விஸ்வா

விஸ்வா

கடும் மழை காரணமாக வன்னியில் கூடாரங்களில் தங்கியுள்ள மக்கள் பாதிப்பு.

தற்போது பெய்து வரும் கடும் மழையினால் கிளிநொச்சி முல்லைத்தீவு பகுதிகளில் கூடாரங்களில் தங்கியுள்ள மக்கள் மிகவும் பாதிப்படைந்துள்ளனர். தாழ்வான பகுதிகளில் அமைக்கபட்டுள்ள கூடாரங்களில் தங்கியுள்ள மக்கள் வேறு பகுதிகளுக்கு இடம்பெயர்ந்துள்ளனர்.

கிளிநொச்சி பொன்னகரில் சொந்த காணிகளில் குடியமர்த்தப்படாமலுள்ள மக்கள் அக்காணிகளுக்கு அருகில் கூடாரங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். அப்பகுதி தாழ்வான நிலமாவுள்ளதால் கூடாரங்களுக்குள் வெள்ளம் புகுந்தது பாதிப்பிற்குள்ளானது. அம்மக்கள் தங்கள் காணிகளில் அமைந்துள்ள அவர்களது வீடுகளுக்குள் சென்று தங்கியிருக்க முற்பட்டபோது அப்பகுதியிலிருந்த படையினரால் அவர்கள் வெளியேற்றப்பட்டதாக பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவிக்கின்றனர்.

இது குறித்து கிளிநொச்சி அரசாங்க அதிபர் தெரிவித்தபோது அம்மக்கள் தங்குவதற்கான ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், சமைத்த உணவுகள் அவர்களுக்கு வழங்கப்படுவதாகவும் குறிப்பிட்டார்.

யாழ்.போதனா வைத்தியசாலையில் தாதிமார் இன்று ஓரு மணி நேரம் பணிப்புறக்கணிப்பு.

யாழ்.போதனா வைத்தியசாலையில் பணியாற்றும் அரசாங்க தாதிமார் இன்று வியாழக்கிழமை ஒரு மணி நேர பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டனர். இன்று முற்பகல் 11.30 மணி தொடக்கம் 12.30மணி வரை அவர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.

கடந்த வருடம் டிசெம்பர் மாதம் தொடக்கம் ஆறு அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து அரசாங்கத் தாதியர் சங்கத்தினர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இக்கோரிக்கைகள் இன்னமும் நிறைவேற்றப்படாத நிலையில் அதனை நினைவூட்டும் வகையில் இன்று இப்பேராட்டத்தை அவர்கள் நடத்தினர்.

மட்டக்களப்பில் பாம்புகள் வெளிப்பட்டமைக்கும் சுனாமிக்கும் தொடர்பில்லை என வானிலை அவதான நிலையம் தெரிவிப்பு.

மட்டக்களப்பு கல்லடிப் பாலத்தில் ஆயிரக்கணக்கான பாம்புகள் ஒரே தடவையில் வெளிப்பட்டதைத் தொடர்ந்து சுனாமி அபாயம் ஏற்படுமோ என மக்கள் அச்சமடைந்துள்ள நிலையில் அவ்வாறு ஏற்பட சாத்தியம் இல்லை எனவும் பொதுமக்கள் இது குறித்து அச்சம் கொள்ளத் தேவையில்லை எனவும் மட்டக்களப்பு வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.

2004ஆம் ஆண்டு டிசெம்பர் 26ஆம் திகதி சுனாமி ஏற்படுவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு மட்டக்களப்பில் இவ்வாறு ஆற்றில் ஆயிரக்கணக்கான பாம்புகள் தோன்றியதாகவும் தங்போது அதே போல் பாம்புகள் வெளிப்பட்டுள்ளதால் மீண்டுமொரு சுனாமி ஏற்படுமோ என மட்டக்களப்பில் பொதுமக்கள் அச்சம் கொண்டிருந்தனர். ஆனால், இது தொடர்பாக மக்கள் அச்சம்கொள்ளத் தேவையில்லை என மட்டக்களப்பு வானிலை அவதான நிலையம் அறிவித்துள்ளது.

