சஜீர் அகமட் பி

சஜீர் அகமட் பி

உலகக் கிண்ண 2 ஆவது அரையிறுதியாட்டம் இலங்கை – மேற்கிந்தியா இன்று மோதல்

muralitharan-sri-lankas.jpg20 ஓவர் உலகக் கிண்ணத்தில் இன்று நடைபெறும் 2 ஆவது அரையிறுதியாட்டத்தில் இலங்கைமேற்கிந்திய அணிகள் மோதுகின்றன.  இந்த முறை கிண்ணத்தைக் கைப்பற்ற தீவிரமாக உள்ள இலங்கை அணி மேற்கிந்தியாவின் சவாலை எதிர்கொள்கிறது. இலங்கை அணியின் பந்துவீச்சாளர்கள் சிறப்பாக பந்து வீசி வருவதும் அணிக்குப் பலமாக அமைந்துள்ளது. துடுப்பாட்டத்திலும் அவர்கள் சிறப்பாகச் செயற்படுகின்றனர்.

அதேநேரத்தில் மேற்கிந்திய அணி பல போட்டிகளில் வெற்றி பெற்று மிகுந்த நம்பிக்கையோடு உள்ளது.

 மேற்கிந்திய அணியை வெல்வோம் – சங்கக்கார நம்பிக்கை

“ருவென்ரி20′ உலகக்கிண்ணத் தொடரில் இலங்கை அணி தொடர்ந்து ஐந்து போட்டிகளில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறியிருப்பது மகிழ்ச்சியளிப்பதாக அணியின் கப்டன் குமார் சங்காக்கார தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் கூறுகையில்;

இலங்கை அணியின் இந்த வெற்றிகளுக்கு தொடக்க வீரர்களான டில்ஷான், ஜெயசூரிய ஜோடி முக்கிய பங்குவகிக்கிறது தவிர பந்துவீச்சில் லசித் மலிங்க, முரளிதரன், மெண்டிஸ் உள்ளிட்ட வீரர்கள் இக்கட்டான நேரங்களில் துல்லியமான பந்துவீச்சு வெற்றிக்கு நம்பிக்கையளித்தனர்.

இன்று ஓவலில் நடக்கவுள்ள அரையிறுதியில் மேற்கிந்தியாவை எதிர்கொள்கிறோம். இவர்களுக்கு எதிரான லீக் போட்டியில் வெற்றி பெற்றிருப்பது எங்களுக்கு சாதகமான விடயம். தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த விரும்புகிறோம். இம்முறை இறுதியாட்டத்திற்கு முன்னேறி கிண்ணத்தை வெல்வோமென்று தெரிவித்தார்.

‘ருவன்டி-20’ கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டிக்கு பாகிஸ்தான் தெரிவாகியது – 7 ஓட்டங்களால் தென்னாபிரிக்கா தோல்வி

20-20pakisthan.jpgஉலகக் கிண்ண ருவன்டி-20 கிரிக்கெட் தொடரின் முதலாவது அரையிறுதிப் போட்டியில் வெற்றியீட்டிய பாகிஸ்தான் அணி இறுதிப் போட்டிக்குத் தெரிவாகியுள்ளது.

இங்கிலாந்தின் நட்டிங்ஹேம் நகரிலுள்ள ட்ரெட்ன்ட் ப்ரிட்ஜ் மைதானத்தில் நேற்று தென்னாபிரிக்க அணியை எதிர்த்தாடிய பாகிஸ்தான் அணி 7 ஓட்டங்களால் வெற்றி பெற்றது. இத்தொடரில் ஒரு போட்டியிலும் தோல்வியுறாது சிறப்பாக ஆடிய தென்னாபிரிக்க அணி நேற்றைய போட்டியில் பாகிஸ்தான் அணியின் சகலதுறை ஆட்டக்காரர் ஷஹீத் அப்ரிடியின் சிறந்த ஆட்டத்தால் தோல்வியடைந்ததோடு இறுதிப் போட்டிக்குத் தெரிவாகும் வாய்ப்பையும் இழந்தது.

