சஜீர் அகமட் பி

சஜீர் அகமட் பி

மேல் மாகாண சபை: வேட்புமனு ஏற்பு – 19 முதல் 26 வரை

dayananda_dissanayake_1.jpgமேல் மாகாண சபைத் தேர்தலுக்கான வேட்பு மனுக்கள் எதிர்வரும் 19 ஆம் திகதியிலிருந்து 26 ஆம் திகதி வரை ஏற்றுக் கொள்ளப்படுமென தேர்தல்கள் ஆணையாளர் அறிவித்துள்ளார்.

கொழும்பு, கம்பஹா, களுத்துறை ஆகிய மூன்று மாவட்டங்களிலும் வேட்பு மனுக்கள் குறிப்பிட்ட திகதி களில் ஏற்றுக் கொள்ளப் படும். 26 ஆம் திகதி நண்பகல் 12 மணியுடன் வேட்பு மனுக்கள் ஏற்பு நிறைவுபெறும். சுயேச்சையாகப் போட்டியிடுவோர் கட்டுப்பணம் செலுத்துவதற்கான காலம் 25 ஆம் திகதி நண்பகல் 12 மணியுடன் நிறைவு பெறுமென அறிவிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு சுயேச்சை வேட்பாளரும் தலா 2000 ரூபா கட்டுப்பணம் செலுத்த வேண்டும்.

முரளிதரன் ‘ஒரு நாள் போட்டியி’லும் உலகசாதனை

_murali.jpgஇலங்கை கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளரான முத்தையா முரளிதரன் ஒரு நாள் போட்டிகளில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்துவதியவர் என்ற உலக சாதனையை இன்று (05.02.2009) ஏற்படுத்தியுள்ளார்.

இன்று கொழும்பில் இந்தியாவுக்கு எதிரான 4 வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியின் போது கௌத்தம் கம்பீரின்  விக்கெட்டை கைப்பற்றிய முரளிதரன் பாகிஸ்தானின் வாசிம் அக்ரம் அவர்களின் சாதனையான 502 விக்கெட்டுகள் என்கிற இலக்கைத் தாண்டி 503  விக்கெட்டுகள் பெற்று  புதிய உலக சாதனை சாதனையை ஏற்படுத்தியுள்ளார்.

இன்று தனது 328 ஆவது ஒரு நாள் போட்டியில் விளையாடிய போதே முரளிதரன் இந்த உலக சாதனையை ஏற்படுத்தியுள்ளார்.

உலக அளவில் டெஸ்ட் போட்டிகளிலும் அதிக விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ள வீரர் என்கிற பெருமையும் முரளிதரனையே சாரும். 125 டெஸ்ட் போட்டிகளில் அவர் 769 விக்கெட்டுகளை இதுவரை வீழ்த்தியுள்ளார்.

Top-Five Bowlers 

Player                  Team          Matches       Wkts 

M Muralitharan      SL                 328                   503 
Wasim Akram         Pak               356                   502 
Waqar Younis         Pak                262                   416 
C Vaas                      SL                  322                   401 
SM Pollock               SA                 302                   391 

61வது சுதந்திர தினம் இன்று: நாடு முழுவதும் நிகழ்வுகள்- ஜனாதிபதி தலைமையில் காலிமுகத்திடலில் வைபவம்

61th-ipday.jpgஇலங்கை யின் 61வது சுதந்திர தினம் இன்றாகும். இதனையொட்டி நாடு முழுவதும் பல்வேறு நிகழ்வுகள் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளன. பிரதான நிகழ்வு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் இன்று காலை கொழும்பு காலி முகத்திடலில் நடைபெறுகின்றது.

இதனை முன்னிட்டு கொழும்பு நகரெங்கும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. சுமார் ஒன்றரை மாத காலம் திட்டமிடப்பட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் நடைமுறைப்படுத்தப்படுவதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்தது.

சுதந்திர தினத்தை யொட்டிய நிகழ்வுகளுக்கும், தேசத்திற்கு மகுடம் கண்காட்சிக்குமாக பத்தாயிரம் பொலிஸாரும் முப்படையினரும் கடமையில் அமர்த்தப்பட்டுள்ளனர்.

