சஜீர் அகமட் பி

சஜீர் அகமட் பி

வடக்கு ,கிழக்கு விடுதலைப் போராட்டம் மலையக மக்களின் விடிவுக்கு உறுதுணையாக அமையும் – கூட்டமைப்பு எம்.பி.ஸ்ரீகாந்தா

sl-parlimant.jpgஅர சாங்கத்தின் ஒட்டுண்ணிகளாக செயற்பட்டுக்கொண்டிருக்கும் மலையகக் கட்சிகளை மலையக மக்கள் தூக்கியெறியும் போது தான் அம்மக்களுக்கு விடிவு கிடைக்குமென்று தெரிவித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரான என். ஸ்ரீகாந்தா, மலையக மக்களின் விடிவுக்கு வடக்கு, கிழக்கு விடுதலைப் போராட்டம் உறுதுணையாக இருக்குமென்றும் கூறினார். பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற நாடற்ற மக்களுக்கு பிரஜாவுரிமை வழங்கல் சிறப்பேற்பாடுகள் திருத்தச் சட்டமூலம் மீதான விவாதத்தில் பேசும் போதே ஸ்ரீகாந்தா இவ்வாறு கூறினார்.

அவர் இங்கு மேலும் பேசுகையில்; இந்த நாட்டில் மட்டுமல்லாது ஆசிய ரீதியிலும் உலகளாவிய ரீதியிலும் மிக மோசமாக வஞ்சிக்கப்பட்ட மக்கள் பிரிவு அல்லது சமூகமென ஒன்றை அடையாளம் காட்டுவதென்றால் அது மலையக தமிழ் தொழிலாள வர்க்கத்தினராகவே இருக்கும். அமெரிக்காவுக்கு கப்பல் மூலம் வரும் நெருக்குவாரங்களுக்கு மத்தியில் ஏற்றிச் செல்லப்பட்ட ஆபிரிக்க நீக்ரோகளை அடுத்ததாக எமது மலையக மக்களை குறிப்பிடலாம். மோசமாக வஞ்சிக்கப்பட்ட, ஏமாற்றப்பட்ட சமூகம் இது.

1948 ஆம் ஆண்டு மலையக மக்களின் பிரஜாவுரிமை பறிக்கப்பட்டது. அதன் பின்னர் மீண்டும் அம்மக்களுக்கு பிரஜாவுரிமை கிடைத்ததை அடுத்தே மலையக கட்சிகள் பாராளுமன்றத்துக்கு வந்தன. மலையக கட்சிகள் அரசாங்கத்தின் ஒட்டுண்ணிகளாக இருந்து கொண்டு மலையக மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கின்றனர். மலையக மக்கள் என்று இவ்வாறான கட்சிகளை தூக்கி எறிகின்றனரோ அன்று தான் அந்த மக்களுக்கு விடிவு கிடைக்கும்.  அத்துடன் வடக்கு, கிழக்கு விடுதலைப் போராட்டமானது மலையக மக்களின் விடிவுக்கு உறுதுணையாக இருக்கும் என்றார்.

எரிபொருள் நிலைய உரிமையாளர் சுட்டுக் கொலை

gun_.jpgகாத் தான்குடிப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நாவற்குடாப் பகுதியிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலைய மொன்றின் உரிமையாளர் நேற்று அதிகாலை இனம் தெரியாத ஆயுததாரிகளினால் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார்.

தம்பிராசா ரவீந்திரன் (50) எனப்படுமிவர் எரிபொருள் நிரப்பும் நிலையத்திலிருந்தபோது மோட்டார் சைக்கிளில் சென்ற இனம் தெரியாத இருவர் இவர் மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்துவிட்டுச் சென்றுள்ளனர். இவரது சடலம் தற்போது மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

