::யுத்த நிலவரம்

::யுத்த நிலவரம்

இலங்கையில் நடைபெறும் யுத்தம் தொடர்பான செய்திகள், கட்டுரைகள், ஆய்வுகள்.

இந்திய அரசாங்கத்தின் நேரடி உதவிகளுக்கு நாட்டு மக்கள் நன்றி தெரிவிக்க வேண்டும் – இராணுவத் தளபதி

sarath-fonseka.jpgஇலங் கையில் ஊடறுத்துள்ள பயங்கரவாதத்தினை ஒழிப்பதற்கு நட்புறவு நாடுகள் வழங்கிவரும் இராணுவ ரீதியிலான உதவிகள் பாராட்டிற்குரியவை என்று இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் சரத் பொன்சேக்கா தெரிவித்துள்ளார்.

இலங்கையின் இறைமையையும் பிரதேசத்தின் தன்னாதிக்கத்தினையும் பாதுகாப்பதற்கென இந்திய அரசாங்கம் வழங்கிவரும் நேரடி உதவிகளுக்கு நாட்டு மக்கள் நன்றி தெரிவிக்க வேண்டும் என்றும் இராணுவ தளபதி மேலும் கூறியுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியுள்ளதாவது இந்நியா உள்ளிட்ட பல நட்புறவு நாடுகள் இலங்கை அரசாங்கத்துக்குத் தேவையான அனைத்துவித இராணுவ உதவிகளையும் வழங்கி வருகின்றன. இந்நிலையில் இலங்கை இராணுவ வீரர்களுக்குத் தேவையான பயிற்சிகளையும் வழங்க அந்நாடுகள் முன்வந்துள்ளமை வரவேற்கத்தக்கதாகும்.

விடுதலைப் புலிகள் இயக்கமானது முழு நாட்டினையும் தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்த பின்னர் ஈழம் இராச்சியத்தை அமைப்பதையே நோக்கமாகக் கொண்டிருக்கின்றனர் என்று பாதுகாப்பு தரப்பினருக்கு இதுவரை கிடைக்கப்பெற்ற தகவல்களின் மூலம் தெரியவந்துள்ளது.

அவர்களின் இந்த கனவு ஒருபோதும் நனவாகிவிட இராணுவத்தினர் இடமளிக்கப் போவதில்லை. இலங்கை மக்கள் ஒற்றுமையாக வாழ்வதன் மூலமே பலமான அபிவிருத்தியுள்ள நாட்டினைக் கட்டியெழுப்ப முடியும். இன அடிப்படையில் நாட்டைப் பிரிப்பது நாட்டை அழிவுப் பாதைக்கு இட்டுச் செல்லும் என்பதை அனைத்து இன மக்களும் புரிந்துகொள்ள வேண்டும்.

இந்நிலையில் இராணுவத்தின் பலத்தையும் அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். அத்துடன் இராணுவத்தின் பலத்தை ஒன்றுதிரட்டும் நீண்ட கால நோக்கம் நிறைவேற்றப்பட வேண்டுமானால் இராணுவம் முற்றாக புனரமைக்கப்பட வேண்டும்.

வடபகுதியிலும் உள்ளூராட்சித் தேர்தல்களை நடத்துவதற்கான சூழ்நிலை உருவாக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து பொதுமக்களிடமிருந்து விடுதலைப் புலி உறுப்பினர்களால் பிரித்தெடுக்கப்பட்ட ஜனநாயக உரிமைகளை மீண்டும் அவர்களுக்கு வழங்குவதற்கான சந்தர்ப்பத்தினையும் அரசாங்கம் பெற்றுள்ளமை பெருமைக்குரிய விடயமாகும். 