கொழும்பு நகரில் போக்குவரத்து மட்டுப்படுத்தப்பட்டுள்ளதுடன், உயர் பாதுகாப்பு வலயமாக அறிவிக்கப்பட்டுள்ள பிரதேசங்களில் விசேட சோதனை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படுகின்றன. இதற்கென புலனாய்வுத் துறையினரும், சிவில் பாதுகாப்புப் பிரிவினரும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

கொழும்பு காலி முகத் திடலில் இன்று காலை 8 மணிக்கு ஆரம்பமாகும் சுதந்திர தின பிரதான நிகழ்வுக்கு, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் அவரது பாரியார் ஷிரந்தி ராஜபக்ஷ, பிரதமர் ரத்னசிறி விக்கிரமநாயக்க, சபாநாயகர் டபிள்யூ. ஜே. எம். லொக்குபண்டார, பிரதம நீதியரசர் சரத் என். சில்வா, பொதுநிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சர் கலாநிதி சரத் அமுனுகம, மேல் மாகாண ஆளுநர் மற்றும் அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள், வெளிநாட்டு இராஜதந்திரிகள், விசேட அதிதிகள் உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர். பாதுகாப்புப் படைசார்பில், பிரதம பாதுகாப்பு அதிகாரி, முப்படைத் தளபதிகள் மற்றும் பொலிஸ் மாஅதிபர் ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.

அரசியல் யாப்பின் கீழ் வடபகுதி தமிழ் மக்களுக்கு சகல உரிமைகளும் வழங்கப்படும் – ஜனாதிபதி உறுதியளிப்பு

mahi-raja.jpgவடபகுதி தமிழ் மக்கள் மிக விரைவில் விடுவிக்கப்பட்டு அரசியல் யாப்பின் கீழ் அவர்களுக்குரித்தான சகல உரிமைகளும், சமத்துவமும் வழங்கப்படும் என இன்றைய தினத்தில் உறுதியளிக்கின்றேன். இவ்வாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ விடுத்துள்ள சுதந்திர தினச்செய்தியில் தெரிவித்துள்ளார். மேலும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

கடந்த சில மாதங்களாக ஒரு தீர்க்கமான மனிதாபிமான நடவடிக்கையை முன்னெடுத்து எமது தாய்நாட்டை பயங்கரவாதத்தின் பிடியிலிருந்து விடுவித்து, எமது சுதந்திரத்தைப் பலப்படுத்துவதில் நாம் அடைந்துள்ள வெற்றிகளே இம் மகிழ்ச்சிக்கும் பெருமைக்கும் காரணமாகும்.

2006ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் மாவிலாறு பிரதேசத்தை பயங்கரவாதிகளிடமிருந்து விடுவிப்பதில் எமது சுதந்திர ஜனநாயக சமூகத்தின் வீரமிகு படையினர் அடைந்த வெற்றிகளில் தொடங்கி முழு கிழக்கு மாகாணத்தையும் விடுவித்து முழு யாழ்ப்பாண தீபகற்பமுட்பட வட மாகாணத்தின் மிகப் பெரும்பாலான நிலங்களை மீண்டும் எமது பூரண கட்டுப்பாட்டின் கீழ் நாம் கொண்டு வந்துள்ளோம்.

ஒரு காலத்தில் பயங்கரவாதத்தின் கோட் டைகள் என்று நம்பப்பட்டுவந்த கிளிநொச்சி, ஆனையிறவு, முல்லைத்தீவு போன்ற பகுதிகள் எல்லாம் அடுத்தடுத்து வீழ்ந்திருக்கும் நிலையில் எமது தாய் நாட்டிலிருந்து பயங்கரவாதத்தின் எச்சசொச்சங்களையும் துடைத்தெறிந்து எமது எல்லா மக்களும் சுதந்திரத்தின் விடியலை காணும் நாள் வெகு தூரத்தில் இல்லை. 1948ம் ஆண்டில் நாம் பெற்றுக்கொண்ட சுதந்திரத்தையும் மிஞ்சும் வகையில் இந்த 61வது சுதந்திர தின கொண்டாட்டத்தின் போது மிகவும் பெறுமதியான அர்த்த புஷ்டியான சுதந்திரத்தை உறுதிசெய்யும் வகையில் எமது தாய்நாட்டின் விடுதலைக்காக எமது வீரமிக்க படையினர் மேற்கொண்ட தியாகம், காட்டிய அர்ப்பணிப்பு மற்றும் துணிவு என்பவற்றுக்கு நான் இச்சந்தர்ப்பத்தில் எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

ஒரு காலத்தில் பயங்கரவாதத்தை ஒழித்துக் கட்டுவதற்கான எமது படை நடவடிக்கைகளை விமர்சித்த பலரும் பயங்கரவாதம் எவ்வாறு ஒழிக்கப்பட வேண்டும் என்பதற்கு இலங்கை யையும் எமது படை வீரர்களின் வெற்றிகளையும் ஒரு முன்னுதாரணமாகக் குறிப்பிடுவதையிட்டு நாம் இச்சந்தர்ப்பத்தில் திருப்தியடைய முடியும். நாம் ஒரு முழு நிறைவான சுதந்திரத்தை நோக்கி முன்னேறிவரும் இவ்வேளையில் எமது எண்ணங்கள் சிந்தனைகள் யாவும் கொடிய பயங்கரவாதிகளால் சிறைப்பிடிக்கப்பட்டிருக் கும் வடபகுதி அப்பாவித் தமிழ் மக்கள் பற்றியதாகவே உள்ளது.

எமது தாய்நாட்டின் மக்களான அந்த மக்களும் மிக விரைவில் விடுவிக்கப்பட்டு அரசியல் யாப்பின் கீழ் அவர்களுக்கு உரித்தான சகல உரிமைகளும் சமத்துவமும் வழங்கப்படும் என நான் இச்சந்தர்ப்பத்தில் உங்களிடம் உறுதியளிக்கின்றேன்.

மேலும் 500 வருடங்களுக்கும் மேலாக எமது நாட்டில் இருந்துவந்த காலனித்துவ ஆதிக்கம், சுரண்டல் என்பவற்றிலிருந்து சுதந்திரத்தைப் பெற்றுக்கொள்வதற்காக பல தியாகங்களைச் செய்து நாட்டுப் பற்றுடன் பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்துச் சென்ற இலங்கை தேசத்தவர்களான சிங்களவர்கள், தமிழர்கள், முஸ்லிம்கள், பறங்கியர் மற்றும் ஏனைய எல்லா சமூகத்தினர்களையும் கெளரவத்துடன் நினைவுகூர்வதற்கு இது மிகவும் பொருத்தமான சந்தர்ப்பமாகும்.

இன்று பயங்கரவாதத்திற்கு எதிராகப் போராடுபவர்களும் எமது முன்னோர் சுதந்திரத்திற்காக மேற்கொண்ட அதே வகையானதொரு உயர்ந்த போராட்டத்தையே மேற்கொண்டு வருகின்றனர். எமது நாட்டின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இச்சந்தர்ப்பத்தில் எமது தேசத்தின் உன்னத வரலாற்றின் அடிப்படையாக காலா காலம் இருந்துவரும் சகிப்புத்தன்மை, நம்பிக்கை மற்றும் புரிந்துணர்வு என்பவற்றை வெளிப்படுத்தி ஒன்றுபட்ட நாட்டில் ஒரே தேசமாக ஐக்கியப்பட முன்வருமாறு எமது எல்லா மக்களிடமும் அழைப்பு விடுக்கிறேன்.

எல்லா இலங்கையர்களுக்கும், சமாதானம், சமத்துவம் முழு அளவில் கிடைக்க வேண்டு மென்ற அவர்களது அபிலாஷைகள் நிறைவேற வேண்டும் எனப் பிரார்த்திக்கின்றேன். புதிய தோர் இலங்கைக்குள் அச்சம், பீதிகள் இல்லாத ஜனநாயகம் சுதந்திரம் மிக்க ஒரு சிறந்த யுகத்தை நோக்கி எமது தாய்நாட்டை கொண்டு செல்வதில் நாம் எல்லோரும் ஒன்றுபடுவோம்.

