::யுத்த நிலவரம்

::யுத்த நிலவரம்

இலங்கையில் நடைபெறும் யுத்தம் தொடர்பான செய்திகள், கட்டுரைகள், ஆய்வுகள்.

விடுதலைப்புலிகளின் யுத்த நிறுத்த அறிவிப்பை இலங்கை அரசாங்கம் நிராகரித்தது

puthumathalan.jpg
விடுதலைப்புலிகள் இன்று ஒரு தலைப்பட்சமாக போர் நிறுத்தத்தை அறிவித்திருந்தனர். ஆனால் இலங்கை அரசாங்கம் அதனை நிராகரித்துவிட்டது என பி.பி.ஸி. அறிவித்துள்ளது

இலங்கை மோதல்கள் காரணமாக பெரும் மனித நேய நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில் ஐ. நா, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் பல சர்வதேச நாடுகள் கேட்டுக்கொண்டதற்கிணங்க தாம் ஒருதலைப்பட்சமாக யுத்த நிறுத்தத்தை அறிவிப்பதாக விடுதலைப்புலிகள் தெரிவித்திருந்தனர்.

ஆனால், இலங்கை அரசாங்கம் அதனை நிராகரித்து விட்டது. மனித நேய விவகாரங்களுக்கான ஐ.நாவின் உயர் அதிகாரியான ஜோண் ஹோல்ம்ஸ் அவர்கள் இலங்கைக்கு விஜயம் செய்துள்ள நிலையில் விடுதலைப்புலிகளின் இந்த அறிவிப்பு வந்துள்ளது.

380 மெ. தொ. உணவு பொருட்கள் விமானம் மூலம் விநியோகம்

mi-27.jpgபுலிகளின் பிடியிலிருந்து மீட்டெடுக்கப்பட்டுக் கொண் டிருக்கும் மக்களுக்கு விநி யோகிக்கவென விமானம் மூலம் மாத்திரம் 21 திகதி முதல் நேற்று வரை 350 மெற்றிக் தொன் சமைத்த உணவுகள் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் எடுத்துச் செல்லப்பட்டுள்ளன. இதற்கு மேலதிகமாக தரைவழியாக பொருட்கள் மற்றும் உலர் உணவுகளை விமானப் படையினர் கொண்டு செல்ல நடவடிக்கை எடுத்துள்ளதாக விமானப் படைப் பேச்சாளர் விங் கமாண்டர் ஜனக நாணயக்கார தெரிவித்தார்.

பொது மக்களுக்கு தேவை யான சமைத்த உணவுப் பொதிகள் மற்றும் பொருட்களை உடனுக்குடன் கொண்டு செல்ல விமானப்படையின் விமானங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், லொறிகள் மூலமும் கொண்டு செல்லப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் விஷேட பணிப்பின் பேரில் விமானப் படைத் தளபதி எயார் மார்ஷல் ரொஷான் குணதிலக இதற்கென சகல நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளதாக அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.

சமைத்த உணவுப் பொதிகள், பேக்கரி உற்பத்திப் உணவுப் பொருட்கள், பால், தண்ணீர் போத்தல்கள், குடிபான வகைகள் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய 350 மெற்றித் தொன் பொருட்களையே விமானப் படையினர் எடுத்துச் சென்றுள்ளனர் என்றும் விமானப் படைப் பேச்சாளர் தெரிவித்தார்.

வலைஞர்மடம் இராணுவத்தினரால் விடுவிப்பு

இராணு வத்தின் 58 ஆம் படையணியினர் வலைஞர்மடம் பகுதியை விடுதலைப் புலிகளிடம் இருந்து விடுவித்துள்ளதாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.அப்பகுதியில் சிக்கியிருந்த நூற்றுக்கணக்கான பொதுமக்களையும் பாதுகாப்பு படையினர் விடுவித்துள்ளதாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

முள்ளிவாய்க்காலில் இருந்து 6கிலோமீற்றர் தொலைவில் வலைஞர்மடம் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது

நமது சகோதர தமிழ் மக்களுக்கு உதவுங்கள்…

cvili.jpgஇடம் பெயர்ந்துவரும் எமது சகோதர தமிழ் மக்களுக்கு உலர் உணவு, அத்தியாவசிய பொருட்களை வழங்கும் போது அணிந்த பழைய ஆடைகளை வழங்க வேண்டாம். அவர்களுக்கு புதிய ஆடைகளையே வழங்குங்கள் என ஊடகத்துறை அமைச்சர் அனுர பிரியதர்ஷன யாப்பா தெரிவித்தார்.