இந்தியா, அமெரிக்கா கண்டனம்

lasantha-02.jpg“சண்டே லீடர்’ ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்க படுகொலை மற்றும் மகாராஜா தொலைக்காட்சி நிறுவனம் மீதான தாக்குதல் சம்பவங்களை இந்தியாவும் அமெரிக்காவும் கடுமையாகக் கண்டித்துள்ளன. லீடர் குழும வெளியீடுகளின் ஆசிரியரின் மறைவையிட்டு கடும் அதிர்ச்சியும் ஆழ்ந்த கவலையும் அடைந்துள்ளதாக கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் நேற்று வெள்ளிக்கிழமை விடுத்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இலங்கையில் ஊடக அமைப்புகள், ஊடகத்துறை சார்ந்தோர் மீது தொடர்ச்சியாக அதிகரித்துவரும் தாக்குதல்களின் மத்தியில் துயரகரமான இச்சம்பவமும் இடம்பெற்றுள்ளது. அண்மையில் மகாராஜா தொலைக்காட்சி கலையகம் மீதான குண்டுத் தாக்குதல் சம்பவமும் இந்தத் தொடர்ச்சியான தாக்குதல்களில் ஒன்றாகும். எந்தவொரு ஜனநாயகத்துக்கும் ஊடக சுதந்திரம் அத்தியாவசியமான விடயமாகும். இந்த மாதிரியான தாக்குதல்கள் இலங்கையில் ஜனநாயக ரீதியான சுதந்திரத்தை பாதிப்புக்குள்ளாக்கும். இந்தத் தாக்குதல்கள் தொடர்பாக பூரணமான விசாரணைகளை மேற்கொண்டு குற்றவாளிகளை சட்டத்தின் முன்நிறுத்த வேண்டுமென இலங்கை அரசாங்கத்தை வலியுறுத்துகின்றோம் என்று இந்திய தூதரகம் விடுத்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, சண்டே லீடர் பத்திரிகை ஆசிரியர் படுகொலை, தொலைக்காட்சி நிலையம் மீதான தாக்குதல் என்பன கவலைக்குரிய நடவடிக்கைகள் என்றும் இலங்கையிலுள்ள சுயாதீனமான குரல்களை மௌனமாக்குவதை நோக்கமாகக் கொண்டவையெனவும் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களப் பேச்சாளர் ரொபேர்ட் வூட் தெரிவித்துள்ளார்.

5ம் ஆண்டு புலமைப்பரிசில் தமிழ் பாடசாலை அனுமதிக்கான வெட்டுப்புள்ளிகள் வெளியீடு

2008ஆம் ஆண்டு 5ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்துள்ள தமிழ்மொழிமூல மாணவர்களுக்குரிய வெட்டுப்புள்ளிகளை கல்வி அமைச்சு வெளியிட்டுள்ளது.

இதன்படி, 2009ஆம் ஆண்டு 6ஆம் வகுப்புக்கு மாணவர்களை சேர்த்துக்கொள்ளக்கூடிய பாடசாலைகளும், அதற்கான வெட்டுப்புள்ளிகளும் வருமாறு:

ஆண்கள் பாடசாலைகள்

கொழும்பு-7 ரோயல் கல்லூரி – 152

கொழும்பு-7 டி. எஸ். சேனாநாயக்க கல்லூரி – 140

யாழ். இந்துக் கல்லூரி – 120

பம்பலப்பிட்டி, இந்துக் கல்லூரி – 114

மட்டக்களப்பு, புனித மைக்கல் கல்லூரி – 114

கல்முனை, சாஹிரா கல்லூரி – 114

பெண்கள் கல்லூரிகள்

பம்பலப்பிட்டி, முஸ்லிம் மகளிர் கல்லூரி – 134

கண்டி, பதியுதீன் மகளிர் மகா வித்தியாலயம் – 128

கொழும்பு, சென்ட் கிளாயர் கல்லூரி – 124

யாழ். வேம்படி மகளிர் கல்லூரி – 120

மட்டக்களப்பு, வின்சன்ட் உயர் கல்லூரி – 119

கல்முனை, மஹ்மூத் மகளிர் கல்லூரி – 118

கலவன் பாடசாலைகள்

மாவனல்லை, சாஹிரா முஸ்லிம் ம.ம.வித்தியாலயம் – 125

ஹட்டன், ஹைலண்ட் ம.ம. வித்தியாலயம் – 124

ஹபுகஸ்தலாவ, அல் மின்ஹாஜ் முஸ்லிம் ம.ம. வித்தியாலயம் – 123

மடவளை பஸார், மதீனா முஸ்லிம் ம.ம. வித்தியாலயம் – 122

தர்காடவுன், அளுத்கம வீதிய முஸ்லிம் மகளிர் கல்லூரி – 117

மாவனல்லை, பதுரியா முஸ்லிம் மஹா வித்தியாலயம் – 116

கெகுனுகொல்ல, முஸ்லிம் மஹா வித்தியாலயம் – 114

பஹமுன, சியம்பலாகஸ்கொட்டுவ மதீனா முஸ்லிம் மஹா வித்தியாலயம் – 113

அம்பாறை எங்கும் பெருமழை இயல்பு நிலை பாதிப்பு- நெல்வயல்கள் வெள்ளத்தில்

கடந்த மூன்று தினங்களாக அம்பாறை மாவட்டத்தில் பெய்துவரும் அடைமழை காரணமாக மாவட்டத்தின் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தின் தாழ்ந்த பிரதேசங்களில் வெள்ள அபாயம் ஏற்பட்டுள்ளது. அறுவடைக்குத் தயாரான நிலையிலிருந்த வேளான்மைகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.

நேற்று வெள்ளிக்கிழமை தொடர்ச்சியாகப் பெய்த அடைமழை காரணமாக பல்வேறு சிரமங்களுக்கு முகம் கொடுக்க வேண்டி ஏற்பட்டது. அக்கரைப்பற்று, ஆலையடிவேம்பு, அட்டாளைச்சேனைப் பிரதேசத்தில் இவ் அடைமழை காரணமாக இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டதோடு பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள் அரசாங்க உத்தியோகத்தர்கள், முதலியோர் பாடசாலை மற்றும் அலுவலகம் செல்வதில் கடும் அசெளகரியங்களுக்கு முகம் கொடுத்தனர். அறுவடைக்குத் தயாரான நிலையிலிருந்த ஆயிரக்கணக்கான ஏக்கர் வயல் நிலங்கள் நீரில் மூழ்கியுள்ளன. வீதிகள் யாவும் நீர் நிரம்பி போக்குவரத்து செய்ய முடியாதுள்ளது. மழை தொடர்கின்றது.

இம்முறை பெரும்போக அறுவடைப் பணிகள் அறுவடை இயந்திரங்களின் உதவியுடன் மேற்கொள்ளப்படவுள்ளன. இதற்குத் தேவையான புத்தம்புதிய அறுவடை இயந்திரங்கள் இந்தியா, சீனா போன்ற நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ளன. அம்பாறை மாவட்டத்தில் அறுவடைப் பணிகளுக்கு தேவையான மேலதிக இயந்திரங்களையும், தொழிலாளர்களையும், பிற மாவட்டங்களிலிருந்து பெறுவதற்கான நடவடிக்கைகளிலும் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்.

பெரும்போக விவசாயிகளுக்கு இம் முறை சிறந்த விளைச்சல் கிடைத்து வருகின்றது. அறுவடையின் மூலம் கிடைக்கும் நெல்லை தனியார் வியாபாரிகள் கொள்வனவு செய்து வருகின்றனர். பெரும்போக அறுவடைப் பணிகள் ஆரம்பித்ததையடுத்து நெல் மற்றும் அரிசி விலை வீழ்ச்சியடைந்துள்ளது.

இதேவேளை, நாவிதன் வெளி பிரதேசசெயலகப் பிரிவுக்குட்பட்ட சடயந்தலாவ கண்ட நெற் பயிர்கள் நீரின்றி கருகும் நிலையில் அந்த விவசாயிகளுக்கு இம் மழை மகிழ்ச்சியைக் கொடுத்துள்ளது. நேற் றைய தொடர் மழை காரணமாக கல்முனைக்குடி, சாய்ந்தமருது, பாண்டிருப்பு கிராமங் களில் உள்ள வீதிகள் நீரில் மூழ்கியுள்ளன. மற்றும் சுனாமி வீடமைப்பு நிர்மாணப் பணிகளும் மழையினால் ஸ்தம்பிதம் அடைந்துள்ளன.

கிளேமோர் குண்டுத் தாக்குதல் 7 பேர் பலி

morawawa_.jpg
திருகோணமலை மாவட்டத்திலுள்ள மொரவேவா நெலுவ பிரதேசத்தில் கிளேமோர் குண்டுத் தாக்குதல் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாகத் இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார்.

