சஜீர் அகமட் பி

சஜீர் அகமட் பி

பயங்கரவாதிகளையும் தமிழ் மக்களையும் வேறுபிரித்து பார்க்கும் சக்தி அரசிற்கு உண்டு -பிரதமர் தெரிவிப்பு

pm-srilanka.jpgபயங்கர வாதத்துக்கு அரசாங்கம் எப்போதுமே எதிரானது என்பதில் அணுவளவேனும் சந்தேகம் கொள்ளத்தேவையில்லை என்றும் ஆனால், தமிழ் மக்களுக்கு ஒருபோதும் தற்போதைய அரசாங்கம் எதிரானது இல்லை என்றும் பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்க தெரிவித்தார்.

பயங்கரவாதிகளையும் தமிழ் மக்களையும் வேறுபிரித்துப் பார்க்கும் சக்தி அரசாங்கத்துக்கு இருப்பதாகவும் பிரதமர் கூறினார். ஹெரனையில் ஞாயிற்றுக்கிழமை ஹெரனை தேர்தல் தொகுதியில் உள்ள பெருந்தோட்ட பிரதிநிதிகளை சந்தித்துப் பேசியபோதே பிரதமர் இவ்வாறு கூறினார்.

அவர் இங்கு மேலும் பேசுகையில்;

இலங்கையில் அரசியல் வரலாற்றில் முதல் தடவையாக பரந்தளவிலான கூட்டணியொன்று ஏற்பட்டிருக்கிறது. இந்த கூட்டணியில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையில் 21 கட்சிகள் இருக்கின்றன. நாட்டுக்கும் மக்களுக்கும் நல்லது செய்வதற்காகவே சகலரும் இந்தக் கூட்டணியில் இணைந்திருக்கின்றனர்.

எந்த இனத்தவராக இருந்தாலும் சரி எந்த மதத்தவராக இருந்தாலும் சரி நாட்டிலுள்ள அனைத்து மக்களும் இலங்கையர்களே. இலங்கையின் சகல பிரஜைகளுக்கும் சம உரிமை இருக்க வேண்டுமென்பதே எமது நிலைப்பாடு. பயங்கரவாதத்தை நாம் எப்போதும் எதிர்க்கிறோம். அதில் அணுவளவேனும் சந்தேகம் கொள்ளவேண்டாம். எனினும் நாம் ஒருபோதும் தமிழ் மக்களுக்கு எதிரானவர்களல்ல. தமிழ் மக்களையும் பயங்கரவாதிகளையும் வேறுபடுத்தியறியும் சக்தி எமக்கு இருக்கிறது.

இதேநேரம் சிலர் இலங்கை பற்றி தவறான தகவல்களையும் கருத்துகளையும் உலகுக்குப் பரப்புகின்றனர். தோட்டப்புறங்களில் வேலை செய்வதற்கான மனித வளம் குறைந்து வருகிறது. நான் இதைக் கூறுவது தோட்டப்புறத்திலுள்ள மக்கள் அப்படியே அங்கேயே இருக்கவேண்டுமென்று அர்த்தமில்லை. மாற்றுவழி தேவையென்றே கூறுகின்றேன். இது தொடர்பாக ஆராய்ந்து ஏற்புடைய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவேண்டும்.

ஏனெனில் உலக மாற்றத்துக்கு ஏற்ப மக்களின் மாற்றத்தையும் நிறுத்திவிட முடியாது. குறுகிய நோக்கங்களிலிருந்தும் எண்ணங்களிலிருந்தும் விலகி உலக அபிவிருத்திக்கும் தொழிநுட்ப வளர்ச்சிக்கும் ஏற்ப நாமும் செயலாற்ற வேண்டும் என்றார்.

பொலிஸ் பதிவு இல்லை 5,000 ரூபா அபராதம்

பொலிஸ் பதிவின்றி நான்கு தமிழ் இளைஞர்களை தனது கடையில் வேலைக்கு அமர்த்தியதாக குற்றம் சாட்டப்பட்ட அதன் உரிமையாளரான டபிள்யூ.பீ.பெர்னாண்டோ என்பவருக்கு நீர்கொழும்பு நீதிவான் ஜயகிடி அல்விஸ் 5 ஆயிரம் ரூபா அபராதம் விதித்தார். கட்டுநாயக்கப் பகுதியில் பொலிஸாரும், படையினரும் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த போது இவரின் கடையில் நான்கு மலையகத் தமிழ் இளைஞர்கள் பணிபுரிந்த தெரியவந்தது.

