விஸ்வா

விஸ்வா

“தென்னிலங்கையில் தமிழர்கள் ஆதிக்கம் செலுத்த முடியுமானால் யாழ்ப்பாணத்தில் சிங்கள மக்கள் குடியேற விரும்புவதில் என்ன தவறு?” -ஜனாதிபதி தமிழ் கட்சிகளிடம் கேள்வி.

கொழும்பில் தமிழ், முஸ்லிம் மக்கள் ஆதிக்கம் செலுத்த முடியுமானால் வடக்கில் சிங்கள மக்கள் குடியேற விரும்புவதை தவறு என எவ்வாறு கூறமுடியும் என ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தமிழ் கட்சிகளிடம் கேள்வியெழுப்பியுள்ளார்.

நேற்று தமிழ்கட்சிகளின் அரங்கத்தில் அங்கம் வகிக்கும் கட்சிகள் ஜனாதிபதியை சந்தித்து கலந்துரையாடிய போது வடக்கில் இராணுவக் குடியிருப்புக்கள் அமைக்கப்படுவது குறித்து தமிழ் தேசிய விடுதலை முன்னணியின் செயலாளரும் தமிழ் கட்சிகளின் அரங்கத்தில் அங்கம் வகிப்பவருமான எம்.கே சிவாஜிலிங்கம் ஜனாதிபதியிடம் தெரிவித்த போது சற்று உணாச்சிவசப்பட்ட நிலையில் ஜனாதிபதி இக்கேள்வியைக் கேட்டதாக ஜனநாயக மக்கள் முன்னணியின் முக்கியஸ்தாரான ந.குமரகுருபரன் தெரிவித்துள்ளார்.

தெற்கில் தமிழ் மக்கள் குடியேறி ஆதிக்கம் செலுத்த முடியுமானால் வடக்கில் ஏன் சிங்கள மக்கள் குடியேறி வாழ முடியாது? அதில் என்ன தவறு இருக்கின்றது? என ஜனாதிபதி தமிழ் கட்சிகளிடம் கேட்டுள்ளார்.

அத்துடன் பாதுகாப்பின் அவசியம் கருதி வடக்கிலுள்ள இராணுவ முகாம்களை அகற்ற முடியாது எனவும் அவர் கூறியுள்ளார். இதேவேளை, தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை குறித்து கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி சிறு குற்றங்களுக்காக சிறைகளிலுள்ள தமிழ் கைதிகள் தொடர்பான வழக்குகளை துரிதப்படுத்தி அக்கைதிகளின் விரைவான விடுதலைக்கு நடவடிக்கை எடுக்குமாறு சட்டமா அதிபருக்கு தான் உத்தரவிடுவதாக தெரிவித்துள்ளார். நேற்றைய சந்திப்பு தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள தமிழ் கட்சிகளின் அரங்கத்தின் முக்கியஸ்தரான எம்.கே சிவாஜிலிங்கம் கருத்துக்கூறுகையில் ஜனாதிபதியுடனா சந்திப்பு திருப்தியளிக்கவில்லை என தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் மின்சாரம் தாக்கி மாணவன் பலி.

யாழ்ப்பாணத்தில் மின்சாரம் தாக்கியதால் மாணவன் ஒருவர் உயிரிழந்தார். நேற்று மாலை யாழ் புங்கன்குளம் வீதியில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. சிவநாதன் தயானந்தன் என்ற 15 வயது மாணவனே இவ்வாறு உயிரிழந்தார்.

நேற்று யாழ்ப்பாணம் உட்பட வடபகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய கடும் மழை பெய்தது. இவ்வேளையில் கோழிக்கூடு ஒன்றை வேறு இடத்தில் மாற்றி வைக்க முயன்ற மாணவனே இவ்வாறு மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். மற்றுமொரு சிறுவன் கடும் காயங்களுக்குள்ளாகி யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கிளிநொச்சியில் மழையினால் இடம்பெயரும் மக்கள் பொது இடங்களில் தங்க அனுமதி மறுப்பு.