ஹிலாரி மீண்டும் பதவியேற்பு

hillary.jpgஅமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஹிலாரி கிளிண்டன் 2வது முறையாக மீண்டும் பதவியேற்றுக் கொண்டார். அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா பதவியேற்பு விழாவின் போது, பதவி பிரமாண வாசகத்தை உச்சரிக்கும் போது குளறுபடி ஏற்பட்டதால் 2வது முறையாக பதவியேற்றுக் கொண்டார்.

இந்நிலையில் வெளியுறவுத்துறை அமைச்சராக பதவியேற்றுக் கொண்ட ஹிலாரி கிளிண்டனும், 2வது முறையாக பதவியேற்றுக் கொண்டுள்ளார். துணை அதிபர் ஜோ பைடன் அவருக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். ஹிலாரியின் கணவரான முன்னாள் அதிபர் பில் கிளிண்டன், மகள் செல்சியா உள்ளிட்டோர் பதவியேற்பு விழாவில் கலந்து கொண்டனர்.

புலிகளுக்கு ஆதரவில்லை: முதல்வர்

0302-karunanidhi.jpgஇலங்கை தமிழர்களுக்காக மத்திய ஆட்சியிலிருந்து விலக மாட்டோம்; மாநில அரசையும் இழக்க மாட்டோம்; திமுகவை பொறுத்தவரை இலங்கை தமிழர் பிரச்சனை தான் முக்கியம்; பிரபாகரனையோ மற்ற தமிழர் தலைவர்களையோ ஆதரிக்க மாட்டோம் என்று திட்டவட்டமாக முதலமைச்சர் கருணாநிதி கூறியுள்ளார். இந்த பிரச்சனையில் ராமதாஸ், ஜெயலலிதா போன்றவர்களின் சதிச் செயல்களுக்கு ஆளாக மாட்டோம் என்றும் கருணாநிதி ஆவேசமாக தெரிவித்துள்ளார்.
.
சென்னையில் நேற்று நடைபெற்ற திமுக செயற்குழுவில் முதலமைச்சர் கருணாநிதி பேசியதாவது: இலங்கை தமிழர் பிரச்சனை குறித்து திமுக கடந்த பல ஆண்டுகளாக குரல் கொடுத்து வருகிறது. அதற்காக வாதாடியும், போராடியும் வருகிறது. என்றும் இந்த நிலையில் தொடர்வோம்.

இப்போது தமிழ்நாட்டில் இலங்கை தமிழர்களுக்காக புதிய குரல் கிளம்பி இருக்கிறது. 1956 ஆம் ஆண்டு முதல் இலங்கை தமிழர் பிரச்சனைக்காக பல்வேறு தலைவர்கள் தமிழ்நாட்டை நாடி வந்திருக்கிறார்கள். அப்போது தந்தை செல்வா, அமிர்தலிங்கம் போன்ற தலைவர்கள் பெரியார், அண்ணா, நான் உள்ளிட்ட தலைவர்களை சந்தித்து ஆதரவு கேட்டிருக்கிறார்கள்.

அதனடிப்படையில் அவர்களுக்காக குரல் கொடுத்துள்ளோம். அதனை தொடர்ந்து 198384 கால கட்டத்தில் குட்டிமணி, ஜெகன், தங்கதுரை உள்ளிட்டோர் கொடூரமான படுகொலைக்கு ஆளாகி சிங்கள ராணுவத்தின் தமிழர் அழிப்பு நடவடிக்கை நடந்தது.
அப்போது மீண்டும் அமிர்தலிங்கம் தமிழகத்திற்கு வந்து ஆதரவு கோரினார். தமிழனுக்கு தமிழன் உதவி செய்ய வேண்டும் என்ற அடிப்படையில் அவர்களுக்கு அடைக்கலம் தந்தோம். அதன் பின்னர் விடுதலைப் போராட்ட இயக்கங்கள் தோன்றின.

