அம்பாறை எங்கும் பெருமழை இயல்பு நிலை பாதிப்பு- நெல்வயல்கள் வெள்ளத்தில்

கடந்த மூன்று தினங்களாக அம்பாறை மாவட்டத்தில் பெய்துவரும் அடைமழை காரணமாக மாவட்டத்தின் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தின் தாழ்ந்த பிரதேசங்களில் வெள்ள அபாயம் ஏற்பட்டுள்ளது. அறுவடைக்குத் தயாரான நிலையிலிருந்த வேளான்மைகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.

நேற்று வெள்ளிக்கிழமை தொடர்ச்சியாகப் பெய்த அடைமழை காரணமாக பல்வேறு சிரமங்களுக்கு முகம் கொடுக்க வேண்டி ஏற்பட்டது. அக்கரைப்பற்று, ஆலையடிவேம்பு, அட்டாளைச்சேனைப் பிரதேசத்தில் இவ் அடைமழை காரணமாக இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டதோடு பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள் அரசாங்க உத்தியோகத்தர்கள், முதலியோர் பாடசாலை மற்றும் அலுவலகம் செல்வதில் கடும் அசெளகரியங்களுக்கு முகம் கொடுத்தனர். அறுவடைக்குத் தயாரான நிலையிலிருந்த ஆயிரக்கணக்கான ஏக்கர் வயல் நிலங்கள் நீரில் மூழ்கியுள்ளன. வீதிகள் யாவும் நீர் நிரம்பி போக்குவரத்து செய்ய முடியாதுள்ளது. மழை தொடர்கின்றது.

இம்முறை பெரும்போக அறுவடைப் பணிகள் அறுவடை இயந்திரங்களின் உதவியுடன் மேற்கொள்ளப்படவுள்ளன. இதற்குத் தேவையான புத்தம்புதிய அறுவடை இயந்திரங்கள் இந்தியா, சீனா போன்ற நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ளன. அம்பாறை மாவட்டத்தில் அறுவடைப் பணிகளுக்கு தேவையான மேலதிக இயந்திரங்களையும், தொழிலாளர்களையும், பிற மாவட்டங்களிலிருந்து பெறுவதற்கான நடவடிக்கைகளிலும் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்.

பெரும்போக விவசாயிகளுக்கு இம் முறை சிறந்த விளைச்சல் கிடைத்து வருகின்றது. அறுவடையின் மூலம் கிடைக்கும் நெல்லை தனியார் வியாபாரிகள் கொள்வனவு செய்து வருகின்றனர். பெரும்போக அறுவடைப் பணிகள் ஆரம்பித்ததையடுத்து நெல் மற்றும் அரிசி விலை வீழ்ச்சியடைந்துள்ளது.

இதேவேளை, நாவிதன் வெளி பிரதேசசெயலகப் பிரிவுக்குட்பட்ட சடயந்தலாவ கண்ட நெற் பயிர்கள் நீரின்றி கருகும் நிலையில் அந்த விவசாயிகளுக்கு இம் மழை மகிழ்ச்சியைக் கொடுத்துள்ளது. நேற் றைய தொடர் மழை காரணமாக கல்முனைக்குடி, சாய்ந்தமருது, பாண்டிருப்பு கிராமங் களில் உள்ள வீதிகள் நீரில் மூழ்கியுள்ளன. மற்றும் சுனாமி வீடமைப்பு நிர்மாணப் பணிகளும் மழையினால் ஸ்தம்பிதம் அடைந்துள்ளன.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *