சஜீர் அகமட் பி

சஜீர் அகமட் பி

புலிகளின் தலைவர் பிரபாகரன் ஆயுதங்களைக் களைந்து சரணடைய வேண்டும். -கருணா எம்.பி.

karuna.jpg
எஞ்சியுள்ள விடுதலைப் புலிகளின் உயிரையும் புலிகளின் தலைவர் பிரபாகரனின் உயிரையும் காப்பாற்றிக் கொள்வதற்கான இறுதிச் சந்தர்ப்பம் இதுவாகும். புலிகள் ஆயுதங்களைக் கீழே வைத்துவிட்டு படையினரிடம் சரணடைவதன் ஊடாக இவ்விறுதிச் சந்தர்ப்பத்தை பிரபாகரன் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். கிளிநொச்சி படையினரின் பூரண கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளமை தொடர்பாக ஜனாதிபதி நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையையடுத்து கருத்துத் தெரிவிக்கையிலேயே கருணா எம்.பி மேற்கண்டவாறு தெரிவித்தார்.

கடந்த காலங்களில் நடைபெற்ற மோதல்களில் அப்பாவி இளைஞர்கள், யுவதிகளின் உயிர்கள் பலியாகின. இன்னமும் பலியாகத் தேவையில்லை. ஆயுதங்களை கீழே வைத்து அரசியல் நீரோட்டத்துக்குள் வருவதன் ஊடாக சுபீட்சமான ஒரு எதிர்காலத்தை அடையலாம். அப்பாவி இளைஞர்களின், யுவதிகளின் உயிர்கள் பலியாவதை தடுக்கலாம். எனவே, புலிகளின் தலைவர் பிரபாகரன் ஆயுதங்களைக் களைந்து சரணடைய வேண்டும் என்றும் கருணா எம்.பி. கேட்டுக் கொண்டுள்ளார். அத்துடன் கிளிநொச்சியை கைப்பற்றிய படையினருக்கும் ஜனாதிபதிக்கும் முப்படைத் தளபதிகளுக்கும் பாதுகாப்பு செயலாளருக்கும் வாழ்த்துக்களையும் அவர் தெரிவித்துக் கொண்டார்.

வன்னி மண் முழுமையாக இன்னும் சில நாட்களில் படையினரால் மீட்கப்பட்டு அங்கு அகதிகளாக்கப்பட்டு அடக்கு முறைக்குள் அடங்கிக் கிடக்கும் எமது உறவுகள் பிரபா கும்பலின் பிடியிலிருந்து மீட்கப்படும் போதுதான் அனைத்துலக நாடுகளில் வாழும் உறவுகள் நிம்மதி அடைவார்கள் என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை. சிதைந்து கிடக்கும் எமது தமிழ்ப் பிரதேசங்களை மீளக் கட்டியெழுப்பி ஒளி பொருந்திய ஓர் அபிவிருத் திப் பாதையில் மக்களையும் தேசத்தையும் வழிப்படுத்தி எம்மக்கள் நிம்மதியான சுதந்திரக் காற்றைச் சுவாசிக்க ஜனநாயக வழியே ஒரே தீர்வு என்பதை பிரபாகரன் உணரும் காலம் வெகுதொலைவில் இல்லை.

இன்று வடக்கு, கிழக்கிலிருந்து மேல்மாகாணத்தில் வதிபவர்கள் குறித்த கணக்கெடுப்பு

police.jpgவடக்கு,  கிழக்கு பகுதியிலிருந்து மேல் மாகாணத்தில் 2003 ஆம் ஆண்டிற்கு பின்னர் தற்காலிகமாகவோ, நிரந்தரமாகவோ வதிபவர்கள் தொடர்பான கணக்கெடுப்பு ஒன்றை பொலிஸ் திணைக்களம் இன்று மேற்கொள்கின்றது. மேல் மாகாணத்திற்கு உட்பட்ட சகல பொலிஸ் பிரிவுகளிலும் இன்று காலை 8.00 மணி தொடக்கம் மாலை 6.00 மணி வரை இந்த கணக்கெடுப்பு பதிவுகள் இடம்பெறவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ரஞ்சித் குணசேகர தெரிவித்தார். கொழும்பு, கம்பஹா மற்றும் களுத்துறை ஆகிய மாவட்டங்களில் வதிபவர்களே இந்த பதிவுக்கு உட்படுத்தப்படவுள்ளனர்.