பூநகரி-சங்குப்பிட்டி பாலம் ஜனவரி மாதம் திறக்கப்படும்.

பூநகரி – சங்குப்பிட்டி பாலத்தின் திருத்த வேலைகள் முழுவதுமாக முடிவடைந்துள்ள நிலையில் எதிர்வரும் ஜனவரி மாதம் இப்பாலம் திறந்து வைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பாலம் இம்மாதம் 10ஆம் திகதி ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவினால் திறந்து வைக்கப்படும் என முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தது. எனினும் தற்போது பெய்து வரும் மழை காரணமாக எதிர்வரும் ஜனவரி மாதமே இப்பாலம் திறந்து வைக்கப்படும் என இப்போது தெரிவிக்கப்பட்டுள்ளது.

இப்பாலத்தூடான போக்குவரத்து ஆரம்பிக்கப்படும் போது, மன்னாரிலிருந்து யாழ்ப்பாணத்திற்கான போக்குவரத்து சுலபமானதாக அமையும் என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னாள் இராணுவச்சிப்பாய் மேற்கொண்ட கைக்குண்டு தாக்குலில் 14 பொலிஸார் படுகாயம். கைக்குண்டு எறிந்தவர் உயிரிழப்பு. நுவரெலியாவில் சம்பவம்.

முன்னாள் இராணுவச்சிப்பாய் ஒருவர் பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக கைக்குண்டு ஒன்றை வெடிக்கச் செய்ததால் 14 பொலிஸார் படுகாயமடைந்துள்ளனர். நுவரெலியாவில் நேற்று புதன்கிழமை மாலை 3.30 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. கைக்குண்டை எறிந்த நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இராணுவத்திலிருந்து தப்பிச்சென்ற இவர் கஞ்சா கடத்தினார் என்ற குற்றச்சாட்டின் பேரில் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து அழைத்துச் செல்லப்பட்ட போதே அவர் தனது கையிலிருந்த கைக்குண்டை வெடிக்கச் செய்துள்ளார் என பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், பொலிஸ் அதியட்சகருமான பிரசாந்த ஜயக்கொடி தெரிவித்தார்.

சும்பவத்தில் படுகாயமுற்ற 14 பொலிஸாரும் நுவரெலியா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். உயிரிழந்தவரின் மனைவி பொலிஸாரினால் விசாரணைக்குற்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தேசிய பாதுகாப்புதின நிகழ்வையொட்டி வீரசிங்கம் மண்டபம் 5மில்லியன் ரூபா செலவில் புனரமைக்கப்படவுள்ளது.

இவ்வருடம் தேசிய பாதுகாப்புதின நிகழ்வுகள் யாழ்.வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெறவுள்ளது. இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச கலந்து கொள்ளவுள்ளார். தேசிய பாதுகாப்பு தின நிகழ்வுகளை ஒருங்கமைப்பதற்காக அமைக்கப்பட்ட 14 உபகுழுக்கள் நேற்று செவ்வாய் கிழமை யாழ்.மாவட்டச் செயலகத்தில் கூடி கலந்துரையாடல்கள் மேற்கொண்டது.

ஜனாதிபதி யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் தேசிய பாதுகாப்புதின நிகழ்வகளில் கலந்து கொள்வதை முன்னிட்டு வீரசிங்கம் மண்டபம் ஐந்து மில்லியன் ரூபா செலவில் புனரமைக்கபடவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் அன்றைய தினத்தையொட்டி பல நிகழ்வுகளை நடத்தவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ‘இயற்கை அனர்த்தத்திலிருந்து மக்களைப் பாதுகாப்பது’ என்கிற தொனிப்பொருளில் 23 ஊர்திகளின் அணிவகுப்பு கண்காட்சியும் இதில் ஒன்றாகும். இந்த அணிவகுப்பு யாழ். முற்றவெளியில் ஆரம்பமாகி யாழ்.நகரைச் சென்றடைந்து மீண்டும் முற்றவெளியை வந்தடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் சிறைக் கைதிகள் தொடர்பான தகவல்கள் கணனி மயப்படுத்தப்பட உள்ளன.

