வடமேல், மத்திய மாகாண சபைகளுக்காக நடந்து முடிந்த தேர்தலில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அமோக வெற்றியீட்டியுள்ளது. இலங்கையில் நடைபெற்று முடிந்த வடமேல் மற்றும் மத்திய மாகாண சபைகளின் தேர்தல் முடிவுகள், யுத்தத்திற்கான மக்கள் தீர்ப்பு என சில அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.
இரு மாகாணங்களிலும் வெளியான முடிவுகளின்படி இரண்டு தேர்தல் தொகுதிகளைத் தவிர ஏனைய அனைத்துத் தொகுதிகளிலும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அறுதிப் பெரும்பான்மை வாக்குகளைப் பெற்று வெற்றியீட்டியுள்ளது. கடந்த காலங்களில் ஐ. தே. க வெற்றிபெற்று வந்த தொகுதிகள் பலவற்றில் ஐ. ம. சு முன்னணி கூடுதல் வாக்குகளைப் பெற்றுள்ளது.
அதே நேரம் இதுவரை வெளியான முழுமையான விருப்பத்தெரிவு முடிவுகளின்படி 4 மாவட்டங்களிலிருந்தும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு ஒரு முஸ்லிமாவது தெரிவாகவில்லை. 03 தமிழர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள்:
ரா. மருதபாண்டி 21544 (நுவரெலியா மாவட்டம்)
ரா. முத்தையா 18990 (நுவரெலியா மாவட்டம்)
வே ராதாகிருஸ்ணன் 18513 (நுவரெலியா மாவட்டம்)
6 ஆசனங்களை எதிர்பார்த்த அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானின் கட்சிக்கு நுவரெலியாவில் 3 ஆசனங்கள் மாத்திரமே கிடைத்துள்ளது. அமைச்சர் சந்திரசேகரனுக்கு ஒரு ஆசனமேனும் கிடைக்கவில்லை.
வடக்கில் முன்னெடுக்கப்படும் மனிதாபிமான நடவடிக்கைகளுக்கு மக்கள் அங்கீகாரம்
மத்திய மற்றும் வடமேல் மாகாண மக்கள் வடக்கில் முன்னெடுத்துவரும் மனிதாபிமான நடவடிக்கைகளுக்கு அங்கீகாரம் வழங்கியுள்ளனர். இது தேர்தல் வெற்றியை விட நாட்டுக்குக் கிடைத்த வெற்றியாகும் என ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி செயலாளரும் அமைச்சருமான சுசில் பிரேம் ஜெயந்த் தெரிவித்தார். தேர்தல் முடிவு தொடர்பாக கருத்துத் தெரிவித்த அமைச்சர் மேலும் கூறியதாவது:-
வரலாற்றில் ஒரு போதுமில்லாதவாறு பாரிய வாக்குவீதத்தினால் ஐ.ம.சு. முன்னணி வெற்றியீட்டியுள்ளது. ஐ.ம.சு. முன்னணிக்கு வாக்களித்த வாக்காளர் களுக்கும் கூட்டுக் கட்சிகளுக்கும் ஆதரவாளர்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
வடபகுதி மக்கள் எந்த இனத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் கூட அந்த மக்களை மீட்கவும் பயங்கரவாதத்தை ஒழிக்கவும் மக்கள் பூரண ஒத்துழைப்பை வழங்கியுள்ளனர். இந்த தேர்தல் முடிவுகளினூடாக சர்வதேச சமூகத்திற்கும் சிறந்த செய்தியொன்றை மக்கள் வழங்கியுள்ளனர்.
தேர்தல் மிக அமைதியாக நடந்துள்ளது. எதிர்வரும் நாட்களிலும் வன்முறைகளில் ஈடுபடாது வெற்றியை அமைதியாக கொண்டாடுமாறு மக்களை கோருகின்றோம. வெற்றியீட்டிய இரு மாகாணங்களையும் முன்னரைவிட சிறப்பாக அபிவிருத்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
மஹிந்த சிந்தனைக்கு மீண்டும் மக்கள் ஆணை – ஜனாதிபதி
மஹிந்த சிந்தனை வேலைத் திட்டத்திற்கும் அரசின் கொள்கைக்கும் மக்கள் மீண்டும் ஆணை வழங்கியுள்ளதையே தேர்தல் முடிவு எடுத்துக் காட்டுகிறதென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
மத்திய மற்றும் வட மேல் மாகாண சபைத் தேர்தல் முடிவுகளையிட்டு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ விடுத்துள்ள செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டிருப்பதாவது, மத்திய மற்றும் வட மேல் மாகாண சபைகளுக்கான தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அமோக வெற்றியீட்டியுள்ளது. தாயகத்தை நேசிக்கின்ற சகல மக்களினதும் வெற்றியாகவே இதனை நான் பார்க்கிறேன்.