நேற்றைய போட்டியில் நாணயச் சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி அப்ரிடியின் அதிரடி ஆட்டத்தால் 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கட்டுக்களை இழந்து 149 ஓட்டங்களைப் பெற்றது. இதில் அப்ரிடி 34 பந்துகளை எதிர்கொண்டு 8 பவுண்டரிகள் அடங்கலாக 51 ஓட்டங்களைப் பெற்றார். பின்னர் 150 ஓட்டங்கள் எனும் வெற்றி இலக்கை நோக்கித் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்க அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கட்டுக்களை இழந்து 142 ஓட்டங்களை மட்டுமே பெற்று 7 ஓட்டங்களால் தோல்வியடைந்தது.

தென்னாபிரிக்க அணி சார்பாக ஜெக் கலிஸ் மற்றும் டுமினி ஆகியோர் மிகவும் சிறப்பாக ஆடி முறையே 64,  44 ஓட்டங்களைப் பெற்றனர். எனினும் பந்துவீச்சிலும் திறமை காட்டிய அப்ரிடி 16 ஓட்டங்களுக்கு 2 விக்கட்டுக்களை வீழ்த்தினார். தென்னாபிரிக்க அணியின் முக்கிய இரு விக்கட்டுக்களைக் கைப்பற்றியதோடு துடுப்பாட்டத்திலும் பிரகாசித்த அப்ரிடி நேற்றைய போட்டியின் சிறப்பாட்டக்காரராகவும் தெரிவானார்.

இதேவேளை,  இத்தொடரின் இரண்டாவது அரையிறுதிப் போட்டி இலங்கை மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் ஆகிய அணிகளுக்கிடையில் இன்று நடைபெறவுள்ளது. இதில் வெற்றி பெறும் அணி நாளை மறுநாள் லண்டன் லோட்ஸ் மைதானத்தில் நடைபெறவுள்ள இறுதிப் போட்டியில் பாகிஸ்தானை எதிர்த்தாடும். 

உலக கிண்ண கால்பந்தாட்டத்துக்கு வடகொரியா முதற்தடவையாக தகுதி

football.jpgவடகொரியா 43 வருட இடைவெளிக்குப்பின்னர் முதற் தடவையாக உலக கிண்ணத்துக்கான கால்பந்தாட்ட இறுதிச் சுற்றில் விளையாட தகுதிபெற்றுள்ளது. 1966 ஆம் ஆண்டுக்குப் பின்னர் அந்த அணிக்கு இந்த வாய்ப்புக் கிட்டியுள்ளது.

ரியாத் நகரில் மன்னர் பஹத் விளையாட்டரங்கில்; 66 ஆயிரம் பார்வையாளர்கள் மத்தியில் நேற்று நடைபெற்ற சவூதி அரேபியா அணியுடனான தகுதிகாண் கால்பந்தாட்டப் போட்டி வெற்றி தோல்வியின்றி முடிவுற்றதையடுத்து வடகொரியாவுக்கு இந்த வாய்ப்புக் கிடைத்துள்ளது.

அதன்படி 2010 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள உலக கிண்ண கால்பந்தாட்ட இறுதிச்சுற்றில் ஆசிய பிராந்தியம் சார்பாக விளையாட வடகொரியா தகுதி பெற்றுள்ளது. தென்கொரியா, ஜப்பான்,அவுஸ்திரேலியா ஆகியன ஆசியா சார்பாக தெரிவு செய்யப்பட்டுள்ள ஏனைய அணிகளாகும்.

கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை ஓகஸ்ட் 11 இல் ஆரம்பம் – ஓகஸ்ட் 23 இல் ஐந்தாம் ஆண்டுக்கான புலமைப் பரிசில் பரீட்சை

examination_department.jpgஇவ் வருடம் எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் நடைபெறவுள்ள கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை மற்றும் ஐந்தாம் ஆண்டுக்கான புலமைப் பரிசில் பரீட்சை ஆகியவற்றை நடத்துவதற்கான நாட்களை பரீட்சைத் திணைக்களம் முடிவு செய்துள்ளது. அதன்படி கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை எதிர்வரும் ஓகஸ்ட் 11 ஆம் திகதிமுதல் செப்டம்பர் 05 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.

இதேவேளை ஐந்தாம் ஆண்டுக்கான புலமைப் பரிசில் பரீட்சையை எதிர்வரும் ஓகஸ்ட் 23 ஆம் திகதி நடத்துவதற்கு பரீட்சைத் திணைக்களம் திட்டமிட்டுள்ளது.

இலங்கை அணி மீது பாகிஸ்தானில் தாக்குதல் நடத்திய பயங்கரவாதக் குழு பிரதான அங்கத்தவர் கைது!

sl-cricket-teamattack.jpgஇலங்கை கிரிக்கெட் அணியினர் மீது பாகிஸ்தானில் தாக்குதல் மேற்கொண்ட பயங்கரவாதக் குழுவின் பிரதான அங்கத்தவர் ஒருவரை அந்நாட்டுப் பொலிஸார் கைது செய்துள்ளனர். பாகிஸ்தானில் தடை செய்யப்பட்டுள்ள தாலிபான் அமைப்பொன்றின் உறுப்பினரான இந்த நபர் நேற்று லாகூர் நகரில் முகம் மறைக்கப்பட்ட நிலையில் ஊடகவியலாளர் முன்னிலையில் நிறுத்தப்பட்டார்.

இலங்கை கிரிக்கெட் அணியினர் மீது தாக்குதல் நடத்தியதை ஏற்றுக்கொண்ட இந்த நபர்,  இத்தாக்குதலில் 7 தீவிரவாதிகள் சம்பந்தப்பட்டிருப்பதாகவும் இலங்கை வீரர்களைக் கடத்திச் செல்வதே தமது இலக்காக இருந்தது என்றும் கூறியதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

தாக்குதல் நடப்பதற்கு இரண்டு தினங்களுக்கு முன்னர் தமது குழுவினர் லாகூர் நகருக்கு வந்து அங்குள்ள சிறு வீடொன்றினுள் இருந்தே தாக்குதல் திட்டங்களை வகுத்ததாக அவர் ஊடகவியலாளர்களிடம் தெரிவித்தார்.

இலங்கை அணி கடந்த மார்ச் மாதம் பாகிஸ்தானுக்கு கிரிக்கெட் சுற்றுலா மேற்கொண்டிருந்தபோது இலங்கை வீரர்கள் பயணம் செய்த பஸ் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இத்தாக்குதலில் பாகிஸ்தான் பொலிஸ் உத்தியோகத்தர்கள் 6 பேர் கொல்லப்பட்டதோடு இலங்கை வீரர்கள் 6 பேரும் ஒரு பயிற்றுவிப்பாளரும் காயமடைந்தமை குறிப்பிடத்தக்கது. 

இலங்கையில் நடக்கும் கிரிக்கெட் போட்டிகளை ஒளி ஒலிபரப்பும் உரிமை அரச ஊடகங்களுக்கு

anura_priyadarshana_yapa_1806_press.jpgஎதிர் வரும் காலங்களில் இலங்கையில் நடைபெறவுள்ள சர்வதேச கிரிக்கெட் போட்டிகளை ஒளி,  ஒலிபரப்பும் உரிமையை அரச ஊடகங்களுக்கு வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளரும் தகவல் மற்றும் ஊடகத்துறை அமைச்சருமான அநுர பிரியதர்ஷன யாப்பா தெரிவித்தார்.