தற்போது பெய்து வரும் கடும் மழை காரணமாக கிளிநொச்சிப் பகுதியிலும் மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர். ஆனால், இவ்வாறு இடம்பெயரும் பொதுமக்கள் பொது இடங்களில் தங்குவதற்கு படையினர் தடைவிதித்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இடம்பெயர்ந்து மீள்குடியமர்த்தப்பட்ட மக்களில் பலர் இன்னமும் தறப்பாள் கூடாரங்களில் தங்கி வரும் நிலையில, அக்கூடாரங்களுக்குள் மழை வெள்ளம் புகுந்ததால் மக்கள் அவற்றிலிருந்து இடம்பெயர வேண்டி ஏற்பட்டுள்ளது. இவ்வாறு இடம்பெயரும் மக்கள் அருகிலுள்ள பாடசாலைகள். கோவில்களுக்குச் செல்ல முற்பட்டபோது படையினர் அவ்வாறு அவர்கள் அங்கு தங்க அனுமதி மறுத்ததாக பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவித்துள்ளனர். இவ்வாறு பாதிக்கப்பட்ட மக்கள் நண்பர்கள் உறவினர்கள் விடுகளில் தற்போது தங்கியுள்ளனர்.

இந்திய வெளிவிவகார அமைச்சர் கிருஸ்ணா இன்று இலங்கைப் பிரதமரையும், வெளிவிவகார அமைச்சரையும் சந்திக்கவுள்ளார்.

இலங்கை வந்துள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்எம்.கிருஸ்ணா இன்று வெள்ளிக்கிழமை முற்பகல் இலங்கைப் பிரதமர் டி.எம்.ஜயரட்ணவையும், இலங்கை வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸையும் சந்திக்கின்றார். தொடர்ந்து இன்று பகல் ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றும் இடம்பெறவுள்ளது.

நான்கு நாட்கள் விஜயமாக நேற்று வியாழக்கிழமை மாலை 4.40 மணியளவில் இலங்கைக்கு வருகை தந்துள்ள அமைச்சர் எஸ்.எம்.கிருஸ்ணாவுடன் வெளிவிவகார அமைச்சின் செயலாளர் நிருபமா ராவ் உட்பட இருபது பேர் கொண்ட குழுவினரும் அடங்குகின்றனர்.

நாளை சனிக்கிழமை யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்யவுள்ள அமைச்சர் இந்திய நிதியுதவியுடன் மேற்கொள்ளப்படவுள்ள ஐம்பதினாயிரம் வீடுகள் அமைக்கும் திட்டத்தின் ஆரம்ப நிகழ்வில் கலந்து கொண்டு அதற்கான அடிக்கல்லையும் நாட்டி வைப்பார். அத்துடன் யாழ்.நகரில் அமைக்கப்பட்டுள்ள இந்தியத் துணைத் தூதரகத்தையும் அவர் திறந்து வைப்பார்.

மேலும், அவர் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவையும் சந்தித்து பலவிடயங்கள் குறித்து கலந்துரையாவுள்ளார். இதில் தமிழக மீனவர் பிரச்சினை குறித்தும் கலந்துரையாடுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நல்லிணக்க ஆணைக்குழுவின் முன்னால் மட்டக்களப்பு அரசாங்க அதிபர் சாட்சியம்.

நல்லிணக்க ஆணைக்குழுவின் முன்னால் மட்டக்களப்பு அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் சாட்சியமளித்துள்ளார். நேற்று வியாழக்கிழமை கொழும்பில் இடம்பெற்ற படிப்பினைகள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் முன்பாக அவர் சாட்சியமளித்தார்.