இது நாட்டை வெற்றி பெறச் செய்துள்ள தேர்தல். அதேநேரம், எமது படைவீரர்களின் வெற்றிகளை குறைத்து மதிப்பிடவென தேசிய மற்றும் சர்வதேச மட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளையும் இத்தேர்தல் முடிவுகள் தோல்வியடையச் செய்துள்ளது. பயங்கரவாதத்தை ஒழித்துக்கட்டும் இறுதி நடவடிக்கைகளில் ஈடுபட்டிருக்கும் படைவீரர்களுக்கு இம் முடிவுகள் மட்டற்ற தைரியத்தையும் பின் சக்தியையும் வழங்கியுள்ளது.
என் மீதும், எனது அரசாங்கத்தின் மீதும் நம்பிக்கை வைத்து செயற்பட்ட மத்திய மற்றும் வட மேல் மாகாண மக்களுக்கு இச்சந்தர்ப்பத்தில் எனது இதயபூர்வமான நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். அதேநேரம், இத்தேர்தல் வெற்றியை அமைதியாகக் கொண்டாடுமாறும் சகலரையும் கேட்டுக் கொள்கிறேன்.
இத் தேர்தல் முடிவுகள் மஹிந்த சிந்தனை வேலைத் திட்டத்திற்கும் அரசின் கொள்கைக்கும் மக்கள் மீண்டும் ஆணை வழங்கியுள்ளதையே எடுத்துக்காட்டுகிறது- இதனையிட்டு நான் நேர்மையாகத் திருப்தி அடைகிறேன்.
அரசாங்கம் தொடர்பாக மக்கள் மத்தியில் பிழையான அபிப்பிராயத்தைக் கட்டியெழுப்ப சில குழப்பக்காரர்கள் செய்யும் முயற்சிகளை தோற்கடிக்கும் வகையில் மக்கள் இத்தேர்தல் மூலம் சரியான தீர்ப்பை வழங்கியுள்ளார்கள் என்பது உறுதியாகியுள்ளது-
குரூர பயங்கரவாதத்தை முழுமையாக நாட்டிலிருந்து துடைத்தெறிந்து எமது சகோதர மக்களுக்கு ஜனநாயக உரிமைகளைப் பெற்றுக்கொடுக்கவென அரசாங்கம் முன்னெடுக்கும் வேலைத் திட்டங்களுக்கு இத்தேர்தல் முடிவுகள் மூலம் மக்கள் அங்கீகாரம் வழங்கியுள்ளார்கள் என்பதும் தெளிவாகிறது.
நானும் எனது அரசாங்கமும் நாட்டுக்குத் தான் முதலிடமளிக்கின்றோம். அதனால் கட்சி, நிற பேதங்களுக்கு அப்பால் புதிய இலங்கையை கட்டியெழுப்பவென சகல முற்போக்கு சக்திகளதும் ஒத்துழைப்பையும் எதிர்பார்க்கிறேன். அமைதியாகவும், நேர்மையாகவும் தேர்தலை நடத்துவதற்கு நடவடிக்கை எடுத்த தேர்தல் ஆணையாளர் உட்பட சகல அதிகாரிகளுக்கும் நன்றி தெரிவிக்கிறேன்.
17 ஆசனங்களை பறிகொடுத்து தேர்தலில் ஜே. வி. பி படுதோல்வி
மத்திய மற்றும் வட மேல் மாகாண சபைகளில் 18 ஆசனங்களைக் கொண்டிருந்த மக்கள் விடுதலை முன்னணி (ஜே. வி. பி) இம்முறை தேர்தல் மூலம் 17 ஆசனங்களை இழந்து ஒரு ஆசனத்தை மட்டுமே தக்க வைத்துக் கொண்டுள்ளது.
2004 ஆம் ஆண்டு நடைபெற்ற மாகாண சபைத் தேர்தல் மூலம் மத்திய மாகாண சபையில் ஒன்பது ஆசனங்களையும் வடமேல் மாகாண சபையில் ஒன்பது பிரதிநிதிகளையும் என்றபடி 18 ஆசனங்களை ஜே. வி. பி. பெற்றுக் கொண்டிருந்தது. இருப்பினும் இம்முறை தேர்தல் மூலம் மத்திய மாகாண சபையில் ஒரு பிரதிநிதித்துவத்தையும் பெறாத ஜே. வி. பி. வடமேல் மாகாண சபையில் ஒரு பிரதிநிதித்துவத்தையே பெற்றிருக்கிறது.