நேற்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக இன்று இடம்பெற்ற அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று முற்பகல் இடம்பெற்ற இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சர் மேலும் குறிப்பிடுகையில், விரைவில் இலங்கையில் நடைபெறவுள்ள இலங்கை-பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான போட்டியை அரச ஊடகங்கள் ஒளி,  ஒலிபரப்புச் செய்யும்.

இலங்கை கிரிக்கட் அணியினர் ஒப்பந்தங்களை மேற்கொள்வது மற்றும் ஒப்பந்தங்களை ரத்துச் செய்வது தொடர்பான நடவடிக்கைகளை கையாளும் அதிகாரத்தை விளையாட்டுத்துறை அமைச்சுக்கு வழங்கவும் அரசாங்கம் தீர்மானித்துள்ளது என்றும் அமைச்சர் கூறினார்.

வட மாகாண மக்களுக்கு தனித்துவமான அரசியல் தீர்வு – பசில் ராஜபக்ஷ எம். பி. தெரிவிப்பு

basil.jpgவட மாகாண மக்களுக்கு நாட்டுக்கே உரிய தனித்துவமான அரசியல் தீர்வொன்றை அரசாங்கம் பெற்றுக் கொடுக்குமென்று ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும்,  வட மாகாண அபிவிருத்திக்கான ஜனாதிபதி செயலணியின் தலைவருமான பசில் ராஜபக்ஷ தெரிவித்தார். வட மாகாணத்தின் அபிவிருத்திப் பணிகள் தனித்துவமான செயற் திட்டங்கள் மூலம் மேற்கொள்ளப்படுமென்றும் பசில் ராஜபக்ஷ தெரிவித்தார்.

வடக்கின் வசந்தம் அபிவிருத்தி செயற்றிட்டம் தொடர்பாக வவுனியா மாவட்டச் செயலகத்தில்; நடைபெற்ற கூட்டமொன்றிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

“வடக்கின் வசந்தம் அபிவிருத்தித் திட்டத்தில் அந்தப் பிரதேசங்களைச் சேர்ந்த அதிகாரிகளை ஈடுபடுத்துகின்றோம். அந்த மக்களுக்குத் தேவையான அடிப்படை உட்கட்டமைப்பு வளங்களை மேம்படுத்தி,  தனித்துவமான ஓரு அரசியல் தீர்வைப் பெற்றுக் கொடுப்போம்.

அனுசரணை செயற் திட்டத்திற்கும் அப்பால்,  நாட்டுக்குப் பொருத்தமான செயற்திட்டத்தையே வடக்கில் நடைமுறைப்படுத்துகின்றோம்.

வீதி அபிவிருத்தி,மின்சாரம்,குடிநீர், விவசாயத்துறை மேம்பாடு ஆகிய பணிகளைத் துரிதமாக மேற்கொள்ள திட்டமிட்டு செயற்படுகிறோம். யாழ்ப் பாணத்திற்கான ஏ-9 பாதை, வவுனியா ஹொரவப் பொத்தானை வீதி உள்ளிட்ட வட பகுதியின் முக்கிய வீதிகளை அபிவிருத்தி செய்ய நடவடிக்கை எடுத்துள்ளோம் என மேலும் தெரிவித்தார்.

இராகலை நகரில் ஒரே நேரத்தில் 10 கடைகளில் கொள்ளை

நேற்று முன்தினம் இரவு கடைகளை மூடிவிட்டுச் சென்ற வர்த்தகர்கள், நேற்றுக் காலை கடைக்கு வந்தபோது கடை கள் உடைத்திருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர்.

பஸ் தரிப்பு நிலையம், உடபுசல்லாவை வீதி, பிரதான வீதி ஆகியவற்றில் உள்ள கிராமிய வங்கி, மளிகைக்கடை, மதுபான விற்பனை சாலை, புடவைக் கடை, இரசாய னப் பொருள் விற்பனை நிலையம், உள்ளிட்ட பத்து நிறுவனங்களிலும் ஒரே நேரத்தில் கொள்ளை மேற்கொள் ளப்பட்டிருக்கலாம் எனப் பொலிஸார் தெரிவித்தனர்.