தற்போதுள்ள பாதுகாப்பு நடைமுறைகள் சந்தேக நபருக்குத் தெரிந்தும் அதனை செயற்படுத்தாமல் அலட்சியமாக இருந்துள்ளார் என பொலிஸார் நீதிமன்றத்தில் தெரிவித்தனர். கடை உரிமையாளரும் தனது குற்றத்தை ஒப்புக்கொள்ளவே நீதிவான் மேற்படி அபராதத்தை விதித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் சிவில் பாதுகாப்பு குழுக்கூட்டம்

21042009.jpgமட்டக் களப்பு மாவட்டத்தில் சிவில் பாதுகாப்புக் குழு அமைப்பது தொடர்பான கூட்டம் நேற்று (20) மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.

மின்சக்தி எரிபொருள் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமமே தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சர் எம்.எஸ்.எஸ். அமீர் அலி தேசிய நல்லிணக்க ஒருங்கிணைப்பு அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன், பொலிஸ் மா அதிபர் ஜயந்த விக்ரமரட்ண, கிழக்கு மாகாணத்துக்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் மஹிந்தபாலசூரிய,  மட்டக்களப்பு மாவட்டத்துக்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர்களான எட்வின் குணதிலக, சங்கர், மட்டக்களப்பு மாவட்ட பதில் அரசாங்க அதிபர் திருமதி ஆர். கேதீஸ்வரன், கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.எஸ் சுபைர் உட்பட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்கள், உதவிப் பொலிஸ் அத்தியட்சகர்கள், பொலிஸ் நிலையங்களின் பொறுப்பதிகாரிகள், பிரதேச செயலாளர்கள், உள்ளூராட்சி உதவி ஆணையாளர், மட்டக்களப்பு மாநகர ஆணையாளர் மாவட்ட சமுர்த்தி உதவி ஆணை யாளர் உட்பட உயரதிகாரிகளும் கலந்துகொண்டனர்.

இக் கூட்டத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தின் பிரதேச செயலாளர் பிரிவுகள் தோறும், கிராமங்களில் சிவில் பாதுகாப்புக் குழுக்களை அமைப்பது தொடர்பாக ஆராயப்பட்டதுடன் மட்டக்களப்பு மாவட்ட மட்டத்திலான சிவில் பாதுகாப்புக் குழுவும் அமைக்கப்பட்டது.

புலிகள் வெளியேறுவது தொடர்பான இரகசிய பேச்சுவார்த்தையில் நோர்வே சம்பந்தப்படவில்லை – நிராகரிக்கிறார் தூதுவர்

விடுதலைப் புலிகளின் தலைமைத்துவம் பாதுகாப்பான முறையில் வெளியேறுவது தொடர்பான இரகசியப் பேச்சுவார்த்தையில் நோர்வே ஈடுபட்டிருப்பதாகத் தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டுகளை கொழும்பிலுள்ள நோர்வே தூதுவர் ரோரி காட்ற்ரெம் நிராகரித்துள்ளார்.

இது முற்றுமுழுதாக உண்மைக்குப் புறம்பானது என்று ஞாயிறு ஆங்கிலப் பத்திரிகை ஒன்றுக்கு அவர் கூறியுள்ளார். இந்த மாதிரியான பேச்சுகளில் நான் அறிந்தவரை நோர்வேயோ அல்லது ஏனையவர்களோ சம்பந்தப்படவில்லை. இடம்பெயர்ந்தவர்களின் மனிதாபிமானப் பிரச்சினை பற்றியதாகவே கடந்த பலமாதங்களாக நோர்வே கவனத்தை செலுத்தியிருந்தது என்று காட்ற்ரெம் கூறியிருக்கிறார்.

“மோதல் சூன்யப் பகுதியிலிருந்து பொதுமக்களை விடுவிப்பதற்குப் பதிலாக புலிகளின் தலைவர் பிரபாகரனையும் ஏனைய புலிகளின் உறுப்பினர்களையும் பாதுகாப்பான முறையில் வெளியேறுவதற்கு நோர்வே பேச்சுவார்த்தை நடத்துகின்றதா என்பது பற்றி இந்த ஆங்கிலப் பத்திரிகை எழுப்பிய கேள்விகள் தொடர்பாகவே நோர்வேத் தூதுவர் மேற்கண்டவாறு பதில் அளித்திருக்கிறார்.