Magazine_Prisonஇலங்கையில் நாடு முழுவதிலுமுள்ள சிறைக் கைதிகளின் விபரங்களை கணனி மயப்படுத்த புனர்வாழ்வு மற்றும், சிறைச்சாலைகள் அமைச்சு தீர்மானித்துள்ளது. இதன்படி சிறைகளிலிருக்கும் சுமார் 27ஆயிரம் சிறைக்கைதிகள் தொடர்பான சகல தகவல்களும் கணனி மயப்படுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிதாகப் பதவியேற்றுள்ள புனர்வாழ்வு மற்றும், சிறைச்சாலைகள் புனரமைப்பு அமைச்சர் சந்திரசிறி கஜதீரவினால் இது தெடர்பான பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.

ஒரு கைதி சிறைச்சாலைக்கு வந்த நாள் முதல் அவர் விடுதலையாகும் வரையிலான தகவல்கள் அனைத்தும் தற்போது கோப்புகளிலேயே உள்ளன. அவை யாவும் கணனி மயப்படுத்தப்பட்டதும் கணப்பொழுதில் விபரங்களைப் பெற்றுக்கொள்ளும் வாய்ப்பு ஏற்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நல்லூர் பிரதேச சபைக்குட்பட்ட உரிமையாளர்களற்ற காணிகள் பிரதேச சபையினால் கையேற்கப்படவுள்ளன.

யாழ். நல்லூர் பிரதேச சபைக்குட்பட்ட உரிமையாளர்களில்லாத, பராமரிப்பற்ற காணிகளை நல்லூர் பிரதேசசபை கையேற்கவுள்ளது. அதற்கான நடவடிக்கைகள் தற்போது ஆரம்பமாகியுள்ளன. இவ்வாறான காணிகளின் முன்பாக ‘இக்காணி பிரதேச சபையினால் கையேற்றக்கப்பட நடவடிக்கை மேற்கொள்ளப்படுகின்றது’ என்ற வாசகங்களடங்கிய துண்டுப்பிரசுரங்கள் ஒட்டப்பட்டு வருகன்றன.

இதேவேளை, டெங்கு ஒழிப்பைக் கவனத்தில் கொண்டு காணிகளிலுள்ள பற்றைகளை உரிமையாளர்கள் துப்புரவு செய்ய வேண்டும் எனவும் நல்லூர் பிரதேசசபையினால் அறிவுறுத்தப்பட்டுள்ளது,

யாழ்.குடாநாட்டில் கொள்ளைச் சம்பவங்கள் மீண்டும் அதிகரிப்பு.

யாழ்.குடாநாட்டில் மீண்டும் வழிப்பறி மற்றும், கொள்ளைச் சம்பவங்கள் அதிகரிக்கத் தொடங்கியுள்ளன. நேற்று செவ்வாய் கிழமை பிற்பகல் 2 மணியளவில் மானிப்பாயில் பெண்ணொருவர் ஆலயத்திற்குச் சென்று வழிபாட்டை முடித்துக் கொண்டு வரும் வழியில் இருவர் அவரின் தாலிக்கொடியை அறுத்துள்ளனர். அவர்கள் தப்பியோடும் பொழுது குறித்த பெண் கூக்குரலிட அப்பகுதியில் நின்ற இளைஞர்கள் திருடர்களைப் பிடித்து நையப்புடைத்து மானிப்பாய் பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.

நேற்று முன்தினம் திங்கள் கிழமை இரவு கைதடியில் ஒரு இரவில் முன்று வர்த்தக நிலையங்கள் கொள்ளையிடப்பட்டுள்ளன. கடந்த ஒருவாரத்தில் மட்டும் யாழ். குடாநாட்டில் ஐந்துக்கும் மேற்பட்ட கொள்ளைச் சம்பவங்கள் .இடம்பெற்றுள்ளன. கடந்த சில மாதங்களுக்கு முன்னர் யாழ்.குடாநாட்டில் இடம்பெற்ற கொள்ளை மற்றும், கடத்தல் சம்பவங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டிருந்தன. தற்போது கொள்ளைச் சம்பவங்கள் மீண்டும் தலையெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

”அரச எதிர்ப்பு அணுகுமுறையை கைவிட முடிவு செய்துள்ளோம்” வரவுசெலவுத் திட்டத்தை எதிர்த்து வாக்களிப்பதை கூட்டமைப்பு கைவிட்டது.