இத்தாக்குதலில் மூன்று விமானப்படை அதிகாரிகளும் 4 பொதுமக்களும் பலியாகியுள்ளனர் எனவும் 6 பேர் காயமடைந்துள்ளதாகவும்  விமானப்படையின் டிரக் வண்டி ஒன்றை இலக்குவைத்தே இக்கிளேமோர் குண்டுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

அநீதி, சர்வாதிகாரத்திற்கு எதிராக கிளர்ந்தெழ எதிரணித் தலைவர்கள் அழைப்பு

unp-reli.jpgஅராஜக ஆட்சி, அரச பயங்கரவாதத்துக்கு எதிராக மக்கள் சக்தி எழுச்சிபெற வேண்டுமெனவும் பேரழிவிலிருந்து நாட்டை மீட்டெடுக்க அனைத்து சக்திகளும் ஒரணியில் அணிதிரவேண்டுமெனவும் எதிரணித்தலைவர்கள் கூட்டாக அழைப்பு விடுத்தனர். ஐக்கிய தேசியக்கட்சி தலைமையில் ஒன்றிணைந்துள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி மக்கள் பிரிவு, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், ஜனநாயக மக்கள் முன்னணி, இடதுசாரி முன்னணி உள்ளிட்ட எதிரணிகளின் கூட்டமைப்பு நேற்று முன்தினம் தலைநகர் கொழும்பில் நடத்திய ”பொறுத்தது போதும்”  எனும் கருப்பொருளிலான எதிர்ப்பு ஆர்ப்பாட்டப் பேரணியில் கலந்து கொண்டு பேசுகையில் எதிர்க்கட்சித்தலைவர் ரணில் விக்கிரமசிங்க, மங்கள சமரவீர, ரவூப் ஹக்கீம், மனோ கணேசன், கலாநிதி விக்கிரமபாகு கருணாரட்ன ஆகியோர் நாட்டு மக்களுக்கு இந்த அழைப்பை விடுத்தனர்

எதிர்ப்புக்கூட்டம் 4 மணிக்கு ஆரம்பித்து ஒரு மணிநேரம் மட்டுமே இடம் பெற்றது. அதன் பின்னரே ஹைட்பாக்கிலிருந்து லிப்டன் சுற்றுவட்டம் வரை ஆர்ப்பாட்ட ஊர்வலம் இடம் பெற்றது ஊர்வலம் காரணமாக லிப்டன் சுற்றுவட்டம், யூனியன் பிளேஸ்,ரி.பி.ஜாயா மாவத்தை, பீன்ஸ் வீதி ஆகிய பாதைகளில் சுமார் ஒரு மணிநேரம் வரை போக்குவரத்துகள் தடைப்பட்டன. ஊர்வலத்தில் கலந்து கொண்டோர் லிப்ரன் சுற்றுவட்டத்தில் நிலத்தில் அமர்ந்து எதிர்ப்புக் கோஷங்களை எழுப்பிய பின்னர் கூட்டம் கலைந்தது.

எதிர்ப்புக் கூட்டத்தில் பிரதான உரையாற்றிய எதிர்க்கட்சித்தலைவர் ரணில் விக்கிரமசிங்க தமதுரையில் தெரிவித்ததாவது; நாட்டில் இன்று ஜனநாயகத்திற்கு பெரும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. மக்களின் அடிப்படை உரிமைகள் பறிக்கப்பட்டுள்ளன. ஊடகத்துறை மீது தாக்குதல்களை மேற்கொள்ளுமளவுக்கு அரச பயங்கரவாதம் தலைவிரித்தாடத் தொடங்கியுள்ளது. நாட்டில் அநீதி அரசோச்சுகின்றது . அரசாங்கமே நீதிமன்றத்தை அவமதிக்கின்றது. மக்கள் பிரதிநிதிகளான பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு பாராளுமன்றத்துக்குக்கூட போக முடியாத விதத்தில் ஆளும் தரப்பினர் குழப்பம் விளைவிக்கின்றனர். ஊடக சுதந்திரம் முற்றாக மறுக்கப்பட்டுள்ளது.