புலிகளிடமிருந்து மீட்கப்பட்ட பொது மக்களின் எண்ணிக்கை 60 ஆயிரத்தை தாண்டிவிட்டது – இராணுவத்தளபதி

sarath-fonseka.jpgபாதுகாப்பு வலயத்தில் புலிகளின் பிடியில் இருந்து படையினரால் மீட்கப்பட்ட பொது மக்களின் எண்ணிக்கை இன்று மாலை 60 ஆயிரத்தை தாண்டிவிட்டது என இராணுவத்தளபதி சுவர்ணவாஹினி தொலைக்காட்சிக்கு தெரிவித்தார்.

சிவிலியன்கள் வெளியேற்றப்பட்டமைக்கு ஐ.நா. செயலாளர் பாராட்டு!

ban_ki-moon_.jpgபுலிகளின் பிடியிலிருந்த ஆயிரக்கணக்கான பொதுமக்களைப் படையினர் வெளியேற்றியதை தான் பாராட்டுவதாக ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ஐ.நா. செயலாளரின் அலுவலகம் விடுத்துள்ள அறிக்கையில், பாதுகாப்பு வலயத்திலிருந்து பொதுமக்கள் தப்பி வருவதைத் தடுப்பதற்கு புலிகள் மேற்கொள்ளும் தாக்குதல்களை வன்மையாகக் கண்டிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

பாதுகாப்பு வலயத்தினுள் நேற்று படையினர் உட்பிரவேசித்ததையடுத்து ஆயிரக்கணக்கான பொதுமக்கள் அரச கட்டுப்பாட்டுப் பிரதேசங்களை நோக்கி வருகை தந்தமை குறிப்பிடத்தக்கது. 

புலிகள் 24 மணிநேர காலக்கெடுவை பயன்படுத்தவில்லை – படை நடவடிக்கைகள் தொடர்வதாக பாதுகாப்பு அமைச்சு அறிவிப்பு

army-attack.jpgஎல்.ரீ.ரீ.ஈ. இயக்கத் தலைவர் பிரபாகரனும் அவரது சகாக்களும் பாதுகாப்புப் படையினரிடம் சரணடைய வழங்கப்பட்ட 24 மணி நேர காலக்கெடு இன்று நண்பகல் 12.00 மணியுடன் முடிவடைந்தது.

பிரபாகரன் உள்ளிட்ட புலித் தலைவர்களும் ஏனைய எல்.ரீ.ரீ.ஈ. இயக்க உறுப்பினர்களும் உடனடியாக சரணடைய வேண்டும் என அரசாங்கம் நேற்று இறுதி எச்சரிக்கை விடுத்திருந்தது. அரசாங்கம் வழங்கிய இந்த இறுதிச் சந்தர்ப்பத்தையும் புலிகள் ஆக்கபூர்வமான முறையில் பயன்படுத்தத் தவறிவிட்டதாக பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இந்நிலையில் பயங்கரவாதத்தை ஒழித்துக்கட்டுவதற்கான படை நடவடிக்கைகள் தொடர்ந்தும் மேற்கொள்ளப்படுமென இராணுவம் அறிவித்துள்ளது.

புதுமாத்தளன் மற்றும் அம்பலவான்பொக்கனை ஆகிய இடங்களில் தமது நிலையைப் பலப்படுத்தியுள்ள இராணுவத்தினர் தொடர்ந்தும் முன்னேறி வருவதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. 

புலிகளிடமிருந்து மீட்கப்பட்ட பொது மக்களின் எண்ணிக்கை 49 ஆயிரமாக அதிகரிப்பு!

civiling_flee_vanni_01.pngபாதுகாப்பு வலயத்தில் புலிகளின் பிடியில் இருந்து படையினரால் மீட்கப்பட்ட  பொது மக்களில் எண்ணிக்கை இப்போது 49058 ஆக உயர்ந்துள்ளதாக பாதுகாப்பு வட்டாரங்கள் இன்று தெரிவித்தன. இவர்களில் 41000 பேர்  இராணுவத்தின் 58வது படைப் பிரிவினரால் மீட்கப்பட்டுள்ளனர். கடல் மார்க்கமாக வந்த ஏனையோரை கடற்படையினர் மீட்டுள்ளனர் எனவும் பாதுகாப்பு வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன.