தான் 2007ஆம் ஆண்டு மட்டக்களப்பு அரசாங்க அதிபராக கடமையைப் பொறுப்பேற்றதாகவும், அதிலிருந்து போர்க்கால சிக்கல்களால் பல பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

கிழக்கில் இடம்பெற்ற இறுதிக்கட்ட யுத்தத்தின் போது திருகோணமலை மாவட்ட மக்கள் இடம்பெயர்ந்து வாகரைக்கு வந்தமை, அதனையடுத்து வாகரை மக்களும் இடம்பெயர்ந்தமை, அம்மக்களுக்கு அரசாங்கத்தினூடாக மேற்கொள்ளப்பட்ட உதவிகள், கிழக்கில் யுத்தத்தின் பின்னான மீள்குடியமர்வு, புனர்வாழ்வு நடவடிக்கைகள் போன்ற விடயங்கள் குறித்து அவர் தனது சாட்சியத்தில் குறிப்பிட்டுள்ளார்.

யாழ்.பல்கலைக்கழகத்தில் பகிடிவதையிலீடுபட்ட மாணவர்கள் மூவர் பல்கலைக்கழக செயற்பாடுகளிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் அண்மையில் இடம்பெற்ற புதுமுக மாணவன் ஒருவர் மீதான தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய சிரேஸ்ட மாணவர்கள் மூவருக்கு பல்கலைக்கழக கல்விச் செயற்பாடுகளைத தொடர தடைவிதிக்கப்பட்டுள்ளது.

குறிப்பிட்ட சிரேஸ்ட மாணவர்களால் பகிடிவதைக்குட்படுத்தப்பட்டு கடும் தாக்குதல்களுக்குள்ளான நிலையில் கலைப்பீட முதலாம் வருட மாணவனான ராஜேஸ்கண்ணா என்பவர் கூடுதலான பனடோல் வில்லைகளை உட்கொண்டதால் யாழ்.பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

இத்தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என அடையாளம் காணப்பட்ட மூன்று மாணவர்களே இவ்வாறு பல்கலைக்கழக கல்விச் செயற்பாடுகளிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளனர். அத்துடன் பல்கலைக்கழக நிர்வாகம் இச்சம்பவம் தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றது.

——————————————

Nov 25, 2010.
யாழ்.பல்கலைக்கழகத்தில் பகிடிவதை நடைபெறுவதில்லை என மாணவர் ஒன்றியத்தின் செயலாளர் தெரிவிப்பு.
பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவினால் பகிடி வதை தடைசெய்யப்பட்ட பின்னர் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் பகிடிவதை சம்பவங்கள் எதுவும் நடைபெறுவதில்லை எனவும் மாணவர்கள் மத்தியில் ஏற்படும் சிறு சிறு முரண்பாடுகள் காரணமாக சில மோதல் சம்பவங்கள் இடம்பெறுவதாகவும் யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் செயலாளர் எஸ்.சிறிதரன் தெரிவித்துள்ளார்.

வன்னியைச் சேர்ந்த மாணவர் ஒருவர் அண்மையில் தாக்கப்பட்டமை குறித்து அவர் குறிப்பிடுகையில் மாணவர்கள் மத்தியில் எவ்வித பாகுபாடுகளும் இல்லை எனவும், அவர்கள் புரிந்துணர்வுடன் நடந்து கொள்வதாகவும் ஆனால். வெளிமாவட்டத்தைச் சேர்ந்த மாணவர்கள் விடுதியில் ஒன்றாக தங்கியிருப்பதன் காரணமாக சில சமயங்கள் முரண்பாடுகள் எற்பட்டு அவை மோதல்களில் முடிவடைகின்றதாகவும், அண்மையில் இடம்பெற்ற சம்பவமும் இவ்வாறானதே எனவும் அவர் தெரிவித்தார்.