எம்.ரி.வி., சிரச தொலைக்காட்சி நிலையம், அரசின் ஒத்துழைப்புடனேயே தீவைக்கப்பட்டுள்ளது. இதற்கு எம்மிடம் போதிய அத்தாட்சி கிடைத்துள்ளது. அண்மைக்காலமாக அமைச்சர்களான டலஸ் அழகப்பெருமவும் சம்பிக்கரணவக்கவும் தொடர்ச்சியாக புலிகளின் ரி.வி. என்று கடுமையாக விமர்சித்து வருகின்றனர். எம்.ரி.வி.நிலையத்துக்குள்ளிருந்து 81/2 கிலோ எடை கொண்ட கிளைமோர் குண்டும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தாக்குதலுடன் தொடர்புபட்டவர்கள் பற்றிய விபரங்கள் கிடைத்துள்ளன. விரைவில் அவற்றை பகிரங்கப்படுத்துவோம் . ராஜபக்ஷ அரசு யுத்தத்தை காட்டி நாட்டுமக்களை ஏமாற்றிக்கொண்டிருக்கின்றது.யுத்தத்தை வைத்துக்கொண்டு நாட்டை அராஜகத்தின் பக்கம் கொண்டு செல்ல அனுமதிக்க முடியாது. நாம் பொறுமைகாத்தது போதும் நாட்டை தொடர்ந்து அழிவு நிலைக்குக் கொண்டு செல்ல இடமளிக்கக் கூடாது. இன, மத, மொழி, கட்சி பேதங்களை மறந்து தேசத்தையும், மக்களையும் காப்பாற்ற அனைவரும் ஒன்றிணைந்து போராடமுன்வரவேண்டும். இந்தப் போராட்டம் மக்கள் எழுச்சிப் போராட்டமாக நாடு தழுவிய மட்டத்தில் முன்கொண்டு செல்லப்படும். அரச பயங்கரவாதத்தையும் அராஜகத்தையும் ஒழித்துக்கட்டி ராஜபக்ஷ குடும்ப ஆட்சியை விரட்டியடிக்கும் வரை நாம் இனிமேல் ஓயப்போவதில்லை என ரணில் விக்கிரமசிங்க சூளுரைத்தார

கிளிநொச்சியை மீண்டும் புலிகள் மீட்டெடுப்பர் அகதிகளாக வாழும் இலங்கைத் தமிழர் நம்பிக்கை

kili-05.jpgவிடு தலைப் புலிகளின் தலைநகராக கருதப்பட்ட கிளிநொச்சி கைப்பற்றப்பட்டமை தமிழ்நாட்டிலுள்ள இலங்கை தமிழர்களை ஏமாற்றத்துக்குள்ளாக்கியுள்ளது.இருப்பினும், புலிகள் மீண்டும் கிளிநொச்சியை மீட்பர் என்ற நம்பிக்கை அவர்களிடையே காணப்படுகின்றது என ஏ.என்.ஐ. செய்திகள் தெரிவித்தன. இலங்கையிலிருந்து இடம்பெயர்ந்து சென்று தமிழ்நாட்டிலுள்ள திருச்சிராப்பள்ளி கொட்டப்பட்டு போன்ற முகாம்களில் அகதிகளாகவுள்ள மக்களே இக்கருத்தை தெரிவித்துள்ளனர்.

அங்கு அகதியாக வாழும் ஒருவர் கருத்துத் தெரிவிக்கையில்; இந்தப் போரினால் அதிகமான கஷ்டங்களை அனுபவித்தவர்கள் பொதுமக்களே. அகதிகளாக இடம்பெயர்ந்து வந்த பின்னர் கூட அச்சுறுத்தல்களுக்கு மத்தியிலேயே வாழ வேண்டியுள்ளது. இது மிகவும் துரதிர்ஷ்டமான நிலையே. புலிகளுக்கும், இராணுவத்தினருக்கும் இடையேயான இந்த சிவில் யுத்தமானது ஆசியாவிலே மிக நீண்ட காலமாக இடம்பெற்று வருவதாகும். இது 1983 ஆம் ஆண்டு முதல் இடம்பெற்று வருகின்றது.

கிளிநொச்சி கைப்பற்றப்பட்டமை புலிகளுக்கு ஏற்பட்ட பாரிய இழப்பே. அவர்களின் முக்கிய பாதுகாப்பு அரணாகவும், பொருளாதார மத்திய நிலையமாகவும் கிளிநொச்சி காணப்பட்டது. ஆனால், தற்போது குண்டுகள் துளைத்த கட்டிடங்களுடனும் இடிபாடுகளுடனும் பாலைவனமாய் காணப்படுகின்றது. சிறுபான்மை தமிழருக்காக புலிகளால் கேட்கப்பட்ட தனிநாட்டின் சட்டரீதியாக அங்கீகரிக்கப்படாத தலைநகரான கிளிநொச்சியை கைப்பற்ற இராணுவத்தினருக்கு பல மாதங்கள் தேவைப்பட்டன.