இன்றும் போராட்டங்கள் தொடர்கிறது! நேற்று பாரிஸில் 210 ஆர்ப்பாட்டக்காரர்கள் கைது! : த ஜெயபாலன்

Protest_London_20Apr09இலங்கை அரச படைகள் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்திற்குள் ஊடுருவிக் கொண்டிருக்க பல்லாயிரம் மைல்களுக்கு அப்பால் புலம்பெயர்ந்த தமிழர்கள் மிகவும் உணர்ச்சிகரமான போராட்டங்களில் குதித்துக் கொண்டு உள்ளனர். குறைந்தது கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக மரணத்தின் விளிம்பில் இருந்து 30000க்கும் மேற்பட்ட மக்கள் எதிர்காலம் எப்படி இருக்குமோ இப்போதைக்கு உயிரைக் காப்பாற்றிக் கொள்வோம் என்று அரச கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் வந்துகொண்டுள்ளனர். இன்னும் சில தினங்களில் புலிகளின் வசமுள்ள இறுதிப் பத்திற்கும் சற்று அதிகமான கிலோ மீற்றர் நிலப்பரப்பும் அரச படைகளின் கட்டுப்பாட்டிற்று வந்தவிடும் என படைத்தரப்பு தெரிவிக்கின்றது.

பெரும்பாலும் மக்கள் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியைவிட்டு வெளியேறும் போது புலிகள் அரச படைகளுடன் நேருக்கு நேரான மோதலை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். நேற்றைய யுத்தத்திலும் புலி ஆதரவு ஊடகங்கள் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கையை 1500 வரை இருக்கும் என செய்திகளை வெளியிட்டு உள்ளனர். இச்செய்தியின் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்திக் கொள்ள முடியவில்லையென சர்வதேச ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டு உள்ளன. இழப்புக்கள் பற்றிய செய்திகள் புலம்பெயர் தமிழ் மக்களை மிகவும் உணர்ச்சிகரமாக வைத்துள்ளது.

ஏப்ரல் 5ல் புலிகளின் முக்கிய தளபதிகள் முக்கிய போராளிகள் இழக்கப்பட்டு தலைவர் வே பிரபாகரன் காப்பாற்றப்பட்டார். ஆயினும் புலிகளின் தலைமையை ஆபத்து நெருங்கியதை அடுத்து மேற்கு நாடுகள் முழுவதும் போராட்டங்கள் முடக்கிவிடப்பட்டது. உண்ணாவிரதப் போராட்டங்களும் முடக்கிவிடப்பட்டது.

இப்போராட்டங்களின் மையமாக பிரித்தானியாவின் இதயப்பகுதியான வெஸ்ற்மினிஸ்ரர் மாறியுள்ளது. இங்கு சாகும்வரை உண்ணாவிரதம் இருக்கும் சுப்பிரமணியம் பரமேஸ்வரன் 15வது நாளாகத் தனது போராட்டத்தை தொடர்கிறார். இவரது நிலை கவலைக்குரியதாக இருக்கையில் நேற்றுக் காலை பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர்கள் வந்து சந்தித்து போராட்டதை முடிவுக்கு கொண்டு வரலாம் என்ற நிலை அதற்கு முதல்நாள் இருந்தது. ஆனால் இலங்கை இராணுவம் புலிகளின் இறுதியாக உள்ள கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் முன்னேறி மக்கள் வெளியேறுவதற்கான பாதையை திறந்ததை அடுத்து போராட்டம் மேலும் உணர்ச்சிகரமாக மாறியுள்ளது. நேற்றுமாலை வெஸ்ற்மினிஸ்ரர் பகுதியைச் சுற்றிய போக்குவரத்துக்கள் முற்றாகத் தடைப்பட்டன. நூற்றுக்கணக்கில் பொலாசாரைக் கொண்டு வந்து இறக்கி வீதிகளை போக்குவரத்திற்கு அனுமதிக்க எடுத்த முயற்சி ஆயிரக் கணக்கான ஆர்ப்பாட்டக்காரர்களின் போராட்டத்திற்கு முன்னால் பலனளிக்கவில்லை. சிலர் பாய்களைக் கொண்டு வந்து வீதியில் விரித்து படுத்தும் தங்கள் போராட்டத்தை தொடர்ந்தனர்.