2004 ஆம் ஆண்டு நடைபெற்ற மாகாண சபைத் தேர்தலில் ஜே. வி. பி., ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியுடன் கூட்டுச் சேர்ந்து போட்டியிட்டது. இவ்வாறு போட்டியிட்டதன் மூலம் வடமேல் மாகாண சபையில் புத்தளம் மாவட்டத்தில் மூன்று பிரதிநிதிகளையும் குருநாகல் மாவட்டத்தில் ஆறு பிரதிநிதிகளையும் ஜே.வி.பி. பெற்றுக் கொண்டது.
இதே போல் மத்திய மாகாண சபையிலும் கண்டி மாவட்டத்தில் நான்கு ஆசனங்களையும் நுவரெலியா மாவட்டத்தில் மூன்று ஆசனங்களையும், மாத்தளை மாவட்டத்தில் இரு ஆசனங்களையும் ஜே. வி. பி. பெற்றிருந்தது.
இம்முறை மாகாண சபைத் தேர்தலில் ஜே. வி. பி. தனித்துப போட்டியிட்டது. இதனால் குருநாகல் மாவட்டத்தில் மட்டுமே ஒரு ஆசனத்தை வெற்றி பெற்றிருக்கிறது.
இவ்விரு மாகாண சபைகளுக்குமான தேர்தல் முடிவுகளும் ஜே. வி. பி. பாரிய பின்னடைவை அடைந் திருப்பதையே எடுத்துக் காட்டுவதாக அவதானிகள் தெரி விக்கின்றனர்.
இதே போன்று பாரிய பின்னடைவை ஏற்கனவே கிழக்கு, வட மத்திய மற்றும் சப்ரகமுவ மாகாண சபைத் தேர்தல்களிலும் ஜே. வி. பி. சந்தித்தது தெரிந்ததே என்றும் அவர்கள் குறிப்பிடுகின்றனர்.
புத்தளம் – நாயக்கர்சேனை வாக்குச் சாவடி வாக்குகள் ரத்து. வடமேல் மாகாண தேர்தல் முடிவுகள் தாமதம்: புதிய தேர்தல் நடத்த ஆணையாளர் தீர்மானம்
புத்தளம் மாவட்டத்தில் உள்ள வாக்குச் சாவடியொன்றில் மோசடி இடம்பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளதையடுத்து அந்த வாக்குச் சாவடியின் தேர்தல் முடிவுகள் ரத்துச் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் தயானந்த திஸாநாயக்க அறிவித்துள்ளார். அந்த வாக்குச் சாவடிக்கு மாத்திரம் வேறொரு தினத்தில் தேர்தல் நடத்த தீர்மானித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
47 ஆவது வாக்குச் சாவடி அமைந்துள்ள நாயக்கர்சேனை தமிழ் மகா வித்தியாலயத்திலே இவ்வாறு மோசடி நடைபெற்றதாக புத்தளம் தெரிவத்தாட்சி அதிகாரியினால் தேர்தல் ஆணையாளருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்தே குறித்த வாக்குச் சாவடி முடிவுகள் ரத்துச் செய்யப்பட்டுள்ளன. இந்த வாக்குச் சாவடிக்கான தேர்தல் திகதி விரைவில் அறிவிக்கப்படுமென தேர்தல் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.
குறித்த வாக்குச் சாவடி முடிவுகள் ரத்துச் செய்யப்பட்டதன் காரணமாக புத்தளம் தேர்தல் தொகுதி யின் இறுதி முடிவுகள் அறிவிப்பது பிற்போடப் பட்டுள்ளது. புத்தளம் மாவட்ட முடிவுகள் மற்றும் வடமேல் மாகாண இறுதி முடிவுகள் என்பனவும் அறிவிக்கப்படாமல் பிற்போடப்பட்டுள்ளன.
1988 ஆம் ஆண்டின் 2 ஆம் இலக்க மாகாண சபை தேர்தல் சட்டத்தின் 46 ஆவது சரத்தின் படியும் உச்ச நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையிலும் குறித்த வாக்களிப்பு நிலையத்தின் வாக்குகள் ரத்துச் செய்யப்பட்டதாக தேர்தல் திணைக்களம் அறிவித்துள்ளது.இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் விரைவில் வெளியிடப்படவுள்ளது.நாயக்கர்சேனை தமிழ் வித்தியாலய வாக்களிப்பு நிலையத்தில் வாக்களிக்க 1145 பேர் தகுதி பெற்றிருந்தனர்.
43 சுயேச்சைகளும் கட்டுப்பணம் இழந்தன
மத்திய மற்றும் வட மேல் மாகாண சபைத் தேர்த லில் போட்டியிட்ட 43 சுயேச்சைக் குழுக்களும் கட்டுப்பணத்தை இழந்துள்ளன. இச்சுயேச்சைக் குழுக்கள் எதுவும் ஐந்து சத வீதத்திற்கு மேற்பட்ட வாக்குகளைப் பெறாததாலேயே கட்டுப்பணத்தை இழந்துள்ளன.
