை நீக்க முடியாது என மீள்குடியேற்ற அமைச்சர் மில்றோய் பெர்னான்டோ தெரிவித்துள்ளார்.

ஆதிஉயர் பாதுகாப்பு வலயங்களாக இருந்த இடங்கள் பல பொதுமக்களிடம் கையளிக்கப்பட்டு அப்பகுதிகளிலிருந்த படையினர் வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டு வருகின்றனர். ஆனால், சில இடங்களிலுள்ள பாதுகாப்பு வலயங்களை நீக்க முடியாது. அவ்வாறான பகுதிகளில் வாழ்ந்த மக்களுக்கு மாற்றுக்காணிகள் அல்லது நட்டஈடு வழங்கப்படும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

உதாரணமாக திருகோணமலையில் சம்பூர் பிரதேசம் பாதுகாப்பு வலயமாவுள்ளது. அதனை நீக்குவது தற்போது சாத்தியமற்ற விடயம். ஆகவே அவ்வாறு பாதிக்கப்பட்ட மக்களுக்கு மாற்றுக்காணிகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன,; யாழ்ப்பாணத்தில் மீள்குடியேறுவதற்கு என வந்து யாழ்.புகையிரத நிலையத்தில் தங்கியுள்ள சிங்கள மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு ஒன்றைக் காண நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், இந்த மக்கள் முன்னர் யாழ்ப்பாணத்தில் என்ன அடிப்படையில் வசித்து வந்தனர் என்பது தொடர்பாக ஆராய்ந்து அறிக்கையொன்றை சமர்ப்பிக்குமாறு யாழ்.மாவட்ட அரசாங்க அதிபரைக் கேட்டுள்ளதாகவும், இது தொடர்பாக ஜனாதிபதியுடனும் கலந்துரையாடவுள்ளதாகவும் அமைச்சர் மில்றோய் பெர்னான்டோ தெரிவித்துள்ளார்.

வாகரை பிரதேசசபை உறுப்பினர் விபத்தில் பலி.

வாகரை பிரதேசசபை உறுப்பினரான 26 வயதுடைய நவரட்ணம் ருவேந்திரன் என்பவர் நேற்று சனிக்கிழமை இரவு வாகன விபத்தொன்றில் உயிரிழந்தார். இவர் மோட்டார் சைக்கிளில் புதூர் கதிரவெளி எனுமிடத்தில் சென்று கொண்டிருந்த போது, எதிரே வந்த லொறியொன்றுடன் மோதியதால் இவ்விபத்து ஏற்பட்டுள்ளது.

இவ்விபத்து நடந்த இடத்திலேயே பிரதேசசபை உறுப்பினரான ருவேந்திரன் கொல்லபட்டார். இவருடன் சென்ற இருவர் படுகாயங்களுக்குள்ளாகி வாகரை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இவ்விபத்து நடைபெற்றதும் ஆத்திரமுற்ற அப்பிரதேசவாசிகள் குறிப்பிட்ட லொறியினை தீவைத்துக் கொளுத்தியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வன்னிப் பாடசாலைகளில் வளப்பற்றாக் குறைகள்.

வன்னியில் மக்கள் மீள்குடியமர்த்தப்பட்டு வரும் பிரதேசங்களிலுள்ள பாடசாலைகளில் வளப்பற்றாக்குறைகள் காணப்படுவதோடு பாடங்களைக் கற்பிக்கும் ஆசிரியர்களும் பற்றாக்குறையாகவுள்ளனர்.

இதனால், போரினால் பாதிக்கப்பட்ட மாணவர்கள் தங்களின் கல்வியை மேம்படுத்துவதில் பிரச்சினைகளை எதிர்கொண்டு வருகின்றனர்.

கிளிநொச்சியில் அமைந்துள்ள முக்கிய பாடசாலைகளில் கூட ஆங்கிலம், கணிதம் ஆகிய பாடங்களைக் கற்பிக்க ஆசிரியர்கள் தட்டுப்பாடாகவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. போரின்பின் மக்கள் மீள்குடியேற்றப்பட்டு வரும் நிலையில் வன்னிப்பகுதி பாடசாலைகளில் கற்பிக்கும் பல ஆசிரியர்கள் தினமும் யாழப்பாணத்திலிருந்தே வன்னிப்பகுதிக்கு கடமைக்கு பஸ்ஸில் வந்து செல்வதாகவும் இதனால் இவர்களின் கற்பித்தல் பங்களிப்பு குறைவாகவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

தென்மராட்சிப் பகுதிகளில் மக்களை மீள்குடியேற்றுமாறு அம்மக்கள் கோரிக்கை!