ஏற்கனவே ஜி20 மாநாட்டை ஒட்டி இடம்பெற்ற ஆர்ப்பாட்டங்களை கட்டுப்படுத்த கடுமையான நடவடிக்கையை எடுத்த பொலிசார் அதில் ஒரு ஆர்ப்பாட்டக்காரர் மரணமானது தொடர்பிலும் அவர்களது நடவடிக்கை தொடர்பிலும் மிகுந்த விமர்சனத்திற்கு உள்ளாகி உள்ளனர். அவ்வாறான மற்றுமொரு நடவடிக்கையை மேற்கொள்ள பொலிசார் துணியவில்லை. மேலும் ஆர்ப்பாட்டக் காரர்கள் யாரும் வன்முறை நோக்கோடு செயற்படாததால் பொலிசாருக்கும் ஆர்ப்பாட்டக் காரர்களுக்கும் முரண்பாடுகள் எழவில்லை. ஆனால் நாளையும் பிரித்தானியாவின் இதயப்பகுதியின் போக்குவரத்துக்கள் தடைப்பட்டால் அப்பகுதியின் சகஜநிலை பாதிக்கப்படும். பொருளாதார மையத்தில் மிகுந்த பொருளாதார நெருக்கடியான காலகட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள இப்போராட்டம் அப்பகுதியின் ஸ்தீரத் தன்மையைப் பாதிக்கும். மேலும் இவ்வகையான போராட்டங்களை ஏனைய சமூகங்களும் மேற்கொள்ள முற்படலாம். அது அப்பகுதியின் பொருளாதார நடவடிக்கைகளைப் பாதிக்கும் என்பது கூர்ந்து அவதானிக்கப்படுகிறது. இதனால் போக்குவரத்திற்கு தடையை ஏற்படுத்தும் பட்சத்தில் போராட்டக்காரர்களை அப்புறப்படுத்தும் நடவடிக்கைகளில் பொலிஸார் இறங்கலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையே இதே போன்று பிரான்ஸில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் வன்முறையில் ஈடுபட்டதாக பிரெஞ் பொலிஸார் தெரிவிக்கின்றனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை ஆயுதக் கூட்டம் என்று விபரித்துள்ள பொலிஸ் அதிகாரி அவர்கள் போக்குவரத்தில் ஈடுபட்ட மூன்று பஸ்கள் மீதும் பொலிசார் மீதும் பொருட்களை வீசியதாகக் குற்றம்சாட்டி உள்ளார். ஒரு பொலிஸ் அலுவலர் உட்பட நான்கு பேர் சிறு காயங்களுக்கு உள்ளானதாகவும் பொலிஸ் அதிகாரி ராய்டர் செய்தி ஸ்தாபனத்திற்கு தெரிவித்து உள்ளார்.  ஆயுதக் கூட்டம் என்பது பொதுவாக கத்தி துப்பாக்கி இருப்புக் குற்றி போன்றவற்றை வைத்துள்ளவர்களுக்கே பயன்படுத்தவது வழக்கம். ஆனால் அப்பதம் தற்போது ஆர்ப்பாட்டக் காரர்களுக்கும் பயன்படுத்தப்பட்டு உள்ளது.

பாரிஸில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு போக்குவரத்தை தடைசெய்ய முற்பட்ட ஆர்பாட்டக்காரர்கள் மீது பொலிஸார் கண்ணீர்ப் புகைக்குண்டுகளை வீசியும் தண்ணீர் அடித்தும் அப்புறப்படுத்தினர்.

