சஜீர் அகமட் பி

சஜீர் அகமட் பி

இந்தோனேசியாவில் விமான விபத்து-78 பேர் பலி

indo.jpgஇந்தோ னேசியாவின் ஜாவா பகுதியில் உள்ள கிராமத்தில் விமானம் ஒன்று விழுந்து நொறுங்கியது. இதில் அதில் பயணம் செய்த 78 பேர் உயிரிழந்தனர்.

இந்த விமானம் இந்தோனேசிய ராணுவத்திற்குச் சொந்தமானதாகும். ஜகார்த்தாவிலிருந்து, ஜாவாவுக்குப் பறந்து கொண்டிருந்தபோது, மடியுன் என்ற இடத்தில் விமானம் கீழே விழுந்து நொறுங்கியது.

வயலில் விழுந்து நொறுங்குவதற்கு முன்பு அருகில் இருந்த கட்டடங்களில் மோதி விமானம் கீழே விழுந்துள்ளது. விழுந்த வேகத்தில் விமானம் தீப்பிடித்து எரிந்தது.

விமானம் விபத்தில் சிக்கியதற்கான காரணம் தெரியவில்லை. விமானத்தில் 100 பேர் இருந்ததாகவும், இதுவரை 78 பேர் உயிரிழந்திருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும் உயிரிழப்பு அதிகரிக்கும் எனக் கூறப்படுகிறது.

இந்த விமானம் சி-130 ரக ஹெர்குலிஸ் விமானம் ஆகும். வழக்கமான பயிற்சியில் அது ஈடுபட்டிருந்தபோது விபத்தில் சிக்கியது

பிரிட்டன் நாடாளுமன்ற சபாநாயகர் மைக்கேல் மார்ட்டீன் ராஜினாமா

_michaelmartin.jpgபிரிட்டன் நாடாளுமன்ற உறுப்பினர்களின் செலவினங்கள் தொடர்பான சர்ச்சையில் நாடாளுமன்ற சபாநாயகர் மைக்கேல் மார்ட்டீன் ராஜினாமா செய்துள்ளார்.

அலிக் அலுவிஹாரையின் இறுதிக் கிரியைகள் 21ம் திகதி

alu.jpgசுமார் அரை நூற்றாண்டு காலமாக அரசியலில் தம்மை அர்ப்பணித்துக் கொண்ட மாத்தளை மாவட்ட சிரேஷ்ட அரசியல்வாதியான அலிக் அலுவிஹாரயின் ஈமக்கிரியைகள் மாத்தளை பேர்னாட் அலுவிகாரை மைதானத்தில் எதிர்வரும் 21ஆம் திகதி இடம்பெற உள்ளது. 82 வயதைக் கொண்ட சிரேஷ்ட பாராளுமன்ற உறுப்பினரான அலிக் அலுவிகாரை கடந்த 17ஆம் திகதி கொழும்பில் தனியார் மருத்துவ மனையில் காலமானார்.

ஐ. தே. கட்சியின் நீண்ட கால உறுப்பினரான அவர் 1961ஆம் ஆண்டில் மாத்தளை மாநகர சபைக்கு மேயராக தெரிவு செய்யப்பட்டதன் மூலம் அரசியலில் புகுந்தார். பின்னர் அதே ஆண்டில் நடைபெற்ற பாராளுமன்ற இடைத் தேர்தலில் மாத்தளைத் தொகுதியின் எம். பியாகத் தெரிவானார்.

மத்திய மாகாண முன்னாள் முதலமைச்சரும் தற்போதைய உறுப்பினருமான வஸந்த அலுவிகாரை, மாத்தளை மாவட்ட எம். பி. ரஞ்சித் அலுவிகாரை, மாத்தளை மாநகர சபை உறுப்பினர் சர்ஜித் அலுவிகாரை, தோட்ட உற்பத்தியாளர் சஹன் அலுவிகாரை ஆகியோர் இவரது புதல்வர்களாவர். காலம்சென்ற அலிக் அலுவிகாரையின் ஈமக்கிரியைகள் 21ஆம் திகதி இடம்பெற முன்னர் மாத்தளை மாநகர சபையில் பொதுமக்களின் அஞ்சலிக்காக பூதவுடல் வைக்கப்படும். இதன் பின்னர் பேர்னாட் அலுவிகாரை விளையாட்டரங்கில் ஈமக்கிரியைகள் இடம்பெற உள்ளன.

வெலிக்கந்த பகுதியில் பஸ் ஒன்று ரயிலுடன் மோதியதில் 8 பேர் பலி, 27 பேர் காயம்

வெலிக்கந்த பகுதியில் இன்று காலை பஸ் ஒன்று ரயிலுடன் மோதியதில் இடம்பெற்ற விபத்தில் 5 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 20 பேர் காயமடைந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர் 

கொழும்பில் இன்று 24 மணி நேர நீர்வெட்டு

கொழும்பு மற்றும் அதனை அண்டிய சில பகுதிகளில் இன்று சனிக்கிழமை காலை 9 மணி முதல் மறுதினம் ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணி வரையான 24 மணி நேர நீர் வெட்டு அமுல் செய்யப்படவிருப்பதாக தேசிய நீர் வழங்கல் வடிகாலமை ப்புச் சபை அறிவித்துள்ளது.

மாளிகாகந்த நீர்த்தேக்கத்தின் பிரதான நீர் விநியோக குழாயிலும் மற்றும் ஹெவ்லொக் டவுனிலும் அத்தியாவசிய திருத்தப் பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டியிருப்பதனாலேயே இந்த நீர் வெட்டு அமுல் செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பில் கோட்டை, புறக்கோட்டை, கொம்பனித்தெரு, பம்பலப்பிட்டி, வெள்ளவத்தை, கிருலபனை, பூர்வாராம மாவத்த, ஹெவ்லொக் டவுண், திம்பிரிகஸ்யாய, பாம்மன்கட, நாரஹேன்பிட்டி, பொரல்ல, சஹஸ்புர, மருதானை, மாளிகாவத்தை, கருவாத்தோட்டம், கொட்டாஞ்சேனை, கிராண்ட்பாஸ், வித்தியாலய மாவத்தை, சென்றல் வீதி, ஆட்டுப்பட்டித்தெரு, ஜிந்துப்பிட்டி வீதி, ஆண்டிவால் வீதி, விவேகானந்தா மேடு, வாழைத்தோட்டம், அல்ஸ்ட்ரோஸ் வீதி, ஸ்டேஸ் வீதி, லெயாட்ஸ் ப்ரோட்வே, புளுமெண்டல் வீதி, மஹவத்த ஆகிய பிரதான வீதிகளிலும் அவற்றுடன் இணைந்த அனைத்து கிளை வீதிகளிலும் நீர் வெட்டு மேற்கொள்ளப்படவிருப்பதாக நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

கொலன்னாவ பெற்றோலியக் கூட்டுத்தாபனம், அரச தொழிற்சாலைகள், ஸ்ரன்வி மின் உற்பத்தி நிலையம், வெல்லம்பிட்டிய, சேதவத்த, வென்னவத்த, கெட்டுவில, மற்றும் இத்தமபவ்வ பகுதிகளிலும் நீர்வெட்டு அமுல் செய்யப் படவுள்ளது.

மட்டக்களப்பில் இன்றும் நாளையும் 25வது முதலமைச்சர்கள் மாநாடு

25th-cm-con.jpgமட்டக்களப்பில் இன்றும், நாளையும் (15,16) நடைபெறவுள்ள 25வது முதலமைச்சர்கள் மாநாட்டில் கலந்து கொள்வதற்கென எட்டு முதலமைச்சர்களும் இன்று (15) மாலை மட்டக்களப்பு நகரை வந்தடையவுள்ளனர். (16) நாளை காலை 9.00 மணிக்கு மட்டக்களப்பு மாநகர சபையின் நகர மண்டபத்தில் 25வது முதலமைச்சர்கள் மாநாடு நடைபெறவுள்ளது.

கிழக்கு மாகாண முதலமைச்சரும் மாநாட்டின் தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தனின் தலைமையில் இம்மாநாடு நடைபெறவுள்ளது. இம்மாநாட்டில் கிழக்கு மாகாண முதலமைச்சர் மற்றும் மேல்மாகாண முதலமைச்சர் பிரசன்ன ரணதுங்க வட மத்திய மாகாண முதலமைச்சர் பேட்டி பிரேமலால் திஸாநாயக்க தென்மாகாண முதலமைச்சர் ஷான் விஜலால் டி சில்வா, மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்க, சப்ரகமுவ மாகாண முதலமைச்சர் மஹிபால ஹேரத் ஊவா மாகாண முதலமைச்சர் காமினி விஜித விஜியமுனி சொய்சா, வடமேல் மாகாண சபை முதலமைச்சர் அத்துல விஜேசிங்க ஆகியோர் கலந்து கொள்ளவுள்ளனர்.

இம்மாநாட்டில் கலந்து கொள்ளும் முதலமைச்சர்கள் இன்று மாலை உத்தியோகபூர்வமற்ற முறையில் சந்தித்து மாகாணங்களின் அபிவிருத்திகள் தொடர்பாக கலந்துரையாடவுள்ளனர். இம்மாநாட்டில் பார்வையாளர்களாக கலந்து கொள்ளவென அழைக்கப்பட்டிருந்த மாகாணங்களின் பிரதம செயலாளர்கள் கிழக்கு மாகாண அமைச்சுக்களின் செயலாளர்கள் மற்றும் கிழக்கு மாகாண சபையின் அதிகாரிகள் நேற்று மாலை மட்டக்களப்புக்கு வருகை தந்துள்ளனர்.

இம்மாநாட்டிற்கென குறிப்பிட்ட ஊடகவியலாளர்கள் மட்டுமே அழைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இம்மாநாட்டில் கலந்து கொள்ளும் முதலமைச்சர்கள் மற்றும் அமைச்சர்கள், செயலாளர்கள், திணைக்களங்களின் தலைவர்களுக்கென இன்று இராப்போசனமொன்று கிழக்கு மாகாண முதல மைச்சரினால் வழங்கப்படவுள்ளது.

யாழ்.இலக்கிய வட்டத்தின் 43ஆவது ஆண்டு விழாவும் இலங்கை இலக்கியப் பேரவையின் பரிசளிப்பு விழாவும்

books.jpgயாழ்.  இலக்கிய வட்டத்தின் 43ஆவது ஆண்டு நிறைவு விழாவும் இலங்கை இலக்கிய பேரவையின் 20062007 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களுக்கான பரிசளிப்பு விழாவும் எதிர்வரும் பதினேழாம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை நல்லை திருஞானசம்பந்தர் ஆதீன மண்டபத்தில் நடைபெறவுள்ளது. இந்நிகழ்வுக்கு கலாநிதி கே.குணராசா தலைமை தாங்குவார். நிகழ்வில் ஆசியுரைகளை நல்லூர் திருஞானசம்பந்தர் ஆதீன முதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர பரமாச்சாரிய சுவாமிகள், அருட்தந்தை கலாநிதி சு.ஜெபநேசன் ஆகியோரும் வாழ்த்துரைகளை பேராசிரியர் அ.சண்முகதாஸ், ஆறு.திருமுருகன், திருமதி பத்தினியம்மா திலகநாயகம் போல் ஆகியோரும் வழங்குவார்கள். நிகழ்வுக்கு பிரதம விருந்தினராக யாழ்ப்பாண பல நோக்குக்கூட்டுறவுச் சங்கத் தலைவர் பி.கிரிதரன் கலந்து கொள்வார். இலங்கை இலக்கியப் பேரவையின் பரிசளிப்புரையை பேராசிரியர் பொன்.பாலசுந்தரம்பிள்ளை வழங்குவார்.

இலக்கியப் பேரவையினால் சிறந்த நூல்களாக பரிசுக்குரியதாக தெரிவு செய்யப்பட்ட நூல்களின் விபரங்கள் வருமாறு:

2006 ஆம் ஆண்டு :ஆய்வு: “மலாயக் குடிபெயர்வும் யாழ்ப்பாணச் சமூகமும்’ பேராசிரியர் எஸ்.சத்தியசீலன், நாவல்: “உதயக்கதிர்கள்’ திக்குவல்லை கமால், சிறுகதை: “இளங்கோவின் கதைகள்’ இளங்கோ, கவிதை: தகுதி நிலையில் எதுவும் கிடைக்கவில்லை, காவியம்: “திருநபி நாயகம்’ ஜின்னா ஷெரிப்புத்தீன், சிறுவர் இலக்கியம்: “உதவும் உள்ளங்கள்’ கவிஞர் மண்டூர் தேசிகன், சமயம்: “இந்து ஆலயங்களில் மருத்துவ சுகாதாரம்’ டாக்டர் எஸ்.சிவசண்முகராசா, பல்துறை: “தமிழர் மருத்துவம் அன்றும் இன்றும்’ கலாநிதி பால.சிவகடாட்சம், மொழிபெயர்ப்பு: தகுதியான நிலையில் எதுவும் கிடைக்கவில்லை.