சுனாமி தாக்குதல் ஏற்பட்ட போது எவ்வாறு நாம் ஒன்றிணைந்து மனிதாபிமான உதவிகளை வழங்கி னோமோ அதேபோன்று தென் பகுதி மக்களின் மனிதாபிமான உணர்வுகளை வெளிக்காட்ட இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

சுனாமியின் போது நாம் பழைய அணிந்த ஆடைக ளையே அவசர தேவைக்காக வழங்கினோம். ஆனால் வன்னியிலுள்ள எமது சகோதர தமிழ் மக்களுக்கு அப்படி வழங்காமல் புதிய ஆடைகளையே வழங்குவோம். அவர்கள் எமது மக்கள் என்றும் அமைச்சர் அனுர பிரியதர்ஷன யாப்பா தெரிவித்தார்.

உலர் உணவு பொருட்கள், பிஸ்கட்வகைகள், குடிநீர் போத்தல்கள், பால்மா, திரவப்பால் பக்கற், குழந்தைகள் பால்மா, குழந்தைகளுக்கான பால் போத்தல், பற்பொடி, பற்பசை, பிரஷ்கள், டவல்கள், பெண்களுக்கான ஆரோக்கிய துவாய்கள்,  பெண்களின் உள்ளாடைகள், நுளம்பு வலை, சவர்க்காரம், சமையல் பாத்திரங்கள் போன்ற அத்தியாவசிய பொருட்களை சேகரித்து வழங்க முன்வாருங்கள் என்றும் அமைச்சர் கேட்டுக் கொண்டார்.

வன்னி மக்களுக்கான நிவாரணப் பொருட்களை வழங்குவதற்காக பிரதான சேகரிப்பு நிலையமாக பண்டார நாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்திலுள்ள ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க ஞாபகார்த்த மண்டபமும் இயங்குகிறது.

உதவ விரும்பும் அமைப்புகள், தனி மனிதர்கள், நலன் விரும்பிகள், தயாளகுணம் படைத்தவர்கள் நிவாரண பொருட்களை தமது பகுதியிலுள்ள பிரதேச செயலகத்திலோ, மாவட்ட செயலகத்திலோ, உதவி பிரதேச செயலகத்திலோ ஒப்படைக்குமாறும் கேட்டுக் கொண்டார்.நாட்டிலுள்ள அனைத்து ஊடக நிறுவனங்களின் பிரதி நிதிகளையும் அழைத்து அமைச்சர் பிரிய தர்ஷன யாப்பா மனிதாபிமான உதவி குறித்து விளக்கமளித்தார்.

பிரபாகரன் கடல் மார்க்கமாக தப்பிச்செல்ல முயற்சிக்கலாம் – இராணுவத்தளபதி

sarath-fonseka.jpg புலிகளின் தலைவர் பிரபாகரன் பாதுகாப்பு வலயத்திலேயே மறைந்திருக்கின்றார். இராணுவத்தினர் அந்தப் பிரதேசத்தை நெருங்கிச் செல்லும்போது அவர் கடல் மார்க்கமாக தப்பிச்செல்ல முயற்சிக்கலாம் என இராணுவத்தளபதி சரத்பொன்சேகா தெரிவித்தார்.

பிபிசியின் சிங்கள செய்தி சேவையான சந்தேசயவுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இச்செவ்வியில் இராணுவத் தளபதி மேலும் கூறியதாவது, புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் பாதுகாப்பு வலயத்திற்குள்ளேயே மறைந்து இருப்பதாக எங்களுக்கு தகவல்கள் கிடைத்துள்ளன. அதுவும் 8கிலோ மீற்றர் நீளமும் 1.5கிலோ மீற்றர் அகலமும் கொண்ட கடற்பகுதியிலேயே மறைந்துள்ளனர்.

பயங்கரவாதிகள் மனித கேடயமாக வைத்திருந்த பெரும் எண்ணிக்கையிலான பொதுமக்களை விடுவிக்கும் பொறுப்பு எம்மிடம் வழங்கப்பட்டுள்ளது. இந்தப் பொறுப்பை நிறைவேற்றும் அதேவேளை பயங்கரவாதத்தை ஒழிக்கும் நடவடிக்கையையும் முன்னெடுத்து வருகிறோம்.