பிரிட்டனின் “இன்டிபென்டன்ட்’ பத்திரிகையின் கொழும்பிலுள்ள நிருபர் அன்ட் ரூபன் கோம்பேயின் செய்தியில், இலங்கை அரசாங்கம் புலிகளுடன் உடன்பாட்டுக்கு வருவதற்கு முயற்சிப்பதாகவும் புலிகளின் தலைவர் பிரபாகரன் ஆயுதங்களைக் கைவிட்டு தப்பிச் செல்வதன் மூலம் மோதலை முடிவுக்குக் கொண்டு வரமுடியுமென கருதுவதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த உத்தேச உடன்பாடு சாத்தியமா என்பது தொடர்பாக கருத்தறிய இலங்கை முற்பட்டதாக அறியவருவதாகவும் இன்டி பென்டன்ட் பத்திரிகை குறிப்பிட்டிருந்தது.

புகழ்பெற்ற பிரித்தானிய எழுத்தாளர் ஜெ.ஜி. பலார்ட் மரணம்

jg.jpgஉலகப் புகழ்பெற்ற பிரித்தானிய எழுத்தாளர் ஜெ.ஜி. பலார்ட் தனது 78 ஆவது வயதில் மரணமானார். “கிராஷ்’ மற்றும் “த எம்பயர் ஒப்த சன்’ ஆகிய நாவல்கள் மூலம் உலகப் புகழ்பெற்ற பலார்ட், பல வருட காலமாக நோயுற்ற நிலையில் மரணமடைந்துள்ளார்.

பிரித்தானியாவில் மான்செஸ்டரிலுள்ள கலிகோ பிரின்டர்ஸ் நிறுவனத்தில் இரசாயனவியலாளராக கடமையாற்றிய பலார்ட்டின் தந்தை மேற்படி நிறுவனத்தின் சீனாவிலுள்ள துணை நிறுவனமான சீன பிரின்டிங் அன்ட் பினிஷிங் கம்பனியின் தலைவராகவும் முகாமைப் பணிப்பாளராகவும் பதவியுயர்வு பெற்று சீனாவுக்கு குடும்பத்துடன் சென்றபோது அங்கு பலார்ட் பிறந்தார்.

சீனாவின் சங்காய் நகரில் பிறந்து வளர்ந்த பலார்ட் இரண்டாம் உலகப் போர்க் காலத்தில் (தனது 12 ஆவது வயதில்) சிறைவாசம் அனுபவிக்க நேர்ந்தது. இதன்போது அவர் ஜப்பானிய சிறைச்சாலையில் 3 வருடங்களைக் கழித்தார்.

சீனாவிலுள்ள ஜப்பானிய சிறைச்சாலையில் கழித்த தனது இளமைப் பருவத்தை அடிப்படையாக வைத்தே “த எம்பயர் ஒப் த சன்’ நாவலை அவர் எழுதினார். பின்னர் பிரித்தானியா திரும்பிய பலார்ட், 1960ஆம் ஆண்டு முதல் முழு நேர எழுத்தாளராக மாறினார்.

அவரது “த எம்பயர் ஒப் த சன்’ நாவலானது திரைப்படமாக தயாரிக்கப்பட்டு வெளியானது. அத்திரைப்படத்தை பிரபல ஹொலிவுட் இயக்குனர் ஸ்டீபன் ஸ்பையல்பேர்க் இயக்கியிருந்தார். அதே சமயம் கார் விபத்துகளின் போதான பாலியல் நாட்டங்கள் தொடர்பில் அவர் எழுதிய “கிராஷ்’ நாவலானது டேவிட் குரொனென்பேர்க் இயக்கத்தில் திரைப்படமாக வெளிவந்தது. பலார்ட் தனது வாழ்நாளில் 15 நாவல்களையும் எண்ணற்ற சிறுகதைகளையும் எழுதியுள்ளார்.

வடக்குப் பாடசாலைகளை நாளை திறக்க வேண்டாமென அரசு அவசர அறிவித்தல்

civiling_flee_vanni_01.png இலங்கையின் வடபகுதியிலுள்ள அனைத்துப் பாடசாலைகளையும் நாளை இரண்டாம் தவணைக்காக மீண்டும் திறக்க வேண்டாம் என வடக்குக் கல்வி வலயங்களுக்கு அரசாங்கம் இன்று அவசர அறிவித்தல் ஒன்றை அனுப்பி வைத்துள்ளது.