அவர்கள் எல்லோரும் ஒன்றாக சேர்ந்து போராடியிருந்தால் அவர்கள் விரும்பியபடி தமிழீழம் என்றைக்கோ மலர்ந்திருக்கும். ஆனால் பிரபாகரனை ஒரு சர்வாதிகாரியாக ஏற்றுக் கொள் பவர்கள் மட்டுமே அங்கு செயல்பட முடியும் என்ற நிலை அங்கே உருவானது. இதனை தொடர்ந்து பலர் அழித்தொழிக்கப்பட்டனர்.

திமுகவை பொறுத்தவரை இலங்கை தமிழர்களுக்காகத்தான் எங்களுடைய குரல் ஒலிக்கும். பிரபாகரனையோ அல்லது எந்த தனிப்பட்ட தமிழர் தலைவர்களையும் நாங்கள் ஆதரிக்க வில்லை.

புலிகளின் நடவடிக்கைகளை ஏற்காமல் முகுந்தன், கருணா உள்ளிட்ட பலர் வெளியேறி இருக்கிறார்கள். இப்படி சகோதர யுத்தம் போன்ற கொடுமை களை நாங்கள் மறப்பதற்கு காரணம் அங்குள்ள தமிழர்கள் உரிமை பெற்று வாழ வேண்டும் என்பதற்காகத்தான்.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இந்து பத்திரிகையின் ஒரு சகோதர இதழான பிரண்ட்லைன் இதழில் பிரபாகரனின் அட்டைப் படம் போட்டு ஒரு பேட்டியை வெளியிட்டி ருந்தார்கள்.

அதனை கண்டு நான் திடுக்கிட்டுப்போனேன். என் விழிகள்  ஆச்சரியத்தால் விரிய அதனை பார்த்தேன்.  அதில் ஒரு கேள்வி பிரபாகரனிடம் கேட்கப்பட்டது. நீங்கள் வெற்றி பெற்றால் உங்கள் ஆட்சி எப்படி இருக்கும் என்பதே அந்த கேள்வி. அது சர்வாதிகார ஆட்சியாக இருக்கும் என்று பிரபாகரன் பதிலளித்திருந்தார். அப்போதே அவர்களுடைய போராட்டம் புளித்துப் போய் விட்டது.

சகோதர யுத்தம் நடத்திய பிறகு கொஞ்சம் கொஞ்சமாக அவர்களுக் கான ஆதரவு குறைந்தும், மறைந்தும் போனது. ஆனால் இன்று பச்சை குழந்தைகள், பெண்கள் உள்ளிட்ட இலங்கை தமிழர்கள் கொல்லப்படு கிறார்கள். தாய்மார்கள் இழிவுப் படுத்தப்படுகிறார்கள். இதனை தாங்காமல் கதறி அழும் அவர்கள் தமிழகம் நம்மை காப்பாற்றாதா என்று அவலக் குரல் எழுப்புகிறார்கள்.

அதற்கு நாம் உதவ வேண்டாமா  என்ற கேள்விக்கு விடை காண்பதற்கு அவர்களுக்கு ஆதரவு அளிக்கும் வகையில் இந்த கூட்டத்தை இன்று நாம் கூட்டியிருக்கிறோம்.

ஆதரவு என்றால் ஆயுதமேந்தியோ, போர் தொடுத்தோ ஆதரவை அளிக்க முடியாது. தமிழக சக்தியை ஒன்று திரட்டுவதன் மூலமாகவே ஆதரவை அளிக்க முடியும். ஜனநாயக ரீதியில் தான் அந்த சக்தியை நாம் திரட்ட முடியும்.

அந்த வகையில்தான் இன்றைக்கு தீர்மானம் நிறைவேற்றப்பட்டி ருக்கிறது. தமிழ்நாட்டில் உள்ள சில கட்சிகள் ஏதோ தாங்கள்தான் இலங்கை தமிழர்களின் பிரதிநிதி களைப் போல காட்டிக் கொள் கிறார்கள். நாம் இலங்கை தமிழர் களுக்கான போராட்டத்தை கைவிட்டு விட்டது போல பிரச்சாரம் செய்து கொண்டிருக்கிறார்கள்.