எனவே தற்காலிகமாகவோ, நிரந்தரமாகவோ மேல் மாகாணத்தில் வதிபவர்கள் ஏற்கனவே பதிவு செய்தவர்கள், பதிவு செய்யாதவர்கள் அனைவரும் தமது பகுதிகளிலுள்ள பொலிஸ் நிலையங்களிலோ அல்லது பொலிஸ் நிலையங்களில் குறிப்பிடப்படும் நிலையங்களுக்குச் சென்று கணக்கெடுப்புக்கு உட்படுத்திக்கொள்ளுமாறு அவர் மேலும் குறிப்பிட்டார்.

பொலிஸ் திணைக்களம் ஏற்கனவே மேற்கொண்ட கணக்கொடுப்பு நடவடிக்கை போன்றதே இந்த கணக்கெடுப்பு என்றும் பொலிஸ் ஊடக பேச்சாளர் குறி ப்பிட்டார். கணக்கெடுப்பு நடவடிக்கைகளுக்கு அந்தந்த பொலிஸ் பிரிவுகளினால் நியமிக்கப்பட்டுள்ள பாதுகாப்புக் குழுக்களின் உதவியுடனே இந்த கணக்கெடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்த எஸ்.எஸ்.பி. ரஞ்சித் குணசேகர, பதிவுக்கு வரும் மக்கள் எந்தவித தங்குதடையும், தாமதங்களுமின்றி அவசர அவசரமாக தகவல்களை வழங்கிச் செல்ல சகல நடவடிக்கைகளையும் பொலிஸ் திணைக்களம் மேற்கொண்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

விடுதலைப் புலிகள் அமைப்புடன் இலங்கை அரசு பேச வேண்டும் – அமெரிக்கா யோசனை

kili-04.jpg
இலங்கைத் தமிழர் பிரச்சினை குறித்தும், அவர்களது கோரிக்கை தொடர்பாகவும் விடுதலைப் புலிகள் அமைப்புடன் இலங்கை அரசு பேச வேண்டும் என அமெரிக்கா யோசனை தெரிவித்துள்ளது. கிளிநொச்சியின் வீழ்ச்சிக்குப் பின்னர் அதுகுறித்து கருத்து தெரிவித்த அமெரிக்கா இவ்வாறு யோசனை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அமெரிக்க வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் கார்டன் டூகிட் கூறுகையில், இலங்கை அரசு நேற்று ராணுவ ரீதியிலான நடவடிக்கையில் வெற்றி பெற்றுள்ளது. அதேசமயம், தமிழர்களின் நியாயமான கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வகையில் இலங்கை அரசும் விடுதலைப் புலிகளும் பேச்சு நடத்த வேண்டும் என்பதே அமெரிக்காவின் விருப்பம். இலங்கை அரசுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையே உள்ள கருத்து வேறுபாடுகள் அமைதியாக தீர்க்கப்பட வேண்டும் என்றார் டூகிட்.

முல்லை நோக்கி முன்னேறும் படைக்கு உதவியாக நேற்று 4 தடவைகள் கடும் விமானத் தாக்குதல்

mi24-1912.jpg
முல்லைத்தீவை நோக்கி முன்னேறிவரும் இராணுவத்தினருக்கு உதவியாக விமானப் படையினர் நேற்று நான்கு தடவைகள் கடுமையான தாக்குதல்களை நடத்தியுள்ளனர். முல்லைத்தீவிலுள்ள கடற்புலிகளின் தளம் மற்றும் பலமான நிலைகளை இலக்கு வைத்தே இந்தத் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக விமானப் படைப்பேச்சாளர் விங்கமாண்டர் ஜனக நாணயக்கார தெரிவித்தார். விமானப் படைக்குச் சொந்தமான ஜெட் மற்றும் எம். ஐ. – 24 ரக விமானங்களை பயன்படுத்தி நடத்தப்பட்ட தாக்குதல்கள் வெற்றியளித்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

ஒட்டுச்சுட்டானுக்கு வடகிழக்கே உள்ள புலிகளின் பலமான நிலைகளை இலக்கு வைத்து நேற்றுக்காலை 6.15 மணியளவில் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. முல்லைத்தீவுக்கு தெற்காக முன்னேறிவரும் இராணுவத்தின் 59 வது படைப்பிரிவினருக்கு உதவியாக நேற்றுக்காலை 6.15 மணியளவிலும் 10.30 மணியளவிலும் தாக்குதல்கள் நடத்தப்பட்டன. முதலாவது செயலணியினருக்கு உதவியாக பரந்தன் முல்லைத்தீவு வீதியை நோக்கி நேற்றுப் பிற்பகல் 1.15 மணியளவில் மற்றுமொரு தாக்குதல் நடத்தப்பட்டது. இதேவேளை முல்லைத்தீவு களப்பு பகுதியில் அமைந்துள்ள கடற்புலிகளின் தளம் ஒன்றை இலக்கு வைத்து நேற்றுப் பிற்பகல் 2.10 மணியளவில் விமானப் படையின் ஜெட் விமானங்கள் கடுமையான தாக்குதல்களை நடத்தியுள்ளன.