யாழ். மாவட்டத்திலுள்ள அனைத்துப் பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகளும் எதிர்வரும் 27 ஆம் திகதி வழமைபோல் மீண்டும் ஆரம்பிக்கப்படுமென வடமாகாண கல்விப்பணிபாளர் வீ.இராசையா விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை இன்று திங்கட்கிழமை காலை முதல் 30,000 இற்கும் மேற்பட்ட பொதுமக்கள் இராணுவத்தினரிடம் தஞ்சமடைந்துள்ளனர். இந்நிலையில் மேலும் மக்கள் முல்லைத் தீவிலிருந்து விடுவிக்கப்படலாம் என நம்பப்படுகின்றது.

இது தொடர்பாக யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையில் இன்று விசேட கூட்டம் ஒன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெறறதாகத் தெரிவிக்கப்படுகிறது.மேலும் யாழ் மாவட்டத்திலுள்ள பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகளை எதிர்வரும் மேமாதம் 4ஆம் திகதி மீண்டும் ஆரம்பிக்குமாறு யாழ் அரச அதிபர் மேலதிக மாகாண கல்விப்பணிப்பாளரை கோரியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. 

இடம்பெயர்ந்து வருபவர்களைத் தங்க வைப்பதற்கு வவுனியாவில் மேலும் நான்கு பாடசாலைகளில் அவசர ஏற்பாடுகள்

civiling_flee_vanni_02.png பாதுகாப்பு வலயப்பகுதியில் இருந்து இடம்பெயர்ந்து இராணுவத்தின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தி்னுள் வந்துள்ள சுமார் 5000 பேரைத் தங்க வைப்பதற்காக நான்கு பாடசாலைகளில் ஏற்பாடுகள் செய்யப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த ஏற்பாடுகள் குறி்த்து இன்று மாலை வவுனியா செயலகத்தில் மேலதிக அரசாங்க அதிபர் தலைமையில் நடைபெற்ற அவசர உயர்மட்ட கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

வவுனியா புதுக்குளம் மகாவித்தியாலயம், தாண்டிக்குளம் பிரமண்டு வி்த்தியாலயம், ஆண்டியாபுளியங்குளம் பாடசாலை, முதலியாகுளம் பாடசாலை ஆகியவற்றில் ஓமந்தை பகுதிக்கு ஏற்கனவே கொண்டு வரப்பட்டுள்ள 5000 பேரையும் தங்க வைப்பது என இந்தக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்தப்பாடசாலைகளில் இடம்பெயர்ந்தவர்களுக்கான கழிப்பறை வசதிகள், குடிநீர் வசதிகள் மற்றும் தேவையான அடிப்படை வசதிகளை ஏற்படுத்திக்கொடுப்பதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்வதற்கு ஐ.சி.ஆர்.சி மற்றும் யுனிசெவ் ஆகிய நிறுவனங்கள் முன்வந்துள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையில் இன்று காலை வவுனியாவுக்கு இராணுவத்தி்னரால் கொண்டுவரப்பட்ட 1500 பேர் மனிக்பாம் பகுதிக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பொலிஸ் சேவையில் 2000 தமிழ் இளைஞர்-யுவதிகள் : அமைச்சர் வி. முரளிதரன்

karuna_amman.jpgகிழக்கு மாகாணத்திலிருந்து 2000 தமிழ் இளைஞர் – யுவதிகளை விரைவில் பொலிஸ் சேவையில் புதிதாக இணைத்துக் கொள்ளவிருப்பதாக தேசிய நல்லிணக்க அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார்.இன்று மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் சிவில் பாதுகாப்புக் குழுக்கள் அமைப்பது தொடர்பாக நடைபெற்ற மாநாட்டில் உரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்

நான் பிரபாகரனை நண்பர் என்று கூறவில்லை- கருணாநிதி

20-karunanithi1.jpgநான் என்டிடிவி பேட்டியில் கூறியதை அவர்கள் முழுமையாக ஒளிபரப்பவில்லை. என்டிடிவி எப்போதுமே திமுகவுக்கு விரோதமாகத்தான் செயல்படுகிறது என்று கூறியுள்ளார் முதல்வர் கருணாநிதி. என்டிடிவிக்கு முதல்வர் கருணாநிதி அளித்த பேட்டியில், விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் எனது நல்ல நண்பர். அவர் பயங்கரவாதி அல்ல. அவரது இயக்கத்தில் இருக்கும் சிலர் பயங்கரவாதிகளாக இருக்கலாம். அதற்கு பிரபாகரன் என்ன செய்வார். பிரபாகரன் போரில் கொல்லப்பட்டால் நான் வருத்தமடைவேன் என்று கூறியிருந்தார்.