இன்னும் சுமார் 15ஆயிரம் மக்கள் அங்கு சிக்கியிருக்கலாம் என நினைக்கிறேன்.சுமார் 300, 400 புலிகளே அங்கு இருக்கின்றனர். பலவந்தமாக ஆயுதம் கொடுக்கப்பட்ட பொதுமக்களும் அதில் இருக்கின்றனர் என்றும் அவர் கூறினார்.

சர்வதேச போராட்டங்களும் புலிகளும் அவர்களது ஆயுதங்களும் : ரி சோதிலிங்கம்

Protest_London_BigBang புலிகள் ஒரு புரட்சிகர அமைப்பாக இல்லை எனவும் இவர்கள் மக்கள் நலன் சார்ந்து சிந்திக்க முடியாதவர்கள் அல்லது சிந்திக்கத் தெரியாதவர்கள் என்றும் பலர் கருத்துக்களை முன்வைக்கிறனர். கடந்த காலங்களில் எப்படி அறப்போர் செய்த அமைப்புக்கள் அதனைத் தொடர்ந்து முன்னேற்ற முடியாமல் போய் அந்த அமைப்புக்கள் இயற்க்கை எய்தியதோ அதேபோல் புலிகளினால் தொடரப்பட்ட 30 வருட ஆயுதப் போரும் தொடர்ந்து முன்னேற முடியாத நிலைக்கு வந்தள்ளது. இதனை உணர்ந்து அடுத்த சந்ததியினர் தொடரும் புதிய பாதைளை திறக்கும் வழிமுறைக்கு இடம் விட்டுச் செல்ல வேண்டிய கடமைகளை புலிகள் உணர்ந்து செயற்ப்பட வேண்டும். அது புலிக்கொடியை அவர்களிடம் கொடுத்துச் செல்வது என்று அர்த்தமாகாது.

கடந்த கால தமிழர் உரிமைப் போராட்ட வரலாற்றில் முக்கியமான தற்காப்பு இராணுவ நடவடிக்கைகளை புலிகள் செய்துள்ள போதிலும் மிகவும் பாரதூரமானதும் தமிழர்களின் போராட்டத்தை அஸ்த்தமிக்கும் நிலைமைக்கு கொண்டுவரக் கூடிய தவறுகளையும் புலிகள் செய்துள்ளனர். அதுமட்டுமல்ல அப்படியாக புலிகளினால் செய்யப்பட்ட தவறுகளுக்கு இன்று வரையில் எந்தவித பிராயச்சித்தங்களும் மேற்கொள்ளப்படாததும் தவறாகிவிட்டது.

இத் தவறுகள் தமிழ்பேசும் மக்களை இன, பிரதேச, சாதிய, இயக்க, அரசியல் வேறுபாடுகளை முனைப்புப்படுத்தி தமிழர்கள் தமிழ்பேசும் மக்களை சின்னா பின்னப்படுத்தியுள்ளது. வெவ்வேறு அரசியல் முகாம்களுக்குள் தள்ளியுள்ளது. எதிரியை பலப்படுத்தி உள்ளது.

இன்றுள்ள தோல்வி நிலைமைகளில் இருந்து தமிழ்பேசும் தமது பாரம்பரிய பிரதேசங்களில் தொடர்ந்து நிம்மதியாக வாழவும் புதிய சந்ததியினர் தொடர்ச்சியாக தமது புதிய பாதையை தெரிவு செய்து சுயநிர்ணயப் போராட்டத்தை தொடரவும் இன்று புலிகள் மிக முக்கியமான அவசியமான முடிவுகளை எடுக்க வேண்டும்.

புலிகளின் கடந்த கால சகோதர இயக்க அழிப்பு, இலங்கை-இந்திய ஒப்பந்த எதிர்பு, இந்திய விரோதப் போக்கு, ஏகபோக பிரதிநிதித்துவம் போன்ற அரசியல் விவேகமற்ற தன்மைகளே புலிகளின் இன்றய நிலைமைகளுக்கு காரணமாகியுள்ளது. கிடைக்கப் பெற்ற பல சந்தர்ப்பங்களைப் பயன்படுத்தி, கட்டம் கட்டமாக சுயநிர்ணய உரிமைக்கான போராட்டத்தை முன்நோக்கி கொண்டு சென்றிருக்க முடியும். ஆனால் புலிகளின் விவேகமற்ற இராணுவ நடவடிக்கைகளும் அரசியலற்ற சுத்த இராணுவப் போக்கும் அவர்களுக்கு இன்று வினையாகி உள்ளது.