நீங்கள் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும். முதலமைச்சர் தலைமையில் எல்லோரும் போராட்டம் நடத்துவோம் என்று டாக்டர் ராமதாஸ் கூறினார். எதற்கு சொன்னார் என்று இன்றுதான் புரிகிறது.

எனக்கும், மத்திய அரசுக்கும் விரோதத்தை ஏற்படுத்தி இவர் செல்வாக்கை பெருக்கிக் கொள் வதற்காக இந்த செயலில் ராமதாஸ் ஈடுபட்டிருக்கிறார். அவர் ஆதரவு பத்திரிகைகள் மூலமாக இந்த செய்திகளை அவர் பரப்பி வருகிறார்.

இன்று கூட நாம் ஆட்சியை கலைத்து விட்டு வெளியேறி விடுவோம் என்று ஒரு பத்திரிகை ஆசையோடு செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த ஆண்டு திமுக ஆட்சி போய் விடும்; அடுத்த ஆண்டு அதிமுக ஆட்சி ஏற்படும் என்று ஜெயலலிதா சொல்வதற்கு காரணம், இலங்கை தமிழர்களுக்காக போராட்டம் நடத்தி மத்தியில் திமுக ஆதரவை வாபஸ் பெற்று விடும்.

இங்குள்ள ஆட்சியை கலைத்து விட்டு வெளியேறி திண்ணை காலியாகி விடும். நாம் வந்து படுத்துக்கொள்ளலாம் என்று அவர் கனவு காண்கிறார்.

அண்ணன் எப்போது சாவான், திண்ணை எப்போது காலியாகும் என்று காத்துக் கொண்டிருக்கிறார்கள். நான் உங்களை நம்பி சொல்கிறேன். இந்த அண்ணன் சாக மாட்டான்; திண்ணையும் காலியாகாது என்று அவர்களுக்கு உணர்த்தும் வகையில் நீங்கள் செயல்பட வேண்டும்.

வெளிநாடுகளில் வாழும் தமிழர்களோடு பேசக் கூடியதும், அவர்கள் மீது பற்றும்,பாசமும் வைக்கக் கூடிய ஒரே கட்சி திமுகதான். வேறு யாருக்கும் அந்த உரிமை இல்லை.

இலங்கை தமிழர்களை காப்பாற்ற புறப்படுவது போல சிலர் நாடகமாடுகின்றனர். அவர்களை பற்றி மக்களுக்கு எடுத்துச் சொல்ல நாம் எப்படி செயல்படுவது என்பதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அந்த தீர்மானத்தை ஏற்று நீங்கள் செயல்பட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக செயற்குழுவில் 3 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 

பம்பலப்பட்டி – மருதானை ரயில் சேவை நிறுத்தம் – இணைப்பு பஸ்சேவை ஆரம்பம்

train.jpgசுதந்திர தின பிரதான வைபவங்கள் கொழும்பு காலி முகத்திடலில் நடைபெறுவதை முன்னிட்டு பம்பலப்பிட்டியிலிருந்து மருதானை வரையிலான ரயில் சேவை நேற்று நள்ளிரவு முதல் இடை நிறுத்தப்பட்டுள்ளது.  இன்றும் நாளையும் இந்த புதிய நடைமுறை அமுலில் இருக்கும் என்று கொழும்பு பிராந்தியத்திற்கு பொறு பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் நிமல் மெதிவக தெரிவித்தார்.
கொழும்பிலிருந்து புகையிரதம் மூலம் தென் பகுதிக்குச் செல்பவர்கள் பம்பலப்பிட்டி வரைக்கும், பம்பலப்பிட்டி யிலிருந்து கொழும்புக்கு வருபவர்கள் மருதானை வரைக்கும் பயணம் செய்ய தேவையான இணைப்பு பஸ் வண்டிகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்த அவர் அதே புகையிரத பயணச் சீட்டை வைத்துக் கொண்டே இந்த பஸ் வண்டியில் இலவமாக சென்று வரமுடியும் என்றும் தெரிவித்தார்.