இது சலசலப்பை ஏற்படுத்தி விட்டது. இது கருணாநிதியின் தனிப்பட்ட கருத்து என்று காங்கிரஸ் கருத்து தெரிவித்துள்ளது. இந்த நிலையில் இன்று கோபாலபுரத்தில் உள்ள தனது வீட்டில் தன்னை சந்தித்த செய்தியாளர்களிடம் தான் பேசியது குறித்து விளக்கம் அளித்தார் கருணாநிதி.

அப்போது அவர் கூறுகையில், தொலைக்காட்சியில் வெளியான செய்தி தவறானது. நான் சொன்ன கருத்தை மாற்றி வெளியிட்டுவிட்டது. நான் சொன்ன செய்திகளை முழுமையாக வெளியிடவில்லை. தேவையில்லாமல் பிரச்சனைகளை கிளப்புகிறது அந்த சேனல்.என்.டி.டி.வி எப்போதுமே திமுகவிற்கு எதிராகத்தான் செயல்படுகிறது.

விடுதலை இயக்கமாக உருவான விடுதலைப் புலிகள் இயக்கம், பின்னர் திசை மாறி இப்போது தீவிரவாத இயக்கமாகி விட்டது. ஆனால் இதை தேவையில்லாமல் மாற்றிக் காட்டி விட்டனர் என்று கூறினார் கருணாநிதி.

போர் நிறுத்தத்தை வலியுறுத்தி பெண்கள் நடத்தும் போராட்டம் தீவிரம் – 5 பேர் சுகவீனம்

20-fast.jpgஇலங்கையில் போர் நிறுத்தத்தை வலியுறுத்தி சென்னையில் பெண்கள் நடத்தி வரும் உண்ணாவிரதப் போராட்டம் தீவிரமடைந்துள்ளது. ஐந்து பெண்கள் உடல் நலம் பாதிக்கப்பட்டது. அவர்கள் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.

இலங்கையில் படுகொலை செய்யப்படும் அப்பாவி தமிழர்களை காக்க கோரியும், அங்கு போர் நிறுத்தம் செய்வதற்கு அகில இந்திய காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும் பல்வேறு அமைப்புகளுடன் பெண்கள் போராடி வருகின்றனர். பெண்கள் அமைப்புகள் ஒன்றிணைந்து கடந்த 13-ம் தேதி தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து 100-க்கும் மேற்பட்ட பெண்கள் சென்னை வந்தனர்.

சென்னை கொளத்தூரில் முத்துக்குமார் உடல் வைக்கபப்ட்டிருந்த இடத்தில் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கினர். ஆனால் போலீஸார் அனுமதி மறுக்கவே, மதிமுக தலைமைக் கழகமான தாயகத்தில் போராட்டத்தைத் தொடர்ந்து வருகின்றனர். 7வது நாளாக போராட்டம் நீடித்தது. அப்போது பல பெண்கள் சோர்வடைந்து மயக்க நிலைக்குத் தள்ளப்பட்டனர்.

சில நாட்களுக்கு முன்பு கவிதா (30), சித்ரா (40), சசிகலா (30) ஆகியோருக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டது. இதையடுத்து டாக்டர்களைக் கொண்டு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த நிலையில் நேற்று மதுரை பழனியம்மாள், காஞ்சீபுரம் சசிகலா, ஜெயமணி, மேகனா, செல்வி ஆகியோரின் உடல்நிலை திடீரென்று பாதிக்கப்பட்டது. இதை தொடர்ந்து டாக்டர்கள் வரவழைக்கப்பட்டு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. குளுக்கோஸ் ஏற்றப்பட்டது.

இவர்களில் ஜெயமணி மயக்கமடைந்து விழவே, அவரை ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். இந்த நிலையில் இன்று 8வது நாளாக தொடர்ந்து உண்ணாவிரதப் போராட்டம் நீடித்து வருகிறது.