http://thesamnet.co.uk/?p=23431
——————————————-

NOV 24, 2010
யாழ். பல்கலைக்கழக மாணவன் தாக்கப்பட்ட சம்பவம் குறித்து கருத்துத் தெரிவிக்க துணைவேந்தர் மறுப்பு.
Shanmugalingam_N_UoJகடந்த திங்கள் கிழமை யாழ்.பல்கலைக்கழக முதலாம் வருட மாணவன் ஒருவர் சிரேஸ்ட மாணவர்களால் கடுமையாக தாக்கப்பட்ட விடயம் குறித்து யாழ். பல்கலைக்கழக துணைவேந்தரிடம் விளக்கம் கேட்கச் சென்ற யாழ். ஊடகவியலாளர்களை துணைவேந்தர் என்.சண்முகலிங்கன் சந்திக்கவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தடுப்பு முகாமில் இருந்து யாழ் பல்கலைக்கழகம் வந்த மாணவன் மீது பகிடிவதை. மாணவன் தற்கொலை முயற்சி!

துணைவேந்தர் வேலைப்பழுவுடன் இருப்பதால் அவரைச் சந்திக்க முடியாது என தணைவேந்தரின் செயலர் தெரிவித்து ஊடகவியலார்களை திருப்பியனுப்பியதாகவும், எவ்வளவு முயற்சி செய்தும் துணைவேந்தர் என்.சண்முகலிங்கனை சந்திக்க முடியவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.

யாழ். பல்கலைக்கழகத்தின் புதுமுக மாணவன் தடிகளாலும் கை கால்களாலும் சிரேஸ்ட மாணவர் குழுவொன்றினால் மாறி மாறித் தாக்கப்பட்டதாக பல்கலைக்கழகத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளமையும், தாக்குதல் நடத்திய மாணவர்களின் பெயர்களையும் அம்முறைப்பாட்டில் தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

http://thesamnet.co.uk/?p=23415
——————————
Nov 23, 2010
தடுப்பு முகாமில் இருந்து யாழ் பல்கலைக்கழகம் வந்த மாணவன் மீது பகிடிவதை. மாணவன் தற்கொலை முயற்சி!
Univercity_of_Jaffnaயாழ். பல்கலைக் கழகத்தில் சிரேஸ்ட மாணவர்களால் பகிடிவதைக்கு உட்பட்டதாகக் கூறப்படும் முதலாம் ஆண்டு மாணவன் ஒருவர் அதிகளவு பனடோல் வில்லைகளை உட்கொண்ட நிலையில் யாழ். போதனா வைததிய சாலையில் ஒப்படைக்கப்பட்டு உள்ளார். பல்கலைக்கழக விடுதியில் வசிக்கும் கலைப்பீடத்தின் முதலாம் ஆண்டு மாணவனாகிய எஸ்.ராஜேஸ் கண்ணா (வயது 23)என்பவருக்கே இந்நிலை ஏற்பட்டுள்ளது.

ஒரு வாரத்திற்கு முன் பாடசாலை அதிபர் மாணவர்களை ஏசியதால் நான்கு மாணவிகள் நஞ்சருந்திய சம்பவம் ஒன்று வலிகாமம் பாடசாலை ஒன்றில் நிகழ்ந்தது அறிந்ததே. (பாடசாலையில் வைத்து நஞ்சருந்திய நான்கு மாணவிகள் வைத்தியசாலையில் அனுமதி.)மேலும் பல்கலைக்கழக மாணவிகள் மத்தியில் தற்கொலை வீதம் அதிகமாக உள்ளதாகவும் அதற்கு பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சிலரின் பாலியல் துஸ்பிரயொகங்கள் காரணமாக இருப்பதாகவும் பரவலான குற்றச்சாட்டுக்கள் உள்ளமை குறிப்பிடத்தக்கது. (‘யாழ் பல்கலைக்கழக மாணவிகள் தற்கொலை முயற்சி!’ யாழ் அரச அதிபர் இமெல்டா சுகுமார் – அரச அதிபர் சுயாதீன விசாரணைக் குழுவை அமைக்க வேண்டும். : த ஜெயபாலன்)