இந்தத் தாக்குதல்களை அடுத்து அங்கிருந்த கடற்புலிகள் முல்லைத்தீவிலுள்ள அடர்ந்த காட்டுப் பகுதியை நோக்கி தப்பியோடியுள்ளதாக விமானப்படையினர் உறுதி செய்துள்ளதாக விமானப்படைப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார். இதேவேளை ஆணையிறவு, முல்லைத்தீவு பகுதிகளிலுள்ள கடற்புலித் தளம், ஆயுத முகாம், தொலைத்தொடர்பு நிலையம் மற்றும் பாதுகாப்பு முன்னரங்கு நிலைகள் ஆகியவற்றை இலக்கு வைத்து நேற்று முன்தினம் பத்துத் தடவைகள் விமானத் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாகவும் விமானப்படை பேச்சாளர் சுட்டிக்காட்டினார்.

ஹமாஸ் அமைப்பினர் நடத்தி வரும் தாக்குதல்கள் பயங்கரவாத செயல் – ஜார்ஜ் புஷ்

0301-bush.jpgஇஸ்ரேல் மீது தொடர்ந்து ஹமாஸ் அமைப்பினர் நடத்தி வரும் தாக்குதல்கள் பயங்கரவாத செயல் என அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் கூறியுள்ளார். வானொலி மூலம் புஷ் உரையாற்றியபோது இஸ்ரேலின் தாக்குதல் குறித்து கருத்து தெரிவித்தார். அப்போது அவர் கூறுகையில், பயங்கரவாதிகளின் கைகளுக்கு ஆயுதங்கள் போய்க் கொண்டிருக்கின்றன. அது தடுக்கப்பட வேண்டும். அப்படி தடுக்கப்படும் வரை அமைதி பற்றி பேசுவதை ஏற்க முடியாது.

காஸா பகுதியில் முழுமையான போர் நிறுத்தம் ஏற்படுவதற்கு தூதரக அளவிலான முயற்சிகளை அமெரிக்கா மேற்கொண்டு வருகிறது. போர் நிறுத்தம் என்பது ஒருவழிப்பாதையாக இருக்கக் கூடாது. போர் நிறுத்தம் என்று கூறி விட்டு இஸ்ரேல் மீது ராக்கெட் வீசித் தாக்குவது நியாயமல்ல.இஸ்ரேல் பகுதிகளில் ஹமாஸ் அமைப்பினர் நடத்தி வரும் ராக்கெட் தாக்குதல்கள் பயங்கரவாத செயல்களாகும் என்றார் புஷ்.

இன்று கொழும்பு புறக்கோட்டையில் குண்டு வெடிப்பு

colo-bomb.jpgகொழும்பு புறக்கோட்டையில் அமைந்துள்ள சிகப்பு பள்ளிவாசலின் அருகில் இன்று இடம்பெற்ற குண்டு வெடிப்பு சம்பவத்தில் மூன்று பேர் காயமடைந்துள்ளதாகவும், சுமார் 7 வாகனங்கள் சேதமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இக்குண்டு வெடிப்புச் சம்பவம் இன்று சனிக்கிழமை மாலை 5.10 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவத்தில் காயமடைந்தவர்கள் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பள்ளிவாசலின் முன்னால் நிறுத்தப்பட்டிருந்த வாகனத்தில் இந்த நேரகுண்டு
வைக்கப்பட்டிருக்கலாம் என கருதப்படுகிறது. இவ்வெடிப்புச் சம்பவம் தொடர்பாக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.
colombo-bo.jpg