தமிழ் மக்களின் உரிமைப் போராட்டத்திற்காக ஆயுதங்களை ஏந்த வேண்டும் என்ற முடிவு எப்படி எடுக்கப்பட்டதோ அதே போன்று அந்த மக்களுக்காக அந்த மக்களின் நலனுக்காக இன்று அந்த மக்களுக்கு இந்த ஆயுதங்கள் அழிவை ஏற்படுத்தும் போது அந்த ஆயுதங்களை கீழே போடவும் துணிந்து முடிவு எடுக்க வேண்டும். ஆயுதங்கள் தேவைப்படும் போது பாவிப்பதற்கே அன்றி ஆயுதங்கள் இன்றி போராட முடியாது அல்லது வாழ முடியாது என்ற நிலை உருவாகக் கூடாது. ஆயுதங்கள் அல்ல முக்கியம். மக்களே பிரதானமானவர்கள். அந்த போராடும் மக்கள் ஆயுத வன்முறையால் தமது பாரம்பரிய பிரதேசத்திலிருந்து வன்முறையாக வெளியேற்றப்படுவதும் அல்லது வெளியேற நிர்ப்பந்திக்கப்படுவதம் மக்களின் விருப்பத்திற்கு முரணாக விரோதமாக செயற்படுவதும் மக்களுக்கான போராட்டமல்ல. மாறாக இது பயங்கரவாதமே. இதை யார் செய்தாலும் வரலாறு மன்னிக்காது.

மக்களின் போராட்டத்தை வென்றெடுப்பதை மையமாக கொண்டு செயற்ப்பட்டிருக்க வேண்டியவர்கள் தமது இயக்கத்தையும், தலைமையையும், இராணுவ நடவடிக்கைகளையும் முதன்மைப்படுத்தி செயல்ப்பட்டதினால் தற்போது தங்களுக்கு இருந்த மக்கள் பலத்தை கோட்டை விட்டுள்ளதாகவே எண்ணத் தோண்றுகின்றது. தங்களை மறுசீரமைக்க இன்னமும் காலம் கடந்துவிடவில்லை.

வன்னி மக்கள் இரு தரப்பினராலும் கொல்லப்பட்டது உறுதிப்படுத்தப்பட்டு விட்டது. புலிகளின் ஆயுதங்களும் மக்கள் தப்பிப் போய் உயிர் வாழ்வதற்கு தடையாக இருக்கின்றது. இப்படியாக தப்பிப் போனவர்கள் புலிகளினால் சுட்டுக் கொல்லப்பட்டு உள்ளனர். பலர் ஊனமுற்று உள்ளனர். இந்தப் புலிகளின் ஆயுதங்கள் தமிழர்க்கு எதிராக மீண்டும் ஒரு முறை பயன்படுத்தப்பட்டு உள்ளது. எந்த மக்களின் உரிமைக்காக போராட ஆரம்பித்தனரோ? எந்த மக்களின் உழைப்பில் இயக்கம் உருவானதோ? எந்த மக்களின் உழைப்பில் புலிகள் ஆயுதங்களை கொள்வனவு செய்தனரோ? அந்த மக்ளையே புலிகள் கொலை செய்ததை, இந்த கேவலமான நடத்தையை மக்கள் மன்னிக்க மாட்டார்கள்.

மக்களுக்காக ஆயுதங்களை ஏந்தினோம் என்று சொன்ன புலிகள் அந்த மக்களை சுட்டுக்கொன்று விட்டு எப்படி இனிமேல் இந்த ஆயுதங்களுடன் அந்த மக்களுக்காக போராட முடியும். புலிகள் யாருக்காகப் போராடினர் என்பதே இப்போது கேள்விக்கு உள்ளாக்கியுள்ளதுடன் புலிகளிடம் உள்ள இந்த ஆயுதங்கள் மக்களுக்கு எதிரானவைகள் என்பதையும் நிரூபித்துள்ளது.