TNAநேற்று திங்கள் (நவம்பர் 29) மாலை நாடாளுமன்றில் இடம்பெற்ற வரவுசெலவுத் திட்டம் மீதான இரண்டாவது வாசிப்பில்  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எதிர்த்து வாக்களிப்பதைத் தவிர்த்து வாக்களிப்பில் கலந்து கொள்ளமல் விட்டது. பாதிக்கப்பட்ட தமிழ் மக்களின் மீள்குடியேற்றம், புனர்வாழ்வு, அபிவிருத்தி ஆகிய விடயங்களில் அரசாங்கத்துடன் ஆக்கபூர்வமாக கலந்துரையாடி அதற்காக அரசுடன் இணைந்து செயற்பட கூட்டமைப்பு விரும்புவதால், அரச எதிர்ப்பு அணுகுமுறையை கைவிட முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் வெளிப்பாடாகவே நேற்று வரவு செலவுத்திட்டத்தின் இரண்டாவது வாசிப்பில் கலந்து கொண்டு அதனை எதிர்ப்பதை தவிர்த்துக் கொண்டதாக கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக கூட்டமைப்பு அறிக்கையொன்றையும் வெளியிட்டுள்ளது.

”நாடாளுமன்றில் ஜனாதிபதியினால் சமர்ப்பிக்கப்பட்ட வரவுசெலவுத் திட்டம் இடம்பெயர்ந்து பாதிக்கப்பட்டிருக்கும் தமிழ் மக்களுக்கு எவ்விதமான நிவாரணத்தையும் வழங்கவில்லை. இடம்பெயர்ந்துள்ள மக்களின் மீள்குடியமர்வு முன்னுரிமை வழங்கப்பட வேண்டிய ஒன்று எனக் கூறிவரும் ஜனாதிபதியின் வரவு செலவுத்திட்டத்தின் ஒதுக்கீடுகளில் இது எவ்விதத்திலும் பிரதிபலிக்கவில்லை. இதற்கு மேலாகப் போர் முடிவுற்ற நிலையிலும் பாதுகாப்புக்கான நிதி ஒதுக்கீடு வருடாவருடம் அதிகரித்துக் கொண்டே போகின்றது. இந்நிலையில் தமிழ் மக்களின் மீள்குடியமர்வு. புனர்வாழ்வு. அபிவிருத்தி போன்ற விடயங்களில் அரசாங்கம் கூட்டமைப்புடன் அக்கபூர்வமான பேச்சுக்களை ஆரம்பிக்க வேண்டும் என்ற காரணத்திற்காக கூட்டமைப்பின் நல்லெண்ணத்தைத் தெரிவிக்கும் முகமாகவே வரவுசெலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெகெடுப்பில் எதிர்த்து வாக்களிப்பதிலிருந்து கூட்டமைப்பு விலகியிருந்தது.”  இவ்வாறு கூட்டமைப்பின் விளக்க அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, நேற்று மாலை இடம்பெற்ற வரவுசெலவுத் திட்டத்தின் இரண்டாவது வாசிப்பின் மீதான வாக்களிப்பில் 150 வாக்குகள் ஆதரவாகவும், 46 வாக்குகள் எதிராகவும் அளிக்கப்பட்டன. 104 மேலதிக வாக்குகளால் இது நிறைவேறியது.

ஏதிர்க்கட்சிகளான ஐக்கிய தேசியக்கட்சி, ஜே.வி.பி ஆகியன எதிராக வாக்களித்தன. அரசுடன் தற்போது இணைந்துள்ள சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி, இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ், மலையக மக்கள் முன்னணி, ஆகியன ஆதரவாக வாக்களித்தன.