இம்மாகாண சபைத் தேர்தலில் புத்தளம் மாவ ட்டத்தில் 12 சுயேச்சைக்குழுக்களும், குருநாகல் மாவட்டத்தில் 5 சுயேச்சைக் குழுக்களும், நுவரெலியா மாவட்டத்தில் 10 சுயேச்சைக் குழுக்களும், கண்டி மாவட்டத்தில் 8 சுயேச்சைக் குழுக்களும் மாத்தளை மாவட்டத்தில் 8 சுயேச்சைக் குழுக்களும் கட்டுப்பணம் செலுத்தி இருந்தன.
இது இவ்வாறிருக்க, இரு மாகாணங்களிலும் தேர்தல் நியாயமானதாகவும் சுதந்திரமானதாகவும் இடம்பெற்றதாக சுயாதீன கண்காணிப்புக் குழுக்கள் தெரிவித்துள்ளன.
தேர்தல் தொடர்பாக 43 வன்முறைகள் இடம்பெற்றதாக கபே அமைப்பு கூறியபோதும் ஒப்பீட்டளவில் வன்முறைகள் குறைவாக இடம்பெற்றிருப்பதாகத் தெரிவித்திருக்கிறது.
அண்மைய காலப்பகுதியில் இடம்பெற்ற தேர்தல்களில் இது மிகவும் அமைதியான தேர்தல் என்று அரசியல் அவதானிகள் கூறுகின்றனர். கண்டி, நுவரெலியா, மாத்தளை, குருநாகல், புத்தளம் ஆகிய 5 மாவட்டங்களிலும் பாரிய தேர்தல் வன்முறைச் சம்பவங்கள் எவையும் இடம்பெறவில்லை. சுமார் 65% வாக்குப் பதிவு இடம்பெற்றிருப்பதாக தேர்தல் செயலகம் தெரிவித்தது.
இ.தொ.கா., ம.ம.மு. கட்சிகளுடன் எதிர்காலத்தில் தேர்தல்கூட்டு இல்லை – எஸ்.பி. திஸாநாயக்கா கூறுகிறார்
மக்கள் இத்தேர்தலில் அளித்துள்ள தீர்ப்பை முழு மனதுடன் ஏற்றுக்கொள்வதாக மத்திய மாகாணசபைத் தேர்தலில் ஐ.தே.க.முதலமைச்சர் வேட்பாளராக போட்டியிட்ட எஸ்.பி.திஸாநாயக்கா தெரிவித்துள்ளார்.
கண்டிஅனிவத்த ஜானகி ஹோட்டலில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் மாகாண சபைத்தேர்தல் முடிவுகள் குறித்து கருத்து தெரிவிக்கையில் அவர் இவ்வாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்;
“நாம் யுத்தத்துக்கு எதிரானவர்கள் அல்ல. யுத்தத்துக்கு ஆதரவு அளிக்கிறோம். அதேநேரம், நாட்டின் இனப்பிரச்சினைக்கு யுத்தத்தினால் மட்டும் தீர்வுகாண முடியாது. இனப்பிரச்சினைக்கு உடனடியாக தீர்வுத்திட்டம் ஒன்றை முன்வைக்குமாறு அரசைக் கேட்டுக்கொள்கிறோம்.
நாட்டின் பொருளாதாரம் இன்று சீர்கெட்டுப்போயுள்ளது. இதனை ஐக்கிய தேசியக்கட்சி ஆட்சியால் மட்டுமே சீர்செய்ய முடியும். இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் மற்றும் மலையக மக்கள் முன்னணி அகிய இரு கட்சிகளும் எம்முடன் இணைந்து போட்டியிடாததால் வெற்றிபெறவில்லை.
இனிமேல் எதிர்வரும் தேர்தல்களில் இவ்விரு கட்சிகளையும் நாம் எம்முடன் இணைத்துக்கொள்ளப்போவதில்லை.
எம்முடன் இத்தேர்தலில் இணைந்து போட்டியிட்ட தமிழ்க்கட்சிகளையும் தமிழ் உறுப்பினர்களையும் பாராட்டுவதுடன், அவர்களை எமது எதிர்கால அரசியல் நடவடிக்கைகளில் முன்னெடுத்துச் செல்வோம்.
சதாசிவம், பீதாம்பரம் போன்ற தலைவர்கள் எதிர்காலத்தில் ஐக்கிய தேசியக்கட்சியுடன் இணைந்து செயற்படுவார்கள்’ என்றார்.