விடுதலைப் போரட்டம் புலிகள் இயக்கத்தினரால் மட்டும் முன்னெடுக்கப்பட்டதென்றோ அல்லது தொடர்ந்தும் அவர்களின் தலைமையில் தான் நடாத்தப்பட வேண்டும் என்றோ நினைப்பது அல்லது அதற்காக செயற்படுவது அர்த்தமற்றது. எப்போது சாத்வீகப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டு காலத்தால் செயல் இழந்து போனதோ, பின்னர் எப்படி ஆயுதப் போராட்டம் நடாத்தப்பட்டதோ அதேபோல இன்று இந்த ஆயுதப் போரட்டம் வேறு ஒருவடிவத்திற்கு போக வேண்டிய நிலைமை உருவாகி உள்ளது. புதிய பாதையை தெரிவு செய்ய வேண்டிய அவசியம் உருவாகியுள்ளது. இங்கு சிந்தித்து செயற்ப்பட வேண்டிய கட்டாய நிலைமை உருவாகியுள்ளது.

பிராந்திய நலனின் ஈடுபாடு கருதியும் பிராந்தியத்தில் பெருந்தொகையான தமிழர்கள் உள்ள இந்தியாவின் – இந்திய சார்பு நிலை தவிர்க்க முடியாததும் இயற்கையானதுமாகும். எந்தவொரு நாடும் இந்தியாவை மீறி இலங்கை விடயத்தில் தலையீடு செய்வதைத் தவிர்க்கும். நோர்வேயை எதிர்கால நடவடிக்கைகளில் இருந்து மிகச் சாதுரியமாக இந்தியா ஓரம்கட்டியுள்ளது. மேலும் புலிகள் ஒன்றும் புரட்சிகர அமைப்பு அல்ல. அதனால் அவர்களிடம் இந்தியாவையோ வல்லரசுகளையோ அரசியல் ரீதியாக கையாளும் அரசியலும் இவர்களிடம் இல்லை. புலிகள் அமெரிக்கா உட்பட எந்த அரசுடனும் உறவுகளைப் பேண விரும்புகின்ற அமைப்பு. அதனால் அவர்கள் இந்தியாவுக்கு அச்சுறுத்தலாக மாறி இந்தப் பின்னடைவைச் சந்தித்தற்குப் பதிலாக ஒரு புரிந்துணர்வை ஏற்படுத்தி இருக்க முடியும்.

புலிகளும் ஏனைய தமிழ் அமைப்புக்களும் பிராந்தியத்தை முதன்மைப்படுத்தி பிராந்தியத்தின் பங்காளிகளாக மாற முயற்ச்சிக்க வேண்டும். இதன் ஆரம்பப் படியாக ரிஎன்ஏ யினரால் முன்னெடுக்கப்பட்ட இந்தியாவுடனான பேச்சுக்களில் இருந்து இதை ஆரம்பிப்பதும் பொருத்தமானதாக இருக்கும்.

புலம் பெயர்நாடுகளில் மக்களுக்காகவென நடாத்தப்படும் போராட்டங்கள் மக்ளுக்கான கோரிக்கைகளை முன்வைத்து மக்களை இராணுவத் தாக்குதல்களில் இருந்து பாதுகாக்கப்பட வேண்டும் தமிழர்களின் உரிமைப் போராட்டத்தை மையமாக வைத்து நடாத்தப்பட வேண்டியது அவசியம். தனி மனிதர்களையும் இராணுவ இயக்கத்தையும் முதன்மைப்படுத்தி போராட்டங்கள் செய்வது கடந்த கால தவறிப்போன போராட்டத்திலிருந்து பாடம் கற்றுக் கொள்ளவில்லை என்றே அர்த்தப்படும். புலம்பெயர் நாடுகளில் நடாத்தப்படும் போராட்டங்கள் புலிகளுக்காக அல்லாது தமிழ்பேசும் மக்களுக்கானதும் சிறுபான்மையினருக்குமான போரட்டமாக மாற்றம் பெற வேண்டும்.

சர்வதேசங்களில் உள்ள சிறுபான்மையினர்களின் போராட்டங்களுடன் ஒன்றிணைந்து குரல் கொடுப்பததன் மூலமும் அந்த சர்வதேச போரட்டங்களின் பகுதியாக எமது உரிமைப் போராட்டம் நிரந்தரமாக வென்றெடுக்க முடியும்.