2007 ஆம் ஆண்டு பிரசுரமானவற்றில் பரிசுக்குரியவையாக தெரிவு செய்யப்பட்டவை:

ஆய்வு: “தென்கிழக்கு முஸ்லிம் தேசத்தாரின் நாட்டாரியல்’ மருதூர் ஏ.மஜீத், நாவல்: “மீண்டும் வருவேன்’ செங்கை ஆழியான், சிறுகதை: “வரால் மீன்கள்’ எம்.எஸ்.அமருல்லா, கவிதை: “இரண்டு கார்த்திகைப் பறவைகள்’ எஸ்.புஷ்பானந்தன், காவியம்: தகுதி நிலையில் எதுவும் கிடைக்கவில்லை, நாடகம்: “அரங்கப்படையல்கள்’ கலாபூஷணம் க.செல்லத்துரை, சிறுவர் இலக்கியம்: “மரம் வெட்டியும் இரு தேவதைகளும்’ ஓ.கே.குணநாதன், சமயம்: “வெளிச்சத்தின் வேர்கள்’ தமிழ்நேசன், பல்துறை: “பண்டிதமணி சி.கணபதிப்பிள்ளை’ கலாநிதி செ.யோகராசா, மொழிபெயர்ப்பு: “பிளேக் கவிதைகள்’ வைரமுத்து சுந்தரேசன்.

பரிசு பெறும் வெளிமாவட்ட எழுத்தாளர்களுக்கு விழாக் குழுவினர் இலவச தங்குமிட வசதிகளை ஏற்பாடு செய்துள்ளனர்.

மற்றுமொரு நிகழ்வாக கனக.செந்தி கதாவிருது பெற்ற சிறுகதை தொகுப்பு நூலின் வெளியீட்டு விழாவும் இடம்பெறும். நூலின் வெளியீட்டுரையை பேராசிரியர் எஸ்.சிவலிங்கராஜா நிகழ்த்துவார். முதற் பிரதியை அ.த.கிருஷ்ணசாமி பெற்றுக் கொள்வார்.

இந்நூலில் இடம்பெற்ற சிறுகதைகளுக்காக பரிசும் பாராட்டும் பெறும் சிறுகதை எழுத்தாளர் விபரங்கள் வருமாறு: (இக்கதைகள் ஜூன் 2007 முதல் ஜூலை 2008 வரை பத்திரிகைகளில் வெளியாகியிருந்தன)

“வைகறை மேகங்கள்’ கந்தர்மடம் தி.மயூரன் (தினக்குரல் 22.06.2007), “இது ஒரு அழிவுக்காலம்’ ஆரையம்பதி ஆ.தங்கராசா (தினக்குரல் 21.10.2007), “சகுனங்கள்’ கனகாம்பிகை கதிர்கான் (வீரகேசரி 21.10.2007), “மதமாற்றம்’ கே.ஆர்.டேவிட் (தினக்குரல் 06.01.2008), “பள்ளிக்கூடம்’ மட்டுவில் ஞானகுமரன் ஜேர்மனி (வீரகேசரி 02.03.2008), “பெரியத்தான்’ சந்திரகாந்தன் முருகானந்தன் (தினக்குரல் 02.03.2008), “அதுவும் சரிதான்’ மா.பாலசிங்கம் (தினக்குரல் 23.03.2008), “வேடத்தனம்’ மல்லிகை சி.குமார் (தினக்குரல் 30.2.2008) “வாழத்துடிக்கும் இதயங்கள்’ ந.பாலேஸ்வரி (தினக்குரல் 22.06.2008), “அதிசயம்’ தேவகி கருணாகரன் அவுஸ்திரேலியா (வீரகேசரி 20.07.2008), “ஒப்பாரி கோச்சி’ மு.சிவலிங்கம் (வீரகேசரி 13.07.2008), “துயரம் தோய்ந்த பயணத்திலே’ எஸ்.டேவிட் (தினக்குரல் 20.07.2008), “அகதிமணம்’ வெள்ளை மணாளன் (தினக்குரல் 06.03.2008), “யாதும் ஊரே’ செ.குணரத்தினம் (வீரகேசரி 27.07.2008).