இன்று மாகாண சபை முதலமைச்சர்களின் 25வது மாநாடு தொடர்பான விசேட கூட்டம்

cm.jpgமாகாண சபை முதலமைச்சர்களின் 25ஆவது மாநாட்டு ஏற்பாடுகள். தொடர்பாக கலந்துரையாடும் விசேட கூட்டமொன்று இன்று (வியாழக்கிழமை) மட்டக்களப்பு மாவட்ட செயலக மண்டபத்தில் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 25ஆவது முதலமைச்சர்கள் மாநாட்டினை இம்முறை மட்டக்களப்பு நகரில் நடத்துவதற்கு ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டிருந்தமை தெரிந்ததே.

இதன் பிரகாரம் மட்டக்களப்பு மாநகர சபையும், மாவட்ட செயலகமும் இணைந்து முதலமைச்சர்கள் மாநாட்டினை சிறப்பாக நடத்துவது தொடர்பான ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றன. கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தனின் ஆலோசனைகளுக்கு அமைவாக மாவட்டத்தில் உள்ளூர் திணைக்களத் தலைவர்களின் ஒத்துழைப்புடன் மாநாட்டு ஏற்பாடுகள் தற்போது மும்முரமாக நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

ஈ.பி.டி.பி.யின் பெயரை தவறான செயலுக்கு பயன்படுத்தினால் உடனடியாக அறிவிக்கவும் – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அறிவிப்பு

epdp-121208.jpgஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் பெயரால் அல்லது அதன் செயலாளர் நாயகமும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தாவின் பெயரால் எவரும் கப்பம் கோரியோ, கடனுக்கு பொருட்கள் மற்றும் காசு கோரியோ அல்லது நிதி, நன்கொடைகள் கோரியோ வந்தால் அவ்விடயம் தொடர்பாக உடனடியாக தனக்கு அறிவிக்கும்படி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கேட்டுக்கொண்டுள்ளார். நேற்று திங்கட்கிழமை யாழ். வர்த்தகப் பிரமுகர்களை சந்தித்து பல்வேறு விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடியபோதே அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இக்கோரிக்கையை முன்வைத்தார்.

இதன் பிரகாரம் தனது பெயரையோ, தனது அமைச்சின் பெயரையோ அல்லது தனது கட்சியின் பெயரையோ பயன்படுத்தி கப்பம் கோருதல், பணம் பறித்தல், பொருட்களை வாங்குதல் போன்ற செயற்பாடுகளில் ஈடுபடும் வகையில் எவரும் எந்தவொரு வர்த்தக நிலையங்களுக்கும் வந்தால் உடனடியாகத் தனக்கு அறிவிக்கும் படியும் இல்லையேல் பக்கத்தில் உள்ள பொலிஸ் நிலையத்திற்கு அறிவிக்கும்படியும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மேற்படி வர்த்தகப் பிரமுகர்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார். இதேவேளை, தனது பெயரையும் தனது கட்சியின் பெயரையும் பயன்படுத்தி எவரேனும் துஷ்பிரயோகங்களில் ஈடுபட்டால் அல்லது அநீதி விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டால் அவ்விடயம் தொடர்பில் உடனடியாகத் தனக்கு அறிவிக்கும் படியும் அல்லது அருகில் உள்ள பொலிஸ் நிலையங்களில் அல்லது இராணுவ முகாம்களில் அறிவிக்கும்படியும் கேட்டுக்கொண்டுள்ளார்.

ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியானது பொதுமக்களிடம் எந்தவொரு அறவீடுகளையும் மேற்கொள்வதில்லை என்பதையும் மனித நேயமற்ற செயல்களில் ஈடுபடுவதில்லை என்பதையும் இங்கு உணர்த்தியுள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இவ்வாறான செயற்பாடுகளுக்கு தான் ஒருபோதும் இடமளிக்கப்போவதில்லை எனத் தெரிவித்துள்ளார்.