ஜனாதிபதி பதவியேற்று குறுகிய காலத்துள் புலிகளின் கட்டமைப்புக்கள் இல்லாதொழிப்பு -அமைச்சர் மைத்திரிபால

maithripala.jpg
ஜனாதிபதி மஹிந்தராஜபக்ஷ பதவிக்கு வரும் போது நாட்டின் இறைமைக்குக் குந்தகம் ஏற்படுத்தும் வகையில் புலிகள் இயக்கத்தினர் கொண்டிருந்த சகல நிர்வாகக் கட்டமைப்பும் குறுகிய காலத்திற்குள் துடைத்தெறியப்ப ட்டிருப்பதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளரும் அமைச்சருமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். பாதுகாப்புப் படையினர் புலிகள் இயக்கத்தினரை முழுமையாகத் தோற்கடிப்பதற்காக மேற்கொண்டுவரும் மனிதாபிமான நடவடிக்கைகளுக்கு நாட்டு மக்கள் இருதயபூர்வமாக ஆதரவு நல்கி வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மத்திய மற்றும் வடமேல் மாகாண சபைகளுக்கான ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் முதலாவது பிரசார செய்தியாளர் மாநாடு கொழும்பு – 7லுள்ள மகாவலி நிலையத்தில் (01) நடைபெற்றது. இச்செய்தியாளர் மாநாட்டிற்குத் தலைமை தாங்கி உரையாற்றும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார்.  இச் செய்தியாளர் மாநாட்டில் அமைச்சர் மேலும் குறிப்பிடுகையில் :-

2005ம் ஆண்டில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாகப் பதவியேற்கும் போது இலங்கையின் இறைமைக்கு குந்தகம் ஏற்படுத்தும் வகையில் புலிகள் இயக்கத்தினர் தனியான நீதி, நிர்வாகக் கட்டமைப்பைக் கொண்டிருந்தனர். அவர்கள் வங்கிகளை நடத்தினர்.  நீதி மன்றங்களையும், பொலிஸ் துறையையும் கொண்டிருந்தனர். அவர்களது அனைத்து நீதி, நிர்வாகக் கட்டமைப்புக்களும் ஜனாதிபதி பதவிக்கு வந்த குறுகிய காலத்திற்குள் முற்றாகத் துடைத்தெறியப்பட்டிருக்கின்றன. போட்டு பிரிக்கப்பட்டிருந்தது. அப்படியிருந்த நாட்டையும் எமது ஜனாதிபதி தான் குறுகிய காலத்தில் ஒன்றுபடுத்தினார். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அளித்துவரும் சிறந்த தலைமைத்துவத்தின் பயனாக பயங்கரவாதத்தை முற்றாக ஒழித்துக்கட்டக் கூடிய வாய்ப்பு கிடைக்கப் பெற்றிருக்கிறது. அதேநேரம் வரலாற்றுச் சிறப்புமிக்க பல வெற்றிகளையும் இக்காலப் பகுதியிலேயே இந்நாடு அடைந்தும் இருக்கிறது என்றார்.

மீண்டும் பொலிஸ் பதிவு

check1.jpg
தலைநகர் கொழும்பு உட்பட மேல் மாகாணத்தில் தங்கியிருக்கும் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த அனைவரும் எதிர்வரும் 4 ஆம் திகதி ஞாயிற்றுக் கிழமை மீண்டும் பொலிஸ் பதிவிற்குட்படுத்தப்படவிருப்பதாக பொலிஸ் தலைமையகம் வியாழக்கிழமை அறிவித்திருக்கிறது. வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலிருந்து 2003 ஆம் ஆண்டுக்குப் பின்னர் மேல் மாகாணத்திற்கு வந்து நிரந்தரமாகவோ அல்லது தற்காலிகமாகவோ தங்கியிருப்பவர்களே நாளை ஞாயிற்றுக்கிழமை இவ்வாறு கணக்கெடுப்புக்கு உட்படுத்தப் படவிருப்பதாக பொலிஸ் தலைமையகத்தினால் விடுக்கப்பட்டிருக்கும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இதன் போது, இதற்கு முன்னர் பதியப்பட்டவர்கள் என அனைவரும் மீண்டும் பதிவு செய்து கொள்ள வேண்டுமென்றும் பொலிஸ் தலைமையகம் வலியுறுத்தியிருக்கிறது. எதிர்வரும் 4 ஆம் திகதி காலை 8 மணி முதல் மாலை 6 மணிவரை மேல் மாகாண பொலிஸ் பிரிவுகளில் இந்தப் பதிவு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளன. எனவே, மேல் மாகாணத்தில் நிரந்தரமாகவோ அல்லது, தற்காலிகமாகவோ தங்கியிருக்கும் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்தவர்கள், அருகிலுள்ள பொலிஸ் நிலையங்களால் கணக்கெடுப்புகள் மேற்கொள்ளப்படும் நிலையங்களுக்குச் சென்று தங்களைப் பதிவு செய்து கொள்ளுமாறு அனைவரிடமும் கேட்டுக் கொள்வதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்திருக்கிறது.