ஆர்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் ஸ்கூட்டர் ஒன்றுக்கு நெருப்பு வைத்ததாகவும் 3 பஸ்களினதும் இரு கார்களினதும் ஒரு லொறியினதும் முகப்புக் கண்ணாடிகளை உடைத்ததாகவும் ஏப்பி செய்தியாளர் பிரான்ஸ் 24 செய்தி நிறுவனத்திற்குத் தெரிவித்து உள்ளார். பொலிசார் மீதும் குப்பைகளும் போத்தல்களும் எறியப்பட்டு உள்ளது. இதனைத் தொடர்ந்து வன்முறையில் ஈடுபட்ட 210 பேரை கைது செய்ததாக பிரெஞ் பொலிசார் தெரிவிக்கின்றனர்.

இவற்றுக்கிடையே இன்று கனடாவின் ஒட்டோவா நகரிலும் ஆர்ப்பாட்டம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. ஏற்கனவே நடந்த ஆர்ப்பாட்டங்களின் போது மாணவர்கள் விதிகளை மறித்து போக்குவரத்துக்களை தடைப்படுத்தினர்.

இலங்கை அரச படைகள் தங்கள் படைகளை புலிகளின் கடைசிச் சில கிலோ மீற்றர்களுக்கள் நகர்த்த புலம்பெயர் தமிழர்கள் தங்கள் போராட்டங்கள் பலனளிக்கவில்லை என்ற விகாரத்துடன் உணர்ச்சி பொங்க தங்கள் இறுதிப் போராட்டத்தை தொடர்கின்றனர். யுத்தத்தை நிறுத்தக் கோரி யுத்தத்தின் முடிவில் இவர்கள் ஆரம்பித்த போராட்டம் புலி அலையில் அடித்துச் செல்லப்பட்டு விட்டது. இதனால் மண்ணோ மக்களோ காப்பாற்றப்படவில்லை.

புலிகளின் தலைமை இரு வாரங்களிற்கு முன்னரயே எஸ்கேப் ஆகிவிட்டது என்று உத்தியோகபூர்வமற்ற தகவல்கள் தெரிவித்த போதும் அவர் உள்ளேயே இருக்கின்றார் என்று 24 மணிநேர காலக்கெடுவை இலங்கை அரசு அவர்களுக்கு வழங்கி உள்ளது. ஏற்கனவே குறிப்பிட்டது போல் புலிகளின் தலைமை இப்பகுதியைவிட்டு வெளியேறி இருந்தால் இராணுவம் பாரிய தாக்குதல்கள் இன்றி முன்னேற முடியும். ஆனால் அரசு குறிப்பிடும்படி புலிகளின் தலைமை இராணுவத்தால் சுற்றி வளைக்கப்பட்டுள்ள பிரதேசத்திற்குள் இருந்தால் மிக உக்கிரமமான மோதலுக்கான வாய்ப்பு உள்ளது. இன்னமும் 100000 மக்கள்வரை புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தினுள் உள்ளனர். அவர்களுக்கு மத்தியிலேயே அவ்வாறான ஒரு மோதல் இடம்பெறும். இது இதுவரை சந்தித்திராத அவலதை ஏற்படுத்தலாம் என்ற அச்சம் தவிர்க்க முடியாதது. ( Project Beacon – இறுதிக் கட்டத்தில்!! புலிகளின் தலைமை ஆபத்தில்!!! : த ஜெயபாலன் , தலையோடு வந்தது தலைப்பாகையோடு போனது. ‘தலைவர் எஸ்கேப்’ : த ஜெயபாலன் )