நேற்று திங்கள் கிழமை மாலை எஸ்.ராஜேஸ் கண்ணா தங்கியிருந்த பாலசிங்கம் விடுதியில் வைத்து மூன்று மாணவர்கள் இவரைத் தாக்கியுள்ளதாகவும் இதனால் பாதிக்கப்பட்ட மாணவன் அதிகளவு பனடோல் வில்லைகளை உட்கொண்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட மாணவன் தடுப்பு முகாமிலிருந்து அண்மையில் விடுவிக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர் மீது தாக்குலை மேற்கொண்ட மாணவர்கள் இவரை பகிடிவதை செய்யும் நோக்கத்துடன் தாக்கவில்லை எனவும், குறித்த மாணவர் ஆத்திரமூட்டும் வகையில் நடந்து கொண்டதாகவும் அதனால் சிறு அசம்பாவிதம் ஏற்பட்டதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இது இவ்வாறிருக்க, வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள பாதிக்கப்பட்ட மாணவனுக்கு சிகிச்சையளிக்க உரிய மருந்து இல்லாததால் பல்கலைக்கழக நிர்வாகத்தின் ஊடாக கொழும்பிலிருந்து அம்மருந்தினைப் பெற ஏற்பாடு செய்துள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவித்துள்ளன.

http://thesamnet.co.uk/?p=23400

யாழ்.நகரில் இடம்பெற்ற விபத்தில் பெண்ணொருவர் பலி.

நேற்று வியாழக்கிழமை யாழ்நகரில் இடம்பெற்ற விபத்து ஒன்றில் பெண்ணொருவர் உயிரிழந்தார். யாழ்.காங்கேசன்துறை வீதியில் ‘எல்வ்’ ரக வாகனத்துடன் மோதுண்டு தலை வாகனத்தின் சில்லினால் நசிக்கப்பட்ட நிலையில் அவர் பலியானார்.

நேற்றுக் காலை இடம்பெற்ற இச்சம்பவத்தில் வண்ணார்பண்ணை முருகமூர்த்தி வீதியைச் சேர்ந்த பத்திநாதன் யோகா (வயது 34) என்ற பெண்ணே உயிரிழந்தவராவார்.

சனநெரிசல் மிக்க காங்கேசன்துறை வீதியில் குறித்த வாகனம் வேகத்தைக் கட்டுப்படுத்தாமல் வந்ததாலேயே இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வாகனச் சாரதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன் வாகனமும் பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டு விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

புலிகளின் மாவீரர் தினத்தை முன்னிட்டு வடக்கில் படையினர் உசார் நிலையில்.

நாளை சனிக்கிழமை 27ஆம் திகதி விடுதலைப்புலிகளின் மாவீரர் தினம் என்பதால் வடக்கில் படையினர் உசார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிகின்றது. குறிப்பாக கிளிநொச்சியில் பொதுமக்களுக்கும், நகரிலுள்ள வர்த்தக நிலையங்களுக்கும் படையினராலும், புலனாய்வுப் பிரவினராலும் சில அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. அத்துடன் குறித்த தினத்தில் பொதுமக்கள் ஏதாவது செயற்பாடுகளை மேற்கொள்கின்றனரா எனவும் அவதானிக்கப்பட்டு வருகின்றது.

கடந்த 21 ஆம் திகதி கார்த்திகை விளக்கீடு தினத்தன்று வீடுகளின் முன்பாக விளக்கேற்றிய பொதுமக்கள் மற்றும் வர்த்தகர்களை சில இடங்களில் படையினர் மிரட்டிய சம்பவங்களும் இடம்பெற்றுள்ளன. கார்த்திகை விளக்கீடு குறித்து பொதுமக்கள் படையினருக்கு விளக்கியதும் பின்னர் அவர்கள் சென்று விட்டனர்.

