சஜீர் அகமட் பி

சஜீர் அகமட் பி

இடம்பெயர்ந்த மக்களுக்கு விசேட வைத்திய சேவை – கிழக்கிலிருந்து வைத்தியர் குழு விரைவு

puthumathalan.jpgவன்னியில் இருந்து இடம்பெயர்ந்தோருக்கு விசேட வைத்திய சிகிச்சையை வழங்க, கிழக்கு மாகாண சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளதாக கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் எம். தேவராஜன் தெரிவித்தார். புல்மோட்டை, செட்டிக்குளம், வவுனியா போன்ற இடங்களுக்கு விசேட வைத்தியக்குழுக்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

கல்முனை வைத்தியசாலையில் இருந்து டாக்டர் அஜ்வத் தலைமையிலான 4 வைத்தியர்களும், 4 தாதியர்களும் செட்டிக்குளத்திற்கும், மட்டக்களப்பிலிருந்து வைத்தியர் அச்சுதன் தலைமையில் 4 வைத்தியர்களும் 5 தாதியர்களும், வவுனியா வைத்தியசாலைக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டிய அவர் புல்மோட்டையில் வைத்திய சிகிச்சை அளிக்க டாக்டர் டிக்சன் தலைமையில் 4 வைத்தியர்களும் 4 தாதியரும் சென்றுள்ளதாகத் தெரிவித்தார்.

பொதுச் சுகாதாரத்தைக் கண்காணிக்க குச்சவெளி சுகாதார வைத்திய அதிகாரி தாலைமையிலான சுகாதார வைத்திய அதி காரிகள், தொற்று நோயியல் நிபுணர்கள், பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் சுட்டிக் காட்டினார்.

குடிநீரை மாசுபடுத்தினால் இரட்டிப்புத் தண்டனை – விரைவில் பாராளுமன்றத்தில் சட்டத்திருத்தம்

sri-lanka-parliament.jpgசட்ட விரோதமாக குடிநீரைப் பெற்றுக்கொள்ளுதல், குடிநீரை மாசுபடுத்தல், குளங்கள், ஓடைகளுக்கு கழிவுநீரை திறந்துவிடல் போன்ற நடவடிக்கைகளுக்கு கடுமையான தண்டணைகள் வழங்கப்படும் விதத்தில் சட்டத்தில் திருத்தங்கள் கொண்டுவரப்படவுள்ளன.

1974 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட நீர்வழங்கல் சட்டம் 1992 ஆம் ஆண்டு முதன்முறையாக திருத்தம் செய்யப்பட்டது. இன்று 16 வருடங்கள் கடந்த நிலை யிலும் இதனையே அமைச்சு இன்னும் பின்பற்றி வருகிறது.

நீர்வழங்கல் வடிகாலமைப்பு அமைச்சு அன்றையதை விட இன்று மிகக் கூடுதலான நீர்வழங்கல் திட்டங்களை பராமரித்துவருகிறது. எனவே இன்றைய காலகட்டத்துக்கு ஏற்றவகையில் சட்டத்தை திருத்தவேண்டிய அவசியம் உணரப்பட்டுள்ளதையடுத்தே அமைச்சு இத்தீர்மானத்தை எடுத்துள்ளது.

நீரை மாசடையச் செய்தல், நீர்த்தேக்கங்கள், குளங்கள், நீரோடைகள் போன்றவற்றுக்குள் கழிவு நீரை திறந்து விடல், கழிவுகளை வீசுதல், குடிநீர் வழங்குவதற்காக பயன்படுத்தப்படும் நீர் மானியில் மோசடி செய்தல், சட்டவிரோதமாக குடிநீரைப் பெற்றுக்கொள்ளல் போன்ற குற்றங்களுக்காக இதுவரை அறவிடப்பட்ட தண்டப்பணத்தை இரட்டிப்பாக்குவதும் சட்டதிருத்தத்தில் பிரதானமாக கருதப்படுகிறது.

சட்டவிரோதமாக குடிநீரைப் பெறுவதையும் நீரை வீண் விரயம் செய்வதையும், தடுக்கும் நோக்குடனேயே இச் சட்டத்தில் திருத்தங்கள் கொண்டுவரப்படுவதாக நீர் வழங்கல் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்

நிலநடுக்க பாதிப்பு விபரங்களை தெரிவிக்குமாறு அம்பாறை அரசாங்க அதிபர் கோரிக்கை

alert_towers1.jpg அம்பாறை மாவட்டத்தின் கரையோரப் பகுதிகளில் கடந்த 15 ஆம் திகதி புதன்கிழமை காலை ஏற்பட்ட நில நடுக்கத்தினால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்த விபரங்களை அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் சுனில் கன்னங்கரா கோரியுள்ளார். கரையோரப் பிரதேசங்களான கல்முனை, சாய்ந்தமருது, காரைதீவு, நிந்தவூர், அட்டாளைச்சேனை, அக்கரைப்பற்று, ஆலையடிவேம்பு, திருக்கோவில், பொத்துவில், லகுகலை ஆகிய பத்து பிரதேச செயலாளர்களிடமிருந்தே இது தொடர்பான விபரங்கள் கோரப்பட்டுள்ளன.