பாதுகாப்புப் பகுதிக்கு வருமாறு மதத்தலைவர்களுக்கு அழைப்பு – வத்திக்கான் பிரதிநிதியிடம் ஜனாதிபதி வேண்டுகோள்

02022009.jpgமோதல் இடம்பெறும் பிரதேசங்களில் தங்கியுள்ள மதத் தலைவர்களை அரசாங்கப் பாதுகாப்புப் பிரதேசங்களுக்கு வந்து சேருமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்று அழைப்பு விடுத்தார். மோதல் நடைபெறும் பிரதேசங்களிலிருந்து வந்துசேரும் மதத் தலைவர்களதும் பொதுமக்களினதும் நலன்புரி நடவடிக்கைகளைக் கவனிப்பதற்குத் தேவையான சகல நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

இந்த செய்தியை மோதல் நடைபெறும் பிரதேசங்களில் தங்கியுள்ள மதத் தலைவர்களுக்குக் கொண்டு செல்லுமாறு வத்திக்கானின் இலங்கையிலுள்ள தூதுவர் மொன்சிக்னர் மரியோ செனரரியிடம் ஜனாதிபதி கேட்டுக் கொண்டார். வத்திக்கானின் இலங்கையிலுள்ள தூதுவர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை அலரி மாளிகையில் நேற்று சந்தித்துக் கலந்துரையாடினார்.

இச்சந்திப்பின் போது ஜனாதிபதி, புலிகள் இயக்கத்தினரால் தடுத்து வைக்கப்பட்டுள்ள அப்பாவி சிவிலியன்களை எதுவிதமான பாதிப்புக்களுமின்றி விடுவிப்பதற்கு மேற்கொள்ளப்பட்டுவரும் முயற்சிகள் குறித்தும் எடுத்துக் கூறினார்.

புலிகள் இயக்கத்தினர் அப்பாவி சிவிலியன்களை மனிதக் கேடயங்களாகப் பயன்படுத்தி வருவதையும் ஜனாதிபதி வத்திக்கானின் இலங்கையிலுள்ள தூதுவருக்கு இச்சமயம் சுட்டிக்காட்டினார். அப்பாவி சிவிலியன்களின் நலன்களைக் கருத்திற்கொண்டு அவர்களை விடுவிக்கவென புலிகள் இயக்கத்தினருக்கு ஏற்கனவே 48 மணி நேர கால அவகாசம் வழங்கப்பட்டது. அதே நேரம் ஆயுதங்களைக் கீழேவைத்துவிட்டு பாதுகாப்பு படையினரிடம் சரணடையுமாறும் புலிகள் இயக்க உறுப்பினர்கள் கேட்கப்பட்டுள்ளனர்.

இதன்படி புலிகள் இயக்க உறுப்பினர்கள் பலர் ஏற்கனவே சரணடைந்துள்ளனர். எஞ்சியுள்ளவர்களையும் சரணடையுமாறே மீண்டும் கேட்கப்பட்டுள்ளது. இவ்வாறான சூழ்நிலையில் வத்திக்கானின் இலங்கையிலுள்ள தூதுவர் ஜனாதிபதியை நேற்று சந்தித்தார். அச்சமயமே ஜனாதிபதி மோதல் நடைபெறும் பிரதேசங்களில் தங்கியுள்ள மதத் தலைவர்களைப் பாதுகாப்பு பிரதேசங்களுக்கு வந்து சேருமாறு அழைப்பு விடுத்தார். அத்தோடு இச்செய்தியை அவர்களுக்குக் கொண்டு செல்லுமாறும் வத்திக்கானின் இலங்கையிலுள்ள தூதுவரிடம் கேட்டுக்கொண்டார். இச்சந்திப்பின்போது ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்கவும் பிரசன்னமாயிருந்தார்.

ஈராக் மாகாண சபை தேர்தல் முடிவுகள் அடுத்த வாரம்

iraq-elc.jpgஈராக்கில் நடந்து முடிந்த மாகாண சபைத் தேர்தலின் முடிவுகள் அடுத்த வாரம் அறிவிக்கப்படவுள்ளதாகத் தெரிவித்த தேர்தல் அலுவலகம் முழு முடிவுகளையும் அறிவிக்கப் பல வாரங்கள் தேவைப்படும் எனத் தெரிவித்தது. புதுவகையான தேர்தல் முறை என்பதால் வாக்குகளை எண்ண பல நாட்கள் எடுக்கும். மற்றும் எண்ணுவதில் பெரும் சிக்கல்களும் உள்ளதென்றும் செயலகம் தெரிவித்துள்ளது. கடந்த சனிக்கிழமை நடந்த மாகாண சபைத் தேர்தல்களில் 15 மில்லியன் மக்கள் வாக்களித்தனர்.