தென்மராட்சியின் எழுதுமட்டுவாழ் தெற்கு, வடக்கு. கரம்பகம், தனங்கிளப்பு, ஆகிய கிராம அலுவலர் பிரிவுகளிலிருந்து இடம்பெயர்ந்த மக்கள் இன்னமும் மீள் குடியேற்றப்படாமலுள்ளதால் தங்களை விரைவில் தங்களின் சொந்த இடங்களில் மீள்குடியேற்றுமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.

குறிப்பிட்ட பகுதிகளில் புதைக்கப்பட்டுள்ள மிதி வெடிகளை அகற்றி மக்களை மீள்குடியேற்ற நடவடிக்கை எடுக்குமாறு இப்பகுதியிலிருந்து இடம்பெயர்ந்த மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். குறிப்பிட்ட இப்பகுதிகளில் மக்கள் மீள்குடியேற பாதுகாப்புத்தரப்பினர் இன்னமும் அனுமதி வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

வன்னியில் மீன்குடியேற்றப்பட்ட மக்களில் ஊனமுற்றவர்களின் விபரங்கள் சமூகசேவைகள் திணைக்களத்தினால் திரட்டப்பட்டு வருகின்றன.

பிரதேசச் செயலர் பிரிவுகள் தோறும் மக்களின் பிறப்பு, விபத்து, வன்செயல், நோய் போன்றவற்றினால் பாதிப்படைந்த ஊனமுற்றோர்களின் விபரங்கள் தற்போது திரட்டபட்டு வருகின்றன. நான்கு பக்க படிவங்கள் நிரப்பப்பட்டு ஊனமுற்றவர்களிடம் கையொப்பம் பெறப்பட்டு வருகின்றதோடு, ஊனத்தின் தன்மைக்கேற்ப ஆறு வகை அடையாள அட்டைகள் தயாரிக்கப்பட்டு எதிர்காலத்தில் அவர்களுக்கு வழங்கப்படும் எனவும் இதன்மூலம் ஊனமுற்றோர் பல நன்மைகளை அடைவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சரணடைந்த விடுதலைப்புலிப் போராளிகளிகளுக்காக 40 இலட்சம் ரூபா செலவு.

போரின் போது சரணடைந்த முன்னாள் விடுதலைப்புலிப் பேராளிகளிகளின் புனர்வாழ்வுக்கென ஐ.நா. அபிவிருத்தித்திட்டம் 40 இலட்சம் அமெரிக்க டொலர்களை செலவிடுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தப்புனர்வாழ்வுத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாகவும் என ஊடக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.

கல்வி, தகவல் தொழில்நுட்பம், போன்ற பல்வேறு துறைகளில் விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளிகள் பயிற்சியளிக்கப் பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

வன்னியில் தீபாவளிக் கொண்டாட்டங்கள் சோபையிழந்து காணப்பட்டன.

வடக்கில் இம்முறை தீபாவளிக் கொண்டாட்டங்கள் மிக அமைதியாக நடைபெற்றுள்ளது. குறிப்பாக வன்னிப்பகுதிகளில் மீள்குடியேற்றபட்ட மக்கள் அமைதியான முறையில் தீபாவளிப் பண்டிகையைக் கொண்டாடினர்.

போர் நடவடிக்கைகளின் போது தங்கள் உறவுகளை இழந்தவர்கள் இம்முறை தீபாவளிக் கொண்டாட்டங்களை மேற்கொள்ளவில்லை. வன்னியிலுள்ள புடவைக் கடைகளில் தீபாவளி வியாபாரம் இம்முறை களைகட்டவில்லை என வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

158 முன்னாள் புலிகள் நேற்று விடுதலை.

இறுதிக்கட்டப் போரின் போது படையினரிடம் சரணடைந்த முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர்கள் 158 பேர் நேற்று வெள்ளிக்கிழமை தீபாவளியன்று விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

படையினரிடம் சரணடைந்த பின்னர் புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் புலி உறுப்பினர்களே இவ்வாறு விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

வவுனியா பம்பைமடு, பூந்தோட்டம், நெளுக்குளம், ஆகிய இடங்களிலுள்ள புனர்வாழ்வு முகாம்களில் வைக்கபட்டிருந்தவர்கள் அந்தந்த முகாம்களிலிருந்து விடுவிக்கப்பட்டு அவர்களின் பெற்றோர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

‘இறுதி யுத்தத்தில் இரு தரப்பினரின் நடவடிக்கைகளாலும் பொதுமக்கள் உயிரிழக்க நேர்ந்தது’ நல்லிணக்க ஆணைக்குழுவின் முன் யாழ். அரச அதிபர் திருமதி இமெல்டா சுகுமார்

படிப்பினைகள் மற்றும், நல்லிணக்க ஆணைக்குழுவின் முன்பு யாழ். அரசாங்க அதிபர் திருமதி. இமெல்டா சுகுமார் சாட்சியமளித்துள்ளார். இறுதிக்கட்டப் போர் நடைபெற்ற முல்லைத்தீவில் அப்போது அரசாங்க அதிபராக கடமையாற்றிய காரணத்தினால் அவரது சாட்சியத்தைப் பெற்றுக்கொள்ள நல்லிணக்க ஆணைக்குழு அவருக்கு அழைப்பு விடுத்திருந்தது. இதனையடுத்து அவர் சாட்சியமளித்துள்ளதோடு ஆணைக்குழவின் விசாரணைகளுக்கும் பதிலளித்துள்ளார்.

இறுதிக்கட்டப் போர் முல்லத்தீவு மாவட்டத்தில் இடம்பெற்றபோது, இரு தரப்பினரின் நடவடிக்கைகளாலும் பொதுமக்கள் உயிரிழக்க நேர்ந்ததாக அவர் தனது சாட்சியத்தில் தெரிவித்துள்ளார். இறுதிக்கட்டப் போரின் போது முல்லைத்தீவு மாவட்டத்தில் மன்னார், கிளிநொச்சி, வவுனியா ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த மக்களும் தஞ்சமடைந்திருந்ததாகவும் அவர்களின் எண்ணிக்கை 3இலட்சத்து 60 ஆயிரத்திற்கு மேல் வரும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

19-01-2009 அன்று முல்லை மாவட்டத்திலுள்ள சகல மக்களையும் பாதுகாப்பான பகுதிகளுக்கு செல்லுமாறு அறிவிக்கும்படி படையினர் தமக்கு தொலைநகல் முலம் அறிவித்ததாகவும், தான் இதன்படி சகல கிராம சேவகர்கள், பிரதேச செயலாளர்கள் மூலம் அறிவித்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இவ்வேளையில், புலிகள் பொதுமக்கள் வெளியேறுவதை அனுமதிக்கவில்லை எனவும் புலிகளுக்குத் தெரியாமலேயே அவர்கள் படையினரின் கட்டுப்பாட்டுப்பகுதிகளுக்குச் சென்றதாகவும், அவ்வாறு செல்ல முற்படுகையில் பொதுமக்கள் மீது புலிகள் தாக்குதல் நடத்தியதாகவும், புலிகளுக்கும் இராணுவத்தினருக்கும் இடையில் நடைபெற்றப் போரில் பல அப்பாவிப் பொதுமக்கள் இறக்க நேரிட்டதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

“முல்லைத்தீவில் இருந்த மக்கள் புலிகளினால் பெரிதும் பாதிப்படைந்த நிலையிலேயே இருந்தனர். புலிகள் மக்களோடு மக்களாக இருந்து படையினர் மீது தாக்குதல்களை நடத்தியதால் இராணுவம் மேற்கொண்ட எறிகணை வீச்சினாலும் புலிகளின் எதிர்த் தாக்குதல்களினாலும் பொதுமக்களுக்கு பாரிய உயிரிழப்புகள் எற்பட்டன. போர் கடுமையாக இடம்பெற்ற பிரதேசத்திலிருந்து வெளியே பொதுமக்கள் மட்டுமல்ல, அரசாங்க அதிபரான தான் உட்பட அரசாங்க உத்தியோகத்தர்களும் புலிகளின் அனுமதியைப் பெறவேண்டிய கட்டாயம் இருந்தது. இறுதிக்கட்டப் போரின் போது முல்லைத்தீவு மாவட்டச்செயலக ஊழியர்கள் சிலரும் உயிரிழந்தனர். பொதுமக்களுக்காக அனுப்பப்பட்ட நிவாரணப் பொருட்களில் 20 வீதமானவற்றை புலிகள் கொண்டு சென்றனர். புலிகளின் தடையையும் மீறி போர் நடைபெற்ற பிரதேசத்திலிருந்து பொதுமக்கள் வெள்ளைக் கொடிகளோடு சென்று படையினரிடம் சரணடைந்தனர். அவ்வாறு சென்ற மக்கள் படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு தவறானது. இன்னும் உயிருடனிருக்கும் பலரிடம் இது குறித்து சாட்சியங்களைப் பெற்றுக் கொள்ள முடியும்”

-இவ்வாறு யாழ்.அரசாங்க அதிபர் தனது சாட்சியத்தில் குறிப்பிட்டுள்ளார்.