அதிகளவில் பொத்துவில், லகுகலை பிரதேச செயலாளர் பிரிவுகளிலுள்ள வீடுகள், பொதுக் கட்டிடங்களில் வெடிப்புகள் ஏற்பட்டுள்ளதாகவும் தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் ஒலுவில் வளாகப் பகுதியில் புதிதாக அமைக்கப்பட்ட பல கட்டிடங்கள் அதிகமான வெடிப்புகள் ஏற்பட்டுள்ளதாகவும் ஏனைய கரையோரப் பகுதிகளிலுள்ள வீடுகள், பொதுக் கட்டிடங்களிலும் வெடிப்புகள் ஏற்பட்டிருப்பதாகவும் இதுவரை கிடைத்துள்ள தகவல்களில் இருந்து தெரியவருகிறது.

கடல்கோள் போன்ற அனர்த்தங்களை முன்கூட்டியே தெரிவிக்கக்கூடிய கருவிகள் நாட்டின் கரையோரப் பகுதிகளில் அமைப்பது போன்று நிலநடுக்கம் தொடர்பாக முன்னறிவித்தல் சமிக்ஞை நிலையங்களும் கரையோரத்தில் மூன்று இடங்களில் அமைக்கவிருப்பதாகவும் அவற்றில் ஒன்று பாணமைப் பகுதியிலும் அமைக்கப்படவிருப்பதாகத் தெரியவருகிறது. அம்பாறை மாவட்டத்தின் கரையோரப்பகுதியிலுள்ள மக்கள் கடல்கோள், நிலநடுக்கம் காரணமாக இந்தப் பீதி அச்சத்துடனும் இருப்பதாக பரவலாக அவதானிக்கக்கூடியதாக இருக்கிறது. இதற்கு முன்னோடியாக மழையும் காற்றும் இடி மின்னலும் காணப்படுவதே பீதிக்குக் காரணமென சொல்லப்படுகிறது.

விரல் அடையாளப் பதிவுமுறையை நடைமுறைப்படுத்த விசேட நடவடிக்கை

அமைச்சுக்கள் அரச நிறுவனங்கள் மற்றும் திணைக்களங்களில் தற்போதுள்ள நேரப்பதிவு முறைக்குப் பதிலாக விரல் அடையாளப் பதிவு முறையைத் துரிதமாக அமுல்படுத்தும் நடவடிக்கைகளை பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சு மேற்கொண்டு வருகிறது.

இது தொடர்பான சுற்றறிக்கை வெளியிடப் பட்டுள்ளதுடன் விரல் அடையாளப் பதிவு இயந்திரங்களைப் பொருத்தும் நடவடிக்கைகளைத் துரிதப்படுத்தவும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பொது நிர்வாக அமைச்சு தெரிவித்தது.

இத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் சில துறைகளில் எதிர்ப்புகள் கிளம்பிய போதிலும் உத்தியோகபூர்வமாக இதனை நடைமுறைப்படுத்தும் வகையிலேயே மேற்படி சுற்றறிக்கை பொதுநிர்வாக அமைச்சின் செயலாளரினால் வெளியிடப்பட் டுள்ளதாக அமைச்சின் உயரதிகாரியொருவர் தெரிவித்தார். இதன்படி குறிப்பிட்ட 09/2009ம் இலக்க சுற்றுநிருபம் நாடளாவிய சகல அமைச்சுக்கள், திணைக்களங்கள் மற்றும் அரச நிறுவனங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

இயந்திரங்கள் பொருத்தப்படும் நடவடிக்கைகள் முடிவடைந்ததும் சகல அரச நிறுவனங்களிலும் இச் செயற்திட்டம் நடைமுறைக்கு வருமென தெரிவித்த அவர், சகல அரச அதிகாரிகள் ஊழியர்களும் தமது உள்வருகை மற்றும் வெளிச்செல்கையை விரல் அடையாளப் பதிவு செய்தல் மூலமே உறுதிப்படுத்த வேண்டுமெனவும் மேலும் தெரிவித்தார்.