நான்காயிரத்திற்கும் அதிகமான மக்கள் கொல்லப்படடும் அதனைப் போன்று இரு மடங்கினர் காயமுற்றும் நடந்த இந்த யுத்தம் அழிவைத் தவிர எதனையும் தரவில்லை. இலங்கை அரசும் புலிகளும் சர்வதேச சமூகமும் இந்த அழிவைத் தடுத்திருக்க முடியும். ஆனால் செய்யவில்லை. இலங்கை அரசோ புலிகளோ காலம் காலமாக எடுத்துக் கூறப்பட்ட அரசியல் தீர்வு பற்றி அக்கறையற்று இருந்தனர். எப்போதும் இராணுவத் தீர்வு நோக்கியே அவை செயற்பட்டன. இன்றும் செயற்படுகின்றன. அதற்கு வேறுபாடின்றி இரு தரப்பும் மக்களைப் பணயம் வைத்து காய்களை நகர்த்தினர். இந்த உண்மையை கண்டுகொள்ளாத புலம்பெயர்ந்த தமிழர்கள் புலிகளையும் தமிழர்களையும் ஒன்றாகவே பார்த்தனர். அதனால் வன்னி மக்களின் பாதுகாப்பை இரண்டாம் பட்சத்திலேயே வைத்தனர். இவர்கள் அனைவரும் விட்ட தவறிற்காக வன்னி மக்கள் அதி உச்ச விலையச் செலுத்தினர். இந்த வலி வன்னி மக்களை வாழ்நாள் முழுவதும் தொடரும். இந்த மனித அவலத்தினை தடுக்க முடியாத வெறும் சாட்சிகளாக நாங்கள் ஆகிவிட்டோம்.

வடக்குப் பாடசாலைகளை நாளை திறக்க வேண்டாமென அரசு அவசர அறிவித்தல்

civiling_flee_vanni_01.png இலங்கையின் வடபகுதியிலுள்ள அனைத்துப் பாடசாலைகளையும் நாளை இரண்டாம் தவணைக்காக மீண்டும் திறக்க வேண்டாம் என வடக்குக் கல்வி வலயங்களுக்கு அரசாங்கம் இன்று அவசர அறிவித்தல் ஒன்றை அனுப்பி வைத்துள்ளது.

யாழ். மாவட்டத்திலுள்ள அனைத்துப் பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகளும் எதிர்வரும் 27 ஆம் திகதி வழமைபோல் மீண்டும் ஆரம்பிக்கப்படுமென வடமாகாண கல்விப்பணிபாளர் வீ.இராசையா விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை இன்று திங்கட்கிழமை காலை முதல் 30,000 இற்கும் மேற்பட்ட பொதுமக்கள் இராணுவத்தினரிடம் தஞ்சமடைந்துள்ளனர். இந்நிலையில் மேலும் மக்கள் முல்லைத் தீவிலிருந்து விடுவிக்கப்படலாம் என நம்பப்படுகின்றது.

இது தொடர்பாக யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையில் இன்று விசேட கூட்டம் ஒன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெறறதாகத் தெரிவிக்கப்படுகிறது.மேலும் யாழ் மாவட்டத்திலுள்ள பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகளை எதிர்வரும் மேமாதம் 4ஆம் திகதி மீண்டும் ஆரம்பிக்குமாறு யாழ் அரச அதிபர் மேலதிக மாகாண கல்விப்பணிப்பாளரை கோரியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. 

இடம்பெயர்ந்து வருபவர்களைத் தங்க வைப்பதற்கு வவுனியாவில் மேலும் நான்கு பாடசாலைகளில் அவசர ஏற்பாடுகள்

civiling_flee_vanni_02.png பாதுகாப்பு வலயப்பகுதியில் இருந்து இடம்பெயர்ந்து இராணுவத்தின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தி்னுள் வந்துள்ள சுமார் 5000 பேரைத் தங்க வைப்பதற்காக நான்கு பாடசாலைகளில் ஏற்பாடுகள் செய்யப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த ஏற்பாடுகள் குறி்த்து இன்று மாலை வவுனியா செயலகத்தில் மேலதிக அரசாங்க அதிபர் தலைமையில் நடைபெற்ற அவசர உயர்மட்ட கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