சரணடையும் நிலையில் பானு உட்பட முக்கிய தலைவர்கள்?

brig_shavendra.jpgகேர்னல் பானு உட்பட புலிகளின் முக்கிய தலைவர்கள் சிலர் படையினரிடம் சரணடைய ஆயத்தமாக இருக்கின்ற போதும் பிரபாகரன், சூசை, பொட்டு அம்மான் ஆகியோரின் அழுத்தம் காரணமாக இவர்கள் சரணடையாமல் உள்ளனரென 58ஆவது படைப்பிரிவின் கட்டளைத் தளபதி பிரிகேடியர் சவேந்திர சில்வா தெரிவித்தார்.

புலிகளின் தலைவர் பிரபாகரன், பொட்டு அம்மான், சூசை ஆகியோர் மக்களோடு மக்களாக புதுமாத்தளன் பாதுகாப்பு வலய பகுதியிலேயே இன்னமும் உள்ளனர் என்பது தயா மாஸ்டரின் வாக்குமூலம் ஊடாக ஊர்ஜிதமாகியிருக்கிறது என்றும் பிரிகேடியர் சவேந்திர டி சில்வா தெரிவித்தார்.

முல்லைத்தீவு, புதுமாத்தளனிலுள்ள 58ஆவது கட்ட ளையிடும் தளபதியின் அலுவலகத்தில் நேற்று விசேட செய்தியாளர் மாநாடு நடைபெற்ற போதே பிரிகேடியர் சவேந்திர சில்வா மேற்கண்டவாறு தெரிவித்தார்.

படையினரிடம் சரணடைந்த புலிகளின் ஊடகப் பேச்சளரான தயா மாஸ்டர் புலிகளின் தலைவர் பிரபாகரன் பற்றிய மிக முக்கிய தகவல்களை வழங்கியுள்ளார் என்றும் குறிப்பிட்டார். குறிப்பாக புலிகளின் தலைமையின் மற்றும் புலி முக்கியஸ்தர்களின் அழுத்தம் காரணமாக தமது வாழ் நாளில் பொய்பேச வேண்டிய நிலைக்கு தாம் தள்ளப் பட்டதாகவும் இதனால் தாம் மிகவும் மனம் வருந்து வதாகவும் தயா மாஸ்டர் தெரிவித்துள்ளார்.

புலிகளின் தலைவர் மட்டுமல்ல அவரது புதல்வர் சார்ள்ஸ் அன்டனியும் பாதுகாப்பு வலயப் பகுதியிலேயே இருப்பதாகக் கூறிய தயா மாஸ்டர் இறுதி நேரத்தில் பிரபாகரன் தப்பிச் சென்றுவிடுவார். போராட்டத்தில் இறுதிவரை நின்று உயிரிழக்க மாட்டார்; அவர் இவ் வாறான மனப்பான்மையை கொண்டவர் என்றும் தயா மாஸ்டர் தெரிவித்ததாக பிரிகேடியர் சவேந்திர சில்வா கூறினார்.

இதேவேளை, பிரபாகரன் இறுதிநேரத்தில் தப்பிச் செல்வதற்காக இன்னுமொரு நீர்மூழ்கியை வைத்திருப்பதாகவும் தயா மாஸ்டர் தெரிவித்ததாக பிரிகேடியர் சவேந்திர சில்வா தெரிவித்தார்.

அத்துடன் புலிகளின் தலைவர் பிரபாகரன் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் தங்கியுள்ள புதுமாத்தளன் பகுதியின் தென்முனைப் பகுதியிலிருந்து எதிர்முனைக்கு கனரக ஆயுதங்களினால் தாக்குதல்களை மேற்கொண்டு வருகின்றனர்.

எதிர்முனையினூடாக மக்கள் படையினரின் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் சென்றுவிடக் கூடாது என்பதாலேயே இவ்வாறான தாக்குதல்களை அவர்கள் மேற்கொண்டு வருகின்றனர் என்று கூறிய பிரிகேடியர் சவேந்திர சில்வா, எனினும் படையினர் சிறிய ரக ஆயுதங்களை பயன்படுத்தியே எதிர்த்தாக்குதலை மேற்கொண்டு வருகின்றனர். வெளியேறும் மக்களின் நலன் கருதியே இவ்வாறு எதிர்த்தாக்குதலை மேற்கொண்டு வருகிறது என்றும் பிரிகேடியர் கூறினார்.

புலிகள் அனைவரும் இறுதி வரை போராட வேண்டும் என்றும் அனைவரும் சிவில் உடையில் நின்றே போராட வேண்டும் என்றும் பிரபாகரன் உத்தரவிட்டுள்ளதாகவும் பிரிகேடியர் சவேந்திர சில்வா தெரிவித்தார்.