நிர்ணய விலைக்கட்டுப்பாட்டை மீறிய வர்த்தகர்களுக்கெதிராக சட்டநடவடிக்கை

தமிழ், சிங்கள புத்தாண்டு காலப்பகுதியில் அரசாங்கத்தின் நிர்ணய விலைக்கட்டுப்பாட்டை மீறி செயற்பட்ட 600 வர்த்தகர்களுக்கு எதிராக வழக்குத் தொடரவுள்ளதாக நுகர்வோர் பாதுகாப்பு அதிகாரசபையின் தலைவர் ரூமி மர்சூக் தெரிவித்தார்.

நாடளாவிய ரீதியில் மேற் கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கைகளின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அடுத்த வாரம் இவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார்கள் எனவும் அவர் தெரிவித்தார். அரிசி உட்பட அரசாங்கத்தால் விலை நிர்ணயம் செய்யப்பட்ட பொருட்களை அதிகரித்த விலையில் விற்பனை செய்த குற்றங்களுக்காகவே பெருமளவானோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தமிழ், சிங்கள புத்தாண்டு காலங்களில் பொதுமக்கள் குறைந்த விலையில் தமக்கான அத்தியாவசியப் பொருட்களைக் கொள்வனவு செய்யும் வகையில் அரசாங்கம் பல்வேறு செயற்பாடுகளை மேற்கொண்டிருந்தது. இதன் ஒரு அம்சமாக விசேட குழுக்கள் சுற்றிவளைப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டன.

அரசாங்கம் ஏற்கனவே வரிச்சலுகை உட்பட பல்வேறு சலுகைகளை வர்த்தகர்களுக்கு வழங்கியிருந்தது. எனினும் நிர்ணய விலையை மீறி சில வர்த்தகர்கள் அதிகரித்த விலையில் பொருட்களை விற்பனை செய்துள்ளனர். இத்தகையோரே கைது செய்யப்பட்டு வழக்குத் தொடரவுள்ளனரெனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

தெங்கு உற்பத்தியில் 21 வீதம் அதிகரிப்பு

இவ்வருடத்தில் 2859 மில்லியன் தேங்காய் உற்பத்தி இலக்காகக் கொள்ளப்பட்டுள்ளது. இந்த உற்பத்தியில் 2000 மில்லியன் தேங்காய் உள்ளூர் பாவனைக்காகப் பயன்படுத்தப்படுமென்றும் தெங்கு உற்பத்திச் சபை தெரிவித்துள்ளது.

இதேவேளை தெங்கு, தெங்குசார் உற்பத்தி ஏற்றுமதி மூலம் 2007 ஆம் ஆண்டில் 11270 மில்லியன் ரூபா வருமானம் கிடைத்துள்ளது. இந்த ஏற்றுமதி வருமானம் இம்முறை 21 வீத அதிகரிப்பைக் காட்டி இருப்பதாகவும் தெங்கு உற்பத்தி சபை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. 2008 ஆம் ஆண்டில் ஏற்றுமதி மூலம் 13667 மில்லியன் ரூபாவை வருமானமாகப் பெற முடிந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உள்ளூர் பாவனைக்கு எடுக்கப்பட்ட பின்னர் எஞ்சியுள்ள 859 மில்லியன் தேங்காய்களையும் தெங்குசார் உற்பத்தித் துறைக்குப் பயன்படுத்துமாறு அமைச்சர் டீ. எம். ஜயரத்ன உத்தரவிட்டுள்ளார்.

இலங்கை நிவாரணத்திற்கு 100 கோடி: இந்தியபிரதமர்

manmohan1.jpg இலங்கையில் போரினால் பாதிக்கப்பட்டுள்ள அப்பாவி தமிழர்களுக்கு உதவி செய்ய இந்தியா 100 கோடியை நிவாரணமாக வழங்குகிறது.

இலங்கையில் போரினால் பாதிக்கப்பட்டு பாதுகாப்பான இடம் தேடி அப்பாவி மக்கள் வெளியேறி வருகின்றனர். மேலும் உண்ண உணவு, தங்க இடவசதியின்றி தவித்து வருகின்றனர். அவர்களுக்கு உதவும் வகையில் ரூ.100 கோடி நிவாரணமாக வழங்க பிரதமர் மன்மோகன் சிங் உத்தரவிட்டுள்ளார் என்று மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி தெரவித்துள்ளார்.

மெனிக்பார்ம் முகாமுக்கு ஜோன் ஹோல்ம்ஸ் விஜயம்!

john_holmes.jpgஇலங்கை வந்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின், மனிதாபிமான பணிகளுக்கான துணைத் தலைமைச் செயலாளர்  ஜோன் ஹோல்ம்ஸ் இன்று வவுனியாவில் இடம்பெயந்தோர் தங்க வைக்கப்பட்டுள்ள மெனிக்பாம் முகாமுக்கு விஜயம் செய்த்hர்.