இதேவேளை, குடாநாட்டிலிருந்து வெளியாகும் பத்திரிகை அலுவலங்கங்களுக்குச் சென்ற இனந்தெரியாத நபர்கள் புலிகளின் மாவீரர் நாள் தொடர்பாக செய்திகள வெளிடக்கூடாது என மிரட்டல் விடுக்கும் கடிதங்களை கொடுத்து விட்டுச் சென்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எழுத்துப் பிழைகளுடன் எழுதப்பட்டிருந்த அக்கடிதத்தில் மக்கள் மகிழ்ச்சியுடன் வாழ்வதாகவும், அந்நிலையை குழப்ப முயற்சிக்க வேண்டாம் எனவும், அவ்வாறு குழப்ப முயற்சித்தால் பத்திரிகை அலுவலகம் கொழுத்தப்படும் எனவும் குறிப்பிடப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வடக்கிலுள்ள சர்வதேச செஞ்சிலுவைச்சங்கத்தின் கிளைகளை மூடும்படி அரசாங்கம் உத்தரவிடவில்லையாம்.

வடக்கிலுள்ள சர்வதேச செஞ்சிலுவைச்சங்கக் கிளைகளை மூடும்படி அரசாங்கம் உத்தரவிடவில்லை என தேசிய பாதுகாப்பு தொடர்பான ஊடக மத்திய நிலையத்தின் பணிப்பாளர் லக்ஸ்மன் ஹலுகல்ல தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம், வவுனியா, ஆகிய இடங்களிலுள்ள சர்வதேச செஞ்சிலுவைச்சங்கத்தின் கிளைகளை மூடுமாறு அரசாங்கம் கோரியுள்ளதாகவும், மன்னாரிலுள்ள கிளை மூடப்பட்டு விட்டதாகவும் சர்வதேச செஞ்சிலுவைச்சங்கத்தின் தகவல் வெளியிடப்பட்டிருந்தது. அதற்கு பதிலளிக்கும் வகையில் கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரவித்தார். யுத்தம் முடிவடைந்துள்ள நிலையில் வடக்கில் சர்வதேச செஞ்சிலுவைச்சங்கத்தின் பிரசன்னம் அவசியமானதுதானா எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

யுத்தத்தின் பின்னர் சில தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் தங்களது தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்காக முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்திய அமைச்சர் எஸ்.எம்.கிருஸ்ணாவை தமிழ் கட்சிகளின் அரங்கம் சந்திக்கும்.

இலங்கை வரும் இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம்.கிருஸ்ணாவை தமிழ் கட்சிகளின் அரங்கம் எதிர்வரும் 28ஆம் திகதி சந்திக்கவுள்ளதாக இந்த அமைப்பில் அங்கம் வகிக்கும் தமிழ்தேசிய விடுதலைக் கூட்டமைப்பின் தலைவர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.

இன்று வியாழக்கிழமை இலங்கைக்கு வருகை தரும் இந்திய வெளிவிவகார அமைச்சரை சந்தித்து கலந்துரையாடுவதற்கான ஏற்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும். அதன்படி 28ஆம் திகதி முற்பகல் 11மணிக்கு கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகரின் இல்லத்தில் சந்திப்பு இடம்பெறும் எனவும் சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.

தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைக்கான தீர்வு, இடம்பெயர்ந்த மக்களின் மீள்குடியேற்றம் அவர்களுக்கான புனர்வாழ்வு, அபிவிருத்திப் பணிகள், வடக்கிலுள்ள உயர்பாதுகாப்பு வலயம் தொடர்பான பிரச்சினை, தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை மற்றும், காணாமல் போனவர்கள் தொடர்பான பிரச்சினை போன்ற விடயங்கள் இச்சந்திப்பின் போது கலந்துரையாடப்பட உள்ளதாகவும், அத்துடன் மேற்குறித்த விடயங்கள் குறித்து தமிழ் கட்சிகளின் அரங்கம் விரிவான மனுவொன்றையும் இந்திய அமைச்சரிடம் கையளிக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.