440 ஆசனங்களுக்கு 14 ஆயிரம் வேட்பாளர்கள் போட்டியிட்டனர். 400 கட்சிகள் களத்தில் குதித்தன. ஈராக்கிற்கான ஐ. நா. வின் தூதுவர் முஸ்தபாமிஸ்டிரா இதுபற்றிக் கூறுகையில் :- ஈராக்கில் இறுதியாக நடந்த தேர்தல் முடிவுகள் கணக்கிடப்பட்ட விதம் பூரண திருப்தியில்லை. விகிதாசாரம் முறையாகப் பேணப்படவில்லை.எனவே இம்முறை இந்தத் தவறுகள் இடம்பெறாமல் தவிர்க்க பல ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகக் கூறினார். மீள் புனரமைப்புப் பணிகள், வெளிநாட்டு உதவிகள் என்பவற்றை மாகாண சபை முன்னெடுப்பதுடன், ஆளுநர்களையும் நிர்வாகமே தெரிவு செய்கின்றது. 2.5 பில்லியன் ரூபா புனரமைப்புகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

மத்திய, வடமேல் மாகாண சபைகளுக்கான தபால் மூல வாக்களிப்பு இன்றும் நாளையும்

vote.jpgமத்திய, வடமேல் மாகாண சபைகளுக்கான தேர்தலில் தபால் மூலமான வாக்களிப்பு இன்று திங்கட்கிழமையும் நாளை செவ்வாய்க்கிழமையும் அந்தந்த மாவட்டங்களில் இடம் பெறவிருக்கின்றன. இரண்டு மாகாணங்களிலும் 66,909 பேர் தபால் மூலம் வாக்களிக்கத் தகைமை பெற்றிருப்பதாக மேலதிகத்தேர்தல் ஆணையாளர் டபிள்யூ.பி. சுமானசிரி தெரிவித்தார்.

இதன் பிரகாரம் மத்திய மாகாணசபையில் கண்டி மாவட்டத்தில் 17,784 பேரும் நுவரெலியா மாவட்டத்தில் 5,592 பேரும் மாத்தளை மாவட்டத்தில் 9,417 பேரும் தபால் மூலம் வாக்களிக்க தகுதிபெற்றுள்ளனர். வட மேல் மாகாண சபையில் குருணாகல் மாவட்டத்தில் 29491 பேரும் புத்தளம் மாவட்டத்தில் 4625 பேரும் தகுதிபெற்றிருப்பதாக மேலதிக தேர்தல் ஆணையாளர் சுமணசிறி மேலும் தெரிவித்தார்.

இதேவேளை, இலங்கையின் 63 வது சுதந்திரதினக் கொண்டாட்டம் தலைநகரில் விரிவான அடிப்படையில் இடம் பெறவிருப்பதை யொட்டி பாதுகாப்பை பலப்படுத்தும் பொருட்டு பெருந்தொகையான பொலிஸாரும், முப்படையினரும் கொழும்புக்கு வரவழைக்கப்படுவதன் காரணமாக மத்திய, வடமேல் மாகாணங்களைப் பாதுகாப்பு அதிகாரிகளுக்கான தபால் மூல வாக்களிப்பு கடந்த மாதம் 26, 27 ஆம் திகதிகளில் நடத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

இன்றைய தபால் மூல வாக்களிப்பின் போது தேர்தலில் போட்டியிடும் கட்சிகள், சுயேச்சைக்குழுக்கள் சார்பில் தலா ஒரு பிரதிநிதி வாக்களிப்பை கண்காணிக்க அனுமதிக்கப்படுவர் என தேர்தல் செயலகம் தெரிவித்துள்ளது.