இடம்பெயர்ந்தோருக்கு அரசாங்கம் வழங்கியுள்ள வசதிகள் குறித்து மகிழ்ச்சி தெரிவித்த அவர் இடம் பெயர்ந்தோர் நலன் பேண 10 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்குவதாகவும் உறுதியளித்தார்.

மீள் குடியேற்றம் மற்றும் அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனும் இந்த விஜயத்தில் கலந்துகொண்டார்.

வன்னி மோதல் பகுதியிலிருந்து தமிழகத்திற்கு இலங்கை அகதிகள்

mullaitheevu.jpgஇலங் கையின் மோதல் வலயத்திலிருந்து தமிழ் அகதிகள் தமிழ்நாட்டுக்கு வருகைதர ஆரம்பித்திருப்பதாக “ரைம்ஸ் ஒவ் இன்டியா’ பத்திரிகை நேற்று ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தது. இந்த அகதிகளை முகாம்களுக்கு அனுமதிக்க முன்னர் அவர்களிடம் விசாரணை நடத்தப்படுவதாக தமிழகப் பொலிஸார் தெரிவித்தனர். தினமும் சராசரியாக மூன்று, நான்கு அகதிகள் தமிழக கரையில் படகு மூலம் வந்து இறங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.

அவர்களில் அநேகமானோர் மோதல் வலயத்திலிருந்தே வருகின்றனர். ஆனால் காயமடைந்தவர்கள் எவரும் இதுவரை வரவில்லை. 45 – 50 வயதிற்கு இடைப்பட்டவர்களும் 14 வயதிற்கு குறைவான சிறுவர்களுமே வந்துள்ளனர். நாகபட்டினம் பகுதியிலேயே தற்போது அதிகமானோர் வந்திறங்குகின்றனர் என்று சிரேஷ்ட அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

அகதிகளென்ற போர்வையில் புலி உறுப்பினர்கள் ஊடுருவுவதை தடுக்க தமிழக கரையோர நிர்வாகம் அதிக விழிப்புடன் இருப்பதாக அந்த அதிகாரி கூறியுள்ளார்.

தமிழ்நாட்டுக்கு வரும் ஒவ்வொரு அகதியையும் புலனாய்வுப்பிரிவினர் விசாரணை செய்கின்றனர். அந்த அகதிகள் கூறுவது துன்பங்கள் , மரணங்கள் பற்றியதாகவே உள்ளது. சண்டையில் ஏற்படும் துன்பங்களுக்கு அப்பால் அத்தியாவசியப் பொருட்கள் அவர்களுக்கு கிடைக்கவில்லை. உணவோ குடிக்க நீரோ இல்லை என்று அவர்கள் கூறுவதாக அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.

இடம்பெயர்ந்தோர் நலன்பேண சீனா 20 லட்சம் ரூபா அவசர நிவாரண உதவி

chinese-flag.jpgவன்னி யிலிருந்து அரச கட்டுப்பாட்டு பகுதிகளுக்கு இடம்பெயர்ந்து வந்திருக்கும் பொது மக்களுக்கான அவசர நிவாரண உதவிகளை வழங்கவென 20 இலட்சம் ரூபாவை இலங்கை அரசாங்கத்துக்கு அன்பளிப்பாக வழங்க இலங்கையிலுள்ள சீன தூதரகம் முன்வந்துள்ளது.

இலங்கைக்கான சீன தூதுவர் யங் க்ஸியுபிங் இவ்விடயம் தொடர்பாக வெளிநாட்டமைச்சர் ரோஹித்த போகொல்லாகமவிற்கு கடிதமொன்றையும் அனுப்பி வைத்துள்ளார். குறுகிய காலப் பகுதிக்குள் எதிர்பாராத அளவுக்கு பெருந்தொகை மக்கள் அரச கட்டுப்பாட்டு பகுதிகளுக்குள் இடம்பெயர்ந்து வந்திருப்பதனால் ஏற்பட்டிருக்கும் மனிதாபிமான நிலைவரம் தொடர்பாக கடந்த 23 ஆம் திகதி இலங்கையிலுள்ள வெளிநாட்டு தூதுவர்களுக்கு அமைச்சர் போகொல்லாகம அளித்த விளக்கத்தில் ஈர்க்கப்பட்டதன் காரணமாகவே இந்த அன்பளிப்பை வழங்க முன்வந்ததாக சீன தூதுவரின் கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இந்த அன்பளிப்பானது அரசாங்கத்தின் நிவாரண உதவி நடவடிக்கைகளுக்கு உதவியாக இருக்குமென்று நம்புவதாகவும் சீன தூதுவர் யங் க்ஸியுபிங் தெரிவித்திருக்கிறார்