புதுமாத்தளன் பகுதிக்கு ஊடகவியலாளர்கள் அழைத்து செல்லப்பட்டுள்ளனர்

Wanni_War_Welfare_Campவிடுதலைப் புலிகள் வசம் இருந்து இலங்கை அரச படையினர் கடைசியாக கைப்பற்றியிருந்த புதுமாத்தளன் பகுதிக்கு உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு ஊடகவியலாளர்களை முதல் முறையாக இலங்கை இராணுவம் அழைத்துச் சென்றிருந்தது.

கொழும்பிலிருந்து புதுமாத்தளன் சென்றிருந்த ஊடகவியலாளர் குழுவில் இடம்பெற்றிருந்த பிபிசி செய்தியாளர், சற்று தொலைவில் விடுதலைப் புலிகள் வசம் எஞ்சியுள்ள பிரதேசத்திலிருந்து வெடிச் சத்தத்தைக் கேட்கக்கூடியதாகவும் புகை கிளம்புவதை பார்க்கக்கூடியதாகவும் இருந்தது என்று குறிப்பிடுகிறார்.

மிகவும் பாதிக்கப்பட்ட நிலையில் காணப்படுகின்ற பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட நூற்றுக்கணக்கான சிவிலியன்கள் தொடர்ந்து வெளியேறிவருவதை காணக்கூடியதாக இருக்கிறது என்றும் அவர் தெரிவிக்கிறார்.

வன்னியில் காயமடைந்த 848 பொதுமக்கள் வவுனியா ஆஸ்பத்திரியில் அனுமதி

puthu.jpgவன்னி யில் இடம்பெற்ற தாக்குதல்களில் காயமடைந்த 848 பொதுமக்கள் வியாழக்கிழமை வரை வவுனியா ஆஸ்பத்திரிக்கு கொண்டு வரப்பட்டுள்ளனர்.

இதில் மரணமான 36 பேரது சடலங்கள் ஆஸ்பத்திரி பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளன. வன்னியிலிருந்து கடந்த மூன்று நாட்களிலேயே காயமடைந்த இவர்கள் வவுனியாவுக்கு கொண்டு வரப்படுகிறது.

இந்த 848 பேரில் படுகாயமடைந்த பலர் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. காயமடைந்தவர்களுக்கு சிகிச்சையளிப்பதற்காக கொழும்பிலிருந்து மருத்துவர் குழுவொன்று வவுனியாவுக்கு வந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

வன்னியிலிருந்து வந்த 4,325 பேர் தென்மராட்சியில் தங்கவைப்பு

Wanni_War_Welfare_Campவன்னி புதுமாத்தளன் பகுதியில் இடம்பெறும் இராணுவ நடவடிக்கைகள் காரணமாக கடந்த 20 மற்றும் 21 ஆம் திகதிகளில் மட்டும் 4 ஆயிரத்து 325 பொதுமக்கள் யாழ்ப்பாணத்திற்கு இடம்பெயர்ந்து வந்திருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது.  இவர்களில் 2 ஆயிரத்து 70 பேர் கொடிகாமம் திருநாவுக்கரசு மகா வித்தியாலயத்திலும் 2 ஆயிரத்து 259 பேர் சாவகச்சேரி இந்து மகளிர் கல்லூரியிலும் தங்கவைக்கப்பட்டிருக்கின்றனர்.

யாழ். மாவட்ட அரச அதிபரின் மேற் பார்வையில் தென்மராட்சி பிரதேச செயலகம் இவர்களுக்கான சமைத்த உணவை வழங்கி வருகிறது. சாவகச்சேரி நகர சபையின் நீர் வழங்கல் பிரிவு குடிநீர் வசதிகளை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை, வன்னியில் இராணுவ நடவடிக்கைகள் ஆரம்பமான நாளிலிருந்து இதுவரை இடம்பெயர்ந்து வந்தவர்களில் தென்மராட்சியில் மட்டும் 9 ஆயிரத்து 516 பேர் தங்கவைக்கப்பட்டிருக்கின்றனர். இவர்கள் தென்மராட்சியிலுள்ள 5 நலன்புரி நிலையங்களிலும் 2 பாடசாலைகளிலும் தங்கவைக்கப்பட்டிருக்கின்றனர்.