மற்றுமொரு நிகழ்வாக நாவேந்தன் விருது வழங்கல் 2007, சிறுகதை தொகுப்பாக வழங்கப்படவுள்ளது. பரிசளிப்புரையை பேராசிரியர் இரா.சிவச்சந்திரன் நிகழ்த்துவார். பரிசுக்குரியவர்களாக “இன்னொரு புதிய கோணம்’ கலாபூஷணம் தெணியான், “வற்றாத நதி’ செங்கை ஆழியான் ஆகியோருக்கு வழங்கப்படுகிறது. பரிசினை வைத்திய கலாநிதி த.சிவானந்தன் வழங்கவுள்ளார். நன்றியுரையை திருமதி யோகேஸ்வரி சிவப்பிரகாசம் நிகழ்த்துவார்.

இடம் பெயர்ந்தவர்களுக்கு கூட்டுத்தாபன நிவாரண உதவி

kumarawelgama.jpgவடக்கில் இடம்பெயர்ந்துள்ள மக்களுக்கு கூட்டுத்தாபனங்கள் ஊடாக  நிவாரண உதவிகளை வழங்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. கைத்தொழில் அபிவிருத்தி அமைச்சர் குமார வெல்கம இதற்கான அமைச்சரவைப் பத்திரத்தை சமர்பித்திருந்தார்.

அதன்படி நிவாரண உதவித்தொகையாக ஐந்து நிறுவனங்களால் 3.8 மில்லியன் ரூபா வழங்கப்படவுள்ளது.

முஸ்லிம் கவுன்சிலின் நிவாரணப் பொருட்கள் கையளிப்பு

muslim_council_donation.jpgவடக்கிலிருந்து இடம்பெயர்ந்துள்ள மக்களுக்கு வழங்குவதற்காக முஸ்லிம் கவுன்சிலினால் சேகரிக்கப்பட்ட நிவாரணப் பொருட்கள் இன்று ஊடகத்துறை அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தனவிடம் கையளிக்கப்பட்டன. இது தொடர்பான வைபவம் இன்று முற்பகல் அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்றது. இவ்வைபவத்தில் கலந்துகொண்ட முஸ்லிம் கவுன்சிலின் பிரதிநதிகள் 15 இலட்சம் ரூபாய் பெறுமதியான நிவாரணப் பொருட்களை அமைச்சரிடம் கையளித்தனர்.

இந்நிகழ்வில் உரையாற்றிய அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா,  இலங்கையிலுள்ள முஸ்லிம் அமைப்புக்களின் ஒன்றியமான முஸ்லிம் கவுன்சில் வடக்கிலிருந்து இடம்பெயர்ந்தோருக்கு ஏற்கனவே பல இலட்சம் ரூபாய் பெறுமதியான நிவாரணப் பொருட்களை அனுப்பி வைத்துள்ளது. இன்று 15 இலட்சம் ரூபாய் பெறுமதியான நிவாரணப் பொருட்களை வழங்கியுள்ளனர். இதற்காக அந்த அமைப்புக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன் எனக் கூறினார்.

பகலிரவு டெஸ்ட் போட்டியை நடத்த ஐ.சி.சி. ஆலோசனை

28icc.jpgசர்வதேச கிரிக்கெட் கௌன்ஸில் பகலிரவு டெஸ்ட் போட்டியை நடத்துவது குறித்து பரிசீலித்து வருகிறது. லண்டனில் கிளைவ் லொயிட் தலைமையில் சர்வதேச கிரிக்கெட் கௌன்ஸிலின் கிரிக்கெட் குழு கூட்டம் ஆரம்பமானது. இரண்டு நாட்கள் நடைபெறும் இந்த கூட்டத்தின் போதே பகலிரவு டெஸ்ட் போட்டிகளை நடத்துவது குறித்து ஆலோசிக்கப்படவுள்ளது.

பார்வையாளர்களின் வருகையை அதிகரிக்கும் வகையில் ஒருநõள் போட்டிகளை போன்று டெஸ்ட் போட்டிகளையும் பகலிரவு ஆட்டங்களாக நடத்தலாம் எனும் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.

மேலும், டெஸ்ட் போட்டிகளில் நடுவர்களின் முடிவை எதிர்த்து முறையீடு செய்ய வாய்ப்பளிக்கும் முறையை தொடர்வது குறித்தும் அலோசிக்கப்படவுள்ளது. தற்போது இந்த முறை பரிசோதனை முறையில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. நேற்று இது குறித்து முடிவு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது

இந்த குழுவின் பரிந்துரை கிரிக்கெட் கௌன்ஸிலின் முதன்மை குழுவுக்கு அனுப்பி வைக்கப்படும். ஜூன் மாத இறுதியில் இந்த குழு கூடி இறுதி முடிவு எடுக்கும்.