இதேநேரம், ஏற்கனவே பொலிஸாரால் நடத்தப்பட்ட கணக்கெடுப்பு நடவடிக்கைகளின் போது கலந்து கொண்ட நிலையங்களுக்கே இம்முறையும் சென்று, பதிவு செய்து கொள்ளுமாறும், பதிவு செய்து கொள்ள வருபவர்கள் அடையாளங்களை உறுதிப்படுத்தும் ஆவணங்களை உடன் எடுத்து வருமாறும் கோரப்பட்டுள்ளனர். அத்துடன் இந்தக் கணக்கெடுப்பு நடவடிக்கையானது மக்கள் பாதுகாப்புக் குழு பிரதிநிதிகளின் ஒத்துழைப்புடன் மேற்கொள்ளப்படவிருப்பதால், சகல பாதுகாப்பு குழு அங்கத்தவர்களும் மேற்குறித்த தினத்தில் உரிய நேரத்தில் சம்பந்தப்பட்ட நிலையங்களுக்கு வந்து இந்த நடவடிக்கைகளை சிக்கலின்றி நிறைவு செய்து கொள்ள அதிகப்பட்ச ஒத்துழைப்புகளை வழங்குமாறும் பொலிஸ் தலைமையகம் கேட்டுள்ளது.

இதேவேளை, ஏற்கனவே வடக்கு மாகாணத்திலிருந்து, மேல் மாகாணம் வந்து தங்கியிருப்பவர்கள் கடந்த செப்டெம்பர் மாதம் 21 ஆம் திகதியும், கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்தவர்கள் கடந்த ஒக்டோபர் மாதம் 5 ஆம் திகதியும் தனித்தனியாக பொலிஸாரினால் பதிவு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது. இதன் போது, பதிவு செய்தவர்களும் எதிர்வரும் 4 ஆம் திகதி மீண்டும் கணக்கெடுப்பில் கலந்துகொண்டு பதிவு செய்து கொள்ளவேண்டுமென்றே பொலிஸ் தலைமையகம் சுட்டிக்காட்டியுள்ளது.

உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் இன்று

school-2.jpgகடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற க.பொ.த. உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் இன்று வெள்ளிக்கிழமை வெளியிடப்படவுள்ளதாக பரீட்சைத் திணைக்கள ஆணையாளர் அனுர எதிரிசிங்க தெரிவித்துள்ளார்.  பரீட்சைப் பெறுபேறுகள் இன்று காலை வெளியாக உள்ளதுடன், மாலையிலேயே இணையத்தளம் மூலம் முடிவுகள் வெளியிடப்படுமெனவும் அவர் மேலும் கூறினார்.

 http://www.doenets.lk/

உலகப்புகழை நோக்கி அதிர்ஸ்டம் வெல்லுங்கள்

abcd.jpgசீனாவில் பீஜிங் நகரில் உள்ள ஒரு காலணிக்கடையில் உயரத்தில் வைக்கப்பட்டுள்ள புஸ்ஸின் உருவப்படத்தின் மீது குறிவைத்துக் காலணியை வீசுபவருக்கு விஸேட தள்ளுபடி கிடைக்கின்றது.

உருவப்படத்தின் உயரத்தில் A யிலிருந்து D வரை குறிக்கப்பட்டிருக்கும் இடங்களின் மீது தூரத்திலிருந்து குறிபார்த்து வீசுபவருக்கு காலணி படுமிடத்தைப் பொறுத்து 20-50 வரையிலான தள்ளுபடியில் அக்காலணியைப் பெற்றுக் கொள்ளலாம்
.
ஈராக் பிரதமருடன் சேர்ந்து புஸ் பேட்டியளித்த போது ஊடகவியலாளர் ஒருவர் வீசிய காலணி வகைக்கே இந்தப் பெருமை கிடைத்துள்ளது. இது பற்றி கடை உரிமையாளர் கருத்துத் தெரிவிக்கும் போது ஈராக்கில் நடந்த காலணி எறியப்பட்ட சம்பவம் எங்களைக் கவர்ந்தது. வாடிக்கையாளரின் பொழுதுபோக்கிற்காக தள்ளுபடி அளிக்கின்றோம். அதற்கு உலகப்புகழை நோக்கி அதிர்ஸ்டம் வெல்லுங்கள் என்று தலைப்பு இட்டுள்ளோம் என்கிறார்.