வவுனியா புதுக்குளம் மகாவித்தியாலயம், தாண்டிக்குளம் பிரமண்டு வி்த்தியாலயம், ஆண்டியாபுளியங்குளம் பாடசாலை, முதலியாகுளம் பாடசாலை ஆகியவற்றில் ஓமந்தை பகுதிக்கு ஏற்கனவே கொண்டு வரப்பட்டுள்ள 5000 பேரையும் தங்க வைப்பது என இந்தக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்தப்பாடசாலைகளில் இடம்பெயர்ந்தவர்களுக்கான கழிப்பறை வசதிகள், குடிநீர் வசதிகள் மற்றும் தேவையான அடிப்படை வசதிகளை ஏற்படுத்திக்கொடுப்பதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்வதற்கு ஐ.சி.ஆர்.சி மற்றும் யுனிசெவ் ஆகிய நிறுவனங்கள் முன்வந்துள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையில் இன்று காலை வவுனியாவுக்கு இராணுவத்தி்னரால் கொண்டுவரப்பட்ட 1500 பேர் மனிக்பாம் பகுதிக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பிரபாகரன் தனது தலைவிதியை இன்னும் சில மணித்தியாலயங்களின் சந்திப்பார் – இராணுவத் தளபதி

sarath-fonseka.jpgபுலிகளின் தலைவர் பிரபாகரன் எஞ்சியுள்ள தனது போராளிகளுடன் சரணடையாவிட்டால் எதிர்வரும் சில மணித்தியாலயங்களில் அவர் தனது தலைவிதியை சந்திக்க நேரிடும் என தொலைக்காட்சிக்கு இராணுவத் தளபதி சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

படையினர் இன்று புதுமாத்தளன் பிரதேசத்தில் அமைந்திருந்த புலிகளின் இறுதி மணல் அணையை உடைத்து மக்களின் பாதுகாப்பான வெளியேற்றத்திற்கு வழியமைத்துக் கொடுத்ததை அடுத்து ஆயிரக்கணக்கான மக்கள் விடுவிக்கப்பட்ட பிரதேசங்களை நோக்கி படையெடுத்த வண்ணம் உள்ளனர். இன்றைய இந் நிகழ்வு மக்கள் யார் மீது நம்பிக்கை வைத்துள்ளார்கள் என்பதை தெளிவு படுத்தியுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

பெப்ரவரி முதல் இதுவரை 10.000 நோயாளிகள் அரச பகுதிக்கு வருகை!

taking-to-green-ocean.jpgகிரீன் ஓசன் கப்பல் மூலம் கடந்த பெப்ரவரி முதல் இதுவரை சுமார் 10 ஆயிரம் நோயாளிகள் புலிகளின் பகுதியில் இருந்து அரச கட்டுப்பாட்டுப் பகுதிக்கு அழைத்து வரப்பட்டதாக ஐ. சி. ஆர். சி. தெரிவிக்கின்றது. கடந்த இரு தினங்களில் புதுமாத்தளன் பகுதியிலிருந்து மேலும் 940 நோயாளிகள் அரச கட்டுப்பாட்டுப் பகுதிக்கு கப்பல் மூலம் அழைத்து வரப்பட்டதாக கடற்படையினர் தெரிவித்தனர். இவர்கள் கடந்த 17ஆம் 18ஆம் திகதிகளில் ஐ. சி. ஆர். சி.யினூடாக திருகோணமலைக்கு அழைத்து வரப்பட்டனர்.

இவர்களுடன் நோயாளிகளின் உறவினர்களும் அரச கட்டுப்பாட்டுப் பகுதிக்கு அழைத்துவரப்பட்டனர். நோயாளர்கள் உடனடியாக வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டதாக கடற்படையினர் தெரிவித்தனர்.