நள்ளிரவு பன்னிரண்டு மணிக்குப் பின்னரே கொள்ளையர்கள் தமது கைவரிசையைக் காண்பித்துள்ளதாக வர்த்தகர்கள் சந்தேகிக்கின்றனர். கடைகளின் பூட்டுகள் லாவகமாகக் கழற்றப்பட்டுள்ளதோடு, காசுப்பெட்டிகளிலிருந்த பணம் எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.

கடைகளில் பெருமளவு பணம் இருக்காததால், கொள்ளையர்கள் பொருட்களை உடைத்துச் சேதப்படுத்திவிட்டுச் சென்றுள்ளனர். இதில் 10, 20 பேர் சம்பந்தப்பட்டிருக்கலாம் என சந்தேகி க்கப்படுகிறது. இந்தச் சம்பவம் குறித்து நுவரெலியா பொலிஸாருடன் இணைந்து இராகலை பொலிஸார் விசாரணைகளை மேற்கொள்கின்றனர். பொலிஸ் மோப்ப நாய்களும் புலனாய்வில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

யாழ். வவுனியா தேர்தல்களுக்கான வேட்புமனுக்கள் இன்று முதல் ஏற்பு

election_ballot_.jpgயாழ்ப் பாணம் மாநகர சபை மற்றும் வவுனியா நகர சபை ஆகிய தேர்தல்களில் போட்டியிடுவதற்கான வேட்புமனுக்கள் இன்று முதல் ஏற்றுக்கொள்ளப்படும் என தேர்தல் செயலகம் அறிவித்துள்ளது.

இத்தேர்தல்களில் போட்டியிடவுள்ள அரசியல் கட்சிகளும் சுயேச்சைக் குழுக்களும் எதிர்வரும் 25ஆம் திகதி நண்பகல் 12.00 மணி வரை வேட்புமனுக்களைத் தாக்கல் செய்ய முடியும்.

இதேவேளை, சுயேச்சைக் குழுக்கள் எதிர்வரும் 24ஆம் திகதி நண்பகல் 12.00 மணி வரை கட்டுப்பணம் செலுத்தலாம். யாழ். மாநகர சபைத் தேர்தலில் போட்டியிடவுள்ள சுயேச்சைக் குழுக்கள் 7250 ரூபாவும் வவுனியா நகர சபைத் தேர்தலுக்கு 3750 ரூபாவும் கட்டுப்பணமாக செலுத்த வேண்டும்.

யாழ். மாநகர சபைக்கு முதல்வர், பிரதி முதல்வர், தலைவர் மற்றும் உப தலைவர் உள்ளடங்கலாக 23 பேரும் வவுனியா நகர சபைக்கு 11 பேரும் தெரிவு செய்யப்படுவார்களென்றும் தேர்தல் செயலகம் மேலும் குறிப்பிட்டுள்ளது

மாலைதீவு ஜனாதிபதி இன்று இலங்கைக்கு விஜயம்

moldivian-president.jpgமாலைதீவு ஜனாதிபதி மொஹமட் நசீத் இன்று பிற்பகல் இலங்கைக்கு வருகை தரவுள்ளார்.

இரண்டு நாள் விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கைக்கு வருகை தரும் மொஹமட் நசீத் நாளை அநுராதபுரத்துக்கு விஜயம் செய்யவுள்ளதோடு அங்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவைச் சந்தித்துக் கலந்துரையாடவுள்ளார்.

மாலைதீவு ஜனாதிபதி இவ்விஜயத்தின்போது வெளிவிவகார அமைச்சர் ரோஹித போகொல்லாகமவையும் சந்தித்து இருதரப்பு உறவுகள் தொடர்பாகக் கலந்துரையாடவுள்ளார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.